மதிப்பிற்குரிய இஜட். ஜபருல்லாநானாவின் கவிதைகள் – தட்டச்சு செய்து அனுப்பிய ஜாஃபர்நானாவுக்கு நன்றிகளுடன்…
கைகள்
கைகள் அடிக்கும் –
இது வலுவானது.
தடுக்கும் –
இது துணிவானது.
அரவணைக்கும் –
இது ஒன்றே புனிதமானது.
கொட்டிக் கொடுக்கும்
கைகளை விட
தட்டிக் கொடுக்கும்
கைகளே –
அரிய சாதனைகளுக்கு
அடித்தளம் அமைக்கும்.
தள்ளிவிடும் கைகளில்
உள்ளார்த்தம் இருக்காது.
தழுவவரும் கைகளிடம்தான்
எச்சரிக்கை தேவை.
வணங்கும் கைகள்
வழங்கும் கைகள்
இவைகள் மட்டுமே
இறைவனோடு இணையும் கைகள்.
ஆளும் கைகள்
நீளக் கூடாது.
காக்கும் கைகள்
தாக்கக் கூடாது.
கைகளை –
நம்பாமல் சிலபேர்கள்
கைரேகைகளை நம்புகிறார்கள்
இவர்கள் –
எதிர்கால கனவு வெளிச்சத்தில்
நிகழ்காலத்தை –
இருட்டாக்கிக் கொண்டவர்கள்.
இறைவன் –
நமக்கு ஏன்…
இரண்டு கைகளைக் கொடுத்தான்
தெரியுமா..?
ஒன்று –
முன்னேற்ற ஏணியில்
பற்றிப் பிடித்து மேலேற..
இன்னொன்று –
முடியாதவர்களைத் தூக்கி
மேலேற்ற….!
***
கால்கள்
கால்கள் –
இவைகளால்
ஓடப் பழகுவதை விட
உறுதியாக
நிற்க முயற்சிப்பதே
வெற்றியின் துவக்கம்.
சொந்தக் கால்களில்
நிற்பவனுக்கே
சுயமரியாதை சுகம்.
பிறர் கால்களில்
நிற்க நினைப்பவன்
நொண்டி அல்ல..!
பிணம்.
முன்வைத்த கால்களை
பின் வைக்கக் கூடாது.
இது வீரம்.
பின் வைப்பதும் கூடும்
இது விவேகம்.
எட்டி உதைக்கும் கால்களின் அழிவு
எப்போதும் – மிக கிட்டத்தான்.
உதைக்கும் உரிமை
குழந்தைகளின் கால்களுக்கு மட்டுமே.
கால்களில் விழுவதும்
விழவைப்பதும்
மரியாதையல்ல…
மானக்கேடு.
***
கண்கள்
கண்கள் –
இது மனசின் வாசல்.
இதை உற்றுப்பார்த்தால்
உள்ளம் தெரியும்.
இது –
வசந்தகால சிந்தனைகளின்
வடிகால்..
வார்த்தைகள் தோற்றுவிடும்
மௌன அரங்கம்.
நவரசங்கள் அரங்கேறும்
நாடகமேடை.
அறியும் கண்களைவிட
உணரும் கண்களே
உயர்வானவை.
கண்கள் இல்லாதவர்கள்
மட்டுமல்ல…
கண்ணோட்டம் இல்லாதவர்களும்
குருடர்களே.
கண்களை –
நேராக நோக்குபவன்
மாறாக நடக்கமாட்டான்.
கண்களைத் –
தாழ்த்துபவன்
கள்ளத்தனத்தில்
உயர்ந்திருந்திப்பான்.
அழகு –
காட்சியில் இல்லை
கண்களில்தான்.
கயஸின்
கண்களுக்குத்தானே
கருப்பு லைலா அழகி…!
***
காதுகள்
இது –
அறிவுக் கோட்டைக்கு
தோரணவாசல்.
ஆன்ம விளைச்சலுக்கு
பொழியும் மேகம்.
இது –
ஒரு சேமிப்பு வங்கி.
சேர்ந்த செய்திகளை
மூளைப் பெட்டகத்தில்
முனைப்புடன் பூட்டும்..!
இது –
கேட்கும் வரைக்கும்
மூப்பு வராது.
இதன் –
ஓட்டைகள் வழியே…
உள்ள சுரங்கத்தில் நுழையும்
போதனைப் புரவிகள்
வாழ்க்கைத் தேரை
வெற்றிப் பாட்டையில்
இழுக்கும்.
காதுகளுக்கேன்
கதவுகள் இல்லை…?
செய்திகளுக்கு விடுமுறையில்லை.
***
கண்ணீர்
இது –
உன் கண்களில் இருந்து
தூசிகளை வெளியாக்கட்டும்.
துக்கத்தை காட்டவேண்டாம்.
இது –
சிலருக்கு ஆயுதம்.
சிலருக்கு கேடயம்.
கண்ணீரால் –
வாழ்க்கையில்..
எந்தக் காட்சியும் மாறிவிடாது.
கண்ணீர் விடுவது
விடவைப்பதோ குற்றம்…
செய்த பாவங்களுக்காக
விடும் கண்ணீரை விட
செய்யும் பிராயச்சித்தம்
மேலானது.
கண்ணீரிலும்
வகைகள் உண்டு.
கடும் துன்பத்தில்
ரத்தக் கண்ணீர்.
களிப்பின் உச்சத்தில்
ஆனந்த கண்ணீர்.
நடிப்பின் தேர்ச்சியில்
நீலிக்கண்ணீர்.
கபடத்தின் எல்லையில்
முதலைக் கண்ணீர்.
கண்ணீருடன்
அதிகம் கலப்பது
உடலா..? உள்ளமா..?
இந்த –
முத்திரை வினாவுக்கு
இதுவரை –
முழுமையான
விடையில்லை.
இந்த –
இயலாமையின்
குறியீடு
ஏற்றம் பெறுவது
இறைவனை
வணங்கும்போது
மட்டுமே…!
***
நன்றி : இஜட். ஜபருல்லா | Cell : 0091 9842394119
jafar sadiq said,
17/07/2011 இல் 13:17
Miga ariumai. Vaarthaigalum arthangalum.
தாஜ் said,
17/07/2011 இல் 20:31
கண்கள்:.
‘வார்த்தைகள் தோற்றுவிடும்
மௌன அரங்கம்.
நவரசங்கள் அரங்கேறும்
நாடகமேடை’
*
கண்கள் குறித்து
ஜபுருல்லா நாநாவின்
இக் கவிதை வரிகள்
மனதால் உணரும்
நுட்பம் கொண்டது.
நாநா…
வாய்களைக் குறித்தும்
எழுதியிருக்கலாம்.
-தாஜ்
SiSulthan said,
20/07/2011 இல் 10:20
எல்லாமே அருமை. ஆனா முக்கியமா எழுதவேண்டியதை நானா இன்னும் எழுதவில்லயே?
ஆபிதீன் said,
20/07/2011 இல் 11:18
வாங்க சுல்தான், நலமா? //முக்கியமா எழுதவேண்டியதை// என்னாது அது?