மீள்வாசிப்பு: நகுலனின் ‘இவர்கள்’ – தாஜ்

மீள்வாசிப்பு: நகுலனின் ‘இவர்கள்’

தாஜ்

தீர என்னை நான் கண்டுகொண்ட நாளில், என் அரசியல் பிணைப்புகளும், அடாவடிகளும் இத்து அத்து விழ; நிறைய மாற்றங்கள்! இலக்கியத் தேடல் அதில் ஒன்று. ‘சிற்பியின் நகரம்’ புதுமைப்பித்தன்/ ‘மரப்பசு’ ஜானகிராமன்/ ‘வேள்வித் தீ’ எம்.வி. வெங்கட்ராம்/ ‘கோபல்லக் கிராமம்’ கி.ராஜநாராயணன்/ ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ சுந்தர ராமசாமி/ ‘பதினேழாவது அட்சக் கோடு’ அசோகமித்ரன்/ ‘எஸ்தர்’ வண்ண நிலவன் இன்னும் பல நட்சத்திரப் படைப்பாளிகளோடு முதல் வாசிப்பிலேயே கைகோர்த்துக் கொண்டு தட்டுத் தடங்கள் இல்லாமல்  விரைந்த அனுபவம் சொல்லிக்கொள்ள தகுந்தது. அது மாதிரி, மௌனி/ நகுலன்/ கோணங்கி/ போன்ற படைப்பாளிகளிடம் நடக்கவில்லை. முதல் வாசிப்பில் அவர்களோடு கைக்கோர்ப்பதென்பது வானத்தை வில்லாக வளைப்பதாகப் பட்டது. 

கோணங்கியின் எழுத்து எனக்குப் புரியவில்லை என்பதைப் பற்றி வருத்தம் இருந்ததே இல்லை. அவர் எழுத்து அவருக்கே புரியுமா? என்பது குறித்து எனக்கு சந்தேகம் உண்டு. கோணங்கி மாதிரி, மொழியால் வாசனை மிரட்டும் அவரது உடன் பிறவா சகோதரர்கள் இன்னும் சிலர் உண்டு. பாவம் அவர்கள்! மௌனியையும், நகுலனையும் அப்படி சொல்லிவிட முடியாது.படைப்பின் நேர்த்தியை முன்வைத்து வித்தியாசப்பட்டவர்கள் அவர்கள். நிச்சயம் அவர்கள் கோணங்கி கிடையாது.  மௌனியை ஆர அமரப் படித்தால் அவரோடு ஒட்டிக்கொண்டு விட  முடியும். நகுலனிடம் கொஞ்சம் சிரமம் கொள்ள வேண்டும். அவரிடம் ஒட்டிக் கொள்வதென்பது அத்தனை எளிதல்ல. வாசகன், வாசிப்பில் விசாலமாகாதவரை நகுலன் சாத்தியமாக முடியாது!

இவர்கள்/ நாய்கள்/ வாக்கு மூலம்/ போன்ற நகுலனின் நாவல்களை வாங்கி வாசித்துத் தோற்றவன் நான். சமயம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கவும், மீண்டும் மீண்டும் தோல்விதான்! என்றாலும், அவரது புத்தகங்களை கடாசி விடவில்லை. அவரது எழுத்து புரியவில்லை என்பது என் போதாமையைச் சார்ந்தது. இப்படித்தான் அன்றைக்கு நினைத்து அவைகளைப் பத்திரப் படுத்தி வைத்தேன். கடைசியில், அதுவே சரியென்றும் ஆனது. அல்லாது, ‘மீள்வாசிப்பு: நகுலனின் இவர்கள்’ எப்படி என்னால் இன்றைக்கு சாத்தியமாகியிருக்க முடியும்? 

நகுலனின் ‘நாய்கள்’ படித்து குழம்பிய நாளில், இன்றைய பிரபலமும் அன்றைய என் நண்பருமான ‘கோணல் பக்கங்கள்’ சாரு நிவேதிதாவிடம் அது குறித்து அளவளாவியது ஞாபகத்தில் இருக்கிறது. அது சமயம், ‘நாய்கள்’ நாவலின் புரியாமையும்/ புரிந்தறியும் மார்க்கம் பற்றியும் பேச, ‘புரிதலில் அந்த நாவல் தனக்கும் சவாலாக இருந்தது’ என்ற அவர், ‘அது புரியவில்லை என்று ஏன் சிரமம் கொள்கின்றீர்கள்? புரியும் விதமாய் நகுலனுக்கு எழுதத் தெரியவில்லையென நினைத்துவிட்டுப் போங்களேன்’ என்றார். சாருவின் அந்த மூன்றாவது அறிவுதான் இன்றைக்கும் அவரை நிறம் காண்பித்துக் கொண்டிருக்கிறது!

வெளிப்படையாக சொல்லிவிட முடியாத நிகழ்வுகளை படைப்பில் பதிய, சிடுக்கானதோர் மொழி நடை/ அதையொட்டிய கலை நேர்த்தி/ வாழ்ந்து பெற்ற அனுபவம்/ என்பன மட்டும்தான் மௌனியின் நுட்பம் சார்ந்த சங்கதி! ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் எழுதுவது மாதிரியான நடையொன்றும் அவரிடம் கூடுதலாக காணமுடியும். இதனைப் புரிந்து கொள்ள  இயலுமென்றால் மௌனியின் கதை வாசிப்பை தடங்கள் இல்லாது நிகழ்த்தலாம். பெரிய சிரமமின்றி, அவரது பேனா போன போக்கில் போய், கதையின்  விஷயதானங்கள்  அத்தனையையும் உள் வாங்கிக் கொண்டுவிட முடியும். இப்படியான தீர்மானமான கண்டெடுப்புகள் எதனையும் நகுலனிடம் கண்டு உணர முடியாது. மொழி வீச்சில் எந்தக் கட்டுக்கும் அடங்காதவர் அவர்!  சித்தம் போக்கு!

வாழ்வில், தீண்டாமையை உதாசீனம் செய்த நகுலன்தான், தனது எழுத்தின் புரிதலுக்குள் வாசகர்களை அண்டவிடாதவராகவும் இருந்தார்! படைப்பில்,  அவர்  முயன்று  காட்டியிருக்கும் மொழி அடாவடிகள் கொஞ்சமல்ல! வேலைப்பாடான, நுட்பமும் கூடிய கட்டிடத்தை மணிச் சித்திரத்தாழ் கொண்டு இறுக அறைந்து சாத்தி விடுபவர் அவர்! ஆர்வத்துடன் அவரது ஆக்கங்களை வாசிக்கப் புகும் வாசகன், மேலே நிலைதாண்டிப் போக முடியாது. அவன் திண்டாடுவது அவருக்குப் பிடிக்குமோ என்னவோ தெரியாது. அதன்படிக்குதான் யோசிக்க  தோன்றுகிறது. 

‘நான் ஒரு-இஸத்தையும் சேர்ந்தவனல்ல, தம்பி! நான் பேனா, தம்பி பேனா-எனக்கும் தெரியும் சில வித்தைகள், தம்பி, கேள்; உன்னைப் போல் நான் எழுதுவேன் என்றில்லை, தம்பி! எது என்னவானாலும் தம்பி, நான் என்னைப் போல்தான் எழுதுவேன் தம்பி.  அதில்தான் என்ன சுகம்! என்னுடைய இச்சா சுதந்திரம் தம்பி என்னுடைய உயிர்மூச்சு! என் பேனாப் பெயர் ஒரு புனைப் பெயர் என்றால் என் அசல் நாமதேயம் அனாமதேயம், எனக்கு என்ன தெரியும், தம்பி! எனக்கு ஊரும் கிடையாது, பேரும் கிடையாது! காரணமும் இல்லை, காரியமும் இல்லை! இகமும் கிடையாது, பரமும் கிடையாது! கண் பார்த்தது கை எழுதுகிறது! ஒரு சுழி மாறிப் போனால் உயிர் போச்சு! எந்த எந்த உருவில்தான் நான் என்னைக் காண்கிறேனடா!’ – (இவர்கள்/பக்கம்-123)

‘அவனுக்குத் தோன்றியது, எழுத்து விஷயத்தில் அர்த்தம் பூஜ்யமாவதில்தான் அர்த்தம் உருவாகிறது என்று. இது எழுத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும்-வார்த்தை, வார்த்தைச்- சேர்க்கை, அந்தச்-சேர்க்கைகளின் முழு ரூபம்-ஒன்றிலும் நாம் கண்டு-பழகி-களைத்து போன உருவங்களைப் பார்க்கக்கூடாது. நிறைய-நிறைய எழுதி, எழுதி எழுதவேண்டுவதை எழுதாமல் விட்டு விட வேண்டும்.’ (இவர்கள்/பக்கம்-107)  

மேலே அவரது எழுத்தைப் பற்றி அவர் தந்திருக்கும் ஒப்புதல் ஒரு புறம் இருக்கட்டும். நாம் இங்கே  பார்வைக்கு எடுத்துக் கொண்டிருக்கும்  ‘இவர்கள்’ நாவலின்  தொடக்கத்தை, அந்த ஆரம்ப வரிகளின் விசேசத்தை பாருங்கள்!  

‘நவீனனுக்கு இன்று போல் இருந்தது. அவனை அறியாமலேயே அவனுள் ஒரு கேள்வியெழுந்தது. அதாவது அது எப்படியிருக்க முடியுமென்று? ஒருவேளை மனிதர்களுக்கு நிழல்கள் உள்ளது போல், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிழல் உண்டா? அதாவது இன்றைய நிழல் கடந்த காலத்தில் வீசுகிறதா? கடிகாரத்தின் முள் அல்லவா நம்மைக் குத்திக் கொண்டே இருக்கிறது.’

‘ஆம், என்ன சொல்லிக்கொண்டு வந்தேன்?… நான் அவரைப் படித்திருக்கிறேன் என்று… அப்படிதானே, இகர முதல்வி? ஞாபகம் இருக்கிறதா நான் இன்னும் பிறக்கவில்லை என்று சொன்னது? ஒரு கட்டம் வரை நான் வெறும் ஒரு பரிசுத்த ஆவியாகத் திரிந்துகொண்டு இருந்தேன் என்றது? அப்பொழுது நான் B.A.படித்து விட்டு “வேலை, வேலை” என்று பரபரத்துக் கொண் டிருந்த காலம்…’

‘மனிதனிடம் பேசுவது மாதிரியில்லை….  மரத்துடன் மிருகங்களுடன் பேசுவதென்பது….  ஒரு மரத்துடன், ஒரு மிருகத்துடன் நீ பேச வேண்டுமென்றால்,  நீ ஒரு மரமாக மிருகமாக மாற வேண்டும். நின் உருவம் நிச்சலமாக வேண்டும்; மனம் ஒடுங்க வேண்டும். நீயும் ஜே. கிருஷ்ணமூர்த்தி படித்தவன்தானே. நவீனா, எனக்குத் தெரிந்தவரை  மிருகங்களுக்குப்  பைத்தியம் பிடிக்கலாம். மரங்களுக்கு வியாதிகள் வரலாம். ஆனால் ஒரு மரத்திற்குப் பைத்தியம் பிடிக்குமா? தெரியவில்லை. மரங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. ஆனால் அவைகளுக்குப் பைத்தியம் பிடிக்குமா,…..?’

– மரங்களுக்கு பைத்தியம் பிடிக்குமா பிடிக்காதா என்பது பற்றி வாசகன் அறிவானா? மாட்டானா? அறியேன். ஆனால், ஒரு படைப்பாளி தன் படைப்பை இந்தச் சுதியில் ஆரம்பித்தால், வாசகன், அதிலும் குறிப்பாய் ஆரம்பக்கால வாசகன் தப்பிப்பதென்பது கஷ்டம்! மண்டையை பிறாண்டித்தான் கொள்வான்.  சந்தேகமே இல்லை. இந்நாவலின்  ஆரம்ப  வரிகளில்  ஒரு வேளை அவன் தப்பித்தாலும், அவனை விடாது விரட்ட இன்னுமான வரிகளில் இந்நாவலில் விரவிக்கிடக்கிறது.

பொதுவாய் நம்மவர்கள் எழுதும் புதுக் கவிதைகளில் அதற்கென பிரத்தியேகமாக சிந்தித்து அடுக்கும் லாவகமானதோர் மொழியை,  நகுலன் தனது நாவல்களின் உரைநடையில்  தாராளமாகப் புழங்குபவராக இருக்கிறார்!  ‘தன்னைவிட நீளும் நிழல்/ நான் பிறக்கவில்லை/ இறந்துப் போனேன்/ இறந்துப் பிறந்தேன்/ மரங்களுடன் பேசுவது/ மிருகங்களுடன்  உரையாடுவது….’ என்பது மாதிரியான வார்த்தைகள் நம்மவர்களின் கவிதைகளில் குறியீடாக எழுந்து, வாசிப்பின் குறுக்கே நின்று சேட்டைத்தருவதை கண்டிருக்கிறோம். இங்கே, உரைநடை வழியே நகுலன் அப்படி, நம்மை உண்டு இல்லையென செய்திருக்கிறார். 

ஆனாலும் பாருங்கள்,  நகுலனின் கவிதைகளில், அவரது கவிதை மொழி என்பது இலேசான/ சுளுவான/ பத்து வார்த்தைகளுக்குள் கட்டுமானம் கொள்வதாகவே காட்சித்தரும்.  ‘ராமச்சந்திரனா யெனக் கேட்டார்/ ஆம் என்றேன்/ எந்த ராமச்சந்திரன் என்று அவரும் கேட்கவில்லை/ நானும் சொல்லவில்லை/’ – அவ்வளவுதான் கவிதை! உலகில் இதைவிட எளிமையான  கவிதையை எந்தவொரு கவிஞனும் எழுதிவிட முடியாது. அவரது இன்னொரு கவிதையைப் பாருங்கள். ‘அவள் முகந்தடவி/ முலை கசக்கி/ முயல் வளைக்குள்/  மீன் பிடித்து/  நான்  களிக்கு மவ்வேளை/ ஜன்னலூடு உள்நோக்கும்,/ விண் அனைத்தும்/ கட்டி கட்டியாகக்/ காட்பரீஸ் சாக்லேட்’ – இப்படி, மொழியின் எளிமையே உருவாய் கவிதை எழுகிற அதே நகுலன்தான் உரை நடையில் நம்மை அண்டவிடாது அராஜகமும் புரிகிறார். குறிப்பிடத்தகுந்த எதிர்மறைப் போக்கு இது! இவரது,  இப்படியான எளிமைக் கொண்ட மூணுவரி, நாலுவரி கவிதைகளை, ‘மஹா வாக்கியம்’ பிரம்மராஜன் அங்கீகரிக்க மறுத்து, தனது ‘மீட்சி’ இதழில் பிரசுக்காது விட்டதோர் நிகழ்வு, அன்றைய இலக்கிய வட்ட சங்கதிகளில் ஒன்று! அது சரியென  கட்சிக் கட்டியவர்களின் பக்கம் நானும் இருந்தேன்.                                

அவருக்குத் தெரிந்த அல்லது அவரது அனுபவம் போதித்த அத்தனையும் வாசகனும் அறிந்திருப்பான் என்கிறக் கணக்கில் எழுதித் தீர்த்திருக்கிற அவரது படைப்புகள்,  கலை நேர்த்திக் கொண்டவைகள் என்பதைவிட, மொழி வித்தைக் கொண்டவை என்பதே சரி! ஆனால், ஓர் மேதமை கொண்டவனின் எழுத்தது என்பதற்குறிய அடையாளங்கள் ஆங்காங்கே  பளிச்சிடும். ‘உயிர்த்தலம்’ ஆபிதீனும் கூட, “அவரது படைப்பில் வழியும் மேதமையைப் பாருய்யா!” என்றே சிலாகிப்பார்! நகுலனின் படைப்புகளில், அவரது ஸ்தானத்தை திடுமென நவீனன்  கைக்கொள்வான்! சரியென நாம் வாசிப்பைத் தொடர்ந்தால், அவரது பேனா அந்த ஸ்தானத்திற்கு வந்து நின்று கதை நடத்தும்! அப்புறம், அவரது முன்னே பின்னே விழுகிற நிழல் பேசத் துவங்கி விடும். அப்படியே, அவரது சுசீலா வருவதும் போவதும் கதையின் அனிச்சை சங்கதியாகவே இருக்கும்.

நகுலன் இப்படி வாசகனை அலைக்கழிப்பதைப் பற்றி நான் சுட்டிக் காமித்தாலும், நகுலனின் போக்கை அப்படியே விரும்பும்; அதனூடே முழுகி விளையாடும் வாசகர்கள் ஒருபாடு அதற்கென்றே உண்டு! அவரது ஒவ்வொரு படைப்பிலும் உருவமற்ற சுசீலா வந்து போகும் எண்ணிக்கையினை அறியும் பொருட்டு, அவரது படைப்புகளை வாசிக்க  ஆர்வம்  கொள்பவர்களையும் கூட நான் அறிவேன்! நவீன இலக்கியத்தின் முன்னாள் தளகர்த்தருள் ஒருவரும், இன்றைக்கு, சக மக்கள் பொருள் குவிப்பதற்கான நவீன நெறிகளை வகுத்து  தந்திருப்பவருமான ‘அடுத்த வினாடி’ புகழ் நாகூர் ரூமி, எனக்குத் தெரிந்து நகுலனின் சுசீலாவை அவரது படைப்புகளில் தேடுபவராகவும், கசிந்துருகுபவராகவும் கண்டிருக்கிறேன். ( நாகூர் ரூமியின் ‘அடுத்த வினாடி’ படிக்கவும், பொருள் குவிக்கும் ஆசைப்படுபவர்களுக்கு ஒரு வார்த்தை: குவிய இருக்கும் பொன்-பொருளையும், காசு-பணத்தையும், சேமித்துப் பாதுகாக்க வீட்டில் சேமிப்புக் கிடங்கு பல கட்டி முடித்தப் பிறகே…. அந்தப் புத்தகத்தை நீங்கள் படிப்பது உசிதம்.) துபாயின் வெப்ப வெளியில்  ஓடித் திரிந்து  பொருள் தேடும் எத்தனையோ  ஆயிரங்களில்  ஒருவரான ‘சாதிக்’ என்கிற என் இலக்கிய சகாவுக்கு, நகுலனின் படைப்பில் சுசீலா என்பது பல பொருள் தந்து கிளர்ச்சியூட்டும் வார்த்தை! சுசீலா பற்றி நகுலன் சொல்லாததெல்லாம் கூட இவருக்கு தெரியும்!

*
பத்திரப் பாதுகாப்பில் நான் வைத்திருந்த நகுலனின் ‘நாய்கள்’ நாவல், எனது இலக்கிய நண்பர்களின் உதவியால் கானாமல்போய்விட்டது. களவாடியவர்கள் கஷ்டப்பட்டிருக்கக் கூடும். என்றாலும் என் வாசிப்புக்கு அவர்கள் இப்படிக்கூட உதவ முடிந்ததை எண்ணியபோது சந்தோஷமாகவே இருந்தது.  ‘முத்துக்கறுப்பன்’  புகழ் மா.அரங்கநாதன் அவர்கள்,  நவீன இலக்கிய வானில் நான் நினைத்து நினைத்துப் பெருமைக் கொள்ளும் படைப்பாளி! அதைவிட நல்ல மனிதர் அவர்! “இதை வாசித்துப்பாருங்கள்” என்று அவர் சிபாரிசு செய்து தந்த புத்த கம், நகுலனின் ‘வாக்கு மூலம்’! முதல் வாசிப்பில் சங்கடம் தந்த அந்தச் சிறிய நாவலை, சில ஆண்டுகள் கழித்து வாசித்தேன். நகுலன் தனது இறப்புக் குறித்து கொள்ளும் ஆவலை அந் நாவல் பேசிய விதம் மனதில் பல சலனங்களை ஏற்படுத்தியது. அதன் புதியகட்டுமானம் கண்டு சொக்கித்தான் போனேன்.

‘இவர்கள்’. இந்நாவலை முன்வைத்து, இங்கே அவரது எழுத்தை நான் எத்தனைக்கு விஞ்சும் கேலி செய்ய எழுதினாலும், நிஜத்தில் இந்நாவலை அங்குலம் அங்குலமாகவே ரசித்தேன் என்பதே உண்மை. அசாத்திய கோணத்தில் அதில் அவர் மொழியை கையாண்டிருக்கும் விதம் அலாதியானது என்பதில் இரண்டு கருத்து கிடையாது.

நவீன இலக்கியத்திற்குள் தான் பிரவேசித்த காலகட்ட குறிப்புகளோடு நகுலன் எழுதியிருக்கும் நாவல்தான் ‘இவர்கள்’! தான் நட்பு பாராட்டிய படைப்பாளிகள் பலரைப் பற்றி இதில் வியந்து பேசும் நகுலன், தன் நட்பு வட்டத்திற்குள் வந்து நிலையற்றுப் போன சில படைப்பாளிகளைப் பற்றியும் இதில் சூசகமாய் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் நட்பு பாராட்டிய படைப்பாளிகளில் வெளிநாட்டுப் படைப்பாளிகள் சிலரும் கூட அடக்கம். நம்மவர்களில், க.நா.சு.வும்/ மௌனியும் நகுலனிடம் ரொம்பவும் ஆழம் கொள்கிறார்கள். அவர்களோடான நட்பை பாராட்டும் விதமாக நிறைய சங்கதிகளை இதில் எழுதி இருக்கிறார். அவரது நட்பு வட்டத்திற்குள் வந்து நிலையற்றுப் போன படைப்பாளிகளில்  குறிப்பிடத் தகுந்தவர்கள் எனில்…  சுந்தர ராமசாமியையும், பிரமீளையும் சொல்லலாம்.

மேலும் இதில், தனது தாய்/ தந்தை/ தமக்கை/ மற்றும் சகோதரர்கள் என்று பலரைப்பற்றியும் இதில் குறிப்பிடத்தகுந்த  செய்திகளை  சொல்லி இருக்கிறார்.  இவர்களைப்  பற்றியெல்லாம் சொல்லி இருக்கிறார் என்பதைவிட, காலத்தின் பதிவில் தீரப் பதிந்திருக்கிறார் என்பதே சரியாக இருக்கும். ‘இவர்கள்’, அவரது வாழ்க்கைச் சரிதத்தின் மையப் பகுதியைப் பற்றிய பதிவென தீர்மானம் கொள்ளலாம்!  

         
மௌனியினுடைய மகன் ஒருவரின் மனநிலைப் பாதிப்பை/ தனது சகோதரன் ஒருவரின் மனநிலைப் பாதிப்பை/ அவர் இந் நாவலில் கொஞ்சம் பதிந்திருக்கிறார். அப்படி அவர், அதனைப் பதிந்திருக்கிற மொழி தெளிவில்லாமல்தான் இருக்கிறது. இந்நாவலின் பல இடங்களிலும்கூட இந்த தெளிவின்மையை காணமுடிகிறது. இந்தத் தெளிவின்மை  என்பது  நகுலனின்  மனநலப் பாதிப்பின் இடர்பாடுகளா? சொல்லத் தெரியவில்லை.  மௌனியை அறிந்தவர்கள் சிலர், நாவலுக்கு வெளியேயும் அவரது தெளிவின்மையற்ற அல்லது மனநலம் பாதித்திருந்ததுக் குறித்து எழுதியும் இருக்கிறார்கள். இந்தத் தெளிவின்மை என்பது அவரது அசாத்திய திறமையின் இன்னொரு பக்கமாகவே பார்க்கிறேன்.  தனது அதீத எழுத்தின் மூலம்,  தனது  உன்னதத்தின் உச்ச நிலையை கண்டுகொண்டு, அதனை உலகுக்கு அறிவிக்கும் ‘நான் கடவுள்’ புகழ் ஜெயமோகன், நகுலனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிற ஓர் குறிப்பை இங்கே வைப்பது தகும்.

ஜெயமோகன் எழுதிய ‘நினைவின் நதியில்’ என்கிற புத்தகத்தில், சுந்தர ராமசாமி நகுலனை பற்றி சொன்னதாக ஜெயமோகன் ஒரு செய்தியைச் சொல்கிறார்: நகுலனின் குணச்சித்திரத்தை சுந்தர ராமசாமி அவருக்கே உரிய முறையில் விவரித்தார். ‘ஒருமுறை, நாகர்கோயில் வரதுக்கு நானும் அவரும் ரயில்வே ஸ்டேஷனில நிக்கறோம். நகுலன் என் கூடவே இருக்கார். நான் நடந்தா அவரும் நடப்பார். நான் நின்னா அவரும் நிப்பார். பத்திரிகை வாங்கப் போனா அவரும் வருவார்.  ஒவ்வொரு ரயிலா வருது,  இந்த ரயிலா ராமசாமிம்பார். பேசாம இருங்கோ நம்ம ரயில் வாரப்ப சொல்றேன்னு நான் சொல்லிட்டேன். அப்றமும் போற வாற எல்லா ரயிலுக்கும் பதற்றத்தோட அப்டி கேக்கிறார். அதாவது பரவால்லை,  குட்ஸ்  ரயிலைப்  பார்த்து கேக்கிறார்.’ இந்தக் கூற்று இப்படி என்றால்…. நகுலனின் வசீகரமான நிழலும், ‘உலகம் ஓர் பெரிய எழுத்துக் கதை’ எழுதி என்னை  நிமிர்ந்துப் பார்க்க வைத்தவருமான  எஸ்.ராமகிருஷ்ணன், நகுலனை அவரது  அந்திமக் காலத்தில் (அவரின் இறப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு) கண்டு,  அவரது தடுமாற்றம் கொண்ட உடல் மொழியையும்/ வாய் மொழியையும்  அப்படியே பதிவு செய்து ‘தீராநதி’யில் பதிவேற்றிருந்தார். குறிப்பிடத் தகுந்த அந்தப் பதிவு சொல்ல முனைந்ததெல்லாம் ‘கடைசி காலங்கங்களில் நகுலன் கொண்டிருந்த மனநிலைப் பாதிப்பை’த் தான்.

மனிதர்களுக்கு மனநிலைப் பாதிப்பென்பது, ஒருவனுக்கு அறியாது வந்து சேரும் இன்னொரு வியாதி மாதிரி. அல்லது காலத்தில் அவனுக்கு கிடைக்கும் கொடை!  மனநிலைப் பாதிப்பை முன்வைத்து எந்தவொரு மனிதனையும் அளந்துவிட முடியாது. மனிதவர்க்கத்தில் அப்படியொரு பாதிப்பிற்கு ஆளாகாத மனிதனே கிடையாது. பீடிக்கும் அளவுகள் வேண்டுமானால் வித்தியாசப் படலாம். ஏதோ ஒரு தெளிவில் மனிதன் என்ன சொல்கிறான் என்பதைத்தான் நாம் பார்த்து தீரவேண்டும்.  வட்டத்திற்குள் வட்டமாக சுழன்றுகொண்டிருப்பதுதான்  இயற்கையின் நியதியாகவும் இருக்கிறது. மனநிலைக் கொண்டவராக கிசுகிசுக்கப்பட்ட அதே நகுலனின் தெளிவை கீழே பாருங்கள். அவரது உயர்ரக அங்கதத்தை இங்கே ரசியுங்கள்.இதுவும் ‘இவர்கள்’ நாவலின் வரிகள்தான். 

‘குழந்தை பிறந்தவுடன் அதற்கு, ‘இல்லாத’ வியாதிகளுக்கெல்லாம் ஊசி போடவேண்டும். எதற்கும் பாதுகாப்பு வேண்டியிருக்கிறது. ஆஸ்பத்திரி போகவே பயமாக இருக்கிறது.  ஒரு டாக்டரைப் பார்த்தால் போதாது; ஏராளம் டாக்டரைப் பார்க்க வேண்டும்; மூத்திரத்தை, மலத்தை, துப்பலை, ரத்தத்தை – எல்லாவற்றையும் பரிசோதிக்க வேண்டும். ஒரு பரிசோதனைக்  கூடத்தி லிருந்து இன்னொரு பரிசோதனைக் கூடத்திற்குச் செல்லவேண்டும். ஒவ்வொரு ரோகியும் ஒரு குற்றவாளி; அவன் கேஸ்கட்டைப் பார்த்துத்தான் மருந்து கொடுக்க முடியும். உங்கள் உடல் உள்ளில் இருப்பதுகூட எக்ஸ்ரே மூலம் ஒரு திறந்த புத்தகம். இக்கட்டான கட்டத்தில் ரத்தம், பிராணவாயு இவற்றிற்கெல்லாம் முன் கூட்டியே ஏற்பாடு செய்யவேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் மனிதனால் இனிமேல் சாவதானமாகச் சாக முடியாது! இவ்வளவு ஏற்பாடுகள் இருந்துகூட மனிதன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான்.  அதைக்கூடச்  சரியாக்கிவிடலாம் என்று சொல்கிறார்கள். மனிதன் மரணத்தை வென்று விடுவான். இயற்கை வைத்தியம் கூட மூத்திரம் குடிப்பதில் முடிகிறது.  விஞ்ஞானி உடலை மாத்திரம் இல்லை – உள்ளத்தையும்  விட்டு வைக்கவில்லை. ஃப்ராய்டு போன்றவர்கள் மனிதனின் மனதின் மூடியைத் திறந்ததும் மூக்கைப் பிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என்கிறார்கள்!’

‘பொருளாதாரத் தத்துவஞானிகளுக்கு மனிதன் தான் கணக்கெடுக்க ஒரு புள்ளி;  மனோதத்துவஞானிகளுக்கு ஒரு பிறவி-நோயாளி,  பிறகு நவீன தத்துவ மோஸ்தர்கள் சாவின் முன்  தன் சுயேச்சை நிலை நிறுத்த யத்தனிக்கும் ஒரு முரட்டுப் பிள்ளை.  இயற்கையாக என்று இன்று ஒன்றுமில்லை; எல்லாம் சூழ்நிலை விவகாரம். மொழி-அடிப்படை-ஒரு-தத்துவக் கொள்கைப்படி பார்த்தால் ஜடங்களை மீறி மனித மனது என்று ஒன்று இருக்கிறதா என்ன? மேஜை, நாற்காலி என்பதுபோல் நாமும் கண் முன் காணும் ஒரு சாதனம்.'(இவர்கள்/பக்கம்-120, 121)

அவரது தெளிவின்மை என்பது, அவரது அசாத்திய திறமையின் இன்னொரு பக்கமே! நவீன இலக்கிய வட்டத்தில் நகுலனின் மறைவுக்குப் பிறகு, படைப்புகளால் அவர் வகித்த அந்தஸ்த்துக்குரியதோர் இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது.

***

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
satajdeen@gmail.com

***

See also : Writer Nakulan – Works, Collections, Poems, Memoirs, Blog Anjali

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: