ரெட்டை தலைப் பாம்பு – தாஜ்

இப்போதுதான் வந்து சேர்ந்தது தாஜ்-ன் ‘பாம்பு’. ரொம்ப வயாக்ரா சாப்பிட்டுவிட்டது போலிருக்கு, ஆடித்தீர்க்கிறது! ஹா, இதற்கா பயப்படுவது?

பாம்புகளுக்கு பயப்படாத ஒரே ஆண் நான்தான் . பார்த்தால்தானே?! ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. உயர் படிப்பு முடிக்காமல் ஒண்டியாக நான் பண்டியடித்துக்கொண்டிருந்த காலம். பயங்கரமான ‘தஹ்ரியம்’ எனக்கு அப்போது. அந்த வீறாப்பான காலத்தில் வீட்டிற்கு ஒரு பாம்பு வந்தது. ‘அல் அரபி அஹ்லஹா அல் ஒட்டஹா’ சொல்கிற அரபிப் பாம்பல்ல. சாதாரண நல்ல பாம்புதான். பார்த்த உம்மா பதறிப் போய் கூவினார்கள் என்னைப்பார்த்து: ‘தம்பிவாப்பா…ஓடு, ஓடு! தெருவுல யாராச்சும் ஆம்புளைளுவ இருப்பாஹா.. கூட்டிக்கிட்டு வா!’.

பாம்பென்றால் படை நடுங்குமோ இல்லையோ, ஆண் சிங்கங்களின் நடை நடுங்கும்!

**

ரெட்டை தலைப் பாம்பு

 தாஜ்
பஞ்சம் பிழைக்க ‘கல்ஃப்’-ல் தொடங்கி,  கிழக்கே இரண்டு ஆசியா நாடுகள் என்று வருடக் கணக்கில் உருண்டுப் புரண்டோடியதில்,  முடங்கியதான் மிச்சம்!  கலப்படமற்ற  சுத்தமான தோல்விக்குப் பிறகு, இப்பொழுது ஊரில் ‘ரியல் எஸ்டேட்’ என்கிற முயற்சி! வாடகைக்கு இடம் போட்டு, டிஜிட்டல் போர்ட் வைத்து,  அலையாய் அலைந்து , செய்வதென்னவோ  இடைத் தரகு என்கிற கமிஷன் ஏஜண்ட் பிசினஸ்! வீடு, வீட்டு மனை, நிலம் என வாங்க/விற்க வருகிறவர்களிடம் பேசிப் பேசி காரியத்தை முடித்து, இரண்டு பெர்செண்ட் கமிஷனுக்காக அவர்களிடம் மல்லுக்கு நிற்கிற வேடிக்கையான பிசினஸ்! ஒரு பெர்சண்ட் கமிஷன்கூட தர இயலாது அவர்கள் பதுங்கி மறைவது வேடிக்கையின் ஹைலைட்!  அனுபவிக்க கிடைக்கும்  புது அனுபவம்! அப்படியானால், ‘ரியல் எஸ்டேட் என்று சொன்னது?’ அது வருங்காலத் திட்டம்!  இந்த வருங்காலத் திட்டம் என்கிற  முறுக்கல்களுக்கு என் வாழ்வில் பஞ்சமே என்றும் இருந்தது இல்லை! இதற்கு முன்னும் பற்பல வருங்காலத் திட்டங்கள் என்னில் ஜனித்து, குப்பைக் கூடைக்குப் போய் விட்டது! இப்பொழுது இது புதுசு!

ஒவ்வொரு முறையும் தோற்று முடங்கும்போதெல்லாம், வெளியுலகைக் காண வெட்கப்பட்டு, வீட்டில் இருந்தபடிக்கு நான் செய்யும் ஒரு காரியம் உண்டென்றால்… வெள்ளை பேப்பரில் மொழிக் கிறுக்கல்களை அலுக்காது சுழித்துக் கொண்டிருப்பது. அதைக் கண்ட என் நலன் விரும்பிகள் அதனை கவிதையென அடையாளம் காண்டார்கள்! அவர்கள் நிஜமாகவே நலன் விரும்பிகள்தானா என்பதை யோசிக்காது, அந்தக் கிறுக்கல்களையே தொடர்ந்தேன். நான் கொண்ட சாபமோ என்னவோ.. அது நிஜமாகவே சிலசமயம் கவிதையாக கூடிவந்தது. மூணு, நாலு சிற்றிதழ்கள் அதைப் பிரசுரிக்க, இன்றைக்கும் கொடுமை தொடர்கிறது.

என் இலக்கிய உலக சாதனையை, அதற்குறிய பதிவேட்டில் பதியும் முகமாக,  என் கவிதைகளை தொகுப்பாய் கொண்டு வர,  வருங்கால திட்டத்தில் ஒன்றாக இணைத்திருந்தேன்.  இன்றைய தேதிக்கு , பத்து வருடங்கள் கழிந்துவிட்டது. இன்னும் அந்த வருங்கால திட்டம் அதே நிலையிலேயே இருக்கிறது! உட்காரும் இடம் எரிய எரிய, இன்னமும் அத்திட்டத்தை அடைகாத்தும் வருகிறேன்! ஆனால், ஒரு கவிதைத்தொகுப்பை கொண்டு வருவது அத்தனை கடினமில்லை என்றே படுகிறது. யதார்த்த நிகழ்வுகளும் அதைத்தான் நிரூபணம் செய்வதாக இருக்கிறது. மூக்கில் தேங்கும் சளியை இரண்டு விரல்களால் வழித்துக் கடாசும் சுளுவில், நம் கவிஞர்கள் வருடம் தவறாது தங்கள் கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்தபடியே இருக்கிறார்கள்!  சகிக்கவே முடியாத  கவிதைகளை எழுதும் ஒரு கவிஞர், எனக்குத் தெரிந்து இதுவரை பதிமூன்று கவிதைத் தொகுப்புகளை கொண்டுவந்திருக்கிறார்! கவிதை எழுதுவதென்பது அவருக்கு தன் மூத்தாள் வீட்டு முருங்கை மரக் காய்ப்பு மாதிரி, நீள நீளத்துக்கு சடைசடையாய்! 

காலேஜில் படித்த காலத்தில் வக்கீல் ஆகனும் என்றொரு வருங்காலத் திட்டம் இருந்தது. சாதுரியமான பேச்சோடு பொய்யுரை கலக்கும் உருப்படாத தொழில் அது! என்றாலும் ஆசைப் பட்டேன்! இருபது வருடங்களுக்கு முன்னாலெல்லாம் எம்.எல்.ஏ. தேர்வுக்கு  கட்சிகள் எதிர்பார்க்கும் தகுதிகளுள் ஒன்றாக  வக்கீல் பட்டப் படிப்பு இருந்தது!  அதனால் கூட எனக்கு அப்படியொரு ஆசை முளைத்திருந்ததோ என்னவோ.  சரியாய் சொல்ல தெரியவில்லை.  வழக்கம் போல காலத்தின் சூறையில் அது இத்துப் போனாலும், இன்றைக்கு அது வேறு ரூபத்தில் சாத்தியமாகி இருப்பதாகப் படுகிறது!  தற்போதைய எனது இடைத்தரகு வியாபாரத்தில்,  என்னேரமும் பலரோடு அநியாயத்திற்கு பேசிக்கொண்டிருப்பதைப் பற்றி  நிதானமாய் யோசிக்கிறபோது அப்படித்தான் படுகிறது. கோர்ட் படிகள் ஏறி ‘மை லார்ட்’ என ஆரம்பித்துப் பேசுவதற்குப் பதிலாக, கண்டகண்ட இடங்களில் சம்பந்தப்பட்டவர்களை மடக்கி ‘வணக்கம்’ போட்டு பேசுகிறேன்! நகைமுரண் இல்லாத வாழ்க்கைதான் ஏது?

இந்தத் தொழிலில் வாங்க/விற்க வருபவர்களிடம் பேசுவது பாதியென்றால், சக தரகுகாரர்களிடம் பேசவேண்டியது மீதமாக இருக்கும்! சக தரகுகாரர்களிடம் ஏன் அத்தனைக்கு பேச வேண்டுமாம்? அதனை விளக்கிச் சொல்வது இந்தக் கதைக்கு தேவையற்ற விசயம். பக்கங்களை அதிகப்படுத்தும்! பக்கங்கள் அதிகமானால் வாசகர்கள் சீண்டமாட்டார்கள். போகட்டும் பரவாயில்லை என்று நினைத்தால், நண்பரும் எனது இலக்கியக் கண்ணாடியுமான ஓர் நல்ல உள்ளம் “என்னய்யா இது?” வென ஆரம்பித்து, பொறுக்கியெடுத்த செல்ல வார்த்தைகளால்  சின்னக் குட்டு வைக்கும். அந்தக் குட்டு மஹா வலி தரும், நம்ப மாட்டீர்கள்! போகட்டும், நாம் இனி கதைக்கு போவோம்.

‘அப்ப இதுவரை சொன்னதெல்லாம் கதை இல்லையா?’ என நீங்கள் கேட்டால்,  என்னிடம் பதில் இருக்காது. அவரவர்களின் அனுமானத்தைப் பொறுத்ததெனச் சொல்லித் தப்பிப்பதைத் தவிர வேறு வழி இல்லை எனக்கு.

எங்களது சக தரகுக்காரர்களின் வட்டம் இருக்கிறதே… அது மிகப் பெரியது! அதில் ஒருத்தனின் பெயர் பிச்சை என்கிற ‘கோடி.’  கையடக்கத்தை விட கொஞ்சத்திற்கு வீச்சமான எங்களது ஊரில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்த முதல் தரகுக்காரன் அவன்! கிட்டிய கமிஷன் பணத்தில் வீட்டை தூக்கிக் கட்டி, புதிய ஹீரோ ஹோண்டாவில் வலம் வருகிறான்! சமீப காலமாக எங்களது வட்டத்தில் அவனை ‘கோடி’ என்றால்தான் புரிய வருகிறது. அவனே கூட அப்படி அழைத்தால்தான் திரும்பிப் பார்க்கிறான்.   

சென்ற மாதத்தில், ‘கோடி’யோடு சேர்ந்து நான் ஓர் சின்ன வியாபாரத்தை முடித்தேன்.  கிடைத்த கமிஷன் தொகையில் பாதியை,  அவனிடம் தந்தபோது, அவன் முகம் செழிக்கவில்லை. “இந்த மயிர் காசுக்குதான் இத்தனை நாளா அலைந்தோமா… பாய்?” என்றான். “விடுய்யா..! இன்னொரு பெரிய வியாபாரத்துல பார்த்துக்கலாம்” என்றேன். “உங்களுக்கு தெரியாததா! இது ஒரு வீணாப்போன ஊரு பாய்! பெரிய வியாபாரம் எதுவும் அத்தனை சீக்கிரம் வராது!  அப்படியே வந்தாலும் அதை வாங்குறவன் இல்லாத ஊரு! இரண்டும் அமைஞ்சு,  நல்லவிதமாவே வியாபாரத்த முடித்துக் கொடுத்தாலும் மயிரானுங்க ஒழுங்கா கமிஷன தரமாட்டானுங்க!” என்றவன், “பாய்… ஒரு நல்ல பிசினஸ் வருது, செய்வோமா?” என்றான்.

“சொல்லு, என்ன பிசினஸ்?” – அவனது பீடிகை பிடிபடாமல் கேட்டேன்.

“ரெட்டை தலைப் பாம்பு பிசினஸ் பாய்!” என்றான்.

எங்களது தரகு வியாபாரத்தை நிலம், வீடு, வீட்டு மனை வாங்கிதருவதும் விற்றுதருவதும் என்கிற மட்டில்தான் மக்கள் கருதுகிறார்கள். நிஜத்தில் தரகு வியாபாரம்  என்பது ஒரு கடல்! எல்லையற்று விரியக்கூடியது! ராணுவத்துக்கு தளவாடங்களே எங்க ஆளுங்கதான் பக்குவமா முடித்துத் தருகிறார்கள்! ‘லோக்கல்’ல…  சைக்கிள், பைக், கார், ஆட்டோ, மணமகன்,  மணப் பெண், மண், கல் என்று ஆரம்பித்து என்னென்ன எழவோ உண்டோ அவ்வளவும் உண்டு! வெயிலில் நிற்பவனை நிழலுக்கு இழுத்து விடுவதும் எங்களது தரகு வியாபாரப் பட்டியலில் இருக்குமென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆனால், இப்போது இவன் சொல்லும் ரெட்டை தலைப் பாம்பு பிசினஸ் பட்டியலில் இருக்கிறதா ? தெரியலை. இது புதுசு! கோடியில் பிசினஸ் பண்ணியவன் சொன்னால் இல்லாமலா போகும்?

“கேட்டுக்க பாய்… இன்னைய மார்கெட் நிலவரப்படிக்கு ஒரு ரெட்டை தலைப் பாம்பு, ஐம்பதிலிருந்து எழுபத்தைந்து வரைப் போகுது! அதுலேயே பொன் நிறமா உள்ள  ஜாதிப் பாம்புக்கு இன்னும் வெலக் கூட! பெரிய ஒண்ணு வரைப் போகுமாம்!” என்றான்.

ஐம்பதிலிருந்து எழுபத்தைந்து என்று அவன் சாதாரணமா சொன்னது லட்சங்களிலானத் தொகை! ‘பெரிய ஒண்ணு’ : ஒரு கோடி ரூபாய்! ஒட்டு டீக்கடை முகப்பில், நைந்து நொடித்த பெஞ்சில் நானும் அவனும் அமர்ந்தபாடுக்கு, அலட்டிக் கொள்ளாமல் இப்படி லட்சங்களிலும் கோடிகளிலும் பேசிக் கொண்டிருப்பதை யாரேனும்  கூர்ந்து கவனித்து புரிந்துகொள்ளும் பட்சம், நாகரீகம் கருதி அங்கே சிரிக்காவிடினும் கட்டாயம் வீட்டுக்கு போய் சிரிப்பார்கள்.       

“ம்… மேலே சொல்லு” என்றேன்.

“பக்கத்து டவுன்ல எனக்கு தெரிந்த நாலு தரகுக்காரனுங்க இப்ப இந்த பிசினஸ்ல இறங்கியிருக்கானுங்க! அந்தப் பாம்பு விஷத்துல வெளிநாட்டுக்காரன் ஏதோ அபூர்வமான மருந்து தயாரிக்கிறானாம்! வயசானவனையும் வாலிபனா ஆக்கிடுதாம்! அதனால… அந்தப் பாம்புக்கு அப்படி ஒரு கிராக்கி என்கிறானுங்க!”

“அத இங்க, வாங்குற பார்ட்டி யாரு?”

“பார்ட்டி பெங்களூர்ல இருக்கு. அவனுங்க நம்மகிட்ட வாங்கி, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறானுங்களாம்!”

“ம்…”

“அந்த ரெட்டை தலைப் பாம்பு தமிழ்நாட்லதான் கிடைக்குதாம்! குறிப்பா, நாகை, நாகர்கோவில் பக்கமும்தானாம்! இரண்டு இடங்களும் கடற்கரை சார்ந்த பழைய சதுப்புநில பகுதிங்க மட்டுமல்ல, ஒரு காலத்தில அந்த ஊருங்க நாக விருட்சமாவே இருந்தா சொல்கிறாங்க!”

“அப்படி போகுதா… கதை!”

“பாய், நான் என்ன கதையா சொல்றேன்?”

“இல்லல்ல… நீ சொல்லு. வேறு ஏதாவது ப்ராப்ளம் வருமா?”

“வந்தா… போலீஸ் தொந்தரவுதான் வரும்! காசு கொடுத்து சரிகட்டிக்கலாம். அவன் படியிலேன்ன, இருக்கவே இருக்கிறாரு நம்ம கட்சி எம்.எல்.ஏ.! நம்ம சொந்தம் வேற! பாத்துக்கலாம்!”

“சரி, அப்புறம்?”

“இன்னிக்கி செவ்வாய் கிழமை. நாள் நல்லா இல்ல. நாளைக்கும் நாளானைக்கும் அஷ்டமி, நவமி. வெளிய கிளம்ப ஆகாது. வெள்ளிக்கிழமை காலையில புறப்பட்டு….”

“வெள்ளிக் கிழமை எனக்கு ஜும்ஆ ! கிளம்பினா சாய்ந்திரத்திற்கு மேலதான் கோடி கிளம்ப முடியும்.”

“என்ன பாய் நீ வேற, நாள் தள்ளிகிட்டே போகுதே! சனி வேணாம். ஞாயித்துக் கிழமை சரியான முகூர்த்த நாள்! காலையிலேயே கிளம்பிடுவோம்.அங்கே போயி, அதைப் பிடிக்கிறவனுங்கல விசாரிச்சு, வெல படிஞ்சதுன்னா, அந்தப் பாம்ப, ‘செல்’ கேமராவுல படம் எடுத்து, பெங்களூர் பார்ட்டிக்கு அனுப்பிட்டா போதும். ஆறு மணி நேரத்துல கேஷோட வந்து டீலிங்க முடிச்சி பணத்த தந்துடுவானுங்க! சுளையா கமிஷனும் கிடைச்சிடும்! ஒரு வாரம் அதுக்காக சிரமப்பட்டா சத்தமில்லாம ஆளுக்கு அஞ்சு  லட்சத்தோட ஊர் திரும்பலாம்! என்ன பாய் சரியா? யோசனை பண்ணுங்க! சனிக்கிழமை பெங்களூர் பார்ட்டியோட செல் நம்பரோட வறேன். நீங்கத்தான் புஸ்தகமெல்லாம் படிக்கிற ஆளாச்சே, விசாரிச்சு வை பாய்” என்ற ‘கோடி’, குதிரை ஏறினான். அவனது ஹீரோ ஹோண்டா சீறியது.

நல்ல பாம்பு, சாரைப் பாம்பு, பச்சைப் பாம்பு, மலைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு, கண்கொத்திப் பாம்பு, கட்டுவிரியன் பாம்பு என்பன பார்த்திருக்கிறேன். அனகொண்டா பாம்பைத் திரைப்படத்தில் கண்டிருக்கிறேன். ஐந்து தலை பாம்பைப் பற்றி புராணத்தில் வாசித்து அறிந்திம் இருக்கிறேன். இந்த ரெட்டை தலைப் பாம்பு? ம்…ஹும்…!

யோசிக்கிறபோது, அப்படி அறவே ‘ம்… ஹும்…’ சொல்லிட முடியாதுதான்…

எதோ ஒரு வெள்ளிக்கிழமை, விடுமுறை தின காலையில், சலிக்காத டீயும் புகையுமாக டிஸ்கவரி சேனலில் ரெட்டை தலைப் பாம்பை பற்றிய நிகழ்ச்சி ஒன்றை விலாவாரியாகப் பார்த்த நினைவிருக்கிறது. இந்தப் ‘பார்த்தேன்’ என்பது இருபது வருடங்களுக்கு முந்திய சங்கதி! சௌதிக்கு போன கால உபயம்! அந் நிகழ்ச்சிக்கு குரல் தந்த அமெரிக்கனின் ஆங்கில தொனி, பார்வையாளர்களிடம் அவன் எதிர் பார்த்த வியப்பையும், மலைப்பையும் தந்திருக்கலாம்! ஆனால், அவனது அவனது மொழி நமக்கு புரிந்து விட்டதா? நிச்சயமாக இல்லை! ஒழுங்காகவே அவன் பேசியிருந்தாலும், அதுதான் நடந்திருக்கும். ஒரு பாம்புக்கு இண்டு தலைகள் என்கிற வியப்பு மேவ, அதன் தலைகள் மேலெழும்பி ஒன்றையொன்று உற்று நோக்கியபடி பின்னிப் பிணையும் காட்சியும், மழமழப்பான அதன் உடலின்நெளிவுகளும் தந்த சிலிர்ப்பைத் தவிர, அந்த நிகழ்ச்சி குறித்து இன்றைக்கு வேறெதுவும் ஞாபகத்தில் இல்லை.

ரெட்டை தலைப் பாம்பை இரண்டாவதாக நான் பார்த்தது, எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள டவுன் ஒன்றில்! அங்கே பதினைந்து நாள் நடந்தேறிய பொருட்காட்சியில்தான்!  காணக் கிடைத்த அந்த ரெட்டை தலைப் பாம்பு வேடிக்கையும் வினோதமும் கொண்டதாக இருந்தது! அந்தப் பாம்பின் இரண்டு தலைகளும் மனிதத் தலைகள்!  இண்டும் பெண்ணின்  தலைகள்! இதை நான் விளையாட்டாக விவரித்தாலும்… அதுவோர் மறக்க முடியாத அனுபவம்!

‘அதிசயம்! ஆனால் உண்மை! இரண்டு மனிதத் தலை கொண்ட நாகம்! பார்க்கத் தவறாதீர்கள்!’ என்கிற வாசகத்துடன், இழுத்துக் கட்டப்பட்ட நைந்துபோன துணி பேனருக்கு கீழே ,மரத்தினாலான தடுப்பில் சின்னக் ‘கவுண்டர்’ வைத்து, மூன்று ரூபாய்க்கு டிக்கட் விற்றார்கள். இருபது பேர் கொள்ளளவிலான டெண்ட்-ல் அடிக்கப்பட்ட அரங்கில், ஏதோ ஓர் மூலையில், பிடிபடாத வாத்தியம் கொண்டு ‘டிர்..டிர்..’ இரைச்சலை இடைவிடாது எழுப்பிக் கொண்டிருந்தார்கள். சகிக்க முடியாத அந்த இரைச்சலை கேட்டபடிக்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி உள்ளே போனபோது, கயிற்றால் சுற்றிக் கட்டப்பட்ட ஒரு வட்டவடிவத் தடுப்பு. நான்கு பக்கமும் மூடப்பட்ட மரத்தாலான விசாலமான உயர மேஜை ஒன்றும் மையத்தில் இருந்தது!  அதன் மேல்புறத்தில்  இரண்டு தலை கொள்ளளவில் துவாரம். ஒன்றில் பதினாலு, இன்னொன்றில் நாற்பத்தி ஒண்ணு! தென்பட்ட அந்தப் பெண்களின் தலைகள் வாரி வகிடெடுத்து, ரெட்டை ஜடைப் பின்னி , பூவும்  பொட்டுமாக மங்களகரமான வசீகரம்! அந்த நாற்பத்தி ஒண்ணு, கொஞ்ச நேரத்திற்கு முன் கவுண்டரில் எனக்கு டிக்கட் கிழித்த அதே பெண்!  

அந்த மேஜை மீது, பெரிய மலைப்பாம்பு சைஸில் மஞ்சள் பூசப்பட்ட துணி உருளை. அடர்த்திக்கு அதனுள் பழைய துணியோ, வைக்கோலோ திணிக்கப்பட்டிருக்கலாம்!  அதன்  இரண்டு முனைகளும் மறையும்படி வேப்பிலைகள் பரப்பப்பட்டிருந்தது. பார்வையாளர்களுக்குள் வந்திருந்த ஒரு விஷமி, ஒரு சின்ன சைஸ் கல்லை பாம்பின் ஒரு தலையைப் பார்க்க வீசியபோது, கல்லடி பட்ட அந்தத் தலை, விஷமியைத் திட்டியது : “டேய்.. செருப்பு பிஞ்சுடும்!”

பார்த்துவிட்டு மௌனமாய் வெளியேறிய போது… “எப்பவுமே இப்படித்தான்! அசல் ஏமாத்து இது”வென பின்னால் வந்துகொண்டிருந்த ஒருவர் சப்தம் போட்டார். “அவளுங்க ரெண்டு பேரும், அம்மாவும் புள்ளையும்தான்!” என்றார் அடுத்தவர். “காலையில் இந்தப் பக்கம் வரபோது பார்த்தேன், அந்தச் சின்ன குட்டி சும்மா கும்முன்னு வெளியே பாண்டி ஆடிகிட்டு  இருந்தா!” இன்னொருவர்.

வயிற்றுப் பாட்டுக்காக நடத்தப்படும் சகஜமாகிப்போன ஏமாற்று இது! போகட்டும். அதற்காக இப்படியா மனிதர்களின் மழுங்கல்களை அப்பட்டமாக குறி வைப்பது?

கட்டு விரியன் அல்லது மண்ணுளிப் பாம்பு வர்க்கத்தில் அபூர்வமாக நிகழும் ஜீனின் தடுமாற்றம்தான், இந்த ரெட்டை தலைப் பாம்பு என்பது என் கணிப்பு! அந்தப் பாம்பு அரிதானது என சொல்லப்படுவதை வைத்துப் பார்க்கிறபோது, என் கணிப்பு சரியென்றும் தோன்றுகிறது. பாம்புகளிடம்  மக்கள் கொள்ள வேண்டிய பயத்தை  இட்டிப்பாக்கி  காட்டவேண்டிய  அவசியம் மூத்த சமூக மக்களிடம் இருந்திருக்கலாம்! அதனால் கூட ‘ரெட்டை தலைப் பாம்பு’ என்கிற பய பீதி புழக்கத்திற்கு வந்திருக்கலாம். புராணத்தில், பிரம்மாவின் பிரமாண்டம் காட்ட, ஐந்து தலைப் பாம்பு அவரது படுக்கையாக ஆகவில்லையா என்ன? ‘அப்படியெனில், ‘கோடி’ சொன்னதெல்லாம்?’

சமூகத்தின் நடைமுறைப் போக்கில் இப்படியான பிரமிப்பு தகவல்கள் அவ்வப்போது கிளம்பி, உச்சம் எட்டிப் பின் மறைவதையும் காணலாம்! காலம்கடந்து, இன்னொரு சுற்றில் அப்படியான சலசலப்பு மீண்டும் கிளம்ப. அப்பவும் மக்கள் அலுக்காது அதைச் சர்ச்சிப்பார்கள்! உலகம் அழிவதாக – நான் அறிய – இதுவரை,  இருபது தடவையாவது பிரமாதப் பட்டிருக்கும்!  ஆனால், ஒரு தடவை கூட அந்தப் பாக்கியம் கிட்டியது இல்லை! மனிதன் பூரண நிம்மதி அடைய,  ஒரு போதும் கடவுளர்கள் ஒப்ப மாட்டார்கள்.  உலகம் என்கிற பிரதானம் அழிந்து போனால், நம் கடவுளர்கள் யாரை ஆட்டிப் படைப்பார்கள்?

சரி… ‘கோடி’?’ அவன் அந்த வதந்தியால் பாதிக்கப்பட்டவன். லட்சங்களில் கமிஷன் என்கிற வசீகரம் அவனது மனோவேகத்தைத் திரும்பத் திரும்ப முடுக்கிவிட்டபடி இருக்கிறது. சரியாகச் சொன்னால், அந்த வதந்தி வாரி வழங்கும் அதிகப்படி கமிஷன் பணத்தை எப்போதோ அவன் அடைந்து விட்டான்! இன்னும் அது அவனது  அக்கௌண்டிற்கு போய்ச் சேரவில்லை, அவ்வளவுதான்! அன்றைக்கு செய்தியை சொன்னபோது, அவனது முகம் காட்டிய மிகையும், தொனியில் தெறித்த அவசரமும் அதைத்தான் அர்த்தப்படுத்தியது.

தீவிர விஷம் கொண்ட, மறைவில் வாழ்கிற, ரெட்டை தலைப்பாம்புகள் இன்றைக்கு சமூகத்தின் எல்லா துறைகளிலும் இருக்கிறது! துறைசார்ந்த தலைகள் தங்களது அதீத வெற்றிக் குவிப்புகளை முன் வைத்து, சாணக்கியத்துடன் திட்டங்களை மறைமுகமாக நிகழ்த்துகின்றன! அந்த தலைகள் சாணக்கியம் கொள்ளத் துவங்கிய நாழிக்கு, அதன் உடம்புகளுக்கு இன்னொரு தலையும் முளைத்து விடுகிறது! குறிப்பாய் நம் அரசியல் அரங்கத்தில் இந்த ரெட்டை தலைப் பாம்புகள் சர்வ சாதாரணம். குறிப்பாய், டில்லி அரசியல் அரங்கம். சாணக்கியத்தில் அது மஹா கெட்டி! சொன்னால் நம்ப மாட்டீர்கள், அங்கே காணக் கிடைக்கிற சில பாம்புகளுக்கு ஏழாயிரம் தலைகள்!

மெத்தப் படித்த கணிப்பாளர்கள் அரசியலை ஒரு சாக்கடை என்கிறார்கள். அவர்கள் அவசரக்காரர்களாக, ஆத்திரம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். விஷ ஜந்துக்களின் குழுமம் எப்படி சாக்கடையாக முடியும்? என் கணிப்பில், அது மிகப் பெரிய பாம்புப் புற்று! நம்நாட்டில் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் ஒரு கூரையின் கீழ் வளரும் ரெட்டை தலைப்பாம்பு என்றால் யாரேனும் நம்புவார்களா? மாட்டவே மாட்டார்கள். அவர்களை அப்படி யூகிக்க இயலாது வேறு திசையில் நகர்த்திக் கொண்டுப் போகும் சாமார்த்தியமும் சேர்ந்ததுதான்  அவர்களது  சாணக்கியம்! சில மீடியாக்களின் வழியே கசியும் செய்திகளின் குறுக்கு வெட்டுக் காட்சிகளை கோர்வையாக்குகிறபோது, அனுமானிக்கலாம். இது குறித்து என்னால் தொடர்ந்து விரிவாக சொல்ல இயலாது. தண்ணீர்ப் பாம்புகள் தவளைகளைல் கவ்வ அலைந்த காலத்து அரசியல்காரன் நான்! தவிர, அந்த அரங்கைவிட்டு தூர வந்து காலங்களும் ஆகி விட்டது.

எழுத்து கலைஞர்களாலும், அறிவுஜீவிகளாலும் சூழப்பட்டதாக, மொழியினது மேன்மைகளை அடையாளப்படுத்துவதாக கருதப்படும் நவீன இலக்கிய வட்டத்திலும்கூட சில ஆண்டுகளாய் இந்த ரெட்டை தலைப் பாம்பின் சலனத்தை காணமுடிகிறது! நான் இந்த வட்டத்தில் நுழைந்து, கால் பதிய நடைபயின்றபோது, சில பாம்புகளையும், அவைகள் குழுக் குழுவாய், பின்னி இழைவதையும் பார்த்திருக்கிறேன். சமீப காலத்தில்தான், இரண்டு விஷப் பாம்புகள் தங்களது மேனா மினுக்கி எழுத்துகளை புத்தகமாய் விற்று காசு பார்க்கவும்,  தங்களை எழுத்துலக மேதைகளாக காட்டிக் கொள்ளவும் தலையாய் நின்றபோது,  சாணக்கியம் தெறிக்க அவைகள் ஒன்றோடு ஒன்றாகி எதிரெதிர் முனைகளில் தலைகளைப் பொருத்திக்கொண்டு ரெட்டைத் தலைப் பாம்பாகிப் போனது!

‘இரண்டு மனிதத் தலை கொண்ட நாகம்! பார்க்கத் தவறாதீர்கள்.’ என்கிற வாசகத்துடன் விளம்பரப்படுத்தி, மனிதர்களின் மழுங்கல்களை அப்பட்டமாகக் குறிவைத்து காசு பார்க்கும் அந்தப் பொருட்காட்சி கூத்துக்கு இந்த ரெட்டை தலைப் பாம்பின் கூத்துகள் எந்தவிதத்திலும் சளைத்தல்ல. இந்தத் தலைகளின் அக்மார்க் கூத்துகளை, இதுகளுக்கு சொந்தமான வலைத் தளங்களில் வேண்டும் மட்டும் பார்க்கலாம். தினப்படி உபாதைகளைக் கழிக்க இதுகள் மறந்தாலும், மலையளவு குமட்டல்களை தங்கள் வலைத் தளங்களில் ரொப்புவதை மறக்க தவறுவதே இல்லை!

அரிதான சித்தாந்தமாக இந்திய  – இதிகாச – பழைய பஞ்சாங்கங்களை ஒரு தலை தூக்கிப் பிடிக்க,  இன்னொன்று பிறந்தமேனியான  நிர்வாணத்தை தத்துவமாக நமக்கு போதிக்க முனைப்பு காட்டும்! ஆனாலும், அந்தத் தலைகளுக்கு பிடித்த உடை என்னவோ… ஜீன்ஸும், டி-சர்ட்டும்தான்!
 
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள் இதுகளின் பிரசவ காலம். வருடா வருடம் இதே கால பிரசவத்தில் ஏகப்பட்ட படைப்புகளை(?) பெற்றுப் போடும்! நெருடும் அந்த  பிரசவ வலியோடு இரண்டு தலைகளும் ஒன்றை ஒன்று முறைத்துக் கொள்வதும்,  சீறிக் கொள்வதும், கொத்திக்கொள்ள முனைவதும்  அச்சு அசலாய் நிஜம் போலவே இருக்கும்!  ஜனவரி மாதத்தில் இதுகள் பிரசவித்தவைகளை மக்களின் முன் வைக்கும் காட்சி வைபவத்தில், அதுகள் பட்டபாட்டுக்கு கைமேல் பலன் கிட்டிவிடும். பிரசவித்தமைக்கு பத்து சதவீதம் என்றால், ஒன்றையொன்று சாடி நம்பும்படி நடித்தமைக்கு தொன்னூறு சதவீதக் கணக்கில் அந்தப் பலன் இருக்கும்! அத்தனைக்கு விற்கிற அதுகளின் புத்தகங்களை வாசிக்கலாம்,  விமர்சனம் வைக்கலாம் என்று நினைத்தாலோ, சிந்தை மறுத்து விடுகிறது.

வருடத்திற்கு நூறு படைப்புகளை இலக்கிய வட்ட வாசகர்கள் வாசிக்க தயார் என்றால்! அத்தனையையும் அதுகளே தர ரெடி!  அத்தகைய முனைப்பில் பிரசவித்துப்  போடுகிற  அந்தப் படைப்புகளைப் பற்றி விமர்சித்துதான் என்ன பலன்?’  ஒன்றின், அறிவு விசாலமாவதை புரிந்துக் கொள்ள முடியும். அது குற்றால அருவியாய்க் கொட்டும் என்றால்… எவனால்தான் என்ன செய்ய முடியுமாம்?! ‘எங்களது  குரு பீடங்களிலிருந்து ஞானப்பெருக்கு வழிந்தோடுகிறபோது அங்கே குறுக்கே நின்றபடி என்ன பேச்சுவேண்டிக் கிடக்கிறது?’வென அதுகளின் வாசகர்களும் வரிந்துகட்டிக் கொண்டு வரவும்கூட வாய்ப்புண்டு!      
 
‘சம்பாத்தியம் பொருட்டு எதில்தான் ஏமாற்று இல்லை?  உங்களது தரகு வியாபாரத்தில் இல்லாத சாணக்கிமா…?’ –  இதை, என் தலைக்கு மேலே அசரீரியாகக் கேட்டாலும், அல்லது வாசிக்கும் எவரொருவர் கேட்டாலும் என் பதில் ஒன்றுதான்: ‘சபாஷ்… நீங்கள் குத்திக் காண்பிப்பது மெத்த சரி! ஆனால், அந்த ரெட்டை தலைப் பாம்பு  ஒரு போதும் தங்களது சிறுமைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய முனைந்ததே இல்லை! அதுகளின் எல்லா அபிலாசைகளும் நிறைவேறி, தலைக்கு இரண்டு ஞானபீடப் பரிசு கிட்டினாலும், சுயம் குறித்து ஒப்புதல் தராது! புனிதமாகக் கருதும் எதுவும் ஆழ்தூக்கத்திலும் வேஷம் கலையாது!

சனியன்று ‘கோடி’ என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்தான். அந்நேரம், ‘ரெட்டை தலைப் பாம்பு’ என்கிற  தலைப்பில் தீவிரமாக கதை எழுதி, முடிவு பிடிப்படாத தவிப்பில் இருந்தேன்.

“நாளைக்கு நம்ம நாகை போறோம்! அடுத்த வாரம்தான் நாகர்கோவில்! காலையில ஏழு மணிக்கெல்லாம் வறேன். ரெடியா இரு பாய்.”

“பார்க்கலாம்!”

“என்னது, பார்க்கலாமா? அறுபது மைல்தான்! பைக்லேயே போயிட்டு வந்திடலாம்! பணம் பெருத்த வியாபாரம் பாய்!” . அவனும் அவன் கோணத்தில் தவிப்பாக இருந்தான்.

“பார்க்கலாம்… கோடி.”

“என்னமோ போ… காலையில வறேன்! என்ன எழுதிட்டு இருக்கே? கதையா…? கவிதையா…..? காசு வர காரியத்தை பாரு பாய்!” என்று சிரித்தபடி கிளம்பினான்.

‘கோடி’யுடன் நான், நாகை போறேனோ அல்லது நாகர்கோயில் போறேனோ , ரெட்டை தலைப் பாம்பு பற்றிதான் எங்க ரெண்டு பேருக்கும் இப்போ சிந்தனை!

**

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
மின்னஞ்சல் : satajdeen@gmail.com

4 பின்னூட்டங்கள்

 1. 23/03/2010 இல் 14:20

  அங்கதாமோ, வெடை என்றோ சொல்ல தோன்றவில்லை. பாம்பு மாதிரி வளைந்து நெளிந்து போகாத கம்பீரமான நீள் நடை. ஏதோ பாம்போடு சேர்ந்து ஊராமல், பறப்பது போல் ஓர் உணர்வு. அசத்திட்டீங்க தாஜ் சார். வாழ்த்துக்களுடன் வழி மொழியும்

  அன்பு
  அப்துல் காதர்

 2. 03/04/2014 இல் 14:17

  நாகர்கோயில்னதும் இங்கே பற்பல தலைகளோட வகைவகையான பாம்புகள் உலாத்துறதா சொல்றது உண்மையல்ல. டிஸ்கரேஜ் பண்றதா நினைக்காதீஹா. பாம்புப் பிடிக்கிறதுக்காக யாரும் இங்கே வரவேணாம்.
  நாகரம்மன் கோயில் பக்கத்தில நாகராஜா ஸ்டுடியோவில ரெட்டைத் தலை பாம்போட ஒரு புகைப்படம் இருந்தது மட்டும் எனக்கு ஞாபகமிருக்கு. அதுவும் 75 வருஷங்களுக்கு முன்னால் எடுத்ததா, சம்முவம்பிள்ளை சொன்னாரு. நான், 40 வருஷ காலமா நாகரம்மன் கோயில் பக்கத்தில வாழ்றவன் இங்க அப்பிடியான பாம்புகள் கிடையாது. கிடையாது. கிடையாது.

  அப்படியே இருந்தாலும் மண்ணின் மைந்தர்களான நாங்களே புடிச்சி வித்துக்குவோம். பாம்பு புடிக்கிற வேலைகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்க நாங்க தயாராக இல்லை.

  அப்புறம், டிசம்பர் மாச யாவார மட்டுமே நோக்கமா வெச்சு, இங்கே ரெட்டைத் தலை பாம்புகள் உலாவுறதா நினைக்கிற தும் உண்மையில்ல. டிசம்பர் மாச யாவாரிகளுக்கு ரா மெட்டீரியல்ஸ் சப்ளை பண்றவங்க பெரும்பாலும் இங்கே கைக்காசைத்தான் இழக்குறானுங்க. வேற சிலர், காசு சம்பாதிக்கிறானுங்க என்கிறதும் உண்மைதான். பேர் கிடைக்கிறதுக்காகவோ அறிவை வெளிக்காட்டுறதுக்கா கவோ இல்லாம காசு தந்தாதான் ஆச்சுன்னு அடம் பிடிக்கிறது இங்கே ஒரே ஒரு ரெட்டைத் தலை பாம்பு மட்டும்தான். பாவம், அதனோட நிலைமை அப்படி. உங்களைப்போல ரியல் எஸ்டேட்லாம் பண்ணி, தோத்துப்போன ஒரு பாம்பு அது.

 3. 19/06/2014 இல் 11:03

  நல்ல பாம்பு…?இரட்டைத்தலை பாம்பு…!!குசும்பு…யதார்த்தம்…மனநிறைவு!!அழகான பதிவு.

 4. siva said,

  02/04/2019 இல் 22:25

  இரட்டைத்தலை பாம்பு….???


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: