தாஜ் நாவலில் ஆடும் தர்ஹா பேய்கள்

taj2நண்பர் தாஜ் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் தலைப்பு பரம ரகசியம். ‘ஆண்டவன் காடு’ என்று யாருக்கும் சொல்லவே மாட்டேன். இதுவரை ஐநூறு பக்கம் வந்திருக்கிறது, அதாவது முதல் அத்தியாயம். எழுதுங்கப்பா எல்லோரும் ; எனக்குத்தான் நேரம் கிடைக்கமாட்டேன் என்கிறது. கிடைத்தாலும் படிக்க ஆரம்பித்து விடுவேன். சரி, நாகூர்க்காரனிடமே ‘ஆண்டவன்’ஐ அனுப்பி அபிப்ராயம் கேட்கும் இந்த சீர்காழிக்காரரை என்ன செய்யலாம்? தாங்கமுடியாத வேதனைகள் வரும்போது இவர் தஞ்சமடையும் எங்கள் நாகூரில் வைத்து நாலு சாத்து சாத்தலாம். பார்ப்போம். இப்போதைக்கு தாஜ் நாவலிலிருந்து கொஞ்சம் பெண்கள், மன்னிக்கவும், பேய்கள்…!

***

பேய்பிடித்தாட்டும் பெண்களுக்கு அந்த தர்ஹா கண்கண்ட நிவாரண ஸ்தலம்! அப்படியொரு பெருமையை அது வெகுகாலமாக கொண்டிருக்கிறது. இப்படியானதொரு ஸ்தலம் அருகாமையில் இருப்பதினாலோ என்னவோ அவ்வப்போது அக்கம்பக்கத்து ஊர்களில் உள்ள – நடுத்தர வயதும், உடல் வலுவும் கொண்ட – பெண்கள் சிலருக்கு வலிய பேய்பிடித்துக் கொள்கிறது. அது நாளாவட்டத்தில் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. பாழாய்ப்போன இந்தப் பேய்கள் எப்பவும் இப்படித்தான்! இப்படியான பெண்களையே தனது வலையில் சிக்கவைத்து ஆட்டிப் படைக்கிறது! இந்த தர்ஹாவில், பேய் பிடித்தவர்களை வைத்துப் பராமரிப்பதற்கென்றே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள தங்குமிடங்கள் பூராவும், அவர்களாலும், உடன்வரும் பந்துக்களாலும் நிரம்பி வழிகிறது. நீளநீளத் துணிகளால் தங்களது இருப்பிடத்திற்கான மறைப்புகளை அவர்கள் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். வேண்டும்போதெல்லாம் அந்த மறைப்புகளுக்கு உள்ளே உந்தப் பட்ட நிலையில் அவ்வப்போது பேயாட்டம் போடுகிறார்கள். சில நேரம் அவர்கள் சிலிர்த்தெழுந்து ஆடைகள் சரிய ஆட்டம்போட, உடன் வந்திருப்போர் மேல்விழுந்து இழுத்து அமர்த்தி அந்த ஆட்டத்தை அடக்குகிறார்கள். 

தங்கள் குடும்பப் பெண்களை பிடித்தாட்டும் பேய்கள் குறித்து உடனடியானதோர் பதிலொன்று அவர்களிடம் எப்பவும் உண்டு! அந்தப் பதிலென்பது, பெரும்பாலும் இறந்துபோன தங்களது நெருங்கிய அல்லது குரோதமான பெண் உறவினர்களின் ஆவி அதுவெனக் கணித்து வைத்திருக்கிறார்கள்! பெண்களைத் தேடிப்பற்றிக்கொள்ளும் பேய்கள் குறித்து முன்னெப்பொழுதும் கேட்டறியாத அபிப்ராயங்களை சொல்பவர்களும் நம்மில் உண்டு. ‘காலம் காலமாக இந்த சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்கத்தால், வீட்டுக்குள்ளே ஒடுக்கி, மறைமுகக் காவலில் பராமரிக்கப்படும் பெண்களின் எதிர்வினை முனைப்புகளை அவர்களின் மூளை, தேர்ந்த உடல் மொழியால் வெளிப்படுத்தும் கொந்தளிப்பே அது!’ என்கிறார்கள். அவர்கள் தங்களின் கருத்தை தமிழில் சொல்லி இருந்தாலும் ஏனோ நமக்கு பிடிபடமாட்டேன் என்கிறது. பேய்பிடிக்கப்பட்ட ஒரு பெண் கொள்ளும் அவஸ்தைகளை விட, இவர்களின் கருத்தை புரிந்துகொள்ள நாம் கொள்ளும் அவஸ்தைகள் அதிகம். 

‘இன்றைக்கு பெண்கள் வெளியுலகில் தாராளமாக பிரவேசிக்கிறார்கள். கல்லூரிக்குச் செல்வதில் இருந்து , வேலைகளுக்கு போய்வருவதுவரை தடங்கல் இல்லாமல் நடக்கிறது. காதல்புரிவது, கணவரைத் தானே தேர்வு செய்வது, இன மதங்களைக் கடந்து மணம் புரிந்து கொள்வது, தேவையெனில், மணம் முடித்த மறு நாளே டைவர்ஸுக்காக கோர்ட் படிகள் ஏறுவது, தோழியையே வாழ்க்கைத் துணையாக ஏற்பது என்பதான அவர்களின் சுதந்திரச் செய்கைகளை இன்றைய நவீன உலகம் அங்கீகரிக்கப் பழகிக்கொண்டு விட்டது. இன்றைய பெண்களின் இருள் விலகிய வெளிச்ச உலகில் பேய் பிடித்தாட்டும் அவர்களின் எண்ணிக்கையும்கூட பெருமளவில் குறைந்து கொண்டிருக்கிறது!’ என்று மேலும் விளக்கம் சொல்லுகிறார்கள். இந்த விளக்கமென்னவோ கொஞ்சம் புரிகிற மாதிரி இருக்கிறது. 

தமிழகத்தின் பிற கிராமங்கள் மாதிரியே அந்தக் கிராமமும் மின் தட்டுப்பாடு கொண்டதுதான்! இரவில் பல நேரம் மின்சாரம் இல்லாமலும் போய்விடும். தர்ஹாவில் ஜெனரேட்டர் வசதியுமில்லை. ஆண்டவர் தர்ஹாவாக இருந்தாலும் இரவில் பலநேரம் அது இருண்டுதான் கிடக்கும்! பேய் பிடித்தாடும் பெண்களுடன் துணையாய் வந்து தங்கியிருப்பவர்கள் அதற்காகவெல்லாம் சிணுங்குவது கிடையாது! மாறாய், வாரக் கணக்கில் அங்கேயே விரும்பித் தங்கி தாராளச் செலவுகள் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்! போகிறபோதும்கூட மறக்காமல் தர்ஹாவின் கீர்த்திகளை மெச்சியபடி, பேய் பிடித்து சொஸ்தமான பெண்ணின் புதுப்பொலிவுடன் சந்தோஷமாகவே போகிறார்கள்! அந்தப் பெண்களில் சிலர் சில மாதங்களுக்குள்ளாகவே பழைய பேயுடனோ, புதிய பேயுடனோ ஆண்டவர் தர்ஹாவின் வளையத்திற்குள் திரும்ப வருவதும் சாதாரணம்…

***

நன்றி : தாஜ் / தமிழ்ப்பூக்கள்

E-Mail : satajdeen@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: