ஆதிலச்சுமி ஆதிலச்சுமின்னு ஒரு கிழவி

நண்பர் கீரனூர் ஜாகீர்ராஜாவின் ‘மீன்காரத் தெரு’ நாவல் பற்றி நேற்று பேசிக்கொண்டிருந்தேன் ஹமீதுஜாஃபர் நானாவிடம். உடனே ஒரு ஊர்க்கிழவி ஞாபகம் வந்து கதை/கட்டுரை  அனுப்பி விட்டார் எனக்கு. இன்னமே யார்ட்டெயும் இலக்கியம் பேசக்கூடாதுப்பா! நானாவின் இந்த கட்டுரையின் இடையில் – ஒரு பத்தியில் மட்டும் – செக்ஸ் தூக்கலாக இருக்கிறது. செக்ஸ் என்றாலே ‘தூக்கல்’தானே?! தூக்கி அடியுங்கள் – ஜாஃபர்நானாவை. இல்லை, வேண்டாம், கடைசி பத்தியில் அவருடைய கனிவு தெரிகிறது. காலச்சக்கரம் அப்படித்தான்… – ஆபிதீன்

***

ஆதிலச்சுமி ஆதிலச்சுமின்னு ஒரு கிழவி

ஹமீது ஜாஃபர்

துபையிலெ கார் இருக்கிற அளவுக்கு காரை நிறுத்துவதற்கு பார்க்கிங் கிடையாது. இருக்கிற பார்க்கிங் ஏரியா முழுவதும் பார்க்கிங் மீட்டர், ஒரு மணி நேரத்துக்கு இரண்டு திர்ஹம். காசு போனால் பரவாயில்லைன்னு கொஞ்சம் லேட்டா வந்தால் இடம் கிடைக்காது. நான் தங்கியிருக்கும் பில்டிங்கிலிருந்து பதினஞ்சு நிமிஷ வாக்கிங் தூரத்துலெ பிக் அப்,  ட்ரக் நிறுத்துவதற்கு ஒரு இடம் இருந்தது. திடீரென்று ஒரு நாள் அதை இழுத்து மூடிட்டாங்க. அங்கே எதோ ஒரு புராஜக்ட்டுக்காக வேலையை ஆரம்பிச்சாங்க. ஆரம்பிச்ச முஹூர்த்தம், அமெரிக்காவுலே “லெஹ்மன் ப்ரதர்ஸ்” தலையிலே தொப்பியைப் போட்டான். உலகமே ஸ்தம்பிச்சுது. துபை மட்டும் விதிவிலக்கா? இங்கேயும் ஆட்டம் கண்டது பொருளாதாரம். ஆரம்பிச்ச வேலை அப்படியே நின்றது. நின்றது நின்றபடியே இப்போதும் இருக்கிறது.

மூடின முடினதுதான் பார்க்கிங் லாட்டை திறக்கவே இல்லை இன்று வரை.

அதுக்குப் பக்கத்துலெ இன்னொரு கிரவுண்டு, அதுலே இரண்டாயிரத்துக்கு மேல் கார், பஸ், ட்ரக் நிறுத்துற பெரிய இடம். பல பேர் நிறுத்திக்கிட்டிருந்தாங்க, நானும் அங்கேதான் என் காரை நிறுத்திவிட்டு இருபது நிமிஷம் நடை பயிற்சி செய்வேன். இரண்டு மாசத்துக்கு முன் நான் ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்து பார்த்தபோது அதையும் இழுத்து மூடிட்டாங்க.  அங்கு என்னா வரப்போவுதோ அல்லாவுக்கு மட்டும் தெரியும். இப்பொ அது பொட்டத் திடலா கிடக்குது. என்ன, எதுக்குன்னு யாரும் மூச்சு விட முடியாது, அப்படி விட்டதுமில்லை.

சிங்கப்பூர்லெ ஒரு இடத்துலெ ஒரு புராஜக்ட் வருதுன்னா அந்த இடத்தை பொதுஜனம் உபயோகிச்சிக்கிட்டிருந்தா அதுக்கு ஒரு மாத்து இடத்தை தயார் பண்ணிக்கிட்டுத்தான் அதை கை வைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்படித்தான் என் தாய் மாமா சொன்னார். வின்ஸ்டண்ட் டிரைவ்லெ கவுன்சிலரா இருந்த எங்க தெரு தாவுது மாமா (போன  ஹஜ்ஜுப் பெருநாள் ராத்திரி போய் சேர்ந்திட்டார்) வும் சொன்னாரு. ஆனால் இங்கே ‘வச்சா குடும்பி சிரைச்சா மொட்டை’. இல்லேன்னா , மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்து!

அதனாலெ நான் புத்திசாலித்தனமா ரொம்ப தூரத்துலெ (3 கி.மி) காரை நிறுத்திட்டு பஸ்ஸில் வந்துடுவேன். என்னை மாதிரி அதி புத்திசாலிங்க சில பேர் இப்படித்தான் செய்றாங்க. தினம் இந்த போராட்டம்? ஒரு நாள் நான் பஸ்ஸுக்காக காத்துக்கிட்டிருந்தபோது,  ஒரு அம்மா பஸ் எப்ப வரும்னு உருதுலெ கேட்டுச்சு. பதில் சொல்லிட்டு பார்த்தபோது எனக்கு தூக்கிவாரிப்போட்டது, சாட்சாத்  ஆதிலச்சுமி! 

கண்ணை கசக்கிக்கிட்டுப் பார்த்தேன்,  அதே ஆதிலச்சுமி, ஆனால் புருக்கா போட்டிருந்தது. எனக்கு தலை சுத்தியது இவ எப்பொ இஸ்லாத்துக்கு வந்தாள்? இன்னும் உயிரோடு இருக்கமுடியாதே! இல்லை புனர் ஜென்மம் எடுத்துவிட்டாளா? புத்தி பேதலித்தது. ஒரே உருவத்தில் ஏழு பேர் உலகில் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அந்த உருவத்தில் ஒன்னு என்று என்னை சமாதானப் படுத்திக்கொண்டேன்.

காரணம் எங்க ஆதிலச்சுமிக்கு வயசு அறுபதுக்கு மேலிருக்கும் முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி. நாங்கன்னு சொல்வது நான், பாரி, ரவூஃப், ஹாஜா மெய்தீன்; நாங்கள்லாம் ஒரு செட், ஒவ்வொருத்தரிடம் ஒவ்வொரு மாதிரியான சேட்டை இருந்துச்சு. இப்பொ கதைக்கு வருகிறேன்.

ஆதிலச்சுமி ஆதிலச்சுமின்னு ஒரு கிழவி எங்கவூர்லெ மீன் வியாபாரம் செஞ்சுது, பரம்பரை மீன் வியாபாரி அல்ல, எதோ போதாத காலம், உயர்ந்த குலம்னு நினைக்கிறேன். அனேகமாக வேளாலர் குலத்தில் பிறந்தவளாக இருக்கக்கூடும். நல்ல நிறம் அந்த வயசிலும் முகத்தில் ஒரு கவர்ச்சி இருந்துச்சு. அவ மாப்ளை பேர் தெரியாது எல்லோரும் சின்னத்தலைன்னு கூப்பிடுவார்கள், ஆனால் அவருக்கு தலை சின்னதல்ல சற்று பெருசு. தலை எப்படி இருந்தால் என்ன ? தலையெழுத்து ஏடாகூடாக அல்லவா இருந்துச்சு. இல்லாவிட்டால் மாட்டு வண்டி ஒட்டி பிழைப்பு நடத்திவருவாரா! படித்தவர், இவருடைய கையெழுத்தைப் பார்த்த நாளிலிருந்து கால்நடை  செக்கிங் இன்ஸ்பெக்டர் இவருக்கு சலாம் போட ஆரம்பிச்சுட்டார்.

அப்பொ எனக்கு பதினெட்டு இருபது வயசிருக்கும், ஷைத்தானோட சேட்டை ஜாஸ்தியா இருந்த காலம்.  சாயந்தரமா கொஞ்ச நேரம் பூபந்து (Ball badminton) விளையாடிட்டு மீன் வாங்க நாங்க செட்டா மார்க்கட்டுக்குப் போவோம். எங்கவூருக்கு மூனு பேரு மீன் கொண்டு வருவாங்க, வியாபாரம் செய்வதெல்லாம் பொம்பளைங்க. அவங்க புருஷன்மாறு கட்டு மரத்துலெ  போய் மீன் புடிச்சிக்கிட்டு வருவாங்க. கடலுக்குப் போனாங்கன்னா கரைக்கு வர ஒரு நாளாகும். அப்பவெல்லாம் விசைப் படகு கிடையாது.

ஒருத்தி பேரு மொட்டை, முப்பது வயசு இருக்கும், நல்ல வாட்டசாட்டமான உடம்பு, மொறட்டு பம்பளிமாஸ், தலையிலெ ஒரு இஞ்ச்க்கு மேல் முடி இருக்காது; இன்னொருத்தி பேரு பூனைக்குட்டி ஐம்பது  வயசு இருக்கும்; மூனாவது நம்ம ஆதிலச்சுமி. இவங்க தினம்  மீன் கொண்டுவந்து வித்துட்டுப் போவாங்க. 15/20 கிலோ வெயிட்டை தலையிலெ சுமந்துக்கிட்டு சொட்டுகிற உப்பு தண்ணியோட  நாகப்பட்டினத்திலிருந்து மஞ்சக்கொல்லைக்கு நாலஞ்சு கிலோ மீட்டர்  ரயில்வே லைன் ஓரமா வேகவேகமா நடந்துவந்து வித்துட்டுப் போகனும். இடையிலெ மறிச்சு மீன் கேட்டால் மார்கட்டுக்கு வா அப்டீம்பாங்க. மூணு பேரிடமும் இந்த ஒத்துமை இருந்துச்சு.

பூனைக்குட்டி அப்பொவே செத்துப்போயிட்டான்னு கேள்விப் பட்டேன், மொட்டையை சுனாமி சுவிகாரம் எடுத்திருச்சுன்னு சொன்னாங்க. மொட்டைக்கும் பூனைக்குட்டிக்கும் ஊர் அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம். நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கன்னி போகிற பாதையில் இருக்கும் கடற்கரையோர மீனவ கிராமம். ஆதிலச்சுமிக்கு பக்கத்திலிருக்கும் பாப்பாவூர் என்ற கிராமம். இவள் மட்டும் தினம் இரண்டு மைல் நடந்து கடற்கரைக்குப் போய் மீன் வாங்கிக்கிட்டு திரும்ப மூனு மைல் நடந்து எங்கவூருக்கு வரனும்.  மீனெல்லாம் விற்று வீட்டுக்குப்  போற வழியிலெ குட்டையிலோ வாய்க்காவிலோ குளிச்சுட்டு மளிகை வாங்கிக்கிட்டுப் போய்தான் உலை வைக்கனும்.

இப்படிதான் தினம் அவங்க வாழ்க்கை. இவர்கள் பட்ட கஷ்டங்கள் அப்போது எங்களுக்குத் தெரியாது. எல்லாமே எங்களுக்கு விளையாட்டு, பருவம் அப்படி.

மொட்டை, கராரானப் பேர்வழி, விலை குறைக்கமாட்டாள்; பூனைக்குட்டி ஆள் பார்த்து விலை சொல்வாள், பேரம் பேசுவர்களிடம் அதிகமாக சொல்வாள், காசை கொடுத்து மீன் கொடு என்றால் இரண்டு மீன் அதிகமாகவே தருவாள். ஆனால் நம்ம ஆதிலச்சுமியிடம் விலை அதிகம், பேசியே தலையில் கட்டிடுவாள். அவ பேச்சுக்காக வேண்டியே அவகிட்டே சிலபேர் மீன் வாங்குவாங்க. அதுலெ நானும் ஒருத்தன்.

ஏண்டி இவ்வளவு விலை சொல்றேன்னு கேட்டா, இதெ வாங்கிட்டுபோய் திண்டு பாரு ராத்திரிக்கு தம்பி எந்திரிச்சு கூத்தடலைன்னா நாளைக்கு எங்கிட்டே கேளு அப்டீம்பா; மீன் ஏன் சின்னதா இருக்குன்னா சின்னதுதாண்டா நல்லா இருக்கும் என்னை மாதிரி முத்தினது நல்லா இருக்காது வாங்கிட்டுப்போ, காசு நாளைக்குத் தா அப்டீம்பா; பெரிய மீனா கொடுக்கறப்பொ கிட்ட கூப்பிட்டு ‘மொட்டையிட இப்படித்தாண்டா அகலமா இருக்கும்’னு காதுலெ ஊதுவா. இதுக்காகவே அவகிட்ட மீன் வாங்க ஒரு கூட்டம் இருந்துச்சு.

பகல் நேரங்கள்லெ ஆத்து ரால் (ஆற்றில் பிடித்த இரால்) மட்டும் கொண்டு வருவாள். அப்பதான் நாங்க கதை பேசுவோம் அவகிட்டெ. இதோ கொஞ்சம் சாம்பிள்:

“ஆதிலச்சுமி, சுறுங்கி சூம்பியிருக்கிற ராலெல்லாம் வேணாம், பெருசா பொறக்கிப் போடு”

“வாடா, ஒன்னொடையதெ காமி அளந்து பார்த்து அந்த சைஸுக்குத் தாரேன்.”

“ஏன் ஆதிலச்சுமி, தேத்தண்ணி பை மாதிரி தொங்குதே உன்னொடது, இப்பவெ நீ இந்த மாதிரி இருக்கிறியே வயசுலெ எப்படி இருந்துருப்பே, எத்தனை பயலுவலை சாச்சிருப்பே?”

“அப்ப நாந்தாண்டா ராணி, எவனாச்சும் எங்கிட்டெ நெருங்கமுடியுமா?”

“சரி, உன் மவ எப்படி இருக்கா?”

“ஏண்டா என் மவளை கேக்கிறே, என்னை வச்சுக்கேயேன், வந்துட்டானுவ …ளை தூக்கிப்புடிச்சிக்கிட்டு, சாண்டகுடிக்கி.” என்பாள் சிரிச்சிக்கிட்டே.

இப்படித்தான் எங்க கான்வர்சேஷன் நடக்கும். அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தெறித்தோடும் மரகதக் கற்கள் போலிருக்கும் இன்னும் பச்சையாக, ஆனால் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வளவு பேச்சு பேசும் அந்த அம்மையாரிடம் அன்பு நிறைய இருந்தது. அவள் வீட்டுப் பக்கம் போனால் உபசரனையாக பேசும் இரண்டு வார்த்தைகளைக் கேட்காமல் போகமுடியாது.

பஸ் ஸ்டாப்பில் அந்த அம்மாவைப் பார்த்தவுடன் என் நினைவுகள் பசுமை அடைந்து விட்டன. புள்ளி மானாய் ஓடித்திரிந்த அந்த இளமை இனி வருமா? பட படவென சிறகடித்துப் பறந்த அந்த காலத்தைத் தொட முடியுமா? இளமையும் துடிப்பும், கேலியும் கிண்டலும், நக்கலும் நையாண்டியும் இனி வரப்போவதில்லை. முன் மட்டைகள் துளிர்த்து எழும்ப பின் மட்டைகள் எப்போது விழுவோம் என்று காத்திருப்பதுதானே காலச்சக்கரம்.

***

நன்றி : ‘அந்தக்கால’ ஹமீது ஜாஃபர்  | manjaijaffer@gmail.com

1 பின்னூட்டம்

 1. தாஜ் said,

  02/12/2010 இல் 17:00

  நாநா…
  தூள்!
  – தாஜ்
  *
  பின் குறிப்பு:

  நான் துபாயில் இருந்த போது
  ‘ஆன்மீகத்திற்குள் வந்து பாருங்க தாஜ்…’
  ‘ஆன்மீகவாதியா இருப்பதுதான்….
  எத்தனை இன்பமானது!’ என்று அடிக்கடி சொல்வீங்க
  உறைக்கல் எனக்கு…
  இன்னைக்கி நீங்க எழுத்துல
  தூள்கிளப்புற நேர்த்தியப் பார்த்தா…..’
  அநியாயத்துக்கு
  வாய்ப்ப தவறவிட்டுட்டோமேன்னு தோணுது.

  – தாஜ்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s