பயங்கரவாதம்: இஸ்லாத்தின் எதிரி

பயங்கரவாதம்: இஸ்லாத்தின் எதிரி 
ஏ.ஹெச். ஹத்தீப்

  ‘இஸ்லாம், அகிம்சையையும் அன்பையும் போதிக்கிற ஓர் உன்னத மார்க்கம்’ என்பதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ‘அது ஒரு வன்முறை மதம்’ என்று உலகத்தின் மாபெரும் சக்திகள் அனைத்தும் ஒன்று திரண்டு செய்த ஓயாத பிரச்சாரம், அப்பாவி மக்களிடையே ஓரளவுக்கு ஊடுருவிப் பரவி நிற்கிறது என்பதைக் கூறும்போது முஸ்லிம்களுக்குச் சுர்ரென்று கோபம் பொத்துக் கொண்டு வருவதில் ஒரு புண்ணியமுமில்லை.அவர்களது கோபமும் கொந்தளிப்பும்கூட முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்திற்கு துணை புரிவதாகவே அமைந்துவிடுகின்றன. அந்த வஞ்சகத்தைகூடப் புரிந்துகொள்ள முடியாமல் ஓர் அறிவு சார்ந்த சமூகம் இருட்டில் துழாவிக் கொண்டு நிற்கிறது. ‘திருக்குரான் வன்முறையைத் தடுக்கிறது’ என்று வெறுமனே கூறி ஆதாரத்துக்கு அதன் அத்தியாயங்களையும் பக்கங்களையும் புரட்டிக் காட்டுவதால் மட்டும் ‘நான் அமைதிப்பித்தன்’ என்பதை நிரூபித்துவிட முடியவே முடியாது. சர்வதேச சமுதாயத்தின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் முழுமையாக இழந்துவிட்ட முஸ்லிம்கள், உலகத்தை ஒரே குடையின்கீழே கொண்டு வருகிற விடாமுயற்சிக்குப் பெருமளவில் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

  ‘இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்’ என்ற பதாகைகளைக் கையில் பிடித்துக்கொண்டே வன்முறை வெறியாட்டத்தில் இறங்குகிற மார்க்க இளைஞர்களோ மதப்பிரச்சாரகர்களோ இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் அதன் பரவலுக்கும் எந்தவகையில் உதவி புரியப்போகிறார்கள் என்பது பெரும்பாலும் முஸ்லிம்களுள் இருக்கிற பெரும்பான்மையினருக்குக்கூடப் புரிவதில்லை. இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிற முயற்சிகளுக்கு இத்தகைய வன்முறைகள் ஒரு விழுக்காடுகூட உதவி செய்யாது என்பது மட்டுமே நிதர்சனம்.

  அதனாலேயே முஸ்லிம்களைக் கண்டாலே முகம் சுளிக்கிற ஓர் இழிநிலை நாடெங்கிலும் உருவாகிவிட்டது. மிகமோசமான வன்முறைச் சூழலில் நமது இந்தியப் பன்முகச் சமூகம் சிக்கித் தவிக்கிறபோது, இஸ்லாம் மட்டும் தடைகளை உடைத்துக் கொண்டு வளர வேண்டும் என்று விரும்புவதோ அல்லது குறைந்தபட்சம் சாதுத்தன்மையுடன் பரிணமிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அறிவார்ந்த செயலல்ல. பகுத்தறியும் சம மனநிலைக்கு வெகுஜனம் வந்தாலொழிய அவர்களது முகம் இஸ்லாத்தின் பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. வன்முறையால் அனைத்தையும் சாதித்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான சிந்தனையும் நம்பிக்கையுமே இஸ்லாம் சார்ந்தவையல்ல. ஒரு சிலரின் வன்முறைப் போக்கால் ஒரு சமூகம், இன்னொரு சமூகத்தைப் பார்த்துக் கடுஞ்சினம் கொள்கிறபோது, அதைச் சமாளிக்கவோ எதிர்கொள்ளவோ முடியாமல் எல்லோருமே மூச்சு திணறுவது துல்லியமாகத் தெரிகிறது.

  நரேந்திரமோடி புரிந்த வன்செயலுக்காக இந்து மதத்தையோ இந்துக்களையோ இடித்துரைப்பது அறிவீனம். பிரகாஷ் புரோகித் என்ற ராணுவ உயரதிகாரி ‘மலேகான்’ சதியில்  ஈடுபட்டார் என்பதற்காக ஒட்டுமொத்த ராணுவக் கட்டமைப்பையே சுட்டுவிரல் நீட்டிக் குற்றம் சுமத்துவது முற்றிலும் குற்றம். சன்னியாசினிகள் உமாபாரதியோ பிரக்யாவோ உலகத்தைப் பார்த்து  “சகோதரா!” என்றழைத்த சுவாமி விவேகானந்தரின் வாரிசுகள் என்று உரிமை கோர முடியாது. சூலமேந்துவதும் இதரச் சமூகத்துக்கெதிராகச் சூளுரைப்பதும் நிஜமான சமயவாதிகளுக்கு இருக்கக்கூடாத துஷ்டகுணங்கள். அவர்களின் செயல்களில் நிறைய பொய் கலந்து கிடக்கிறது. நிறையப் போலி காணக்கிடக்கிறது. நிறைய மதவிரோத மனமாச்சர்யங்கள் குவிந்து கிடக்கின்றன.

  முற்றிலும் மாறுபட்ட இன்னொரு கோணத்திலும் பார்ப்பது நல்லது:

  பெயரிலேயே அன்பையும் அமைதியையும் வைத்துக்கொண்டு அங்காடிகளிலும் இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பறிப்பதும் நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பிணயத்தொகை கேட்பதும் பயங்கரவாதிகளை விடுவிக்கக் கோருவதும் இஸ்லாம் சார்ந்த பணிகளா? “ மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள் ” என்று மார்க்கமோ நபிகட் திலகமோ ஒருபோதும் வலியுறுத்தியதில்லையா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும் ஒன்றுமறியா பெண்களும் கொத்துக் கொத்தாகச் செத்து மடிவதை வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது?

  – இது போன்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு முஸ்லிம் சமுதாயம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.

  மனிதர்களை நேசிக்காத எந்த மதமும் நாளடைவில் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடும். எந்தச் சித்தாந்தம் மங்கிக்கொண்டும் மறைந்துகொண்டும் வருகிறதோ அவையனைத்தும் எந்த மகோன்னதச் சரக்குமில்லாத போலிக் காலிக்குடங்கள். ஒரு தத்துவம் காலத்தைக் கடந்து வாழ வேண்டுமானால் அதற்குச் செரிவூட்டப்பட்ட உயிரணுக்கள் வேண்டும். மனிதர்களின் இரத்தத்தை. வார்த்து ஒரு மதத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும். அல்லது உணர்ந்தவர்கள் உணர்த்த வேண்டும். இத்தகைய மனிதகுலப் பிரக்ஞைக்கு இப்போதைக்குக் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

  ‘நான் மதத்தைக் காப்பாற்றப் போகிறேன்’ என்று யாராவது வீராவேசமாக வசனம் பேசினால், ‘அவர்கள் யார்?’ என்று எடை போடாமல் முதுகு தட்டிக்கொடுக்கும் குணம் மிகவும் ஆபத்தானது. யார் எதைச் சொன்னாலும் இயந்திரகதியில் ஏற்காமல், சமூகக்காப்புக் கண்ணோட்டத்துடனும், மனிதநேய அணுகுமுறையுடனும் பிரச்னையை அலசுவது ஒன்றே இஸ்லாம் மற்ற மதத்திலிருந்து தனித்தது; அது ஒரு வாய்ப்ப்பந்தல் போடாத உன்னத ‘வாழ்க்கைமுறை’ என்பதை நிரூபிக்க உதவும். போகிறப்போக்கைப் பார்த்தால் நல்லிணக்கம்-மனிதநேயம் என்பதெல்லாம் பழங்காலத்துச் சொற்களாகிவிடுமோ என்ற அச்சம் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயல், தீவிரவாத வன்செயலைவிட அபாயகரமானது; காற்று மண்டலத்தில் விஷத்தைக் கலப்பதற்கு ஒப்பானது.

  மனிதர்கள் வாழும் நிலப்பரப்பில் தத்தமது மதநிறத்தவர்களை மட்டும் அடையாளம் காணத் தேடுவது இப்போதெல்லாம் வெகுசகஜம்.

இது சாத்தியமில்லை என்று தெரிந்தோ என்னவோ மார்க்க அடையாளங்கள் ஒரு வணிக ரீதியில் தரிக்கப்படுகின்றன. குண்டுவெடிப்புகளை வெள்ளிக்கிழமை நிகழ்த்தினால் முஸ்லிம்கள் சாகமாட்டார்கள் என்று கணிப்பதும், முஸ்லிம்கள் குடியிருப்புப் பகுதியில் வன்முறை வெடித்தால் இந்துக்கள் கொல்லப்படமாட்டார்கள் எனக் கணக்கிடுவதும் ‘தப்பு’ என்று அனேக இடங்களில், அனேக சந்தர்ப்பங்களில் நிதர்சனமாகத் தெளிவாகிவிட்டபின்னரும் எங்கும் மனமாற்றம் நிகழவில்லை. உள்ளத்தைச் செம்மை பாடுத்தாத அல்லது தூய்மை படுத்தாத எந்தச் செயலுக்கும் இஸ்லாத்தின் அனுமதி கிடையாது வெறும் வார்த்தைகளால் கூறுவதை விடுத்துவிட்டு அரிய பல காரியங்களால் நிரூபிக்க முயற்சித்தாலன்றி
இஸ்லாம் பற்றிய கசப்பான உருவகத்தை மற்றவர்கள் மனதிலிருந்து அழிக்க முடியாது. அப்படியோர் அதிசயமான மனமாற்றத்தால் மட்டுமே இஸ்லத்தின் வளர்ச்சியையும் அதன் துரிதப் பரவலையும் சாதிக்க முடியும். ‘வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்’ என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இதயங்களை அளக்கத் தெரிந்த இஸ்லாமிய மார்க்க மாமேதைகள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்த்துவிட்டு அவர்களது பாதையைத் தொடர்வது ஒன்றே சிறந்த வழி. துரதிருஷ்டவசமாக இன்றைய மார்க்க அறிஞர்கள் அன்றைய இஸ்லாமிய மாமேதைகளுடன் மனக்கசப்புக் கொண்டிருப்பதுகூட ஒருவகையில் முட்டுக்கட்டைதான்.

இன்றைய மார்க்க மகான்களின் செயற்பாடுகள் இஸ்லாத்தை வளர்ப்பதைவிட அதனைப் பின்னடையச் செய்வதில் அதிகம் ஒத்தாசை புரிந்துகொண்டிருக்கிறது.

  அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற மேலைநாடுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு யூதர்களே கவலையடைந்திருக்கிறார்கள். அங்கெல்லாம் அரசை நிர்மானிப்பதில் முஸ்லிம்களின் பங்கு கணிசமானது. கிறிஸ்துவத்தின் பின்னடைவைவிட இஸ்லாத்தின் வளர்ச்சி அவர்களது வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது.இந்த அதிசயங்களெல்லாம் ஓர் அந்நிய பூமியில், ‘இஸ்லாத்தைப் பரப்புகிறேன்’ என்று யாரும் வீரதீர முழக்கங்கள் புரியாமலேயே நிகழ்ந்திருக்கின்றன. ஒரு சித்தாந்தம் தடையின்றி வளர்வதற்கு அதை ஒழுங்குடன் பின்பற்றுகிற எளிய மனிதர்கள் இருந்தால் போதும்; மைக்கைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்கிலே சொற்சிலம்பம் பண்ணவேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்படி அதிகப்பிரசங்கித்தனம் காட்டிய இடத்திலெல்லாம் இஸ்லாத்தின் இயல்பான வீச்சு முனை மழுங்கிக் கிடப்பதைக் காண முடிகிறது.

  பின்னே எதற்கு இந்த வெறியாட்டம்? வீண் வேலை?

  ‘பயங்கரவாதம்’ என்ற வார்த்தையே சகஜமாக வழக்குக்கு வந்தது, 9/11க்குப் பிறகுதான். தீவிரவாதம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்ததும் அங்கிருந்துதான். நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் அடியோடு சாய்ந்ததற்குக் காரணம் பயங்கரவாதமா அல்லது அதிகாரப் பயங்கரவாதத்திற்கெதிரான தாக்குதலா என்பதே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. “ வர்த்தக மையத் தாக்குதல் ஒஸாமாவின் சதித்திட்டம் என்று அமெரிக்க அரசாங்கம் கூறுவது முற்றிலும் கட்டுக்கதை” என்று வேறொரு புதுக்கதையைப் புள்ளி விவரங்களோடு விவரிக்கிறார் ப்ரைன் டேஸ்பரோ என்ற நூலாசிரியர். அந்தப் பயங்கரச் சம்பவத்தை, தங்களது இஸ்லாம் எதிர்ப்புக்கும் எண்ணெய் வளச் சுரண்டலுக்கும் மேற்கத்திய உலகம் நன்குப் பயன்படுத்திக்கொண்டது என்பதை நம்புவதற்குச் சாதகமான போதிய காரணங்களுண்டு.

  அதிபர் புஷ் ஒரு நவீன கோயபல்ஸ். ‘சாதுமீது ஒரு ஷைத்தான் பாய்ந்தான்’ என்று உலகை நம்ப வைப்பதில் வல்லவர்.ஆனால் அவர் பரப்பிய கட்டுக்கதை பூதாகரமாக வளர்ந்து உலகத்தின் அமைதியையும் சுபிட்சத்தையும் பெருமளவுக்குச் சிதைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பூதத்தை உருவாக்கியவர்களே அதன் மாயவலைக்குள் சிக்குண்டு நிம்மதியற்றுத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் எதார்த்தம். அவர்கள் எதிர்பார்த்த பலனைவிட துர்லாபமே அதிகம்.

  இருமுனையும் கூரான தீவிரவாதத்தைப் பிடித்தவர்கள்-எய்தவர்களும் அதைத் தடுப்பவர்களுமே-இன்றைக்குச் சொல்லொண்ணாச் சோகத்தையும் சேதத்தையும் அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற இயல்பான பாதையிலிருந்து விலகி, ‘வாழ்வது சாவதற்கே’ என்று விரும்பியோ விரும்பாமலோ கட்டாயச் சபதமேற்க வேண்டிய நிலைக்கு மனிதகுலம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த இடத்திலிருந்து ஏவுகணைகளை இயக்கினால் எதிரியின் கூடாரத்துக்கூரையின்மீது விழுந்து நாசத்தை ஏற்படுத்தும் என்று துல்லியமாக வகுத்த வல்லுநர்களெல்லாம் பயங்கரவாதத்தைக் கண்டுக் கலகலத்துப் போயிருக்கிறார்கள். தீவிரவாதத்தின் அடுத்த பரிணாமம் ஒருவேளை ரசாயன உயிர்கொல்லி ஆயுதப் பயன்பாடாக இருக்குமோ என்றஞ்சி செய்வதறியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் என்பதே நிஜம்.

  இதல்ல இஸ்லாம். இதைச் செய்வதற்கு இஸ்லாம் தேவையில்லை.

**

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

A. H. Hatheeb Sahib
16, Mohideen Palli Street, Nagore – 611002
Tel : 0365 250218, Mob : 9944884080

5 பின்னூட்டங்கள்

 1. planivel said,

  29/07/2009 இல் 07:31

  mathankalin peyaral silar seyyum aduliyangalukku anthanaykale anupaviparkal 9/11, malokan ithupontravai santru ,ulagathi entha mulaliyi ethu natanthalum atharkku islam than karanam enpathai vanmayaka nan kandikiren. islam than karanam entral atharkku entha vitha atharngalaiyum katta matikirarkal atharam illatha onru poithane.

 2. palanivel said,

  29/07/2009 இல் 07:33

  அதிபர் புஷ் ஒரு நவீன கோயபல்ஸ் 100% unmai
  பயங்கரவாதம்’ என்ற வார்த்தையே சகஜமாக வழக்குக்கு வந்தது, 9/11க்குப் பிறகுதான். தீவிரவாதம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்ததும் அங்கிருந்துதான் illai sir annal ganthi entru suddu kontrarkalo antre vanthuvidathu thiviravaatham malegan mumbai pontra thakuthalakal athan thodarchiye

 3. தாஜ் said,

  30/07/2009 இல் 19:06

  //ஓர் அறிவு சார்ந்த சமூகம் இருட்டில் துழாவிக் கொண்டு நிற்கிறது. ‘திருக்குரான் வன்முறையைத் தடுக்கிறது’ என்று வெறு மனே கூறி ஆதாரத்துக்கு அதன் அத்தியாயங்களையும் பக்கங்களையும் புரட்டிக் காட்டுவதால் மட்டும் ‘நான் அமைதிப்பித்தன்’ என்பதை நிரூபித்துவிட முடியவே முடியாது.//

  //‘இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்’ என்ற பதாகைகளைக் கையில் பிடித்துக்கொண்டே வன்முறை வெறியாட்டத்தில் இறங்குகிற மார்க்க இளைஞர்களோ மதப்பிரச்சாரகர்களோ இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் அதன் பரவலுக்கும் எந்தவகையில் உதவி புரியப்போகிறார்கள் என்பது பெரும்பாலும் முஸ்லிம்களுள் இருக்கிற பெரும்பான்மையினருக்குக்கூடப் புரிவதில்லை. இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கிற முயற்சிகளுக்கு இத்தகைய வன்முறைகள் ஒரு விழுக்காடுகூட உதவி செய்யாது என்பது மட்டுமே நிதர்சனம்.//

  //வன்முறையால் அனைத்தையும் சாதித்துவிடலாம் என்ற குருட்டுத்தனமான சிந்தனையும் நம்பிக்கையுமே இஸ்லாம் சார்ந்தவையல்ல. ஒரு சிலரின் வன்முறைப் போக்கால் ஒரு சமூகம், இன்னொரு சமூகத்தைப் பார்த்துக் கடுஞ்சினம் கொள்கிறபோது, அதைச் சமாளிக்கவோ எதிர்கொள்ளவோ முடியாமல் எல்லோருமே மூச்சு திணறுவது துல்லியமாகத் தெரிகிறது.//

  //பெயரிலேயே அன்பையும் அமைதியையும் வைத்துக்கொண்டு அங்காடிகளிலும் இரயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகளை வீசுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பறிப்பதும் நியாயம்தானா? விமானங்களைக் கடத்திப் பிணயத்தொகை கேட்பதும் பயங்கரவாதிகளை விடுவிக்கக் கோருவதும் இஸ்லாம் சார்ந்த பணிகளா? “ மனிதர்களிடம் நீதியுடனும் நேசத்துடனும் நடந்துகொள்ளுங்கள் ” என்று மார்க்கமோ நபிகட் திலகமோ ஒருபோதும் வலியுறுத்தியதில்லையா? ஒரு பாவமும் செய்யாத பச்சிளங்குழந்தைகளும் ஒன்றுமறியா பெண்களும் கொத்துக் கொத்தாகச் செத்து மடிவதை வெறுமனே நின்று வேடிக்கை பார்க்கத்தானா இஸ்லாம் கூறுகிறது? இது போன்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு முஸ்லிம் சமுதாயம் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.//

  //மனிதர்களை நேசிக்காத எந்த மதமும் நாளடைவில் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடும்.//

  //‘நான் மதத்தைக் காப்பாற்றப் போகிறேன்’ என்று யாராவது வீராவேசமாக வசனம் பேசினால், ‘அவர்கள் யார்?’ என்று எடை போடாமல் முதுகு தட்டிக்கொடுக்கும் குணம் மிகவும் ஆபத்தானது.//

  //போகிறப்போக்கைப் பார்த்தால் நல்லிணக்கம்-மனிதநேயம் என்பதெல்லாம் பழங்காலத்துச் சொற்களாகிவிடுமோ என்ற அச்சம் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. இத்தகைய கொடுஞ்செயல், தீவிரவாத வன்செயலைவிட அபாயகரமானது; காற்று மண்டலத்தில் விஷத்தைக் கலப்பதற்கு ஒப்பானது.//

  //‘வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்’ என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இதயங்களை அளக்கத் தெரிந்த இஸ்லாமிய மார்க்க மாமேதைகள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்த்துவிட்டு அவர்களது பாதையைத் தொடர்வது ஒன்றே சிறந்த வழி.//

  //துரதிருஷ்டவசமாக இன்றைய மார்க்க அறிஞர்கள் அன்றைய இஸ்லாமிய மாமேதைகளுடன் மனக்கசப்புக் கொண்டிருப்பது கூட ஒருவகையில் முட்டுக்கட்டைதான்.//

  //இன்றைய மார்க்க மகான்களின் செயற்பாடுகள் இஸ்லாத்தை வளர்ப்பதைவிட அதனைப் பின்னடையச் செய்வதில் அதிகம் ஒத்தாசை புரிந்துகொண்டிருக்கிறது.//

  //ஒரு சித்தாந்தம் தடையின்றி வளர்வதற்கு அதை ஒழுங்குடன் பின்பற்றுகிற எளிய மனிதர்கள் இருந்தால் போதும்; மைக்கைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்கிலே சொற்சிலம்பம் பண்ணவேண்டிய அவசியமில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்படி அதிகப்பிரசங்கித்தனம் காட்டிய இடத்திலெல்லாம் இஸ்லாத்தின் இயல்பான வீச்சு முனை மழுங்கிக் கிடப்பதைக் காண முடிகிறது.//

  //இந்த இடத்திலிருந்து ஏவுகணைகளை இயக்கினால் எதிரியின் கூடாரத்துக்கூரையின்மீது விழுந்து நாசத்தை ஏற்படுத்தும் என்று துல்லியமாக வகுத்த வல்லுநர்களெல்லாம் பயங்கரவாதத்தைக் கண்டுக் கலகலத்துப் போயிருக்கிறார்கள்.//

  **
  ஏ.ஹெச்.ஹத்தீப் அவர்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும்!

  ‘எதற்கெடுத்தாலும் அமெரிக்காவே வில்லன்’ என்கிற பிரபலமான பொதுக் கூப்பாட்டை, அறியவராத விடைகளுக்கெல்லாம் பதிலாக்குவது என்கிற ஒன்றைத் தவிர, ஏ.ஹெச்.ஹத்தீப் அவர்களின் இந்தப் பக்க சிந்தனை வீச்சை என் மனசாட்சியின் குரலாகவே கேட்டேன்! பூரித்துப் போனேன்!!

  ஏ.ஹெச்.ஹத்தீப் அவர்களுக்கும்/ பதிவேற்றிய ஆபிதீனுக்கும்
  ஆயிரம் ஆயிரம் சலாம்!

  – தாஜ்

 4. நே.கு said,

  07/08/2009 இல் 00:22

  அங்கங்கே சில இடங்களில் நெருடினாலும், பொதுவாக நல்ல கட்டுரை. பதிப்பித்து கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி.

  • abedheen said,

   12/08/2009 இல் 06:01

   நண்பர் நே.கு, நெருடுவதை எழுதியனுப்புங்கள். அதையும் பதிகிறேன். உங்களின் வலைப்பக்கத்தில் பதிந்தால் சுட்டியை இங்கே கொடுங்கள். நன்றி.
   – ஆ! –


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: