அர்த்தம் – ஏ.ஹெச்.ஹத்தீப்

2008 ஏப்ரல் ‘சமநிலைச் சமுதாயம்’ இதழில் வெளிவந்த சிறுகதை

*

அர்த்தம்
ஏ.ஹெச். ஹத்தீப்

இனி வரவே கூடாதென்று எல்லோராலும் பிரார்த்திக்கபட்ட அந்தப் பயங்கரம் வந்தே விட்டது. இரத்தத்தை உறைய வைத்து மூச்சை இறுக்கிப் பிடிக்கிற கொடூரம் , அருவருப் பூட்டும் மதக் கலவரம். படபடவென்று ஏதோ வெடிக்கும் சப்தம். என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியாதபடி கனத்த, ஓங்கிய கூப்பாடுகளின் கலவை. வெறிக் கூச்சல்கள். மரண ஓலங்கள். இடையிடையே தெரு நாய்கள் குரைக்கின்றன. எல்லாமே சற்று தூரத்தில் நடக்கிறது. எந்தப் பக்கமென்று ஊகிக்க முடியவில்லை.

நான் வீட்டை விட்டு வெளியே வருகிறேன். நெஞ்சில் எவ்விதத் துடிப்புமில்லை. மரக்கட்டை போன்று திண்ணையிலுள்ள ஒரு தூணில் சாய்ந்து கொள்கிறேன். விழிகளில் ஜீவனற்றை பார்வை. இறுகிய உணர்ச்சியுடன் நீளமான அந்த வீதியைப் பார்க்கிறேன்.
நள்ளிரவு நேரம். நல்லவேளையாக எந்தக் கொம்பனாலும் நிலாவுக்குத் தார் பூச முடியவில்லை. தெருவே வெள்ளி முலாம் பூசிய மாதிரிப் பள பள வென்று வெறிச்சோடி கிடக்கிறது. பெரும்பாலும் எல்லா வீட்டுக் கதவுகளும் இறுகச் சாத்தப்பட்டுள்ளன. ஆனால் ஜன்னல்களினுடே ஏகப்பட்ட மனிதத் தலைகள் நிழலுருவாகத் தெரிகின்றன.

மனிதனுடன் போராட முடியாமல் எமனுடன் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்று மாதங்களுக்கு முன்னால், எனது நான்கு வயது குழந்தை கேட்டாள்: ”ஏன்ம்மா இப்படியெல்லாம் நடக்குது? நான் பதில் கூற முடியாமல் திணறினேன். நான் அதிகம் படிக்காதவள். காற்றிலேகூட மாசு படாத ஒரு குக்கிராமத்திலே வளர்ந்தவள். மூப்பெய்தியதும் வெளியே செல்ல அப்பா தடைவிதித்தார். தாயை இழந்த எனக்குப் பாட்டி தோழியானாள். இடைவிடாத வீட்டு வேலைகள். இடையிடையே பாட்டி நீதிக் கதை கூறுவாள். மற்றபடி வெளியுலகுக்கு நானோ, எனக்கு வெளியுலகமோ அறிமுகமாகி இருக்கவில்லை. மீண்டும் எனது மகளின் மெல்லிய குரல் மூளையைத் தாக்க, விழிகளில் நீர் அரும்புகிறது. ”ஏம்மா இப்படி? கோடிக் கடை தாத்தாவைக் கூட வெட்டிட்டாங்களாமே?”

அவளுள் ஓர் அங்கலாய்ப்பு தெரிந்தது. அவள் அடிக்கடி தெருக்கோடியில் அமைந்துள்ள அந்தச் சிறிய பெட்டிக் கடைக்குச் சென்று கடலைமிட்டாயோ, கமர்கட்டோ வாங்கிச் சாப்பிடுவாள். கடைக்கார தாத்தா அவளது மூக்கு நுனியைப் பிடித்து இழுத்துச் செல்லமாகக் கொஞ்சுவார். சில நேரங்களில் சிணுங்க விட்டு வேடிக்கை பார்ப்பார். குழந்தை கையையும் காலையும் உதறிக்கொண்டு குதிப்பதைப் பார்த்து வாய்விட்டுக் கலகலவென்று சிரிப்பார். நீண்ட அரிவாளால் ஒரே வீச்சில் அவரைக் கொடூரமாகச் சாய்த்து விட்டார்கள். இனிமேல் கடலை மிட்டாய் யார் தருவார்கள் என்ற கவலையும் ஏக்கமும் அவளது குரலில் கனத்தன. அதுதான் அவளுக்குப் பேரிழப்பு.

குழந்தையை அப்படியே அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டேன். அத்தோடு அவள் அமைதியானாள். ஆனால், எனக்கோ மனம் பதைபதைத்தது. ஆண்டவனே இந்தக் கலவரத்தின் கோரத் தாண்டவம் இவளுடைய பிஞ்சு மனதில் பதியக் கூடாது என வேண்டிக் கொண்டேன்.

பிரார்த்தனைகள் அத்தனையையும் நிறைவேற்றினால் பக்தர்களும் இறைவனாகி விடுவார்கள். அப்புறம் ஆண்டவன் அனாதையாக வீதியில் நிற்க வேண்டியதுதான்.

திடீரென்று மூர்ச்சை போட்டு விழுவதுபோல் ஒருவன் எனது காதருகே அலறுகிறான். ”ஏய் இங்கே வாசலிலே வந்து என்னம்மா செஞ்சுகிட்டிருக்கே? உனக்குப் பயமில்லை? உள்ளே போம்மா”

பரிச்சயமான குரல்போல ஒலிக்கிறது. அவரைப் பார்க்கிறேன். களங்கமற்ற நிலா வெளிச்சத்தில் சற்று மங்கலாகத் தெரிந்தான். அறிமுகமான முகம். அவனுடன் ஒரு பெரும் கும்பல், கைகளில் தடி, கடப்பாறை, அரிவாள், பெட்ரோல் ததும்பிய பிளாஸ்டிக் கேன்கள் இத்யாதி இத்யாதிகளுடன்…கும்பலில் இருந்த ஒரு கரடுமுரடானவன் கீச்சுக் குரலில், ”பழிக்குப் பழி. போன கலவரத்துல யார் உன்னைக் கொடுமைப்படுத்தினானோ அவனைக் குடும்பத்தோட குளோஸ் பண்ணிட்டோம். குடிசையிலே எரிஞ்சுகிட்டிருக்கான். பழிக்குப் பழி” என வெறி நாயைப்போல குரைத்தான்.

இந்தத் தடவை நம்ம ஆட்கள்.

தன்னுடைய அரசியல் சுய லாபத்திற்காக மத்திய அரசு கிராமம் என்றும் மாநில அரசு நகரம் என்றும் பிரகடனம் செய்துள்ள ஓர் அதிசயமான பகுதி. உண்மையில் அந்த நகரம் அப்படிப்பட்டதுதான். ஊரைச் சுற்றி பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் பசேலென்ற நஞ்சை நிலப்பரப்பு. ஓர் அழகிய ஆறு. ஆங்காங்கே கைக்குட்டையைக் காய வைத்த மாதிரி சிறுசிறு குளங்கள் அடர்த்தியான மர வரிசைகள். அனைத்தும் இனிமையான கிராமச் சூழலை நினைவுறுத்தினாலும் ஊருக்குள் நுழைந்துவிட்டால் நிலமையே வேறு.

கசகசவென்று நிறையக் கடைகளைக்கொண்ட புதிய பேருந்து நிலையம். உயரமான காம்பவுண்ட் சுவர்களைக்கொண்ட பள்ளிக் கூடங்கள், சினிமா தியேட்டர்கள், பிரம்மாண்டமான சிமின்ட் கூறைகள் வேயப்பட்ட தொழிற்சாலைகள், டாக்டர்கள் இல்லாத அழுக்கடைந்த அரசு மருத்துவமனை பழமையின் வசீகரமும் புதுமையின் கம்பீரமும் கொண்டு வீட்டு வரிசையினூடே வகிடு எடுத்தாற்போல் கோணலற்ற தெருக்கள், சாலைகள்.

மனிதர்களும் அப்படித்தான் இருந்தார்கள், பளிச் சென்று உடையணிந்துகொண்டு. அவர்ளுள் இத்தனை வக்கிரமும் வெறிக்குணமும் மண்டிக் கிடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

திருமணமாகி ஒன்றரை ஆண்டு காலம் பிறந்த கிராமத்திலேயே வாசம். கணவருக்கு வெளிநாட்டில் வேலை. பெண் குழந்தை பிறந்து ஆறு மாதம். ”இவளை நல்லாப் படிக்க வைக்கணும். கிராமம் சரிப்படாது. டவுனுக்குப் போவோம்” என்று அவர் கூறியபோது, அழகழகான சீருடைகளுடன் குழந்தைகள் துள்ளிக் குதித்துக்கொண்டு பள்ளிக்கூடம் செல்லும் டி.வி. காட்சிகள் கண்முன்னே தோன்ற, மனம் குதூகலித்தது.

அந்தத் தெருவில் ஒரு சிறுவீட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு குழந்தையுடன் குடியேறினோம். வந்தவுடனேயே அந்தத் தெருவே நன்கு அறிமுகமாகி விட்டது. எங்கே என்ன நிகழ்ச்சி நடந்தாலும் அழைப்பார்கள். அன்பாக உபசரிப்பார்கள். சமீப காலம்வரை அங்கே மதச் சச்சரவோ, ஜாதிப் பூசலோ தலைதூக்கியதில்லை. ‘யார், என்ன மதம்? ‘என்பதை தெரிந்து கொள்வதைவிட அந்த தெருவாசிகளுக்குப் பல கடமைகளும், அன்றாடப் பிரச்சினைகளும் இருந்தன. மனித வாழ்வில் நிகழ்கிற திருப்பங்கள், முடிவுகள் அனைத்தும் ஏற்கெனவே வரிவரியாக எழுதப்பட்டு விடுகின்றன. அந்தப் பட்டியலை இறைவன் இருட்டிலே திரைக்குப் பின்னால் மறைத்து வைத்து விடுவதால், மகிழ வேண்டிய நேரத்தில் மனிதன் கதறுகிறான். துக்கத்தில் துவள வேண்டியதற்குப் பதில் எள்ளி நகையாடுகிறான். வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல; இன்றியமையாதவையும் கூட. மகிழ்ச்சியற்ற துன்பமும், சோகம் இடம் பெறாத ஓயாத ஆனந்தமும் நிறைந்த சீரான வாழ்க்கை நரகத்திற்கு ஒப்பானது. ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

இந்தப் பேருண்மையைப் புரிந்துகொள்வதற்குள் எனது கணவர் வெளிநாட்டில் நடந்த ஒரு சாலை விபத்தில் பலியான செய்தி வந்தது. பாட்டியைத் தொடர்ந்து அப்பா. அப்பாவைத் தொடர்ந்து இப்போது கணவர். என்னைச் சுற்றிலும் வெறுமை. சகிக்க முடியாத தனிமை. ‘வாழ்க்கையே வேண்டாம்’ என்று மூளை குறுக்குவழியைக் காட்டியபோது, குழந்தை கலகலவெனச் சிரித்துக்கொண்டே ஸ்கூலிலிருந்து வீட்டுக்கு வந்தாள். அவளுக்கு இப்போது நான்கு வயது. எல்.கே.ஜி. படிக்கிறாள். அழகென்றால் அப்படியோர் அழுகு. தாய்க்குத் தன் குழந்தை எப்படியிருந்தாலும் கொள்ளையழகுதான். ஆனால், பார்க்கிற அத்தனை பேரும் ‘குழந்தை ரொம்ப அழகு என்று அத்தாட்சி வழங்கியபோது மனம் வெகுவாக இனித்தது.

பிடிப்பில்லாத லட்சியமற்ற வாழ்க்கை ஒரு சவ நடமாட்டமே. என்னைப் பொறுத்து ஒரு குறிக்கோள் இருக்கிறது. கணவர் ஆசைப்பட்டபடி குழந்தையை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். ஆளாக்க வேண்டும். தலைநிமிர்ந்து நடக்கச் செய்ய வேண்டும். ஒரே விநாடியில் என்னை வியாபித்திருந்த வெறுமையும், தனிமையும் காரணம் கூறாமல் அகன்று விட்டன. புதுத் தெம்புடன் மகளை அணைத்துக் கொண்டேன். எனக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத அறிவிப்பு; ”ஊரில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. யாரும் வெளியில் நடமாடக் கூடாதென்று எச்சரிக்கப்படுகிறார்கள்.’

மெல்ல ஊர்ந்த ஜீப்பில், ஒலிபெருக்கி மூலம் போலீஸ்காரர்கள் அச்சமூட்டினார்கள். ஜீப்பின் பின்னாலேயே நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களின் வரிசை. கொடி அணிவகுப்பாம்.

இதெல்லாம் எதற்கு?

மதக் கலவரமாம். அப்படியென்றால்?

என்ன நடக்கிறதென்று முழுமையாகத் தெரிய வில்லை. ஆனால், ஏதோ சாதாரணமாக நடக்கிற தென்று மூளையில் உறைத்ததும் மனசு படபடத்து. வீட்டை விட்டு வெளிவந்தேன்.

சூரியனுக்குக் கூட வெறிபிடித்துக்கொண்டது போலும். அப்படி வெயில் சுட்டெரித்தது. சிலர் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ர்கள். மற்றபடி வீதி வெறிச்சென்றிருந்தது. தெருக்கோடியில் அநாதையாக ஒரு சைக்கிளோ, ஸ்கூட்டரோ திமுதிமு வென்று எரிந்துகொண்டிருந்தது. அதை நெருங்கவோ, தீயை அணைக்கவோ எவருக்கும் துணி வில்லை.

ஆனால், கண்ணுக்குத் தெரியாமல், பேரிரைச்சலாய் எஙகோ எதுவோ நடக்கக் கூடாதது, நடந்து கொண்டிருந்தது. ஏன் இதெல்லாம்? நேற்றுவரை தந்தை பிள்ளைகளாக, அண்ணன் தம்பிகளாக உள்ளார்ந்த ஆத்ம நேயத்துடன் பழகியவர்கள். ஒரே இரவில் அந்நியர்களாய், எதிரிகளாய், பகைவர்களாய்… எதற்காக இப்படி? மனித உயிர்களைப் பலி கொடுத்து, இரத்தத்தால் குளிப்பாட்டப்பட மாசு நிறைந்த அவலங்களுக்குப் பெயர்தான் மதங்களா?

உள்ளம் ஓவென்று அலறியது. வீட்டுக் கதவைக் கூட பூட்டாமல் தெருவில் இறங்கினேன். மூளையை உருக்கி, கால்களைத் தீய்க்கிற வெயிலின் தகிப்புத் தெரியவில்லை. காலை எட்டிப் போட, பக்கத்து வீட்டு மாமா என்னை மூர்க்கத்தனமாகத் தடுத்தார். ”உனக்கென்ன பைத்தியமா? எங்கே போறே?

”ஸ்கூலுக்குப் போய்க் குழந்தையைக் கூட்டியாரணும்; விடுங்க என்னை”

”அங்கேதான் கலவரமே நடக்குது. பிள்ளைகளெல்லாம் பத்திரமாக இருக்கு. நீ வீட்டுக்குத் திரும்பிப் போ”

எனக்குப் பொறி கலங்கிப் போயிற்று. ”முடியாது எனக்கு என் குழந்தை இப்போ வேணும்” என்று கூறி முடிப்பதற்குள்,
அடர்த்தியான ஒரு வெறிக் கும்பல் வீதிக்குள் நுழைந்தது. ஒவ்வொருவரின் கையிலும் எக்கச்சக்கமான கூரிய ஆயுதங்கள்; தீப்பந்தங்கள். ஒரு கல்யாணப் பந்தலுக்கு ஒருவன் அலட்சியமாகத் தீ மூட்ட கரும் புகையும், தூசுமாக அந்த வீதியே மாசுப்பட்டது.

”அவங்க இங்கேயும் வந்துட்டாங்க” என்ற பக்கத்து வீட்டு மாமாவுக்கு என்னுடன் பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை எனத் தோன்றியது போலும். கையை வலுகட்டாயமாகப் பற்றிப் பரபர வென்று இழுத்து வந்து வீட்டுக்குள் அடைத்தார். வெளிப்புறம் கதவைத் தாளிட்டார். ஓடிப்போய் எங்கோ ஒளிந்துகொண்டார். நான் தடதடவென்று கதவைத் தட்டிக்கொண்டே ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தேன்.ஸ்கூலிலிருந்து திரும்பிய குழந்தை, ரிக்ஷாவிலிருந்து கீழே இறங்குவதற்குள் எங்கிருந்தோ ஓடிவந்த ஓர் அரக்கன் குழந்தை மீது மளமளவென்று பெட்ரோலை ஊற்றினான். சற்றும் எதிர்பாராத விதமாகக் கையில் வைத்திருந்த தீப்பந்தத்தை அவள்மீது விட்டெறிந்தான்.

என் கண்ணெதிரே எனது மொத்த உலகமும் ஒரு நெருப்பு மூட்டையாகக் கருகிக் கொண்டிருந்தது. நான் மூர்ச்சையானேன்.
பல நாட்களுக்குப் பின்னர், நான் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவுக்குத் திரும்பிக்கொண்டிருந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினார்கள். எனது வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம் சூழ்ந்திருந்தது. பெரிய பெரிய அதிகாரிகள். அவர்களைச் சுற்றி நிறைய எண்ணிக்கையில் போலீஸ் பட்டாளங்கள். ஊர்ப் பிரமுகர்கள், அமைதிக் குழு உறுப்பினர்கள்…

நிவாரணம் வழங்கப் போகிறார்களாம். நான் இழந்தது பணமோ, பொருளோ அல்லவே என் மகளைத் திருப்பித் தருவதைவிட வேறு என்ன நிவாரணம் அளிக்கப் போகிறார்கள்?

பொலபொலவென்று என் கண்களில் நீர் கொட்டுகிறது. தேம்புகிறேன்.

கூட்டத்தில் ஒருவர் உருக்கமான குரலில் கூறுகிறார்: ”அழாதேம்மா என்னைக்குத்தான் இந்தப் பாழாய் போன மதச் சண்டை ஒழியப் போகிறதோ? இதோ பார் அன்னைக்கு உன் குழந்தையை உயிரோடு கொளுத்தினாங்க. நேத்து நடந்த கலவரத்திலே இந்தக் குழந்தையோட பெற்றோர்களைக் குடும்பத்தோடு கொளுத்திட்டாங்க, பாவிங்க. இன்னைக்கு இந்தப் பிஞ்சுக் குழந்தை அநாதை”

உயரமாக இருந்த இன்னோர் அதிகாரி என்னிடம் கற்றை கற்றையாக நோட்டுக் கட்டுக்களை நீட்டுகிறார். நான் அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த அந்தப் பூ முகத்தை வெறித்துப் பார்க்கிறேன்.

அதே வயது. அதே உயரம். அதே நிறம். அதே அழகு. அதே சிரிப்பு. மதம்தான் வேறு.

திடீரென்று மனதுக்குள், விழிகளில், குரலில்கூட ஓர் அமானுஷ்யத் தெளிவு. ”எனக்குப் பணம் வேணாம்யா. இந்தக் குழந்தையைக் கொடுத்திடுங்க, அதுபோதும்” என்று பிசிறில்லாத குரலில் கேட்டுக் கொண்டே அந்தக் குழந்தையை வாரி மார்போடு இறுக அணைத்துக்கொள்கிறேன்.

என் வாழ்க்கைக்கு மீண்டும் அர்த்தம் வந்து விடுகிறது.

(முற்றும்)

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப்  & ‘சமநிலைச் சமுதாயம்’

A. H. Hatheeb Sahib
16, Mohideen Palli Street, Nagore – 611002
Tel : 0365 250218, Mob : 9944884080

E- Mail : hatheeb@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: