வரம்பு மீறாதே… – இஜட். ஜபருல்லா

எங்க ஜபருல்லாநானா அடிக்கடி சொல்லும் அட்வைஸ் இதுதான் :  ‘வரம்பு மீறாதிங்க’. இது ஒண்ணு போதும் – நிம்மதியாக வாழ என்பார். ‘அப்ப ஏன் நானா.. 3 டிவிடி முழுக்க குலாம்அலி கஜல் போட்டுக்கொடுத்தும் மேற்கொண்டு மேற்கொண்டு கேக்குறீங்க?’ என்று கேட்டால் , ‘ஓய்.. நீம்பரு வரம்பு மீறுறியும்ங்கனி’ என்று அன்போடு எச்சரிப்பார். வேடிக்கை…  மற்ற விசயங்களில் எப்படியோ எலக்கிய விசயத்தில் வரம்பு மீறாதவன் இந்த ஆபிதீன் ஒருத்தன்தான். வருஷத்துக்கு பத்தே பத்து வரி. போதும். வாழ்க்கை இனிக்க வேண்டுமே – மற்றவர்களுக்கு. இன்னொரு முக்கியமான அட்வைஸும் கவலையற்ற நானாவின் கவிதையில் உண்டு.  இறைநேசர்கள் பற்றிய  அவருடைய கவிதையைப் படித்து –  புரிந்துகொள்ளாமல் கடுப்பாகி – எனக்கு வைரஸ் மெயில்கள் அனுப்பும் அன்புச் சகோதரர்கள் கண்டிப்பாக அதைப் படிக்கவேண்டும் –  வரம்பு மீறாமல்!  – ஆபிதீன்

***


‘என்ன கவலை…?’ – இஜட். ஜபருல்லா

என் நண்பர் கேட்டார்,
‘உனக்குக் கவலையே இல்லையா..?’
ஏனில்லை…?
கவலையே இல்லை என்ற கவலைதான் என்றேன்,
போய்விட்டார்.

நான் சொன்னது
பொய் என்ற எதிர்ச்சொல் இல்லாத உண்மை,
காரணம் –
நான் ஒருவனின் ஆளுகையில் இருக்கிறேன்.

கவலை –
என் முகத்தின்முன் வராது.
பின்னால் சென்றால் –
முதுகுக்குப்பின் –
என் பிடரிக்கும் அருகில் இருக்கும்
என் ‘அவன்’ விரட்டிவிடுவான்…!

பின்னால் இருப்பதால்
என் ‘அவனை’ பார்க்கமுடியவில்லை.
கண்காணிப்பவன் –
பின்னால்தானே இருக்கவேண்டும்.

ஒரு நாள் என் ‘அவன்’
என்னோடு பேசினான்..! புரியவில்லையே..!
[மொழி தெரியவில்லையே] என்றேன்.
மௌன மொழியிலேயே செய்தியை
என் – மனசுக்குள் கடத்தினான்.

‘வரம்பு மீறாதே… வாழ்க்கை இனிக்கும்.’
‘பொறுமையாய் இரு. உன்னோடு இருப்பேன்’
எனக்கு எல்லாம் வந்ததுபோல
மனம் பூரித்தது.

கதவுகள் இல்லாத
என் காதுகள் – திடீரென
தானாகவே –
தாழ்போட்டுக் கொண்டது…!
என்முன் –
மார்க்க அறிவுஜீவிகளின்
நீண்ட விவாதங்கள் – தர்க்கங்கள்
எல்லாம் –
வெறும் சத்தமாய்
காற்றில் கலந்து
இல்லாமல் போயின…!

என் கண்களில்
என் ‘அவனின்’ வெளிச்சம் மட்டுமே…
அதனால் –
எல்லோருமே
நல்லவர்களாகவே
தோன்றுகிறார்கள்…!

எந்த தேவையும் இல்லாத என் ‘அவன்’தான்
என் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுகிறான்…!
பின் என்ன கவலை…!

***

நன்றி : இஜட். ஜபருல்லா (Cell : 0091 9842394119 )

3 பின்னூட்டங்கள்

  1. 01/06/2011 இல் 16:07

    இலக்கிய அழகோடு கூடி வந்திருக்கக் கூடிய அற்புதமான கவிதை. பிடரி நரம்பைவிட அருகில் அல்லாஹ் இருக்கிறான் என்ற இறைவசன வரிகளுக்கு அருமையான தர்க்க ரீதியான விளக்கம். ஒருவரின் தேவையை நிறைவேற்றக் கூடியவன் தேவைகள் அற்றவனாக இருப்பதே சரி. அப்படியானால் மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற மனிதர்கள் அருகதையற்றவர்கள் என்பது உட்குறிப்பு. இன்னும் சொல்லத்தான் ஆசை. ஆனாலும் வரம்பு மீறக்கூடாது என்பதால்…

  2. 01/06/2011 இல் 16:42

    ‘அப்ப ஏன் நானா.. 3 டிவிடி முழுக்க குலாம்அலி கஜல் போட்டுக்கொடுத்தும் மேற்கொண்டு மேற்கொண்டு கேக்குறீங்க?’ என்று கேட்டால் , ‘ஓய்.. நீம்பரு வரம்பு மீறுறியும்ங்கனி’ என்று அன்போடு எச்சரிப்பார் — இந்த வரிகளை ஜஃபருல்லா நானாவிடம் அலைபேசியில் சொல்லிக் காட்டிசிரித்தேன். ஆபிதீன் அவர் வரம்பைப் பற்றிக் கூறியிருக்கிறார். மூன்று டிவிடிகள் என் வரம்பல்லவே.அது முந்நூறாக இருக்கலாம். அது எனக்குத்தானே தெரியும்? அவர் வரம்பை நான் மீறிவிட்டதாக அவர் சொல்கிறார். நான் என் வரம்பை மீறாமல் தானே இருக்கிறேன் என்றார் சிரித்துக் கொண்டே!

  3. SHAHUL said,

    01/06/2011 இல் 19:19

    //பின்னால் இருப்பதால்
    என் ‘அவனை’ பார்க்கமுடியவில்லை.
    கண்காணிப்பவன் –
    பின்னால்தானே இருக்கவேண்டும்.//.

    அவனை பார்க்கும் பொழுது , பார்க்கும் நான் இருக்கமுடியுமா?


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s