ஜின்னாவும் விடுதலையும் – ஏ.ஹெச். ஹத்தீப்

jinna_gandhi

இந்திய விடுதலையில் ஜின்னா
ஏ. ஹெச். ஹத்தீப்

**

2008ஆம் ஆண்டைய ‘சமநிலைச் சமுதாயம்’ சுதந்திர தினச் சிறப்பிதலிருந்து.

**


தேச விடுதலை என்பது ஒரு மதத்தின் சொத்தோ அல்லது ஓரினச் சொந்தமோ அல்ல. நெடுநாளைய  சுதந்திரப் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கவிருந்த சமயத்திலே  காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களில் சிலர்  தங்களுக்குள்ளே ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்பாட்டின் பின்னணியில் நிறைய பிணக்குகள் உண்டு. பிரிட்டிஷ் பேரரசியின் பேரன் மவுண்ட்பாட்டன் இந்தியாவில் காலடி பதித்தபோதே ‘சுதந்திரம் உறுதி’ என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது. கடுமையான சோதனைகள் மிகுந்த ஆறாண்டுகள், அதாவது மூன்று தடவை அகில இந்திய காங்கிரசின் தலைவராக வீற்றிருந்த மௌலனா அபுல் கலாம் ஆஸாத்தைப் பதவியிலிருந்து தூக்கியெறிந்துவிட்டு, நேருவை அக்ராசனர் நாற்காலியில் அமர வைத்த இருட்டறைச்சதியில்கூட நிச்சயமாக பட்டேல் போன்றவர்களின் இரும்புக்கரச்சேவை உண்டு என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. சுதந்திரம் ஈட்டித் தந்த ஒரு கட்சியின் தலைமைப் பீடத்தில், அந்த அரிய பொக்கிஷம் கிடைக்க இருந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் வீற்றிருந்தார் என்பதே அவலம் என்றோ அபசகுனம் என்றோ நினைத்த காங்கிரஸாருக்கு அப்போது பஞ்சமில்லை. ‘வெள்ளையனுக்கு எதிராக பொங்கியெழு‘ என்று காந்திஜி அறைகூவல் விடுத்ததும் உயிரையும் மதிக்காது களத்தில் குதித்தது பட்டேலும் ராஜாஜியும் மட்டுமல்ல; அபுல் கலாம் அஸாத், கான் அப்துல் கப்பார் கான்,மௌலனா முஹம்மத் அலி சகோதரர்கள், டாக்டர் அன்சாரி, ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் அபுல் அலா மௌதூதி போன்ற மென்மையான தலைவர்களும் அவர்களின் எண்ணற்ற ஆதரவாளர்களும்கூடத்தான். இன்னும் சொல்லப் போனால் தேசத்துரோகி என்று வர்ணம் பூசப்பட்ட முஹம்மத் அலி ஜின்னாகூட இந்திய விடுதலைக்காகக் களம் கண்டவர் என்பது ஒளிக்க முடியாத வரலாற்று நிஜம். இந்திய வெகுஜனத்துக்கு இந்த உண்மை தெரியாமல் போக வேண்டும் என்பதற்காக சில துஷ்ட அறிவுஜீவிகள் செய்த சாகசத்தில் ஜின்னா என்ற ஒப்பற்ற ஒரு தேசபக்தனுக்கு ‘இராவணன்’ வேஷம் அணிவிக்கப்பட்ட சமாச்சாரம், உப்பரிகையில் நின்றுகொண்டு விடுதலைப்போரை நடத்திய மேல்வர்க்கத்துக் காங்கிரஸ்காரர்களுக்கு வேண்டுமானால் புரியாமல் போகலாம். ஆனால்  நடுநிலை மக்களுக்குத் தெரியும். பத்துக்கோடி முஸ்லிம்களின் ஒப்பற்ற தலைவனாக விளக்கிய ஜின்னாவை மிகச்சாதுர்யமாக ஓரம் கட்டிய ஓரவஞ்சனையில் பிறந்ததுதான் ‘ இரு நாடுகள் கொள்கை .‘ பிரிவினைக்காக ஜின்னாமீது மட்டும் சேற்றை வாரி இறைப்பது வக்கிரம் நிறைந்த சரித்திர ஆய்வாளர்களின் துர்ச்சேட்டைகள்.                                                                   

இங்கிலாந்தில் சட்டப் படிப்பு முடிந்ததைத்தொடர்ந்து உடனடியாக தாயகம் வந்தார் ஜின்னா. இங்கிலாந்திலேயே ஆங்கிலேயர்களின் நிறவெறிக் கொள்கையும் பாரபசட்சம்மிக்க பாசிச போக்கும் ஜின்னாவை வெகுவாக வெறுப்பேற்றிருந்தன. ஆங்கிலேயர்களை ஒரு கை பார்க்கக் குமுறிக்கொண்டிருந்தபோதுதான் , 1896ம் ஆண்டு காங்கிரஸில் இணையும்படி ஜின்னாவுக்கு அழைப்பு வந்தது.

இணைந்தார்.

ஒரு பக்கம் அன்னிபெஸ்ண்ட் அம்மையார். மறுபுறம் பால கங்காதர திலக். ஃபெரோஸ்ஷா மேத்தா,தாதாபாய் நவ்ரோஜி போன்ற ஜாம்பவான்களால் அவர் ஏற்கனவே கவரப்பட்டிருந்தார்.அப்போதெல்லாம் காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனால் வலுக்கட்டாயமாக, ஓடும் இரயிலிருந்து இறக்கிவிடப்பட்ட காலக்கட்டம். வெள்ளைக்காரர்களின் கொட்டத்தை இந்தியாவுக்குச் சென்று அடக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த சமயம்.                                                               
காந்திஜியின் இந்தியப் பிரவேசம் ஜின்னாவுக்கு மிகுந்த பலத்தையும் நம்பிக்கையையும் ஒருசேர வழங்கிற்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஜின்னாவுக்கும் காந்திஜிக்குமிடையே எவ்வளவு இறுக்கமான உறவு மலர்ந்திருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். மத அடிப்படைவாத அமைப்பில்,  அசல் ‘ராம ராஜ்ஜியம் ’ அமைக்க விரும்பியவர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டவர் ஜின்னாதான். தேசப்பிதா காந்திஜி ஜின்னாமீது கொண்டிருந்த ஆழமான பாசப்பிணைப்பைக் கண்டு முகம் சுளித்த காங்கிரஸாரில் ஒரு சிலர் வெட்டிய படுகுழியில் ஆணானப்பட்ட காந்திஜியும் நேருவும்கூட விழுந்தார்கள் என்றால், கயவர்களின் சதியிலிருந்து வேறு யார்தான் தப்பிக்க முடியும்?

 “ ஜின்னா இஸ்லாமிய நாடு அமைக்கவில்லையா? “ என்ற கேள்வி சிறுபிள்ளைத்தனமானது. அவர் இஸ்லாத்திற்கென்று தனிநாடு கேட்டார்: அமைத்தார்.  மதச்சார்பற்ற, ஜனநாயக தேசமென்று சொல்லி விட்டு மக்களை ஏமாற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபடுவதை எதிர்காலத்தை அளக்கத் தெரிந்த ஜின்னாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

 நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடுகிற உன்னதமான லட்சியங்களோடு அனேக மட்டரகமான குணங்களும் காங்கிரஸில் நிறைந்திருந்தன. தந்தை பெரியாரையும் பெருந்தலைவர் காமராஜையும் வாழ்நாள் முழுவதும் இம்சித்த ராஜகோபாலாச்சாரி போன்ற பல தலைவர்கள் புதுடெல்லியில் குழாம் அமைத்து இருந்தார்கள்.’கடவுளே இல்லை’ என்றுரைத்த திராவிடச் சாத்தான்களும், வர்ணாஸ்ரமத்தில் பிறக்காத இதர மனித ஜாதிகளும் அங்கே வந்துவிடக்கூடாது என்பதில் ராஜாஜி மிகக் கவனமாக இருந்தார்.வல்லபாய் பட்டேல்,ஆசார்ய கிருபளானி, ராஜேந்திர பிரசாத் ஆகிய சக்திமிக்க காங்கிரஸார்கள் ராஜாஜியின் குணத்தையும் கொள்கையையும் அப்படியே உள் வாங்கியவர்கள். அவர்களைப் போலவே தீவிர மதப்பற்று கொண்ட ஜின்னா, காவிமயக் கொள்கைக்குப் பொருந்தாத ஒரு பொருளாகத் திகழ்ந்ததே இந்தியாவுக்குப் பெரும் சோதனை. இந்து மகாசபையை வீழ்த்தவேண்டும் என்று கூறிக் கொண்டே அடிக்கடி உபநிஷத்து மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்த கதர் மஸ்லின்காரர்களைக் கண்டபோதெல்லாம்  காந்திஜியுடன் சேர்ந்து ஜின்னாவும் முகம் வாடிப் போனார். இரண்டாம் நிலை தலைவர்களின் சகிக்க முடியாத வாலாட்டத்திற்கும் வேலாட்டத்திற்கும் ஈடு கொடுக்க இயலாமல் சோர்ந்துபோனார். காந்தியும் நேருவும் முகத்தைச் சுளித்தும்கூட ஜின்னாமீது காங்கிரஸ் நண்பர்கள் காட்டிய அலட்சியமும் அவமானமும் அவரை நிலை குலையச் செய்திருந்த தென்னவோ உண்மை.

அந்தச் சமயத்தில்தான் முஸ்லிம்களுக்கென்று ‘முஸ்லிம் லீக்’ என்ற தனிக்கட்சியொன்று 1916ம் ஆண்டு துவங்கப்பட்டது. என்றாலும் காங்கிரஸையும் காந்தி, நேரு, திலக் போன்ற உத்தம நண்பர்களையும் விட்டு விலக மனமில்லாமல் முஸ்லிம் லீக்கில் சேர்வதை நீண்டகாலம் தவிர்த்தார் ஜின்னா.அதை நினைவு கூர்ந்தேனும் ஜின்னா ஒரு அப்பழுக்கற்ற தேசியவாதி என்பதை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டிருக்க வேண்டும். ஒரு சமயம், பால கங்காதர திலக்மீது  வெள்ளையர் ஆட்சி ராஜ துரோகக் குற்றம் சுமத்தியபோது, நீதிமன்றத்தில் ஜின்னா ஆஜரானார்.

“ தாய் மண்ணுக்கு விடுதலை கேட்பது ராஜ துரோகமா?” என்று வெள்ளைய நீதிபதியைப் பார்த்து வெடித்தார் ஜின்னா. 

 ” அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைப் படிக்காமல் நீதிமன்றம் வந்தது உமது தவறு “ என்று பழித்தார் நீதிபதி.

 ” வாழ்நாளில் நான் செய்த தவறெல்லாம் இங்கிலாந்தில் லின்கன்ஸ் இன்னில் படித்ததுதான். போகட்டும். திலக் தேசத்துரோகி இல்லை. நாட்டுக்காகப் போராடுவது ராஜத்துரோகமென்று உங்கள் சட்டத்தில் எங்குமில்லை “ என்று சாமர்த்தியமாக வாதாடினார். அன்றையிலிருந்து திலகருக்கும் ஜின்னாவுக்குமிடையே ஆழமான நட்பு மலர்ந்தது. நேசத்திற்குரிய அத்தனை பேரையும் உதறிவிட்டு முஸ்லிம் லீக்கிற்குள் அவர் அடியெடுத்து வைத்ததற்குக் காரணம் நெருக்கடி மட்டுமல்ல; காங்கிரஸுக்கும் லீக்குக்குமிடையே ஒரு பலமான பாலத்தை நிறுவவேண்டுமென்ற தணியாத ஆசையும்கூட என்பது அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளிலிருந்து தெளிவாயிற்று. அப்படியும்கூட அவர் 1920ம் ஆண்டுதான் லீக்கில் இணைந்தார். 

அப்போதெல்லாம் அவர் உயர்ரக அமைப்பான இம்பீரியல் சட்டமன்றத்தின் உறுப்பினர். ஐரோப்பியர்களும் ராஜபுத்திரர்களும் அங்கம் வகித்த அந்தச் சபைக்குள் அவர் நுழைந்ததன்மூலம் அரசாங்கத்தின் பெரும் மதிப்புக்கும் அன்புக்கும் அருகதையாகி இருந்தார். அதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டுத்தான் அவர் முஸ்லிம் லீக்கில் சேர வேண்டியதாயிற்று. ஜின்னாவின் தலைமையில் செயல்பட்ட லீக்கிற்கும் காங்கிரஸுக்குமிடையே வலுவான உறவு பரிணமித்ததை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. ஜின்னாவின் தலைமையிலான முஸ்லிம் லீக்கும், காங்கிரஸும் பல போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்தின.

நல்லவேளையாக அப்போது மதவாரி இடஒதுக்கீடு அமுலில் இருந்ததோ ஜின்னா தப்பித்தார். இல்லாவிட்டால் அவர்தான் அதற்கும் காரணம் என்று விளாசித் தள்ளியிருப்பார்கள். 1927ல் சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸும் லீக்கும் ஓரணியில் நின்று போராடியதெல்லாம் வரலாறு. தனி இடஒதுக்கீடு இருப்பதைப் போன்று மதவாரி ஓட்டளிப்புமுறையும் வேண்டுமென்ற ஜின்னாவின் கோரிக்கையை நேரு ஆமோதிக்க,காந்திஜி பலமாக எதிர்த்தார். அங்குதான் ஜின்னா என்ற ஒரு தனிமனிதனை நோக்கிப் படுபாதாளப்பள்ளம் வெட்டப்பட்டது. அப்போதும்கூட ஜின்னா பிரிவினையைப்பற்றி யோசிக்கவில்லை.நெருக்கடி மிகுந்த தருணத்தில்கூட இந்தியாவை இழப்பதையோ அல்லது அதைப் பிளப்பதையோ பற்றிச் சற்றும் சிந்திக்காத தேசபக்தர் அவர்.
 ‘ தனிநாடு ‘  கோரிக்கை தென்னகத்தில்தான் முதன்முதலில் எழுந்தது.      ம.பொ.சி.யும் அண்ணாவும் கேட்ட மாநில சுயாட்சியில் இருந்த தகிப்போ தாக்கமோ இன்றி,தெளிவான சிந்தனையோடு ,ஒன்றுபட்ட இந்தியாவைக் கருத்தில் கொண்டு ஜின்னா கேட்டதெல்லாம் மதவாரி வாக்கெடுப்புமுறை மட்டுமே.      “இந்துக்கள் இந்துகளுக்கு வாக்களிக்கட்டும்; முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு ஓட்டு போடவேண்டும். மற்ற மதத்தினர் அவரவர்களுக்கு வாக்களித்துக் கொள்ளட்டும். எல்லோரும் சேர்ந்து விகிதாச்சார அடிப்படையில் ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். நாடு ஒன்றுபட்டுப் பலமாக இருக்க இதுவே ஒரே வழி ’’ என்பது ஜின்னாவின் திட்டம். பல நாட்டிலே இத்தகைய திட்டம் வெற்றிகரமாகச் செயல் பட்டுக்கொண்டிருந்தது. விகிதாச்சார ஆட்சிமுறை தேசத்தைப் பிளக்குமென்றால், மக்களைப் பிரிக்குமென்றால், அமைதியையும் சுபிட்சத்தையும் சீர்குலைக்குமென்றால், பாரதத்தை உடைக்காமல்,சிதைக்காமல் வைக்கக்கூடிய ஓர்   உன்னதமான, எல்லோருக்கும் ஏற்புடைய ஒரு மாற்றுத்  திட்டத்தை முன் வைக்காதது யாருடைய குற்றம் ? யாருடைய சதி ?       

பெரும்பான்மையோர் மட்டுமே ஆள வேண்டும் என்கிற சாதியச் சதியைப் புரிந்துகொள்வதற்கு ஜின்னாவுக்கு அதிகநேரம் தேவைப்படவில்லை. உளச்சுத்தியோடு இவர்களிடம் பேசிப் புண்ணியமில்லை என்பதை முற்றிலுமாக உணர்ந்ததும் மனம் வெதும்பிப் போனார்.
ஆனால் ஜின்னாவின் எதிரிகளும்,   காங்கிரஸில் இருந்த அதிகார வெறியர்களும்  காந்திக்கும் ஜின்னாவுக்குமிடையே தோன்றிய கருத்து மோதலைச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்டு, மௌலானா அஸாத், பாட்சா கான், அன்ஸாரி போன்ற மிருதுவான காங்கிரஸ்காரர்களுக்கு மதச்சார்பின்மை சாயம் பூசி போர்க்களத்தில் இறக்கிவிட்டதைச் சகிக்காமல் ஜின்னா வெகுண்டெழுந்தது என்னவோ உண்மை. அது ஓர் உண்மையான அரசியல்வாதியின் உயர்க்குணமும்கூட.

காங்கிரஸில் இருந்த காவிக்காரர்கள் ஒரு சதுரங்கம் போட்டார்கள்: அபுல் கலாம் அஸாத் புனித மக்காவில் பிறந்தவர். இஸ்லாமிய மார்க்க மாமேதை.அப்பழுக்கற்ற தேசியவாதி. தியாகம் பல புரிந்த உத்தமர்.அத்துடன் கான் அப்துல் கப்பார் கான், டாக்டர் அன்சாரி, அலி சகோதரர்கள் ஆகியோர் மார்க்க்ப் பற்றுள்ள மாமனிதர்கள். 

 MuhammadAliJinnah_wiki01ஜின்னாவோ ஆங்கிலேயர்களைப்போல் உடையணியும் ஒரு மெல்லிய மனிதர். ஒரு தலைமுறைக்கு முன்னால் அவரது தந்தையைப் பெற்ற பாட்டன் ஒரு ரஜபுத்திர ஹிந்து. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது  ஜின்னா ஆணிவேரில்லாத ஒரு ஷியா முஸ்லிம். புகை பிடிப்பவர்.மது அருந்துபவர். பன்றிக்கறிக்கூடச் சாப்பிடத் தயங்காதவர். பள்ளிக்குச் சென்று தொழாதவர். மத அனுஷ்டானங்களைப் பின்பற்றாதவர்.ஒரு பணக்கார குஜராத்தி. ஏழை மக்களுக்கும்  மதப்பற்றுள்ள முஸ்லிம்களுக்கும் தலைமை ஏற்பதற்கு இவருக்கென்ன அருகதை இருக்கிறது என்று காங்கிரஸிலுள்ள மதத்தலைவர்கள் கேள்வி எழுப்பினால், ஜின்னாவை அரசியல் சன்னியாசம் பெற்றுக்கொண்டு ஓட வைத்துவிடலாம் என்பதுதான் அவர்களுடைய கனவு. இதையெல்லாம் கேள்விப்பட்டவுடன் மனவேதனையும் துக்கமும் தாளாமல் அரசியல் துறவரம் ஏற்பதற்கு ஜின்னாவும் தயாராகத்தான் இருந்தார்.

அந்த சமயம்  பார்த்துதான் லண்டனில் சட்டம் பயின்று கொண்டிருந்த ரஹ்மத் அலி ஒரு கடிதம் எழுதியிருந்தார். நாலரைப்பக்கத்துக் கையெழுத்துப் பிரதி. ஜின்னாவின் தலையெழுத்தை மட்டுமின்றி தெற்காசியாவின் வரைப்படத்தையே மாற்றியமைத்த வல்லமை பொருந்திய சிறுக்காகிதங்கள். 

1933ம் ஆண்டு. லண்டன். ஹம்பர்ஸ்டோனில் அமைந்திருந்த ஒரு மாளிகை. அதில் மிக விசாலமான ஆடம்பர அறை.. கறுப்புக்காபி நிரம்பிய பளிங்குக் கோப்பையை நெடு நேரமாக கையில் தாங்கிப் பிடித்திருந்த ஜின்னா, பைப்பை நிதானமாக இழுத்துப் புகையை மெல்ல வெளியேற்றிக்கொண்டிருந்தார். நீண்ட நேர மௌனத்துக்குப்பின் மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்: “பாபுஜி ( காந்தி ) யிடம் இதை நான் எப்படிச் சொல்வேன் ? “

ரஹ்மத் அலி வினயமாகச் சொன்னார்: “ விட்டுக் கொடுப்பதற்கும் அலட்சியம் காட்டுவதற்கும் இது உங்கள் சொந்தப் பிரச்னையோ அல்லது சொத்துப் பிரச்னையோ அல்ல. பத்துக் கோடி முஸ்லிம்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேசப்பிரச்னை. வீணாகத் தயக்கம் காட்டி அவர்களின் தலையில் மண்ணை வாரிப் போட்டுவிடாதீர்கள். “

 “ஏன் இப்போது முஸ்லிம்கள் ஒன்றாக வாழவில்லையா? காலம் காலமாக ஒற்றுமையாகத்தானே வசித்துக் கொண்டிருக்கிறார்கள்?” 

” உண்மைதான். ஓர் அன்னியர் ஆட்சியின்கீழ் ஒற்றுமையாக வாழ்வதில் எவ்வித பிரச்னையுமில்லை. அவன் இந்து-முஸ்லிம் என்று வித்தியாசம் பார்க்கமாட்டான். அடிப்பதிலும் உதைப்பதிலும்கூட அவன் பாரபட்சம் காட்டமாட்டான். ஆனால் இந்துக்கள் முஸ்லிம்களை நடத்துவதில் நேர்மையும் நியாயமும் இருக்குமென்று நம்புகிறீர்களா? ஏன் ரொம்பத்தூரம் போக வேண்டும்? காங்கிரஸிலுள்ள உங்கள் நண்பர்கள் உங்களையே இப்போது எப்படி நடத்துகிறார்கள் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள். நீங்கள் ஒரு முழுமையான தேசியவாதியாக இருந்தும், காங்கிரஸுக்காகப் போராடியும், நாட்டுக்காகத் தியாகம் செய்து இருந்தும்கூட  உங்களை நம்புகிறார்களா? அவர்கள் உங்களை அரசியல் சிரச்சேதம் செய்வதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கையில் உங்களுக்கே நியாயம் வழங்காதவர்களின் கைகளில் பத்துக் கோடி அப்பாவி முஸ்லிம்களின் தலைவிதியை ஒப்படைப்பது சரிதானா? “ என்று முஹம்மத் அலி மூச்சுரைக்கப் பேசினார்.

ஜின்னாவிடம் அசாதாரண மௌனம். ஆழமான குழப்பம் என்றுகூடச் சொல்லலாம். “இப்படிப்பட்ட முயற்சிகள் நம்மை நாமே சித்திரவதை செய்து கொள்வது ஆகாதோ? “ என்று முனகினார்.

“ ஆகாது. நிச்சயமாக ஆகாது. இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியத்  துணைக்கண்டத்தில் முஸ்லிம்களூக்கென்று ஒரு தனிநாடு நிறுவாமல் போனால், அதுதான் தற்கொலைக்குச்சமம். சரித்திரம் உங்களை மன்னிக்காது “ எனக் கூறி ஒரு வரைப்படத்தை ஜின்னாவிடம் காட்டினார் ரஹ்மத் அலி. ஜின்னா அதை உற்று நோக்கத் துவங்கியதும் “வட மேற்கு இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் அதிகம். அத்துடன் பஞ்சாப்,காஷ்மீர்,சிந்து, பலூசிஸ்தான்,அதைச் சேர்ந்த எல்லைப்பகுதி-இதுதான் உதயமாகப் போகிற இஸ்லாமிய நாடு. பெயர்கூடச் சூட்டியாயிற்று- பாகிஸ்தான் .“  என்றார் ரஹ்மத் சிரித்துக்கொண்டே..

” மக்கள் ஏற்பார்களா? “ – அப்போதும் ஜின்னாவிடம் ஐயம் ; அச்சம். மக்கள் நிராகரித்துவிட்டால் ஜின்னாவின் முழு அரசியல் வாழ்வும் அஸ்தமனமாகிவிடும். இது ஒரு போராட்டமல்ல ; சூதாட்டம். வெற்றியும் தோல்வியும் சகஜம்; சாஸ்வதம்.

ஆனால் ரஹ்மத் அலிதான் உற்சாகமூட்டினார்: “ உங்களைப்ப்ற்றி உங்களுக்கே தெரியாது. ‘ பாகிஸ்தான்’ என்று ஓர் அழைப்பு விடுத்துப் பாருங்கள். அப்புறம் அற்புதம்தான் “.

 இதுதான் பாகிஸ்தான் உருவான கரு. கதை. ‘ இது ஒரு சதி ‘ என்று வைத்துக்கொண்டால், அதில் ஜின்னாவுக்கும் ரஹ்மத் அலிக்கும் மட்டும் பங்கில்லை. இந்தியாவில் முஸ்லிம்கள் சம அளவு பலத்துடன் திகழ்வதை விரும்பாத அத்தனை இந்திய அரசியல்வாதிகளுக்கும் இதில் தொடர்புண்டு. தேசம் உடைந்தாலும் ஜின்னாவின் கை ஓங்குவதைப் பொறுத்துக் கொள்ளாத அத்தனை பேருமே நாடு சிதறியதில் பங்கு கொண்டவர்களே என்பதில் சந்தேகமில்லை. அதிகாரப் பகிர்வில் ‘இந்திய அன்னியர்’களின் பங்களிப்பு அறவே கூடாதென்ற ஜனநாயக சர்வாதிகாரிகளின் நரித்தனமே நாடு உடைந்ததற்கு முழு முக்கியக் காரணம்.

 1933ல் பாகிஸ்தான் தியரி கண்டெடுக்கப்பட்டாலும், நீண்ட இடைவெளிக்கும் நெடிய பரிசோதனைக்கும் பின்னரே ‘தனிநாடு’ என வாய் திறந்தார் ஜின்னா. 1940ல் லாஹூர் பிரகடனத்தில் ‘ பாகிஸ்தான் ‘  என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது- பிரிவினையைத் தடுக்கும் நோக்கத்துடன் காந்திஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் யாரேனும் சமரசத் திட்டத்துடன் வர மாட்டார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன், ஏக்கத்துடன்.

 யாரும் வரவில்லை.

“ ஜின்னா ஒரு பிரிவினைவாதி ‘ என்று சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் வாய் கிழியக் கத்தினார்களே தவிர யாருமே ஜின்னாவை அணுகவில்லை.. லாஹூர் மாநாட்டுக்கு முன்னால், ஜின்னா கேட்டதெல்லாம் ஆட்சியதிகாரத்தில் பங்குதானேதவிர, தனிநாடோ பிரிவினையோ அல்ல. ஜின்னாவையும், அவரது பிறந்த மண் மோகத்தையும் காந்திஜியுடன் அவர் கொண்டிருந்த ஆழமான நட்புறவையும் கலப்படமில்லாமல் அறிந்தவர்கள், பிரிவினையைத் தவிர்த்திருக்க முடியும் என்றுதான் நம்புகிறார்கள். தேசம் துண்டாடப்பட்டதற்கு ஜின்னா மட்டுமே காரணமென்று கூறுபவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. 
இந்தியாவுக்கு விடுதலை அளிப்பது குறித்த பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதற்காக வின்ஸ்டன் சர்ச்சிலால் சிபாரிசு செய்யப்பட்டு,இங்கிலாந்து பிரதமர் அட்லி அவர்களால் அனுப்பப்பட்ட மவுண்ட் பாட்டன் ஜின்னாவைப் பற்றி கூறுகிறார்: “அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டதையும் மற்றவர்கள் சொன்னதையும் வைத்து ஜின்னா ஒரு கடினமான மனிதர் என்று எண்ணி யிருந்தேன்.அவரிடம் எப்படிப் பேசி சுமுக முடிவுக்கு வரப் போகிறோம் என்ற தயக்கம் என்னிடம் இருந்தது. ‘ நோ ‘ என்ற ஒரேயொரு வார்ததையை வைத்துக்கொண்டு உலகப் புகழ் அடையக்கூடிய அவரிடம் நான் நடத்திய முதற் பேச்சு மிகவும் இனிமையாக அமைந்தது.“  

 வட்டமேஜை மாநாட்டில் ஜின்னா முன்னிறுத்திய வாதம்: “  இந்துக்கள் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் தெய்வத்தை வணங்கலாம். ஆனால் முஸ்லிம்கள் படைப்புக்களை வணங்க முடியாது. முஸ்லிம்களுக்கு ஒரே இறைவன். இந்துகளுக்கோ பல தெய்வ வழிபாடு.  நாட்காட்டியிலும் கலாச்சாரத்திலும் நாங்கள் எதிரும் புதிருமானவர்கள். அவர்கள் பசுவை வணங்குபவர்கள். நாங்கள் அதையே உண்பவர்கள். இனிமேல் சகிப்புக்கு வழியில்லை. எனவே பாகிஸ்தான். “

 மவுண்ட் பாட்டன் கேட்டார்: “ சுயாட்சிக் கோரிக்கைக்கு முன்னால், இங்கே பல மதங்கள், பல இனங்கள் இருந்தும் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே வாழ்ந்துகொண்டிருந்தீர்கள்?  இப்போது மட்டும் ஏன் பாகிஸ்தான்?“

“ தனிநாட்டுக்குத்தேவையான காரணங்களை முன்னரே கூறியாயிற்று.. “

” தனிநாடு மறுத்தால்? ”

” நேரடி நடவடிக்கை. “

“ அப்படியென்றால்? ‘’

 “ உள்நாட்டுப்போர். “

 மவுண்ட்பாட்டன் புன்னகைத்துக்கொண்டே, “ பாகிஸ்தான் எப்போது வேண்டும்? “ என்றார்.

” இப்போதே. அல்லது இரண்டு மாதம் கழித்து. ஆனால் இந்திய விடுதலைக்கு ஒரு நாளைக்கு முன்னால் “ என்றார் ஜின்னா.

“ அதென்ன ஒரு நாளைக்கு முன்னால்? “

“சுதந்திர இந்தியாவிலிருந்து ஜின்னா நாட்டைப் பிரித்துவிட்டான் என்று சரித்திரம் என்னைப் பழிக்கக்கூடாது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்துதான் எனக்கு பாகிஸ்தான் வேண்டும் “ என்று ஜின்னா கூறியபோது தீவிர கங்கிரஸ்காரர்களோ அல்லது இந்து மகாசபை தீவிரவாதிகளோ ஏன் வாயைத் திறக்கவில்லை என்பதுதான் மர்மம். புதிர். பூடகம்.  பாகிஸ்தான் துண்டாடப் பட்டிருக்காவிடில்  நவகாளி படுகொலை,  கல்கத்தா  கலவரம்,  குஜராத் வன்கொடுமை, அயோத்திக் கலகம் ஆகியவற்றை ஒருவேளை தவிர்த்திருக்கலாமோ? அல்லது தடுத்திருக்கலாமோ?          

பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அத்வானி அவர்கள் பாகிஸ்தான் சென்றிருந்தபோது “ ஜின்னா ஓர் அப்பழுக்கற்ற தேசியவாதி “ என்று மனம் திறந்தார்.அவரது சீடர்கள் வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் குதித்தார்கள். பாவம், அவர்களுக்கென்ன தெரியும்?

சுதந்திரத்தையும் தெரியாது; போராட்டத்தையும் தெரியாது. ‘பாகிஸ்தான் என்றாலோ ஜின்னா என்றாலோ வெறு ‘ என்று மட்டும் அரசியல் காரணங்களுக்காகத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்கப்பட்டவர்கள்.ஒருவனைக் காரணமில்லாமல் வெறுத்தவர்கள் எந்தக் காரணத்தைக்கொண்டும் அவனை மீண்டும் விரும்புவது மகா அபூர்வம். தேசப்பக்தி என்பது இந்தியாவில் ஒரு கும்பலுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பிரத்தியேக சாஸனம் என்று அவர்கள் நினக்கக்கூடும்.

 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் நாள். பாகிஸ்தான் விடுதலைக்கு இரு தினங்களுக்கு முன்னால். ஜின்னா, பாகிஸ்தான் அரசியலமைப்புப் பேரவையில் நிகழ்த்திய உரை: “ இந்த உன்னததேசத்தை மகிழ்ச்சியும் சுபிட்சமும் மிக்கதாக மாற்ற வேண்டுமானால் நாமனைவரும் ஒரு நல்ல குடிமகனாக, ஓர் உண்மையான தேசியவாதியாக வாழ வேண்டுமென்று உறுதி எடுத்தாக வேண்டும். இப்போது நீங்கள் முற்றிலும் விடுதலை பெற்றவர்கள். நீங்கள் மசூதிக்குச் செல்லலாம். கோயிலுக்குச் செல்லலாம். குருத்வாராவுக்குச் செல்லலாம்.  நீங்கள் விரும்பும் எந்த வழிபட்டு இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். பாகிஸ்தான் அரசைப் பொறுத்தவரை, நீங்கள் எந்த மதத்தை, இனத்தை,மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி- உங்களுக்குள் வேற்றுமை இல்லை. வித்தியாசம் இல்லை. பாரபட்சம் இல்லை. ஆனால் நீங்கள் அனைவரும் தேச விசுவாசியாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எனது ஆத்மார்த்த விருப்பம்.“                

       
குறிப்பு: அறுபதாவது சுதந்திரப் பொன்னாளைக் கொண்டாடும் வேளையில், அதற்காக இரத்தம் சிந்திய உத்தமர்களை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இந்தியா என்றால்  பாகிஸ்தானும், காந்தி என்றால் ஜின்னாவும் பிரித்தெடுக்க முடியாத உன்னதங்கள். இந்த நேரத்தில் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வதுதான் கொண்டாட்டம். நல்வாழ்த்துக்கள்.

***    

நன்றி : ஏ.ஹெச்.ஹத்தீப் | E- Mail : hatheeb@gmail.com

Hatheeb02

A. H. Hatheeb Sahib
16, Mohideen Palli Street, Nagore – 611002
Tel : 0365 250218, Mob : 9944884080

**

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: