கதை, வசனம் – தாஜ்

கதை, வசனம்

தாஜ்

‘தமிழ்த் திரை உலகின் முன்னேற்றப் பயணம் சரியான கோணத்தில் இல்லை. சினிமா குறித்த தீர்க்கமான ஆளுமை கொண்டவர்கள் அங்கே நுழைய பல தடைகள் இருக்கிறது. வெளியில் இருக்கும் அந்தத் திறமையாளர்களின் பிரவேசத்தால்தான் தமிழ்ச் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகரும்!’  . இன்றைக்கு  நமது சினிமா  கணிப்பாளர்கள்  தமிழ்ச் சினிமாவின் முன்னேற்றம் பற்றி பேசுகிறபோது இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள். அவர்களது கூற்றுபற்றி யாரேனும் என்னிடம் அபிப்ராயம் கேட்டால், என் பதில்…’Yes!’

நான் சட்டென பதில் அளித்தது உங்களுக்கு வியப்பைத் தரலாம்! என்னைத் தெரிய வராததினால்தான், அத்தகைய வியப்பு உங்களுக்கு!  சினிமாவும் நானும் என்பது குறித்து ‘ஒன் லைன் ஸ்டோரி’ சொல்வதானால்,  ‘சினிமா விருட்சத்தின் தரிசனத்திற்காக,  முப்பது வருடக் கனவுகளோடு இன்னும் சோராதிருப்பவன்’ என்று சொல்லலாம். தமிழ்ச் சினிமா அடுத்தக் கட்டத்திற்கு நகர, திறமையாளர்களின் வரவைப் பற்றி கணிப்பாளர்கள் சிரத்தையோடுதான் குறிப்பிடுகிறார்கள். யோசிக்கிறபோது, அப்படியானவர்களில் ஒருவனாக நானும் இருப்பேன் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படித்தான் நம்புகிறேன்! மிதமிஞ்சிய நம்பிக்கையிது என்றாலும், அப்படியான நம்பிக்கைக் கொள்வது தவறில்லை என்றே கருதுகிறேன். இத்தனை  காலத்திற்கு எத்தனை பெரிய இயக்குனராக வந்திருக்க வேண்டியவன் நான்! குறைந்த பட்சம், பரவலாக பேசப்பட்டிருக்க வேண்டிய ‘கதை, வசனகர்த்தா’ என்றேனும் பெயர் போட்டிருக்க
வேண்டும்!

காலத்தின் கோலம், இன்னும் நான், அதைப் பற்றிய நம்பிக்கையாளனாக மட்டுமே இருக்கிறேன்!

அந்தத் துறையில் நுழைய பல தடைகள் இருப்பதென்பது நிஜம்தான்! நிழலை நிஜமாக்கிக் கொண்டிருக்கும் இடம் அது! தொழில் ரகசியம் காக்கப்படத்தான் வேண்டும். தடைகளுக்கு அவசியமும் இருக்கிறது. மார்பே இல்லாத, பின்புலத்து கனம் காணாத நாயகிகளுக்கு, அதை உருவாக்கும் ரகசியங்கள்  வெளிப்பட்டு விடக்கூடாதுதான்! கதையே இல்லாது படம் எடுக்கப்படும் போதும், கடைசிவரை அதன் கதை காக்கப்படத்தான் வேண்டும். இன்னொரு தயாரிப்பாளன் கிஞ்சித்தும் அதைத் திருடிவிடக் கூடாது! பலவித ஜாக்கிரதைகள் பொருட்டு அந்தத் துறைக்கு தடைகள் நிச்சயம் வேண்டிதான் இருக்கிறது.

இங்கே பிரச்சனை என்பது சினிமாவை தேடிப் போகும் திறமையாளர்களுக்கு அதன் கதவு திறக்காத தடைகளைப் பற்றிதான்.  சினிமாவை மும்முரமாய்  தேடி, கோடம்பாக்கத்தை சுற்றிச் சுற்றி நான் வலம் வந்த காலம் ஒன்று இருந்தது.  அப்பவும் அங்கே நுழைய இதே கெடுபிடிகள்தான்!  நெருங்கவே முடிந்ததில்லை!  அந்த அடைபட்ட கதவைக் கண்டு பெரு மூச்சு விட மட்டுமே முடியும். அதைதான் செய்து வந்தேன்.  ஆனால் தன்னைக் காவு கொடுக்க முன் வருபவர்களுக்கு  அந்தக் கதவு திறக்கும்!  அங்கே செல்லும் ஒருவன், தனது அடிப்படைகளை தயக்கமற இழக்க வேண்டிவந்தால், இழக்கவேண்டும்! தயக்கம் ஆகாது. கொஞ்சமும் யோசிக்கவும் கூடாது. குறிப்பாய் முரண்படவே கூடாது. யோசிக்கிறபோது, யோசிக்கத் தகுந்த எவனுக்கும் அது எளிதல்ல! “கதாநாயகியோடு சின்ன டிஸ்கசன் இருக்கிறது நீ கொஞ்சம் வெளியே நில்!” என்று இயக்குனர் சொன்னால், ஆரம்பகால கலைஞன் இரண்டு தரம் தலையை அசை த்து, தாழ்ப்பாள் இடப்படும் ரூமுக்கு வெளியே நின்றே ஆகவேண்டும். “தயாரிப்பாளர் கெஸ்ட் ஹவுஸ்க்கு இவளை மீண்டும் கொண்டுபோய் விட்டுவிட்டு வா!” என்று அவன் சொன்னால், நடுநிசியையும் பொருட்படுத்தாது கிளம்பிவிட வேண்டும்!  

மக்களின் கண்டெடுப்பாக, வெகுஜன அங்கீகாரத்துடன் சினிமாவுக்குள் வருபவர்களுக்கு,  காவே இல்லாமல்  அந்தக் கதவு திறக்கிறது!  மறுக்க முடியாது. வாழும் உதாரணங்கள் நிறைய உண்டு! தேர்ந்த நாடக நடிகர்கள், வீதி நாடக கலைஞர்கள், பிரபலமான எழுத்தாளர்கள், சபையை கிறங்கடிக்கும் பாடகர்கள், இசைக் கலைஞர்கள்,  உலக அழகியாக தேர்வு  கொண்டவர்கள் என்று பலர்! இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்றோர்களின் சின்ன/பெரிய வீட்டுப் பிள்ளைகள் பின்  கேட்டின் வழியே, வலியே இல்லாமல் உள்ளே வந்து கொண்டிருப்பார்கள் என்பது தனி கதை! அவர்கள் வருவதை தடுக்கமுடியாது, தடுக்கவும் கூடாதுதான். ஆனால், அவர்கள் உள்ளே வருகிற வேகத்தை நீங்கள் பார்க்க வேண்டுமே! வீட்டில் பொங்கிச் சாப்பிட அரிசி, புளி, சமையல் சாமான்களை இங்கே சம்பாதித்து வாங்கிப் போனால்தான் ஆச்சு என்கிற அசாதாரணமான வேகமாக இருக்கும்! சினிமா என்பது கலை சார்ந்த துறை என்பதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதே கிடையாது. படிக்கும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு வருபவர்கள். அவர்களுக்கு, கலை என்கிற பதத்தின்  கனபரிமாணம் பிடிபட சான்ஸே இல்லை.

அசல் பைத்தியங்கள் சிலர், கண்டதைக் கத்திக் கொண்டு, ‘டக்கு புக்கு கொட்டாங்கச்சி’ பாட்டு பாடியபடி, திரையுலக பெருங்கதவை கிஞ்சித்தும் பொருட்படுத்தாது, சுவர் தாண்டிக் குதித்து சர்வ சாதாரணமாக சினிமா நீரோட்டத்தில் சங்கமித்து விடுவார்கள்! அங்கே உள்ளவர்களாலும்  இவர்களை அடையாளம் கண்டு தெளிய முடிவதில்லை. நம்மை மாதிரி  இன்னொருவன் என்று தழுவியும் கொள்கிறார்கள். இந்தக் கிறுக்குகளைப் பற்றி, நான் ஏனோதானோவென குறிப்பிடுவதால் நீங்களும் அவர்களை அப்படி கருதிவிடக் கூடாது. சினிமா பற்றிய நுட்பங்கள் அவர்கள் அறியவராத சித்து என்றாலும், அடுக்கு மொழி வசனத்திற்கு உலக உரிமை கொண்டவர்கள் அவர்களிலே உண்டு!

எனது தமிழ்மக்கள் முயன்றால் என்னைக் கண்டெடுத்து, அங்கீகரித்து சரியான திக்கில் உந்தி உயர்த்திவிடலாம்! ஆனால், அவர்களுக்கு என்னை யாரென்று எப்படி தெரியும்? நான் என்ன அத்தனைக்கு பிரபலமானவனா? ஆனால், எனக்குள் வலுவானதோர் சினிமா படைப்பாளி உறங்குவது என்னவோ உண்மை! அதனை நானே வலிய பிரகடனப்படுத்திக் கொள்ள முடியாது! மக்களாலும் அதை அறிந்துணர இயலாதுதான்!  உடன் வாழும் நண்பர்களே என்னை இன்னும் முழுமையாக அறிய வராத போது, மக்களை நொந்து என்ன செய்ய? எப்பாடு பட்டேனும் முதலில் நான் மக்களிடம் போய் சேர்ந்தாகனுணும். அதற்கு ஏதேனும் நான் கலா பூர்வமான வித்தைகள் நிகழ்த்த வேண்டும். முயற்சிக்கத்தான் செய்கிறேன். கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், நாடகமென என் எழுத்தால் என்னன்னமோ செய்கிறேன். ஆனால், மக்கள் இன்னும் என்னை  திரும்பிப் பார்த்ததாகவே தெரியவில்லை! எந்நேரமும் விழிப்பிலும்  தூக்கம் கொண்டவர்களை, எந்த வித்தைக்காரனால் என்ன செய்துவிட முடியும்?

‘என்னை இன்னும் முழுமையாய் அறியவராதவர்கள்’ என நான், எனது எல்லா நண்பர்களையும் ஒருசேரக் குற்றம் சாட்டிவிட முடியாது. விதிவிலக்கு உண்டு. ‘சுப்ரமணியன்’ என்கிற ‘மணி’ அப்படியான ஒரு நண்பர்! கொஞ்ச காலம், நான் துபாய்க்கு பிழைக்கப் போனபோது அங்கே வைத்து இவரைச் சந்தித்தேன். என்னை விட சினிமா துறையை அதிகம் நேசிப்பவர். நான் அதைக் கனவாகக் கொண்டவன் என்றால், அவர் அதை தன் இரத்தத்தில் பாய்ச்சிக் கொண்டிருப்பவர்!  இத்தனைக்கும் அவரது கனவு,  அவரை மாதிரியே எளிமையானது!  ‘ஒரு தமிழ்ப் படத்தில் ஒரு பாடலாவது எழுதிவிட வேண்டும் சார்!’. இதைவிடப் பரிதாபமான கனவு வேறேதும் உண்டா? குடித்த சாராயத்தின் போதை இறங்குவதற்குள் மூன்று படங்களுக்கு, ‘முவாறு பதினெட்டு’ப் பாடல்களை எழுதிவிடும் கவிஞர்கள் உள்ள ஒரு துறையில் இவரது கனவு இப்படி! எனக்கு நம்பிக்கை இருக்கிறது,  நிச்சயம் இவரது கனவு பலிக்கும்!  அந்தச் சினிமா  கவிஞர்களுக்கே உரிய விசேஷ தகுதியெனக் கருதப்படும் ஒன்று இவரிடம் வலுவாக உண்டு! ஒரு ‘ஃபுல்’லுக்கு அவர்கள் தலை சாய்த்துவிடுவார்கள் என்றால், நண்பர் அப்படியே நிமிர்ந்து நிற்பார்!  

நாங்கள் இரண்டு பேரும் சந்தித்துக் கொள்ளும்போது, எங்களுக்குள் பேச சினிமாவைத் தவிர வேறு பேச்சே இருக்காது. கலைப்படம் கத்திரிக்காய் படம் என்றிருந்த என் சிந்தனைத் தூசிகளை எல்லாம் சுத்தப்படுத்தி கண்களைத் திறந்த மனிதர் அவர்! ‘படம் என்றால், மசாலா படம்தான் படம்!’ எத்தனை தீர்க்கமான பார்வை! “மாஸ் சினிமாவை மனசில வைத்துக் கொண்டு ஒரு கதை எழுதுங்கண்ணே!” என்று மணி வற்புறுத்தவும், வேலைக்கு மூணு நாட்கள் ‘சிக்’ லீவ் போட்டேன். பிறகுதான் தெரிந்தது அது வேஸ்ட் என்று. அரை மணியில் கதை ரெடி!  மணி ஆச்சரியபட்டுப் போனார். எனக்குத் தெரியும் இந்தக் கதைக்கு அரை மணி நேரமே அதிகம்! இந்தக் கதை கிடக்கிறது, என்னை புரிந்துக் கொண்டாரே!  அது  எத்தனை பெரிய விசயம்! எனது ‘விசா’ பிரச்சனையால் சில மாதங்களிலேயே அவரைப் பிரிந்து ஊர்வர வேண்டியதாகிவிட்டது.  கலைஞர்களை காலம் என்றைக்கும்  சந்தோசமாக  இருக்க விடுவதில்லை!  அவன் கதற வேண்டும், நசிய வேண்டும், பிச்சை எடுத்து படாதபாடு பட வேண்டும். அப்பவும் போதாது அதற்கு! ஆனால், பஞ்சைப் பராரிகளின் வயிற்றில் அடிக்கும் லேவாதேவிகாரன்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிக்கும்! காலம்தான் எத்தனை குரோதமானது!

ஊர் வந்த பிறகு மீண்டும் என் நம்பிக்கை கொஞ்சமும் சோராதிருந்தது. மணி மாதிரி இன்னும் சில மகத்தானவர்கள் என்னை அடையாளம் காண மாட்டார்களா என்ன? தொடர்ந்து வெகுஜனம் என்னைப் புரிந்துகொள்கிற நிலை விரிவடையாமலா போகும்? நிச்சயம் நடந்தேறும். ஆனாலும், அநியாயத்திற்குதான் தாமதப்படுத்துகிறார்கள்! ஒரு கலைஞன் எத்தனை ஆண்டுகள் கைகளைக் கட்டிக் கொண்டு சும்மாவே இருக்க முடியும்? கொண்ட தாகமும் வற்றிவிடாதா?

தொழில் நிமிர்த்தமாகவும், நிமிர்த்தமில்லாமலும் ஊரில் மக்களோடு மக்களாகத் திரியும் நேரங்களிலும் கூட, என் கனவுகள் விடுபடாமல்தான் இருக்கிறேன்! தென்படும் பெட்டிக்கடைகளின் ஒட்டுத் திண்ணையில் ஒதுங்கும் நேரமும், பலரும் பார்க்க மோட்டுவளையை பார்த்தபடி, சிகரெட் புகையோடு ஆழ்ந்துவிடுறேன். சின்ன ஓய்விலும், ஆழ்மனதில்  உருவாகும் காட்சிகளை, இடம் பொருள் பாராது, உடனுக்குடன் மௌன நிலையில் அதை ஓட்டிப் பார்ப்பவனாகவே இருக்கிறேன். அந்நிலையில் என்னை, எத்தனை இடத்தில் எத்தனை பேர்கள் பார்த்திருக்கிறார்கள்! ஒருவருக்கேனும் நான் ஏன் இப்படியெனத் தோண வேண்டாமா? சினிமாக்காரனைத் தவிர வேறு யார், அப்படியோர் மோன நிலை கொள்ள முடியும்? இதையெல்லாம் மக்களுக்கு நான் சொல்லிக்கொண்டா இருக்க முடியும்? அவர்களாகவே அல்லவா கண்டு கொண்டு மெச்ச வேண்டும்!  சினிமாவை உயிராகக் கொண்டாடும் மண்ணின் மக்கள் விசேஷ  ஈர்ப்போடு  இருக்க வேண்டாமா? பொதுவில் இன்றைக்கு, நல்ல சினிமா வேண்டும் என்பவர்கள் நாட்டில் குறைந்து விட்டார்கள். இல்லாத பட்சம்,  என்னை இன்னேரம் கண்டுகொண்டிருக்க  மாட்டார்களா! ரசிகர்கள், சினிமாவில் இப்போதெல்லாம் கிராபிக்ஸ் தண்டனை அனுபவிக்கிறார்கள் என்றால் சும்மாவா!

என்ன யோசிக்கிறீங்க, நான் கொஞ்சம் உளறுவது போல தோணுகிறதா? என் கூற்றுகளில் பைத்தியக்காரத்தனம் நெளிகிறதா? அப்படி சிலர் கிசுகிசுப்பதை நான் அறிவேன். ஏன், எனக்கே தெரியும்! ஆனால், எப்போது நான் தெளிவாகப் பேசுகிறேன், எந்த இடத்தில் நான் நொடித்துக் கொள்கிறேன் என்பதுதான் விளங்குவதில்லை! ‘விசனம் கொண்டவனுக்கும், வித்தைக்காரனுக்கும் உறக்கம் வராது’ என கீதை சொல்வதாக நம்ம சிவாஜி கௌரவத்தில் அழுத்தந் திருத்தமாக காதடைக்கக் கத்தி, கேட்டு இருக்கிறேன்!  அதுதான் எத்தனை சரி!  படுத்தவுடன்  நான் தூங்கி நாளாச்சு! தலையணையில் தலை சாய்த்தால், சினிமாவுக்கு கதையெழுத சிந்தனை வியாபித்து விடும்! ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கதை!

திங்கள் – தியாகம், செவ்வாய் – பாசம், புதன் – காதல், வியாழன் – தாலி செண்டிமெண்ட், வெள்ளி – தங்கை செண்டிமெண்ட், சனி – சண்டை, ஞாயிறு – காமெடி. பின் எப்படி படுத்தவுடன் நான்  தூங்குவதாம்? சினிமா சினிமாவென்றே தூக்கத்தை சிதைத்துக் கொண்டவனும், விசனம் கொண்ட வித்தைக்காரனும் நான்தான்! நானேதான்! பைத்தியம் பாய்ந்து புடுங்க இது போதாதா? சரி, யார்தான் பைத்தியமில்லை? நீங்கள் வாழ்க்கைக்குள் வந்துவிட்டவரா? போதுமே! ‘I.S.I.’ முத்திரை பெற்றவராச்சே நீங்கள்! அதிர்ச்சியாக இருக்கிறதா? என்ன வேண்டிகிடக்கிறது அதிர்ச்சி? உங்களுக்கு  காதல் அரும்பும் பருவத்தே, ‘ஏக தேச நீரோட்டத்தில்’ நீங்கள் கலந்து விடுகின்றீர்கள்! அதை விளங்கிக் கொள்ளத்தான் தாமதமாகும்! வாழ்க்கை என்கிற தாம்பத்தியத்திற்குள் வந்து, கால்கட்டெல்லாம் சரியான இறுக்கத்தில் முடிச்சாகி விட்டால், ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் நிச்சயம் அது உங்களுக்கே விளங்க வரும்.   

நம்பிக்கைத் தரும் புத்தகங்களை தேடித் தேடி வாசித்ததினால் என்னவோ, ஆசைகளைக் கனவில் விரித்து, அதை எண்ணங்களாக்கி அசைபோடும் பழக்கம் என்னிடம் தொற்றிக்கொண்டு விட்டது! ‘எண்ணம்தான் எல்லாம்! எண்ணமே மஹா சக்தி! நம்பிக்கைக் கொண்டு அதை அணுக வேண்டும்.  எண்ணம் மங்காமல்  பாதுகாக்கப் படுமானால்  உங்களது கனவு ஒரு நாள் மெய்ப்படும்!’ மெத்தப் படித்த அந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் அப்படிதான் அடித்து சத்தியம் செய்கிறார்கள்! நம்பாமல் எப்படி? அதே வரிசையில் வாசித்த இன்னொரு புத்தகம் ஒருபடி மேலே போய், ‘உன் ஆசைகளை நீ, ஒரு நோட்டில் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிரு! நாள் தவறாது ஆழ்மனதில் அதைப் பதியவை!  நிச்சயம்  அது பலிக்கும்!’  என்கிறது. நம்பினேன். சினிமாவை மோகித்து நான் கனவுகள் கண்டாலும், என் ஆசை அளவோடானது. கதாநாயகன் அந்தஸ்த்திற்கோ திரைக்கதை – இயக்குனர் என்கிற  ஸ்தானத்திற்கோ ஆசை கொண்டவனல்ல நான்! அது கூடிவரும் பட்சம் தவிர்க்க முடியாது போகலாம்! அது வேறு விசயம். எனக்கு கைவரும் சங்கதிகளை ஒட்டிய சினிமா வாய்ப்பு கிட்டினால் போதும். ‘கதை, வசனம்’ என்கிற டைட்டிலோடு என் பெயரை திரையில் கண்டுவிட வேண்டும். சினிமா குறித்த என் ஆசையின் நீள, அகலமே அவ்வளவுதான்!    

இரண்டு குயர் வெள்ளைத் தாள் நோட்புக் வாங்கி, பக்கத்திற்கு இருபது தடவைக்கு குறையாமல் ‘கதை, வசனம்’ என்றெழுதி கீழே என் பெயரை எழுதுவது கடந்த பதினேழு வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. மாதத்திற்கு இரண்டு நோட்புக்! வருடத்திற்கு இருபத்தி நாலு! பதினேழு வருடத்திற்கு? கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! வருடா வருடம் அவைகளை கட்டி பரண் மீது ஏற்றி, பரண் ரொம்பியதுதான் மிச்சம்! இந்த முயற்சிக்கு செயல் விளைவுகள் கிட்டா விட்டாலும், எதிர் விளைவுகள் நிகழாமல் இருந்திருக்கலாம்! விதி யாரை விட்டது.

“எப்பப் பார்த்தாலும் கணக்கு வழக்கு எழுதுறமாதிரி, அந்த நோட்ல என்ன எழுதிகிட்டே இருக்கிங்க?” என்று என் மனைவியும், “எங்கிட்டே கூடப் பேசாமே அப்படி என்னத்தா….. என்னமோ கிறுக்கிக்கிட்டே… இருக்கிங்க?”ன்னு என் மகள்களும் கேட்க, என்னால் எதுவும் சொல்லமுடியாத நிலை. ஆசைகளை கனவில் வியாபகமாக்கி, வியாபித்த அந்தக் கனவுகளை எண்ணங்களாக்கி, அந்த எண்ணங்களின் மீது நம்பிகையைப் பாய்ச்சி, வெற்றியை நோக்கி அதை நகர்த்த, ஒருமுகப்படுத்தும் எழுத்துப் பயிற்ச்சியை அவர்களிடம் சட்டென சொல்லி விளக்க  முடியுமா என்ன? அப்படியே விளக்கினாலும் “பைத்தியம் மாதிரி உங்க அத்தா பேசுது பாரு”ன்னு என் மனைவியும், “அத்தா எப்பவும் அப்படித்தான்! புரியிறமாதிரி எதையும் செய்யாது!”ன்னு மகள்களும் சொல்வார்கள். தெரியும் எனக்கு. தேவையா?

என் மனைவியிடமோ, என் மகள்களிடமோ நான் எதுவும் சொல்லவில்லைதான். ஆனாலும் அவர்கள் அந்த நோட்டை எடுத்து திறந்துப் பார்க்க முடியாதவர்களா? படிக்கத்தான் முடியாதவர்களா? அதுதான் நடந்தது.  என் மகள்கள்  அந்த நோட்டுக்களை எடுத்தார்கள்,  திறந்தார்கள், படித்தார்கள்.  “என்ன இது, பக்கத்திற்கு இருபது தடவை ‘கதை, வசனம்’ ‘கதை, வசனம்’ என்று எழுதி, அதுக்கும் கீழே, அதுப் பேரை போட்டுகிட்டே வந்துருக்கு! அத்தாவுக்கு பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிப் போச்சா?” என்று அவர்களது கோணத்தில்  அனுமானித்த  நொடி தொட்டு என்னை அவர்கள் புதுப்பார்வை கொண்டு பார்க்கத் தொடங்கினார்கள்! அது வழக்கமான பார்வைதான்!

இரண்டொரு நாட்கள் கழித்து,  தெருவில் நான் போகும் போதும், வரும் போதும்  சின்னப் பிள்ளைகள் பின்னாடியே வந்து, “கதை, வசனம்” யென ஒரு பிள்ளையும், என் பெயரை  இன்னொரு பிள்ளையும் உரக்கச் சொல்லிற்று. பாக்கிப் பிள்ளைகள் ‘கொல்’லெனச் சிரித்தார்கள். நிஜமாகவே முதலில் எனக்கு அது,  மகிழ்ச்சியாகவே இருந்தது.  தமிழ் மக்கள் என்னைக் கண்டுகொள்ளத் தொடங்கி இருக்கிற அடையாளமாகவே நினைத்தேன்! பிள்ளைகள் என் மீது கல் வீசுவதும், அவர்களை நான் துரத்துவதும், பின்னால் சில நாட்கள் கழித்து நடந்தது.

எப்படியோ ஓர் அங்கீகாரம் கிடைத்துவிட்டது!

***

நன்றி : தாஜ் | E- Mail : satajdeen@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: