நானாவின் இளமை ஊ(ஞ்)சலாடுது..!

இரவில் கிடைத்த பரிசு

ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்தலைப்பு ஒரு மாதிரி இருக்குதல்ல, எத்துகுத்தா எதாவது நெனச்சீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. ஆனால் பரிசு ஒண்ணு உண்மையாவே கெடச்சுது, அது என்னா? இறங்கி வாங்க..

எங்க வூட்டு கொல்லைபுறத்துலெ ஒரு குளம் இருக்குது. அது இப்பவும் இருக்கு ஆனால் தண்ணி கிடையாது. சுமார் அம்பது அறுபதடி அகலம் நூறு நூத்தம்பதடி நீளம். போதுமான ஆழமும் இருந்துச்சு. அதுலெ எங்களையும் சேர்த்து மூணு வூட்டுக்கு பங்கு இருக்குது. அதுலெதான் குளிக்கிறதுலேந்து பாத்திரம் கழுவுறது வரை. எனக்கு அஞ்சாறு வயசு இருக்கும்போது அதுலெதான் குளிப்பேன், நீச்சல் தெரியாது எதையாவது புடிச்சிக்கிட்டு கையெ காலை அடிச்சு நானாகவே நீச்சல் கத்துக்கிட்டிருந்தேன்.  நாலு நாளையிலெ பெரிய நீச்சல் வீரன்னு எனக்கே ஒரு வீராப்பு. ‘நெனப்பு பொளப்பெ கெடுக்கும்’னு சொல்லுவாங்க, அது என்னையும் கெடுத்துச்சு. படித்துறையை ஒட்டி ஒரு நாவல் மரம், ஒரு நுனா மரம், இரண்டு பூவரசு மரம் இருந்துச்சு. நுனா பூக்கும் காய்க்கும் அதை யாரும் சீண்டுறதில்லை. அதோட மருத்துவ குணம் இப்பதானே தெரியுது ‘நோணி’  என்கிற பேரில் டானிக்கெல்லாம் வருது. நோணிக்கு எங்க ஊருலெ ஒரு வகையான touch sensor (தொடு உணர்வு) கருவிக்கு சொல்லுற ஒரு மாதிரியான பேரு.  எங்க மரத்துலெ காய்க்கிற நாவப் பழம் ரொம்ப இனிப்பா இருக்கும். சீசன்லெ அதை திங்க குயில் நெறைய வரும். நுனாவைத் தவிர மத்த மூணு மரமும் குளத்துப் பக்கம் சாஞ்சிருக்கும். ஒரு வேளை 52-க்கு பிறகு அடிச்ச எதாவதொரு புயல்லெ சாஞ்சிருக்கலாம்.

ஒரு நாள் நாவப்பழம் பறிக்கலாம்னு மரத்துலெ ஏறினேன். மரம் சாஞ்சிருந்ததால் ஏற வசதியா இருந்துச்சு. ஆனால் கிளை ஸ்ட்ராங்கா இருக்குமாண்டு யோசனை பண்ணலெ. ஏறி இரண்டு பழம் பறிச்சிருப்பேன் ‘தொபக்கடீ’ன்னு கிளையோடு குளத்திலெ விழுந்தேன். விழுந்த வேகத்துக்கு உள்ளே போயிட்டேன். நீச்சல் தெரியலை. தண்ணியை குடிச்சிக்கிட்டு கையெ காலை அடிச்சிக்கிட்டு கரை ஏற முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன், முடியலை. மூச்சு திணர ஆரம்பிச்சிடுச்சு, பயம் வேறு வந்துடுச்சு, மயங்குற நிலை… என் தலை முடியைப் பிடிச்சு யாரோ தூக்கி கரையிலெ எறிஞ்சாங்க, தண்ணி நெறைய குடிச்சிருந்ததுனாலெ சரியா மூச்சு விடமுடியலை. என்னை அப்படியே அணச்சு வயத்தை ஒரு அழுத்து… ‘குபுக்’கென்று குடிச்ச தண்ணியெல்லாம் வெளிய வந்துச்சு. நிதானம் வந்த பிறகு பயத்துலெ அழ ஆரம்பிச்சுட்டேன்.

காப்பாத்தினவங்க வேறு யாருமல்ல, எதிர்த்த வீட்டு ‘பரக்கத்து நாச்சியா’. மர நிழல்லெ எங்க பக்கம் எப்போதுமே தண்ணி ஜிலு ஜிலுன்னு இருக்கும், குளிக்க வந்திருக்கா.. நான் தத்தளிப்பதைப் பார்த்துட்டு ஓடிவந்து என்னை காப்பாத்திட்டாள். அன்னைக்கு அவள் வந்திருக்கவில்லை என்றால் என் கதை முடிஞ்சிருக்கும். “நீச்சல் தெரியாம ஏண்டா மூதேவி தனியா குளிக்க வந்தே, நான் வரலென்னா செத்து தொலைஞ்சிருப்பே”ன்னு திட்ட ஆரம்பித்துவிட்டாள். ரெண்டு போடுகூட போட்டாள்னு நெனக்கிறேன், சரியா ஞாபகமில்லெ. அழுதுகிட்டே நடந்ததை சொல்லிபுட்டு உம்மாவிடம் சொல்லாதே என்றேன். தெரிஞ்சா போட்டு சாத்து சாத்துன்னு சாத்தி எடுத்துடுவாக.

“சரி சொல்லலை, நீச்சல் கத்துக்கவேண்டியதுதானே..!”

“எனக்கு யாரு கத்துக்கொடுப்பா..?”

“சரி அழுவுறதை நிறுத்திட்டு வா நான் கத்துக் கொடுக்கிறேன்.”

“வாணாம், எனக்கு பயமா இருக்கு.”

“நான் இருக்கேன்ல வா பயப்படாமெ” என்று சொல்லி என்னை மீண்டும் குளத்தில் இறங்க வச்சாள். பரக்கத்து நாச்சியார் என்னைவிட அஞ்சாறு வயசு மூப்பு, நல்ல சிகப்பு, மூக்கும் முழியுமா கொஞ்சம் பூசுன மாதிரி குண்டா இருப்பாள், எதிர்த்த வீட்டு கண்ணும்மா மகள், ஊர் கோடியக்கரை பக்கம் என்றாலும் இருப்பதெல்லாம் இங்கேதான்.

என்னை, தன் இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு நீச்சலடிக்க சொன்னாள், ஓரளவு பழகியதும் தன்னைப் பிடிச்சிக்கிட்டு அடிக்கவச்சாள்; பிறகு ஒரு மொத்தமான கட்டையெ கொடுத்து அதை பிடிச்சிக்கிட்டு அடிக்க கத்துக்கொடுத்தாள். கொஞ்சம் தெம்பும் தைரியமும் வந்தபிறகு கைலியை இரண்டாக மடிச்சு கையை கைலியோடு இழுத்து வேகமாக மடிச்சால் ஈரக் கைலிக்குள் காத்து பூந்து தெப்பம்போல் ஆயிடும், ஒரு காத்தடிச்ச கார் டியுப் மாதிரி இருக்கும், நீச்சலடிக்க வசதியா இருக்கும் ஆனால் இடுப்புக்கு கீழே உள்ளதெல்லாம் வெட்டவெளிச்சத்துக்கு வந்துடும். இப்படி கைலியை மடிச்சிக்கிட்டு நீச்சல் அடிச்சிக்கிட்டிருந்தேன், எல்லாம் அவள் ‘மெஹ்ர்பாணி’லெதான், இல்லேன்னா வேறே யாராவது குளிக்கனும். தனியா செஞ்சதே கிடையாது. இப்படி நீஞ்சும்போது  ‘லபக்’னு எதோ ஒன்னு அதை கவ்வுனுச்சு, பயந்துகிட்டு கரைக்கு வந்துட்டேன். என்னைப் பார்த்து சிரிச்சிக்கிட்டே ஏண்டா கண்ணுன்னு கேட்டாள். “மீன் கடிக்குது.” ‘கடிக்காது ,வா’ன்னு மறுபடியும் நீந்த வச்சாள். அப்புறம்தான் தெரிஞ்சது கடிச்சது மீனல்லன்னு!

எனக்கு திட்டணும் போலிருந்துச்சு. கோவிச்சுக்கிட்டா? நீச்சல் பாதியிலேயே நின்னுடும்னு பேசாமலிருந்துட்டேன். நல்லா நீச்சலடிக்க தெரிஞ்ச பிறகு, இதுக்கு இதான் பேருன்னு தெரியாமலே butterfly, breast stroke இதெல்லாம் கத்துக்கிட்டேன். அப்புற எங்க குளத்தை மறந்துட்டு பள்ளிக்குளம், இக்கரையிலிருந்து அக்கரை முன்னூறு நானூறடி தூரம், பத்மாசனம் போட்டு முழங்கால் இடுக்கில் மண்ணை வச்சுகிட்டு back strokeலேயே நீந்தினேன் ஆனால் மண்ணில் ஈரம் படக்கூடாது, இதுலெ போட்டி வேறே. தண்ணீரில்  படுத்திருக்கிற கலையை என்னால் கற்றுக்கொள்ள முடியவில்லை அதை மஹ்மூது அப்பா என்ற 90 வயது கிழவர் செஞ்சிக்கிட்டிருந்தார், சொல்லித்தாரேன்னு சொல்லி சொல்லியே சொல்லாமலே போயிட்டார்.

காலம் உருண்டோடியது, பரக்கத்தான நாச்சியா கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுலேயே இருந்துட்டாள். அவள் அம்மா கண்ணும்மாவும் தன் ஊரிலேயே தங்கிட்டாங்க எப்பவாவது வருவாங்க. வந்தால் என்னைப் பார்க்காமல் போகமாட்டாங்க என் மீது தனிப் பிரியம் அவங்களுக்கு. நான் அப்பாவூட்டு பிள்ளை என்கிற காரணத்தினாலோ என்னவே எல்லோருமே என்மீது பிரியமாக இருப்பார்கள், உம்மா வாப்பாவைத் தவிர. சின்ன தப்பு செஞ்சாலும் கொதறி எடுத்துடுவாக, அவ்வளவு அடி வாங்கி இருக்கிறேன். ஒரு நாள் கண்ணும்மா கண்ணீரும் கம்பலையுமாக எங்க வீட்டுக்கு வந்து எல்லாம் போயிடுச்சும்மான்னு அழுதாங்க என்னைக் கண்டதும் ”தம்பி கொடுத்து வைக்காத பாவி ஆயிட்டேன். புள்ளையெ கொடுத்துட்டுப் போய் சேர்ந்துட்டான் மகராசன், கூட்டிக்கிட்டு வந்திருக்கேன் போய் பாரு”ன்னு சொல்லி அழுதாங்க. விளங்கியது மறுமகன் ஹார்ட் அட்டாக்கிலெ போய் சேர்ந்துட்டான்னு. எனக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. குழந்தையும் கையுமாக இருந்தாள். அந்த அழகு, அந்த சேட்டை, அந்த கலகலப்பு எல்லாம்? காணவில்லை.

ஒரு பெண் புகுந்த வீட்டுக்குப் போய்விட்டால் அவளுக்கு எல்லாமே கணவன்தான். நல்லது, கெட்டது, மகிழ்ச்சி, துன்பம், இப்படி எல்லாவற்றையும் தன் கணவனுக்காகத் தியாகம் செய்கிறாள். எத்தனை ஆண்டுகள் பிறந்தகத்தில் இருந்தாலும் வளர்ந்தாலும் வாழ்ந்தாலும் திருமணத்துக்குப் பிறகு பெற்றோர், கூடப் பிறந்தவர்கள், அண்டை வீட்டார், தோழியர் அனைவருமே பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். பிறந்தகத்தில் ஒரு வாழ்க்கை என்றால் புகுந்தகத்தில் மறு வாழ்க்கை, அது புதிய வாழ்க்கை, புதிய பரிமாணம், புதிய உறவு, புதிய சூழல்! இது சிலருக்கு நன்றாக அமைகிறது; சிலர் நன்றாக அமைத்துக் கொள்கிறார்கள்; ஒரு சிலருக்கு? அது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஆம், அப்படித்தான் அவளுடையதும். ஐந்தாறு ஆண்டு கால வாழ்க்கை திடீரென்று அணைந்துபோனது. ஏழ்மை குடும்பத்தில் பிறந்து துடிப்பும் துள்ளலுமாக இருந்து சிறகொடிந்த பறவையாக தன் குஞ்சுடன் வீட்டில் ஒடிங்கியிருந்தபோது, ஆறுதல் சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை. அமைதி, அமைதி, எல்லாம் அமைதி. இந்த அமைதி கலைய ஓராண்டு காலம் பிடித்தது. என்றாலும் பழைய நக்கலும் நையாண்டியும் லேசில் வரவில்லை. நான் சும்மா இருக்காமல் அவளை சீண்டிச் சீண்டி பழய நிலைக்கு கொண்டுவந்தேன். துணை இழந்த பிறகு பெரும்பாலும் எங்க வீட்டில்தான் ஜாகை. ஆறு வருஷம் அமைதியா ஓடிக்கொண்டிருந்த நதி இவ்வளவு சீக்கிரம் வற்றிபோகும் என்று யாருக்கு தெரியும்?

ஒரு நாள் கண்ணும்மா என் தாயாரிடம் ”பரக்கத்து நாச்சியாவுக்கு நல்ல இடத்தில் பேசி முடிவு பண்ணி இருக்கோம், நல்ல பையன், நல்ல குடும்பம், கூட கொறச்சல்னு பார்க்காம செய்யப்போறேன்,  இன்னும் இரண்டு நாள்லெ ஊருக்குப் போறேன் அங்கே வச்சு கல்யாணத்தை முடிச்சிடலாம்னு இருக்கேன், குடும்பத்துக்குள்ளெதான் செய்யிறோம், நீ வந்துநிண்டு செய் தங்கச்சி,” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இனியாவது நல்வாழ்க்கையாக அமையட்டும் என்று மனம் பிரார்த்தித்தது. ஆனால் ஒன்று என்னை உறுத்தியது. ஒரு நல்ல தோழியை இழக்கிறேன் என்று. ஆமாம் , பரிட்சை சமயத்தில் காலையில் மூணு மணிக்கெல்லாம் எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அந்த அதிகாலையிலும் தூக்கத்தை தியாகம் செய்து எனக்கு டீ போட்டு கொடுப்பாள், ஒரு வேலை நான் தூங்கிவிட்டால் என்னை எழுப்பிவிடுவாள். சில நாட்களில் கரண்ட் இல்லாது போனால் மண்ணெண்னை விளக்கு அவள்தான் கொண்டுவருவாள். சுருக்கமாக சொல்லப்போனால் படிப்பறிவு இல்லாவிட்டாலும் என் படிப்பில் என்னைவிட அக்கறை அவளுக்கு அதிகமாக இருந்தது. பரிட்சை சமயமாக இருந்ததால் கல்யாணத்துக்கு போகமுடியவில்லை. ஆனால் மனம் மட்டும் அங்கேயே சுழன்று கொண்டிருந்தது. என் எண்ணங்கள் பின்னோக்கி ஓடின, ஒரு முறை அவளை ‘லாத்தா’ (அக்கா) என்று கூப்பிட்டதற்கு மூன்று நாள் வரை என்கூட பேசவில்லை. காரணம் தெரியாமல் தவித்தேன். “ஏன் என்கூட பேசாம இருக்கே, நான் எதாச்சும் தப்பு பண்ணினா?” என்று கேட்டதற்கு “ஏன் என்னை லாத்தான்னு கூப்பிட்டே, நான் என்ன ஒனக்கு லாத்தாவா?” என்றாள். “வயசுக்கு மூத்தவங்களை லாத்தான்னு கூப்பிடாம வேறே எப்படி கூப்புடறதாம்?” என்றேன். “பேர் முழுசா சொல்லி கூப்பிட்டா கூப்பிடு இல்லாட்டி கூப்பிடாதே! பாதி பேர் சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காதே!!” அப்டீன்னாள். “விசித்திரமா இருக்கியே, ஒன்னை புரிஞ்சிக்கவே முடியலெ” என்று நான் சொன்னதும் சிரிச்சிக்கிட்டே தலையில் செல்லமாக குட்டினதும் என் கண் முன்னே ஓடியது.

ஒரு வருடம் முழுமை ஆகி இருக்காது, என் நெஞ்சில், நினைவில் ஓர் மூலையில் இருந்தவள் மீண்டும் வந்து சேர்ந்தாள் தன் தாயுடன். குழந்தை சகோதரியிடம் வளர்ந்துக் கொண்டிருந்தது. கண்ணுமாவே சொன்னார்கள் “இவள் நசீபு பொல்லா நசீபாக இருக்குது, மொதல்லெ உள்ளது ஒரேடியா போயிடுச்சு, ரெண்டாவதாச்சும் நல்லா இருக்கும்னு நெனச்சு முடிச்சு வச்சோம் கொடுமை தாங்கமுடியலெ, மாமியா மாத்தி மாமியா, புருஷன் மாத்தி புருஷன் ரொம்ப கொடுமைப் படுத்துறாங்க. அவளை மறுமவ மாதிரி நடத்தலெ ஒரு வேலைக்கரியெ விட கேவலமா நடத்துறாங்க என்னாலேயே சகிச்சிக்கிட்டு இருக்கமுடியலெ. இனி அல்லா வுட்ட வழி” என்று கண்ணீர் மல்க சொன்னார்கள். ஆனால் அவளிடமோ எந்த சலனமும் இல்லை, மரத்துப்போன கட்டை மாதிரி இருந்தாள். தான் பட்ட துன்பத்தை யாரிடமும் காண்பித்துக்கொள்ளவில்லை. அதே பழைய கலகலப்பு, ஆனால் முகத்தில் மட்டும் லேசான சோகம் ஓடியது என்னால் மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது. எதிர் வீட்டில் இருந்தாலும் மீண்டும் ஜாகை எங்கள் வீட்டில்தான். ஒருகால் இங்கே இருந்ததினால் தன் துயரத்தை மறக்க முடிந்ததோ என்னவோ தெரியவில்லை. ஏறக்குறைய ஆறேழு மாதம் ஒரு பிரச்சினையுமில்லை.

பெரும்பாலும் நான் படுக்க வருவது இரவு 12 மணிக்கு மேல். எங்கவூர் ஸ்டேஷன் மாஸ்டர் (அந்தனப் பேட்டையில்தான் ஸ்டேஷன் இருக்கிறது) Mr.ஜீவராஜா, ஹைஸ்கூல்லெ படிக்கிற காலத்திலிருந்தே எனக்கு மிக நெருக்கம். அவர் ஒரு இளம் விஞ்ஞானி, எதாவது புதுசு புதுசா கண்டுபிடிச்சுகொண்டே இருப்பார். பிசிக்ஸ்-ல் அவருக்கு ரொம்ப ஆர்வம். பிசிக்ஸ் எனக்கும் ஃபேவரைட். அதனால் எது செய்தாலும் என்னிடம் சொல்லாமல் இருக்கவே மாட்டார். அவருடைய டூட்டி நாட்களில் நடு இரவு வரை பேசிக்கொண்டிருப்போம்.

இரவு பத்தரை மணிக்கு கடைசி டிரெய்ன் போகும். அது போனவுடன் கல்லா கட்டிவிட்டு (அன்றய collection with statement of account) இரவு 12 மணிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் போகும்வரை டிஸ்கஸ் பண்ணுவோம். அதற்கு பிறகுதான் எங்கள் உறக்கம். ஒரு நாள், “தம்பி நாளைக்கு டிப் டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு வா ஜி.டி நாயுடுவை சந்திக்கப் போறோம்” அப்டீன்னார். எனக்கு எதுவுமே ஓடவில்லை, ஒரு மாபெரும் விஞ்ஞானியை சந்திக்கிறோம் என்ற மகிழ்வு. ஆமாம், சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு)லிருந்து மின்சாரம் தயாரிப்பதைப் பற்றி அவரிடம் காட்டப்போகிறோம். நான்தான் ஜீவராஜா சாருக்கு அசிஸ்டெண்ட். மறு நாள் மாலை 5 மணிக்கு எங்களுக்கு appointment. எதோ ஒரு நிகழ்ச்சிக்கு அவரும் கி.ஆ.பெ. விஸ்வநாதனும் வந்திருந்தார்கள். அவர்கள் தங்கிருந்த Guest House க்கு சென்று டெமோ காண்பித்தோம். கி.ஆ.பெ. அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள், அவர் தமிழறிஞர் வியப்பு இருக்கத்தானே செய்யும்! ஆனால் ஜி.டி. நாயுடு முகத்தில் எந்த சலனமும் இல்லை. எல்லாம் முடிந்த பிறகு “சூரிய சக்தியிலிருந்து விலை குறைவாக மின் உற்பத்தி செய்யமுடியுமா என்பதை ஆராய்ச்சி செய்யுங்கள், நான் உங்களுக்கு எல்லா உதவியும் செய்கிறேன்” என்றார். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன் அவருடைய தீர்க்கதரிசனம், விலாசமான மனப்பான்மையை நினைத்து இப்போதும் பெருமை அடைகிறேன்.

புதிய ஆராய்ச்சி, நான் சொன்னேன், “சார் மெட்டிரியல் வாங்கனும்னா ரொம்ப செலவாகுமே, அதை வச்சுதானெ நாம தொடங்கமுடியும்.” “தம்பி, ஜீஸஸ் இருக்கார் கவலைப் படாதே, சீக்கிரமா ஆரம்பிச்சுடுவோம்.” என்றார். அவர் டூட்டி டயத்தில் நான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயாகனும். இல்லாவிட்டால் வீட்டிற்கு ஆள் அனுப்புவார், ஆள் கிடைக்காவிட்டால் இரவு 9.30 டிரைனில் வரும் வாப்பாவிடம் சொல்லி அனுப்புவார். அதனால் நான் லேட்டா வருவது பற்றி வீட்டில் கவலைப்பட மாட்டார்கள். தவிர என்னால் யாருக்கும் தொந்திரவு இருக்காது. எங்க வீட்டில் கெஸ்ட் ரூம் ஒன்று இருக்கிறது அதற்கு தனி வாசல், பார்ப்பதற்கு தனி வீடு மாதிரி இருக்கும். அங்குதான் என் படிப்பு, ஆராய்ச்சி, படுக்கை எல்லாமே.

ஒரு நாள் ஜீவராஜா சாரைப் பார்த்துவிட்டு கொஞ்சம் முன்பே கிளம்பினேன், மழை வருவது மாதிரி இருந்ததால். என் அறை வாசலில் உம்மா உட்கார்ந்திருப்பது தூரத்தே தெரிந்தது. ஏன் உம்மா ஏன் இந்த நேரத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்ற சிந்தனையுடன் கிட்டே வந்தபோது இவள் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். “ஏன் இன்னும் தூங்கமெ இங்கே உட்கார்ந்திருக்கே?” என்றேன். அவ்வளவுதான் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள். ஊரிலிருந்து வந்த அம்மா எதும் சொல்லியிருப்பார்களோ இல்லை வேறு எதும் நடந்ததோ ஒன்றும் புரியாமல், “ஏன் அழுவுறே, என்ன நடந்துச்சு, சொல்லிட்டு அழுவேன்” என்றேன். வார்த்தை வரவில்லை, முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தாள்.

பெண்ணின் மனசை யார் அறிவார்? ஆணாவது எதாவது உளறித் தொலைவான். ஆனால் பெண் தன் மனதில் ஒன்றை பூட்டிவிட்டால் என்றால் வெளிக்கொணருவது சுலபமல்ல. நானும் கேட்டுக் கேட்டுப் பார்த்தேன் ஒன்றும் சொல்வதாக இல்லை. ஒரு மருந்து, எதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம், எதோ ஒரு அசட்டு தைரியம் முன்பின் யோசிக்காமல் ஓங்கி ஒரு அப்பு அப்பினேன் கன்னத்தில். மருந்து வேலை செய்தது, அழுகை நின்றது, பேச ஆரம்பித்தாள்.

“அடி என்னை நல்லா அடி, ஒனக்கு உரிமை இருக்கு, இன்னும் அடி.”

“உரிமை கெடக்கட்டும். இப்பொ எதுக்கு அழுதுக்கிட்டிருக்கே? என்ன நடந்துச்சு? சொல்லித் தொலை.”

“நான் மறுபடியும் அவன்கூட வாழனுமாம் நாளைக்கு கூட்டிக்கிட்டு போறாக.”

“நல்லதுதானே. எவ்வளவு நாளைக்கு இப்படியே இருப்பே?”

“ஒனக்கு தெரியாது அங்கே என்ன கொடுமை நடந்துச்சுன்னு. இதுவரை யார்கிட்டையும் சொல்லலெ, உம்மாகிட்டெகூட பாதியெ மறைச்சுட்டேன். இப்பொ ஒன்கிட்டெ சொல்றேன். இப்ப வந்து வாச்சவன் குடிகாரன். தினம் ஏத்திக்கிட்டு வந்து எதாச்சும் தகராறு பண்ணுவான். அவன் சொல்றதை கேட்கலைன்னா அடிப்பான் பீடியாலெ சூடு வைப்பான். இவன் இப்டின்னா மாமியா அதைவிட மேலே, அவளுக்கு தினம் சுடுதண்ணி வச்சு கொடுக்கனும், டீ போடுறதிலேந்து சோறு கறி ஆக்குறது வரை நான்தான் செய்யனும், இதெல்லாம் முடிச்சுட்டு படுக்குற நேரத்துலெ அவளுக்கு கால் புடிச்சு விடனும்.”

“உன் புருசன்கிட்டெ சொன்னியா?”

“சொன்னேன் அவன் எதையும் கண்டுக்கலை. அவன் அம்மாகாரிக்கு புடுச்சுக்கிட்டிருக்கும்போது இவன் கூப்பிட்டால் உடனே போயாகணும் லேட்டா போனா அடியும் உதையும்தான். பாதிலெ போனா இவ, ”ஏன் கேக்குதா? இன்னும் கொஞ்சம் புடிச்சுட்டுப் போ”, அப்டீம்பாள். இந்த பார் சூடுவச்ச இடத்தெ” என்று தொடையைக் காண்பிக்கப்போனாள். நான் கையை தட்டிவிட்டேன்.

“இதை யார்கிட்டயாச்சும் சொன்னியா?”

“பிரயோஜனப்படாது, வூட்டுக்கு வெளியெ சுத்த சூஃபியா நடிக்கிறான்.”

“என்னடா இது, உனக்கு வந்து வாய்க்கிற வாழ்க்கை இப்படி இருக்குதே! யார் என்ன பாவம் செஞ்சா? இதை மொதல்லேயே சொல்லித் தொலைச்சிருந்தா எதாவது பரிகாரம் பண்ணிருக்கலம்ல, இப்ப வந்து சொல்றியே.” என்று கோபத்துடன் உரக்க சொன்னேன். “உஸ்… சத்தம் போடாதே யாராவது வந்துடப்போறாங்க” என்று எச்சரித்துவிட்டு தொடர்ந்தாள்.

“எனக்கு கல்யாணமும் வேணாம் மண்ணும் வேணாம்னு அப்பவே சொன்னேன், கேட்காம இவன் தலையிலெ கட்டிவச்சு நாய் படாத பாடா படுறேன்” என்று கண்ணீரோடு குழறினாள்.

“சரி இப்பொ என்ன செய்யப்போறே?”

“என்ன செய்யிறது, வரமாட்டேன்னு சொல்லமுடியாது. சொன்னாலும் கேட்கமாட்டார்கள், எதோ ஜமாத் சேர்த்து வைக்கிதாம். என் தலை விதி ஜமாத்துடைய கைக்குப் போயிடுச்சு, அவங்க கூப்புடறதுனாலெ போறமாதிரி இருக்கு.”

“ஒன்னு செய், ஒனக்கு விருப்பமில்லைல, தலாக் வாங்கி கொடுக்க சொல் ஜமாத்திடம். நீ உன் நிலையிலெ உறுதியா இரு.” இதைத்தான் என்னால் சொல்ல முடிந்தது.

இதற்கிடையில் தூறிக்கொண்டிருந்த மழை வலுத்தது. கரண்ட்டும் போனது. இவ்வளவு கூத்தும் அறை வாசலிலேயே நடந்ததால் யாருக்கும் கேட்க வாய்ப்பில்லாமலிருந்தது. “மணி ஒன்னாச்சு போய் தூங்கு, மத்ததை காலையிலெ பேசிக்கலாம்” என்று அனுப்பிவிட்டு நான் தூங்கப் போய்விட்டேன். இவளுக்கு ஏற்பட்ட கொடுமை என்னை உறுத்தியது, இத்தனை நாள் யாரிடமும் சொல்லாமல் அடக்கி வைத்திருந்தாளே! இவள் என்ன மனுஷி, இவள் மன உறுதிதான் என்ன? இப்படியும் மனிதர்களா? போனால் என்ன முடிவு ஏற்படும்? சேர்த்து வைத்தால் நல்ல வாழ்வு கிடைக்குமா? இல்லை கானல்நீராகிவிடுமா?  கண் மூடியிருந்தாலும் சிந்தனை சிறகடித்துப் பறந்தது. ஐந்து நிமிஷம் ஆகியிருக்காது யாரோ என்னை வருடியதுபோலிருந்தது, விழித்துப் பார்த்தபோது மீண்டும் இவள். “என்ன” என்றேன்.

“எந்திரி,” சலனமில்லாமல் ரொம்பத் தெளிவாகப் பேசினாள், ஐந்து நிமிடத்துக்குள் எதோ ஒரு முடிவோடு வந்திருப்பது குரலில் ஒலித்தது.

“என்னா?”

“எனக்கு ஒரு சத்தியம் செஞ்சு கொடுக்கனும், கொடுப்பியா?”

“என்ன திடீர்னு சத்தியம்?”

“கொடுப்பியா?”

“சரி கொடுக்கிறேன், சொல்லித்தொலை.”

“ஒனக்கு ஒன்னு தரப்போறேன்,”

“இப்பத்தானெ அழுது இத்துமடிஞ்சிங்க தங்கச்சி, அதுக்கெடையிலெ என்ன வந்துடுச்சு தங்களுக்கு?”
 
“அதெல்லாம் கேட்காதே, ஒரு முடிவோடத்தான் நானும் தாறேன் இதெ யார்கிட்டேயும் எந்த காரணத்தாலும் சொல்லக்கூடாது, சம்மதமிருந்தா சொல்லு இல்லாட்டி போறேன்.”

“புடிவாதக்காரில நீ, கண்டிப்பா சொல்லமாட்டேன்.”

“அப்டீன்னா தலையிலெ அடிச்சு சத்தியம் பண்ணு.”

தலையில் கையை வைத்து சத்தியம் செய்தேன். அடுத்த நிமிஷம்  “இதெ வாங்கிக்க” என்று கொடுக்கவும் கரண்ட் வரவும் சரியாக இருந்தது. அதைப் பெற்றதும் என்னால் நம்பமுடியவில்லை, திக்குமுக்காடிப்போனேன். “என்னாப்ளெ இது?”

“பத்து வருஷமா பொத்திப் பொத்தி  வச்சிருந்தது, ஒனக்காகவே இவ்வளவு நாளும் ரகசியமா வச்சிருந்தேன், இன்னைக்குதான் நேரம் கெடச்சுது. ஆனால் ஒண்ணு, நான் திரும்பி வருவேனாங்கிறது எனக்கே சந்தேகமா இருக்கு, ஒரு வேளை வந்தா நான் கேட்கறப்ப தா.”

“பரிசும் வேணாம் மயிரும் வேணாம், கொடுப்பாங்களாம் திரும்ப கேட்பாங்களாம்.”  

“இல்லெப்பா, வாங்கிட்டு ஒடனே ஒன்கிட்டையே தந்துடுவேன்.” என்று சொல்லிவிட்டுப் போனவளை தடுத்து “இந்தா வரமாட்டேன்னு மட்டும் சொல்லாதே, திரும்பி வரணும்” என்று சொல்லி அனுப்பிவிட்டு அவள் தந்த பரிசை நெஞ்சில் அணைத்தபடியே தூங்கினேன். மறு நாள் காலை புறப்படும்போது “ஞாபகம் வச்சுக்க” என்று சொல்லிவிட்டு ‘டாட்டா’ காண்பித்தாள். அவள் முகத்தில் எந்த கலக்கமும் இல்லை ஆனால் எனக்கு கண் கலங்கியது. அவளது மெதுவான கை அசைவு – அது ஓயப்போகும் அசைவு என்று எனக்கு அப்போது தெரியாது.

ஒரு மாதம் ஆகியிருக்கும், நான் மதுரையிலிருந்து வந்தபோது “தம்பி பரக்கத்து போயிட்டாப்பா” என்று உம்மா சொன்னதும் எனக்கு பகீரென்றது,

“என்னம்மா சொல்றீங்க.”

“ஆமாம்பா, ஜுரம் வந்துச்சாம் ஜன்னி கண்டுச்சாம் போய் சேந்துட்டா மகராசி, நாங்க மய்யித்துக்கு போயிட்டு வந்தோம்.”

ஒரு நிமிஷம் என்னை இழந்தேன். மனம் இறுகியது என் அறைக்கு சென்று தலையணையில் முகத்தை புதைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன். உம்மா வந்து என் முதுகைத் தடவும்போது சூடாக இரண்டு சொட்டு நீர் என் மேல் விழ தலையைத் தூக்கினேன் அவர்களுடைய கண்ணிலும் நீர் வடிந்ததுகொண்டிருந்தது, என்னை நெஞ்சோடு அனைத்துக்கொண்டார்கள். கண்ணீர் ஆறாகப் பெருகியது. ”அவள் விதி அவ்வளவுதான்” உம்மா ஆறுதல் சொன்னார்கள்.

அன்றே மௌத்தாயிருந்தால் இதெல்லாம் வந்திருக்காதே என்று குளத்திலிருந்து நினைவுகள் தொடங்கி சேட்டை, சில்மிஷம், வேடிக்கை, பரிசு என எல்லா பக்கமும் சுற்றிக்கொண்டே இருந்தது. எங்கள் வீட்டில் இருந்தவரை அவள்தான் எல்லாம். நாலரைக்கே எழுந்து அடுப்பை பத்த வச்சுடுவாள், அஞ்சு மணிக்கு என்னை எழுப்பிடுவாள், கொஞ்சம் லேட்டானால் என் மூக்கைப் பிடிச்சுக் கிள்ளி எழுந்திருக்க வைப்பாள்; அவள் தொழாவிட்டாலும் நான் தொழுதாகனும். சுபுஹு தொழுதுட்டு வரும்போது டீ ரெடியா இருக்கும், ஆனால் முதலில் வாப்பாவுக்கு, அப்புறம் உம்மாவுக்கு, அதை உம்மா தொழுகிற இடத்திலேயே வச்சுடுவாள்; கடைசியா எனக்கு, அதுலெ கடைசி இரண்டு மொடக்கு அவளுக்கு கொடுத்தாகனும் இல்லாவிட்டால் மறு நாள் டீயில் உப்பைப் போட்டு குடிக்க வச்சுடுவாள்.

ஆம் அப்படிதான் நடந்தது, ஒரு நாள் ஒரு சொட்டுகூட வைக்காமல் சுத்தமா குடிச்சிட்டு கிளாஸை  கொடுத்தேன். ஒன்னும் சொல்லலை, மறு நாள் டீயிலெ உப்பைப் போட்டு கொடுத்துட்டாள், பழி வாங்குறாள்னு தெரிஞ்சே ரெண்டு மொடக்கு குடிச்சிருப்பேன், பிடுங்கி தானும் குடிச்சிட்டாள். ஏண்டி இந்த மாதிரி செய்றேன்னு கேட்டதுக்கு,  ”நேத்து நீ எனக்கு டீ கொடுக்கலைல அதுக்குதான் இது,  உப்பு டீ கொடுத்து ஏமாத்துனதுக்கு எனக்கு தண்டனை” அப்டீன்னாள். மதியமும் ராத்திரியும் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்துதான் சோறு உண்போம். அவள்தான் சோறு ஆக்குவதிலிருந்து பறிமாறுவது வரை. உம்மாவை வேலை செய்ய விடமாட்டாள். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்வாள். மதியம் நான் அசந்துகூட தூங்க முடியாது. பக்கத்தில் வந்து சீண்டுவாள், ஜாஸ்தி மூக்கைப் பிடிச்சுத் திருகுவாள், கிள்ளுவாள். அவளுக்கு பயந்தே பள்ளிவாசல் மகிழ மரத்தடியில் தூங்குவேன். எவ்வளவுதான் சேட்டை செய்தாலும் படிக்கும்போது மட்டும் ஒரு தொல்லையும் கொடுக்கமாட்டள்.

ஒரு நாள், ”வாறியா நாம ரெண்டுபேரும் ஒன்னா நீச்சலடிக்கலாம், குளத்துலெ தண்ணி நெறைய இருக்கு” என்றாள்,

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. “மூதேவி ஒனக்கு பைத்தியமா புடிச்சிருக்கு, வயசுக்குத் தகுந்த பேச்சு பேசு.”

“ஏன் யாரும் பாத்துடப் போறகன்னு பயப்படுறியா? பாத்தாதான் என்ன? என்னைப் பத்தி கேவலமா பேசுவாக, சொல்லிட்டுப் போவட்டுமே!”

“அறிவு கெட்டத்தனமா பேசாதே, ஒனக்கு வெக்கமா இல்லெ? போடி அந்தாண்டெ” என்றேன் கடுப்புடன்.

“கோவிச்சுக்காதேப்பா சும்மா ஒன்னை சீண்டுறதுக்காக சொன்னேன், மூக்குமேலே கோவத்தைப் பாரு, எனக்குத் தெரியாது?” என்று சொல்லிவிட்டு கல கலவென சிரிச்சிக்கிட்டே “பொன்னாச்சி, உங்க புள்ளையிட கோவத்தை பாருங்க” என்றாள் உம்மாவைப் பார்த்து.

பக்கத்திலிருந்த உம்மா, “ஏண்டி எந்த பேச்சு பேசுறதுன்னு தெரியாது ஒனக்கு, எனக்கு தெரியும் உன்னை பத்தி, வேறேயாராவது கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்டாக, இந்த மாதிரியெல்லாம் எக்குதப்பா பேசாதெ” என்று கண்டிச்சாக.

தன் துன்பத்தை எல்லாம் மறந்து இப்படியெல்லாம் வேடிக்கை விளையாட்டு காண்பித்துக்கொண்டிருந்தவள்…..? என்னால் ஜீரணிக்க முடியவில்லை; யாரிடம் சொல்லி அழுவது? அப்படி ஒருத்தி கிடைப்பளா? வரம்பு மீறாமல் விளையாட்டுக் காட்டியவளை எங்கே போய் தேடுவேன்? தேடினால்தான் கிடைப்பாளா? குடும்பத்தில் ஓர் அங்கமாய் இருந்த அந்த உன்னத ஜீவனை இழந்த தவிப்பு இன்னும் நீங்கவில்லை.

மாண்டது, இல்லை மாய்த்துகொண்டது, கொடுமைப் படுத்தியதின் விளைவு என பின்தெரிந்து என்ன பயன்? மீளவாப் போகிறாள்? என் நெஞ்சின் ஓர் மூலையில் ஒளிந்திருக்கும் அவளை மறக்க …..? ஏன் இந்த பாசம்? ஏன் இந்த பிணைப்பு? அவள் யார்? நான் யார்? என்ன உறவு? மறக்காத நெஞ்சில் இழக்காத நினைவு ஏன்? ஒன்றும் விளங்கவில்லை.

அட! இன்னும் சொல்லலையே பரிசு என்னாண்டு, மறந்தே போயிட்டேன் சாரி. மன்னிக்கனும் சொல்லக்கூடாது, அவளுக்குக் கொடுத்த சத்தியம், அதை மீற மாட்டேன். தயவு செஞ்சு கேட்காதீங்க, ப்ளீ…………..ஸ்.

***

நன்றி: ஹமீது ஜாஃபர் | manjaijaffer@gmail.com

7 பின்னூட்டங்கள்

 1. 06/02/2011 இல் 16:44

  என்ன நானா இது, இதுவரை உங்களுக்குள்ளே வைத்திருந்த சோகத்தை இப்ப எங்களுக்கும் கடத்தி விட்டீர்களே. படித்து விட்டுச் சிறிது நேரம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. 😦

 2. A ABDUL RAHIM said,

  07/02/2011 இல் 09:43

  ARUMAI,

 3. 07/02/2011 இல் 12:50

  உண்மையிலேயே மனதை நெகிழ வைத்து விட்டது நானா. பரிசு எதுவாயிருந்தாலும் உங்க மனசுக்குள்ளேயே இருப்பது தான் கதைக்கு மிக அழகு சேர்க்கிறது!! ஆரம்பித்த விதமும், முடித்த விதமும் அருமை!!

 4. 07/02/2011 இல் 15:45

  ரொம்ப நெகிழ்ச்சியான நடை. திரும்பவும் வாங்கிக்கொள்ளாத அந்தப் பரிசு பத்திரம்! அது என்னவென்று வெளியிடாத தங்கள் குணம் அதன் மதிப்பை பல மடங்கு உயர்த்தி விட்டது.

 5. 07/02/2011 இல் 17:09

  எல்லோருக்கும் நன்றி. இதற்குமேல் சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

 6. 08/02/2011 இல் 11:43

  இயல்பான நடை. எனக்கு தி.ஜா-வின் சிறுகதையொன்றை வாசித்ததைப் போலிருந்தது.
  நெறைய எழுதுங்க நானா.

 7. தாஜ் said,

  13/02/2011 இல் 18:17

  அன்புடன்
  ஜஹஃபர் நாநா.

  ‘இரவில் கிடைத்த பரிசு’
  சமீபத்தில்தான் படித்தேன்.
  நீங்கள் காட்டியிருக்கும் காட்சிகளோடு
  லாயித்துப் போனேன்.

  கதையினூடே…
  உங்களது வித்தைகள்
  அழகு!
  குறிப்பாக
  கதையின் முடிவு!
  சத்தியம் செய்து தந்ததை
  சொல்லாமல் விட்டிருக்கும் விதம்
  வித்தியாசமானது மட்டுமல்ல
  புதுமையானது.

  வாழ்த்துக்கள்
  -தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s