கண்ணியமிகு ‘காயிதே மில்லத்’

கட்டுரையில் வரும் ‘சாயபு’ என்பதை மட்டும் ‘சாஹிப்’ – அல்லது சில அன்பர்கள் சொல்வதுபோல ‘சாஹேப்’ – என்று படித்தால் சரியாக இருக்கும். ‘சாஹிப்’-ஐ தமிழ்ப்படுத்திய அடியார், ‘காயிதே’வில் ஏன் கை வைக்கவில்லை என்பதறியேன். இதற்கெல்லாம் நாகூர்தான் சரி. ‘சாஹிப்’ அல்ல அங்கே. வெறுமனே : சாபு. ஒரு சா(ர்)பும் கிடையாது, சகோதரரைச் சுருக்குவதில் அவ்வளவு மகிழ்ச்சி. அது இருக்கட்டும். ‘யார் யாரையோ எழுதுறீங்க, நம்ம ‘காயிதே மில்லத்’-ஐ சொல்ல மாட்டீங்களா?’ என்று கேட்ட அபுதாபி இஸ்மாயில் (என் உயிர்த்தோழர்) , ஆனந்த விகடனின் ‘பொக்கிஷம்’ பகுதியை ஸ்கேன் செய்து அனுப்பியிருந்தார். பலமான பழைய தலைவர்களை நினைத்துப் பார்த்தாவது நம் பலவீனம் மாறாதா என்ற நப்பாசையில் அதை இங்கே பதிகிறேன்.

‘காயிதே மில்லத்  என்றால் சமுதாய வழிகாட்டி என்று அர்த்தம்’ என்று ஆரம்பித்து , அவர்களைப்பற்றி மிக நெகிழ்ச்சியுடன், மணிக்கணக்காகப் பேசும் ஒருவர் ஊரில் உண்டு. ஆமாம், நீங்கள் நினைக்கும் அதே ஆள்தான். அவர்களைப் பற்றி ஒரு பெரிய தொடர் எழுதப்போவதாக பத்து வருடங்களாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அவர். என்னைவிட சுறுசுறுப்பு!. கெஞ்சுவதாக இல்லை இனி. எனவே சுருக்கமான இந்தப் பதிவு. காயிதே மில்லத் பற்றிய விக்கிபிடியா குறிப்பை இங்கே சென்று படித்துவிட்டு பசியாறுங்கள்! கட்டுரையைப் படித்துவிட்டு, ‘நாகூரில் சொல்லப்படும் ‘பசியாற’ என்ற சொல் நெல்லையிலும் இருப்பதறிந்து மகிழ்ந்தேன். வேறு எந்த எந்தப் பகுதிகளில் இருக்கிறது?’ என்று வட்டலப்பம் போல வழியாதீர்கள். கட்டுரையை இட்ட நோக்கம் வேறு.

*

 
காயிதே மில்லத்

அடியார்

பூமி அதிராத நடை.. புன்முறுவல் பூந்தோட்டம் போட்ட முகம்.. கருணை நிலா ஒளி வீசும் விழிகள்..மென்மையான குரல்..எந்த நிலையிலும் கண்ணியம் தவறாத சீர்மை..இதுதான் காயிதே மில்லத் இஸ்மாயில் சாயபு.

எங்கள் தமிழாசிரியர் அன்றைக்கு ஒருநாள் வகுப்பில் தமிழ்ப்பாடம் நடத்துவதற்குப் பதிலாக ‘அரசியல்’ பேசினார்.

‘எத்தனையோ தலைவர்கள் தமிழுக்காக உயிர்விடுகிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவின் ஆட்சிமொழியாக எந்த மொழி இருக்கலாம் என்ற விவாதம் டெல்லியிலே வந்திருக்கிறது. வடக்கே உள்ளவர்கள் இந்திதான் ஆட்சிமொழி என்கிறார்கள். தெற்கே உள்ளவர்கள் ஆங்கிலம்தான் ஆட்சிமொழி என்கிறார்கள். ஆனால் ஒரு ‘சாயபு’தான் ‘எங்கள் தமிழ்மொழி எல்லா வளமும் பெற்ற மொழி. அதுவே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கத் தகுதி உள்ளது’ என்று பேசியிருக்கிறார். அவர் இஸ்மாயில் சாயபு. நல்ல தமிழ் பேசும் நெல்லையைச் சேர்ந்த பச்சைத் தமிழர்!’

கேரளத்திலுள்ள மஞ்சேரி (இப்போதைய மலப்புரம்) நாடாளுமன்றத் தொகுதிக்குள் நுழையாமலேயே காயிதே மில்லத் வெற்றி பெற்றிருந்த நேரம். அவரைச் சந்திக்க நினைத்தேன். எக்கச்சக்கமான கூட்டம், மலர் மாலை, கைத்தறித் துண்டு, பட்டாசு வெடிகள் இவையெல்லாம் இருக்கும் என நினைத்து அவரது இல்லத்தை அடைந்தபோது, அதிகாலை நேரத்து ஏரிக்கரைபோல அமைதியாக இருந்தது அவரது வீடு.

என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி : ‘பசியாறிட்டீங்களா?

‘பசியாறுதல்’ எனும் தமிழ் சொல்லின் அழகு பற்றி வியந்து போனேன். ‘உணவு உண்பதற்கு இப்படி ஒரு சொல்லா உங்கள் பகுதியில்?’ என்று கேட்டேன்.

‘உணவு உண்டீர்களா என்பதற்காக அல்ல இந்தச் சொல்! ‘பிரேக் ஃபாஸ்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது இந்தச் சொல். காலை உணவு உண்டீர்களா என்று கேட்பதற்குத்தான் இந்தச் சொல் பயன்படுத்தப்படும்’ என்று பதிலுரைத்தார்.

எழில் எழிலான தமிழ்ச் சொற்கள் எத்தனை நெல்லைப் பகுதியில் வழங்குகின்றன என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். ‘புட்டிங்’ என்ற சிற்றுண்டி குறித்த சொல்லுக்கு ‘வட்டில் அப்பம்’ என்ற சொல் இருப்பதாக அவர் கூறியபோது இமை இரண்டும் சேரா வண்ணம் நெடுநேரம் அவரைப் பார்த்தபடி இருந்தேன்.

நபிகள் நாயகம் விழா! காயிதே மில்லத் பேச இருக்கிறார். அதற்கு முன், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிள்ளையார் பற்றிய கதையைக் கூறி கேலி செய்தார். காயிதே மில்லத் தமது பக்கத்தில் இருந்தவரிடம் ஏதோ சொல்ல பேச்சாளரின் பேச்சு அத்தோடு முடிக்கப்படுகிறது.

காயிதே மில்லத் பேசும்போது சொன்னார்.. ‘இது புனிதமான மீலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றி மட்டுமே பேச அனுமதிக்கப்படும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேலி செய்து பேசக் கூடாது. இஸ்லாமிய மார்க்கம் ‘பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்’ என்று கூறியிருக்கிறது.’

இத்தகைய பண்பு நலன்கள் கொழித்துச் செழித்து இருந்த காரணத்தால்தான் அவர் ‘கண்ணியமிகு காயிதே மில்லத்’ என அழைக்கப்படுகிறார்.

*

நன்றி : ஆனந்த விகடன்

*

சுட்டி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு) இணைய தளம்

2 பின்னூட்டங்கள்

  1. 27/03/2010 இல் 16:28

    காயிதே மில்லத் அவர்களைப் பற்றிய செய்தி ரத்தினச் சுருக்கமாக இருந்தாலும் இது போதாது. நிறைய சொல்லவேண்டியிருக்கிறது. சின்னப் புலவர் என்று அவர்களால் அழைக்கப்பட்ட மு. நே. அ. அவர்களிடம்தான் கேட்கவேண்டும். ஒரே ஒரு செய்தியை மட்டும் இங்கே சொல்கிறேன்.

    அண்ணா ஆட்சிக்கு வந்தபோது இவனுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸார் கேட்டார்கள். அதற்கு அண்ணா சொன்னார், “ஆம் எனக்கு ஒன்னும் தெரியாதுதான். கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஒருபுறமும் அரசியல் வித்தகர் ராஜாஜி மறுபுறமும் இருக்கும்போது நா ஏன் கவலைப்பட வேண்டும்? அவர்கள் சொல்லும் வழியில் என் தடம் இருக்கும்” என்றார்.

  2. sadam said,

    04/03/2012 இல் 23:53

    kilakaraiyilum vattalappam ,pasiyaruthal pechu valakil ullathu


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: