என்ன செய்வது?

‘எல்லோர்க்கும் / அருள் செய்வது / அர்ரஹ்மான் / எங்கள் – / அப்துல் ரஹ்மானுக்கு / வெற்றி தந்தது / முருகனும் / சூரிய பகவானும்..! / (முஸ்லிம் லீக் ஜிந்தாபாத்! நாரே தக்பீர்! அல்லாஹூ அக்பர்!!’)’ எனும் ‘தேர்தல் கவிதை’யை – வேலூரிலிருந்து போடச் சொன்னார் ஜபருல்லாஹ் நானா. நானா?! நாகூரில் மாட்டிக்கொண்டு, எழவெடுத்த Internet Explorer சதிகளால் இணையத் தொடர்பு இழந்திருந்தேன் அப்போது். ஹந்திரி (இன்று ஹத்தத்து ராவு!) ஸ்பெஷலாக ஏதாவது போடலாமென்று அவருடைய 30 கவிதைகளை -‘நெருப்பு நரி’யோடு – முயற்சிக்கிறேன். இறைவா, அருள் புரி! அடுத்த பதிவாக சகோதரர் ஏ.ஹெச். ஹதீப் எழுதிய ‘தமிழினத் துரோகம்’ கட்டுரையையும் (ஈழம் தொடர்பானது) பதிய உதவி செய். கூடலூர் ஸ்ரீவித்யா, ‘இஸ்லாமியர்கள் எப்போதும் மத அடிப்படையிலேயே பிரச்சனைகளை பார்ப்பார்கள். பிற்போககானவர்கள்’ என்று விளாசுவது (சமநிலைச் சமுதாயம் / மார்ச் 2009) உண்மையல்ல, உலகிற்கு காட்டு!.

‘உண்மையான மதச்சார்பின்மை என்பது ‘மற்றதை’ அதன் எல்லா வித்தியாசயங்களுடனும் ஏற்பதே. மற்றவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் எனச் சொல்வதல்ல இது. இன்னும் ஒருபடி மேலானது. மற்றதைப் புரிந்துகொள்ள இயலாமையைப் புரிந்து கொள்வதே அது’ என்கிறார் பேரா. அ. மார்க்ஸ். புரிந்தால் சரி!

***

இஜட். ஜபருல்லாஹ்வின் 30 கவிதைகள்

1. சேரும் இடம்…!

வார்த்தையைப் பிடித்துக்கொண்டு
வகைவகையாப் பொருள்கள் சொல்லும்
நேர்த்தியை அறிந்தவர்கள்
நிறையவே இருக்கின்றார்கள்..!

போர்த்திய ஞானம் – உள்ளில்
பூத்திடும் மௌனமாக
சேர்த்திடும் இடத்தைக் கண்டால்
சிந்தையில் உண்மை காண்பார்..!

**

2. யாராய் இருப்பினும்..!

ஏசுவே மரித்தாலும்
சிலுவை சிலுவைதான்
சாமி கையில் இருந்தாலும்
கத்தி கத்திதான்
அல்லாவே ஆக்கினாலும்
நரகம் நரகம்தான்..!
இயல்புகள் –
எப்போதும் சாவதில்லை..!

**

3. முடிவாக…

நானும் நானுமாக
பேசிக் கொள்வதுண்டு..!
எப்போதும்
ஒரு முடிவுக்கு வராமலேயே
முடிந்து விடுகின்றது..!
ஏன் என்று –
வேறு யாரிடமாவதுதான்
கேட்க வேண்டும்…!

**

4. கற்ற இடம்..

இரைதேடி..
சேர்த்துத் திரியும்போது
நேராக கூட்டுக்கு.. தன்
குஞ்சுகளின் நினைவோடு..!

எச்சமிடவும்
இளைப்பாறவும் மட்டும்
அடுத்தவன் தோட்டமும்
மரக்கிளைகளும்…!

ஒருவேளை
பறவைகள் இந்தப் பண்பை
மனிதனிடமிருந்துதான்
கற்றிருக்குமோ..?

***

5. ஒரு உணவுப் பிரச்சனை..!

புல்லைத் தின்னவேண்டிய மாடு
தாளைத் தின்னும்போது
தாளைத் தின்னவேண்டிய கழுதை
எதைத் தின்னும்..?

***

6. தெரிந்தது…!

‘விளையும் பயிர்
முளையிலே தெரியும்..!’
என்றார்கள்..
தெரியவில்லை… விதைத்தால்தானே..?

***

7. மனசு..

இறைவன் ஒருநாள்
என்னை விளித்தான்..!
எதுவேண்டும் என
சொல்லப் பணித்தான்..!

பணமா..? படிப்பா..?
பதவியா..? புகழா..?
குணமா.? இனமா..?
கூடும் சொந்தமா..?

காடா..? வயலா..?
வீடா..? மக்களா..?
வீரியத்தோடு
கூடிய உடலா..?

சூழும் மதிப்பா..?
சுற்றமா..? நட்பா..?
ஆளும் திறமா..?
அகமிய ஞானமா..?

தேவை எதுவென
தேடினேன் எனக்குள்..!
தெரியவில்லை என
சொல்லப் பயந்தேன்..!

திடுமென என்மனம்
தேவையைச் சொன்னது
‘நிம்மதி’ என்றேன்.
நிறைஞ்சது மனசு..!

***

8. யுகே..! யுகே..

பாவங்கள் இறப்பதே இல்லை..!
பரமாத்மா மட்டும்
மறுபடி மறுபடி
யுகம் யுகமாய்
பிறந்து கொண்டே…

**

9. மறதி

பயணம்
முடிந்த பிறகு
படகை மட்டுமே
சிலாகிக்கிறவர்கள்
ஏனோ –
துடுப்புகளை
மறந்து விடுகிறார்கள்..!

**

10. தாயம்

என் விஷயத்தில்
நினைத்ததெல்லாம்
நடந்து விடுகிறது
நான் –
நினைப்பதைத் தவிர..

**

11. புதிர்

எனக்குப் புரியவில்லை
புரியவில்லை என்பதே ரொம்பநாட்கள்
புரியவில்லை
இந்நிலையில்
புரிந்தவர்கள்
என்னை
எப்படிப் புரிந்திருப்பார்கள்..?
புரியவில்லை..!

**

12. வாய்ப்பு

வேண்டியது
எனக்கொரு நிலாமுற்றம்..!
முற்றம் இருக்கிறது..
நிலாவுக்கு என்ன செய்வது?
வந்தால்தானே..!

**

13. சுனாமி சூர்ப்பநகைகள்

சுனாமி
அடித்த மறுநாள்
எங்கள் ஊர் கடற்கரையில்
அங்குமிங்குமாய்
சவமான ‘சூர்ப்பநகைகள்’
மூக்கறுபட்டது
இலக்குவனின்
கோபத்தினால் அல்ல..! வைர
மூக்குத்தியினால்..!

**

14. உள்ளம் எரிகின்றது..!

சூரியக்கதிர்கள் சுட்டெரித்தாலும்
சுகமே தருகின்றது – அது
சுள்ளென என்னுடல் தீண்டும் போதும்
நலமே விளைகிறது..!
மாறிடும் மனிதன் குணங்கள்தான்என்
மனசைச் சுடுகிறது..! இந்த
மனிதன் போடும் வேஷங்களால்தான்
உள்ளம் எரிகிறது…!

சட்டம் தருமம் எல்லாமிங்கே
சந்தியில் நிற்கிறது..!
சாத்திரம் கூறும் அறவுரையெல்லாம்
நொண்டியடிக்கிறது…!
பட்டம் பதவி பண்புகளெல்லாம்
பாழாய்ப் போகிறது..!
பணமே மனிதன் உயிர்மூச்சாகி
பேயாய் அலைகிறது..!

**

15. காசுவிதி

பற்றுவைப்பது போய்
பற்று எழுதுவதே
நிலையாகி விட்டது.

கையெழுத்தே
போடத் தெரியாதவன்
காசோலையில்
ரேகை பதிக்கிறான்
கற்றுத் தேர்ந்த
பட்டதாரியோ
அவன் கணக்கை
கம்ப்யூட்டரில்
பதிவு செய்கிறான்..
கேட்டால்
விதியாம்.

எல்லோருக்கும்
விதி
தலையில் எழுதப்படுகிறது
என்கிறார்களே..!
எனக்கொரு சந்தேகம்
அதுகூட
காசு வாங்கிக்கொண்டுதான்
எழுதப்படுகிறதோ..?

***

16. தியானம்

தியானம் செய்..
என்றார் குரு
நான்தான்
கவிதை எழுதுகிறேனே என்றேன்
சினந்தார்
எனக்கு
தியானம் புரிந்த அளவுக்கு
அவருக்கு
கவிதை புரியவில்லை

***

17. இடமாற்றம்

அவள்
என் நெஞ்சுக்குள்
நுழையும்போது
நான் –
அவள் ம்னசுக்குள்
போய்விடுவதால்
சந்திக்க முடியவில்லை.

***

18. முடியும்

பள்ளிவாசலில்
மணி அடிக்கலாம்..!
திரி ஏற்றலாம்..!

தேவாலயங்களில்
பாங்கு சொல்லலாம்
தேங்காய் உடைக்கலாம்!

கோயில்களில்
ஜெபம் பண்ணலாம்
வேதம் படிக்கலாம்..!
மனங்கள் –
சுத்தமானால்..!

***

19. புரிந்த புதிர்

மனைவி புரிகிறது
மக்கள் புரிகிறது
சொந்தம் புரிகிறது
சுமைகள் புரிகிறது
வாழ்க்கைதான் –
புரியவில்லை..!

**

20. தேடல்

எனக்கு
நண்பர்கள்
நிறைய உண்டு..!
நட்பைத்தான்
தேடிக் கொண்டிருக்கிறேன்..!

**

21. உன் வீடு

இறைவா..
பள்ளிவாசலில்
எங்கள் குரலும்
இமாமின் குரலுமே
எதிரொலிக்கின்றன..!
உன் குரல்
எப்போது கேட்கும்?
இது
உன் வீடல்லவா..?

**

22. நித்ய ஜீவி

இருக்கும்போதுதான்
ஜாதியும் மதமும்
இறந்த பின்னாலே
யாவரும் ஒன்றே..!

எவரோ சொன்னது
எனக்கும் கேட்டது
அது எப்படி?

இந்து இறந்தால்
பிணம் ஆகிறான்
கிருஸ்தவன் இறந்தால்
‘பாடி’ ஆகிறான்
முஸ்லிம் இறந்தால்
‘ஜனாஸா’ ஆகிறான்

மனிதன் இறந்தாலும்
மதமும் ஜாதியும்
மரித்துப் போகாது..!
அது – நித்ய ஜீவி.

***

23. நாடு

இந்தியா
எனக்கு
தாய்நாடும் அல்ல
தந்தை நாடும் அல்ல.
இது –
என் நாடு..!

**

24. சோற்றுக்கு?

இறைவா..
என்னிடம் ஒருவர்
என்ன செய்கிறீர்கள் என்றார்
கவிதை எழுதுகிறேன் என்றேன்
‘அது சரி, சோற்றுக்கு?’ என்றார்
அல்லாஹ் தருகிறான் என்றேன்
சிரித்தார்
உன்னை – எனக்குக் காட்டியதுபோல்
இவர்போன்ற ஆட்களுக்கு நீ
காட்டவில்லையா?

***

25. எளியகாரணம்

என்னை ஏன்
அடிக்கிறாய்? என்றேன்
அவன் என்னை
அடிக்கிறானே..! என்கிறான்.

**

26. வேண்டா விருந்தாளி

உலகத்துக்கு நீ
வரலாம் போகலாம்
இருக்கலாம் இறக்கலாம்
வெல்லலாம் தோற்கலாம்
இப்படி
எதற்குமே உனக்கு
உலகம் –
அழைப்பு தராது..!

***

27. இறை நம்பிக்கை

இறைவா..
நாங்கள்
உன்னை மட்டுமே
நம்பி இருக்கிறோம்..
நீயோ
எங்களை நம்பவில்லையே..?
உன்
வேதத் திருமறையை
நீயே –
பாதுகாத்துக் கொள்வதாக
சொல்லிவிட்டாயே..!

***

28. பேர் முஸ்லிம்..!

வீண்வாதப் பேச்சுகளில்
நாட்கள் கழியுது..!
விரயமாகி சக்தியெல்லாம்
தானே அழியுது..
பேணுகின்ற வாழ்க்கைநெறி
மாறிப் போனது..!
பேரில் மட்டும் முஸ்லிம் என்று
அலைந்து திரியுது..!

**

29. ஆதார ஈமான்

எங்கள் மார்க்க அறிவுஜீவிகள்
எல்லாவற்றுக்கும்
ஆதாரம் கேட்கிறார்கள்..!

‘ஈமான்’ கொள்ளவும்
சொல்கிறார்கள்..!
ஈமான் என்பது நம்பிக்கைத்தானே!
நம்பிக்கைக்கு ஆதாரம் ஏது..?

இஸ்லாத்துக்கு –
ஈமான் முக்கியமா..?
ஆதாரம் முக்கியமா..?
இதற்கான விடையை
ஈமானோடு சொல்வதா?
ஆதாரத்தோடு சொல்வதா?

***

30. என்ன செய்வது?

பிறந்தபோது இருந்தமனம்
பேயாய் மாறுது..! அதன்
பிடியில்மாட்டிக் கொண்டதாலே
பிணியில் மாயுது!
இறந்துபோன பின்னும்கூட
இன்னல் தொடருது..! மனிதன்
இருக்கும்பொது செய்தபாவம்
இன்னும் படருது..!

மிருகஇச்சை மனிதவாழ்வை
தோற்க வைத்தது..! அது
மடிந்தபோதும் உடலைதுன்பம்
ஏற்க வைத்தது..!
உருகும் நட்பு சொந்தமெல்லாம்
துயரில் ஆழ்ந்தது..! வாழ்ந்த
ஊரின் நன்மை நாணிக்குறுகி
மண்ணில் வீழ்ந்தது..!

இறைமறையும் நபிவழியும்
என்னஆனது? – உலகில்
இருக்கும்போது நெஞ்சைவிட்டு
எங்கே போனது..?
பொருள் குவிக்கும் ஆசையினால்
புனிதம் மாண்டது..! எல்லாம்
போனபின்பு புத்திவந்து
என்ன செய்வது..?

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்

Cell : 0091 9842394119

1 பின்னூட்டம்

  1. 06/06/2009 இல் 03:26

    எனக்கு நண்பர்கள் அதிகம் நட்பை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

    எனக்கு நிறைய கவிஞர்களை தெரியும் கவிதையை தேடிக் கொண்டிருந்தேன், கிடைத்து விட்டது

    இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்களுக்கு சலாம்..

    உங்கள் கணினி வேலை செய்ய கருணைக் கடல் அருள் புரியட்டும்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: