மதுரையைச் சேர்ந்த நண்பர் மணி , துபாயிலுள்ள பெரிய கம்பெனியில் பெரிய கணக்காளராக இருக்கிறார். எப்போதும் இஸ்லாம்/இஸ்லாமியர்கள் சம்பந்தமாகவே நான் பதிவுகள் போடுவதாகக் குறைபடும் அவருக்கு என் எழுத்து சற்றும் பிடிக்காது. யாருக்குத்தான் பிடித்திருக்கிறது?! ‘இப்படி எழுதனும் சார்’ என்று தனது கவிதையை அனுப்பினார். பதிகிறேன். கவிதையின் அர்த்தத்தைப் பிறகு விளக்குவதாக என்னிடம் அவர் உறுதிமொழி அளித்திருக்கிறார். கம்பன்களும் கனவான்களும் அறியவும். நண்பர் மணிக்கு , புதுக்கவிதைகளே கொஞ்சமும் பிடிக்காதாம். சாம்பிள் பார்க்க – கையில் கிடைத்த – நாஞ்சில்நாடனின் ‘வாசனை’ கவிதையையும், வைதீஸ்வரனின் ‘குழுக்கள்’ கவிதையையும் அனுப்பினேன். நண்பர் தாஜின் கவிதையை அனுப்பியிருக்கலாம்தான். அது தாஜூக்கே புரியாது. தவிர, நம் தாஜ் இஸ்லாமியராயிற்றே! (‘அப்படியா!’- தாஜ்). அது இருக்கட்டும், நண்பர் மணிக்கு நாஞ்சில்நாடனின் ‘வாசனை’ மிகவும் பிடித்திருந்தது. அது பற்றிய அவரது ‘கமெண்ட்’ , பதிவின் முடிவில்.
***
கம்பன் கவியான காதை
மணிவண்ணன்
மொழியெனும் குலத்தினில் மூத்தவள்
அவள் வழியெனை இழுத்தது அழகிய மூவுடல்
கனிமொழி பேசிடத் துடித்தனன்
வரும் கடும் போட்டியைக் கண்டு அஞ்சனன்
விடும் பேச்சிலும் மூச்சிலும் அழகிடு என்றவள்
அதுதரும் என்னையே நாளுமே உன்னவள்
நீள் கடலென விரிந்தது அவலெழில்
வில்லென வளைந்தான் கம்பன் வழி இல்
மோதலில் தோற்றவன் காதலில் தோற்றவன்
காதலில் தோற்றதால் கவியாய் வந்தவன் கம்பன்.
– மணிவண்ணன்
மின்னஞ்சல் : maniabi8@yahoo.co.in
***
வாசனை – நாஞ்சில் நாடன்
தீராநதி (அக்டோபர் 2009 இதழ்)
நாற்றம் என்பது ஜென்ம வாசனை
இந்தப் பிறப்பின் சொந்த வாசனை
கருப்பூரம் நாறிய கமலப்பூ நாறிய
மருப்பொசித்த மாதவன் வாய்ச்சுவை
ஆண்டாள் வேட்ட காதல் வாசனை
ஆதி சிவனின் அந்தரங்கப் பெயர்
நாறும்பூ நாதன்
பட்டினத்தாருக்கு பெண்குழி யாவும்
நாற்றக் குழியே
அவரவர் நாற்றம்
அவர்தம் தலைச்சுமை
சோறு கொதிக்கும் வாசனை
யொன்றே
சின்ன வயதில் ஈர்த்தது எம்மை
அறியாப் பருவம் தகப்பன் தோளில்
அமர்ந்து கேட்டது இசையின்
வாசனை
சமைந்த தோழிகள் சூடி நடந்த
பிச்சிப்பூவோ பேரின்ப வாசனை
பள்ளிப் பருவம் தொற்றிப் படர்ந்தது
தமிழ் முலைப் பாலெனும் உயிரின் வாசனை
மண்ணின் வாசனை மயக்கிக் கொண்டிருப்பது
பணவாசனை மருட்டிய தில்லை
கள்ளின் வாசனை காம வாசனை
குத்திக் கிழித்த முள்ளின் வாசனை
ஈழப் பண்டிதன் சச்சிதானந்தம்
யாசித்து நின்ற வாசனை யொன்று
‘சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும்போது
ஒண் தமிழே நீ சலசலத்து ஓட வேண்டும்’
ஈழத் தமிழனின் இரத்த வாசனை
உலகம் எங்கும் உரத்துக் கேட்டது
மூத்த தாய் மண்ணின் முத்தமிழ் வாசனை
நெஞ்சறிந்த கள்ள வாசனை
ஈண முக்கவும் கன்றை நக்கவும்
ஏலாத கிழட்டுப் பசுவின்
தீனவாசனை
தீந்தமிழ் வாசனை.
– நாஞ்சில் நாடன் –
***
‘பாகிஸ்தான் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறார் நாஞ்சில் நாடன்’ என்றார் மணி!
நன்றி : மணி, நாஞ்சில்நாடன், தீராநதி
பெயரா சார் முக்கியம் said,
22/12/2013 இல் 16:16
//‘பாகிஸ்தான் பற்றி அருமையாகச் சொல்லியிருக்கிறார் நாஞ்சில் நாடன்’ என்றார் மணி!//
அருமை..
கம்பன் கவிதையான பாடை ரொம்பவும் அருமை.