‘குஞ்ஞிக்கா’வின் கன்யாவனங்கள் – யுவன் சந்திரசேகர்

Punathil Kunjabdulla‘குஞ்சு’ பற்றி இன்னொரு பதிவு!. ‘குஞ்ஞிக்கா’ என்று அழைக்கப்படும் பிரபல மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நேர்காணலை சென்ற ஞாயிறன்று கைரளி தொலைக்காட்சியில் பார்த்தேன். பேட்டி கண்ட ஜான் பிரிட்டாஸ், ‘ஏன் இவ்வளவு ‘ஹராமி’யாக இருக்கிறீர்கள்?’ என்றே ஜாலியாகக் கேட்டார். ‘குஞ்ஞிக்கா’ அலட்டிக்கொள்ளணுமே.. ஊஹும். ‘University-ஐ விட்டுட்டு ஏன் யு.கே.ஜிக்கு வந்தாய்?’ என்று கமலா சுரையாவை கேட்ட ஒண்ணாம் நம்பர் ஹராமி!  தமிழ்நாட்டில் அப்படிக் கேட்க இயலுமா? குறைந்தது ‘ஊர்விலக்கம்’ நடக்கும். 70 வயதை நெருங்கும் குஞ்ஞப்துல்லா அதிகபட்சம் 50 வயசுக்காரர் மாதிரிதான் இருந்தார். ஆனால் தன் மனசு பதினெட்டு பையனுடையது என்று இளமை பொங்க விவரித்தார் , மதுவைக் குடித்துக்கொண்டே. அல்லது அது தண்ணீரா? ‘குஞ்ஞிக்கா’வுக்கு பெண்கள் என்றால் பெரும் இஷ்டம். பார்த்தால் தோளைப் பிடித்துக் கொள்வாராம். ‘அட, தோளைத்தானே பிடிக்கிறேன், வேறு எதையும் பிடிக்கவில்லையே!’ என்று தமாஷ் வேறு. ‘இவ்வளவு குள்ளமாக இருக்கிறீர்களே.. பிரச்சனையாக இல்லையா?’ – மற்றொரு கேள்வி. ‘மூர்க்கன் (நாகப்பாம்பு) எவ்வளவு நீளம், உயரம்! சின்ன கீரியிடம் அது தோற்று ஓடிவிடுகிறதே?’ என்றது குஞ்சு! சுவாரஸ்யமான பேட்டி. வரும் ஞாயிறும் அதன் தொடர்ச்சி இருக்கிறது. இந்திய நேரம் மாலை 4: 30க்கு. பார்க்கவேண்டும். அவருடைய நாவல்களை இதுவரை படிக்கவில்லை. படிக்க வேண்டும்.

2007 வருட இறுதியில் நடந்த ‘உயிர்மை’யின் நாவல்கள் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு , புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘கன்யாவனங்கள்’ நாவல் (மலையாள நாவலின் தமிழாக்கம்) பற்றி  யுவன் சந்திர சேகர் பேசியதில் கொஞசம் பதிகிறேன். ‘குஞ்ஞிக்கா’வை விட ‘மொழிபெயர்ப்பு’க்கா  பற்றிதான் அதிகம் பேசியிருக்கிறார். யுவனின் எழுத்து எனக்கு பிடிக்கும். கதைக்குள் கதையாக அவர் சிருஷ்டிக்கும் மாயலோகம் இன்பமானது. அவருடைய ‘ஒளி விலகல்’ஐ ரசித்துப் படித்திருக்கிறேன். யுவனின் இந்த கருத்துரையில் என் பெயரும் வந்து தொலைவதால் பதிவிட இதுவரை கூச்சமாக இருந்தது. ‘குஞ்ஞிக்கா’வுக்காக அதை இன்று ஒதுக்கி விடுகிறேன். யுவனுக்கும் , MP3 வடிவில் யுவனின் பேச்சைத் தந்த ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமத்திற்கும் நன்றி.

