ரமளான் சிந்தனை-1 : ஏ.ஹெச்.ஹத்தீப்

“வணக்கம்”என்று இந்திய பாணியில் முகமன் கூறினால் இறைவனை வணங்குவதாக ஆகிவிடுமா என்ற பலரது கேள்விக்கு நவீன ஏகத்துவவாதிகள் “ஆம்”என்று பதிலளிக்கின்றனர். இந்தக் கேள்வியையே ஒரு வணக்கமாக மாற்றியதில் அவர்களது கைவண்ணமும் வாய்வண்ணமும் அரும்பணியாற்றியிருக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்று “பெற்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் மரியாதை செய்வதுகூட ஒருவகை வணக்கம்தான். வணக்கம் இறைவனுக்கு மட்டுமே சொந்தம். ஆகவே பெற்றோரை மதிப்பதுகூட இஸ்லாத்திற்கு விரோதமானது’ என்று தங்களைப் பின்பற்றுவோருக்கு எடுத்துரைத்ததில்கூட உள்நோக்கம் இருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமது சமுதாயத்தில் பெரும்பான்மை இளைஞர்கள் பெற்றோர்களை மதிப்பவர்கள். அவர்களின் அறிவுரைகளுக்குச் செவி சாய்ப்பவர்கள். இத்தகைய முஸ்லிம்கள், பெற்றோர்களின் புத்திமதிக்கு எதிரான எந்தப் பிரச்சாரத்தையும் ஏற்பதில் கஷ்டமிருக்கிறது. எனவே முதலில் பெற்றோர்களிடமிருந்து அவர்களைத் தூரப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மேற்கண்ட பிரச்சாரங்கள் துவங்கப்பட்டிருக்குமோ என்று நம்புவதற்கு அதிகக் காரணமிருக்கிறது.

முதலில் ‘வணக்கம்’ என்று சொன்னவுடனேயே அது இறைவனை வணங்குவதாக ஆகிவிடுமா என்று பார்க்க வேண்டும். தொழுவதும் வணங்குவதும் ஒரே மாதிரிச் செயல்களா என்பதை அவர்கள் விளக்க வேண்டும். ஏனெனில் தொழுகைக்குமுன் செய்துகொள்ள வேண்டிய உலூ, நிய்யத், கிப்லாவை நோக்குதல் போன்ற முக்கியக் காரியங்கள் உண்டு. தொழுகை போன்றதுதான் வணக்கமும் என்றால், அதற்குமுன்னால் செய்துகொள்ள வேண்டிய முக்கிய செயல்கள் இருக்கவே செய்யும். வணக்கம் என்பது திக்ரு, துஆ போன்ற செயல்கள்; அவற்றிற்கு உலூ போன்றவை தேவையில்லை என்றாலும் மிக முக்கியமாக நிய்யத் கட்டாயம். இயந்திரகதியில் செய்யப்படுகின்ற எந்தக் காரியத்திற்கு இஸ்லாத்தின் ஆசீர்வாதம் கிடையாது. மனம் ஒன்றிச் செய்யாத எந்த வணக்கமும் முழுமையானதல்ல. அதனால்தான், தக்பீர் கட்டிவிட்டால், இதரச் சிந்தனைகள் மற்றும் இதரக் காரியங்கள் அனைத்தும் முழுமையாகத் தடை செய்யப்படுகின்றன.( தக்பீர் தஹ்ரீமா)

‘இறைவனை வணங்குகிறோம்’ என்ற உறுதி ஏற்பின்றி ‘வணக்கம்’என்று சொன்னவுடனேயே அது வணக்கமாகிவிடுகிறது என்று பிடிவாதம் பிடிப்பது இஸ்லாம் சார்ந்த சிந்தனையல்ல. சமுதாயத்தில் புதுமையாக அல்லது சர்ச்சைக்குரியதாக ஏதாவது சொல்ல வேண்டுமென்ற மன அரிப்பின் அடிப்படையில் கூறப்பட்டவையே.

இதை இன்னொரு கோணத்தில் பார்க்கலாம்: ‘வணக்கம்’என்றவுடனேயே இறைவனை வணங்குவதாக ஆகிவிடும் என்றால், தொழுகை என்றதும் தொழுததாகவும், நோன்பு என்றதும் நோன்பு நோற்றதாகவும் ஜகாத் என்றதும் ஜகாத் அளித்ததாகவும் ஆகிவிடுகிறதா?

பெற்றோர்களுக்கு மரியாதை செய்வதுகூட இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று ஆணித்தனமாக வாதிடுகிறார்கள். இறைவனுக்கு இணை வைக்காமல், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குப் பெற்றோர்களை மதிக்கும்படியும் கண்ணியப்படுத்தும்படியும் திருமறை கட்டளை பிறப்பிக்கிறது. ஒவ்வொரு தொழுகையில் மட்டுமின்றி, அவர்களது மரணத்திற்குப் பின்னரும்கூட அவர்களுக்காகப் பிரார்த்திப்பது ஒவ்வொருவருக்கும் கடமையாக்கப்பட்டிருக்கிறது.
“பெற்றோர்களைப் புறக்கணியுங்கள்” என்ற அறிவுரை பிறச் சமூகத்தினரிடையே இஸ்லாத்தின் கண்ணியத்தைக் குறைக்கவே உதவுகிறது என்பதை மார்க்க மாமேதைகள் சீர்தூக்கிப் பார்ப்பது இன்றைய இன்றியமையாத கடமை.

*

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் |E-Mail :  hatheeb@gmail.com

5 பின்னூட்டங்கள்

 1. 14/08/2010 இல் 08:55

  அருமையான அலசல். நெருப்பு என்றால் நாக்கு சுட்டுவிடும் என்று கிளம்பியிருக்கும் இந்த கூட்டத்தை என்ன செய்வது? என்னிடம் இணைய-முஸ்லிம் இப்படித்தான் விவாதித்தார். வணக்கம் சொல்லக்கூடாது என்று. எவ்வளவு சொன்னாலும் மார்க்க மேதைகள் மத போதையிலிருந்து விடுபட மாட்டார்கள்.

 2. Hassan Ali said,

  14/08/2010 இல் 10:22

  Ayyaye, ivanunga torture thaanga mudiyala.

  Good post. Thanks to Hateef Sb

 3. nagoorumi said,

  14/08/2010 இல் 12:05

  அருமையான சிறிய கட்டுரை. நான் என் தளத்தில் மறுபதிப்பிட்டுக்கொள்கிறேன். ஆபிதீனின் மானசீகமான அனுமதியுடன். ஒரு முறை நானும் சில முஸ்லிம் நண்பர்கள் குழுவில் ‘வணக்கம்’ என்று தொடங்கி ஒரு கடிதம் எழுதினேன். சுனாமியாட்டம் பொங்கி எழுந்துவிட்டார்கள். மறுபடியும் வணக்கம் என்று தொடங்கி அவர்களுக்கு பதில் கடிதம் எழுதினேன். ஹத்தீப் அவர்கள் சொல்வது மிகச்சரி. இஸ்லாத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் செய்யப்படும் காரியமாகவே இது எனக்கும் படுகிறது.

 4. நாகூர் சாஹிப் said,

  23/08/2010 இல் 13:48

  எங்கள் சமூகத்தின் பெரும் மதிப்பிற்க்கு உரிய ஹத்தீப் சாஹிப் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்தல்ல நமது நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் ஒன்று. சொல்ல போனால் ஈமானின் அடிப்படை சம்பந்தப்பட்ட மிக முக்கியமான ஹதீஸ். .(إنما الأعمال بالنيات وإنما لكل امرئ مانوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه)
  ”ஒவ்வொரு அமல்களும் எண்ணத்தை கொண்டே முழுமை அடையும்” வணக்கம் சொல்வது மட்டும் அல்ல அனைத்து விஷயங்களும் எண்ணத்தை பொருத்தே அமைகிறது. வணக்கம் சொல்லுதல், பெற்றோர்க்கு மரியாதை செலுத்துதல் ஆகிய செயலுக்கும் இணை வைத்தலுக்கும் எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது. சம்பந்தம் படுத்துவோரை (நபி மொழியை நிராகரிப்போரை) நாம் நிராகரிக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்தில்லை. சின்ன சின்ன நல்ல விஷயங்களுக்கு ஷிர்க் முத்திரை கொடுத்து அதை நமது சமூகத்திடம் இருந்து அழிக்க நினைக்கும் கூட்ட்த்திடம் இருந்து அல்லாஹ் நம்மை காப்பாத்தட்டும்….ஆமீன்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s