நியாயங்கள்…! (சிறுகதை)

எழுத்தாளன் செய்யும்  தவறுகளுக்கு சில நியாயங்கள் இருக்கக்கூடும் என்பதால் இந்த ’நியாயங்கள்’ சிறுகதை.  ‘மணிவிளக்கு’ இதழின் மீலாது மலரில் (1980) நம் ஜபருல்லாநானா எழுதியது. நியாயமாக இதை 27-ஆம் கிழமைதான் பதிவிடவேண்டும் – ஸ்பெஷல் பதிவாக. பரவாயில்லை; எனக்கும் சில நியாயங்கள் இருக்கக்கூடும், இல்லையா? இந்த இஸ்லாமியக் கதையிலிருந்து , நாகூரில் ‘ஜமாத்’ என்ற ஒன்று அந்தகாலத்தில் இருந்திருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

***

நியாயங்கள்…!

இஜட். ஜபருல்லா

காலை எட்டு மணி இருக்கும்.

“அஸ்ஸலாமு அலைக்கும்…!” – என்ற குரல் கேட்டு தலைநிமிர்ந்தான் ரபீக் அஹமது.

“அ வலைக்கு முஸ்ஸலாம்..! வாங்க..! வாங்க…! என்ன ஊர் ஜமாத்தே ஒட்டுமொத்தமாக வந்திருப்பது போல் தெரிகிறதே…!” – சிரித்தவாறு வந்தவர்களை வரவேற்றான் அவன்.

“ஆமாம் லாயர் சார்.. பத்து மணிக்குள் வந்தால்தானே உங்களைப் பிடிக்க முடியும்…! தவிரவும் இன்று நீங்கள் மதறாசுக்கு ஏதோ ஹைகோர்ட்டு வேலையாக போக இருப்பதாக உங்கள் குமாஸ்தா சொன்னார். அதனால்தான் காலையிலேயே வந்து விட்டோம்” என்றார் ஜமாத் தலைவர் ஹசன் மரைக்காயர்.

“அப்படீன்னா ஏதோ முக்கிய விஷயம் இருக்குதுன்னு நெனைக்கிறேன். ஆம் ஐ ரைட்..?” என்றான் ரபீக்.

“லாயராச்சே.. உங்கள் ஊகம் தப்பாகவா இருக்கும்?” – என்றார் செயலாளர் நானாமூனா…

“வேறொண்ணுமில்லீங்க…! நம்ம ஜமாத்துக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நெலத்திலே சில பேருக்கு அரசாங்கம் பட்டா போட்டு கொடுத்ததும் – அதை எதிர்த்து ஜமாத்து சார்பா கீழ்க்கோர்ட்டுலே கேஸ் போட்டிருந்ததும்தான் உங்களுக்குத் தெரியுமே…! அதிலே அரசாங்கத்துக்கு சாதகமா தீர்ப்பாயிடுச்சு… மேற்கொண்டு என்ன செய்யலாம்னு உங்க கிட்ட ஒரு ஆலோசனை கேட்டு போகலாம்னுதான்…! என்று வந்த விஷயத்தை கச்சிதமாக கூறி முடித்தார் ஹஸன் மரைக்கார்.

‘அப்படியா..! ரொம்ப சந்தோஷம்… நான் ‘லீகல் அட்வைசுக்கு’ நூறு ரூபாய் பீஸ் வாங்கறேன்..! பீஸெ ரிஷப்ஸன்லே கட்டிட்டு வந்துட்டீங்களா..?”

– ரபீக்கிடமிடமிருந்து இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை வந்தவர்கள்.

“பீஸா..! என்னங்க ஜமாத்துக் காரியமாச்சே! அதுக்குமா பீசு..?”

“அது சரிதாங்க..! நான் ஜமாத்துக்கு இந்த மாதம் வரை சரியா சந்தா கட்டி வர்ரவன். தொழில்னு பாக்கறப்போ, அதுக்குண்ணு சில வரைமுறை வச்சுகிறதுலே என்னங்க தப்பு..?”

“அப்ப பீஸ் தந்தாத்தான் இதுபற்றி பேசவே முடியுங்கிறீங்களா”? சிறிது கோபமாகவே கேட்டார் நானாமூனா.

“நிச்சயமா..! இன்னொரு வக்கீலிடத்துலெ நீங்கபோனாலும் பீஸ் கொடுத்துதானே ஆவனும். அத எங்கிட்டே கொடுக்கிறதுலே என்ன சங்கடம்…?”

முடிவாகவே வந்தது ரபீக்கின் பதில். ரபீக்கினுடைய தன்மையைப் பற்றி அவர்கள் முன்பே அறிந்திருந்தாலும்கூட தங்களிடமும் நேரிடையாகவே இப்படிப் பேசுவான் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

“அப்ப ஜமாத்தெ விட காசுதான் முக்கியங்கிறீங்க…!” இவ்வளவு நேரம் சும்மாயிருந்த பொருளாளர் முஹம்மது மொய்தீன் வெடித்தார்.

“என்ன காலையிலே முழிச்சு சண்டை பிடிக்கிறதுக்காகவே வந்தீங்களா? நான்தான் சொல்லிட்டேனே..? பீஸ் தர்றதா இருந்தா மேற்கொண்டு பேசுங்க..! இல்லேண்ணா நீங்க போகலாம்..! எனக்கும் நெறைய வேலை இருக்கு…!”

– அதற்கு மேல் பேச்சை நீடிக்க விரும்பாத ரபீக் அமர்ந்திருந்த சீட்டைவிட்டு எழுந்தான். வந்தவர்கள் விருட்டென எழுந்து வெளியே சென்றனர்.

“அவன் திமிரை பாத்தீங்களா..?”

“அதான் அப்பவே சொன்னேனே தலைவரே! இவன்கிட்ட வரவேணான்னு, நீங்கதான் நாமளே நேராப் போனா அப்படியெல்லாம் நடக்கமாட்டான்னு அடிச்சு சொன்னீங்க..! இப்ப நீங்களே பார்த்துட்டீங்க இல்லே..” – நானாமூனாவின் தூபம் எப்போதும் நன்றாகவே வேலை செய்யும்.

“இருக்கட்டும்…! இருக்கட்டும்..! வர்ற ஜமாத்துக் கூட்டதுலெ இதுபற்றி கேட்போம்..! இவன் பவுசு நமக்கு தெரியாதா..? பனாதை பய…” இன்னும் கோபம் அடங்கவில்லை ஹசன் மரைக்காயருக்கு.

***

ரபீக் அஹமது M.A,B.L….!

இளைஞன்! நாகூரில் புகழ்பெற்ற வக்கீல். ‘மேன் ஆப் பிரின்ஸ்பில்ஸ்” என்று கூறலாம். நல்ல புத்திசாலி..அவனுடைய வாதத் திறமை கோர்ட்டு வட்டாரங்களில் நன்றாகவெ பிரசித்தமாகி இருந்தது. அவன் பிடிவாத குணமும்தான்..!. இப்படித்தான் ஊரில் நடக்கும் மீலாது நபி விழாவுக்கு ‘டொனேஷன்’ கேட்டு ஒருமுறை வந்திருந்தார்கள்.

“ஏங்க..வருடா வருடம் இப்படி விழா நடத்தி பல ஆயிரம் ரூயாய்களெ வீணா செலவிடறதுலே என்னங்க பயன் இருக்கு..? நான் விழா எடுக்கிறதே தப்புண்ணு சொல்லல்லே..! எளிமை வாழ்வெ மேற்கொண்ட எம்பெருமானாரின் பெயரெ வச்சு இவ்வளவு ஆடம்பரச் செலவுகள் தேவைதானா? நம்ம ஊர்லேயே எத்தனையோ குமருங்க இருக்கு.. அதெ கரையேத்த முயற்சி செஞ்சோன்னா அதுவே பெருமானாருக்கு எடுக்கப்படற புனித விழாதாங்க..! அப்படிப்பட்ட காரியங்களுக்கு ஏதும் செய்யனும்னா சொல்லுங்க..! என்னாலே முடிஞ்ச வரைக்கும் தர்றேன். நீங்க நடத்தப்போற ஆடம்பர செலவுகளுக்காக என் பணம் பயன்பட நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்..!”

– அவனுடைய உள்ளத்தை புரிந்துகொள்ளும் பக்குவம் அந்த கூட்டத்துலெ யாருக்குமே இல்லை. மொத்தத்தில் அவன் கருத்துக்களை ஜீரணிக்கவே அவர்களுக்கு கஷ்டமாயிருந்தது. முடிவு..? எப்போதும் போல அவனுக்குக் கெட்ட பெயர்தான்..!

“நாலு இங்கிலீசு எழுத்து படிச்சுட்டாலெ இப்படித்தாங்க..! இவனுகதான் சமுதாயத்துக்கே தூணுன்னு நெனச்சு பேச ஆரம்பிச்சுடறானுங்க…!” – அவனைப் பற்றி ஊரில் இப்படி பலவகையான விமர்சனங்கள்…! என்றாலும் ஊரில் உள்ள படித்த இளைஞர்கள் அவன் பக்கமே இருந்தனர்.

***

அன்று வெள்ளிக்கிழமை…!

ஜூம்மா தொழுகை முடிந்து ஊர் ஜமாத்து கூடி இருந்தது. ஊர் மக்கள் யாவரும் ஒட்டுமொத்தமாகக் கூடி இருந்தனர். ஜமாத் தலைவர் ஹசன் மரைக்காயர் பிரச்சினையை ஆரம்பித்தார். ரபீக்கிடம் அவர்கள் சென்றதையும் – அவன் கூறியவற்றையும் ஊர் மக்களுக்கு கோபம் ஏற்படும்படி விரித்துரைத்தார். அவருடைய பேச்சுத்திறமை, ஊர் மக்கள் அனைவரையும் ரபீக் செய்தது தவறுதான் என்று ஒப்புக் கொள்ள வைத்தது. என்றாலும் ரபீக்க் பீஸ் கேட்டதிலே என்ன தவறு..? என்று கேட்க நினைத்த இளைஞர்கள் சூழ்நிலையை உத்தேசித்து பேசாமல் இருந்து விட்டனர். பேசிதான் என்ன ஆகப் போகிறது..? முடிவில் ஜமாத்தார்களை அவமதித்ததற்காக ஊர் ஜமாத் பள்ளி வாசலுக்கு அவன் ஐம்பது ரூபாய் தண்டம் கொடுக்க வேண்டுமென கூறிவிட்டனர் ஜமாத்தார்கள்.

ரபீக் எழுந்தான். “எல்லோருக்கும் என் அஸ்ஸலாமு அலைக்கும்..நான் பீஸ் கேட்டது உண்மைதான். சட்ட சம்பந்தமான ஆலோசனைக்குத்தான் நான் பீஸ் கேட்டேன்..! அது என் தொழில்..! தொழிலுக்கு ஊதியம் கேட்டது தவறு என்று என்னால் நினைக்க முடியவில்லை. மரியாதைக்குரிய ஜமாத் தலைவர் அவர்கள் மளிகைக்கடை வைத்திருக்கிறார். நம்மூரில் வருடா வருடம் கந்தூரி நடக்கிறது. வருபவர்களுக்கு ஜமாத் சார்பில் சோறாக்கிப் போடுகிறோம். அதற்கென வாங்கும் மளிகை சாமான்களுக்கு அவர் பில் போட்டு பணம் வாங்கவில்லையா..? ஜமாத் காரியம் என்பதற்காக சும்மாவா தந்து விடுகிறார்…? நான் மேற்கொண்டு ஏதும் சொல்ல விரும்பவில்லை”

– என்றவாறு தன் பர்சை திறந்து அம்பது ரூபாயை வெளியில் எடுத்தான். “இதோ நீங்கள் விதித்த தண்டத் தொகை..! நம்மூர் கட்டுப்பாடு கெட்டுவிடக் கூடாது…அந்தக் கட்டுப்பாட்டுக்கு நான் தலைவணங்குகிறேன். ஆயினும் மறுபடி சட்ட சம்பந்தமாக யார் என்னை அணுகினாலும் பீஸ் இன்றி ஆலோசனை கூறமாட்டேன். அது உறுதி..!” – என்று கூறிய ரபீக் ஜமாத் பொருளாளரிடம் பணத்தைக் கொடுத்து விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினான். இளைஞர் கூட்ட்டமும் அவன் கூடவே வெளியேறியது. கூட்டம் அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் அடுத்த பிரச்சனைக்கு வந்தார் ஹசன் மரைக்காயர். எப்போதும் போலவே இவ்வருடமும் மீலாது நபி விழாவை ஒருநாள் முழுக்க தமிழகத்தின் முக்கிய சமுதாயப் பேச்சாளர்களை அழைத்துக் கொண்டாடுவது என் ஆக்கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

***

ஊரே அமர்க்களப்பட்டது.

எங்கு பார்த்தாலும் பச்சைக் கொடிகள்..! தோரணங்கள்..! மாநாட்டில் பேச வந்திருந்த சமுதாயத் தலைவர்கள் ரயிலடியிலிருந்து ஊர்வலமாக மாநாட்டுப் பந்தலுக்கு அழைத்து வரப்பட்டனர். பச்சை சீருடை அணிந்த பைத்து-சபாக் காரார்களுடைய அணிவகுப்பு காணக் கிடைக்காத காட்சியாய் இருந்தது.   அவர்களின் தக்பீர் முழக்கம் விண்ணை எட்டியது. ஊர் மக்களோடு, அண்டை ஊர்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வந்திருந்த கூட்டத்தால் பந்தல் நிறைந்து வழிந்தது.

விழாவுக்கு ஜமாத் தலைவர் ஹசன் மரைக்கார்தான் தலைமை தாங்கி இருந்தார். அவரும் ஒரு நல்ல பேச்சாளர்தான் என்பதை அவர் தலைமையுரை நிருபித்தது. ஒருவாறாக காலை மதியம் நிகழ்ச்சிகள் முடிந்தன.

***

மாலை நிகழ்ச்சி இஸ்லாமியப் பாடலுடன் துவங்கியது. தென் மாவட்டத்தில் ஏறத்தாழ இருபது வருடங்களுக்கும் மேலாக அனாதைகள் விடுதி ஒன்றை திறம்பட நடத்தி வந்த அல்ஹாஜ் அப்துல் கரீம் சாஹிப் அவர்கள் பேச எழுந்தார்கள்.

“அன்புக்குரியவர்களே…! அஸ்ஸலாமு அலைக்கும்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..! பொதுவாக நான் மேடைகளில் பேசுவதிலே ஆர்வம் காட்டுவதில்லை. என்றாலும் நாகூர் அழைப்பை உடன் ஏற்றுக் கொண்டதற்கு ஒரு காரணம் உண்டு. அதை நாகூர்வாழ் மக்களாகிய நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் நடத்திவரும் அனாதை விடுதிக்கு இந்த நாகூரில் இருந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. “தான் நாகூரைச் சேர்ந்தவன் என்றும் – பேர் அவசியமில்லை என்றும் – தான் சுயமாகச் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்த அத்தொகையை அனாதை விடுதிக்கு அனுப்பி இருப்பதாகவும் அக்கடிதத்தில் கண்டிருந்தது. கூடவே ஐயாயிரம் ரூபாய்க்கான ஒரு டிராப்டும் இருந்தது. இது அந்த வருடத்தோடு நின்றுவிடவில்லை. வருடா வருடம் தொடர்ந்தது. தொகையும் கூடிக்கொண்டே வந்தது. இவ்வருடம் அந்த பெருந்தகையாளர் ஏழாயிரம் ரூவாய் அனுப்பி இருந்தார். இத்தனை வருடம் தன் அடையாளத்தைக் காட்டாமல் சாமர்த்தியமாக மறைத்து வந்த அவர் இம்முறை தவறிப் போட்டுவிட்ட தன் கையெழுத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திவிட்டார். ஆம்.. இறைவன் தன் நல்லடியார்களை ஒருபோதும் கௌரவிக்காமல் இருக்க மாட்டான். நான் நாகூருக்கு வந்ததின் முக்கிய நோக்கமே அவரை நேரடியாகக் கண்டு என் நன்றியை தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான்…அவர் பெயர் ரபீக் அஹ்மது. அவரை நான் காண விரும்புகிறேன். இந்த மாட்சிமை மிக்க கூட்டத்தில் அவர் இருப்பார் என்று நம்புகிறேன். இருந்தால் அவரை மேடைக்கு அழைக்கிறேன்” –

“வேண்டாம்! வேண்டாம்!” என தடுத்த ரபீக்கின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் இளைஞர் பட்டாளம் அவனை மேடைக்கு தள்ளிக்கிகொண்டு வந்தது.

மேடையில் ஏறி ரபீக் நின்றான்.

“இந்த நல்லிதயங் கொண்ட இளைஞனை, உங்கள் ஊரைச் சேர்ந்தவனை உங்கள் முன்பாகவே அறிமுகம் செய்து கொள்வதிலே பெருமிதம் அடைகிறேன். இறைவன் எல்லா நலன்களையும் இந்த இளைஞனுக்கு அளிப்பானாக-” என்ற அவர்களின் உளப்பூர்வமான துஆவைத் தொடர்ந்து “ஆமீன்” என்ற கூட்டத்தினரின் ஒலி பந்தலை நிறைத்தது. ஹசன் மரைக்காயர் மட்டும் கல்லாய்ச் சமைந்திருந்தார்.

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்
தொலைபேசி : 0091 9842394119
முகவரி:
கவிஞர் இஜட். ஜபருல்லா
14, புதுமனைத் தெரு
நாகூர் – 611002

**

ஜபருல்லாநானாவின் சில சிறுகதைகள் :

எழுத்தாளன்

தவறுகள்

1 பின்னூட்டம்

 1. 08/08/2011 இல் 12:55

  https://abedheen.wordpress.com/2011/01/29/parvin-story1/
  (அப்ப ‘பர்வீன்’கிறது யாருன்னு கண்டுபிடிச்சாச்சா?

  நியாயங்கள் ‘நியாய’மானவைதான்;
  ஆனாலும்,
  ‘தவறுகள்’ எட்டிப்பிடித்த உச்சத்தை
  ‘நியாயங்கள்’ எட்டமுடியாது!

  எனது (பாலமன் சாப்பையா) தீர்ப்பு(!!??):

  …………எனவே, இங்கு ஓங்கி நிற்பவை, தவறுகளே, தவறுகளே,,, என்று ………..


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s