***

Yuvan_Chandrasekar

‘கன்யாவனங்கள்’  – யுவன் சந்திரசேகரின் கருத்துரை

‘ஒரு பெரும்போக்காக தமிழில் வந்திருக்கக்கூடிய மொழிபெயர்ப்புகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று,  பொதுஓட்டம் சார்ந்த மொழிபெயர்ப்புகள். பெரும்பத்திரிக்கைகளில் அவர்களுடைய தேவை கருதியும் அவர்களுடைய வாசகர்களின் தேவை கருதியும் மொழிபெயர்க்ககூடிய விஷயங்கள். பெரும்பத்திரிக்கைகளில் கதைகள் , கட்டுரைகள், சுயமுன்னேற்றத்திற்கான புத்திமதிகள் இதுபோல அவ்வப்போது,  எது செலாவணி ஆகுமோ அதைத் தொடர்ந்து மொழிபெயர்த்து போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் அந்த மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் என்னவென்றால் – ஜூனியர் விகடனோ நக்கீரனோ , இதுமாதிரி பத்திரிக்கைகளை எடுத்தீர்கள் என்றால் – பல்வேறு நிருபர்கள், பல்வேறு சம்பவங்கள் , பலவிதமான களங்கள்… இதை எல்லாவற்றையும் பற்றி எழுதக்கூடிய – அந்த articles எல்லாமே – ஒரே மொழியில் இருக்கும். முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரைக்கும் ஒரே மொழி. அப்படியென்றால் ஒரு பொதுமொழியை உருவாக்கும்போதுதான் அந்தப் பத்திரிக்கைக்கு ஒரு அடையாளமும் விற்பனைக்கான உத்தரவாதமும் கிடைக்கும். இப்படியான இடத்துக்கு அவர்கள் சிறுகச் சிறுக சிறுக தன்னை ‘செட்டில் பண்ணிக்கொள்கிறார்கள். அந்த பொதுமொழியில்தான்  இந்த மொழிபெயர்ப்புகளும் நடக்க முடியும். மூலமொழியில் எழுதிய ஆசிரியன் , எந்தவிதமான மொழியமைப்பு, பிரயோகங்கள் பயன்படுத்தியிருந்தாலும் கூட , எந்த பத்திரிக்கை அதை வெளியிடுகிறதோ அதன் பொதுமொழி அமைப்புக்குள்ளே வந்தால் மட்டுமே இதெல்லாம் பிரசுரமாகும். ஆனால் அங்கேயே மொழிபெயர்க்கக்கூடிய , பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் இருப்பார்கள் என்று சொன்னால் – ரா.கி.ரங்கராஜனோ சுஜாதாவோ , அவர்கள் மொழிபெயர்த்தார்களென்றால் – வேறு ஒரு விபத்து நடக்கும். அவர்கள் தன்னுடைய அசல் எழுத்துக்களை என்ன மொழியில் எழுதுகிறார்களோ அந்த மொழியில்தான் மூல நூலையும் மொழிபெயர்ப்பார்கள். இதைத்தாண்டி கறாரான சில சட்டதிட்டங்களையெல்லாம் அவர்கள் வைத்திருக்கிறார்கள். ‘பாபிலான்’ , குமுதத்தில் – ரா.கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் –  தொடராக வந்தது.. ஆனால் அதேமாதிரியான சாகசத்தன்மையுள்ள அதேமாதிரியான வித்யாஸமான களம் கொண்டவைகளை…அவர்கள் மொழிபெயர்க்க மாட்டார்கள்.. இதைவிட்டு வெளியில் – சிறுபத்திரிக்கை என்கிற குறுவட்டத்துக்குள்ளே நடக்கக்கூடிய அல்லது மொழிபெயர்ப்பு சம்பந்தமான பிரக்ஞையோடும் அக்கறையோடும் வருகிற மொழிபெயர்ப்புகள், அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் சார்ந்த மொழிபெயர்ப்புகள், தனிநபர் சார்ந்த மொழிபெயர்ப்புகள்.. அரசாங்க நிறுவங்கள் என்று சொன்னால்  சாஹித்ய அகாடமி , NBT மொழிபெயர்த்து தரக்கூடிய புத்தகங்கள். புத்தகங்களை எந்த அடிப்படையில் தேர்வுசெய்து எடுக்கிறார்கள், எந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர்களை தேர்ந்து எடுக்கிறார்கள், அவரும் எந்த தைரியத்தில உட்கார்ந்து மொழிபெயர்க்கிறார்.. இது எதுவுமே நமக்கு தெரியாது. சாஹித்ய அகாடமி மாதிரியான நிறுவனம் வேறு சில காரியங்களும் செய்யும். நாம் காலம்காலமாக இங்கே கல்வியாளர் என்று ஒருவரை நினைத்துக்கொண்டிருப்போம். சமூக சீர்திருத்தவாதி என்று ஒருவரை நினைத்துக்கொண்டிருப்போம். அவர்கள் (சாஹித்ய அகாடமி) நமக்கு அவரை அறிமுகப்படுத்துவார்கள் :’இலக்கியச் சிற்பி’ என்று!  இது மாதிரியான விபத்துகள், இந்த நிறுவனங்கள் வழியாக.. இதையெல்லாம் தாண்டிதான்…  பைரப்பாவுடைய ‘பர்வ’ போன்றவைகள் மொழிபெயர்க்கப்பட்டு வந்து சேருகிறது. இதுபோக தனியார் நிறுவனங்கள் மொழிபெயர்க்ககூடிய , பிரசுரிக்ககூடிய புத்தகங்கள் இருக்கிறது –  ‘க்ரியா’ போல. அதேமாதிரி அங்கங்கே அங்கங்கே ஒரு அமைப்பு சார்ந்த மொழிபெயர்ப்புகள் வந்துகொண்டே  இருக்கிறது.  இதுபோன்ற மொழிபெயர்ப்புகள்தான் இங்கே இருக்கக்கூடிய சீரிய வாசகச் சூழலுக்கு ஏதாவது ஒரு உதவி பண்ண முடியும். ‘அந்நியன்’ வந்த மாத்திரத்தில் தமிழ் எழுத்துச் சூழலில் இருந்த மொழிநடை வேகவேகமாக மாற்றமுற்றதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படியான மொழிபெயர்ப்புகள்.. இதுபோன்ற தனியார் நிறுவனங்களிலிருந்து நமக்கு கிடைக்க முடியும் . இதற்கு அடுத்தகட்டமாக தனி நபர்கள் அவர்களுடைய ஆசை சார்ந்து , விளைவு சார்ந்து மொழிபெயர்க்ககூடிய புத்தகங்கள் இருக்கிறது. அதுவும் இரண்டு விதமாக இருக்கிறது. ஒன்று, ஒரு ‘கன்விக்ச’னோடு – இந்த புத்தகத்தை தமிழில் கொண்டுவந்தே தீரணும் என்பதற்காக – அந்த புத்தகம் தனக்கு விடுக்கக்கூடிய சவால்களை எல்லாம் சந்தித்து.. இன்னொரு தரப்பு , எது வாகாக இருக்கிறதோ அதை மட்டும் செய்யும். வாகாக இல்லாத வாக்கியங்களை, வாகாக இல்லாத பத்திகளை , பகுதிகளை விட்டுவிட்டு மொழிபெயர்க்கும்.  இன்னொரு தரப்பு மொழிபெயர்ப்பு என்று சொன்னால் , தான் நம்பக்கூடிய கோட்பாடு சார்ந்த விஷயங்களை மொழிபெயர்ப்பது. இவ்வளவு பெரிய வட்டத்தில் இலக்கியத்திற்கான இடம், இலக்கிய அக்கறைகளுக்கான இடம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிதான் நமக்கு சில நல்ல புத்தகங்கள் கிடைத்திருக்கிறது.

இந்தப் பின்னணியில் , புன்னத்தில் குஞ்ஞ்ப்துல்லா இந்த (கன்யாவனங்கள்) புத்தகம் வந்திருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் ஒரு அயல்மொழி எழுத்தாளருடைய மூன்று புத்தகங்கள் தமிழில் வருவது மிகப்பெரிய விஷயம். நான் (காலச்சுவடு வெளியீடான) ‘மீஸான் கற்கள்’, ‘மஹ்சர் பெருவெளி’ – அந்த இரண்டு புத்தகங்களையும் ஆசையாக வாங்கிப் படித்தேன். அந்த புத்தகங்களில் தெரியக்கூடிய குஞ்ஞ்ப்துல்லா இந்த புத்தகத்தில் இல்லை. முதல் இரண்டு புத்தங்களிலும் – விஸ்தாரமாக ஒரு களத்தை எடுத்துக்கொண்டு சௌகரியமாக உட்கார்ந்து கதை சொன்ன குஞ்ஞ்ப்துல்லா இதில் வேகவேகமாக வேறு ஒரு கதை சொல்லியிருக்கிறார் அப்படியென்று சொல்லலாம். இந்தக் களம் தமிழுக்கு ரொம்ப புதிது. இதேமாதிரியான தன்மையுள்ள இன்னொரு புத்தகம் தமிழில் வந்திருக்கிறது. ஆபிதீனுடைய ‘இடம்’ என்கிற புத்தகம்.  ‘இடம்’,  இங்கேயிருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைபார்க்கப் போகிறவர்கள் , அவர்கள் படக்கூடிய சிரமம் – கீழ்நிலைத் தொழிலாளர்கள் – அவர்களைப்பற்றியது. குஞ்ஞ்ப்துல்லா புத்தகம் அப்படி இல்லாமல் ஒரு அரபி முதலாளி அவன் வேலைக்கு எடுத்துக்கொண்டவர்கள், அவனைச் சுற்றியிருக்கக்கூடிய குடும்பம், அவனுடைய சம்பாத்தியம் , அவனுடைய தொழில் முறைகள்.. இது சம்பந்தமான ஒரு புத்தகம். இந்த புத்தகம் பாலைவனத்தை களமா வைத்து எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகம் முழுக்கவே தகிப்பு, அந்த வெட்கை இருந்துகொண்டே இருக்கிறது. வெளியில் புறச்சூழலில் இருக்கக்கூடிய வெயில், மணலோடு வெக்கையாகவும் இதில் வருகிற கதைமாந்தர்கள் எல்லோருமே ஒருவிதமான பாலியல் வறுமைக்கு, பாலியல் அழுத்தத்துக்கு ஆளானவர்களாகவும் இருக்கிறார்கள். உள்ளும் புறமும் இருக்கக்கூடிய தகிப்பு தொடர்ந்து இந்த நாவலில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. இரவுகள் இந்த புத்தகத்தில் வர்ணிக்கப்படும்போதும் கூட அதுவும் பகலுக்கு உண்டான வெளிச்சத்தோடும்  வெக்கையோடும் இருக்கிறது . நான் சொன்ன (அவருடைய ) மற்ற இரண்டு புத்தகங்களை படிப்பதற்கு முன்னால் ஒருவர் இதைப் படிப்பாரானால் புன்னத்தில் குஞ்ஞ்ப்துல்லாவோட படைப்புலகத்துக்குள்ளே அவருடைய எழுத்து முறைக்குள்ளே நுழைவதற்கான மிகச்சிறந்த நுழைவாசலாக இந்த புத்தகம் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.  இதற்கு அடுத்து ‘மீஸான் கற்கள்’ படிக்கலாம், அடுத்து ‘மஹ்சர் பெருவெளி’.. அப்படி நான் ஆலோசனையாக சொல்கிறேன். நான் அப்படித்தான்  படிக்க விருப்பப்படுவேன்…. ஒரு பொறுப்புள்ள சீரிய வாசகன், அக்கறையாக எடுத்துப் படிக்க வேண்டிய புத்தகம் ‘கன்யாவனங்கள்’.

***

நன்றி : யுவன் சந்திரசேகர், ‘எழுத்தும் எண்ணமும்’ குழுமம்.

**

‘கன்யாவனங்கள்’ – உயிர்மை விளம்பரம் :
70களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய் வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போராட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மத ரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்கமுடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது கன்யாவனங்கள். செல்வமும் காதலும் காமமும் பாவமும் ஆபத்துகளும் சூழ்ந்த ஒரு உலகத்தின் வசீகரத்தையும் இருளையும் இந்நாவலில் சித்தரிக்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. முன்னணி மலையாள நாவலாசிரியரான புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் புகழ்பெற்ற படைப்பு இது. 

**

சில சுட்டிகள் :

Punathil Kunjabdulla – Wikipedia

கதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்

இசைக்க மறந்த கலைஞன் : யுவன் சந்திரசேகர் நாவல் “கானல் நதி”  – சுரேஷ் கண்ணன்

5 பின்னூட்டங்கள்

 1. kulachal yoosuf said,

  31/03/2013 இல் 20:31

  புனத்தில் குஞ்ஞப்துல்லாவை மலையாள நாட்டில் குஞ்ஞிக்கா என்று சொல்வார்கள். இவர் கைராசியுள்ள ஒரு ஆங்கில மருத்துவரும்கூட. நானும் இவரை குஞ்ஞிக்கா என்றுதான் அழைப் பேன். குஞ்ஞிக்கா இதுபோன்ற பிரார்த்தனைகளின் பொருட்டு கன்னியாகுமரிக்கும் வருகை தந்திருக்கிறார். மிகப் பெரிய வசதிபடைத்த குஞ்ஞிக்காவை நான் கன்னியாகுமரியிலுள்ள ஒரு பாடாவதி பாருக்கு அழைத்துச் சென்றேன். மனிதர் ‘அப்படியே’ சாப்பிடுவார். பாசாங்குகளில்லாத மக்களுடன் சேர்ந்து மதுவுண்ட மனிதன் அகமகிழ்ந்துபோனதுடன் வெளியே வந்து நடைபாதை வியாபாரியுடன் சண்டைபோட ஆரம்பித்துவிட்டார். மிச்சமி ருந்ததை பேண்ட் பாக்கட்டில் திணித்துக்கொண்ட இவர், பிறகு பண்ணிய அலப்பறைகள் இருக்கிறதே? கேரள சட்ட மன்றத் தேர்தலில் ஒத்தப்பாலம் தொகுதியின், பிஜேபி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிகரமாகத் தோல்வி யைத் தழுவியவர். திருவனந்தபுரத்திலுள்ள ஒரு ஆஸ்பத்திரி யில் (வடகரையில் இவருக்குச் சொந்தமாக ஒரு பெரிய ஆஸ்பத்திரி இருக்கிறது. அல்லது இருந்தது) பணியாற்றும் போது நான் அடிக்கடி அங்கே செல்வதுண்டு. நோயாளியைப் பரிசோதிப்பதுபோன்ற பாவனை யில் கதவை மூடி விட்டு, அவசர அவசரமாக தாகசாந்தி செய்து கொள்வோம். ஒரு தடவை தொட்டுக்கொள்ள காலையில் வந்த இட்லியில் ஒன்று மட்டும் மிச்சமிருந்தது. சைட் டிஸ்ஸாக ஆளுக்கொரு கடிகடித்தோம். (இந்தக் கன்யாவனங்களை மொழியாக்கம் செய்தது வெளியில் சொல்ல முடியாத மற்றொரு தனிக் கதை)

  • 01/04/2013 இல் 11:52

   2009-ல் போட்ட பதிவுக்கு 2013-ல் ஒரு மறுமொழி! நன்றி குளச்சல். வெளியில் சொல்லமுடியாத அந்த தனிக்கதையை அனுப்புங்கள் . ஹராமிகளுக்கென்றே ஆபிதீன் பக்கங்கள் இருக்கிறது!

 2. kulachal yoosuf said,

  15/07/2013 இல் 19:16

  குஞ்ஞிக்காவின் கதைகள் அத்தனையும் ஹராமிய (தமிழ் ஒன்றும் அழிந்து விடாது) கதைகள்தான். இது வேறுவிதமான கதை. சொல்லத்தகுமல்ல இப்பொருளை சுருட்டி மறைக்கிறேன் ஷறஹுக்காக. நன்றி: பீரப்பா, தக்கலை.

  • kulachal yoosuf said,

   15/07/2013 இல் 19:17

   இங்க எவன் தேதியெல்லாம் பாக்குறான்? அதைக்கூட இப்பதான் பாத்தேன்.

  • 16/07/2013 இல் 10:16

   பொருளை மட்டும் சுருட்டி மறைத்துவிட்டு ‘மற்றதை’ திறந்துகாட்டுங்கப்பா… 🙂


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: