துக்கம் தொடர்கிறது…

ஆச்சரியமாக இருக்கிறது , இவ்வளவு சிறியதாக வண்ணநிலவன் எழுதிய கதை எவ்வளவு பெரிய கொந்தளிப்பை மனதில் ஏற்படுத்திவிடுகிறதென்று! அன்பு ஜெயக்குமார், ’துக்கம்’ கதையில் வரும் மெஹ்ருன்னிஸா கு.ப.ராவின் நூருன்னிசாவை சுலபமாக தோற்கடித்துவிடுகிறாள். ஒத்துக்கொள்கிறீர்களா? பெயர்களைப் பொறுத்தமட்டில் இந்த இரு நிஷாக்களையும் விட எனக்கு ஜவஹர்நிஷாவைத்தான் ரொம்பவும் பிடிக்கும். பள்ளிப் பருவத்து தோழி. வகுப்பில் அவள் நுழைந்தாலே அனைவருக்கும் அவல் சாப்பிட்டதுபோல் – முக்கியமாக ஆசிரியர்களுக்கு! அஸ்மாவிடமும் உண்மையை சொல்லியிருக்கிறேன். ‘நான் கோஷா ஸ்கூலில் படிக்கும்போது எனக்கும்..’ என்று ஆரம்பித்தாள். ‘அல்லாவே, சொல்லாதே புள்ளே..’ என்று பதறினேன். ‘ச்சீ.. ஜவஹர்நிஷான்னு ஒரு புள்ளை படிச்சிச்சி.. அத ரொம்ப புடிக்கும்டு சொல்லவந்தேன்..’ என்றாள். அப்பாடா!

கல்லூரிப் பருவத்தில் , என் மேதமையைக் காட்டுவதற்காக மலேசியாவில் இருந்த ஏம்பல்மாமாவுக்கு லா.ச.ரா , மௌனி, வண்ணநிலவன் மற்றும் முக்கியமான பலரின் புத்தகங்களை அனுப்பியபோது ( காசு அனுப்பி வைத்திருந்தார் அந்த தாமரைமணாளன் பிரியர். ‘அங்கே கூட்டம் ’கேகே’ என்று இருந்தது’ என்று ’புதுமையாக’ அவர் எழுதுகிறாராம்!) எல்லாவற்றையும் படித்துவிட்டு , ‘இவர்தான் மாப்ளே எழுத்தாளர்’ என்று மாமா சொன்னது வண்ணநிலவனை மட்டும்தான். அவர் படித்து அசந்தது ‘கடல்புரத்தில்’ நாவல். இன்னும்தான் என்னை அது அசரவைக்கிறது. ’உங்களை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய  ‘கடல்புரத்தில்’ அச்சில் வந்தபோது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?’ என்ற கேள்விக்கு , ‘என்னைப் பொறுத்தவரை எதுவுமே பாதிக்கல. எனக்கு எல்லாமே ரொம்ப சாதாரணமாகத்தான் படுது. ஏதோ நாம ரொம்ப சாதாரணமா செஞ்சா எல்லோரும் இப்படி பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியம் ஏற்பட்டது. மகிழ்ச்சியோ, கர்வமோ, அகந்தையோ எனக்கு ஏற்படல’ என்கிறார் வண்ணநிலவன். ’இது தன்னடக்கமா?’ என்றால் ‘ நல்ல எழுத்து எது என்று எனக்குத் தெரியும். என்னைவிட பிரமாதமாய் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் எழுதிய எழுத்துக்கள் எனக்குத் திருப்தியா இல்லை. என்னை விடவும் பிரமாதமான எழுத்துக்களைப் பார்க்கும்போது நான் அதற்கு அருகே இல்லை. என் நல்ல எழுத்தை இனிமேல்தான் எழுத வேண்டும். அது முடியுமான்னு தெரியல!’ என்று சொல்லும் வண்ணநிலவன். ‘இவர்களது எழுத்துமுறை’யின் சுட்டியைக் கொடுத்திருக்கிறேன் கீழே. அதையும் அவசியம் வாசியுங்கள். வண்ணநிலவனின் மகத்துவம் புரியும். நன்றி. – ஆபிதீன்

***

துக்கம் – வன்ணநிலவன்

தினமணிசுடர், டிசம்பர் 24,1994

*

எல்லாம்  முடிந்து விட்டது. இனிமேல் மதுரைக்கும் உடன்குடி ஜமால்மைதீன் குடும்பத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. பஸ்ஸில் சுபைதாளை அழைத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த மெஹ்ருன்னிஸாவுக்கு சுபைதாளைப் பற்றி நினைக்க நினைக்க வருத்தமாகத்தான் இருந்தது. எவ்வளவு தங்கமான பையன் சுலைமான். ஒரு கெட்ட பழக்கம் உண்டுமா? மவுத்துக்கு வந்தவர்கள் எல்லோரும் இந்தப் பையனுக்கு இப்படி ஆகியிருக்கவேண்டாமே என்று வருத்தப் பட்டார்கள். வருத்தப்படாதவர்கள் பாக்கியில்லை. மில்லில் டூட்டு முடிந்த பத்தாவது நிமிஷம் சுலைமானை வீட்டில்தான் பார்க்கலாம்.

பெட்டியைத் தூக்கிப் போகிற நேரத்துக்கு அந்தச் சின்ன முதலாளியே காரில் வந்துவிட்டார். வீடு ரொம்பச் சின்ன வீடு. ஒரே ஒரு பெஞ்ச் மட்டும்தான் வாசலில் போடப்பட்டிருந்தது. மில்லிலிருந்து வந்த ஜனம் பூராவும் சந்தில்தான் நின்றது. முதலாளி வந்துவிடுவார் என்று சொல்லித்தான் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். தீபம் வைக்கிற நேரமாகிறது என்றுதான் அந்தச் சங்கத் தலைவரே – அவனும் இந்தச் சுலைமான¨ப் போல எவ்வளவு அருமையான புள்ளை – தூக்குகிறதுக்கு ஏற்பாடு செய்தான்.

சொல்லி வைத்தது மாதிரி நேரத்துக்கு முதலாளி வந்துவிட்டார். ‘சின்ன முதலாளி, சின்ன முதலாளி வந்தாச்சு..’ என்று ஒரே பேச்சாகக் கிடந்தது. அடக்கம் செய்கிற வரைக்கும் அவர் கூடவே இருந்தாராம். எவ்வளவு பெரிய கோடீஸ்வரன். அந்தப் புள்ளையாண்டான் காரை வீட்டுக்குப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஜனத்தோடு ஜனமாய் அதுவும் அடக்க ஸ்தலத்துக்கு நடந்தே போயிருக்கிறதே. நல்ல மனுஷர்கள் எங்கேயும் இருக்கிறார்கள் என்று சொல்வதுதான் எவ்வளவு சரியானது.

இந்தப் புள்ளைக்குத்தான் எல்லாம் கொடுத்து வைக்காமல் போய்விட்டது. அவனும் வாப்பா, உம்மாவை அறியாத பையன். இதுவும் வாப்பாவைத் தின்ன பிள்ளை என்று பார்த்துத்தான், பட்டணத்து தாவுது சாச்சா சொல்லித்தான் எல்லாம் நடந்தது…என்னமோ ஆண்டவருக்கு இப்படித் தோணியிருக்குது, மூன்றாவது வருஷமே அறுத்துக்கிடனும் என்று.

மெஞ்ஞானபுரமே வந்துவிட்டது. ஒரு அஞ்சலில் உடன்குடி பஸ் ஸ்டாண்டில் போய் நின்றுவிடுவான். இந்தப் பிள்ளைகள் இரண்டும் என்ன செஞ்சிக்கிட்டிருக்குதுகளோ தெரியவில்லை. எல்லாம் ஹாஜியார் வீட்டில் பார்த்துக்கொள்வார்கள் என்றாலும், கிலேசப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த் மில்லுப் பணம் ஒரு வாரத்திற்குள் வந்துவிடுமாம். எட்டாயிரம் ரூபாய் வருமாம். அது வந்தால் நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டு விடலாம். ஆத்தாங்கரைப் பள்ளியில் ஆயிஷாவோட பையன் காப்ப்பிக் கடை வைத்து நடத்துகிறானாம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கும். இங்கே பிறந்த வீட்டில்தான் கோரையை முடைந்து முடைந்து கை வாரியல் குச்சி மாதிரி ஆகிவிட்டது. அங்கேயாவது கொஞ்சம் உட்கார்ந்து சாப்பிடட்டும். ஆயிஷா பெற்றவளைப் பார்த்துக்கொள்ளுவாள். அதைத் தள்ளிவிட்டாயிற்று என்றால் அடுத்தது இந்த நொண்டிக் கழுத ஒண்ணுதான். இதுக்கும் ஒரு நொண்டியத் தேட வேண்டியதுதான். பாவி, பெத்ததுதான் பெத்தேன், ஒண்ணாவது ஆம்பளப் பிள்ளையாப் பெத்திருக்கக் கூடாதா?

பெரிய வீடுகளா இருந்தால், முதல் மாப்பிள்ளை போனால் அடுத்த மாப்பிள்ளையைப் பிடித்து விடுவார்கள். ஜமால் மைதீன் வாப்பா சாகும்போது ஒரு கட்டு கோரை புல்லைத்தானே விட்டுட்டுப் போயிருக்காரு.

சீக்கிரமே உடன்குடி வந்துவிட்டது. சுபைதாளை பஸ்ஸ்டாண்டிலேயே சாமான்களுக்குப் பக்கத்தில் காவலுக்கு வைத்துவிட்டு, பஞ்சாயத்து போர்டு ஆபீஸ் பக்கம் போய் முத்தையா கோனார் வண்டியை அழைத்துக்கொண்டு வந்தாள்.

வீட்டுக்குப் போனதுமே எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். துஷ்டி கேட்க வேண்டாமா? ஜமால் மைதீன் என்னதான் தாழ்ந்து போய்விட்டாலும் ஊர் வளமை என்று ஒன்று இருக்கிறதே? அதை விட்டுக் கொடுத்து விடுகிறது என்பதுதான் அவ்வளவு லேசானதா என்ன?

சுபைதா அழுதுகொண்டே இருந்தாள். என்ன இருந்தாலும் சுலைமான் அவளுக்கு மற்ற மனிதர்களைப் போன்றவன் இல்லையே. மூன்று வருடங்கள் அவனோடு உடனிருந்து வாழ்ந்தவள் இல்லையா? வந்து விசாரித்தவர்கள் எல்லோரும் சுலைமானுடைய மவுத்துக்கு ஆற்றாமைப்பட்டு விட்டுத்தான் போனார்கள். சில பெண்கள், குறிப்பாக கொருக்கு முதலாளியின் சம்சாரம்கூட அழுவது என்பது லேசானதல்ல.

மெஹ்ருனிசாவுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆச்சரியாயிருந்தது. துஷ்டி கேட்க வந்தவர்கள் எல்லோருமே அவளைப் போலவே, மில்லில் இருந்து வருகிற பணத்தை வைத்து நடுவுள்ளவளைத் தள்ளிவிட்டுவிட வேண்டும் என்று சொன்னார்கள். அப்படிச் சொல்லும்போதெல்லாம் மெஹ்ருன்னிஸா அதைப் பற்றி அவ்வளவாக அக்கறை இல்லாதவளைப் போல கண்களை இடுக்கிக்கொண்டு மெதுவான குரலில், “ஆமாம்ளா நானும் அப்படித்தான் நெனச்சிருக்கேன். ஆனா நாகூராரு என்ன நெனைச்சிருக்காரோ தெரிய இல்ல..இந்தப் புள்ள சுபைதாள நெனைச்சாதான் தாங்க முடியல. இத்தன வயசுல போயி இது இப்படி வந்து உக்காந்துட்டுதேங்கிறதை நெனச்சால் ஈரக்கொலையே அந்து விளுதாப்பல் இருக்கு’ என்று கண் கலங்க அழ ஆரம்பித்து விடுவாள்.

“பின்ன? பைத்தியக்காரி.. நீ பெத்தவளாச்சே கஷ்டமா இராதா?'” என்பார்கள்.

ஆனால், இதையும் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் சொன்னார்கள்.

***

நன்றி : வண்ணநிலவன், தினமணிசுடர் , தாஜ்

***

மேலும் வாசிக்க :

இவர்களது எழுத்துமுறை – வண்ணநிலவன் : தொகுப்பு : வே. சபாநாயகம் ஐயா அவர்கள்

***

படித்ததில் பிடித்ததுவிக்ரமாதித்யன்

வண்ணநிலவன் சிறுகதைகள் எல்லாமே யதார்த்த தளத்தில் இருப்பவைதான்; வெறும் மொண்ணையான யதார்த்தம் இல்லை அவை. கலையாகக் கூடிவந்திருப்பவை. இலக்கியமாகத் திரட்சி பெற்றிருப்பவை. வண்ணநிலவனின் ‘துக்கம்’ என்ற சிறுகதை ஒரு நல்ல யதார்த்த சிறுகதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது. கலைஞனின் மனோதர்மம் இலக்கியமாகியிருக்கும் சாதனை என்று இந்தக் கதையைச் சொல்ல வேண்டும். துக்கம் சிறுகதையின் கட்டமைப்பு விசேஷமானது. ஒரு முடிவைச் சொல்கிறபடியே தொடங்குகிறது கதை. தொடர்ந்து மிக சன்னமாக அங்கொரு கோடு இங்கொரு கோடு இழுத்து வரைந்தது போல ஒரு சோகச் சித்திரம் உருப்பெறுகிறது.

மெஹ்ருன்னிசா சுபைதாளை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறவள். மகளுக்குக் கொடுத்து வைக்காமல் போய்விட்டது என்று ஆற்றாமைப்படுகிறவள். பிள்ளைகளை ஊரில் தனியே விட்டுவிட்டு வந்தது பற்றி கிலேசப்படுகிறவள். நடுவுள்ளவள் கோரை முடைந்து முடைந்து கை வாரில் குச்சி மாதிரி ஆகிவிட்டது என்று சிந்தை கலங்குகிறவள். அடுத்த ‘நொண்டிப்பிள்ளை’ வாழ்க்கை குறித்து அக்கறைப்படுகிறவள். நொடித்துப்போன குடும்பத்தின் பொறுப்பை ஒற்றையில் சுமக்கும்படியாய் விதிக்கப்பட்டவள். ஜமால் மைதீன் பற்றிய கடந்தகால நினைவுகள், பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கனவுகள், நிகழ்கால வாழ்க்கைப் பிரச்சினைகள் என வாழ்கிறவள். வேறு நிவர்த்தியில்லை அவளுக்கு. அவளால் என்ன செய்யக்கழியும். வீட்டுக் காரியங்களை விருப்பு வெறுப்பு பாராது நிகழ்த்த வேண்டிய கடமை. இப்படி யோசிக்க வைக்கிறது. சுபைதாள் ஒரு வார்த்தை பேசவில்லை கதையில். மெஹ்ருன்னிஸா ஒரே ஒரு இடத்தில் பேசுகிறாள். துட்டி கேட்க வந்தவர்கள் ஒரு இடத்தில் பேசுகிறார்கள். கதையில் வேறு பேச்சே இல்லை. இது இந்தக் கதையின் முக்கியமான அம்சம். சோகம், பேச்சைக் கொன்று போடுகிறது? பேச ஒன்றும் இல்லை. கணவன் அகாலமாக இறந்து விட்டான். ஏதோ கொஞ்சம் பணம் வரும். வந்ததை வங்கியில் போட்டுவிட்டு – பத்திரமாக வைத்துக்கொண்டு – நிம்மதியாக வாழ வகையில்லை. அப்படியிருக்கிறது அமைப்பு.

தலைப்பே irony-யோடு இருக்கிறது. இந்தச் சமூக அமைப்பு துக்கம் தருவது. இதில் கபடமாக வாழ வேண்டியிருப்பது துக்கமானது. கணக்குப் போட்டு வாழ்வதே கபடமானது. ஒப்புக்கு பேசுவதும் ஒப்புக்கு பேசுவதை கேட்க நேர்வதும் துக்கமானவை. நாம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நம்மை இப்படி வாழும்படி ஆக்கியிருப்பது எது? ஒரு நல்ல சிறுகதை யோசிக்கவைக்கும்படியான வாழ்வைச் சொல்ல வேண்டும். ‘துக்கம்’ அதைத்தான் செய்கிறது.

1 பின்னூட்டம்

  1. 07/07/2011 இல் 20:35

    துக்கம் ஒரு நல்ல கதை மட்டுமே. எஸ்தரோ கிளாசிக்.இலக்கிய இன்பம் தொடரட்டும். நன்றி.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s