துக்கம்… துக்கம்… துக்கம்… – மஜீத்

சென்றவார இறுதிநாட்களில் எனது உடல்நிலை சரியாக இல்லை. சாதாரமான காய்ச்சல்தான். ஆனாலும் இருமலும் தொண்டைக்கட்டும் படுத்திவிட்டது. இன்னும் என் கரமுர குரல்கேட்பவர்களுக்கு (என்னய்யா MRR வாசு மாதிரி பேசுறே? – தாஜ்) விளக்கம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னைக் ‘கண்டுக்க’ வருவதாகச் சொன்ன நண்பர்களை ‘அதெல்லாம்’ வேண்டாமெனச் சொன்ன மறுநொடியே அது வியாழன் இரவென்று உணர்ந்து வாங்க வாங்க ன்னு கரகரத்தேன்.

நண்பர்கள் சென்றபிறகு அவர்களிடம் என்ன பேசினோம்னு யோசித்தால், எனது இளைய மகனார் தாரிக் அவரது 15வது வயதில் (2006கடைசியிலும் 2007 துவக்கதிலும்) எழுதி, ஒரு ஆங்கில வலைத்தளத்தில் பிரசுரித்திருந்த மூன்று ஆங்கிலக் கவிதைகள் பற்றி மட்டுமே பேசியது உறைத்தது. என்னவோ மாதிரி உணர்ந்தாலும், எனக்கு அந்த விஷயம் இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் தெரிய வந்ததென்பதால், சாமாதானப்பட்டுக் கொண்டேன்

மூன்றில் கடைசியாக எழுதிய ஒரு கவிதையை மட்டுமே எனக்குத் தந்தார். மற்ற இரண்டும் childish & poor grammar என்று காரணம் சொல்லி, தர மறுத்துவிட்டார் – வலைத்தளத்தின் பெயரையும் secret என்று சொல்லிவிட்டார்.

அவர் தந்த அந்த ஒரு கவிதையின் தாக்கம் என்னைத் துரத்தி, மற்ற இரண்டும் இருந்த வலைத்தளத்தைத் தேடிக்கண்டுபிடிக்க வைத்துவிட்டது. அந்த இரண்டு கவிதைகளில் poor grammar என்று அவர் சொன்னது சரியாக இருந்தாலும் childish என்று தாரிக் கூறியது எனக்குத் தவறென்றேபட்டது.

தாஜுக்கு அனுப்பினேன் அந்த மூன்று கவிதைகளையும். அவர் படித்துவிட்டு பாராட்டித் தள்ளிவிட்டார். அரையும் தெரியாத குறையும் தெரியாத ‘புண்ணாக்’கான (இந்த வார்த்தைக்கு காப்பிரைட் ஒனர்கள் மன்னிக்கலாம்) என்னையே புத்திசாலின்னு சொன்னவராச்சே தாஜ். இந்தக் கவிதைகள் மூலம் கொஞ்சம் விஷயதாரியாகத் தெரிந்த என் மகனைப் பாராட்ட அவருக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை.

இன்னும் அந்த இருகவிதைகள் எங்கள் பார்வைக்கு வந்தது தெரியாத தாரிக்கிடமே  (தாஜும் பொதுவாகவே பாராட்டியிருந்தார்) அனுப்பி இலக்கணப்பிழை திருத்தி வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்……..

2

நண்பர்கள் சென்ற ஒருமணிநேரத்திற்குப் பிறகு தாரிக்கிடம் இருந்து ஒரு SMS: please call if you are still awake. அப்போது நள்ளிரவுதாண்டி மணி 12.45. அவர் இருக்கும் பாண்டிச்சேரியில் அதிகாலை 2.15. எனக்குத் தெரிந்துவிட்டது ஏதோ விபரீதமென்று. தூங்க முயன்றுகொண்டிருந்த நான் உடனே அழைத்தேன். பதட்டமாகப் பேசினார். “அத்தா, என் friend அந்த வேலூர் பையன், இறந்துட்டான்த்தா, ஆக்ஸிடெண்ட்னு” உடைந்தார். அவரது நண்பர்கள் விபரம் அத்தனை துல்லியமாகத் தெரியாதெனினும், அந்தப் பையன் எனக்கு உடன் நினைவில் வந்தான், நான் சந்தித்ததில்லை என்றாலும்.

3

போனவருட இறுதியில் வேலை விஷயமாக டெல்லி சென்ற நான், அப்போது மனைவி ஊரில் இருந்ததால் 2 நாட்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, திரும்பி துபை வரும்போது, அதுவரை நான் பார்க்காதிருந்த தாரிக் கல்லூரியையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு சென்னையில் விமானமேறினேன்.

பாண்டியை நான் அடைந்தபோது அதிகாலை 2 மணி. ECR சாலையில் இருந்து 2 கிமீ தூரத்தில் கல்லூரி. தாரிக் ஒரு பைக்கில் வந்து அழைத்துச் சென்றார். யாருடைய பைக் என்றேன். ஃபிரேண்டோடது. நீ அடுத்த வாரம் வந்திருந்தால் காரில் வந்து கூட்டிப் போயிருப்பேன். என் பிரெண்ட் கார் வாங்கி கொண்டுவர போயிருக்கான்னார். ஒரே காம்பஸ்ல காலேஜ் ஹாஸ்டல் –  கார் எதுக்கு?ன்னு கேட்டேன். நீ இப்ப தூங்கு காலைல சொல்றேன்னர். மறக்காமல் சொல்லவும் செய்தார்:
“ அத்தா இங்க படிக்கிற எல்லாரும் ஒண்ணு பயங்கர rich இல்லைனா well well settled. நம்ம லெவெல்ல இருக்கிறவங்க ரொம்பக் குறைவு. நான் சொன்ன ஃப்ரெண்ட் ஷஷாங்க்; அம்மா வேலுர்ல பெரிய டாக்டர். CMC பக்கத்துலயே 4 ஃப்ளோர் சொந்த கட்டிடத்தில் 3 மாடியில் ஹாஸ்பிடல், 4வது மாடியில் வீடு. அப்பா டெல்லியில் ஒரு பேங்கர். ரொம்ப வசதி. ரெண்டு வருஷம் முந்தி இவன் இங்க சேரும்போது ஆரம்பித்த பாங்க் அக்கவுண்டில் 7 லட்சம் இருந்தது, ரெண்டு நாளைக்கு முன்னே பேலன்ஸ் காமிச்சான் 26 ஆயிரம் இருந்தது. அம்மா திட்டுவாங்களோன்னு பயந்துகிட்டேதான் போறேன், ஆனா எப்படியும் காரோடுதான் வருவேன்னு சொல்லிட்டு போய்ருக்கான். அது போகட்டும், என்னோட பாங்க் பாஸ்புக்க காட்டவா? ன்னு நக்கலடித்தார். அவன் ரொம்ப நல்லவன்த்தா, தன்னோட வசதிவாய்ப்பின் பெருமை கொஞ்சமும் இருக்காது. எல்லாரிடமும் சகஜம். எல்லாருக்கும் உதவி. அம்மா அப்பாட்ட பயங்கர செல்லம், அக்கா டெல்லி AIIMS-ல PG படிக்குது, Sportsman, எல்லாத்துக்கும் மேல சூப்பரா படிப்பான்த்தான்னு புராணம் பாடினார். எல்லாம் என் நினைவுக்கு வந்தது. “”போய்ட்டான்த்தா……… ரெண்டுமணி நேரமாகுது……..”” அவன் அம்மா வந்துகிட்டு இருக்காங்கன்னு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே சொன்னார்.

 4

கிட்டத்தட்ட இரண்டு வருடத்துக்கு முன்னால் இதே போன்றவொரு துர்மரணம் பற்றிச் சொன்னபோது தாரிக் கதறி அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. முதல் வருடம் முடிந்தபின் ஷிம்லாவுக்கு batch tour போறோம்னு சொன்னார். என் மனைவிக்கு சிறிது சங்கடம், எனக்கும்தான், பேப்பர்ல வர்ற செய்தில்லாம் பயமா இருக்குங்கன்னு சொல்ல, தாரிக்கோ நான் பாத்துக்கிறேன்த்தா, ஸ்டாஃப் கூட வர்றாங்கன்னு என்னை அழுத்த, நான் மனைவியை ஆசுவாசப்படுத்திவிட்டு, ok ஆனா ரெண்டு கண்டிஷன், சரியான்னேன், அதெல்லாம் பிரச்சினை இல்லை நான் ஃபாலோ பண்ணிக்கிறேன்னார். எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாமல், தமிழில் சொன்னால் சாதாரண அறிவுரைக் கணக்கில் சேர்ந்துவிடுமென பயந்து, ஆங்கிலத்தில் 1. No Adventures 2. Don’t go near water னு சொல்ல, OKத்தா, ரெண்டும் பண்ணமாட்டேன்னு உத்தரவாதம் தந்து சென்றார். இந்த இரண்டையும் மீண்டும் ஒருமுறை நினைவுறுத்தினேன், அவர்கள் புறப்படும்போது. மூன்றாம் நாள் காலையில் டெல்லியில் இருந்து கூப்பிட்டு, அத்தா என் ஃப்ரெண்ட் செத்துப் போய்ட்டாத்தான்னு ஒரே கதறல். சிரமப்பட்டு ஆறுதல் படுத்திக் கேட்டேன். அரைமணிக்கு முன்னால இருந்தாத்தா, போயிட்டா – அப்பிடின்கிறதுக்குள்ள போய்ட்டத்தான்னு அழுகை. சரி தம்பி மத்த எல்லாரும் நல்லா இருக்கீங்களா, என்ன ஆச்சுன்னு கேட்க, எல்லாரும்‌ நல்லாருக்கோம், அவ போய்ட்டத்தான்னு மறுபடி கதறல். டிரெக்கிங் போகலாம்னு ஒரு குரூப் கிளம்ப, அந்தப் பெண்தான் ரொம்ப ஆர்வமாம், போட்டோ வீடியோன்னு துறுதுறுன்னு திரிந்து, இவரைகூப்பிட இவர் என் அறிவுரைப்படி மறுக்கவும், சென்று விட்டார்கள். அரைமணி நேரத்தில் கெட்ட செய்தி வந்துவிட்டதாம். ஒரு குன்றை அடைவதற்கு, சிறிய ஓடை ஒன்று குறுக்கே வர, ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்து சென்றிருக்கிறார்கள். திடீரென்று தண்ணீர் அதிகரிக்க சுழலும் சேர்ந்துகொள்ள, இந்தப்பெண் பிடிநழுவி, நிமிடத்தில் அடித்துச் செல்லப்பட்டு, சிறிது தூரத்திலிருந்த பாறையில் உடல் சிக்கிக்கொண்டு கிடந்தது. நிமிடங்களில் நடந்த கோரம். கல்லூரி நிர்வாகம் அன்று மாலையே அனைவரின் டிரெய்ன் டிக்கெட்களையும் கான்செல் செய்து, பாண்டிக்கு சென்னை வழியாக  விமானத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. 

‌5

தாரிக்கை சமாதானப்படுத்தி, என்ன நடந்ததென்று விசாரித்தேன். கார் வந்த பிறகு ஹாஸ்டலை காலிசெய்துவிட்டு ஒரு ரிசார்ட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தந்து டெல்லி நண்பனோடு (அவன் பெயரும் ஷஷாங்க் தான். இதற்காக தனது செல்லப்பெயரான சுனில் என்றே தன்னை அழைக்கச் சொல்லியிருக்கிறான்.) தங்கியிருந்து கல்லூரிக்கு வந்துபோயிருக்கிறான். ஒருவாரத்துக்கு முன்னால் நடந்த தனது தோழியின் திருமணத்தில் பிஸியாக இருந்திருக்கிறான். வியாழன் இரவு இரண்டு ஷஷாங்கும் அந்தத் தோழியின் காரிலும், இன்னொரு காரில் இன்னொரு நண்பனும் தோழியின் கணவரும் ஒன்றாகக் கிளம்பியிருந்திருக்கிறார்கள். முன்னால் சென்றவர்கள், ரெண்டு ஷஷாங்க்கும் வந்த வண்டி ரொம்ப நேரம், தொடராமலிருக்க, திரும்பிச் சென்று தேட, அவர்கள் கண்டது விபத்து களேபரம்தான். பிழைத்துக் கொண்ட ஷஷாங்க்கிற்கு தொடைஎலும்பில் காயமாம். தாரிக் வெள்ளிக்கிழமை போய்ப்பார்க்கும்போது சந்தோஷமா இருந்தானாம். காரணம் அவன் நண்பன் பிழைத்துக்கொண்டதாகச் சொன்னதை நம்பிக்கொண்டிருந்தது. அப்புறம் மாலையில் உண்மை தெரிந்ததும் கதறு கதறுன்னு கதறிட்டானாம். சனி காலையில் 4 கல்லூரிப் பேருந்துகளில் இவர்கள் வேலூர் செல்கிறார்கள் – இறுதி சடங்கிற்கு.

6

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்:

தாரிக் கவிதைகள் அப்படியே இருக்கட்டும்

இலக்கணப்பிழையோடு.

இருந்தாலென்ன?

பிழைபட்டது

வெறும் இலக்கணம்தானே?

உணர்வல்லவே?

உயிரல்லவே?

–  மஜீத் | amjeed6167@yahoo.com

4 பின்னூட்டங்கள்

 1. 12/07/2011 இல் 10:39

  இதோ அந்த 2 கவிதைகள்:

  1. You, My Star!!

  On that rainy day when stars vacated
  The sky and even the moon dislocated
  But that blue layer still remain bright
  And its true to my sight.

  Its due to a bright new star shined,
  Whose brightness would make human eyes blind.
  And to that star, the sky dares,
  For a birthday wish, and that star stares.

  For its me as the sky, wishing my dear,
  Even she, a billion light years far away, I cheer.
  And I give the entire beats of my heart
  As a birthday gift, I bought.

  For readers’ comments click here: http://www.writerstoyou.com/books/readonline.asp?bookid=8083&locid=7721&user=2442&title=Tariq+A+%2D+You%2C+My+Star%21%21

  2. Find Your Way!

  You have the eternity,
  And before you is the world’s entity.
  Why should you fear,
  Come on and put on the gear.

  What’s done in the past just fade,
  But your dareness could invade
  the future, Which is the way,
  Of legs doesn’t slip from astray.

  In anything don’t flutter,
  And ever don’t use the word, “later”
  And if you think in your way, Success persists,
  Don’t just stop there, for you an optimist.

  For readers’ comments click here: http://www.writerstoyou.com/books/readonline.asp?bookid=8344&locid=7980&user=2442&title=Tariq+A+%2D+Find+Your+Way%21

 2. தாஜ் said,

  12/07/2011 இல் 19:17

  துக்கம்
  இப்படித்தான்
  நம் கன்னத்தில் அறையும்.

  வாழ்வின் சோகம்
  அர்த்தம் பொருந்தியது மாதிரியே
  அர்த்தம், இல்லாததும் கூட.

  இயற்கையை நொந்தும் பயனில்லை.
  இதுதான்…
  இவ்வளவுதான்
  வாழ்க்கை!
  -தாஜ்

 3. 12/07/2011 இல் 19:26

  உலகம் என்பது கானல் நீர், அதில் நீந்தி விளளயாடுவது வாழ்க்கை, சிலர் கரை ஏறுகிறார்கள், சிலர் அதோடு சங்கமித்து விடுகிறார்கள்.

  இப்படி சொன்னால் ஆன்மீகம் பேசுகிறேன் என்று கோபிக்கிறார் தாஜ்

  • தாஜ் said,

   13/07/2011 இல் 16:01

   நாநா…
   நீங்கள் எனக்கு உகந்தவர்.
   நீங்கள் வருந்தனும் என்று
   என்றும் எழுத மாட்டேன்.
   எழுதியதும் கிடையாது.
   உங்களது பதிவை முன்வைத்து
   என் சந்தேகங்களும்
   அதையொட்டி கேள்வியும்
   கிளைத்திருக்குமே தவிர
   அதைத் தாண்டி இம்மியும்
   அதிகப் பட்டிருக்க மாட்டேன்.
   ஆன்மீகம் தாண்டி,
   பிற கட்டுரைகளில்
   நீங்கள் பேசுகிற
   யதார்த்தம் சார்ந்த
   உண்மையின் அளவுக்கு
   இன்னும் நான்
   பேசவில்லை என்பது
   எனக்குத்தான் தெரியும்.
   -தாஜ்


தாஜ் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s