காலம் : மூன்றாவது பார்வை – தாஜ்

காலம் : மூன்றாவது பார்வை  –  தாஜ்

(மொழிச் சித்திரம்)

***

அன்புடன்
ஆபிதீன்

உங்களோடு
சிலபல சங்கதிகள் குறித்து
ஆத்மார்த்தமாகப் பேசி நாளாகிறது.
இப்போது
அப்படியான சங்கதி ஒன்றை
இப்பதிவில் பேச முனைந்திருக்கிறேன்.
சரி-தப்பு குறித்து
தாட்க்ஷண்யமற நீங்கள் சுட்டலாம்.

விடியும் தினங்களின்
கால அமைப்பு உமிழும்
வித்தியாசமான தகிப்பினூடே
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

நிச்சயம்
இன்றைய நடப்பின்
கோடை வீரியத்தைச்
சுட்டவில்லை நான்.
எனக்கது
தனிப்பருவமும் கிடையாது!

ஆண்டுகள் முழுக்க
அத்தனை மாதங்களும் மணித்துளியும்
கோடைதான் எனக்கு!
அதனூடே நான்
தீய்ந்து கரிக்கட்டையாவது
நித்தம் நித்தம்
என் பார்வையிலேயே நடக்கிறது!
என்றாலும்…
நான் கிரியை கொள்வதே
நாளும் பொசுக்கித் தீய்க்கும்
அந்தப் பொழுதுகளின்
வேக்காட்டில்தான்!
அது கிடக்கட்டும்.
இங்கே அதுவல்ல செய்தி.

*
வாழ்வின் குதூகலத்தை
தாண்டிப் பயணிக்கும்
என்னையொத்தப் பெருசுகளின்
அன்றாடப் பிரச்சனைகளில் ஒன்று
இன்றைய தினங்களுடன்
வலிந்து ரணம் கொள்வது.
அவர்களில் பலருக்கு
அது, தவிர்க்கவே முடியாத சங்கதி!
அப்படி அவர்கள் ரணம்கொள்ளும்
நேரமெல்லாம்…
தங்கள் தங்களது
இறந்த காலத்து கீர்த்திகளை
புலம்பல்களாக
விரித்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த மொழிச் சித்திரம்
அப்படியெந்த விரிவின் பரப்புமல்ல.

இன்றைய
காலவர்த்தனப் போக்கில்
அத்தகையப் பெரிசுகள்
தினம் தினம் ரணம் கொள்வதோடு
ஆங்காங்கே தடுமாறி
தடுக்கியும் விழுகிறார்கள்.
முகமெல்லாம் மண்ணாகி,
மூக்கின் முனைகள்
சிராய்ப்பு கொண்டுவிடுகிறது.

அதுவே சாக்கென
அந்நாழிகளில் அவர்கள்…
ரொம்பவே சிவந்து விடுகிறார்கள்.
கசந்தும் கசிந்துமாக
காலமாற்றங்களைக் கரித்து
தூற்றவும் தூற்றுகிறார்கள்.
இது,
அப்படியான தூற்றலுமல்ல!

காலத்து மலர்ச்சியில்
உயிர்ப்போடு கண்விழிக்க
பூத்துக் குலுங்கும் பூப்பனைத்தையும்
சரியான பார்வை கொண்டு,
கரம் நீட்டி
அப் புதுமைகள் அனைத்தையும்
வரவேற்க முன்நிற்பவனின்
பார்வை இது!

சரியாகச் சொன்னால்…
யதார்த்த சிந்தை கொண்டவனது
மூன்றாவது பார்வை இது.

*
வழக்க மாதிரியே
உதயத்தில் விடிந்து இருளில் மறையும்
எப்போதுமான
நாட்கள்தான் இன்றைக்கும்.
அதே மாய அச்சில்தான்
லோகம்
இப்பவும் சுழல்கிறது!

எல்லா உயிர்களையும் தாங்கும்
பிரமாண்ட லோகத்தை கணித்தால்…
அது ஒரு ஜடம்!
அளவிட முடியாத அஃறிணை!
என்றாலும்….
காலத்தின் கொடையால்
லோகம், நாளும்
அர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சூரிய, சந்திர, மற்றும் கிரக,
நட்சத்திரங்களை மையப்படுத்தி,
சூரியனை லோகம் வலம்வரும்
கணக்கையும் கொண்டு
மனிதர்களால்
மனிதகுலத் தேவைக்காக
நிர்ணயம் செய்யப்பட்டதுதான்
நேரக் கணக்கும்
காலக் கணக்கும்!

சரித்திரம் தன் பக்கங்களில்,
லோக வளர்ச்சிகளையும்
அதன் வளர்ச்சி இன்மைகளையும்
காலத்தை முன்நிறுத்தியே
பதிவித்துக் கொள்கிறது!

கற்காலம் – புதிய கற்காலம்/
பழைய வேதகாலம்/
புதிய வேதகாலம்/
கி.மு. – கி.பி. காலம்/
சக்கரம் சுழலத் தொடங்கிய காலம்/
தொழிற்புரட்சி காலம்/
ரஷ்யப் புரட்சி,
ஃபிரெஞ்சுப் புரட்சி காலம்/
உலகம் தழுவி மன்னராட்சிகள் மங்க
ஜனநாயகமும் கம்யூனிஸமும்
முகம் காண்பித்த காலம்….

மின்சாரம் உபயோகத்திற்கு வந்த காலம்/
அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட
பேரழிவின் முகூர்த்த காலம்/
பிரிட்டானியாவுடன்
இந்தியாவும் இன்னும் பல நாடுகளும்
சுகந்திரம் கேட்டு நின்ற காலம்/
முதல் – இரண்டாம் உலகப் போர்கள்
நிகழ்ந்த அரக்க காலம்/
ரஷ்யா தன் முதல் சாட்டிலைட்டை
விண்ணில் ஏவிய வசந்த காலம்/
அமெரிக்க புண்ணியத்தில்
மனிதன் சந்திரனில் கால்பதித்த காலம்/
புதிய கண்டு பிடிப்புகள் பலவும்
உலகச் சந்தைக்கு வரத்தொடங்கிய காலம்/
எலக்ட்ரிக், எலக்ரானிக் பொருட்களின்
உற்பத்தி பெருகிய ஒளிமயமான காலம்/
மண்ணில் கம்யூனிஸம் ஒடுங்க
ஜனநாயகம் தழைக்கத் துவங்கிய காலம்…

‘ஹைடெக்’ ‘டிஜிட்டல்’
பொருட்களின் வரவு காலம்/
மஹா மேதமை தாங்கிய
கம்ப்யூட்டர் ஆதிக்க உதய காலம்…

இன்றைய தினங்களில்,
பலநாட்டுப் பொருளாதார அஸ்திவாரத்தை
உண்டு இல்லையென ஆட்டி
அலைக்கழிக்கும் சித்தாந்தமான
‘உலகமயமாக்கல்’
செயல்பாட்டில் கனிந்த காலம்/
மனிதர்களின்
இன்றைய உலக ஹீரோவும்
மனிதர்களின் ஆறாவது விரலாகிப் போன
செல்போன் யுகம்
தலையெடுத்த காலமென
மனிதகுலம் கண்ட
அத்தனை மறுமலர்ச்சிகளையும்,
அல்லது மலர்ச்சிகளற்ற கேடுகளையும்
சரித்திரத்துப் பக்கங்களில்
காலத்தைக் கொண்டே பதியப்படுகிறது.
காலா காலத்திற்கும்
காலத்தை முன் நிறுத்தியே
அத்தனையும் பேசவும்படுகிறது!

*
என் பருவத்தில்
நான் கண்டு புழங்கிய
அக் காலத்தின் லெட்சணங்களை
இன்றும் தெளிவாக அனுமானிக்க முடிகிறது.
அது அத்தனைக்கு தேஜஸ் கொண்டது இல்லை.
பாவப்பட்ட ஏழ்மைகள் நிரம்பிய
லட்சணமற்ற லட்சணம் அது!

இன்றைய தினங்களில்
காணும் அதன் லட்சணம்
நம்மை மலைப்பில் ஆழ்த்தி
திகைக்கவும் வைக்கிறது.

அன்றைய ‘ஏனோதானோ’ லட்சணம்
இன்றைக்கு
சகதி மேடாகி
கரடுதட்டித் தெரிவதற்குப் பதிலாக
புத்திளமை கொண்டு
காணும் அங்கமெல்லாம் மின்ன
அநியாயத்திற்கு வசீகரிக்கிறது!

பரபரப்பான
வளர்ச்சிப் பாதையில் விரையும்
இன்றைய காலம்,
நேற்றைய காலத்தின்
தொடர்ச்சியா என்றால்…?
சட்டென பதில் சொல்வது சிரமம்.

நேற்றைய செக்குமாட்டுத்தனமான
கால அசைவின் தொடர்ச்சியென
இன்றைய அதன் ‘ஹைடெக்’ பாய்ச்சலை
சொல்ல முடியுமா என்ன?

காலம் குறித்து
நுணுக்கி ஆய்ந்து, தீர யோசிக்கிற போது….
லோகம் சமைந்து,
தன் சஞ்சாரத்தைத் தொடங்கியது தொட்டு
யுகயுகமாக கழிந்த காலங்கள்
நிச்சயம் நத்தை ரகமாகத்தான்
இருந்திருக்க முடியும்.
நூறு ஆண்டுகளுக்கு
‘இத்தினூண்டு’ என்கிற அளவில்தான்
அதன் முன்னேற்றங்கள் இருந்திருக்கும்
என்றும் கூட உறுதியிட்டு கூறமுடியும்.

உலகம் தோன்றி
ட்ரில்லியன்… ட்ரில்லியன்
ஆண்டுகளாக தொடர்ந்த முடவன் நிலை
சென்ற நூற்றாண்டில்
மின்சாரம் உபயோகத்திற்கு வந்த காலம்வரை
அப்படியேதான் என்பதில்
இரண்டு கருத்திருக்க முடியாது.

இன்றைக்கு அப்படியா?
காலத்தோடு
நாம் இழைய முடியாத,
பயணிக்க முடியாத
ஏன்…
ஒட்டவும்கூட இயலாத நிலையில்தான்
இன்றைய அதன் வேகம் இருக்கிறது!
கண்மூடி கண்திறப்பதற்குள்
நம் லோகத்தின் முன்னேற்றங்கள்
கவனம் செய்ய முடியாத
வேக சங்கதிகளாகப் போய்விட்டது!

என் இளமை தொட்டு
கல்லூரிப் பருவம்வரை
நான் கண்ட காலம்…
எல்லாவற்றிற்கும் வாகானது.
நேர்ந்துவிடும் ஓர் தடங்களில்
கொஞ்சம் நாம், பிந்திவிட்டாலும்
எட்டி நடைபோட்டால் போதும்
கால ஓட்டத்தோடு ஒட்டிக்கொள்ள முடியும்.
இன்றைக்கு அப்படியா?
காலத்தோடு ஒட்டிவாழ,
அதையொட்டிய
இடைவிடாததோர் போராட்டம்
இங்கே எவருக்கும் தேவையாக இருக்கிறது!
அதன் வேகத்தோடு ஓட
தனிப் பயிற்சியும்  வேண்டியிருக்கிறது!

இன்றையப் பொழுதுகளில்
நம்மை முந்தி, சீறிப்பாயும்
நவீன வித்தைகள் கொண்ட
சூழல்காரர்களை விஞ்ச
சூதும்வாதும் கூட
தெரிந்து தெளிய வேண்டியிருக்கிறது!
இன்னொரு பக்கம்
நமது காவல் தெய்வங்களான
அரசியல்வாதிகளிடமிருந்து
நம்மை நாம் காத்துக்கொள்ள
தனியே கூடுதல் முயற்சிகளும்
தேவையாய் இருக்கிறது.

இன்றைய காலத்தோடு
என்னையொத்தவர்கள்
சகஜமாகக் கூட அல்ல
முயற்சிகளோடு தீவிரப்பட்டாலும்
இழையவே முடிவதில்லை!

ஓடும் பஸ்ஸை ஓடிப்பிடித்து
தொற்றிக்கொள்ளும் பதட்டத்துடன்
இன்றைய காலத்தைப் பற்றிக் கொண்டு
இந்த மண்ணில் இன்னொரு நபராக
வாழவேண்டியிருக்கிறது!

என் வயதுக்காரர்கள்
கல்லூரியைவிட்டு
வெளியேறிய காலத்திற்குப் பிறகே,
மஹாத்மியங்கள் கூடிய
கம்ப்யூட்டர் எஜுகேஷன்
நாட்டின் கல்லூரிகளுக்குள்
காலடி வைத்தது.

எங்கள் தலைமுறை
அந்தக் கல்வியை
அறிமுகப்படுத்திக் கொள்ள
வாய்ப்பற்ற… சபிக்கப்பட்ட…
தலைமுறையாகிப் போனதில்
பணி சார்ந்த நிறுவனங்களில்
எங்கள் தலைமுறையினர்களுக்கு நிகழ்ந்த
நிராகரிப்புகள் கொஞ்சமல்ல.

இதன் பொருட்டு
எங்கள் மீது எந்த தவறும் இல்லாமலே
நாங்கள் கைகட்டி வாய்பொத்தி
முடங்கிப் போனோம்.
சரியாகச் சொன்னால்….
காலம்
நவீன முன்னேற்ற சாதனங்களுடன்
எங்கள் தலைமுறையினரிடையே
குறுக்கே புகுந்து
எங்களை இடறிவிட்டபடி
விரைந்து முன்னேற…
நாங்கள் மிதிப்பட்டு
முடங்கித் தள்ளப்பட்டோம்!

கம்ப்யூட்டர் காலத் தொடக்கத்தில்
நாங்கள் பட்ட அவமானங்கள்
ஒருபுறம் கிடக்கட்டும்,
அதனோடு இழைந்தவர்களின்
கதியென்ன வாழ்கிறது?
காலம், அவர்களையும் விடவில்லை.

கம்ப்யூட்டர் வழியேயான
அதிநவீன முன்னேற்றங்களிடம் சிக்கி…,
அதிகாரங்களின்
நேரடி கண்காணிப்பிற்கு உள்ளாகி….,
எந்தவொரு மனிதனும் தப்புவதென்பது
எளிதல்ல என்ற நிலை
இன்றைக்கு வாழ்கிறது.
‘நான் அவனில்லை’ யென
கம்ப்யூட்டர் சிப்பாய்களும் கூட
அதனிடம் ஏய்க்க முடியாது.
வாழும் காலம்தான்
எத்தனையெத்தனை
வினோதமாகப் பரிணமிக்கிறது!

காலத்தின்
இன்னொரு நவீன சாதனம்
இன்றைக்கு, எல்லோரின் கைப்பிடியிலும் சிக்கி,
தட்டாது தவழ்ந்துக் கொண்டிருக்கிறது.
அவர்களின் விரல் நுனி இயக்கத்தில்
உலோகத் தொடர்புகள்
அவர்களுக்கு ‘ஹலோ’ சொல்கிறது!
காலம்…
மனிதர்களை கரை சேர்க்க
ரொம்பவும்தான் துரிதம் காட்டுகிறது.

காலத்தின்
இந்த நவீன கொடையை
வியக்கத் தெரியாமலும்
அது..
துரித இயக்கத்திற்கு
நம்மை ஆளாக்குவதைப்
புரிந்து கொள்ளாமலும்
நம் மக்கள் ‘செல்களோடு’
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்!

இந்தக் காலத்து
நவீன சாதனங்களின்
துரித இயக்கத்தால் பெருத்துவிட்ட
மீடியாக்களின் வரவும், அமளியும் கொஞ்சமல்ல!

தொலைக்காட்சி சேனல்களின்
அதிரடி நிகழ்ச்சிகளைப் பற்றி
சொல்லவே வேண்டாம்!
லோக கவலைகளையும்
சந்தோஷங்களையும்
கண்களைக் கூசவைக்கும்
ஆடை அவிழ்ப்புகளையும் கூட
நம் வீட்டின் நடுக்கூடத்தில்
வஞ்சனையற விரிக்கிறது.

காலம்,
இப்படி வர்ணஜாலக் கோலமாக
இன்றைக்கு நம்மை
பிரமாண்ட வசீகரிப்புக்கு ஆட்படுத்துவது
கொடையா? தண்டனையா?
சொல்லத் தெரியவில்லை.

ஊருக்கு நாலு
அம்பாசிட்டர் கார்கள்
பாவப்பட்ட ரோடுகளில் ஓடிய
காலத்துக்காரன் நான்.
இன்றைக்கு
வீதியில் இறங்கி
நடக்க முடியவில்லை!
நிமிஷத்திற்கு நிமிஷம்
உராய்ந்து கொண்டு போகிறது…
பளபளப்பு வாகனம் ஆயிரம்!
அத்தனையும்,…
‘மேட் இன் வெளிநாட்’!

முடிவற்ற கால ஜாலங்கள்
வரவேற்கும் விசேஷங்களுடனும்
முகம் சுழிக்கவைக்கும்
மூளித்தனங்களுடனும்தான் இருக்கிறது.
இவைகள் குறித்து
எல்லாவற்றையும்
எண்ணியெண்ணி சொல்ல நேர்ந்தால்…
முடிவற்று சொல்லிக் கொண்டே போகலாம்.
காலம் குறித்துதான் எழுதுகிறேன் என்றாலும்
அதற்கும் தப்பாத
காலக்கணக்கும் நேரக்கணக்கும்
பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.
அப்படியெனில்….
இது, இதுவரை போதும்.

***

நன்றி : நண்பர் தாஜ்  | satajdeen@gmail.com

9 பின்னூட்டங்கள்

 1. 06/06/2011 இல் 11:40

  நல்லா இயல்பா எழுதி இருக்கீங்க தாஜ் நானா. உங்களுக்கு அந்த கொடுவா மீசை அழகா இருக்கு!! :-))

  • தாஜ் said,

   06/06/2011 இல் 15:35

   சந்தோஷம்…
   அப்துல் காதர்.
   மீசை அழகா இருக்கா…
   ‘டை’ அடிக்கிறேன்ல
   அது அப்படித்தான் இருக்கும்.
   மூளையச் சொல்லுங்க
   அது ‘போ’ன்னுல இருக்கு.
   *
   நன்றி
   -தாஜ்

 2. 06/06/2011 இல் 16:02

  காதர்பாய், உங்களுக்கு பதில் சொன்னபிறகு எனக்கு தாஜ் அனுப்பிய மெயிலிலிருந்து மேலும் சில – ’டை’ அடிக்காத – வரிகள் :

  அன்புடன்
  ஆபிதீன்…

  நன்றி. .
  ஆமாம்..
  ஏன் நீங்கள் எழுதவில்லை?

  இந்தக் கட்டுரை
  எழுத நான் தீர்மானித்த
  சங்கதிகள் ஒட்டிய
  முழுமையை இந்தக் கட்டுரை எட்டவில்லை.
  கடைசி நேரத்தில்
  தெரிந்தே எழுதாது விட்டதுதான் கொடுமை.

  காலம்…
  இளைஞர்களுக்கும்/ வாலிபர்களுக்கும்
  மட்டுமேயான ஒன்று…
  என்பதுதான்
  சரியென நினைக்கிறேன்.
  நவீனங்களுடன் ஈடு கொடுத்து வாழ இயலாதவன்
  சரியான முடிவெடுப்பது நலம்.
  புழங்கிக் கொண்டிருக்கும் காலத்திற்கு
  நன்றி கூறியவனாக
  விடைப் பெற்றுக் கொள்வதுதான்
  காலத்திற்கு
  நாம் செய்யும் மரியாதையென நினைக்கிறேன்.

  நான் வீல் சேரில் உட்கார்ந்துக் கொண்டாவது
  வாழ்ந்தே தீருவேன் என்பது அடம்.
  காலம் கழுத்தைப் பிடித்து தள்ளுவதுவரை
  நகரமாட்டேன்,
  குறைகளைச் சொல்லிக் கொண்டு
  மண்ணிற்கு சுமையாய்
  அடம் செய்வேன் என்பதெல்லாம்
  நாகரீகமற்றப் போக்கு.
  என்றாலும்
  காலத்திடம் இருந்து
  தப்பிக்கவே முடியாது என்பது வேறு செய்தி.

  இதைப் பற்றி
  நீள அகல மெருகுடன்
  எழுத நினைத்தும்
  தவிர்த்துவிட்டதினாலான வலி….
  எழுத்துச் சார்ந்த
  உணர்விற்கு உண்டு.

  மீண்டும் நன்றி.

  -தாஜ்

 3. தாஜ் said,

  06/06/2011 இல் 17:39

  நன்றி ஆபிதீன் நன்றி.
  இப்போதுதான்
  அந்த வலி குறைந்த மாதிரி இருக்கு.

  பழம் பழுத்தால்
  தானே….
  மரக்கிளையில் இருந்து
  கீழே வீழ்கிறதுப் பாருங்கள்….
  அது சரி.
  அக் கவிதை நிலையே
  இயற்கையும் கூட.
  -தாஜ்.

 4. 06/06/2011 இல் 18:35

  மிக இயல்பான, ஊடுருவும், தீட்சண்யமான பார்வை.

  காலம் குருத்தைக் கருக்குவது வழமையானதுதான்.

  ஆயினும், அதன் இந்த திடீர் ஓட்டம் வழக்கம்போல் பழையவர்களை முந்திச் செல்லாமல்,
  கீழே தள்ளி மிதித்தும் செல்கிறது.

  இருந்தும்,

  மின்சாரம் கண்டு மிரண்ட
  அந்தப் பெருசுகளும்,
  ஊருக்கு ஊர் பள்ளிக்கூடம் கண்டு பொருமிய
  பிந்தைய பெருசுகளும் கூட,

  -கரித்துத் தூற்றியது போக-
  இதைவிட அதிகமாகவே
  திகைத்திருக்கவும்
  மலைத்திருக்கவும் கூடும்.

  பழம் பழுத்து விழுவது
  அதன் “பலன்”
  அதனால்,
  விழட்டும்!

  தவிரவும்,
  //காலத்திடம் இருந்து தப்பிக்கவே முடியாது என்பது வேறு செய்தி//
  எனவே,
  வலிக்கு வலிதந்து வழியனுப்பி,
  நாம் வழிபெறுவோம்.

  • தாஜ் said,

   06/06/2011 இல் 18:42

   அன்புடன்
   மஜீத்…

   பார்வையின் கவனம்
   வரிகளில் தெரிகிறது.

   சந்தோஷம்
   நன்றி
   -தாஜ்

 5. shahul said,

  06/06/2011 இல் 19:49

  மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது , நிலையாமையே நிலையானது.

  • தாஜ் said,

   07/06/2011 இல் 15:23

   சாஹுல்…
   ரொம்ப….
   ரொம்ப ரொம்ப
   சரி.

   பார்வைக்கு
   நன்றி.

   -தாஜ்

 6. shahul said,

  07/06/2011 இல் 19:26

  உங்கள் நன்றிக்கு நன்றி.

  With Love

  SHAHUL.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s