இறைவனிடம் கையேந்துங்கள்!

‘இசைமுரசு’  ஈ.எம் ஹனிஃபா அவர்களிடம் சரக்கில்லை என்று கூறியிருக்கும் அறிஞர் மானாமக்கீன் மேல் நண்பர் கய்யும் கடுமையான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் –  இங்கே.  ‘கோரஸ்’ கொடுத்தவருக்கு கோபம் வரத்தான் செய்யும்!   நண்பர்களின் சண்டை  தீர –  தினமணி ரஜ்மான் மலர் 2002ல் – இக்வான் அமீர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே பதிகிறேன்.  ராஜா செய்த ரகளையை பதியலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது இந்த சண்டை!

அமீரின் கட்டுரையை படிப்பதற்கு முன்பு – ஹனிபா அண்ணன் பற்றி – சகோதரர் சரவணன் எழுதிய விஷயத்தையும் இங்கே சென்று பார்த்துவிடுங்கள்.

**

இறைவனிடம் கையேந்துங்கள்!

இக்வான் அமீர்

இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் சர்ச்சைக்குரிய ஒன்றாகக் கருதப்படும் விஷயங்களில் இசையும் ஒன்று. இசை கூடுமா? கூடாதா? என்பது காலங்காலமாக இருந்துவரும் சர்ச்சை.

இந்த உலகமே இசையால் நிரம்பியதுதான்! காற்றின் வேகம் மூங்கிலில் பட்டு புல்லாங்குழல் இசையாகிறது. கடலலைகள் மண்ணில் மோதி ஓலமிட்டு இசைக்கின்றன. பூவில் தென்றல் மோதும்போது ஓர் இசை பிறக்கிறது. சூறைக் காற்று பிரளயமாய் உருவெடுக்கும்போது மற்றொரு இசை ஜனிக்கிறது. இப்படி உலகம் முழுவதுமே இசையால் ஆனதுதான். அதனால் இஸ்லாம் தடுக்க நினைக்கும் இசை, மனித குலத்துக்குக் கேடு விளைப்பது தானாக இருக்க வேண்டும். மனதைக் கிறங்கடித்து, ரத்த நாளங்கள் திணவெடுத்து, சுற்றுச்சூழலை அதிரவைத்து மனிதனின் அக-புற வாழ்க்கைக்குக் கேடுவிளைவிக்கும் இசைதான் உண்மையில் தடுக்கப்பட வேண்டியது.

இப்படி இசை கூடுமா… கூடாதா… என்ற சர்ச்சை மேலெழுந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தில் துணிச்சலாக இசையைக் கையாண்டு ஓர் அரை நூற்றாண்டுக் காலம், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் மூத்த முஸ்லிம் இசைவாணர்கள் நால்வரின் வேறுபட்ட முகங்கள் இவை.

எட்டுக் கட்டைக் குரலெடுத்து…

பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம். பிற்காலத்தில் குடியேறியது, கலை நகரமான நாகூர்! ஆரம்பத்தில் பாடியது புலவர் ஆபிதீனின் பாடல்களை. 40-களில், பிரபல லுங்கி வர்த்தகர் ஒருவரின் இல்லத் திருமணத்துக்குச் சென்றவர் மணமேடையைத் தனது பாடலால் ஈர்த்து தனக்கென்று அங்கீகாரம் பெற்றார்.

“”எட்டுக் கட்டைக்கு மேலாக ஒலிக்கும் இவரது குரல் கிட்டப்பாவைத் தோற்கடிக்கும். தனது குரல் முரசால் இசை முரசு என்ற பட்டம் பெற்றவர்!” என்று புகழ்ந்துரைக்கிறார் “”செüந்தர்ய முத்திரை” கவிராயர் மூஸô. மதங்களையும் தாண்டி “பரம்பொருள் ஒன்று! அவனிடமே சரணடையுங்கள்!’ என்று நம்பிக்கையாளர்களுக்கு தெம்பூட்டியவர். இத்தனை சிறப்புக்கும் உரியவர்தான் இசை முரசு நாகூர் ஹனீபா (75).

இவரது இசை முஸ்லிம்களையும் தாண்டி திராவிடப் பாசறையிலும் ஒலித்தது. “அழைக்கின்றார்… அழைக்கின்றார்… அண்ணா’ என்ற இவரது பாடல் முழக்கம் கேட்டதும் அதுவரை மேடையருகே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அண்ணா நேராக மேடையேறிவிடுவாராம்.

குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனகர்த்தர், சோமசுந்தர தம்பிரான் ஆகியோரின் மடங்களிலும் கூட இசை முரசுவின் பக்தி மணக்கும் பாடல்கள் ஒலிக்கும். “”இறைவனிடம் கையேந்துங்கள்! அவன் இல்லை என்று சொல்லுவதில்லை!” -என்ற பாடல் பல கோயில் திருவிழாக்களிலும், மார்கழி மாதங்களின் அதிகாலைப் பொழுதுகளிலும் பல கோயில்களில் ஒலிக்கும். இதற்கு பாடலாசிரியர் கிளியனூர் அப்துல் சலாம் (மயிலாடுதுறை) ஒரு காரணம் என்றால், அதற்கு உயிரூட்டிய ஹனீபாவும் மற்றொரு காரணம்.

நூற்றுக்கணக்கான இவரது பாடல்கள் இசைத்தட்டு வடிவம் பெற்றுள்ளன. முஸ்லிம்களின் திருமண நிகழ்ச்சிகள், மீலாது மேடைகள், தர்காக்களின் உரூஸ் நிகழ்ச்சிகள், முஸ்லிம் லீக் மாநாடுகள், பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சிகள், திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகள் நாகூர் ஹனீபாவின் இசை அருவி பொழியாமல் நிறைவு பெற்றதில்லை.

சிராஜுல் மில்லதைக் கலங்க வைத்தவர்!

சொந்த ஊர் நாகூர். தற்போது வசிப்பது சென்னை பல்லாவரத்தில். ஆரம்பத்தில் கேள்வி ஞானத்தால் இசையுலகில் நுழைந்தவர் இசைமணி யூசுஃப். காசியிலிருந்து வந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் உஸ்தாது டோலாக் நன்னுமியான், உஸ்தாது சோட்டு மியான், உஸ்தாது தாவுத் மியான் போன்றவர்கள். சங்கீதமே உயிர் மூச்செனக் கொண்ட குடும்பம் இது. அக்குடும்பத்தில் உதித்தவர்தான் மிராசுதார் எஸ்.எம்.ஏ. காதர்.

பெரும் வாணிகக் குடும்பத்தில் பிறந்தவராயினும் சங்கீதத்தை உயிருக்கு உயிராய் நேசிப்பவர். முஸ்லிம் குடும்பத்தில் தப்பிப் பிறந்த இசை ஞானி என்று பிராமணர்களால் பாராட்டப் பெற்றவர். நாகூர் தர்காவின் ஆஸ்தான வித்வான். இவர்தான் இசைமணியின் ஆரம்ப ஆசிரியர் -குரு எல்லாம். கேரளாவின் வாஞ்சீஸ் அய்யர், இவரது ஆர்வத்தைக் கண்டு மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளோடு சுவாதித் திருநாள் கீர்த்தனைகளையும் கற்பித்தார்.

இத்தகைய இசையாளரால் அரங்கேற்றப்பட்டவர்தான் யூசுஃப். அதன் பின் முறையாக கர்நாடக இசை பயின்று இசை மணி பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகளாக இசைத் துறையில் தன்கென்று ஒரு பாணியுடன் இருப்பவர்.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று நூற்றுக்கணக்கான கச்சேரிகளைச் செய்திருப்பவர். சென்னையின் முக்கிய தர்காக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளிலெல்லாம் இவரது குரல் ஒலிக்கும்.

தமிழறிஞரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவருமான காலஞ்சென்ற “சிராஜுல் மில்லத்’ அப்துஸ் ஸமதை தனது குரலால் உணர்ச்சிவயப்பட வைத்து கண்ணீர் சிந்த வைத்ததைத் தன்னைப் பெரிதும் பாதித்த சம்பவமாகச் சொல்கிறார் இந்த 70 வயது இசைமணி.

இலங்கையைச் சேர்ந்த புரட்சி கமாலின் திருக்குர்ஆனைப் பற்றிய பாடல்தான் அது! “”சமத் சாஹெப் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவரது அலுவலகத்தில் வைத்து அந்தப் பாடலைப் பாடச் சொன்னார். “வையகத்தின் மணிவிளக்கே’ எனத் தொடங்கும் அப்பாடலை நான் பாடப் பாட தலைவர் உணர்ச்சிவயப்பட்டு அழ ஆரம்பித்தார்கள். இடையில் மக்ரீப் தொழுகை வந்தது.

தொழுகைக்காகப் பாடலின் இறுதி வரிகளைப் பாடாமல் நிறுத்திவிட்டேன். தொழுது முடித்து வந்ததும் தலைவர் மீண்டும் கவனமாக அந்த இறுதி அடிகளை எடுத்துக் கொடுத்துப் பாடச் சொன்னார்” என்று நினைவு கூர்கிறார் இசைமணி யூசுஃப்.

நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார், இசைமணி சீர்காழி கோவிந்தராசன் போன்ற பெரியவர்களால் பாராட்டுப் பெற்றதைப் பெருமையாகக் கருது
கிறார்.

புலவர்களைத் தேடும் “குமரி’!

குமரி மாவட்டத்தின் களியக்காவிளை பக்கத்தில் பூந்துறைக்கும் நம்பாறைக்கும் அருகில் உள்ள குக்கிராமம் காஞ்சன்புரம். வெறும் 10 முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட கிராமம். அன்றைய மருத்துவத்தில் விஞ்சமுடியாத வல்லுநராக இருந்தவர் கண்ணுபிள்ளை வைத்தியர். அந்தக் குடும்பத்தில் ஒரு புலவர். வாப்புக்கண் ஆசான்.

செய்குதம்பி பாவலர், தியாகராய கீர்த்தனைகளைக் கொழும்பு போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று பாடியவர். சிறு வயதிலேயே பெருமானாரின் சீறா கீர்த்தனைகளைக் கேரள பாணியில் பாடியவர். வறுமை இவரது சொத்தாகி அதுவே இவரைக் காவு கொண்டபோது, “”வறுமையில்தானே வர்த்தனையாகும்!” -என்று கவி.கா.மு. ஷெரீபை மனம் நோக வைத்தது. இந்த விருட்சங்களின் வாரிசு மருமகன்தான் குமரி அபூபக்கர்.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் (ஐ.டி.பி.எல்) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கவி.காமு. ஷெரீபுடன் ஒரு கால் நூற்றாண்டுக் காலம் கம்பம், பள்ளப்பட்டி, கூத்தாநல்லூர், கீழக்கரை போன்ற தமிழகத்தின் முஸ்லிம் கிராமங்கள் தோறும் இசை மழையைப் பொழிந்தவர். இசையை ஒரு தொழிலாகக் கொள்ளாமல்
மக்கள் தருவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது இவரது தனிச்
சிறப்பு.

இவரது வளர்ச்சிக்கு மூல காரணம் தைக்கா வாப்பா, ஏவிஎம் ஜாஃபர் தீன், நூர்தீன் காக்கா என்று இவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார். சென்னை வானொலியில் 20 ஆண்டுகளாகப் பாடி வருபவர். காசிம் புலவரின் அருள்வாக்கு, திருப்புகழ் இவற்றைச் சரளமாகப் பிசிறில்லாமல், நிறுத்தாமல் பாடுவது இவரது பிரத்யேகமான சிறப்புக்கூறு.

காசிம் புலவர் திருப்புகழை… அருணகிரிநாதரின் பாடலைப் போல் மூச்சுப் பிடித்துப் பாடுவது வியப்பானது. தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும் புலவர்கள்தான் இவரது ஆராய்ச்சிக் களம். அவர்களைத் தேடிப் பிடித்து அவர்கள் பாடிய பாட்டுகளை மெட்டமைத்துப் பாடுகிறார். தற்போது இவரது ஆய்வில் சிக்கியுள்ளவர் புலிக்குட்டி புலவர். 65 வயதாகும் குமரி அபூபக்கரின் குரல் இன்னும் இளமை மாறாமல் இருக்கிறது. இவரது மகள்தான் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் நஸீமா சிக்கந்தர். 2 பிள்ளைகளும் உண்டு.

முதல் பாடலே தேசிய கீதம்தான்!

அந்தப் பத்து வயது சிறுவனின் தேசிய கீதம்தான் அவனது இசைப் பயணத்துக்கு ஆரம்ப வழி வகுத்தது. இதைத் தொடர்ந்து தாய்த் தமிழ் வாழ்த்து என்று பள்ளியே இசை மேடையானது.

இந்தத் தொடக்கம் பின்னாளில் சினிமா பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள் என வளர்ந்தது. இறையன்பன் குத்தூஸ் என்ற இஸ்லாமிய பாடகரை உலகுக்கு அடையாளம் காட்டியது. “”எனக்கென்று குருன்னு சொல்லிக் கொள்ள யாரும் இல்லை” என்று இறையன்பன் குத்தூஸ் சொன்னாலும், இவரது சாயல் பெரும்பாலும் இசை முரசு நாகூர் ஹனிபாவை ஒத்திருக்கிறது.

இசை முரசு நாகூர் ஹனீபா, இசைமணி யூஸுஃப், குமரி அபூபக்கர் இவர்கள் சாஸ்திரீய கர்நாட சங்கீதம் பயின்றவர்கள் என்றால்… இறையன்பன் குத்தூஸ் மெல்லிசையைக் கையாள்பவர்.
குறுந்தட்டு, ஒளிப்பேழை என்று இவர் பாடிய பாடல்கள் 20 தொகுதிகள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதியின் முன்னிலையில் மேடையில் இவர் பாடிய பாடலைக் கேட்டு “யார் இந்தப் பொடியன்?’ என்று கருணாநிதியின் புருவங்களை உயர்த்த வைத்தது. பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. இரண்டாயிரம் இசை நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார்.

1500 இசை விழாக்களில் பங்கெடுத்துள்ளார். இந்த 40 வயது இளைஞர், திமுக தலைமைக் கழக பாடகர். திருவல்லிக்கேணி எம்எல்ஏ உசேன், இவரது மாமனார்.

*

நன்றி : தினமணி, இக்வான் அமீர்

*

சுட்டி : ஈ.எம். ஹனிபாவின் ஒரு காணொளி

3 பின்னூட்டங்கள்

 1. kabeer said,

  05/01/2010 இல் 20:39

  Rightly said by Ikwan Amir. Singer Iraiyanban kuthus 99% immidate ISAIMURASU.

 2. geethu555 said,

  06/01/2010 இல் 12:45

  very nice
  my self is the admin of the

  geethubux.com

  i am giving flash news about

  these precious matter to the

  tamilians all over the world.,

 3. v.m.m.rafeek said,

  14/07/2011 இல் 13:55

  aan


v.m.m.rafeek க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: