பெரிய கோணங்கியை பார்க்க விக்கிபீடியா, பிரம்மராஜன், நாகார்ஜூனன் , ஜெயமோகன் பக்கத்திற்குப் போகலாம் நீங்கள். இது சின்ன கோணங்கி. கவிஞர் தாஜ்-ன் ‘அதி தீவிர’ பின் நவீனத்துவக் கதை. நேற்று மூன்று முறை படித்துவிட்டு ‘கதை என்னய்யா?’ என்று கேட்டேன். ‘படித்து முடித்ததும் நம் தலைமுடி உதிர்ந்துவிட்டால் வெறும் பின் நவீனத்துவம்; தலையே உதிர்ந்து விட்டால் அதி தீவிர பின்நவீனத்துவம்’ என்று மட்டும் சிரிக்காமல் சொன்னார் தாஜ். தன்னை கிண்டல் செய்துகொள்வதும் பின்நவீனத்துவ முறையில் ஒன்றுதான். கதை? யப்பா…. முஜீப் ரஹ்மான்-ஐ படிக்க முயற்சிக்கும் எனக்கே முழி பிதுங்கி விட்டது. உங்களுக்கு?
**
சின்ன கோணங்கி
– தாஜ்
கடல் அலைகளின் கூட்டுப் பிரதிநிதியான மாவலை மஹாராணியை ஒத்தை விரலில் கோதித் தூக்கியபடி, மாயன் சின்ன வடிவில் சின்னானாக கைகட்டி , “பிறகு?” என்றபோதே மனதை அறிந்தவனாய் கடலை குளமாக்க அந்த மஹாராணியிடம் கட்டளையிட்டான். இதோ என்றவள் அதை குளமாக்கிவிட, கோதிய விரலை விசிறினான் சின்னான். நட்டநடுக் குளத்தில் துளியாய் தெறித்து விழுந்த மஹாராணி , பூத்த தாமரையானாள். மறுநாள் உதிக்கத் தவித்துப் போன சூரியன் குளக்கரையின் கீழ்த்திசையோரம் சிரமம் கொண்டெழ தாமரையை கதிரால் மொத்தி உதயத்தை நிகழ்த்தினான். சூரியனின் பார்வைக்காக பகலெல்லாம் மேவும் அலைகளாய் எழுந்து ஆர்ப்பரித்து பிரம்ம நடனம் புரிந்தது போக, இக்கணம் தாமரையாய் அதைப் பார்த்தபடி பூத்த கண்வாங்காமல் நிலைகுத்தி நின்றாள் மஹாராணி. வானத்தில் இன்னும் மேலெழுந்து கருநீலவெளியை தெளியவைக்கும் மாறாக் காதலோடு ஜெகஜோதியானான் சூரியன்!
மமதையோடு காடு திரும்புகையில் இத்தனை சக்தி எனதாகிப்போனபோதும், உடலெங்கும் கருப்பாய் , பற்கள் நீலம் ஏறி, கண்களில் காவி ஜொலிப்பு குவிய , தனலெஷ்மி நினைவில் எதிர் நின்றாள். அங்கம் குலுங்கும் அவள் மிரட்டலுக்கு இன்னும் ஒடுங்கிப்போவது வெட்கமாக இருந்தது. மனதிற்குள் கருவினான். தனவந்தன் லெஷ்மி நாராயணின் பாடு இனிதான் தெரியப் போகிறது. மெலிந்து துரும்பாகிப் போவாள் தனம்!
காட்டின் அரணுக்குள் புகும் நாழியில் அவன் மீது இதமாய் தூறிய மழையில் குளிர்ந்தான். தகிப்போடு ஓடிவந்த ஓர் கலைமான் துள்ளும் மாதுவாய் மடியில் சூடு பரவ அமர்ந்து கொண்டது. கிளை பிரிந்த கொம்புகளோடும், முரட்டுப் பார்வையோடும் ஓர் திடகாத்திர மான் அருகில் வந்து, அவனை கண்ட நொடியில் தள்ளியோடி விட்டது. நினைவில் தனலெஷ்மி அடங்கவில்லை. கண்களால் மடிசூட்டை விசாரிக்கிறாள். எல்லாம் என்னில் வீழும் என் சக்தி . அந்த மாமிச மலைக்கு இனி புரியும்! தனம் என்றாலும், சக்தியென்றாலும் இனி அது நான்தான்!
*
‘காசு பார்க்க வக்கற்ற’ தனத்தின் கூரிய கன ஆயுதம் மாரை வெட்டிப் பிளக்க, கண்களின் வடிந்த இரத்தத்தோடு காயத்தை ஆற்ற மூலிகை தேடி வந்த இப் பாறைக் காட்டில், காயம் தழும்பான நாட்களில் திரும்பத் திரும்ப தனத்தின் கன ஆயுதம் தறித்துக் கொண்டே இருந்தது. தனம் தேடி நீண்ட நெடியதோர் சந்தன மரத்திலேறி அதன் கிளைகளை தனமற்று மரத்துப் போன கைகளால் முலைகளைப் பிடித்து திருகுவதுபோல சிதைக்க துவங்கியபோது கூக்குரலாய் சப்தம் எழுந்து கெஞ்சியது. “மனிதா… மனிதா… விட்டுவிடு என்னை! மாயன் நான்! சக்தியின் சக்தி, பூமிப் பந்தில் மனிதர்கள் தோன்றிய யுகத்தில் அவர்களின் குரூரமும் வக்ரமும் பெருகியபோது தாங்காது தப்பித்து வந்தவன்! இந்தப் பகுதியின் அடர் புதருக்குள் மறைந்து மண்ணோடு மண்ணாகி மறைந்துக் கிடந்தேன். ஒரு பெருமழைக்குப் பிறகு இந்த மரம் என் மேல், என் செல்லமாய் என்னை மறைத்து கிளம்பி ஓங்கிக் கிளைவிட்டு மணக்க செழித்து வளர, இன்னும் பத்திரமானேன். யுகாதி யுகமாய் யார் கண்ணிலும் படாத என் இருப்பை நீ கண்டுகொண்டதுதான் எப்படியெனத் தெரியவில்லை? மரத்தின் கிளைகளிலெல்லாம் என் உயிரைப் பரத்தி வைத்திருக்கிறேன், என்னை முறித்துப் போட்டுவிடாதே, இந்த மண்ணில் என் இருப்பு இன்னும் பல யுகங்கள் காணவேண்டும். என்னை ஆக்கிய இயற்கையின் கட்டமைப்பு அப்படி! அது ஏனென்று எனக்குத் தெரியாது! என்னை விட்டுவிடு. நான் வேண்டுமானால் உனக்கு சாசனம் செய்து தருகிறேன், உன் காலம்வரை உன் அடிமை நான்! உனக்கு சேவகம் செய்ய காத்துகிடப்பதே இனி என் பணி. என்னை சிதைக்கும் எண்ணம் மட்டும் வேண்டவே வேண்டாம்.”
