தமிழகத்தின் முதல் முஸ்லிம் மன்னர் : மறைக்கப்பட்ட வரலாறு

அந்த மன்னர் ஆட்சி செய்த பகுதி , இப்போதைய ‘வை.கோ’வின் ஏரியா. உலக சரித்திரமெல்லாம் ‘எடுத்துவிடும்’ அந்த ஆள் தன் மண்ணில் வாழ்ந்த முஸ்லிம் மன்னரைப் பற்றி ஏன் எதுவுமே பேசுவதில்லை – மற்ற ‘ஆய்வாளர்கள்’ போல? என்ற என் கேள்வியையும் முன் வையுங்கள்’ என்று சொல்லியே இந்தக் கட்டுரையை அனுப்பி வைத்தார் நண்பர் தாஜ்.  அவர் ஏன் பேசவில்லையென்று ‘அம்மா’விடமா கேட்க இயலும்? ஆய்வார்களையும் நான் அறியேன் தாஜ். அந்த வலியுல்லாஹ்வின் ‘இறைப்பணி’ மட்டும்தான் தெரியும் . ‘ஓய்,  முஸ்லிம் எழுத்தாளரே.. உமக்குத்தான்!’ என்று நீங்கள் அனுப்பியிருக்கும் செய்தி எனக்கும் புதிதுதான். படிச்சாத்தானே?!

*

தாஜ் குறிப்புகள் :

ஆபிதீன் பக்கத்திற்கு
நான் அனுப்பித் தரும் தகவல் கட்டுரைகளின்
முக்கியத்துவம் குறித்து நான் யோசித்ததில்லை.
ஆனால், இப்போது அனுப்பும்
இந்தக் கட்டுரையை
முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.

‘குர்ஆனின் குரல்’ என்கிற
இஸ்லாமிய மாத இதழில் (ஆகஸ்ட் 1997) வெளிவந்த கட்டுரையிது.
இக்கட்டுரையை… ஓர் தேவை கருதி
இத்தனைக் காலமும்
பத்திரப்படுத்தி பாதுகாத்து வந்தேன்.

*

கி.ரா.வால் எழுதப்பட்ட
‘கோபல்ல கிராமம்’
நான் விரும்பி வாசித்த நாவல்களில் ஒன்று.
இலக்கியப் படைப்புகளை தேடிப் பிடித்துப் படிக்கும் ஆவலை
அந்த நாவல் வாசிப்புதான் தொடங்கி வைத்தது.

தெலுங்கானாவை ஆட்சி புரிந்த
நவாபுகளுக்கு அஞ்சி
அந்த மண்ணில் இருந்து
நாயுடுகளும், நாயக்கர்களும் இடம் பெயர்ந்து
விந்திய மலைக்கு தெற்கே
விவசாய மண் கண்ட இடங்களில்
குடியமர்கிறார்கள்.

அப்படி அவர்கள் குடியமர்ந்த ஊர்களில் ஒன்று
கோபல்ல கிராமம்!
அந்த ஸ்தலத்தில் அவர்கள் விஸ்தீரணம் கொள்ளும்
காலக்கட்டத்தை, அதையெட்டிய நிகழ்வுகளை
அந்த மக்களின் வாழ்க்கை முறைகளை
சுவைக்கச் சுவைக்க விவரிப்பார் கி.ரா!
‘கோபல்ல கிராமம்’ இன்னும் கண்களில்.
 
*

தமிழகத்தில் இஸ்லாம்….
எவர் முயற்சியில் வித்திடப்பட்டது?
முதன் முதலில் எங்கே… எப்படி… துளிர் விட்டது?
எங்கனம் அது தழைக்கத் துவங்கியது?
அதனூடான செய்திகள் என்ன? என்பவெல்லாம் குறித்து
கோபல்ல கிராமம் மாதிரி
சரித்திரம் கலந்த நாவல் ஒன்றை எழுதணும் என்று
ரொம்ப காலமாகவே ஆசையொன்று
என்னுள் இருந்து வந்தது.

எனக்கு கிடைத்த
இந்தக் ‘குர் ஆனின் குரல்’ கட்டுரை
பெரிய உதவிகரமாக இருக்கும்
என்கிற எண்ணத்தில்
இதனை பத்திரப்படுத்தி வந்தேன்.

*

இன்றைக்கு…
கண்கொண்டு காண்கிற காலத்திலேயே
இஸ்லாமியர்கள்
பத்தாய், நூறாய் குழுக்குழுவாகப் பிரிந்து
பதவிக்காகவும், பணத்திற்காகவும், புகழுக்காகவும்
சிதைந்து கொண்டிருப்பதைக் காண்கிறபோது
இவர்களின் முன்னோடிகள் குறித்து
பெரிய தேடல்களும் சிரமமும் கொண்டு எழுதணுமா…?
என்றோர் எண்ணம்.
அவ்வளவுதான்,
என் ஆசை விழுந்துவிட்டது.

அதற்கு பெரிதாக நான் முயற்சிக்கவில்லை
என்பதை யோசிக்கிற போது
இப்படியான, கனமான, மதம் சார்ந்த முயற்சிக்கு
நான் போதாதென்று
என் சிந்தை எனக்கு
ரகசியமாக உணர்த்தியிருக்க வேண்டும்.
என்னை தடுத்திருக்கவும் வேண்டும்.

என்றாலும்…
இந்தக் கட்டுரையின் சம்பவ அடுக்குகளை
மனதில் கொண்டு
‘ஆண்டவன் காடு’ என்றதோர்
குறு நாவலை எழுதினேன்.
நன்றாக வளர்ந்த அது…
பாதியில் நிற்கிறது.

*

நவீன இலக்கியத்தின் எல்லா திறப்புகளையும்
தீர்க்கமற திறந்து காட்டி – என்னை
உடன் அழைத்துச் சென்றுகொண்டிருக்கும்…
சில நேரம்
சுமையென்றும் பாராது கட்டியிழுத்துக் கொண்டிருக்கும்
ஆபிதீன், நாகூர் ரூமி மாதிரியான
மதிநுட்பம் கொண்ட
சொல்லேர் உழவர்கள்
மேற்கூறிய ஆக்கத்தை எழுதுவார்களேயானால் – அது
‘அழியா இலக்கியமாக’ இருக்கும் என்பதை
திண்ணமாய் அறிவேன்.
எல்லாம் வல்ல இயற்கைதான்
கருணை புரிய வேண்டும்.
ஆமீன்!

தாஜ்

*

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்

பேராசிரியர் டாக்டர் மேஜர் சையத் ஷஹாபுதீன் M.A., M.Phil., Ph.D.

பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே தழைக்கத் தொடங்கி விட்டது.

தமிழகக் கடற்கரை நெடுகிலும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்ததையும், அவர்கள் இஸ்லாமிய நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகியதையும் ‘துஹ்ஃபதுல் முஜாஹிதீன்’ என்ற அரபு மொழி நூலில் அதன் ஆசிரியர் ஷேக் ஜியாவுதீன் என்பவர் பறைசாற்றுகிறார். பழவேற்காடு, கோவளம், பரங்கிப் பேட்டை, தொண்டி, பெரிய பட்டணம், பௌத்திர மாணிக்கப் பட்டணம், காயல்பட்டிணம், கோட்டாறு, குளச்சல் போன்ற நகரங்களில் முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே நிலைபெற்று விட்டன.

தமிழகத்தில் முதல் பள்ளி வாசல் கி.பி. 738 -ஆம் ஆண்டு ஹாஜி. அப்துல்லா இப்னு அன்வர் என்பவரால் கட்டப்பட்டது. அப் பள்ளிவாசல் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ளது. ‘கல்லுப் பள்ளி’ என்று இன்றளவும் அது அழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் அரசாட்சி ஏற்படுத்திய வகையில் முகமதுபின் காசிம், சிந்து – முல்தான் பகுதிகளில் கி.பி. 712-இல் அராபியர் ஆட்சி ஏற்படுத்தியதையும், முகமது கோரியின் முயற்சிகளின் பயனாக கி.பி. 1260-இல் அடிமை வம்ச ஆட்சி குத்புதீன் ஐபக் தலைமையில் ஏற்பட்டதையும், தென்னகத்தில் மாலிக் கபூர் படையெடுப்பிற்குப் பிறகு முஸ்லிம்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதையும், மாபர் எனப்படும் மதுரை சுல்தானியத்தைப் பற்றியும் வரலாறு பகர்கிறது. ஆனால், வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்யும் போது வெளிப்படும் உண்மையென்னவென்றால், தமிழகத்தில் முதன் முதலில் அராபியர் ஆட்சி ஏற்படுத்திய முஸ்லிம் மன்னர், சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ்வே ஆவார்.

சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலி) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்.

இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார். மார்க்கப் பணி சிறப்புடன் செய்ய தமது நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின் உதவியை நாடினர்.

‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.

முதல் கட்டமாக கி.பி.1165-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்.

பிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.

அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

குலசேகரப் பாண்டியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட நெல்லைப் பகுதியில் சமயப் பிரச்சாரம் செய்து வந்த சுல்தான் சையது இப்ராஹிம்(வலி) அவர்களை எதிர்த்து மதுரையை ஆண்ட திருப்பாண்டியன் நெல்லையைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வரப் போர் தொடுத்தான்.

அப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.

இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.

இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.

சுல்தான் சையது இப்ராஹீம்(வலி)  தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார். அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார். இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!

தமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். முகவை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி என்ற இடத்தில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார். மதினா மாநகரின் ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப் பட்டது.

இச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து – முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக் காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.

ஆண்டு தோறும் நடைபெறும் ‘உருஸ்’ நிகழ்ச்சியில் முஸ்லிம்களோடு இந்துக்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்பதைப் பார்க்கலாம். அவர் ‘ஷஹீதான’ பிறகு அவரது தம்பி மகன் சையது இஸ்ஹாக், பாண்டிய மன்னரிடம் பெற்ற மானிய கிராமங்களை வைத்து பராமரித்து வந்தார். ‘அன்னாரது அரசாட்சி பற்றிய வரலாறில்லாமல் பாண்டியன் வரலாறு இருளாகவே உள்ளது. என்று ம.இராச சேகர தங்கமணி (பாண்டிய வரலாறு, 1978, ப. 432) வருந்துவது நியாயமன்றோ? இதுபோல் எழுதப்படாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்துவார்களாக.

References:

1.ஷேக் ஜியாவுதீன், துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் (அரபி)
2.ஹுஸைனி S.A.Q. The History of the Pandiyan country
3.சுல்தான் சையது இப்ராஹிம் வெளியிட்ட நாணயங்கள்.
4.காதிர் உசேன்கான், South India Musalmans. Madras:1910
5.வண்ணக் களஞ்சிய புலவர், ‘தீன் விளக்கம்’ காப்பியம்.
6.தாரா சந்து, Influence of Islam on Indian culture. Allahabad:1936

*

நன்றி: குர்ஆனின் குரல் (ஆகஸ்ட், 1997)
தட்டச்சு & வடிவம்: தாஜ் | satajdeen@gmail.com
3:42 PM 26/11/2010

10 பின்னூட்டங்கள்

 1. 06/01/2011 இல் 17:10

  பேராசிரியர் மேஜர் சைய்து ஷஹாபுதீன் நல்ல ஒரு வரலாற்றாசிரியர். அவர் எழுதி குர் ஆனின் குரலில் வந்த கட்டுரையை இத்தனை நாள் பாதுகாத்து இப்போதாவது வெளியிட்ட தாஜ் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இதுபோல் நிறைய வரலாறுகள், நிகழ்வுகள் அவ்வப்போது வந்தன; வருகின்றன. ஆனால் பழைய பத்திரிக்கைகளைத் தேடிப்பார்த்தால் கிடைக்கும். பத்திரிக்கை யாரிடம் இருக்கிறது? முயற்சி செய்து பாருங்கள் தாஜ்.

 2. maleek said,

  07/01/2011 இல் 03:26

  (ஆண்டவன்)காடு வளரவும் எல்லாம் வல்ல இயற்கை கருணை புரிவதாக !.

 3. 07/01/2011 இல் 14:15

  உங்கள் பதிப்புக்கு நன்றி தாஜ்!

  நேற்று இரவு தாஜுக்காக இறைவனை இறைஞ்சினேன். உங்கள் பாட்டியின் அன்பு முகம் நினைவில் வந்தது. என் கண்களில் ஒரு துளி கண்ணீர் வந்தது.

 4. 08/01/2011 இல் 11:12

  சே குவேரா, ஃபினிக்ஸ் பறவை, ரத்த ஆறு, இலங்கைத்தமிழர் சம்மந்தப்பட்ட வரலாறு மட்டுமே வைகோ பேசுவார். (தேவைப்பட்டால் மட்டும்)

 5. தாஜ் said,

  08/01/2011 இல் 18:57

  அன்புகொண்ட எல்லோருக்கும் நன்றி.
  நூருல் அமீனுக்கு இன்னொரு நன்றி.
  – தாஜ்

 6. தாஜ் said,

  08/01/2011 இல் 19:13

  இந்தக் கட்டுரையின் வழியே நண்பர் ரூமிக்கும், நண்பர் ஆபிதீனுக்கும்
  ஓர் வேண்டுகோள் வைத்திருந்தேன்.

  //கொண்டிருக்கும்
  ஆபிதீன், நாகூர் ரூமி மாதிரியான
  மதிநுட்பம் கொண்ட
  சொல்லேர் உழவர்கள்
  மேற்கூறிய ஆக்கத்தை எழுதுவார்களேயானால் – அது
  ‘அழியா இலக்கியமாக’ இருக்கும் என்பதை
  திண்ணமாய் அறிவேன்.//

  இதனை வாசித்த ரூமி எனக்கு மெயில் செய்திருந்தார்.
  நண்பர்களின் பார்வைக்கு அதனையும் வைக்கிறேன்.
  ரூமி… உங்களது தகவலுக்கு நன்றி.
  உங்களது மெயிலின் விளக்கத்திற்குப் பிறகும்
  உங்களிடமான என் வேண்டுகோள் வாழும்.
  முயற்சி செய்யுங்கள்.
  நன்றி.
  -தாஜ்

 7. தாஜ் said,

  08/01/2011 இல் 19:18

  இதனை வாசித்த ரூமி எனக்கு மெயில் செய்திருந்தார்.
  நண்பர்களின் பார்வைக்கு அதனையும் வைக்கிறேன்.

  //ஆபிதீன், நாகூர் ரூமி மாதிரியான
  மதிநுட்பம் கொண்ட
  சொல்லேர் உழவர்கள்
  மேற்கூறிய ஆக்கத்தை எழுதுவார்களேயானால் – அது
  ‘அழியா இலக்கியமாக’ இருக்கும் என்பதை
  திண்ணமாய் அறிவேன்.//

  //Dear Taj, this matter has already been explained in Shuaib Alim’s book which I edited and which got the President’s Award.

  The Title of the book is

  Arabic, Arwi, Persian and Urdu in Saradib and Tamil Nadu

  anbudan
  rumi//

  ரூமி… உங்களது தகவலுக்கு நன்றி.
  உங்களது மெயிலின் விளக்கத்திற்குப் பிறகும்
  உங்களிடமான என் வேண்டுகோள் வாழும்.
  முயற்சி செய்யுங்கள்.
  நன்றி.
  -தாஜ்

 8. 08/01/2011 இல் 22:12

  தாஜின் வேண்டு கோளை வழி பொழிகின்றேன்.

 9. hussain said,

  10/12/2013 இல் 20:42

  oru maarkka pirachaaram seyya vanthavarai avliyaa andru solli oru silar thangal vayitru pilaippukkaaga ..muslimgalai vali kettukku alaithu selkvathai..insha allaah thaduthey aaga venduuum……

 10. அனாமதேய said,

  06/04/2019 இல் 18:21

  ஏர்வாடி வரலாறு எந்தவித்திலும் வரலாற்று நிகழ்வுகளுடன் ஒத்துபோகவில்லை என சரித்திர ஆய்வாளர் என.எஸ்.கமால் குறிப்பிடுகிறார்.ஏர்வாடி சரித்திரம் இந்த நிகழ்வு நடந்ததாக சொல்லப்படும் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு பின்னர் பாரசீகமொழியில் எழுதப்பட்ட ஷகீத் நாமா நூலை அடிப்படையாக கொண்டதாகும்.அதில் கூறப்பட்ட பாண்டிய மன்னர்களின் பெயர் மற்றும் காலம் பாண்டிய மன்னர்களின் பெயர்ப்பட்டியலுடன் பொருந்தவில்லை.இப்படி ஒரு போர் நடந்ததாக பாண்டியர்களின் கல்வெட்டு எதிலும் குறிப்பிடப்படவில்லை.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s