தேவை: முழக்கமல்ல; ஒழுக்கம் – ஏ.ஹெச்.ஹத்தீப்

தேவை: முழக்கமல்ல; ஒழுக்கம் – ஏ.ஹெச்.ஹத்தீப்

முன்பெப்போதையும்விட இந்தப் (பாராளுமன்றத்) தேர்தலில் இந்திய முஸ்லிம்கள் மிகுந்த விவேகத்துடனும் அரசியல் முதிர்ச்சியுடனும் ஓட்டளித்திருக்கிறார்கள். தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் மட்டும் மோதிக்கொண்ட கடந்த காலங்களைவிட,  முஸ்லிம் மதவாதச் சக்திகள் வாக்குக் கேட்டு யாசிக்கிற இந்தச் சமயத்தில் சமுதாயத்தின் செயற்பாடுகள் மெச்சும்படியாக இருக்கிறது என்று பெருமிதம் கொள்வதில் தயக்கம் காட்டவேண்டியதில்லை. “பாரதீய ஜனதா, சிவசேனா போன்ற வகுப்புக் கட்சிகளுக்கு இடந்தரலாகாது” என்று மக்களை எச்சரித்துக் கொண்டே மூன்றாவது அணியமைத்த இடதுசாரிகளைக்கூட, முஸ்லிம்கள் அதிகம் வாழும் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் மக்கள் எச்சரித்துள்ள விதம் அற்புதம். “ ஒருசில கட்சித்தலைவர்கள் பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்தியதும் சிறுபான்மையினருக்கெதிராக வருண் பேசியதும் பாரதீய ஜனதாவின் படுபாதாளச் சறுக்கலுக்கு முக்கியக் காரணம் ” என்று கூறுமளவுக்கு மிக அற்புதமாகப் பாடம் புகட்டப் பட்டிருக்கிறது. மதனியின் தோள்மீது கை போட்டுக்கொண்டு, “ மதத்தையும் அரசியலையும் ஒன்றாகப் பின்னிக் குழப்பாதீர்கள் ” என்று இடதுசாரிகள் ஊருக்கு உபதேசம் செய்கிற காலகட்டத்தில்,  முஸ்லிம்கள் மட்டுமே மார்க்கத்தையும் அரசியலையும் தனித்தனியே பிரித்து வைத்து ஆட்சிபுரிவோரைத் தேர்தெடுத்திருப்பதைத் தேசத்தின்மீது பற்றும் பிடிப்பும் கொண்ட ஒவ்வொருவரும் ‘ இது ஒரு நல்ல திருப்பம் ’ என்று கைதட்டி வரவேற்க வேண்டும்.

 ‘ஆட்சிபுரிவதற்கு மதம் ஒரு முக்கியத் தகுதியுமல்ல; மார்க்க மாமேதைகள் ஆட்சிக்கு  ஏற்றவர்களுமல்ல’ என்பது வெறும் சித்தாந்தமல்ல; அதுதான் உலகலாவிய யதார்த்தம். இல்லையெனில் தேவ்பந்திலிருந்தோ அலிகாரிலிருந்தோ முஸ்லிம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆதிகாலத்திலேயே அமைச்சர்களாக்கி இருக்க மாட்டார்களோ என்று கேட்கத் தோன்றுகிறது. முஹம்மது அலி ஜின்னா தொழுகைப்பள்ளியையே எட்டிப் பார்க்காதவர். போதாக்குறைக்கு ஷியா முஸ்லிம்.‘எல்லை காந்தி’ என்றழைக்கப்படும் பாரத ரத்னா கான் அப்துல் கப்பார் கானோ முன்னாள் ஜனாதிபதி ஜாகீர் ஹுஸைனோ ‘மத்ரஸா’விலிருந்து வெளிவந்த முழுநேர மார்க்க அறிஞர்களல்ல. தேசத்தின் முதற் கல்வியமைச்சரான அபுல் கலாம் ஆசாத்கூட மார்க்கப் போதகர் அல்ல. ஆனாலும் அவர்களது காலத்தில் இஸ்லாமியச் சமுதாயத்துக்குக் கிடைத்த மதிப்புக்கும் சலுகைகளுக்கும் எவ்விதக் குறையுமில்லை. இந்த நாட்டில் முஸ்லிம்களை மூன்றாம் தரக் குடிமக்களாக்கும் வர்ணாஸ்ரமப் பிரயத்தனத்துக்கு மரண அடி கொடுக்க, மார்க்க மாமேதைகளைக் களமிறக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்தத் தேர்தல் நிதர்சனமாக உணர்த்தியுள்ளது. டெல்லி ஷாஹி இமாம் அப்துல்லாஹ் புகாரி அரசியல் மேடைக்கு வந்து ஆக்ரோஷமாக முழக்கமிட்ட நேரத்தில்தான் பாரதீய ஜனதாக்காரர்கள் ஆட்சிபீடம் ஏற முடிந்தது. “ மதவாதச் சக்திகள் அரியணை ஏறியதற்கு டெல்லி இமாம் ஒரு முக்கியக் காரணம் ” என்பது இந்திரா காந்தியே பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சமாச்சாரம். மார்க்கத்திற்கெதிராக இந்திரா என்ன செய்தார், அதற்கு ஆதரவாக அத்வானி வகையறாக்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை வரலாறு சொல்லிக் காட்டும். இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதெல்லாம் ஆன்மீகம் பேச வேண்டியவர்கள் அரசியல் முழக்கமிட்டால் என்ன நேரிடும் என்பதை மட்டுமே!.

மௌலானா முஹம்மத் அலி சகோதரர்களோ அறிஞர் அபுல் அலா மௌதூதியோ அரியாசனத்துக்கு வர விரும்பாமல் அரசியல் பேசியவர்கள். முஸ்லிம்களின் பிரதிநிநிகளை இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலிருந்து தேர்வு செய்யாமல் அவர்களைத் தனித்து வைத்திருப்பதிலிருந்தே இந்தியாவில் இதுதான் உச்சப்பட்ச சாத்தியம் என்று அப்பட்டமாகப் புரிகிறது.  ஐயமில்லா நேர்மை, களங்கப்படாத ஒழுக்கம், எதையும் சாதிக்கின்ற திறமை, மக்களிடையே பாரபட்சம் காட்டாத மனப்போக்கு, யாருக்கும் எதற்கும் அஞ்சாமை- இத்தகைய அருங்குணங்கள்தான் ஆட்சியாளருக்குத் தேவையே தவிர புனிதக் குரானை மனனம் செய்திருப்பதோ மேடையில் நின்றுகொண்டு நபிமொழிகளை முழங்குவதோ அல்ல.மார்க்க அறிஞர்கள் அரசியல் பிரவேசம் செய்யாததால் யாருடைய குடியும் மூழ்கிவிடவில்லை என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டிய தருணமிது.

என்றாலும் நடுநிலை தவறாத, ஒழுக்கம் மழுங்காத மார்க்கத் தலைவர்கள் இன்னும் மக்களால் உயிரென நேசிக்கப்படுகிறார்கள் என்பது வேறு விஷயம். மார்க்க அறிஞர்களே முன்வந்து தங்களை அதிகார அரசியலுக்கு அப்பாற்படுத்தி வைத்திருப்பதற்குக் காரணம், அரசியலில் பொய் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தங்கள் அதிகம். முன்னுக்குப்பின் முரணாகப் பேச வேண்டிய கட்டாயங்கள் உண்டு. பித்தலாட்டங்கள் தவிர்க்க முடியாதவை. வாக்குறுதியைக் காப்பாற்றுவதில் சிக்கலும் தயக்கமும் அதிகம். இத்தகைய வாழ்க்கைமுறை அசல் மார்க்க மாமேதைகளுக்கு கை வந்த கலையல்ல. இந்தக் காரணங்களாலேயே அவர்களால் முழுநேர அரசியல்வாதிகளாக உரு மாற முடியாது. அதையும் மீறி நிறம் மாற்றிக்கொள்வோர் நிச்சயமாக நிஜமான மார்க்கவாதியாகப் பரிணமிக்க இயலாது. நமது சமுதாயம் இப்போது அரசியல் அரங்கிலும் மார்க்கமேடைகளிலும் காண்கிற மூச்சுத் திணற வைக்கும் காட்சிகளே அதற்குச் சாட்சிகள். 

உதாரணத்திற்கு: அஸ்ஸாமில் கணிசமான அளவு முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அங்கே பதிவான 70 விழுக்காடு ஓட்டில் காங்கிரஸ் சரிப்பாதியை – 35% – ஈட்டியிருப்பினும், 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றியைத் தட்டிச் செல்ல முடிந்ததற்குக் காரணம், மார்க்க விற்பன்னர்களின் ஆசீர்வாதம் பெற்ற பத்ருதீன் அஜ்மலின் கட்சி 17 சதவிகித முஸ்லிம் வாக்குகளைச் சிதறடித்ததே. அதனாலேயே அங்கே முஸ்லிம்களைப் பார்த்து முகம் சுளிக்கிற அஸ்ஸாம் கன பரிஷத்தும் பா.ஜ.க.வும் மீதி 6 இடங்களைக் கை பற்றியிருக்கின்றன. இல்லாவிட்டால் காங்கிரஸ் அனைத்து 13 தொகுதிகளையும் கபளீகரம் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இஸ்லாமியப் பெருமக்களின் மதச்சார்பு இயக்கங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு மார்க்கப் பகைவர்களை வாழ வைக்கும் அணுகுமுறைகளை கைகொள்கிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் தங்களது சுயமரியாதையும் வரட்டுக் கௌரவமுமே. இங்கே இஸ்லாத்தைப் பற்றியோ சமூகத்தைப் பற்றியோ அவர்கள் சற்றும் சிந்திப்பதில்லை. தாம் ஓரிடத்தில்கூட வெற்றியடைய முடியாது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தாலும்கூட, ஜாமீன் தொகை இழந்து சந்தி சிரிக்க நேரிடும் என்பதை நிச்சலனமாக உணர்ந்தும்கூட சில மாநிலங்களில் அரைவேக்காட்டுத்தன அரசியல் சித்து விளையாட்டுக்களால் சமுதாயம் எதிர்காலத்தில் அநேக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அஸ்ஸாமிய மார்க்கப் பற்றாளர்கள் மட்டுமல்ல; தமிழகத்தின் ‘மதக் காப்பாளர்கள்’கூட முற்றிலுமாக உணர மறுக்கிறார்கள்.

டெல்லி,குஜராத்,ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஆந்திரா, கேரளா, பீஹார், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா போன்ற மாபெரும் மாநிலங்களில் மதச்சார்பின்மைக் கொள்கையின் நிஜமான கூட்டாளிகள் யாரென்று கண்டறிந்து ஒட்டுமொத்தமாக ஓட்டுக்களை அள்ளிக் கொட்டியதாலேயே சமுதாயப் பகைவர்களைப் புறந்தள்ளிவிட்டு நமது உற்ற நண்பர்கள் அரியணை அடைய முடிந்தது. நட்பாளர்கள் ஒருவேளை சமுதாயத்திற்கெதிரான முடிவுகளை மேற்கொள்வார்களேயானால் அவர்களையும் எப்படி அரசியல் களத்தைவிட்டு விரட்டுவது என்பதை நம் மக்கள் கடந்த காலங்களில் மிகத் தெளிவாகக் குட்டிக் காட்டியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு: உ.பி.யில் முலாயம் சிங்கின் சமாஜ் வாடிக் கட்சி.

காங்கிரஸும் இடதுசாரிகளும் ஆதிகாலத்திலிருந்தே சிறுபான்மையினரின் ஆத்மார்த்த நண்பர்கள். ஆனால் இந்தத் தேர்தலில் இடதுசாரிகள் சரிந்து போனதற்குக் காரணம் அவர்களுக்கே தெரியவில்லையாம். அரசியல் ஆட்சிக்குழுவினர்கள் ஒன்றாக உட்கார்ந்து இனிமேல் காரணங்களைக் கண்டறியப் போகிறார்களாம். மதச்சார்பற்றசக்திகளை மறைமுகமாக அழிக்கின்ற ‘மூன்றாம் அணி அமைத்தல்தான் தங்களது வீழ்ச்சிக்குக் காரணம்’ என்று இப்போது அங்கொருவரும் இங்கொருவருமாக முனகுவது சன்னமாகக் கேட்கிறது. இந்திய அரசியலில் மூன்றாம் அணி என்பது ஓர் அப்பட்டமான தற்கொலை என்று பலமுறை இங்கே எழுதியாயிற்று.

உதாரணத்திற்கு எங்கும் போக வேண்டியதில்லை. தமிழகத்தில் முஸ்லிம்கள் பரந்து விரிந்து கிடந்த பல தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி களத்தில் குதித்தது. பழியுணர்வு மேலோங்கிவிட்டால் பகுத்தறிவு தானாகவே வெளியேறிவிடும் என்பதற்கு தேர்தல் களம் கண்ட பல முஸ்லிம்கள் நித்திய உதாரணப் புருஷர்களாகத் திரிகிறார்கள்.தங்களது கடந்த கால மாயத் தோற்றங்களால் கவரப்பட்ட தி.மு.க, வக்ஃப் வாரியத்தை வாரி வழங்கிய நேசபாவம்கூடப் பார்க்காமல் ஐக்கிய முற்போக்குக்  கூட்டணிக் கட்சியினரை எதிர்த்து ம.ம.க. வேட்பாளர்களை நிறுத்தியது ஒரு வன்செயல் என்றே குறிப்பிட வேண்டும்; வேறு வழியில்லை. அவர்களது பலமும் அரசியல் வலிமையும் நன்குத் தெரிந்திருந்ததால்,  இரண்டு தொகுதிகளைக்கூட வழங்க முன்வராத தி.மு.க.வை உருட்டித் தள்ள வேண்டுமென்பது மட்டுமே அதன் வைராக்கியம். தேர்தல் சூழ்ச்சி. இஸ்லாத்திற்கு வேண்டுமானால் அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்கலாம். அவர்களது திடீர் திடீர்க் கண்டுபிடிப்புக்கு ஏற்ப மார்க்கத்தின் தூய நிறத்தை மாற்றி மாற்றிக் கூறி அப்பாவி இளம் முஸ்லிம்களை வசீகரிக்கலாம். வசப்படுத்தலாம். ஞானஸ்நானம் பண்ணி “நீயொரு தனி இனம்’ என்று கூறிச் சமுதாயத்திலிருந்தே அன்னியப்படுத்தலாம். ஆனால் அரசியலுக்கு அவர்கள் புதிய அவதாரம். முஸ்லிம் சமுதாயத்தையோ இந்தியச் சமூகத்தையோ அதிகம் புரிந்துகொள்ளாமல் மூக்கை நுழைத்துவிட்டு விழி பிதுங்கி நிற்பதிலிருந்தே அவர்களது அரசியல் அறியாமை அம்பலமாகிறது.

ஆனால் முஸ்லிம்கள் தங்களது அரசியல் முதிர்ச்சியையும், யாரைப் படுபாதாளத்தில் தள்ளிப் புதைக்க வேண்டுமென்ற நீதி சார்ந்த அறிவாற்றலையும் மற்றவர்கள் வியக்கும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். ஓட்டுக்கள் சிதறினால் சமுதாயம் எத்தகைய பிரச்னைகளையும் இன்னல்களையும் சந்திக்க நேரிடும் என்பதை, அதிகார வெறியைத் தன்னகத்தே அண்டவிடாத, தூரநோக்குச் சமுதாயச் சிந்தனைகொண்ட நடுநிலை முஸ்லிம்களை எந்த முஸ்லிம் இயக்கத்தாலும் ஈர்க்க முடியவில்லை. நீண்டகாலமாக இஸ்லாத்தைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று அரசியல் முழக்கமிட ஆரம்பித்தது, நடுநிலை  முஸ்லிம்களைத் திடுக்கிட்டு விழிப்படைய வைத்துவிட்டது.

தனித் தனிக் குழுக்களாக நின்று ஆவேசக் கர்ஜனையிடுவதால் அரசியல் களத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதை நீண்டகாலமாகவே தமிழக முஸ்லிம்கள் உணர்ந்து வைத்துள்ளனர். அந்த அறிவாற்றலால்தான் தேனியில் ஜே.எம்.ஹாரூனையும் வேலூரில் அப்துல் காதரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடிந்தது. காஷ்மீரிலிருந்து குலாம் நபி ஆசாத்தும், உத்திரப் பிரதேசத்திலிருந்து சல்மான் குர்ஷிதும், கேரளாவிலிருந்து இ.அஹமதும் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க முடிந்ததென்றால் இதர இயக்கத்துடனும் கட்சிகளுடனும் கைகோர்த்துச் செல்லும் பக்குவத்தால்தான். தெளிந்த நீரோடை போன்ற நிச்சலனமான இஸ்லாத்தைக் கரடுமுரடான கற்பாறையாக மாற்றி அதில் பயணம் செய்வதற்கு ஆள் பிடிக்கிற கெட்ட சகவாசங்கள் அரசியலில் எடுபடாது என்பதை இந்தத் தேர்தல் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுக்கும் அழுத்தமாக உணர்த்திவிட்டது.

வயிறு வளர்ப்பதற்கு வேண்டுமானால் இயக்கங்கள் தேவை. சராசரி முஸ்லிமாக வாழ்வதற்கு இஸ்லாம் மட்டும் போதாதா?

போதும்.

**

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

A. H. Hatheeb Sahib
16, Mohideen Palli Street, Nagore – 611002
Tel : 0365 250218, Mob : 9944884080

3 பின்னூட்டங்கள்

 1. 20/08/2009 இல் 13:56

  நல்லதொரு கட்டுரை, சரியாக சொல்லியிருக்கிறார்கள்.

 2. jeyakumar said,

  21/08/2009 இல் 08:13

  நல்ல கட்டுரை ஹத்தீப். வன்முறையை ஆதரிக்கும் எந்த மதமும், அதன் மக்களும் உருப்பட்டதில்லை. அதை தனது மக்களுக்குச் சொல்லும் உங்களது கட்டுரை அருமை. கான் அப்துல் கஃபார்கானையெல்லாம் நினைவில் வைத்திருக்கும் உங்கள்மீது மரியாதை கூடுகிறது.

  ஜெயக்குமார்

 3. ahmad said,

  10/09/2009 இல் 16:36

  sirappanadoru katturai pudu2 islamia iyakkahgal, arasial totruvippalargal arindukondal sari


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: