காமத்தின் ரகசியக் கதவுகள் : இல்முன்னிசா படலம்

எதாவதொரு புத்தகத்தைக் கேட்டால் அடியில் கைவிடுவார் ஹமீதுஜாஃபர் நானா – தன் கட்டிலுக்கு அடியில்!

மேற்கண்ட வாக்கியம் போல கதையை ஆரம்பிப்பது என் வழக்கம் என்பதால் ஏகத்திற்கு என்னைத் திட்டுகிறார்கள், ஆபாசம் ஆபாசம் என்று. நான் என்ன செய்வேன், தன் கட்டிலுக்குக் கீழேதானே நானா எல்லா புத்தகங்களும் வைத்திருக்கிறார். என் குற்றமா அது? நிக்காஹ் பத்திரத்தில் ‘அடியில் கண்ட சொத்துக்கள்’ என்றொரு வரி வரும். அது எந்த அடியைச் சொல்கிறதோ, ஜாஃபர் நானா சொல்வது தன் கட்டில் அடியைத்தான். எல்லா மனிதர்களும் சாதாரணமாக ‘ஆபாசமாக’த்தான் பேசுகிறார்கள். எழுத்தென்று வரும்போது மட்டும் புனிதம் பற்றி போதனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நிமிடத்திற்கு பத்துமுறை நாக்கூசாமல் ‘பெத்தயா ஓலி’ சொல்கிற நாகூரிலிருந்து வந்தவன் நான். (‘பெத்தயா ஒலி’க்கு விளக்கம் தேவையா?) . லட்சத்தில் நூத்தியொரு பேர் மட்டும் மனைவி மக்களோடு ‘வாழ்கிற’ அரபுநாட்டில் இளமையைத் தொலைத்தவன் நான். எப்படி நான் எழுதுவது?

‘ஒரு தேசமே சேவல் பண்ணையாய்..‘ – எழுத்தாளர் சுப்புராஜ் என்ன அருமையான தலைப்பு வைத்தார் தன் ஷார்ஜா கதைக்கு!

என்னைப் போன்றவர்களின் வேதனைகளை அப்படித்தான் சொல்லமுடியும். ஆபாசம் என்றால் படிக்காமல் போய்விடுங்களேன். எதற்கு ஈ-மெயில் போட்டு மிரட்டுகிறீர்கள்? மனிதப்பண்புகளை ஓயாமல் குழியில் தள்ளி மூடும் முட்டாள் சேனல்களையும் திரைக்குத்துகளையும் கண்சிமிட்டாமல் பார்க்கிற நீங்கள் அப்படிச் செய்வதுதான் நியாயம். அட, நீங்கள் மிரட்டவில்லை, ஈமெயிலும் போடவில்லை. அப்படி உதார் விடுவது ச்சும்மா ஒரு பாணி.

ஆபாசத்திற்குள் பாசம் இருப்பதை அறிந்துகொள்வீராக.

‘Microsoft – Word’ல் TSCII எழுத்துரு உபயோகித்து ஒரு கதையை இணைய இதழொன்றுக்கு அனுப்ப, அவர்கள் ‘கன்வெர்ட்’ செய்யும்போது ‘ஆபாசம்’ எல்லாம் ‘பாசம்’ ஆகிவிட்டது, பாயாசம் ஆயாசமான மாதிரி. அதைச் சொன்னேன். மற்றபடி அதிக பாசமும் ஆபாசம்தான்.

எது உண்மையில் ஆபாசம்? சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமேயில்லாத மதபோதர்கள் காட்டுவதுதான் ஆபாசம். பிற சமய மக்களை அவதூறு செய்கிற வெறியர்கள் செய்வதுதான் ‘அனானி’யத்திற்கு ஆபாசம். கூசாமல் அடுத்தவன் தலையில் மிளகாய் அரைத்து ஆர்ப்பாட்டம் செய்கிற மனிதர்கள் செய்யும் அநியாயம்தான் ஆபாசம். ஈவு இரக்கமின்றி தன் சுயநலத்திற்காக அடுத்த நாட்டை நிர்மூலமாக்கும் அங்கிள் சாம்-ன் அயோக்கியத்தனம்தான் ஆபாசம். ‘ஃபக் தா ஃபரீதா’ ரக பாலியல் கடை விரிக்காமல் என் கிராம மக்களுக்காக நான் தயாரிக்கிற இலக்கிய இஞ்சிப்பச்சடி மட்டும் ஆபாசமா?

உங்களுக்காகவே இன்று ஒரு புராணம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் காமத்தின் உச்சியைத் தொட்ட ஒரே ஒரு புராணம். வேதபுராணம். காயல்பட்டணம் அவதரித்து மலையாளம் பூவாற்றில் அடங்கி விளங்காநின்ற காமில் ஒலி அல் ஆரிபு பில்லாஃ பெரிய நூஹ் ஒலியுல்லாஹ் அவர்கள் அருளிய வேதபுராணம்.

நூஹ் ஒலியுல்லாஹ்வை நீங்கள் திட்டிவிடுவீர்களா?

நூஹ் ஒலியுல்லாஹ்வின் வாழ்க்கை குறிப்புகள் இங்கே இருக்கிறது –  ஆன்மீக கருத்துக்கள் அடங்கியது வேதபுராணம் என்ற வரியோடு. வேதபுராணம் வெறும் ஆன்மிகத்தோடு நின்றுவிடவில்லை. காமத்தில் ஆன்மீகத்தை கச்சிதமாக இணைத்து வாத்ஸ்யாயனரை தாண்டியிருக்கிறார்கள் நூஹ் ஒலியுல்லாஹ் அவர்கள். இந்தப் பிரதி மிகச் சில இஸ்லாமியர்களின் வீடுகளில் ‘அரபுத்தமிழ்’ வடிவத்தில் இன்றும் இருக்கிறது. இதன் மூலம் என்று – விளங்காமல் சொல்லப்படுகிற – முஹம்மது அல்-நஃஜாவியின் الروض العاطر في نزهة الخاطر ஆங்கில மொழிபெயர்ப்பை வாங்கி அவ்வப்போது பார்க்கும் என்னைப் போன்றோரும் உண்டு.

‘ஆ.. ஊ.. சத்தம் அதிஹம் வந்தா ‘அல்-நஃஜாவி’ பூந்த வூடுண்டு அருத்தம்!’ என்கிறாள் அஸ்மா.

வேதபுராணத்திலிருந்து ஒரேயொரு பாராவை மட்டும் ‘தினம் ஒரு பூண்டு’ கதையில் முன்பு உபயோகித்தேன். மனிதகுலம் தழைத்தோங்க எல்லா பாடல்களையுமே இன்றே பதிவிடுவதென இன்முகத்தோடு முடிவு செய்துவிட்டேன். ஹமீதுஜாஃபர் நானாவிடம் அனுமதியும் வாங்கிவிட்டேன். அறியவும்.

படித்துவிட்டு உடனே படுங்கள். (துணையோடு படுப்பதே துணிகரமானது 😉 ) பாடல்கள் விளங்க வேண்டுமே என்பதற்காக தமிழ்ப் புலவர் ஒருவரை துணையாக வைத்துகொள்ளக் கூடாதுங்க…! கவனம்.

ஏன் சார், ரகசியம் என்று போட்டுவிட்டு கதவைத் திறக்கிறீர்களே என்றால் நீங்கள் என் கல்லூரி ஆசிரியர் ரங்கராஜன் சாரைத்தான் கேட்க வேண்டும். ‘நாளை காலை சரியாக பத்து மணி பதினோராவது நிமிடம் முப்பதாம் வினாடியில் There will be an unannounced  Test’ என்று அவர்தான் – முதல்நாளே – ‘படு ரகஸ்யமாய்’ சொல்வார்.

நானும் ‘புட்டுப்புட்டு’ வைக்கவில்லை. ‘கவிப்பிண்டத்தை’த்தான் வைக்கிறேன். நாகரீக தர்மார்த்தம்…

இனி ரகஸ்யமாச்சு, நீங்களாச்சு.
*

வேதபுராணம்

(முக்கிய கவினிப்பு)

நாகரீக தர்மார்த்தம் படர்ந்திருக்கும் இக்காலத்தில் கல்விமான்கள் அறியவேண்டிய முக்கியமாமிஸமாவது :- இதன் பக்கத்து சைட்டில் வருகிறது ‘இல்முநிசாப்படலம்’. அதன் அர்த்தமாகிறது ஞானமார்க்கத்தில் இஸ்திரீகளின் ஸம்போக விஷயத்தைப் பற்றிச் சொல்கிறதென்று பொருட்படுகிற படியால் அவ்விதவிஷயங்கள் நமது காருண்யம் பொருந்திய, இங்கிலீஷ் கவர்னமெண்டாருடைய திவ்ய நோக்கத்திற்காகாத விஷயங்களென்று எனக்குத்தோன்றுகின்றபடியான் நான் அதற்கு இணங்கினவனாக மேற்படி இல்முனிசாப்படலத்தின் அர்த்தங்களைப்பற்றி ஒன்றும் எழுதப்புகுதாமல் விலகி அதற்கடுத்த வேறு படலங்களுக்கு உரை எழுதும் கருமத்தில் நோக்கியவனாக நான் அதை உரை எழுதாமல் அப்படியே கவிப்பிண்டமாக விட்டுவிடுகிறேன் என்ற எனது கோட்பாட்டை கனவான்களுக்கு அறிக்கை செய்கின்றேன் –

உரையாசிரியன் (பாண்டிமண்டலம் செவ்வல்மாநகரம் மஹாவித்வானும் ஞான உரையாசிரியரும் தமிழ்சாஸ்திர நிபுணருமாகிய ஸ்ரீலஸ்ரீ எம்.ஏ.நெயினா முகம்மது பாவலர்)

**

பதிப்பு : சென்னை திருவல்லிக்கேணி யூனானி மதாரிய்யா மெடிக்கல் ஸ்டோர்ஸின் சொந்தக்காரராகிய மகாகணம் ஸ்ரீமான் டாக்டர். எம்.ஏ. ஷேக் மதார் சாகிபு அண் ஸன்ஸ், அவர்களால் தமது மதாரிய்யா யெந்திர சாலையிற் – 1922-ஆம் வருடம் – பதிந்து வெளியிடப் பெற்றது.
**

வேத புராணம்
பெரிய நூஹூ ஒலியுல்லாஹ் அருளியது

இல்முனிசாப் படலம்

1

இருகண் முடித்தா னொருகண்னாலே
இல்லெனுந் தம்மா லிழுத்துவாங்கி
முருகு நூனிலே நுக்தாவிலே
முட்டுவ துமட்டும் சுல்புமட்டும்
பருகும் நுகத்துமேல் வாங்கிக்கட்டப்
பாகமறியாத மனுடர் கேண்மோ
சொருகுங் குழல்மங்கை ஹாலுடனே
சுகமாய் மதந்தீர்க்க வறியமாட்டீர்               

2   
குஷியா யூணுண்டே யிரவுகாலங்
கூடியிருக்கவே யிருச்சா மத்தி
லொசியா துயிரெல்லா முறங்கும்போதி
லோசையொரு சத்தங் கேட்குமப்போ
மசியார் ஹலாலைத்தான் முன்னிறுத்தி
மகிழ்ந் தங்கிருகையா லணைத்துக்கட்டித்
துசியார் ஜெம்கூவில்மனத்தை நாட்டிச்
சூட்சப் பதினாங்கு தலமுத்தே                     

3
உச்சந்தலையிலும் முகங்கண்ணிலு
முவந்த இருகன்னங் குமிழிதழும்
இச்சையுட னிருவிலாப்புறமு
மிசைந்த தனமரண்டு மிடைநடுவும்
பச்சமுடன் றெப்புழரையல் குலும்
பரிந்து நாவுகொண்டாட்டி நீட்டி
யச்சமின்றியே யமுதம் வாங்கி
யருந்தும் பெரியோர்க ளமலாகுமே                

4
அருந்தியதின் பின்னர் தவுசிருத்தி
யரைநாழிகைசுற்று இறை மட்டாகப்
பொருந்துங் கமலத்தைச் சுற்றும்போது
புரையுண்டதில் முனைவிரலை யூன்றிடிற்
றிருந்து மெழுகாமத் திரைதிறந்து
ஜெகத்திற் பாயும்பார் சீமைவெள்ளம்
இருந்து கலங்கொண்டு சுற்றும்போதில்
இல்லெனுந் தம்மாலிருத்தி வாங்கே              

5
வாங்கியே மெள்ளத் தான்கிடத்தி
மணியை மேல்வாங்கி வாசியூடே
ஏங்கும் அலிபுநூ னிடைவிடாம
லிசைந்த ஷத்துக்குள் மத்தைமூட்டு
தாங்கும் பாலகன் பாலுண்ணல்போற்
றங்கும் நபுசதை நுணைத்துவாங்கும்
ஓங்குங் கருபபாய்ந்து தங்குமானா
லுவந்தே யவளமனம சமதாகுமே                   

6
சேர்க்கை செயும்போதி லிடதுபுறந்
திறமாய் நூததூபுதான் விழுந்ததானாற்
கூர்க்கப் பெண்ணாகத் தான்விளையுங்
குறியினடுவிலே தங்கி நின்றாற்
பார்க்க ணலியாகத்தான் விளையும்
பகரு மிதுமுறை யறிந்துமிகு
தீர்க்கமுள நல்ல நபியிறசூல்
செப்பினா ராதி சொற்படியே                        

7
இப்படிச் சேர்க்கை செய்யாதவர்க்
கிணங்கான் ஹலாலுமே பிணங்கிடுவாள்
துப்பு ரவதர்ன நபியிறசூல்
சொன்னா ரில்முநிசா வதிலே
தெர்ப்பத் துடன்காமந் தங்குமாகிற்
கேடா கும்பிள்ளை தாய்தந்தைக்கு
மொப்பில் லாதுறும் ஹைவானுமா
முண்மை யாயிதை யறியுமென்றார்                

8
எழுநான் கெழுத்தினி லெழுத்தோரொன்ப
திலகுங் கலிமாவிலறு நான்குமாம்
தொழுகு மைம்பத்து மூன்றுலக்கம்
சுஜூது மவுஜூதாய் சுக்கூனுள்ளே
பழுதில் லாசுன்னத் ததையறியப்
பார்க்கப் பறுலான சூறத்திலே
வழுவில்லாமலே சொன்னான் அல்லா
மாக்கான முஹம்மதுன் யத்திலே               

9
முந்நூற் றிருபத்தி மூன்றுலக்கம்
முறுசல் கூடின முறையாமிது
மன்னூர் தனில்வந்து ஹறுபைந்ததில்
மணமா மொழியதன் பறுலறியத்
தண்ணூரைம்பத்து மூன்றுலக்கஞ்
கார்ந்த ஹறுபுநால் சுன்னத்தாறு
பொன்னூர் சுவர்க்கத்தினி டைவாழலாம்
பூண்டு நன்றாக அறியுமென்றார்                 

10
உன்னு மூச்சிலே யுண்டானவாசல்
லுடுப்பு மொடுக்கமு மறியவேண்டும்
பன்னுங் கிளிபல பேசினாலும்
பகையாம் பூனைதான் பிடிக்கும்போது
சொன்ன பலபேச்சும் வாராதப்போ
துணையாம் தன்பேச்சிற் கீவன்போகும்
குன்னென் றுயிர்சொல்லும் சொல்லறிந்து
கூடும் ஹலறத்திற் கூடலாகும்                    

11
ஷர்று நீங்கவே அமல்கள்செய்ய
ஷஹாதத் துளநாயன் ஷாஹிதாகத்
துர்றத் தென்மிறா அத்துசூத்ரந்
துலங்கு மதலையின் கற்பனைசொல்
அந்ற பீக்குள் அகுலாவென
அருளுங் கலிமாவின் பொருளானது
நிர்றஹீமெனும் பிசுமில்லாஹி
நிறைந்த ஷறுபுத் தொன்பல்லே                  

12
திக்கீர் பனாவாகு முஷாஹிதாவுஞ்
ற்சய்து முடிந் தபின்னவி செய்யுமே
தக்கர் மதமாசிச் ஜிமாஉ செய்தாற்
றானே மணிவீழ்கில் மதமடங்கும்
சுக்குறுந் தன்மைத்ம் பாடுபட்டாற்
றுலக்க மாகவே யறியவரு
மக்கர் செய்ஹைவா னிய்யத்தான
மருட்டை வெருட்டினால் மனமொடுங்கும்       

13
தவுறாத் தொடுமிஞ்ஜீல் சபூறானதுஞ்
சாற்றும் பொருளெல்லாம் புறுக்கானிலே
அபரூ பமதான புறுக்கானதி
லாரும்பொரு ளெல்லாம் யாசீனிலே
ஜெபறூத் தெனுங்கல்பு யாசீன்கலாம்
கிறந்த பாத்திஹா வானதிலே
நவரூ பமதான வும்முல்குறா
னாட்டம்பே யலிபானதிலே                  

14
அலிபானது நுக்கத் தாமூன்றாகி
லழகா யொளிசேருஞ் சுக்கூனாய்ற்
சலியாமற் சக்கூன் மீமானதிற்
ரறள மணியீன்ற வலம்புரிக்குள்
ளொலியா யலைபோதி யங்குல்த்த
வுஹதும் அஹ்துக்கு முன்பாகளே
கலிமாப் தபாருள் தன்னை யறியவிதி
காணா தவர்மனங் காபிறென்றார்              

15
அழியாப் பெரும்வாவ்வை அஹதியத்தை
யன்பாய் மனம்தனி லுறுதியாக்கி
அழிவிலா அல்லா குறுஆனிலே
யளவ தாகவே சொன்னதுகேன்
ஒளிவு லாநபி முஹம்மதைவு
முவந்து மனதிலே யுறுதியாக்கித்
தெளிவா மனதிலே திறமதாக்கிச்
சேர்ந்து முஷாஹிதா செய்துவாவே 

**

தொடர்புடையவை :

The Perfumed Garden of the Shaykh Nefwazi – Translated by Sir Richard Burton

பெரிய நூஹ் வலியுல்லா பற்றி ஹமீது ஜாஃபர் 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: