சில மௌலவிகளின் உளறாட்டியம் – ஹமீது ஜாஃபர்

தக்கலை ஞானி பீர்முஹம்மதுஅப்பா பற்றிய நல்லதொரு பதிவை தன் வலைப்பக்கத்தில் பதிந்துவிட்டு, அடுத்தநொடியில் இந்த ‘உளறாட்டியத்தை’ எழுதி இங்கு பதியச் சொன்ன அண்ணன் ஹமீதுஜாஃபருக்கு நன்றிகள். ஆலிம்சாக்கள் ‘கவனிக்க’ வேண்டிய அவருடைய மின்னஞ்சல் : manjaijaffer@gmail.com . இது ‘ப்யூர்’ இஸ்லாம். பழக்கமில்லாதவர்கள் வேறெங்காவது பாய்ந்துவிடுவது உசிதம்.

**

ஹமீது ஜாஃபர்

சில மௌலவிகளின் உளறாட்டியம்

ஹமீது ஜாஃபர்

என்னுடைய கையடக்க ஹார்மோனியப் பொட்டியைத் திறந்து ஃபேவரைட்டில் போட்டுவைத்திருந்த ஆபிதீன் பக்கங்களைத் திறந்ததும் வினோதமான தலைப்பில் ஒரு கட்டுரை! ஏன், ஆபிதீனே ஒரு வினோதமானவர்தான். அவர் தலைப்பில் வினோதம் இருப்பதில் ஆச்சரியமில்லை. தலைப்பு இதுதான் : ‘ஏழாம் வானத்தில் கவிக்கோ’ . கவிக்கோ ஏழாம் வானம் போனதை விட அங்கு பேசப்படும் மொழி தமிழ் என்று கண்டுபிடித்ததுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! இதை கல்வத்து நாயகம் சொன்னார்களா இல்லையா என்பதைவிட அதை கவிக்கோ ஏற்றுக்கொண்டது பேராச்சரியம்!!

அந்தக்காலத்தில் ‘மறுமலர்ச்சி’ பத்திரிக்கையில் வலங்கைமான் அப்துல்லாவும் மஹதியும் எழுதும் கட்டுரைகளை என் அப்பாவுக்கு (பாட்டனார்) படித்துக் காண்பிப்பேன். அந்த மஹதியின் மகனார்தான் கவிக்கோ. அவருடைய பாட்டனார் சிறந்த கவிஞர், ஃபார்சியிலும் உருதுவிலும் கவி இயற்றும் வல்லமைப் படைத்தவர் என்று ஒரு டி.வி. நிகழ்ச்சியில் அவரே சொல்லியதைக் கேட்டேன். தமிழ் பழமைவாய்ந்த மொழிதான், எனக்கும் பற்று இருக்கிறது, ஆனால் ஏழாம் வானத்து மொழி என்று சொல்வதைத்தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதே கல்வத்து நாயகத்தின் வளர்ப்பு மகனார் ஷிப்ளி பாவா அவர்கள் நம்  தமிழை ‘கொக்கரக்கோ பாஷை’ என்பார்கள்.

சரிசரி , இதோடு நிறுத்திக்கிட்டு உளறாட்டியத்துக்கு வர்ரேன். எல்லாம் பழைய ஞாபகம், ஆலிம்சாக்கள் ஒளறிக் கொட்டியது…

உளறாட்டியம் 1

அப்போது எனக்கு பன்னெண்டு பதிமூனு வயசிருக்கும் எட்டாவதோ ஒன்பதாவதோ படிச்சிக்கிட்டுருக்கேன். எங்கவூர் பள்ளிவாசல்லெ மெஹ்ராஜ் கூட்டம் நடந்துச்சு. மெயின் பேச்சாளர் ஒரு மௌலவி. நல்ல பேச்சாளர். நல்ல குரல் வளம் மிக்கவர். ‘நாம நெனச்சிக்கிட்டு இருக்கிறமாதிரி ஒரே ராத்திரியிலே மெஹ்ராஜ் போய்ட்டு வந்துடலே ரசூல் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்; அஹ போனது ஒரு ராத்திரிதான், ஆனா திரும்பிவரும்போது மூஸா (அலை) கேட்டாஹா , ‘அல்லா என்ன கொடுத்தான்?’னு. ‘அம்பது வக்து (நேரம்) தொழுகையெ கொடுத்தான்’னு ரசூலுல்லா சொன்னாஹ. ‘உங்க ஜனங்க தாங்க மாட்டாங்க; போய் கொறச்சிக்கிட்டு வாங்க’ன்னு மூஸா(அலை) சொன்னாஹா; ரசூலுல்லா போய் கொறச்சிக்கிட்டு வந்தாஹ; ‘எத்தினெ கொறச்சான் அல்லா?’ண்டு கேட்டதுக்கு ‘ஒரு வக்து கொறச்சான் அல்லா’ண்டு பதில் சொன்னாஹ; ‘இது பத்தாது , போங்க’ன்னு திருப்பி அனுப்பினாஹ; மறுபடியும் போய் ஒரு வக்து கொறச்சிக்கிட்டு வந்தாஹ, இப்படியா நாப்பத்தஞ்சு தடவை போய் கொறச்சிக்கிட்டு வந்தாஹா; ‘இதுவும் பத்தாது, போங்க’ன்னு சொன்னப்ப ‘எனக்கு வெக்கமா இருக்கு நான் போமாட்டேன்’னு அஞ்சு வக்தோடு வந்துட்டாஹ; ஆக , அஹலுக்கு வயசு 62 அல்ல 100. பாக்கி 38 வருசமும் மெஹ்ராஜ்லெ போய்ட்டு போய்ட்டு வந்ததுலெ ஆயிடுச்சு. நம்மலெ 38 வருஷம் தூங்கவச்சுட்டான் அல்லா.’ அப்டீன்னு ஒரு போடு போட்டார்! ஜனங்க வாயெ பொளந்துக்குட்டு கேட்டுக்கிட்டு இருந்தாங்க எனக்கோ தலைசுத்து வந்துடுச்சி. அப்பொ இன்னொரு பக்கத்திலெ பகலா இருந்திருக்குமே , அவங்கெல்லாம் முப்பெத்தெட்டு வருஷம் முளிச்சுக்கிட்டா இருந்தாங்கன்னு கேட்கத் தோணுச்சு, எதாச்சும் கேட்டா ‘இவ்ளோண்டு பய , என்னா பேச்சு பேசுறான்’டு அடிக்க வந்துடுவாங்கங்கிற பயத்துலெ சும்மா இருந்துட்டேன்.

உளறாட்டியம் 2

இது நடந்து பல வருசத்துக்குப் பிறகு , ஒரு இளம் வயசு ஆலிம்சா வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்கு முன் ஒரு பிரசங்கம் பண்ணினார் அதே மெஹ்ராஜைப் பற்றி பேசினார், ‘ரசூலுல்லா முதல் வானத்துக்குப் போகும்போது சிலர் கூப்புடுற சத்தம் கேட்டது, அருகிலிருந்த ஜிப்ரீல்(அலை) , ‘திரும்பிப் பார்க்காதீங்க’ என்றார்கள். திரும்பிப் பார்க்காமல் இரண்டாம் வானத்திற்குப் போனார்கள், அங்கேயும் கூப்பிடுகிற சத்தம் கேட்டது, அப்போதும் ஜிப்ரீல்(அலை) , ‘திரும்பிப் பார்க்காதீர்கள்’ என்று மீண்டும் சொன்னார்கள். இப்படியாக ஏழு வானங்களையும் கடந்து ‘அர்ஷ்’-இல் அல்லாவை ரசூலல்லா அவர்கள் சந்தித்தார்கள்.’ என்று இலக்கியத் தமிழில் இடையிடையே நல்ல கவிதைகளையும் இணைத்து சுமார் நாற்பது நிமிடங்கள் பேசினார். முடிவில் தாழ்ந்த குரலில் என் வயதான தாயாருக்கு வைத்தியம் செய்யவேண்டியுள்ளது என்று தொடங்கி தனது ஏழ்மை நிலையைச் சொல்லி உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தொழுகை முடிந்து அவருக்காக வெளியில் காத்துக்கொண்டிருந்தேன். சிலரிடம் உதவிகள் பெற்றுக்கொண்டு வெளியே வந்ததும், ஆலிம்சா இங்கெ வாங்கன்னு கூப்பிட்டு கொஞ்சம் பணத்தை கொடுத்துட்டு, உதவி வேணும்னா கேளுங்க; ஆனா அதுக்காக மார்க்கத்தை வளைக்காதீங்க’ என்றேன்.

“ஏன், என்ன தப்பா பேசினேன்?”

“நீங்க பேசினது பூரா தப்பு. கவிதையெல்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா , போனாங்க – வந்தாங்க – திரும்பி பாக்காதீங்கண்டு ஜிப்ரீல் அலை சொன்னாங்கண்டா என்ன அர்த்தம்? ரசூலுல்லா உங்களையும் என்னையும் மாதிரி சாதாரண மனுஷர்ண்டு நெனச்சுக்கிட்டீங்களா?”

“ஆதாரத்தோடுதானெ பேசினேன்.”

“உங்களெ மாதிரி ஆலிம்சா எழுதின ஆதரமாக இருக்கலாம், ‘மெஹ்ராஜ்’ன்னா என்ன அர்த்தம்?”

“மேலே ஏறுதல்ன்னு அர்த்தம்.”

“நானும்தான் ஏறுவேன், இந்த மினாரா மேலே ஏறுன்னா ஏறுவேன். அதுவா அர்த்தம்?”

‘என்னை உட்டுத்தொலை’ என்கிறமாதிரி என்னை ஒரு மாதிரியாப் பார்த்தார். புரிந்து கொண்டேன். “சரிசரி விடுங்க , சாப்பிட வாங்க” என்று கூப்பிட்டதற்கு , “இல்லை , வேண்டாம் ; நான் அடுத்த ஊர் போகனும்” என்று ஆளைவிட்டா போதுமென்று போய் விட்டார்.

உளறாட்டியம் 3

சில வருஷத்துக்கு முந்தி என் ரூமில் தங்கிருந்தவர் ஒரு புத்தகத்தை பாதுகாப்பாக வைத்திருந்தார். தினமும் எடுத்துப் பார்த்துவிட்டு அதற்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வைத்துக்கொள்வார். எதாவது சஸ்பென்ஸாக இருந்தா அதை பார்க்கத் தோணுவது இயல்புதானே,  அது என்னை சும்மா விடுமா? அதை வாங்கிப் பார்த்தேன். மெஹ்ராஜைப் பற்றியது ஆசிரியர் நாகூர் கமலப் பித்தன், ஒஷோ மாதிரி அவர் ஈஷோ. உள்ளே நல்லாத்தான் இருந்துச்சு ஆனா ஒரு பெரிய டர்னிங்க் பாயிண்ட் : ‘விண்வெளியில் ஒரு குதிரை போற அளவுக்கு ஒரு துளை இருக்கு. அந்த வழியாகத்தான் எல்லா ராக்கெட்டும் போவுது, அதுதான் ரசுலுல்லாஹ் ‘புராக்’கில் போன பாதை’ என்று ஒரு போடு போட்டிருந்தார்.

அதோடு புத்தகத்தை மூடிவச்சுட்டேன். நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரேயொரு தொளை! அதுக்குள்ளே போனது எதுவுமே திரும்பினதாக சரித்திரம் கிடையாது, போனது போனதுதான். வேறு ஒன்ணுமில்லெ… ‘ப்ளாக் ஹோல்.’!

இப்படி ஆளுக்காள் அவங்கவுங்க இஷ்டத்துக்கு எதையாவது சொல்லிட்டுப் போனா நாங்க எங்கேபோய் முட்டிக்கிறது?
எங்க ஹஜ்ரத்திடம் மிஃராஜைப் பத்தி கேட்டேன், விளக்கம் சொன்னாங்க:  “இறைவணக்கத்தின் வளர்ச்சியில் சில  படித்தரங்களை அடைய வேண்டியிருந்தது அப்போது மிஃராஜ் நடந்தது. ஏழு வானங்களைக் கடந்து அருஷில் அல்லாஹ்வை சந்தித்ததாக ஷரீஅத்தில் சொல்லப்படுகிறது. மனித நிலைக்கும் ஆண்டவனுடைய நிலைக்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கிறது.  ஒரு குயவனுக்கும் பானைக்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ அதே தொடர்பு ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இருக்கிறது. குயவன் எங்கோ இருக்கிறான் , பானை நம் வீட்டில் இருக்கிறது. ஆனால் இதிலுள்ள பெரிய நுணுக்கம் என்ன வென்றால் எவன் படைத்தானோ அவனுடைய ஒரு வித்து இவனிடம் இருக்கிறது என்று சூஃபியாக்கள் சொல்கிறார்கள்.

அந்த வித்து தன்னை தூய்மைப் படுத்த நாடுகிறது; எங்கிருந்து வந்ததோ அந்த நிலைக்கு உயர விரும்புகிறது. மேலே இருந்து கீழே வந்தவுடன் தூல உலகத்தில் கட்டுப்பட்டுப் போய்விட்டது. எனவே இங்கு பயிற்சி பண்ணுகிறது. பயிற்சி பண்ணப் பண்ண அந்த வித்து தூய்மைப் பெற்று , மூடியிருக்கும் குப்பைகளெல்லாம் நீங்கி மேலே போக ஆரம்பிக்கிறது. மேலே போகும்போது முதலில் ஒரு திரை வரும் அப்புறம் வேறொரு திரை வரும் இப்படி பல திரைகள் இருக்கின்றன. ஒரு திரை உணர்ச்சித் திரை, மறு திரை அறிவுத்திரை. அடுத்தது நினைப்பு/கர்வம் என்ற திரை. இப்படி ஒவ்வொரு திரையாக கிழித்தெரியப்படும்போது தான் யார் என்பது தெரியும். எந்த வினாடியில் அது தன்னைப் புரிந்துக்கொண்டதோ அந்த வினாடியில் அது ஆண்டவனை சந்தித்தது என்று அர்த்தம்.

நுபுவத் – நபித்துவம் பெற்ற பிறகு நபியாக வந்து பிரச்சாரம் பண்ணுகிற காலத்தில் எல்லைகளைக் தாண்டி, பல திரைகளைக் கடந்து போகும்போது தெய்வசக்தியை தனக்குத்தானாக சந்திக்கிறார்கள்; ஆண்டவனை நேராக சந்திக்கிறார்கள். இதுதான் மிஃராஜின் தத்துவம்.

மிஃராஜ் என்ற வார்த்தைக்கு ஏணி என்று அர்த்தம், ஏறிப்போகுதல் என்று பொருள். ஏறுதல் என்றால் சட உலகத்தில் ஒவ்வொரு படியாக கால்வைத்து ஏறுதல் என்று அர்த்தமல்ல. கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போகுதல்; கீழ்த்தரமான மனிதக் கட்டுப்பாடு நிறைந்த சட உலகத்திலிருந்து சடமற்ற சூட்சம நிலைக்கு உயர்தல். அப்படி உயரும்போது எத்தனைத் தடைகள் வருகின்றனவோ அத்தனைக்கும் வானம் என்பார்கள். ‘புராக்’ என்பது வாகனமல்ல. புராக் என்ற வார்த்தை பர்க் என்ற சொல்லின் மறுவு, பர்க் என்றால் மின்னல் என்று பொருள். இந்நிகழ்வு மின்னல் வேகத்தில் நடந்தது.

இதையெல்லாம் விட்டுபுட்டு மூசா அலைஹிசலாத்தைப் பார்த்தாஹா,  வாங்க புறாட்டா திண்ணுங்க  தேத்தண்ண்ணி குடிங்கன்னு சொன்னாஹான்னு சொல்றதெல்லாம் இந்த தாடிக்காரனுவ இறக்கிவிடுவது. அல்லாவும் மூசா(அலை)வும் ரசூலுல்லாவை வச்சுக்கிட்டு கண்ணாமூச்சியா வெளையாண்டாங்க? எவ்வளவு தத்துவார்த்தமுள்ள நிகழ்ச்சியை எப்படி அசிங்கப்படுத்துறாங்க? இதெ நீங்க சொன்னா காஃபிர்ன்னு முத்திரை குத்துவாங்க. என்னிடம் வரமாட்டாங்க, வந்தா மொத்திவிடுவேன்னு தெரியும்.”

சரி, ஆலிம்சாக்கள் ஆதாரம் காண்பிக்கும் ஹதீஸைத் தேடிப்பார்த்தபோது அதைவிட பெரிய ஆச்சரியம் காத்திருந்தது! ஒரு புத்தகம்.  Al-Lu’lu’wal-Marjan vol -1;  Compiled by: Fuwad Abdul Baqi;  Translated by: Dr. Muhammad Muhsin Khan, Islamic University, Al Madina Munawara; Published by Dar-us-Salam Publication – Riyadh KSA  pp95 to100 பக்கங்களில் மிஃராஜைப் பற்றி இரண்டு ஹதீஸ்களை எழுதியிருந்தார்கள். முதல் ஹதீஸில் (Bukari Vol 1. no345) . தொழுகையை பாதிப் பாதியாக அல்லாஹ் குறைத்தான் என்றும் இரண்டாவது ஹதீஸில் (Bukari Vol 4. no 429)  பத்துப் பத்தாகக் குறைத்தான் என்றும் எழுதியிருந்தது. இந்த இரண்டு ஹதீஸும் இரு வேறு கருத்துக்களைத் தருகிறது. ரசூல்(சல்) ஆளுக்கொரு மாதிரியாக சொல்லியிருக்கமாட்டார்கள். எங்கள் ஹஜ்ரத் , ஒரு முறை சொன்னார்கள். “ரசூலுல்லாஹ் பேசினார்கள் என்றால் ‘அது’ ‘இது’ ‘அப்படியல்ல’ ‘நான் அப்படி சொல்லவில்லை’ என்று பேசவே மாட்டார்கள். அல்வாவைத் துண்டுபோடுவதுபோல் ‘கிரிஸ்டல் க்ளியராக’ இருக்கும். வார்த்தை சுத்தமாக ஆழ்ந்த இலக்கிய நயத்துடன் அழகாகப் பேசுவார்கள்.”

அப்போ எங்க ஜஃபருல்லாஹ் நானா சொன்னதும் சரியா இருக்கு: “நாப்பது நாப்பதஞ்சு வருசத்துக்கு முந்தி ஒரு மீலாது கூட்டத்திலெ சொன்னேன், மிஹஃராஜில் மூசா(அலை)வை பார்த்தது உண்மை, ஈஸா(அலை)வைப் பார்த்தது உண்மை, ஆனல் திரும்பத்திரும்பப் போய் தொழுகையைக் குறைத்துக்கொண்டு வந்தார்கள் என்பது பொய். அல்லா குர்ஆன்லெ என்ன சொல்றான்? தொழுகை முடிஞ்சவுடன் உங்க வியாபாரத்தை நோக்கிச் செல்லுங்கள் என்று. மேலும் உங்கள் சக்திக்கு மீறியதை உங்கள்மீது சுமத்தமாட்டேன் என்கிறான் அப்படி இருக்கும்போது எப்படி ஐம்பது வக்து வரும்?

ஒரு நாளைக்கு 24 மணி நேரத்திலெ நமக்கு கொடுக்கப்பட்ட நேரம், அதாவது ரிலாக்ஸான நேரம் எவ்வளவு? எட்டு மணி நேரம். அதாவது தூங்குகிற நேரம். இந்த நேரத்திலெ தொழுகை கிடையாது. பாக்கியுள்ள 16 மணி நேரம் உழைக்கிற நேரம். இதில்தான் தொழுகை இருக்கிறது. ஐம்பது வக்து தொழுகை வச்சா  நாள் பூராவும் அல்லாஹு அக்பராத்தான் இருக்கும். அப்புறம் வியாபாரத்தை எப்படி கவனிக்கிறது? விவசாயத்தை எப்படி பார்க்கிறது? குர்ஆன் வசனம் பொய்யாயிடுமே!

இரண்டாவது, மூசா(அலை) தூர்சினாமலைக்குப் போய்ட்டு வர்ரதுக்குள்ளெ அவனுவ காளைமாட்டைத் தூக்கிட்டானுவ; அவருக்கு அவருடைய உம்மத்தைப் பற்றி தெரியலெ; அடுத்து , “முஹம்மதே உங்கள் உம்மத்து தாங்கமாட்டார்கள்” என்று முஹம்மதிடமே சொன்னால் ரசூலுல்லாவுக்கு அவங்களுடைய உம்மத்தின் capacity, capabilityயைப் பற்றி தெரியவில்லை என்று அர்த்தமாகிவிடும்.

“இறைவா! என்னையும் முஹம்மதின் உம்மத்தில் ஒருவனாக சேர்த்துவை” என்று துஆ கேட்டிருக்காங்க. அப்படி இருக்கும்போது ரசுலுல்லாவின் உம்மத்தை அவங்களுக்கு எப்படிங்க தெரியும்? என்ன கதைன்னா, ரசூலுல்லா மெஹ்ராஜ் போய்ட்டு வந்தது உண்மையாயிடுச்சு. நபித்துவமும் முடிஞ்சிடுச்சு; குர்ஆனும் பூரணமாயிடுச்சு. பின்னால்தானே ஹதீஸ் எழுதப்பட்டது. எப்போ எழுதினாங்க? இமாம் புகாரி(ரஹ்) காலத்திலெ பி’ரில்லியண்ட்’டான யஹூதிகள் இருந்திருப்பாங்கல்ல – இப்பொ இருக்கிறமாதிரி. அவங்க மூசா நபியை முன்னாள் கொண்டுவரனும்னு ஒரு சூழ்ச்சி பண்ணியிருப்பானுவ. எங்க நபி இருந்ததுனாலெத்தான் அஞ்சு வக்து தொழுகை கிடைச்சது இல்லேன்னா அம்பதாயிருக்கும்னு கதையைக் கட்டிவிட்டுட்டாங்க. அதாவது , மூசா நபியைப் பார்த்தார்கள் என்ற உண்மையின் மேல் ஒரு பொய்யை வைத்திருக்கிறார்கள்.  இதை நம்ம ஆலிம்சாக்கள் தூக்கிவச்சுக்கிட்டு சொல்லிக்கிட்டு இருக்காங்க.”

ஆக மொத்தத்தில் ஆழமான செய்திகள் உள்ள மிஃராஜை சாதாரண செய்தியாக்கி  இடைச்செருகல்களைக் கொண்ட ஹதீஸ்களை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள். என்ன செய்வது? நம் தலையெழுத்து! யாரால் மாற்றமுடியும்? 

**

நன்றி : ஹமீது ஜாஃபர்

5 பின்னூட்டங்கள்

  1. தாஜ் said,

    16/02/2010 இல் 11:00

    நல்லா இருந்தது.
    பார்வை ரொம்பவும் கூர்மை!
    -தாஜ்

  2. 20/02/2010 இல் 14:27

    மிஃராஜில் ரஸுலுல்லா (சல்) அவர்கள் படிப்படியாக தொழுகையை குறைத்த சம்பவம் பற்றிய இன்னொரு ஆலிம்சாவின் பேச்சு:

    மூஸா நபி அல்லாவ பாக்கணும்னு சொன்ன போது, அல்லா சொன்னான், என்ன நீங்க பாக்க முடியாது, என்ன பாத்த கண்ண வேணும்னா நீங்க பாக்கலாம் என்றான்.

    அதனால தான் மூஸா நபி கண் குளிர மறுபடி மறுபடி அல்லா பாக்க வச்சான்.

    • 20/02/2010 இல் 17:36

      இதுவும் நல்லாத்தான் இருக்கு! அப்பொ மூசா(அலை) ரசூலுல்லாவுக்கு ரஹீம் கடை குலாப்ஜானும் பாபா கடை கொத்து புறாட்டவும் கொவலை சாயாவும் கொடுத்தார்கள் அந்த ஆலிம்சா சொல்றார். ஒருவேலை மம்மட்டிக்கடை சாயா கொடுத்திருக்கலாம். வாள்க ஆலிம்சா மக்காள்கள்

  3. 21/04/2010 இல் 14:25

    எனது நண்பர் ஒருவர் கேட்டார், “அமெரிக்கக்காரன் சந்திரனுக்கு போனத நம்புறீங்களா ?”

    நான் நம்புறேனா இல்லையா என்று எதையாவது தப்பா சொல்றதுக்கு பதிலாக, டிப்ளமாட்டிக்காக பதில் சொன்னேன். “ஒருவர் நம்பாமலும் இருக்கலாம், நம்பவும் செய்யலாம். நம்பாமல் இருப்பதற்கு ஏதுவா ஒரு வீடியோ ஒன்று உள்ளது. அதில் சந்திர மண்டல பயணம் எப்படிப் பொய்யின்னு விளக்கியிருக்கு” என்று சொன்னேன்.

    அதுக்கு அவர், “அந்த விளக்கமெல்லாம் தேவையில்லை. மிக எளிதாக அதை உணரலாம். விண் பயணம் என்றால், அது பைத்துல் முகத்திஸிலிருந்து மட்டும் தான் அது சாத்தியம் என்பது நபி அவர்களிடமிருந்து நாம் அறிவது” என்று போட்டார் ஒரு போடு.

    • 22/04/2010 இல் 05:46

      அன்பின் மாலிக், இந்தமாதிரி ஆட்களை உங்கள் வலைப்பக்கத்தில் பதியுங்கள். நன்றி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: