நாடகமே உலகம் : காட்சி 6 – தாஜ்

திரை விலகும் முன்:

‘நாடகமே உலகம்’ நான் எழுதிப் பார்த்த இரண்டாவது நாடக முயற்சி! அப்போ… முதல் நாடக முயற்சி? அதுவொரு வேடிக்கையான கதை. மேடை நாடகம் என சரியாக எழுதத் தெரியாத காலத்தில் நாடகம் எழுதிய கூத்து அது!

10-வது படித்த போது N.C.C.-கேம்ப் என்று, பத்து நாளைக்கு வெளியூர் ஒன்றுக்கு அழைத்துப் போனார்கள். வெளியூர் என்றால், கஷ்மீரோ, கல்கத்தாவோ இல்லை. நம்ம கும்பகோணம் பக்கம். திருவிடை மருதூர்! சீர்காழி – வைத்தீஸ்வரன் கோவில் – மாயூரம் – குத்தாலம் – ஆடுதுறை – திருபுவனம் தாண்டி கும்பகோணம் நெருக்கத்தில், மெயின் ரோட்டையொட்டி இப்படியும் அப்படியும் பத்து பத்து வீடுகள். அதுதான் திருவிடை மருதூர்! ஊர் பகுதியில் இருந்து இன்னும் அரை மைல் தள்ளிப் போனால் அதே ரோட்டிற்கும் மேற்கே ஒரு காடு விரிந்து கிடக்கும். அங்கேதான் கேம்ப்! என் சக ‘ரியல் எஸ்டேட்’ காரர்களின் கைவண்ணத்தால் மதிப்பிட முடியாத டவுனாகிக் கிடக்கிறது அந்த இடம்!

இதை வாசிக்கும் திருவிடை மருதூர் வாசிகளில் யாரேனும், அந்த கேம்ப் இருந்த இடத்தை, ‘காடு என்று சொல்வது தகாது’ என்று சிணுங்குவார்களேயானால், பெரிய இலுப்பைத் தோப்பு என்று திருத்திக் கொள்கிறேன். கேம்பின் முன்இரவு நேரத்தில் கட்டாயம் ‘எண்டர்டைன்மெண்ட்’ உண்டு. பையன்கள் பையன்களுக்காக அரங்கேற்றி மகிழும் கொண்டாட்டம் அது! கச்சேரி, நடனம், நாடகம் என்று இரவு பத்து மணிவரை ‘தூள்’ படும். அருகாமையிலேயே, எங்களைச் சுற்றி ஏகத்திற்கு கவிழ்ந்திருக்கும் காட்டிருட்டு எங்களது சப்தத்தை ‘ஹோ…’ வென எதிரொலித்துக் கொண்டே இருக்கும்! நான் கண்டுகளித்துக் கொண்டிருந்த அந்த ‘எண்டர்டைன்மெண்ட்’ நிகழ்ச்சிகளைவிட எதிரொலித்துக் கொண்டேயிருந்த அந்த மாயக் கூச்சல் எனக்கு விசேசமானது. இந்த கூத்தில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வெல்ல பள்ளிகளுக்குள் போட்டி வேறு!

ஒரு நாள் கூத்துக்கு, என் நண்பர்கள் என்னை ஓர் ஓரங்க நாடகம் எழுதச் சொன்னார்கள். எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொண்டேன். எத்தனை தைரியசாலி நான்! இன்று நினைத்துப் பார்த்தாலும் சிலிர்க்கிறது. நண்பர்கள் என்னை நாடகம் எழுத எங்கணம் தேர்வு செய்தார்கள்? இன்றைக்குவரைக்கும் தெரியாது.  

பகல் சாப்பிட்டுவிட்டு, அந்தச் சாப்பிட ஆன நேரத்திற்கும் குறைவான நேரத்தில், அந்த ஓரங்க நாடகத்தை எழுதி முடித்தேன். அடுத்த சில மணிகளில் குறிப்பிட்ட மாதிரியே அது அரங்கேற்றமும் ஆனது! அரங்கேற்றம் ஆகி என்ன செய்ய? N.C.C.யை சேர்ந்த ஆபிஸர்கள் அந்த நாடகத்தை பாதியிலேயே தடை செய்விட்டார்கள். கேம்ப்-ஐ நிர்வாகிக்கும் அதிகாரிகள் எல்லோரும் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிலும் பெரும்பாலோர் வட இந்தியாவைச் சேர்ந்த இந்திக்காரர்கள். எனது ஓரங்க நாடகமோ ‘இந்தி எதிர்ப்பு’ நாடகம் என்கிற கோதாவில் இந்தி மொழியை கிண்டல் செய்வது. தெரிந்தே செய்த அந்தத் திமிரை பாதியில் நிறுத்தாமல் என்ன செய்வார்களாம்? என்னைத் தூக்கிப் போய் உதைக்காமல் விட்டதற்கு நன்றி சொல்லனும் நான்.

அந்த நாடகத்தில் கதாநாயனாக வேஷம் கட்டியவனின் பெயர் ‘யாக்கூப்’. அவனை, அவனது பட்டப் பெயரோடு குறிப்பிடணுமென்றால், ‘இசைக் குயில்’ யாக்கூப் என்று குறிப்பிட வேண்டும். இசை அவன் குரலில் குடியிருந்ததென்பதும் நிஜம்! ஊர் சீர்காழி, எங்க ‘முஹல்லா’வும் கூட! தவிர, நண்பன் அவன்! இசையில் மட்டுமல்ல சகவித இசைக் கருவிகளை வாசிப்பதிலும் கெட்டிக்காரன். படிப்பு ஒன்றைத் தவிர, ஆட்டம் ஓட்டம் நாடகம் என்று இன்னும் பலவற்றிலும்கூட கொடி நாட்டியவன். அவனுக்காக நான் எழுதிய பக்கம் பக்கமான வசனத்தை சொடுக்குப் போடும் நேரத்தில் மனனப்படுத்திக் கொண்டு மேடையேறினான் என்றால் பாருங்கள்! வியக்கத் தகுந்த கலைஞனாக தமிழுலகம் அறிய வெளிப்பட்டிருக்க வேண்டியவன், இன்றைக்கு ஊர் அறிய பைத்தியமாக திரிகிறான்! அவன் அளவுக்கு நான் கலைஞன் இல்லையாகையால், வெறுமனே இன்னும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  

இந்த ‘நாடகமே உலகம்’ நவீன நாடகம் சார்ந்த கோணத்தில் முயன்ற ஒன்று. இங்கே உங்கள் முன் வைத்திருக்கும் பகுதி, நாடகத்தின் ஆறாவது காட்சி மட்டுமே. யதார்த்தம் சார்ந்ததும், கொஞ்சம் தெளிவானதுமான பகுதி இது!

நாடகத்தின் கதை, ‘பெண் சுதந்திரம்’ சம்பந்தப்பட்டது. அது நம் கலாச்சாரத் தளத்தில் மோதி நிகழ்த்தும் எதிர்வினைகளை பரிசீலிப்பது. ‘பெண் சுதந்திரம்’ என்கிற சிந்தனை நம் பெண்களிடம் பரவலாக எதிரொலிக்கத் துவங்கி சுமார் நூறு வருடங்கள் ஆகிறது. நம் நாட்டை ஆண்ட வெள்ளையர்களது குடும்ப மாதுகளின் வழியாக ‘சட்டைக்காரிகள்’ எனப்படும் ‘ஆங்கிலோ இந்தியன்’ஸ் பெண்களிடம் அந்தச் சிந்தனைகள் ஆதிக்கம் கொண்டது. தொடர்ந்து நம் இந்திய ராஜ வம்சத்து பெண்களிடமும், மிட்டா மிராசு, பண்ணை, ஜமீன் வீட்டுப் பெண்களிடமும், கல்லூரிப் படிப்பு படித்த உயர் ஜாதி பெண்களிடமும் அது பற்றிக் கொள்ள, மீடியாக்களும் தங்களதுப் பங்கிற்கு இசைவான கருத்துக்களை வெளிப்படுத்தத் தொடங்கியது. அதன் வீச்சாய் இந்தியாவில் உள்ள அனைத்து இன மதம் சார்ந்த படித்த பெண்கள் அத்தனைப் பேர்களிடமும் இந்த பெண் சுதந்திரக் கோரிக்கை மேலோங்கி தழைத்தது.

தமிழகத்தில் மஹாகவி பாரதிதான் முதன் முதலில் பெண்களுக்கான சுதந்திரம் குறித்து அணுசரனையோடு கவிதைகளில் வாதாடி பிள்ளையார் சுழி போட்டார். அடுத்து, தந்தை பெரியார் பெரிய அளவில் விசாலமான பெண் சுதந்திரத்தை மேடைகளில் பகிரங்கமாகப் பிரச்சாரமே செய்தார். அதையொட்டி அவர் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற புத்தகம், சமூகத்தில் சர்சைகள் பல எழுப்பிய ஒன்று!

நம் அரசியல்வாதிகள் பெண் சுதந்திரத்தை ஓட்டுக்கான மேடைப் பேச்சாக, 33 சதவீதமென கூறியபடி இன்னும் திரிந்துகொண்டு இருக்கிறார்கள். பெண் சுதந்திரக் கோரிக்கையினை ஒரு சாட்டையாக கையில் எடுத்துக் கொண்ட நம் பெண் கவிஞர்கள், தொடர்ந்து அலுக்காமல் ஆண்களின் மீது சுரீர் சுரீரென உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாக்கள், இந்தக் கருத்தை ஒட்டியும் வெட்டியும் காட்சிகளாக்கி, காசு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். பத்திரிகைக்காரர்களில், குறிப்பாய் ‘துக்ளக் சோ’ பெண் சுதந்திரக் கோரிக்கையினை என்றைக்கும் துச்சமென கேலிச் செய்ய, நம் மதவாதிகள் எல்லோருமே மஹா ஒற்றுமையாக பழமையை விட்டுக் கொடுப்பதற்கில்லை என்கிற வைராக்கியத்தோடு எதிர்க்கிறார்கள்! பெண்களுக்கு மதம் அனுமதிக்கும் சுதந்திரமே போதுமானது என்பது அவர்களது கட்சி!

இந்திய மண்ணில், பெண்சுதந்திரம் பரவலாக துளிர்விட்ட அந்த முதல் காலக்கட்டத்தில் இந்த நாடகம் தொடங்குகிறது. படித்த பெண்கள் முன்வைக்கும் அல்லது வலுவில் எடுத்துக் கொள்ளும் தாங்களுக்கான சுதந்திர நடவடிக்கைகளை, பழமையில் இருந்து வந்த ஆண்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளவில்லை. தவிர, அந்தப் புதுமைப் பெண்கள் ஆண்களின் பிடிபடாத அனேக கேள்விகளுக்கு ஆளாகினார்கள். இதன் ஊடே அன்றைய, இன்றைய நம் சமூகத்தின் மன நிலைப்பாடுகளை ஒருசேர இந்த நாடகம் பேசுகிறது.

போதும்.

*

பின் குறிப்பு:
வாசகர்களின் மேலான
அபிப்ராயம் வேண்டி      
இந்த நாடகப் பகுதியை
உங்களது பார்வைக்கு வைக்கிறேன்.
மேலே கூறியுள்ள
கருத்தாக்கங்கள் எதுவும்
இந்த ஆறாவது காட்சியில் இருக்க வாய்ப்பில்லை.
நாடகம் நகரும் பெரிய தளம் மட்டுமே இது.

நன்றி…..
தாஜ்

***

நாடகமே உலகம் : காட்சி – 6

 
அடுத்த காட்சி தொடங்கும் முன்னே, மனதை கொள்ளைக் கொள்ளும் சதிராட்டத்தின் நேர்த்தியான இசை பிரமாதப்பட்டது. ஒளிவெள்ளம் மேடையை ஆக்கிரமிக்க, பின்புல திரைச்சீலை ஓர் ஆடம்பர பங்களாவை உணர்த்தியது. அங்கே, ஆண் பணியாளர்களும் பெண் பணியாளர்களும் பணி நிமிர்த்தமாய் குறுக்கும் நெடுக்கும் போய் வந்தபடி இருந்தார்கள். கெட்டியான கதர் வேஷ்டி, ஜிப்பா, காந்திக் குல்லாய் சகிதமாக ஆஜானபாகுவான நடுத்தர வயதுக்காரர் ஒருவர் அந்த பங்களாவிற்குள் வந்தார்.

ஐம்பதைத் தாண்டிய பணிப்பெண் ஒருத்தி அவசர அவசரமாக வந்து, அவரை இருக்கையில்  அமரச் சொன்னாள்.  “என்னை ஞாபகம் இருக்கா?” என்றும்  கேட்டாள். “எப்படி ஞாபகம்  இல்லாமல் போகும்? நீங்கள்… கனகாபாய்தானே..?” இரண்டு கைகளாலும் வாயைப் பொத்தியபடி, கண்கள் சிரிக்க “ஆம்!” என்றவள், “இப்பொழுது எப்படி இருக்கின்றீர்கள்?”  என்றாள். “எல்லாம் வல்ல ஆண்டவனின் நாட்டப்படி நலமாகவே இருக்கிறேன்… எங்கே சுகுணா? நான் வருவது குறித்து தகவல் அனுப்பி வைத்திருந்தேனே கிடைத்ததா?” “கிடைக்காமல் என்ன! காலையில் இருந்து உங்கள் வருகைக்காகத்தானே சுகுணா தயாராகி கொண்டிருக்கிறாள்! தலையலங்காரம் இன்னும் முடியவில்லை. இப்பொழுது வந்து விடுவாள்! சுகுணா இப்படி மகிழ்ச்சி பொங்க அலங்கரித்து கொள்ளவதைப் பார்த்தும்தான் எத்தனை காலமாகிறது!”

“சுகுணாவுக்கு அம்மா இல்லாத குறையை நீங்கள் போக்கிவிட்டீர்கள்! நல்லது, அந்தப் பெண்ணை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவள் ஒரு பொக்கிஷம்!”

“அப்படியே ஆகட்டும்” என்றபடிக்கு, சுகுணாவை அழைத்து வருவதாக பணிவுடன் கூறியவளாய் கனகாபாய் உள்ளே சென்றாள்.

வந்தவர் அந்த பங்களாவை சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். கிளிமொழியில் யாரோ தன்பெயர் கூறி அழைக்கும் சப்தம் வர, தென் மூலையைப் பார்த்தார். அங்கே ஓர் கிளிக் கூண்டு தொங்கியது. அதன் அருகில் போனார். கூண்டின் உள்ளிருந்த கிளி, “கான்… கான்… கான்” என்றது! சிரித்துக் கொண்டே “அழகியே… நலமா?” என்றபடி திரும்பியபோது  அரக்கு கலர் ஆடை தரித்து, அலங்காரத்தேராய் சுகுணா வந்து கொண்டிருந்தாள். கிளி திரும்பத் திரும்ப “கான்.. கான்..” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்ததை கவனித்தவளாக முகமலரச் சிரித்தாள். வெண்மையான பற்களின் இடைவெளியில் அவளது சிரிப்பு முத்தெனத் தெறித்தது.

“சர்க்கார் சையத் அலி முகம்மது கான்… ஸாப்.. வரணும்.. வரணும்! இத்தனைக் காலத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் என் ஞாபகம் வந்ததா?”

“மறக்கவே முடியாத இடத்தில் உன் ஞாபகம் செதுக்கப்பட்டிருக்கிறது சுகுணா! அது அழியாது! சந்திக்க அனுமதி தந்ததற்கு சந்தோசம். இன்னும் என்னை நீ… நினைவில் வைத்திருப்பதற்கு கூடுதல் சந்தோஷம்!”

“விரும்பி.. காதலித்து.. உச்சிமுகர்ந்த மன்மதன் நீ!  என் படுக்கையைப் பகிர நான்… அனுமதித்த முதல் ஆண் மகன் நீ! மஞ்சத்தில், வேர்க்க வேர்க்க என்னுள்ளே முத்துக் குளித்தவன் நீ! இன்றுவரை எவனிடமும் பெறாத இன்பத்தை  தாராளமாக தந்தவன் நீ! அழகி என பெயரிட்டு, பழம் தந்து, நீ பழக்கிய பிரியத்திற்காக இத்தனைக் காலத்திற்குப்  பிறகும்  உன்னை என் வீட்டுக் கிளி மறக்காமல் நினைவு கொள்கிறபோது, நாளும் உன்னை அள்ளிப் பருகிய நான் எப்படி…. மறப்பேன்?”

“நன்றி…! என்னைக் குறித்த உன் நினைவுகள் மகிழ்ச்சியைத் தருகின்றன!  நீ, வானத்திலிருக்கும் அந்த நிலவைவிட அழகானவள்! உலக அழகிகளைப் பற்றி கவிஞர்கள் வர்ணித்த கவிதைகளை எல்லாம் படித்திருக்கிறேன். அவைகளில் காணும் அத்தனை வர்ணனைகளும் உன் கால்பாதத்தை சொல்லக் காணாது!! தாய் நாட்டிற்காக, அதன் விடுதலைக்காக உன்னிடமிருந்து அன்னியமாகிப் போனேன்! என்னை புரிந்துகொள் சுகுணா!”

“இத்தனைக்கு என் மீது வாஞ்சைக் கொண்ட நீயா… என்னைப் பிரிந்தாய்! ‘நாடு’ ‘விடுதலை’ ‘சுதந்திரம்’ என்று கொள்கை பேசி, உன்னை நீ ஏமாற்றிக் கொண்டிருக்கிறாயே.. கான்!”   

“நான் இப்படி இருப்பது இறைவனின் சித்தமாக இருக்கலாம்!”

“உன் முரண்களுக்கு இறைவனை ஏன் துணைக்கு அழைக்கிறாய்?”

“தேச விடுதலையூடான நம் மக்களின் சுதந்திர வாழ்வின் தேவைகள் பற்றியெல்லாம் இன்னும் உனக்கு தெளிவில்லை என்று நினைக்கிறேன் சுகுணா!”

“தேச விடுதலை… ம்..! அந்தக் கிறுக்குத்தனத்தினால்தானே என்னை விட்டுப்பிரிந்தாய்! வேசிமகள் வேசிதானே என்று எளிதாக நினைத்து கிளம்பி விட்டாய்..! எனக்கும் ஓர் இதயம் உண்டென்பதை நீ யோசிக்கவே இல்லை!  என்னை பரிதவிக்க விட்டும், முழு வேசியாக்கிப் போனதற்கும் காரணம் சொல்லுகிறாய்! எத்தனைப் பெரிய சமஸ்தான பிரதிநிதி நீ…! திப்பு  வம்சத்தின் ஆகிருதி…!!  இப்படி கசங்கிய கதர் அணிந்து  அலைகிறாயே! சிறைக்கெல்லாம் போனாயாமே! அழுது அழுது என் கண்கள் சிவந்து விட்டது.  உனக்கு சிறையெல்லாம்  எதற்கு…! என் மஞ்சம் போதாதா…?  காந்திபைத்தியம் நாட்டில்  ஏகப்பட்டோருக்கு தலைவிரித்தாடுகிறது. சிறைச்சாலைக்கு வந்து  உன்னை பார்க்கலாம் என்றிருந்தேன். அங்கே நீ  ராட்டையில் நூலெல்லாம் நூற்றுக் கொண்டிருப்பதைக் காண சகிக்க முடியாதே! தவிர்த்து விட்டேன் கான்.”

“எத்தனைச் சிறைச்சாலைகள் இன்னும் எனக்காக காத்திருக்கிறதோ தெரியவில்லை!?”

“நீ தேர்ந்தெடுத்த வழி அப்படி….! சரி… பருக உனக்கு இஸ்டமான மாதுளை ரசம் கொண்டு வரட்டுமா? உனக்குப் பிடிக்குமே என்று ‘குல்கந்தில் தோய்த்த குலோப்ஜான்!’ நானே செய்தது. எடுத்து வருகிறேன்….”

“சுகுணா… இதோ பார்.. எனக்கு இஸ்டமானவற்றையும், இனிப்புப் பதார்த்தங்களையும் விலக்கி வெகுநாட்கள் ஆகிறது. நாடு விடுதலை அடையட்டும் பார்க்கலாம்! உன் அன்பிற்கு நன்றி! நீர்மோர் கொண்டுவா போதும்.”

“உன் கொள்கையால், நீ என்னை வதைக்கிறாய்.” எழுந்து போய் நீர்மோர் கொண்டு வந்தாள்.  

“மேலநல்லூர் ஜமீன் சம்மந்தப்பட்ட இரட்டைக்கொலை வழக்கில் உன் பெயரையும் ஆங்கில தினசரியில் வாசித்தேனே…!”

“அந்த ஜமீனுக்கு உரிமையாளர்கள் இருவர்! பங்காளிகள்! அந்த இருவருக்கும் நான் வேண்டும்! தலைக்கு மூன்று கிராமங்களை இருவருமே எனக்கு எழுதி வைத்தார்கள்!  போதாதென்று தங்கமும் வைரமும் கொண்டு வந்து கொட்டினார்கள்! தங்களது மனைவிகளிடமிருந்து தடையற்ற சௌகரியம் வேண்டி, ஒரு ஜமீன் தன் மனைவிக்கு களங்கம் கற்பித்து  சிறைக்கு  அனுப்பி வைத்தான், இன்னொரு ஜமீன், பைத்தியக்காரப் பட்டம்கட்டி மனைவியை ஏர்வாடிக்கு கொண்டு சென்று கட்டிப் போட்டு விட்டான்!”

“அப்படியா…?”

“கேளுங்களேன்… நான் யாருக்கு என்பதில் பங்காளிகளுக்கு இடையே யுத்தமே தொடங்கிவிட்டதாம்! அந்த யுத்தத்தில் ஒருவனையொருவன் குத்திக்கொண்டு செத்திருக்கிறார்கள்! அப்படி நடக்கவில்லை என்றாலும் நானே அவன்களை கொன்றிருப்பேன்! லங்கோடே இல்லாமல் சதா.. நட்டுகிட்டு அலைகிற ஜென்மங்கள்! அந்த வழக்கில் என் பெயரும் பத்திரிகைகளில் அடி படுவதாக நானும்கூட கேள்விப்பட்டேன்! அது போகட்டும், நீங்கள் எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்பதை கேட்காமல், உங்களை சொல்லவும் விடாமல், நானே பேசிக்கொண்டிருகிறேன். நிச்சயம் என்னைத்தேடி வந்திருக்க மாட்டீர்கள்…, சொல்லுங்கள்!”

(தொடரும்)

***

நன்றி: கநாசு. தாஜ்  | satajdeen@gmail.com

3 பின்னூட்டங்கள்

 1. 19/01/2011 இல் 22:27

  பிரபஞ்சனின் சாடையில் இருந்தாலும் சாண்டில்யனின் பாதிப்பு உங்கள் உரையாடல்களில் தெரிகின்றது.சாண்டில்யனின் சரித்திர காலத்து மஞ்சள் அழகி உங்கள் சமூக நாவல் சுகுனாவாக மாறியிருக்கின்றார். சரஸமாக எழுதி சில இடங்களில் சாண்டில்யனை மீற நினைதிருக்கின்றீர்கள்.

  “காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்” என எழுதினார் வாலி. அழகான உங்கள் எழுத்துக்காக இடையில் தொடும் ஆபாசத்தையும் மன்னிக்கலாம். ஆனால் பாத்திரத்தின் தன்மைக்கேற்ற வகையில் எழுதியிருக்கின்றீர்கள்.

  • தாஜ் said,

   20/01/2011 இல் 15:26

   அன்பு நூருல் அமீன்…

   உங்களது அபிப்ராயத்திற்கு நன்றி.
   சாண்டில்யனின் புத்தகப் பெருக்கை
   கண்டு மலைத்ததோடுசரி.
   வாசித்ததில்லை.

   காட்சி முடியும் போதான உங்களது நிறைவான
   கருத்தை எதிர்ப்பார்க்கிறேன்.
   நன்றி.
   நலம்தானே.
   -தாஜ்

 2. 22/01/2011 இல் 10:34

  //“தேச விடுதலை… ம்..! அந்தக் கிறுக்குத்தனத்தினால்தானே என்னை விட்டுப்பிரிந்தாய்! வேசிமகள் வேசிதானே என்று எளிதாக நினைத்து கிளம்பி விட்டாய்..! எனக்கும் ஓர் இதயம் உண்டென்பதை நீ யோசிக்கவே இல்லை! என்னை பரிதவிக்க விட்டும், முழு வேசியாக்கிப் போனதற்கும் காரணம் சொல்லுகிறாய்!//

  ஒரு தேசத்தின் விடுதலை முழுமைபெறுவது பெண் சுதந்திரம் முழுமைபேறும்போதுதான்.

  தான் “ஒரு வேசி மகள் வேசி”யாக இருந்தாலும், தன்னை ‘முழுவேசி’யாக்கியது ‘கான்ஸாப்’ தான் என்று சுகுணா குற்றம்சாட்டினாலும் சுகுணா, அவர் மீது இன்னும் காதலாய் இருக்கிறாள். நிராசையையும் இயலாமையையும் வெளிப்படுத்தும் அருமையான பாத்திரப்ப்டைப்பு.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s