உள்பயம் உடம்பை உலுக்க, மனித மூளையின் வக்ரத்திற்கு பயந்த அந்த மாயனிடம், மனித தந்திரத்தையும் காட்டினான் அவன். “அப்படியா? என்னிடமிருந்து பாதுகாப்பு தேடுகிறாயா? பார்க்கலாம், எங்கே என் முன்னால் உன் உருவத்தைக்காட்டு” எனவும், வானத்திற்கும் பூமிக்கும் எழுந்து நின்றான் மாயன். மூச்சு உறைந்துவிட, மிரண்டு விகாரமாய் தன் முகம் மாறுவதையும் சாமார்த்தியமாக மறைத்து, “இத்தனை உயரத்தில் உன்னைப் பார்ப்பது சிரமமாக இருக்கிறது” என்றபோது, சின்னானாக மனித வடிவில் எழுந்து பணிந்து கைகளை கட்டிக் கொண்டு, “உத்தரவு”என்றான். “என் தனத்தை பார்க்க வேண்டும்” “மனிதா உனது முதல் உத்தரவே என்னை அச்சமூட்டுகிறது. குரூரமும் வக்ரமும் என்னை அச்சப்படுத்தும் என்பது உனக்குத் தெரியாதா? நிம்மதியை இழக்கும் எதிலும்கூட நீயும் ஆர்வம் காட்டாதே. வேண்டாம். சந்தோஷமே உன்னதம்! அதோ நிஜமான தனத்தை பார்!” என அவன் விரல் சுட்டி வட்டமிட்ட புல் புதரெல்லாம் பொன்னும் பொருளுமாக ஜெலித்தது “நிம்மதி கொள் மனிதா, இந்த வனத்தில் இன்னும் நீ நிம்மதியுற துஷ்டங்கள் அண்டாது பாதுகாப்பேன். மான், மயில், கிளி அழகெல்லாம் உன் சொடுக்கிற்கு பணியவும் செய்வேன்? சரியா? சிரிக்காதே , சொல்”
வண்ணங்களை தரித்துக் கொண்ட ஓர் மயில் நடனமிட்டு அவனை வலம் வந்து அணைய, சின்னான் குறும்பாக சிரித்துக் கொண்டே,”பழரசம்?” என்றான். “அது இப்போது வேண்டாம். என் ரசிப்பு உச்சத்திலிருக்கிறது. இப்படியே தொடரட்டும். கணத்தில் தேவையென்றால்…மரத்தாலான புகலிடம், புசிக்க உணவு, மஞ்சனை, வாசனையில் மலர்கள்” என்றவன் மூச்சுவிட நிறுத்திய தாமத நாழியில், காலத்தால் அழிந்துப் போன அபூர்வ வடிவிலோர் கலைமிளிரும் புகலிடம் எழுந்தது அங்கே! அவன் கேட்ட அத்தனையும் அந்த அரணுக்குள் வரிசைகட்ட, வாசனையோடு ஒளிசிந்திய மலர்களையும் அங்கே கொண்டுவந்து கொட்டிக் குவித்தான் சின்னான். வீடெல்லாம் மலர்களின் ஒளியால் வெளிச்சம் கூடி மணத்தது! “உத்தரவுக்கு காத்திருப்பேன்” என்றபடி காற்றில் கரைந்தான். எல்லாம் அதீத கவிதையாகப் பட்டது அவனுக்கு!
அவனது பழைய கவிதை ஒன்றில் கடலைக் காடாக்கியிருந்தான். அங்கே அலைகள் , இங்கே மிருகங்கள். மீன் பிடித் தொழிலின் சுய அனுபவ அழுத்தம் கவிதையில் மின்னும் வரிகளானது. தனத்திற்காக தனம் முடுக்கிய முடுக்கல்கள் அதில் விசேசம். கடல் வழியே, உடன் பிறப்புகளும், போராளிகளுமான அவர்களுக்கு மீன் பிடிப் படகில் சில தேவைகளை கொண்டு சென்ற ஓர் இரவில், எதிர் நாட்டின் ராணுவம் சுட்ட குண்டு தனது கால் எலும்பில் பதிந்து, அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாத சூழலில் அது அங்கேயே தங்கிவிட, தன் நடையையே மாறிப் போய் விட்டதையும், தொடர்ந்து கடலுக்குள் போக இயலாது போனதையும் மலையுச்சில் தடுமாறி பாதாளத்தில் விழுந்த விபத்தாக முடித்திருந்தான். இவ்விபத்தின் வலிக்காக அவன் அலறியதை விட தனம் அலறியதே உச்சம்! அந்தக் கவிதைக்கு ‘மீன்காரியின் அலறல்’ என்றே பெயரிட்டிருந்தான். இன்றைக்கு தன்னைச் சுற்றி நாலாபக்கமும் தனங்கள் குவிந்திருப்பதையும், அதன் உக்கிரத்தில் தான் சுகம் காண்பதையும் இன்னொரு பிறவியென கவிதை கிறுக்க நினைத்தான். இந்த தனத்திற்காக, தனம் அன்று தன் மீது வீசிய கணத்தின் தழும்பைத் தடவிப் பார்த்தபடி கவிதைக்கு வரிகளைத் தேடினான். கவிதையில் மையப்படுத்தக் கருதிய குவிந்து கிடக்கும் தனத்திற்கு, இன்றைய யோசிப்பில் பெரிய அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. மாறாய் சுமையாகவும் கருதினான்.
கிட்டிய அத்தனை சுகங்களும் கூட சுருங்கித் தெரிந்தது.
அவன் அழைக்கவும் சின்னான் வந்து நின்றான். “உன்னை குறித்து யோசிக்கும் தோறும் என் வியப்புகள் எனக்குப் போதமாட்டேன் என்கிறது! நொடியில் என் இருப்பை மாற்றிவிட்ட உன் சாகசம் என்ன சாதாரணமானதா! நீ தந்த தனம் என் கால்களைச் சுற்றி சிதறி கிடக்கிறது, அழிந்த கோலம் மாதிரி! தனம் குறித்த மதிப்பீடே உன்னால் என்னுள் மாறிவிட்டது தெரியுமா? இதற்காகவா மக்கள் சாக கிடக்கிறார்கள்! இதற்காகவா என் மீது கன ஆயுதம் வீசிப்பட்டது? யோசிக்கிறபோது… இதனை புரியவைத்த நீதான் எத்தனை பெரிய ஆகிருதி! எத்தனைக்கு எளிய தத்துவம்! உன்னை கவிதையில் அமர்த்தி விசாலமாய் வியந்துப் பார்க்க நினைக்கிறேன்!” “மனிதா காட்டுக்கு வர நேர்ந்தும் நீ மாறவில்லை? தனம் உன்னை உதாசீனப் படுத்தியதற்கு உன் கவிதை கிறுக்கலே காரணமென அறிவாயா? கவிதை கிறுக்குவதென்பது மூளைரோகம்! நிவாரணமற்றதோர் பெருவியாதி என்பதை நீயேன் உணரவில்லை? இவ் வியாதி பீடித்தவனிடம் தனம் மட்டுமல்ல எதுவும் அண்டாது. தவறி அண்டினாலும், உனக்கு தித்திப்புக் காட்டி வறண்ட இன்னொரு திக்கிற்கு அது கொண்டு போய்விடும்.” “சின்ன வயது பழக்கம்! விட முடியலை சின்னா! என் நடை மாறிய நேரம் இந்தப் பழக்கம்தான் ஆறுதலைத் தந்தது தெரியுமா!” “சின்னச் சின்ன கோணங்கித் தனங்கள் அவ்வப்போது ஆறுதல் தருவதென்பது ஓர் மாயை! போகட்டும், நான் எத்தனைப் பெரிய சக்தி! என்னிடம் கவிதை கிவிதையென காலத்தை பாழக்குகிறாயே! லோகம் ஜனித்த நிகழ்வை உனக்கு காட்டவா? மனிதர்கள் ஜனித்த யுகத்தை நீ பார்க்க ஆவலா? நட்சத்திரங்களில் உலா வர விரும்புகிறாயா? சூரியனுக்கு அந்தப் பக்கம் பார்க்க ஆசையில்லையா? என்னால் நீ குதூகலிக்க இன்னும் எத்தனையோ உண்டு! எது விருப்பம் சொல்?”
“கண்ணுக்குத் தெரியும் இந்த மலைகளை எல்லாம் பறக்கட்டும்!” என்றான். “மலையரசியே… இது என் கட்டளை நீ பறப்பாய்!” என சின்னான் சப்தம் காட்ட, “உத்தரவு” என்கிற இரைச்சலுடன் பூமிப் பந்து கிடுகிடுக்க மலைகள் பெயர்ந்தெழுந்து வானத்தில் மிதந்தது பறந்து வட்டமிட்டது. மலைகளில் இருந்து படபடத்த பறவைகள் அடர்த்தியாய் இன்னும் மேலெழுந்து திக்கற்று பறக்க, அதில் வாழ்ந்த மிருகங்கள் தொப்தொப்பென தடுமாறி விழுந்தபடி இருந்தது. கண்களுக்கு எட்டிய தூரம் இமை மூடாமல் பார்த்த அவனது வாய் திறந்தது. சின்னானின் கரங்களைப் பற்றிக் கொண்டான்.
அவனின் இன்னொரு வேண்டுகோளின்படி, “யுகாந்திர தாயே… மனித வர்க்கம் தழைக்கத் துவங்கிய ஆதி யுகம் காணவேண்டும்!” என சின்னான் குரல் எழுப்பவும், எதிரொலியாய் “அப்படியே ஆகட்டும்” என்று பணிந்தாள் அவள். காட்சிகள் மாறியது. எங்கு நேக்கினும் காடுகளின் அரக்கம். நதிகளின் சுழற்சி, காற்றின் கட்டுக்கடாங்கா பேரிச்சல், மிருகங்களின் உறுமல், சமவெளிகளில் கூட்டம் கூட்டமாய் அம்மணமாக மனித இனம்! ஆண் இனம் அருகியும், பெண்ணினம் பல்கியுமே காண முடிந்தது. உணவுகளை வேட்டையாடி குவித்து வைத்திருப்பவனைச் சுற்றி போகத்திற்கு தயாராய் மல்லாந்துக் கிடக்கும் பெண்கள் ஒரு புறமென்றால், வேட்டையாடுபவன்களைச் சுற்றி வலம் வந்து யோனிகளையும், முலைகளையும் திருகிக் காட்டியப்படி பெண்கள் இன்னொரு புறம்!
நிலக் காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தது. அட்டைக் கருப்பு, அடர் சிகப்பு, வெளுத்த கருப்பு சிகப்பு, மேனியில் புள்ளி கொண்டவையான உடல்கள்! யோனியில் அகலப் போக்கு – நீளப் போக்கு , ஆண் குறியில் உச்சம் – மத்திமம் – குட்டை – மூக்கு கூர்மை – அது அழுந்தி சப்பையென அத்தனையும் யௌவனம் காட்டி போகத்தில் சளைக்காத ஈடுபாட்டோடு திளைத்ததை பார்க்கவும் அது பல நில மக்களின் ஏக ஒற்றுமையெனப் பட்டது!
மேடு, பள்ளம், சமவெளி, பெருமரங்களின் பொந்துகள், மலைகளின் குகைகளென காணும் திக்கெல்லாம் தின்ற நேரம் போக, இப்படி சதா கலவி புனைவில் சிக்குண்டு கிடக்கும் மனித இனம் கண்டு பேச்சு மூச்சற்றும் போனான்! மிருகங்களோடான அவர்களது வேகப் புணர்வுகளில் வெட்கிப் போனான். தாய், மகள், சகோதரிகள் என்பதறியா அவர்களின் அதிரடி போகத்தை காணவும் சகிக்கவில்லை. ஆணோடு ஆண், பெண்ணோடு பெண் கலவியினை அங்கே சகஜமாக கண்டு முகம் சுழித்து சிவந்தான்.
பெண்களின் யோனிகளிலிருந்து தலை காண்பித்து, தானே பிறப்பு காணும் குழந்தைகளை, கோரப் பற்களால் உருவி பிய்த்துப் பிடுங்கித் தின்ன காத்து நிற்கும் மிருகங்களையும், அவற்றோடு முட்டி மோதி சிசுவை காக்கும் சில தாய்களையும் கோரக் காட்சிகளாக கண்டு மிரண்டான். தொப்புள்கொடி அறாது தரையில் விழுந்த பிள்ளைகளை அதனதன் தாய்கள் இழுத்துக் கொண்டு ஓடிய அவலங்களும் பரிதாபம் கொள்ளச் செய்தது. வன்புணர்ச்சியில் மாண்ட பெண் சிசுகளின் உடல்களும், பிரசவத்தின் போது உயிர் இழந்த பெண்களின் உடல்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தது. பிணங்களின் நாற்றமும், வடிந்தோடிக் கிடக்கும் விந்தின் வாடையும், குமைந்துப் போன சேமிப்பு மாமிசத்தின் நெடியும், மல ஜலங்களின் அருவருப்பும் அவனை கிறுகிறுக்க வைத்தது.
“போதும் என் மனித வர்க்கம் தழைத்த யுக அழகைப் பார்த்தது போதும்! என் மூதாதையர்களின் அறிய முயற்சியை கண்டதும் போதும்!”யென கத்தினவன் , “இப்போதைக்கு தேவை மொந்தை மொந்தையாய் கள்” என்றான்.
வழக்கம் மாதிரியே பணிந்தான் சின்னான்.
நிறை போதையில் தலையை உயர்த்தி, “சின்னா… உன் சக்தி கற்பனைக்கு அப்பாற்பட்டது! நிஜத்தில் நான் உன் அடிமையாவதற்கும் அருகதையற்றவன். நீ சதா மலைக்கவைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆனால், நான் கொண்ட வடுவின் உறுத்தலுக்கு மட்டும் வழி காண இடம் தர மறுக்கிறாய்!” என்றான். “மனிதா… தனத்தை காண நினைக்கிறாய்! இந்த தனங்களை அங்கே கொண்டு போய் கொட்டி, வெற்றி முகத்தை காண்பிக்க வேண்டும் உனக்கு!” “ஆமாம்” “போதையில் உத்தரவிட்டு நிம்மதியை குலைத்துக் கொள்பவன் மனிதன் என்பதை நிரூபிக்காதே”. “இல்லை சின்னா.. அதுகூட வேண்டாம். தனத்தை நான் இங்கிருந்தே காண்டால் கூட போதும்” “உன் விருப்பம். அப்படியே ஆகட்டும்.”
அலை வீசும் கடல், மீன்பிடி படகுகளின் மேய்ச்சல், நீண்ட கடற்கரை, ஒரு கல் கிட்டத்தில் மீனவக் குப்பம், சிறிதும் பெரிசுமான குடிசைகள், ஆங்காங்கே கல்வீடுகள், மூலைக்கு ஒன்றாய் சில காங்கிரீட் கட்டடங்கள். அங்கே தனது குடிசையைக் கண்டான். அது தனமற்று சிதைவுற்றிருந்தது. சின்னான் சுட்டிய காங்கிரீட் கட்டடத்தை நோக்கினான். மோட்டார் மீன் பிடி படகுகள் ஏழெட்டை சொந்தமாக வைத்திருக்கும் தனவந்தனின் கட்டடம் அது. மாளிகையென்றும் சொல்லலாம். ஊரில் அவனை… உழைப்பாளிகளின் வேர்வையில் குளிப்பவன் என்பார்கள்! தினைக்கும் குளித்து முழுகி ஆஜானுபாகுவாய் அலங்காரத்தோடு வெளிவருபவன். அவனுக்கு எத்தனை மனைவி என்று யாரும் சட்டென சொல்லிவிட முடியாது! விரல் விட்டு எண்ண வேண்டிருக்கும். இப்போது எப்படி கணக்கிடுகிறார்கள் என தெரியவில்லை. விரல்கள் போதாமலும் போகலாம். சின்னான் என்னை நோக்கியபோது, தனவந்தனின் பெரிய காங்கிரீட் கட்டடத்தின் முகப்பில் தங்கத்தின் ஜொலிப்பாய் தெரிந்தது பழக்கமான முகம்! அது தனம்! தனமேதான்! தனவந்தனின் தனம் எத்தனையாவது வீடாக இருக்கும்? யோசிக்கும் போதே காட்சியை மறைத்துவிட்டான் சின்னான். முகத்தில் அறை விழுந்த அதிர்வில் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தவன் “மொந்தை மொந்தையாய் கள்” என்றான்.
*
கடல்தான் தனவந்தனின் ஆதாரம். அவன் தனத்தின் ஆதாரம். இன்றைக்கு கடல் இல்லை. ஒரே ஒரு கட்டளையில் அதை இல்லையென்று ஆக்கிவிட்டேன். தனம் வற்றி வதங்கி இற்று மடியட்டும். கடல் இல்லையென்றாக்கியதை, என் போதையின் குரோத செயலாக சின்னான் எண்ணுவதை நான் அறிவேன். என் கட்டளைக்கு உடனே பணிகிறவன் இந்த முறை தாமதம் செய்ததும் அதனால்தான். லோகம் முழுவதும் இதனால் அவஸ்தை கொள்வார்கள் என்பது அவன் கட்சி. நான் யாரென்று தனமும், தனவந்தனும் அறிய வேண்டும் என்பது என் கட்சி!
லோகத்தில் கடல் இல்லாமல் போய் பகல் இரவுகள் விடிந்து மடிந்துக் கொண்டிருந்தாலும் என் சினம் கிளைத்துக் கொண்டுதான் இருந்தது. இடையிடையே யோசிக்கிறபோது, என் செய்கை முட்டாள் தனமாகவும், பாவமான காரியமாகவும் பட்டது. அவர்களுக்கு தண்டனை தர, அல்லது என் சக்தியை அவர்கள் அறியவைக்க எத்தனை கோடி பேரை இம்சிக்கிறேன்! நிம்மதியும் அறவே போய்விட்டது. ‘உன் கோபம் வாழட்டும். கடலை விட்டுவிடலாம். தனம் கொண்ட தனவந்தனனுக்கும் தனத்திற்கும் வேறு தண்டனை யோசிக்கலாம். கடுகளவான விசயத்திற்கு கடல் அளவு தண்டனை தேவையா’ என்று காதோரம் சின்னான் அழுந்தச் சொன்னதை யோசித்திருக்கலாம். தனத்தையும் தனவந்தனையும் இங்கே கொண்டுவந்து, மரத்தில் தலைகீழாய் தொங்கவிட்டு, குவிந்து கிடக்கும் என் தனத்தின் மீது சாய்ந்தபடி மானோடும் மயிலோடும் நான் சல்லாபித்து அவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்திருக்கலாம். இன்றைய என் இருப்பும், சக்தியின் அழுத்தமும் அறிந்து, அவர்கள் குலை நடுங்கிப் போவதை கண்டு களித்திருக்கலாம். தவறுதான் செய்துவிட்டேன்.
அவன் அழைக்கவும் சின்னான் வந்து, ‘உத்தரவு’ என்றான். “அந்தக் குளத்தை மீண்டும் கடலாக்கிவிடு!” “ஆஹா பேஷ் நல்லது. ஆனால், அதிலோர் சிரமம்!” “என்ன சிரமம்?” “என் உத்தரவை செவிமடுக்க ‘மாவலை மஹாராணி’ இப்போது மேற்பரப்பில் இல்லை! நீரின் ஆழச்சேற்றில் பற்பல தாமரை கிழங்குகளுக்கிடையில் ஓர் கிழங்காக சிக்குண்டு கிடக்கிறாள்! அவளை தேடி மேலெடுத்தே… உத்தரவு போட முடியும்! நீரின் ஆழத்தில் அப்படி தேடியெடுப்பது என்னால் நேரிடையாக ஆகாது. நீரில் அதிக நேரம் முழ்கி தேடத்தகுந்த திடகாத்திரமான ஒருவனின் உடம்பில் நான் புகுந்துதான் அதை நிகழ்த்த வேண்டும்!” “சரி அப்படியே செய்” “அப்படி நான் புகுந்து காரியம் ஆற்றியபிறகு என்னால் வெளிவர இயலாது.” “பிறகு?” அதற்கோர் மந்திரம் உண்டு. அதை யாரேனும் உச்சரித்தால்தான் நான் வெளியாக இயலும்!” “அதற்கென்ன, நீ சொல்லித் தரும் மந்திரத்தை நான் உச்சரிக்கிறேன்!” “மனிதா.. அதை நீ மறந்து தொலைத்தால்…?” “ஆகாது” “ஒரு சமயம் நீ மறந்தால்… நான் புகும் மனிதனின் சாவு காலம்வரை அவனுள்ளேயே நான் அடைபட வேண்டிருக்கும்! அவனது எத்தனை பெரிய ஆசைகளுக்கும் மறைமுகமாய் நான் உதவவும் வேண்டிய அபாயமும் உண்டு!” “அப்படியெல்லாம் ஆகாது. நான் உன்னை மீட்டுவிடுவேன். நீ சொல்.”
சொல்லித்தந்த மந்திரத்தை ஆழ்ந்து மனனம் செய்து கொண்டிருந்தபோது சின்னான் வந்தான். “மனிதா நான் புறப்படுகிறேன்” “நீ எதிர்பார்த்த திடகாத்திரமான ஆளை தேர்வு செய்துவிட்டாயா?” என்று கேட்டபடி மந்திர மனனத்தில் முனைப்பாய் இருந்தான். “ம்…. தனவந்தன் லெஷ்மி நாராயணன்!” என்று மறைந்தான்!
கடல் மீண்டும் ஆர்ப்பரிக்கும் செய்தி காற்றில் வந்தது. கடலைப் பார்க்க ஓடினான். அலைகள் மேலெழுந்து வீசி ஓங்கார சப்தமிட்டபடி ஒன்றையொன்ன்று துரத்திப்பிடிக்கும் பழைய விளையாட்டை புதிய மெருகில் நிகழ்த்திக் கொண்டிருந்தது. மாலை சூரியனின் கதிர்கள் தாழ்வாய் நீரில் விழ, மேற்ப்பரப்பு தங்கக் காசாக மின்னியது! குதூகலத்துடன் மீன் பிடிப் படகுகள் கடல் அன்னமாய் மிதந்து திரிய, அந்த மாலை கடல் காட்சி அவனுள் கவிதை வரிகளை விதைத்தது. சரளமாக அந்த வரிகளை மனதிற்குள் கோர்த்து கவிதையாக்கிக் கொண்டிருந்த போது சின்னானின் ஞாபகம் வந்தது. மந்திரத்தைச் சொல்ல பரபரப்புடன் யத்தனித்தான். இன்னும் கவிதை முழுமையாகக் கைவரவில்லையென நினைவும் எழுந்தது. அந்த நினைவை வலுக்கட்டாயமாக ஒதுக்கி, மந்திரம் சொல்ல முனைந்த போது, மனதில் கோர்த்துக் கிடந்த கவிதையே மீண்டும் வந்தது. திரும்பவும் மந்திரம் சொன்னான். முதல் வரியே நினைவிலிருந்து மீண்டும் வந்தது. கவிதை அவனிடம் முழுமை கொள்ள ஆயத்தப்பட்டு கொண்டிருந்தது.
இரவு பூராவும் அந்தக் கடற்கரை பரப்பில், மந்திரம் மறந்து சின்னானின் ஞாபகமாக புலம்பித் திரிந்து, தலை கணக்க மணலில் கவிழ்ந்தபோது, அவனில் கவிதை அற்புதமாய் முழுமைப் பெற்றது! திரும்பிப் படுத்தான். பாறைக் காட்டில் உச்சத்து நிலவு இரவை பகலாக்கி கொண்டிருந்தது.
***
நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்
E-Mail : satajdeen@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்