அன்புடன்….
நவீன இலக்கியத்தின் ஆதர்ச புருஷர்களில் ஒருவரான மறைந்த க.நா.சு.வைப் பற்றியும்/ அவரது கவிதை திறனைப் பற்றியும் சென்ற வாரத்தில் ‘ஆபிதீன் பக்கங்களில்’ கட்டுரை ஒன்றை எழுதி இருந்தேன். அதில், அவரது ‘உயில்’ கவிதையை பிரசுரித்து அது எனக்கு இஷ்டமான கவிதை என்றும் குறிப்பிட்டு இருந்தேன். அந்த ‘உயில்’ கவிதையின் முடிவில் ‘என் பெயரை யாருக்கு இஷ்டமோ அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.’ என்று க.நா.சு.எழுதியிருந்ததை சுட்டி, ‘நான் ரெடி! அவரது பெயரை எடுத்துக் கொள்வதில் எனக்கு இரட்டை சந்தோஷம்! அவரது உறவுகளும் சம்மதித்தால் அந்த மஹா கலைஞனின் பெயரை எடுத்துக் கொள்ள கசக்குமா என்ன?’ என்று என் பேராவலையும் வெளிப்படுத்தி இருந்தேன்.
க.நா.சு.வின் மருமகனும்/ மஹா நாடக கலைஞனும்/ தற்போது தமிழ்த் திரைப்படத்தில் தோன்றும் நடிகருமான/ ப்ரியத்திற்குரிய திரு.பாரதி மணி அவர்கள், அந்தக் கட்டுரையை வாசித்த நாழிக்கு என்னை டெலிபோனில் அழைத்து ‘க.நா.சு.வின் பெயரை நீங்கள் எடுத்துக் கொள்வதில் எனக்கோ/ என குடும்பத்தில் வேறு யாருக்கோ எந்த ஒரு தடையுமில்லை’யென முழு சம்மதம் சொன்னார்.
எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. என்னால் அப்போதைக்கு முடிந்தது, அந்த மகிழ்ச்சியை அப்படியே வெளிக்காட்டவும்/ நன்றி சொல்ல மட்டும்தான். அவர் நெகிழ, அதை அழுந்தமாகவே செய்தேன்.
இன்று தொட்டு நான் எழுதும் கவிதைகள்/ பிற்காலத்தில் வர இருக்கிற என் கவிதைத் தொகுப்புகள்/ என் கட்டுரைகள்/ விமர்சனக் கட்டுரைகள் முதலானவற்றில் என் பெயரை ‘கநாசு’ தாஜ் என்றே குறிப்பிடுவேன். இங்கே அதை பிரகடனமாகவே செய்கிறேன்.
க.நா.சு.வின் குடும்பத்தார்களுக்கு மீண்டும் என் நன்றி உரித்தாகட்டும்.
*
சென்ற பதிவில் க.நா.சு.வின் கவிதைகளைத் தந்திருந்தபோது, கவிதை வாசிப்பை, ரசனைக்கொண்டதாக மாற்றிக்கொள்ள குறிப்புகள் வைத்திருந்தேன். இந்தக் கவிதை பதிவில், ஓர் ஆங்கில கவிதை ஒன்றை திரு.சுந்தரராமசாமி வாசித்து ரசித்ததைப் பற்றிய குறிப்பை வைக்கிறேன். ஜெயமோகன் தனது பதிவொன்றில் அது குறித்து குறிப்பிட்டிருந்ததை அவருக்கான நன்றியோடு இங்கே எடுத்து ஆள்கிறேன். ஜெ.மோ….. நன்றி.
கீழே உள்ள ஆங்கில கவிதை ‘ராபர்ட் ஃப்ராஸ்ட்’டுக்கு சொந்தமானது! கீழே…. இன்னும் கீழே… உள்ள தமிழ்க் கவிதைகள் ‘ராபர்ட் ஃப்ராஸ்ட்’ கவிதைகளோ/ சுந்தர ராமசாமி படித்து ரசித்தக் கவிதைகளோ கிடையாது. அந்தக் கவிதைகள் என்னுடையது. உங்களுக்காக… உங்களது கவிதை ரசனைக்காக உங்கள் முன் வைக்க விரும்பி எழுதிய புத்தம் புதிய புதுக் கவிதைகள்!
//
Nature’s first green is gold,
Her hardest hue to hold.
Her early leaf’s a flower;
But only so an hour.
Then leaf subsides to leaf.
So Eden sank to grief,
So dawn goes down to day.
Nothing gold can stay.
– நான் படித்து முடித்தேன். மீண்டும் படிக்கச் சொன்னார். அவருக்கு கவிதையைக் காதால் கேட்டால் ஏறாது. தானே வாங்கிக் கண்ணாடி போட்டு மீண்டும் படித்தார். கவிதை படிக்கும் சுந்தர ராமசாமி ஒரு அபூர்வமான ஓவியம் போல, முதன் முதலாக ஆனா ஆவன்னா எழுதும் குழந்தையின் அதிதீவிரம், கண்டடைதலின் பரவசம், மூடிவைத்து என்னைப் பார்த்து மென்மையாகப் புன்னகை செய்தார். காற்றில் வரைந்தார். உதட்டை அழுத்தியபடி ‘ஆமாம் அது சரிதான்’ என்பதுபோல தலையாட்டினார். பெருமூச்சுடன் ‘என்னமா எழுதியிருக்கார்…. இல்லையா?’ என்றார். ‘பார்த்தா ரொம்ப சாதாரணமான கருத்து. சாதாரணம்னா மதிப்பில்லாததுன்னு அர்த்தமில்லை. பெரிய மகத்தான விஷயங்களுக்கெல்லாம் ஒருமாதிரி freshness இருக்குமே… அது மாதிரி….. ஆத்துத் தண்ணி மாதிரி, காத்து மாதிரி அவ்வளவு நேச்சுரலான ஒரு உண்மை…. ஆனா அதை எவ்ளவு அழகான வார்த்தைகளில் சொல்றார் பாருங்க….. Nature’s first green is gold. அவ்வளவே போதும். அருமையான கவிதை ஆயிடுது. ஒரு மந்திரம் மாதிரி ஆயிடுது. கூடவே கடைசி வரியையும் சேத்துண்டா போறும். Nothing gold can stay…. பெரிய வேதமந்திரங்களுக்குச் சமம். குரு சிஷ்யனுக்கு வாழ்நாள் முழுக்க சொல்ல வேண்டிய மந்திரமா உபதேசம் பண்ணிடலாம்…..’ அவ்வரிகள் வழியாக அவர் நகர்ந்து நகர்ந்து எங்கோ செல்வது தெரிந்தது. //
– ஜெயமோகன் (நினைவின் நதியில்/ Page: 196 & 197)
மீண்டும் நன்றி…. ஜெ.மோ!
– தாஜ் / 05th Sep – 2010
***
‘கநாசு’ தாஜ் கவிதைகள் :
ஸ்… …
பார்த்துப் பார்த்து பாய்ச்சலாய்
எனக்கு நான் கட்டிய கட்டிடம்
வடிவம் கொண்ட நுழைவாயில்
பார்வை படுமிடமெல்லாமும்
கண்கள் மலரும் நேர்த்திகள்
அடியெடுத்து வைக்குமிடமோ
பாதம் நோகாத பளிங்குத் தரை!
வெவ்வேறு புழக்கத்திற்கு
அடுத்தடுத்து அறைகள்!
அமர்ந்து பேச கூடி உண்ண
விசாலமான கூடம்!
அங்கே தவழ்ந்த தென்றலில்
கால நதி பிரிந்தோடிய
கவனம் விட்டு சாகச
இயற்கை எழுத்தை
படிக்கவும் மறந்தேன்.
காற்று வரும்
சன்னல் கம்பிகளில் தொடங்கி
அழகாண்ட அத்தனையிலும் துரு!
நுழைவாய் வண்ணம் சிதைய
நேர்த்திகள் சிதில மயம்!
கால் வைக்குமிடமெல்லாம்
வழுக்கின அழுக்கு!
சமையல் அறை கரிப்புகை
படுக்கை அறை வெட்கை
பிற அறைகளில் கருகிய நெடி!
கூடம் மாற்றமற வீட்டுக்
குரலில் சுருதியில்லை!
தேடி ரசித்து வாங்கிய
கட்டிலும் சோபாவும்
சோபித்த கணத்தின் கனவில்
பின்னல் தொட்டில்
அந்தரத்தில் தொங்குகிறது!
பளிச்சிட்ட விளக்குகள் தடுமாற
இசை கொப்பளித்த சாதனம்
இடம் விட்டு மாதங்கள் ஆகிறது.
தோட்டம் கொள்ளாப் பூச்செடிகள்
இருந்ததும் பூத்ததும்
நினைவில் அசைகிறது.
கொல்லைப்புற பெருத்த மரங்கள்
காய்த்து நிழல் காத்ததை
ஒரு போதும் மறக்க இயலாது
கடந்த திங்கள்தான் காசானது!
***
அ…… !
கருத்த மேகங்கள் கிழிபட
ஒளி பரவும் கவிதை வானைக்
கண்டுகொள்ள
இறக்கை நோகப்
பறந்த போதும்
சில சிட்டுக்கள்
இன்னும் உயரத்தில்
சாகசப் பறவைகளாய்
களிக் கூச்சலிட விரைகின்றன!
***
ஆ….
வலியின் அலறல் நம் செவிக்குள்
குத்துயிரும் குலையுயிருமாக
கிடக்கிறது நிலமும் மொழியும்!
எல்லா அரசியல்வாதிகளின் கையிலும்
இரத்தம் சொட்ட கட்டாரிகள்!
ஒருவரை ஒருவர் வீசியெறிந்துக் கொல்ல
கைகளில் எடுத்த ஆயுதம்தான் அது!
***
ஓ….
கூர்மையான நகங்கள்
வெட்ட வெட்ட முளைக்கிறது
கோரைப்பல் விழுந்த இடத்தில்
பொய்ப்பல் பொருந்தி கொண்டது
நாக்கின் கூர்மை
எதிராளியின் முகத்தில் பார்க்கிறேன்
வேகம் காட்டிய விபத்தில்
முறிந்த எலும்பும் ஒட்டிக் கொள்ள
மங்கிய முகக்கோரம் ஜொலிக்கிறது.
ஓயாத மிருகம் மூளையில் மேய
விட்டு விடுதலையேது!
***
ஃ
காந்தி தேசத்தில்
பீறிட்ட மஹாத்மா குருதியோடு
ஜனநாயக வரிகள்
உறைந்துவிட இன்றும்
ஆயுத எழுத்தால்
தீர்ப்பு எழுதுகிறார்கள்
எல்லோரும்.
***
நன்றி : ‘கநாசு’ தாஜ் | satajdeen@gmail.com
நாகூர் ரூமி said,
12/09/2010 இல் 21:49
அன்புள்ள தாஜ், நீங்கள் கநாசு தாஜ் ஆனது குறித்து மகிழ்வதா, துக்கிப்பதா என்று தெரியவில்லை. எனினும், அவர் மீதான உங்களின் பிரியம் தெரிகிறது. எங்கே பிடித்தீர்கள் அந்த கருப்பு வெள்ளை நிழல்படத்தை? அற்புதமான படம். (அல்லது எடுத்தது ஆபிதீனா)?
தோட்டம் கொள்ளாப் பூச்செடிகள்
இருந்ததும் பூத்ததும்
நினைவில் அசைகிறது
அருமையான வரிகள். ரொம்ப ரசித்தேன். எழுதிக் கொண்டே இருங்கள். இப்படியான வரிகள் அவ்வப்போது கிடைக்கும். நமக்கான சேமிப்புகளே அவைகள்தான்.
ஆபிதீன் said,
13/09/2010 இல் 09:24
ரஃபி, அது Robert Frost. அவரை நேரில் பார்த்ததில்லை. எனவே கூகுள் இமேஜ்-ல் எடுத்தேன். ஸ்….!
மஜீத் said,
13/09/2010 இல் 14:56
ரஃபி அவர்களின் ஃபோட்டோ நக்கலை நினைத்து சிரிக்க ஆரம்பித்தேன்,
அடுத்து ஆபிதீன் போட்ட அணுகுண்டால், சிரித்து முடிக்கமுடியவில்லை.
இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
தாஜ் said,
13/09/2010 இல் 09:34
நன்றி
ரஃபி….
நன்றி
ஆபிதீன்…
– தாஜ்
மஜீத் said,
13/09/2010 இல் 13:33
“”கொல்லைப்புற பெருத்த மரங்கள்
காய்த்து நிழல் காத்ததை
ஒரு போதும் மறக்க இயலாது
கடந்த திங்கள்தான் காசானது””
அனுபவித்து ரசிக்க முடிகிறது,
நிறையவே வலித்தாலும்.
வலியே சுகம்தானோ?
அன்றி நமக்கு வலி மட்டுமே சுகமா?
வலியின்றி சுகமில்லையா?
புரியவில்லை
ஒ.நூருல் அமீன் said,
14/09/2010 இல் 09:59
இருந்ததும் பூத்ததும் நினைவில் அசைகிறது என்ற வரிகள் பிரியமானதின் பிரிவை சொல்லி சொல்லிவிடுகின்றன. என்ன ஆச்சு என்ற கேள்வி எழும் வேகத்திலேயே கூரிய ஊசியாய் நெஞ்சில் குத்துகிறது’கடந்த திங்கள்தான் காசானது!’ என்ற கடைசி வரி.அற்புதமான கவிதை.
abedheen said,
14/09/2010 இல் 11:52
’கடந்த திங்கள்தான் காசானது’தான் என்னைக் கவர்ந்தது. கடலளவு துக்கம் கொண்ட வரி அது. நன்றி நூருல் அமீன்.
தாஜ் said,
14/09/2010 இல் 15:36
ஆஹா….
நிறைய பேர்
கவிதை வாசிப்பதை அறிய
மனதிற்கு இதம். மகிழ்ச்சி.
எல்லோருக்கும்
நன்றி… நன்றி.
– தாஜ்
மஜீத் said,
16/09/2010 இல் 17:39
பாரதி மணியைத் தேடிப் பிடித்தால், சுடச்சுட ‘இட்லிவடை’ சாப்டுண்டுருக்கார்!!