‘மனுசன் ஒண்ணு பாக்கி விடலே, எல்லாத்தையும் சொல்லிட்டாரு!’ என்று வாய்கொள்ளாத சிரிப்புடன் கி.ரா அவர்களின் ‘தொடுசுகத்தை’ அனுப்பி வைத்தார் நண்பர் தாஜ். தீராநதியில் வந்ததாம் (2004 அக்டோபர் 25). படுசுகம் இந்தத் தொடுசுகம்! ‘தொடுசுகம் என்பதும் ஒருவகை மன்மதந்தான்’ என்று சொல்வார் எங்கள் கி.ரா. அவருடைய நாட்டுப்புற உலகத்தைச் சேர்ந்த ‘அடப்பக்காரன் கதை’ச் சுட்டியைக் கீழே கொடுத்திருக்கிறேன். அதையும் படித்து யாரையாவது உரசுங்கள்! பொழுது போவனுமில்லே…
*
கி. ராஜநாராயணன்
வழக்கம்போல் அன்றைக்கும் தோட்டத்திலிருந்து திரும்புகிற வழியில் ரங்காநாயக்கர் வீட்டுக்குள் நுழைந்தேன். என்னைக் கண்டதும் அவர் சொல்லுகிற வரவேற்புச் சொல்,”அந்தப் பல்லுக் குச்சியெ தூர விட்டெறிஞ்சிட்டு உள்ள வந்து உக்காரு”. அதுபடியே செய்தேன். நாயக்கர் வழக்கம்போல் அந்நேரம் காலைச் சாப்பாட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.
கும்பா நிறைய்ய கம்மஞ்சோறும் செம்பு நிறைய பச்சைத் தண்ணீரும் கொண்டுவந்து வைத்தாள் அவரது இல்லாள். குத்துக்கால் வைத்து உக்காரு பலகையில் அமர்ந்தார். வெஞ்சனத்துக்கு தரையில் அய்ந்தாறு ஈருள்ளி (வெங்காயம்).
சாப்பிட அவர் உட்காரவும் அவருடைய வீட்டுச் செல்லக்கோழி அவருக்குப் பக்கத்தில் வரவும் சரிய்யாக இருக்கும்.
மற்றவர்கள் இப்படி வந்தால் கோழியை உடனே விரட்டி விடுவார்கள். என்னோடு பேசிக்கொண்டிருந்த அவர் அந்தக் கோழியின்மேல் வைக்கக் கையைக் கொண்டு போனதும் அது, சேவல் ‘மிதிக்க’ அமர்ந்து தருவதுபோல உட்கார்ந்தது!
சிரிப்பு வந்தது எனக்கு. அவர்களும் சிரித்துக் கொண்டார்கள்.
நாயக்கர் சொன்னார் வீட்டுல மட்டுமில்லெ, ஊர்ல எங்கேயும் சேவல்க இல்லெப்பா; பாவம் என்ன செய்யும் இது. கொக்கு நோய் வந்து எல்லாமெ செத்துப்போச்சி என்று சொல்லிக்கொண்டே அதைத் தடவிக்கொடுத்தார்.
“சரி, எப்படியோ ஒங்க தடவுதல்லெ முட்டெ வைக்கட்டும் அது!” என்றேன்.
அதன்பிறகு, எங்கள் பேச்சு தொடுசுகத்தைப் பற்றித் திரும்பியது.
*
அங்கிருந்து வந்தபிறகும் இந்தத் தொடுசுகத்தைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
நாம் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளிலேயே நாய்தான் தொடுசுகத்தை ரொம்பவும் விரும்பும். நாம் வெளியூர் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுமே பாய்ந்துவந்து நம்ம பேரில் விழுந்து கட்டிப் பிடிடா என்னை என்று சொல்லுவதுபோல இருக்கும் அதன் ஆரவாரம்.
அது எங்கேயாவது வெளியே போய்விட்டு வந்தாலும், உட்கார்ந்து கொண்டிருக்கும் நம்மீது வந்து ஒட்டி உராயும்; நம்முடைய கைகளுக்குள் அதன் முகத்தை நுழைத்து ‘தடவி விடு என்னை’ என்கும்.
ஒரு நாய் மட்டும் வளர்ந்தால்தான் இந்த அன்புத்தொல்லை. இரண்டு நாய் வளர்க்க முடிகிறவர்களுக்கு இப்படி இல்லை.
எப்பவுமே இப்படியான வளர்ப்புப் பிராணிகளை ஜோடி சேர்த்து வளர்ப்பதுதான் மனுசத்தனம். நமக்கு சுயநலம்; அதன் பிரியம் பூராவும் நம்ம பேரில்தான் இருக்கணும் என்று ஆசை. அன்னப் பட்சிகளில் ஒரு வகை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவை எப்பப் பார்த்தாலும் தனது ஜோடியுடன் முறுக்கு விழுந்த கயிறுபோல கழுத்துக்களை ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டு இருக்குமாம்.
பொதுவாக தொடுசுகத்தை விரும்பாத, அந்தச் சுகத்துக்கு ஏங்காத உயிர்ராசிகளே கிடையாது மனிதராசி உட்பட.
முதல்முதலில் இது இவனுக்குக் கிடைப்பது பெற்ற தாயிடமிருந்துதான். இது கிடைக்காத அதிஷ்டங்கெட்ட(அனாதைப்)ப் பிள்ளைகளை நான் கவனித்திருக்கிறேன். அவைகள், கட்டுக்கடங்காத கழிசேட்டைகள் செய்துகொண்டே இருக்கும். எடுத்து வளர்ப்பவர்களிடம் அப்படியொரு பழிவாங்கல்போல நடந்துகொள்ளும். மனுஷப்பய பிள்ளைகளுக்கு இந்தத் தொடுசுகம் என்ற அவ்சதம் (அவுடதம்) ரொம்ப ரொம்பத் தேவை.
இது பெறுகிறவர்களுக்கும் இன்பம். தருகிறவர்கக்கும் இன்பம்.
இந்தச் சுகம் தாயிடம் முளைவிட்டு தந்தையிடம் வேர்விட்டு சகோதரர்களிடம் இலைவிட்டு நண்பரிடம் மொட்டாகி காதலரிடம் பூவாகி.. என்று வளர்ந்துகொண்டே போகும். உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் இந்தத் தொடுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அவை எந்தவகை உணர்ச்சியானாலும் சரி.
தொடுதலினுடைய கிளைவிடுதல் என்பது பலவகைகள். ஆரம்பத் தொடுதல், தடவுதல், உராய்தல், அழுத்துதல், அமுத்துதல், நிமிட்டுதல், செல்லத்திறுக்கல்கள், நுள்ளுதல் (கிள்ளல் அல்ல), தட்டுதல், இப்படி இன்னும் இன்னும். இதன் ஆக உச்சம் தழுவல், ஆறத் தழுவுதல்.
வடநாட்டு சங்கீதத்தின் ஒரு கனராகத்தின் ஆரம்பநிலை போலத்தான்.
மெள்..ளத் தொடங்கி, நகர, நகர வேகம்பிடிக்கும் இந்தத் தொடுசுகத்தின் வளர்ச்சி.
தொடுதலின் சில முறைகள்:
பார்வையால் தொடுதல்
ஒலியால் தொடுதல்
இந்த இடத்தில் சொல்ல ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருது.
ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்தது.
தொலைபேசியில் என்னோடு வேடிக்கை செய்து பேசும் பெண்குரல் அது.
“இப்போ ஒண்ணு தெரியுதா?”
“என்னது?”
“நம்ம ரெண்டு பேரோட காதுகளும் நெருக்கமா ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டு இருக்குது”
“அட, இது இத்தனை நாளும் தெரியலையே எனக்கு!”
“இப்பொ நாம் ஒருத்தருக்கொருத்தர் தொட்டுகிடுறோமெ?”
“தொட்டுக்கிடுறோமா!”
“ஆமா, ஒலியாலெ (பேச்சொலியால்!)”
“அட, சட்”
இப்படியும் ஒரு அனுபவம்.
இந்தச் சுகத்தை ஒருவகைப்பசி என்றே சொல்லலாம். இந்தத் தாளாத பசியின் மறுபக்கம்தான் நெருக்கமான திருவாழாக் கூட்டத்தினுள் சிக்கி உடம்பையே உராயக் கொடுப்பது. அதில் ஆனந்தங் காணுவது. இதுக்கென்றே “கட்டுச்சோறு கட்டிக்கொண்டு” திருவிழாக்களுக்குப் போய்வருகிற ஆண், பெண் இருக்கிறார்கள். இதை ஒருவகைக் கள்க்குடிக்கு ஒப்பிடலாம்.
இதுகளென்ன, இதுகளையும் விட முற்றிய “கேஸ்”களெல்லாம் இருக்கின்றன. அதுகளின் வேண்டுதலெல்லாம் சாதாரண கசக்கிப் பிழியும் உராய்தல்கள் அல்ல; தன் உடம்பின்மேல் தப தப என்று அடிகள் விழவேணும்; ஆனந்தமாக அதை அனுபவிக்க வேணும்! இதிலும் ஆண் பெண் விலக்கல்ல. தின்பண்டத்தைத் தின்னுவது போல ‘அடிதின்கிறது” என்று ஒரு சொல்ப் பிரயோகமே இருக்கிறது.
*
எதுக்கும் ஒரு எதிர்ப்பதம் இருப்பதுபோல இந்தத் தொடுசுகம் என்ற சொல்லுக்கும் எதிர்ச்சொல் இருக்கிறதா? தெரிந்தவர்கள் சொல்லலாம்.
எனக்குத்தெரிய “தொடுமுனை” என்று ஒரு சொல் உண்டு. சவாரிக் குதிரைகள், மாடுகளில்தான் தொடுமுனை உண்டு என்று நினைக்க வேண்டாம், மனிதர்களிலும் உண்டு. ரொம்..ப வேடிக்கையாக இருக்கும் அதைப் பார்க்க! நீங்கள் அவனைத் தொடவே வேண்டாம்; அவனுக்கு நேராய் ஒரு விரலை நீட்டினாலும் போதும். துள்ளிவிழுவான், “ஏய் கையைக் கீழே போடு!” என்று கத்துவான், அல்லது பாய்ந்து நம்மைத் தாக்கிவிடுவான் அல்லது ஓட ஆரம்பித்து விடுவான்!
கல்யாண வீடுகளில் இப்படி ஆட்கள் வந்துவிட்டால் அங்கே ஒரே ரகளைதான்.
ஒரு வெளியூர்க் கல்யாண வீட்டில் நான் ஒரு “கண்காட்சியை”யைப் பார்க்க நேர்ந்தது.
ஒரு பதின்வயசுப் பையன். பார்க்க தளதளவென்று ஜோராய் இருந்தான்; பார்த்தாலே சொல்லிவிடலாம் அவன் ஒரு “ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி” என்று.
அவனுக்கு இருபக்கத்திலும் பெரிய்ய மீசைகள் வைத்த பயில்வான்கள் போல ரண்டுபேர் அந்தப் பையனுக்குக் காவல்! அவர்க்ள் கையில் கம்புகளுக்குப் பதிலாக கருக்குகள் செதுக்கிய பச்சைப் பனை மட்டைகள்; கிரிக்கெட் துடுப்புகள் போல.
‘ஏம் பனைமட்டை; லாட்டிக் கம்புபோல வைத்துக் கொள்ளலாமே’ என்று கேட்டதுக்கு,
கம்பு என்றால் காயம்படும், ரத்தம் வரும்; இவை சத்தம்தான் பலமாகக் கேட்கும்; ரத்தகாயம் படாது என்று பதில் வந்தது.
பையனுக்கு உடல்க் கூச்சம் ரொம்பவாம் (தொடு முனை). அதனால் பள்ளிப்படிப்பு கெட்டது. பள்ளிப்பிள்ளைகளும் மற்ற ஊர்ப்பிள்ளைகளும் பொழுதுபோக்குக்கு அதையே (தொடவருவதும் இவன் கூச்சல் போடுகிறதும் இதைக்கண்டு அவர்கள் உரத்துச் சிரிக்கிறதும்) என்று வைத்துக்கொண்டு விட்டார்கள்.
கட்டாயமாகப் போய்த் தீரவேண்டிய குடும்பவிழாக்களுக்கு மட்டுமே இப்படிப் பாதுகாப்போடு அனுப்பிவைக்க வேண்டியது ஏற்பட்டுப் போச்சாம்.
என்ன செய்யம்னு தெரியலை என்று வருத்தப்பட்டார் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்.
ஆறுதலுக்கு இப்படிச் சொன்னேன்:
படிப்பு இல்லை என்று சொல்லுகிறீர்கள்; கவலையே வேண்டாம். வேண்டியதுக்கும் மேலேயே- எக்கச்சக்கமா பணம், செல்வம் இருக்கு என்று வேறு சொல்லுகிறீர்கள். இதைவிட வேற வாய்ப்பு என்னவேணும். ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து விட்டுவிடுங்கள் பயலை. நாளைக்கு இவன் மந்திரியாக வந்துவிட்டால் இந்தமாதிரி குடுமியும் வீரப்ப மீசையும் பனைமட்டையும் கொண்ட பாதுகாப்புப் “படை”க்குப் பதிலாக அசல் ஒண்ணாம்நம்பர் கரும்பூனைப்படையையே பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வார்கள். ஒரு பயல் கிட்டெ வந்து கிச்ச மூட்ட வரமுடியாது என்றேன்.
“அப்படிங்கிறீங்கெ?”
அவர் முகத்தில் நிறைவானந்தம் தெரிந்தது.
*
நன்றி : தீராநதி , கி. ராஜநாராயணன் , தாஜ்
*
பார்க்க : நாட்டுப்புற உலகம் – கி. ராஜநாராயணன்
மஜீத் said,
05/08/2010 இல் 12:27
நமக்கு மண்டைக்குள்ளே எக்குத்தப்பா அரிக்கும்;நம்மளே எங்கே சொறிவதுன்னு யோசிக்கும்போது,வேற யாரோ வந்து கரெக்ட்டா அங்கே சொறிஞ்சு விட்டா எப்படி இருக்கும்? அந்த உணர்வு கிடைக்கும் கி.ரா.வை படிக்கும்போது.