ஏபிஎம். இத்ரீஸின் 10 நூல்கள்

‘ஈழ எழுத்தாளர்களை அங்கீகரிப்பதும் கொண்டாடுவதும்கூட ஓர் அரசியல்தான்’ என்று சொல்லியிருக்கிறார் தாகூர் விருது பெற்ற நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. போச்சு நாகூர் விருது! உண்மையில், நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் அதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்றே இலங்கை எழுத்தாளர்கள் சிலரின் படைப்புகளை  இங்கே பதிவிட்டேன்.  நாகூர் சென்ற மதிப்பிற்குரிய ஹனீபாக்கா என் செல்ல மகன் நதீமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அவன் கையை ஒரு பிடி பிடிக்கிறார் பாருங்கள்.  ஆ, பார்த்து நெகிழ்ந்து விட்டேன். (புகைப்படம் பிறகு.)   என்னுடைய எந்த சொந்தமும் அந்தமாதிரி அன்பை என் பிள்ளைகளிடம் வெளிப்படுத்தியது இல்லை. அஸ்மா, இதெல்லாம் அரசியல் என்றால் அன்பு என்பதே கிடையாதா?

சரி, இத்ரீஸின் புத்தகங்கள் பற்றி சொல்லவந்து எங்கேயோ தொலைந்து போய்விட்டேன். அரசியல்தான் காரணம்! அவர் எழுதிய பத்து நூல்களின் விபரம் இங்கே இருக்கிறது. ’இலங்கையிலிருந்து நூலொன்றைக் கொண்டுவருவது மிகுந்த சிரமமானது. இங்கு புத்தகங்களுக்கான சந்தை மிகவும் சிறியது. தமிழ்நாட்டு வாசகர்கள் பரப்பு இதுவரை இலங்கை வெளியீடுகளுக்குக் கிடைக்காத ஒன்று. இது தொடர்பான ஒரு அறிமுகம் ஒன்றை உங்களது தளத்தில் வெளியிட்டால் அது அங்குள்ள வாசகர்களைச் சென்றடைய மிகவும் உதவிகரமாக அமையும்’ என்று தளமேலாளரான சகோதரர் இம்தாத் தகவல் தெரிவித்திருந்தார். ’இஸ்லாத்தை ஒரு சீரியஸான மதமாக நபிகளின் சீறாவை நகைச்சுவையே அற்ற ஒரு வறட்டு வாழ்வாக பிரச்சாரக்களத்தில் கட்டமைக்கும் வேலையில் நாம் மும்முரமாக இறங்கியிருக்கின்றோம். ஆனால் இது நபிகளின் ஆளுமைக்கு வேட்டு வைக்கின்ற நடவடிக்கையாகும். நபிகளின் தெய்வீகத் தன்மைக்குக் கொடுக்கின்ற அதே முக்கியத்துவத்தை அவரின் மானுடத் தன்மைக்கும் வழங்க வேண்டும்’ என்று (பார்க்க : புன்னகைக்கும் இறைத்தூதர்)  அற்புதமாக எழுதும் எழுத்தாளரைப் பற்றி தகவல் தருவதை விட வேறென்ன வேலை என்று பதில் எழுதினேன். சோனகம் பதிப்பகத்தாரின் முகவரியை கீழே தந்திருக்கிறேன் – இத்ரீஸ் அவர்களின் அன்பான வேண்டுகோளுடன்.

***

**

இணைய வாசிப்பு இன்னும் எம்மத்தியில் பரவலடையாததன் காரணமாக புத்தகப் பதிப்பும் வாசிப்புப் பண்பாட்டின் தேவையும் இருந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் உயிர்ப்பைத் தேடும் வேர்கள் பதிப்பகம் தனது பெயரை ‘சோனகம்’ என மாற்றிக் கொண்டு பத்து நூல்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதில் முதலிரண்டு நூல்கள் இம்மாத இறுதியில் வாழைச்சேனையிலும் ஓட்டமாவடியிலும் இரு வெளியீட்டு விழாக்களை செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம். பின்னர் காத்தான்குடி, அட்டாளைச்சேனை, திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களிலும் ஏனைய நூல்களை வெளியிடுவதற்கு உத்தேசித்துள்ளோம்.

தகவல் வேகத்தின் வளர்ச்சிக்கு மத்தியில் புத்தகப் பதிப்பும் வெளியீடும் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளது. கோட்பாடுகள், கருத்தியல்கள் மிக வேகமாக காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. புத்தாக்கமுள்ள படைப்புக்களே இன்றைய வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன. எனவே எமது வெளியீடுகளிலும் அது குறித்த கவனத்தையும் உழைப்பையும் செய்ய வேண்டியிருந்ததால் அண்மைக்காலமாக இணைய நண்பர்களுக்காக புதிதாக எதையும் என்னால் எழுத முடியவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க்கைச் செலவு பண்மடங்காக திடீர் திடீரென அதிகரித்துக் கொண்டிருக்கும் நமது சூழலில் புத்தகங்களை வாங்கிப் படிப்பது என்பதும் அதை நம்பி வெளியிடுவதும் பெரும் சவாலுக்குரிய ஒன்றே. ஆனாலும் வர்த்தக நிலையங்களில் நாளாந்தம் புதிய பொருட்கள் வந்து குவிந்தவண்ணமே இருக்கின்றன. வாடிக்கையாளர்களும் அவற்றை வாங்கிச் சென்று நுகர்வதையே காண்கிறோம். உணவு, உடை, குடிநீர் என்பவற்றுக்கு நாம் செலவளிப்பதைப் போல இங்கு அறிவை விருத்தி செய்யவும் புதிய சிந்தனைகளை பெற்றுக் கொள்ளவும் நாம் சுயமாக சிந்திக்கவும் புத்தகமும் வாசிப்பும் உணவைப் போல, ஆடையைப் போல இன்றியமையாதவை என்று கூறினால் நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். வெறும் பாடசாலை, பல்கலைக்கழக கல்வியால் மாத்திரம் நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் தீர்த்துவிட முடியாது என்பதை அறிவீர்கள். வகுப்பறையில் பாடம் மாத்திரமே இருக்கின்றது. அங்கு ஆசிரியர் இல்லை. நிறுவனங்கள் சிந்தனைகளைத்தான் கற்றுக் கொடுக்கின்றன. சிந்திப்பதைக் கற்றுக் கொடுப்பதில்லை. வகுப்பறைக்கு வெளியிலான ஆசிரியர்-மாணவர் ஊடாட்டமும் சந்திப்புமே சிந்திப்பதற்கான வாசல்களைத் திறக்கின்றன. இந்த இடத்தில் நூல்களின் பணியும் மிக முக்கியமானவை. நாம் வெளியிலிருந்து வரும் நூல்களைத்தான் அதிகமும் நுகர்ந்து கொண்டிருக்கிறோம். அவை நமது பண்பாடு, நாம் எதிர் நோக்கும் நெருக்கடிகள் போன்ற பின்புலங்களில் இருந்து எழுதப்பட்டவை அல்ல. முற்றிலும் வேறுபட்ட சமூக அரசியல், பண்பாட்டு வித்தியாசங்களை கொண்டவை. இப்பின்புலத்திலிருந்துதான் நாம் இச்சோனக வெளியீட்டுத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். எனவே எமது திட்டம் வெற்றிபெற உதவுவீர்கள் என்ற நம்பிக்கைகளுடன்,

அன்புடன், ஏபிஎம். இத்ரீஸ்

**

புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்க :

சோனகம், மஹ்மூத் ஆலிம் வீதி, வாழைச்சேனை-5 (30400), இலங்கை. தொலைபேசி: +94 777 141649, ஈமெயில்: sonaham.lk@gmail.com  இணையம்: books.sonaham.lk

**

நன்றி : ஏபிஎம். இத்ரீஸ் அவர்கள், இம்தாத்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s