கம்யூனிஸ்ட்களின் மாறுவேடம் – ஏ.ஹெச். ஹத்தீப்

ஜனவரி – 2009, ‘சமநிலைச் சமுதாயம்’ மாத இதழில் வெளிவந்த கட்டுரை
**

கம்யூனிஸ்ட்களின் மாறுவேடம் – ஏ.ஹெச். ஹத்தீப்

ஆஹா ஓஹோவென்று வானுயரப் புகழ்ந்த அரசியல் சித்தாந்திகளையெல்லாம் தலை குப்புற இடறிவிடுகிற பனிச்சறுக்கு மைதானமாக இன்றைய அரசியல் அரங்கங்கள் உருமாறிவிட்டன – ஆடத் தெரியாதவளுக்கு முற்றம் கோணல் என்பதுபோல. காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற பூதாகரமான கட்சிகளின் நிறங்களும் குணங்களும் அடிக்கடி மாறிக் கொண்டு வருவது, ஒரு நித்திய அப்பியாசமாகிவிட்டது. ஒரு கட்சி, ‘ தேசத்தை இயக்குவது நானே ’ என்று பீற்றிக் கொள்வதும், இன்னொரு கட்சி ‘ தேசம் என் தலையில்தான் இயங்குகிறது ‘ என்று பூர்வகோத்ரம் பேசுவதும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. வெகுநாளைய சகவாசம். இத்தகைய கட்சிகளின் ஸ்தரமற்ற சிந்தனைகள், வெறும் முழக்கங்கள், பொய்யான வாக்குறுதிகள், முரண்பாடான செயல்பாடுகள் ஆகியவற்றை தினந்தோறும் அரசியலில் பார்த்துப் பார்த்து மக்களுக்குப் புளித்துப்போய்விட்டது. அவர்கள் அப்படித்தான். மாற்ற நினைப்பது அறிவீனம்.

ஆனால் ஓரளவுக்கு இந்திய அரசியலைப் புரிந்து கொண்டவர்களுக்கு மத்தியில், கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஓர் உயர்ந்த எண்ணம் சமீபகாலம்வரை சாஸ்வதமாக இருந்து வந்திருக்கிறது. அவர்களுடைய அரசியல் பாணியே தனி. மனிதர்களைச் சாராமல், சித்தாந்தங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த அவர்களது அபாரமான மனப்போக்கில் சமீபகாலமாக ஏகப்பட்ட கிழிசல்கள். இந்தியா மட்டுமின்றி உலகமே எதிர்த்து நின்ற எமர்ஜென்ஸியைக்கூட நல்ல பல காரியங்கள் நடந்தேறிய காரணத்துக்காக முழுக்க முழுக்க ஆதரித்தவர்கள் அவர்கள். காங்கிரஸ்காரர்களைவிட இந்திரா காந்தி கம்யூனிஸ்டுகளை நம்பியிருந்த காலம் என்று ஒன்று இருந்தது.

இப்போது எல்லாமே தலைகீழ்.

எதனால்? என்ன காரணம்? அப்போதைக்கும் இப்போதைக்குமுள்ள தலைவர்களின் உருவ மாறுதலா? தத்துவார்த்த முரண்பாடா? பல தேசிய விஷயங்களில் சரியான முடிவெடுக்க முடியாமல், தண்ணீருக்குள் மூழ்கினால்போல் அவர்கள் திணறுவதற்கு என்ன காரணம்?

“ பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் அடிவருடியாக மாறிவிட்டார். அதனால்தான் உருப்படாத அணுசக்திக் கொள்கையை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளார் ” என்று நேற்றுச் சொன்னார்கள். இன்றைக்கோ “ அவர் இலங்கையின் பிதாமகன். தமிழர்களின் துரோகி. அவரைப் பதவியை விட்டு அப்புறப்படுத்தியே தீர வேண்டும் ” என்று புழுதியை வாரியிறைக்கிறார்கள். கடந்த நான்காண்டுவரை ‘எக்ஸ்டா காண்ஸ்டிட்யூஷனல் அதாரிட்டி’ யாக நாட்டை வளம் வந்தவர்களுக்கு பிரதமரின் அமெரிக்கா சார்பு ஏன் தெரியாமல் போனது? அமெரிக்காவின் அணுசக்தி வேண்டாமென்றால் ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. அணுசக்தியே தேவையில்லை என்பதைச் சத்தியமாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

சராசரி இந்திய வெகுஜனங்களால் புரிந்துகொள்ள முடியாத பல கொள்கைகளுக்கு இப்போதைய கம்யூனிஸ்டுகள் சொந்தக்காரர்கள். முன்பெல்லாம் ஏழை எளியோரின் கட்சி என்ற படித்தரம் தாழ்ந்து, “ இப்போது டாடாவும் வேண்டும்; ஆட்டாவும் வேண்டும் ” என்று அரற்றிக் கொண்டிருக்கிறார்கள். கார் தயாரிப்புக்களுக்கு ஆதரவு தந்துவிட்டு, கோதுமை விவசாயத்திற்குக் கைகளை விரிக்கிற அளவுக்குக் கட்சியின் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி விழுந்துவிட்டது.

தமிழகத்தில்கூட அதுபோன்ற அசம்பாவிதங்களை நிறைய அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். “மதவாதக் கட்சியான பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது ” என்று சூளுரைத்துக் கொண்டே “ மூன்றாவது அணி அமைப்போம் ” என்று குழப்புகிறார்கள். மூன்றாவது அணி அமைப்பது எப்படி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஆகுமென்று சாமான்யன் புரிந்துகொள்கிற மாதிரி விளக்குவதுமில்லை. மூன்றாம் தர அரசியல் கட்சிகள் மாதிரி கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்புக் காரணமாக போயஸ் தோட்டக் கதவுகளைத் தட்டுவது எப்படி இலங்கைத் தமிழனுக்கு உதவுவது ஆகுமென்று தலையைப் போட்டுப் பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மன்மோகன் சிங் இலங்கைத் தமிழர்களின் விரோதியாக மாறிவிட்டாரா? அதற்கல்லவோ இடதுசாரிகள் அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்க வேண்டும்? அதைவிடுத்துவிட்டு அணுசக்திப் பிரச்னையை ஏன் கையிலெடுத்துக் கொண்டது?

செல்வி ஜெயலலிதா என்றைக்குமே அவரது நிலைப்பாட்டில் நிலையானவர். சிறுபான்மையினர் விஷயத்திலாகட்டும்; அல்லது இந்துத்துவா பிரச்னையிலாகட்டும் அவரது கொள்கை உள்ளங்கை நெல்லிக்கனி. அவரது கோபக்கனலில் தீய்ந்து போகாத அரசியல் தலைவர்கள் கிடையாது. பல தருணத்தில் கம்யூனிஸ்டுகளே அவரது சுடுமொழி பட்டு வெந்து போயிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் தனது கருத்தை ஜெயலலிதாவைத் தவிர வேறெந்தத் தலைவரும் மிகத் தெளிவாக வெளியிட்டதில்லை எனலாம்.

“ அவரை நாங்கள் திருத்திக் காட்டுவோம் ” என்று தமிழகக் கம்யூனிஸ்ட்காரர்கள் சூளுரைப்பது 2008ம் வருடத்திய மிகச் சிறந்த ஜோக் என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனானப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாயையே தமிழகத்துக்கு அறிமுகம் செய்தவர் என்று தன்னைச் சுயப்பிரகடனம் செய்துகொண்டவர் ஜெயலலிதா. ராஜீவ் காந்தியிலிருந்து இன்றைய ராஹுல்வரை அவரது முகச்சுளிப்புக்கு ஆளாகாதவர்கள் யாருமில்லை.

“ இலங்கைத் தமிழர்ப் பிரச்னையில் எங்களது கருத்தை செல்வி ஜெயலலிதாவை ஏற்க வைப்போம் ” என்று தா.பாண்டியன் போன்ற பழுத்த அரசியல்வாதிகள் கூறுவது அபத்தமாகவும் அற்பமாகவும் தெரிகிறது. “ தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் எங்கே இருக்கிறார்கள்? ”  என்று நையாண்டி செய்தவர் அவர். அவரைப் போய் இவர் டிக்டேட் செய்வதாவது? ஒரு தடவை சூடு பட்டால் ஜென்மத்துக்கும் நினைவிருக்க வேண்டாமோ? அதுவும் சுயமரியாதைக்கார இடதுசாரிகளுக்கு?

அவருடன் தேர்தல் உறவு வைத்துக் கொள்வதற்காக ‘வானத்தை வளைக்கப் போகிறோம்-பூமியை இழுக்கப் போகிறோம்’ என்று செயற்கையாக வசனம் பேசுவதைத் தமிழக கம்யூனிஸ்ட்கள் நிறுத்த வேண்டும். முன்பெல்லாம் அரசியலை வெகு சீரியஸாகப் பேசி வந்தவர்கள், இப்போது ஏன் நகைச்சுவைப் பொருளாக மாற்றிவிட்டார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கி தவிப்பவர்கள்தான் அதிகம். தான் பழி வாங்க விரும்புவது காங்கிரஸையா அல்லது கலைஞரையா என்பதை அவர்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை போலும்! பாரதீய ஜனதாவைப் பதவிக்கு வரவிடாமல் ஒழிப்போம் என்பதெல்லாம் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற பழங்கதை.

இடதுசாரிகளுக்கு, ஈழத் தமிழர்கள் புனர்வாழ்வு பெற வேண்டுமா? உண்மையான நோக்கம் அதுவாக இருப்பின், இதர பூசல்களை ஒத்தி வைத்துவிட்டு அண்ணா அறிவாலயத்துக்குத்தான் கம்யூனிஸ்ட்கள் சென்றிருக்க வேண்டும். கொள்கைக்காக விரோதியை நெருங்க மனம் இடந்தரவில்லையா? அப்புறம் இந்தப் பிரச்னையில் கை கொடுக்கவும் தேவைப்பட்டால் வானத்துக்கும் பூமிக்கும் எம்பிக் குதிக்கவும் இருக்கவே இருக்கிறார்கள் டாக்டர் ராமதாசும், வைகோவும், திருமாவளவனும். அவர்களுடன் கை குலுக்கிக் கொண்டாலாவது அர்த்தமிருக்கிறது. ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. அதை விடுத்துவிட்டு, இந்த விஷயத்தில் நேர் மாறான கருத்து கொண்டுள்ள செல்வி ஜெயலலிதாவை ‘மாற்ற நினைப்பது’ என்ன அரசியல்? போகட்டும். அவர் மாறிவிட்டாரா? அதற்கான அறிகுறியோ அடையாளமோ இன்றுவரை அவரிடமிருந்து வெளிப்படவில்லையே? குறைந்த பட்சம் தமிழர்களுக்கு உதவிப் பொருள்கள் அனுப்புகிற முயற்சியில்கூட அவர் போதிய முனைப்பு காட்டாதபோது தமிழர்களுக்காக வீதியில் இறங்கிப் போராடுவார் என்று எதை வைத்து நம்புகிறார்கள்?

“ கருணாநிதி இப்போது பலவிதப் பிரச்னைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார். விலைவாசி, சட்டம்-ஒழுங்கு, குடிதண்ணீர், மின்வெட்டு, பந்தப்பாசத் தகராறு போன்ற சமாச்சாரங்கள் காரணமாக தி.மு.க. மூழ்கிக் கொண்டிருக்கிறது. இப்போது போய்க் கூட்டணி வைப்பது, தெரிந்தே புதைகுழியில் குதிப்பதற்குச் சமம். தவிர இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸுடன் கை கோர்த்துக் கொண்டு எங்களோடு உலா வர முடியாது. எனவே ஜெயலலிதாவுடன் தோழமை ” என்று கூறினால், கம்யூனிஸ்ட்காரர்கள் இக்கட்டான நேரத்தில்கூட உண்மை பேசுவதை நிறுத்தாதவர்கள் என்ற நல்லப் பெயராவது எடுக்க முடியும்.

இப்போது ‘ரொம்ப நல்லவன்’ என்ற அடைமொழியும் போய்விட்டது.

இந்திய அரசியல் மன்றம் வெப்பமயமானதற்கு ஒருவகையில் இடதுசாரிகளும் காரணம். இப்போது அவர்களே அதில் சிக்கி மூச்சுத் திணறுவது தெளிவாக நாடெங்கும் எதிரொலிக்கிறது.

**

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

A. H. Hatheeb Sahib
16, Mohideen Palli Street, Nagore – 611002
Tel : 0365 250218, Mob : 9944884080

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: