ஜாஃபர்நானாவின் கோணப் புளியாங்கா!

உண்மையில் , நானாவுடையது கோணலாக இருக்காது. (அதெப்படி தெரியும் என்று வதைக்காதீர்கள். அவர் சொன்னதுதான். நம்புகிறேன். ’ப்ரூஃப்’ கேட்டால் காட்டியே விடுவார் அந்த மனுசன்.) எழுத்தைச் சொல்கிறேன். ‘கோணப்புளியாங்கா’ என்பது மஞ்சக்கொல்லையிலுள்ள அவர் நண்பரின் பட்டப் பெயராம். இன்னொரு ஆன்மீகப் பதிவு எழுதுகிறேன் என்று துடித்தவரை அடக்கியது நான்தான். தர்மம், மெஹ்ராஜ்னு ஜனங்கள புல்லரிக்க வச்சது போதும். வேறமாதிரி எழுதுங்க என்றதும் எழுதியேவிட்டார். கூடவே ‘டோலக்’கும் வாசிக்கிறார். கேளுங்கள். எழுதுவதற்கு முன்பு ‘டோலக்னா என்னா?’ என்று ஒரு கேள்வி. ‘இடுப்பு நானா’ என்றதும் கடுப்பானார். ’கல்யாண சடங்குல வைப்பாஹலே, அத சொல்றேன்’ என்றார். உண்மைதான். ‘வைப்பது’ சம்பந்தமான எல்லா சடங்கிலும் வைப்பார்கள் – அந்த காலத்தில். இப்போது அதெல்லாம் மறைந்து விட்டது (’வைப்பது’ அல்ல!) என்ற அவர் ஆதங்கம் இந்தப் பதிவில் இருக்கிறது.  – ஆபிதீன்

***

ஹமீது ஜாஃபர்‘கோணப் புளியாங்கா’ என்கிறது ஒருத்தனுடைய பட்டப் பேர். அவன் கால் லேசா வளைஞ்சிருக்கும் அதனால்தான் அந்த பேருன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன், ஆனால் அதுக்கில்லையாம் அவண்டெ  குடைக்காம்பு மாதிரி இருக்குமாம். அதுக்குத்தானாம். ஆமா எல்லாத்துக்குமா உருண்டையா வாழைத் தண்டுமாதிரி இருக்கும்? செலருக்கு கொஞ்சம் சப்பையா, செலருக்கு பனங்கிழங்கு மாதிரி, செலருக்கு கெளுத்தி மீன் மாதிரி மண்டை பெருத்து உடம்பு சிறுத்து இருக்கும். இதுக்கெல்லாம் பேரு வச்சா..?  எங்க பயலுவ இருக்கான்களே ரொம்ப மோசம். இப்படித்தான் எங்க ஊர்லெ குடியிருந்த புலவர் ஒருத்தர் தன் மகனை ‘வீர மகன், வீர மகன்’டு சொல்லிக்கிட்டிருந்தார். அதை அப்படியே மாத்தி ‘அசதி’ ன்னு பேர் வச்சுட்டானுவ. அதுலேந்து அவனோட உண்மையான பெயர் மறைஞ்சு போயி ’அசதி’ நிலைச்சிடுச்சு. இன்னொருத்தருக்குப் பேரு ‘பச்ச மட்டை’ எப்படி பேரு வந்துச்சுன்னெல்லாம் தெரியாது. எங்களைவிட இருவது வயசு கூட. கோணப்புளியாங்காவையும் பச்சமட்டையையும்  பட்டப் பெயரை சொல்லிக் கூப்பிட்டா கையிலெ கெடைக்கிறதை எடுத்து அடிக்க வந்துடுவாங்க.  அதனாலெ நாங்க டெக்னிக்கலாத்தான் கூப்பிடுவோம்.

ஒருத்தனுக்குப் பேரு ‘அல்வாப்பீ.’ வாப்பா அல்வா வியாபாரி அதனாலெ அவனுக்கு அந்த பெயர். இப்படித்தான் ‘அல்வாப்பீ’ ஒருதடவை ரயில்வே போலிஸ் கிட்டே மாட்டிக்கிட்டான். உண்மையான பேரையும் அட்ரஸையும் கொடுத்துட்டு வந்துட்டான். இது யாருக்கும் தெரியாது. மறு நாள் போலிஸ் சம்மனுடன் வந்து ’அத்துல் கரீம் யாருங்க’ என்று கேட்க அந்த மாதிரி பேர்லெ இந்த தெருவுலெ யாரும் இல்லீங்க, அடுத்த தெருவுலேயும் இல்லை இன்னும் இரண்டு தெரு தள்ளின்னா விசாரிச்சுப் பாருங்க என்று சொல்லி அனுப்பினோம்.

போலிஸ் போய் கொஞ்ச நேரத்துலெ அல்வாப்பீ வந்து ’டேய் போலிஸ் போயிட்டானா?’ என்று கேட்டான். ’ஆமா போயிட்டான்’ என்றோம்.
’அத்துல் கரீம் எங்கே?’ன்னு கேட்டிருப்பானே?’ என்றான். ’ஆமா, அது யாரு?’ என்றோம். ’அது நாந்தாண்டா, இந்த ஊர்லெ எவனுக்குமே என்னோட  பேரு தெரியாது. அதனாலெத்தான் என் உண்மையான பேரை கொடுத்துட்டு வந்தேன்’ அப்டீன்னான். உம்மா வாப்பா வச்ச பேரு மறஞ்சுப்போயி நாங்க வச்சப் பேருதான் நெலச்சு நிக்கிது. இப்பவும் அவன் பேரு ‘அல்வாப்பீ’தான்.

’ஆடிப்பட்டம் தேடி விதை’ன்னு சொல்லுண்டு.  சாதாரணமா ஆடி மாசம் வந்தால் விவசாயம் ஆரம்பமாயிடும். எல்லா விவசாயிகளும் பிஸி ஆயிடுவாங்க. இந்த பிஸி தை, மாசி வரை இருக்கும். நெல் வித்த காசு, அறுப்பறுத்த காசு என்று விவசாயிகள் கையிலெ காசு இருக்கும்.  மாரியம்மன் கோயில் திருவிழா, முருகன் கோயில் காவடித் திருவிழா, திரௌபதி அம்மன் திருவிழா; இதல்லாமல் கோயிலுக்கு கஞ்சி காச்சி ஊத்துற விழா அப்டீன்னெல்லாம் நெறைய நடக்குற திருவிழாவுலெ கையிலெ இருக்கிற காசெல்லாம் கரைஞ்சுப் போயிடும்.

இந்த திருவிழாக்கள் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவல்லதாக இருந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் கிராமங்களிலே திரௌபதி அம்மன் கதை, மதுரை வீரன் கதை என்று தெருக்கூத்துக்கள் நிறைய நடக்கும். அதில் ஒன்று காத்தவராயன் கதை . எனக்கு கருத்து தெரிஞ்சு இந்த காத்தவராயன் கதை குடியானவங்க தெருக்களில் நடக்கும். அல்லது அதை ஒட்டியுள்ள வயல் வெளியில் அல்லது திடலில் அல்லது அங்குள்ள சின்ன பிள்ளையார் கோயில் வாசலில் நடக்கும். வயல் வேலை செய்யும் ஏழை விவசாயிகளுக்கு  இதான் பொழுது போக்கு. சின்னதா மேடைப் போட்டு மைக் செட்டெல்லாம் கட்டி, ட்யூப் லைட் போட்டு ஏக தடபுடலா நடக்கும். ராத்திரி பத்து பத்தரைக்கு ஆரம்பிச்சா விடியக்காலை மூணு மூணரை வரை நடக்கும். இது நாட்டிய நாடக வகையை சேர்ந்ததுன்னு சொல்லலாம்.

தேர் திருவிழாவுலெ அறுப்பறுத்த காசையெல்லாம் செலவழிச்சிட்டு வழியில்லாமெ இருக்கும்போதுதான் திருட்டு பயம் தொடங்கும். அதனாலெ நாங்க சின்ன செட்டா சேர்ந்து ராத்திரி மூணு மணிவரை காவலுக்கு ஊரை சுத்துவோம். எங்களுக்குத் தெரியும் , யார் யார் திருட வருவானுங்க என்று. அதனாலெ அவங்களை கண்காணிக்கிறதுக்காக காத்தவராயன் கதை கேட்கப் போவோம். அங்கே போனா சும்மா இருக்காமெ அங்கே கதை சொல்பவர்களுக்கு காசு கொடுப்போம். அஞ்சு காசோ பத்துக் காசோ கொடுத்தா மைக்குலெ அனவுன்ஸ் பண்ணுவாங்க. கதை நடந்துக்கொண்டிருக்கும்போதே நாடகக்காரங்க கூட்டத்துலெ வசூல் பண்ணுவாங்க. அப்பொ காசைக் கொடுத்து பேரையும் சொல்லிவிடுவோம். உடனே அங்கே அனவுன்ஸாகும்.  ’கோணப்புளியாங்கா அண்ணனால் கொடுக்கப்பட்ட காசு அஞ்சு…….’, ’அல்வாப்பீ அண்ணனால் கொடுக்கப்பட்டக் காசு பத்து….’ அப்டீன்னு நீட்டி சொல்லுவாங்க. கூட்டம் ‘கொல்’லென்னு சிரிக்கும், எங்களுக்கு வேடிக்கை, அவங்க கடுப்பாவாங்க.

கோணப்புளியாங்காவின் அசல் பெயர் சுல்தான். அசல் பேரு எங்கே நிக்கிது , நாங்க வக்கிற பேருதானே நெலைக்கிது? அவன் கோபப்படுறதுனாலெ  சுருங்கி , ’கோணா பூனா’ ஆயி, அதையும் சுருக்கி  ’கே. பி. எஸ்’-லெ வந்து நாகரீகமா நின்னுடுச்சு. அதாவது ’கோணப் புளியாங்கா சுல்தான்’ சுருக்கம். அவனுக்கு பூர்வீகம் மலபார். எப்பவோ அவனோட வாப்பா இங்கே வந்து குடியேறி இருக்கார், இவர் மட்டுமல்ல , மலபார்லேந்து எத்தனையோ குடும்பம் நம்ம பக்கம் வந்து செட்டில் ஆயிருக்காங்க, ஆனா இவனுக்கு தமிழைத் தவிர வேறே ஒன்னும் தெரியாது. நல்ல உழைப்பாளி. ஒரு வீட்டுலெ தேவைன்னா  இவனிடம் சொன்னால் போதும் எல்லா ஏற்பாடும் பண்ணிடுவான். நாம கவலையேப் படத்தேவையில்லை.  ’டோலக்’ உள்பட அவனே ஏற்பாடு பண்ணிடுவான். அவனுக்கும் கல்யாணம் ஆச்சு. யாரோ சொந்தமாம், நல்ல வசதியா இருக்காங்கலாம். எப்படியோ கேள்விப் பட்டு மலபார்லேந்து வந்து இவனை அழைச்சிக்கிட்டுப் போய் அங்கேயே கல்யாணத்தை முடிச்சு வச்சு இருக்க வச்சுட்டாங்க. இவனுக்கு மலயாளம் தெரியாது பொண்ணுக்கு தமிழ் தெரியாது. இதுக்கு மொழி எதுக்கு? ஆனால் மத்தவங்களோட பேச..? அதனாலெ அங்கே சரிப்பட்டு வராதுன்னுட்டு பொண்டாட்டியெ கூட்டிக்கிட்டு நம்மவூருதான் சரி அப்டீன்னுட்டு இங்கேயே வந்துட்டான்.

முன்னே எல்லாம் எங்க பக்கம் கல்யாணத்துலேந்து காதுகுத்து வரைக்கும் நடக்குற தேவைகளில் பொம்பளைங்களுக்காக ‘டோல்/டோலக்கு’ன்னு ஒரு அயிட்டம் இருக்கும். டோலக்கு இருந்தா , அந்த வூடு களைகட்டும். டோலக்கு அடிக்கிறவங்க கொஞ்சம் வயசான பொம்பளையா இருப்பாங்க. கல்யாணத்துக்கு முந்தி மருதாணி இடும் இரவும், கல்யாணத்துலெ நிக்காஹ் முடிஞ்சு மத்த மத்த சில்லறை சடங்கெல்லாம் முடிஞ்சபிறகு இந்த சங்கதி ஆரம்பமாகும்.  மொதல்லெ ’பிஸ்மி’ சொல்லி பெருமானார் பேராலே ஒரு பாமாலை பாடிவிட்டு இஸ்லாத்தைப் பத்தி கொஞ்சம் பாடுவாங்க அப்புறமா ட்ரெண்டு மாறும். ஒரு அஞ்சோ பத்தோ கொடுத்து பொண்ணு மாப்பிள்ளைப் பேரை சொன்னால் போதும், அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து பச்சை பச்சையா பாடி புரட்டி எடுப்பாங்க. இதெ கேட்டுக்கிட்டு இருக்கிற மத்த மத்தப் பொம்பளைங்க சிரிப்பொலியும் குலவை சத்தமுமாக ஏக தடபுடலா இருக்கும். எது வரைக்கும்னா பாடப்படுபவர் காசு கொடுக்குற வரைக்கும். அப்படி காசு கொடுக்கும்போது வேறு ரெண்டு பேரு பெயரை சொல்லிடுவாங்க, புதுசா சொல்லப்பட்ட பெயருடன் பாட்டு தொடரும். எழுத்துக்கு அப்பாற்பட்ட வரிகளைச் சொல்லித்தான் பாடுவாங்க. இது ராத்திரி மூணு மூணரை வரை நடக்கும். அதாகப்பட்டது என்னவென்றால் சாந்தி முகூர்த்தத்தோடு இது இரண்டரக் கலக்கும். கையிலெ சலங்கையைக் கட்டிக்கிட்டு டோலக்கை அடிச்சு சூப்புரா வார்த்தைகளோட பாடுறதைக் கேட்கும்போது… ஆஹா.. சக்கரைப் பந்தல்லெ தேன் மாரிப்பொழிஞ்சது மாதிரி அமோகமா இருக்கும். ச்ச்ச்ச்ச்சு……. கேட்க காது வேணும். இவ்வளவு கூத்துக்கும் யாரும் கோவிச்சுக்க மாட்டாங்க.

அவங்களுக்கு காத்தவராயன் கதைன்னா நமக்கு நூறு மசலா இருந்துச்சு. ’ரவணா’ அடிச்சுப் பாடுறவங்க இருந்தாங்க. யாரு வீட்டு வாசல் திண்ணையிலாவது , இல்லேன்னா சின்னதா ஒரு மேடை போட்டு இந்த கச்சேரி நடக்கும். பதம் பாடப் போறாகண்டு ஒரு நாளைக்கு முந்தியே அனவுன்ஸாயிடும். எல்லோரும் வந்துடுவாங்க. தப்ஸ் அல்லது பறை மாதிரி இருக்கும் ஆனால் தப்ஸைவிட  இரு பங்கு பெரியது ரவணா என்ற கொட்டு. இது ஒன்று மட்டும் தான் இசைக் கருவி. பதப்பாட்டு என்றால் பொதுவா எல்லோரும் கேட்பாங்க. பெரும்பாலும் ஒருத்தர் அல்லது இரண்டு பேர் மாறி மாறி அடிச்சுப் பாடுவாங்க. இதிலும் பெருமானார் பேரால் திருப்புகழ், பாமாலை பாடுவாங்க.  அலி பாத்திமா கதை, நூறு மசலா, லைலா மஜ்னு போன்ற காப்பியங்களையும், சமூகவியலைப் பத்தியும் பாடலாப் பாடுவாங்க. சமூகவியலைப் பத்திப் பாடும்போது…

’ஆத்து மீனு சேத்து நாத்தம் சோத்துக் காகாது – பெண்களே
 சோத்துக் காகாது…
கொடுவா மீனு திண்ட ருசி குடிகெட்டுப் போச்சு – ஆயிஷா
 குடிகெட்டுப் போச்சு…’

இது மாதிரி பல வரிகள் வரும். எனக்கு ஞாபகத்திலில்லை. நேத்து உண்ட சோத்துக்கு கறி என்னாண்டு ஞாபகமில்லை , எட்டு பத்து வயசுலெ கேட்டது எப்படி ஞாபகத்துக்கு வரும்? அந்த காலத்துலெ அப்பாஸ் நாடகமெல்லாம் நடக்குமாம். நாடகத்துலெ பெண் வேசத்துலெ ஆண்கள்தான் நடிப்பாங்களாம். அப்படி நடக்கும்போது ஒரு காதல் காட்சி. கதாநாயகனும் கதாநாயகியும் பூங்காவனத்தில் இருக்கிறார்கள், மதி மயக்கும் மாலை நேரம். காதலன் தன் காதலியை அணைத்தவாறே தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி . நடிச்சதோ கூட்டாளிகள், பழக்கதோஷத்தில் வந்த வசனம் இதோ….

’ஓய் அங்கே பாருங்கனி! ஹூதாண்டும், ஹேந்திண்டும், சேப்புண்டும் கலர் கலரா பூ பூத்திக்கிது, கலர் லைட்டெல்லாம் போட்டு வச்சிருக்காஹ, நீம்பரு இதெ வுட்டுட்டு கடக்கரைக்கு கூப்பிட்டியுமே..! வாங்கனி அங்கே குத்தவச்சுப் பேசலாம்’ அப்டீன்னதும் ‘ஹோ….’ண்டு ஒரே சிரிப்பு. அப்பத்தான் மாப்ளைக்கு தெரிஞ்சுதாம் வசனத்தை மாத்திப் பேசிட்டோம்னு.

இப்படி எல்லாம் அந்த காலத்து மனுசர்கள் அனுபவிச்சிருக்கிறார்கள். இப்பவுள்ள நவீனத்தில் அதெல்லாம் மறைந்து விட்டது. ரவணாவும் இல்லை டோலக்கும் இல்லை, பாடுபவர்களும் இல்லை. எங்கேயாவது விட்ட குறை தொட்ட குறையாக இருந்தால் அங்கே இஸ்லாத்தோட ஏஜண்டுகளின் தொல்லை. இப்ப எப்படி கல்யாணம் நடக்குது? ஒரு மேடை . அதுலெ மாப்பிள்ளை உட்கார்ந்திருப்பார். தோழன்மாரும் ஒரே மாதிரி ட்ரஸ் போட்டு உட்கார்ந்திருப்பாங்க. யார் மாப்பிள்ளை என்று கண்டுபிடிக்கறது கஷ்டம். மாலை எல்லாம் கிடையாது.  ஒரு ‘ஆல்+இம்(சை)சா’ பயான் பண்ணிக்கிட்டிருப்பார். என்ன சொல்றார் என்கிறது அவருக்கும் தெரியாது கேட்கிறவங்களுக்கும் புரியாது. கேட்டால் நபி வழி கல்யாணமாம்.

இவங்கத்தான் நபியை பார்த்துட்டு வந்திருக்காங்க… அந்த காலத்துலெ அரபு நாட்டுலெ பேரீச்சை மரத்தைத் தவிர வேறே எதுவும் கிடையாது. பேரீச்சைப் பழமும் ஒட்டகப் பாலும்தான் அங்கே  கிடைக்கும். இங்கே பூவிலிருந்து கனி வர்க்கம் வரை எல்லாமே கிடைக்கிறது, எல்லா செல்வங்களையும் நமக்குத் தந்திருக்கிறான் இறைவன். நல்ல மணமுள்ள மல்லிகை முல்லைப் பூவில் மாலை இட்டு மணக்கோலம் பூண்டால் என்ன? அல்லா கோவிச்சக்கப் போறானா இல்லை கல்யாணம்தான் ஹராமாயிடுமா ? இது மட்டும் நபி வழி கிடையாது, உங்கப் பொண்ணுக்குத்தானே கொடுக்குறீங்கண்டு பின்னாலெ நகைநட்டை கறக்கிறது நபிவழியாக்கும்.

நம்மிடம் அந்த பழைய கலாச்சாரம் பண்பாடெல்லாம் இருந்தப்ப மக்கள் சுபிட்சமா இருந்தாங்க, நோய் நொடி குறைவாக இருந்துச்சு, செழுமை இருந்தது. ஆனால் இப்பொ அவைகள் மறைய மறைய அந்த சந்தோஷம் இல்லை, செழுமை இல்லை. மாறாக நோயும் கவலையும் நிற்கிறது. மொத்தத்தில்,  உணர்ச்சி இல்லா சிரிப்பும், ’பரக்கத்’ இல்லாத செல்வமும்தான் நம்மிடம் இருக்கிறது.

***

நன்றி : ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

4 பின்னூட்டங்கள்

 1. 10/07/2011 இல் 17:53

  சந்தாக்கு ராவுத்தர் மகன் மையத்து ராவுத்தர்னு வெளியூர் போலிஸ்ட்ட சொல்லி தப்பிச்சதா எல்லா ஊர்லயும் ‘ஜோக்’ இருக்கும். ஆனா, நானா சொன்ன மாதிரியே ஒரு உண்மைச் சம்பவம் 1968-70 சமயத்துல எங்க ஊர்ல நடந்துச்சு.

  காரைக்குடில செகண்ட் ஷோ பாத்துட்டு சைக்கிள்ல டபுல்ஸ் லைட் இல்லாம போலிஸ்ல மாட்டுனதும், உண்மையான பேர் அட்ரஸ் குடுத்த ஒரு அப்பாவிக்கு அதிர்ஷ்டம். இவர் சொன்ன பேர் சந்தாசா (சந்தா சாஹிப் – ஊர்ல எல்லாரும் சந்தாசான்னுதான் கூப்பிடுவாக. அத்தா பேரு குலாம் மைதீன். அட்ரஸ்; மையத்தாங்கரை வீதி, புதுவயல். இதுல எதுவுமே தப்பில்லை. ஆனா, எழுதுன போலீஸ்காரர், இவனுங்க பேரெல்லாம் வாய்க்குள்ளே நொழையாதுப்பான்னு புலம்பிக்கிட்டே எழுதி, புதுவயல் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புனது: குலாய் மய்யத்து ராவுத்தர் மகன் சந்தாக்குன்னு. லோக்கல் போலீஸ்காரர் நேரா, கீழத்தெரு பள்ளிக்கு பக்கத்துல போய் விசாரிக்க, அங்கிருந்த சில ‘பெரிய’ மனுசங்க, சிரிசிரின்னு சிரிச்சுட்டு, அர்த்தம் சொல்லி, யாரோ ஏமாத்திருக்கங்கப்பான்னு, போகச் சொல்லிட்டாங்க. அவுங்கள்ல ஒருத்தர் ரெண்டு மூணு நாள் கழிச்சு குலாம் மைதீன் ராவுத்தர் பெட்டிக்கடைல இதைச் சொல்லி சிரிக்க, சந்தாசா உண்மைய போட்டு உடச்சுருக்கார். உண்மையிலேயே அவுக வீடு மையத்தாங்கரை தாண்டி அதே வீதிலதான் இருந்துச்சு.

 2. 10/07/2011 இல் 19:57

  ஆபத்துக்கு பட்டப் பெயர் எவ்வளவு கை கொடுக்குது பார்த்தீங்களா?

 3. தாஜ் said,

  10/07/2011 இல் 21:03

  நாநா….
  இக்கட்டுரை வழியே
  மீண்டும் ஒரு முறை
  பறந்து விரிஞ்சியிக்கிங்க.
  சாபாஷ்.

  கட்டுரையின் கடைசியில
  நீங்க ஆடுவது
  வாச்சாங்கொலி ஆட்டம்.
  இன்ன்றைய தினங்களின்
  மகிழ்ச்சி/மகிழ்ச்சி இன்மைகளை
  இன்றைய காலக்கட்டத்திற்கான
  மக்கள்தான் சொல்லவேண்டும்.

  மண்ணில் கால் பதிய
  நடந்து
  எதிர் கொண்ட
  நடப்புகளென
  இப்படிப் பட்ட பதிவுகளை
  தொடர்ந்து எழுதுவதைவிட்டு
  துலா உலகம்
  சூட்சம உலகம்
  ஆன்மீகம்
  பெண்மீகம் என்றெல்லாம்
  ஏன் உங்களை கஷ்டப்படுத்திக் கொள்கிரீர்கள்?

  இன்றைக்கு
  நீங்கள் எழுதியிருக்கும் பதிவையொட்டி
  உங்களுக்குள் குமிழிட்ட எண்ணங்கள்
  எத்தனை விஸ்தீரணம் கொண்டது என்பதை
  என்னால் ஓரளவேணும் அறிய முடியும்.
  இந்தவகை மனதிற்குள்
  இத்தனை கொண்டாட்டமான மனதிற்குள்
  ஆன்மீகம்
  குந்தி அமரக்கூட
  இடம்கிட்டாது என்கிற போது
  எப்படி நீங்கள்
  ஆன்மீக கீர்த்தியாகவும் இருக்கின்றீர்கள்?
  குழப்பமாகத்தான் இருக்கிறது
  என்னவோ… சமத்துதான் போங்கள்.
  -தாஜ்

 4. 11/07/2011 இல் 19:26

  தாஜ்,

  ஆன்மீகம் என்றால் பூச்சாண்டி மாக்கான் என்று பயப்படுகிறீர்கள். ஆன்மீகத்தின் ஆரம்பமே அங்கேதான். குறிக்கும் குதத்துக்கும் இடையில்தான் மூலாதாரம் இருக்கிறது அதை நோக்கி தியானம் செய்யுங்கள் என்று திருமூலர் சொல்கிறார்.

  ஆண்மீகமும் பெண்மீகமும் சரியாக இருந்தால்தான் ஆன்மீகம் வரும். அரவாணிகளுக்கு இது கைவல்யமாகாது.
  இங்கே கொஞ்சம் உள்ளே வாங்க தூங்குற தம்பி துள்ளி விளையாடுவான்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s