தேர்தல்-2009: ஜாக்பாட் யாருக்கு ? – தாஜ்

அன்புடன்….
ஆபிதீன்….

தேர்தல் பொருட்டு
உங்களை ரொம்பவும்
வருத்திவிட்டேன்.
அநியாயத்திற்கு எழுதி
படி படியென்கிற
தொல்லைதான் நான்!
இனி பயப்பட வேண்டாம்..
தேர்தல்தான் முடியப்போகிறதே!
சரியா….

ஆகிவிட்டது…
அவ்வளவுதான்!
விடியப் போகிறது!
தேர்தல் கூத்து….
முடியப் போகிறது!

அரைத் தூக்கத்திலும்
மக்களது கேள்வியெல்லாம்…
யார் ஜெயிப்பார்கள்?
யாருக்கு அந்த ஜாக்பாட்?

கூத்தில் பங்கெடுத்த
அத்தனை பேர்கள்
கட்டிய வேஷமும்
உத்தமர் வேஷம்!
அந்தஸ்து கொண்டது!
பாத்திரக் கீர்த்திகளின்
அபார வெளிப்பாடு!
இதன் பொருட்டு
அவர்கள் கொண்ட
அவஸ்தைகள்
சாதாரணமானது அல்ல!

அரிதாரம் பூசியவர்களாக
மாநிலம் மாநிலமாகப் போய்
ஆட்டமாய் ஆடி…
திறமையை நிரூபிக்க
சளைக்காமல் நடித்தார்கள்!
மேடைகளில்
கத்தோ கத்தென்றுக் கத்தி
மனப்பாடமாய்
அவர்கள் பேசிய வசனம்
அந்தக் கால…
சக்தி நாடக சபா
‘ராஜபார்ட்’ தோற்றான்!

தேர்ந்தெடுக்கப்படும்
நாடக சபா நடிகர்களுக்கு
இப்போது கிட்டப் போகும்
ஜாக்பாட்….
‘ஏக இந்தியாவின் அதிகாரா பீடம்!’
‘ஐந்து வருட
பட்டா பாத்தியத்தோடு முழுசாய்!’

இனி…..
நாடும்  மக்களும்
அவர்களின் சொல்லுக்கு ஆடவேண்டும்!
சுதந்திர அமைப்புகளும்
மறைமுகமாய் பணிய வேண்டும்!

யாரை வேண்டுமானாலும்
அவர்கள்….
சிறைப் பிடிக்கலாம்!
கேள்விகளற்று!

அவர்கள் விரும்பினால்…
தனது சின்ன வீட்டுக்காரிகள்/காரன்களை
ஒரே ராத்திரியில்
குபேர அந்தஸ்தாக்கலாம்!

கூத்திற்கான
சன்மானம்…
இத்தனைக்காக…!?
நாம் மலைத்தாலும்
வென்ற சபாக்காரர்களின்
அபிலாசைகளுக்கு முன்
இவைகள் அத்தனையும்
ஒன்றுமே இல்லை!

ஐந்து வருட காலமும்
கும்பிட்டு முடங்கிக்கிடந்த
சொந்த அடிமைகளிடம்
கூத்தை நடத்தி….
பரிசைப் பெறுவதில்
அவர்களுக்கு முகச்சுளிப்பு உண்டு!
சொல்ல முடியாத அளவில்!
மீண்டும்
ஐந்து வருடம் கழித்து….
கூத்து கட்டியேயாகனும்!
கஷ்டம்!

தேர்தல் சீர்திருத்தங்களென
கொடி நாட்டியிருக்கிற
தேர்தல் கமிஷன்….
இந்தக் கூத்தை கொஞ்சம்
சீர்தூக்கிப் பார்க்கலாம்!

கூத்துக்கட்டுவதால்
சம்பந்தப்பட்டவர்களுக்கு சிரமம்
ஒரு புறமென்றால்…
தவிர்க்க முடியாது
அதைக் கண்டும் / கேட்டும்
மண்டை காய்வதில்
மக்களுக்குதான்…
எத்தனையெத்தனை சிரமம்!

தேர்தல் கமிஷன்
தாராளமாக யோசிக்கலாம்!
தேர்தல் தோறும்….
ஜெயிப்பது
அரசியல்வாதிகளாகவும்
தோற்பது மக்களாகவுமே இருப்பதால்
இந்தக் கூத்துக்கு
மாற்று காண்பதில்
பெரிய தவறாகாது.

எப்படி என்றாலும்…
இந்த ஜாக்பாட்
அவர்களில்…
எவரோ ஒருவரிடம் போய்
சேரவேண்டிய ஒன்றே!
நிஜத்தில்…
இது அவர்களின் நாடு!

அவர்கள் எல்லோரையும்
இரண்டு அணிகளாகப் பிரித்து
அந்த அணிகளின் பெயரை
சீட்டெழுதிப் போட்டு குலுக்கி
அதில் ஒன்றை எடுத்து
நிர்ணயிக்கப்பட்ட ஜாக்பாட்டை
அவர்களுக்கு வழங்கலாம்!

கூத்து கட்டும் சபாக்களுக்கு
இந்த சீர்திருத்தம்…
சந்தோசம் தருவதாக இருக்கும்.
இன்னொரு பக்கம்
காலம்/ சிரமம்/ மக்கள் பணம்/
வீண் செலவழிப்பு என்று
எத்தனை எத்தனையோ மிச்சம்!
கண்களை மூடி
ஒருதரம் யோசிக்க முடியுமென்றால்…
நான் குறிப்பிடும்
‘மிச்சம்’ தரும் மகிழ்ச்சி
கிளர்ச்சி தருவதாக இருக்கும்!

சீட்டெழுதிப் போட்டு
ஜாக்பாட் வழங்குவது
அநியாயத்திற்கு
மலிவான யுக்திதான்!
தேர்தல் கமிஷன்
இன்னும் கொஞ்சம் மேலே போய்…
மாற்றியமைக்கும்
வேறுபல வழிமுறைகள் குறித்தும்
யோசிக்கலாம்…!

உயரம் தாண்டுதல்/ நீளம் தாண்டுதல்/
சாக்குப் பைக்குள் ஓடுதல்/ கபடி…
என்பன போட்டிகளை
மாற்றாய் ஏற்பாடு செய்யலாம்.
பெண்களாக இருக்கும் பட்சம்
மியூசிக்கல் சேர்/
ஊசியில் நூல் கோர்த்தல்/
கோலம் வரைதல்/
ஃபேஷன்ஷோ…
என்று ஜமாய்க்கலாம்.

இதெல்லாம் சரிபட்டு வராதென்றால்…
எம்.பி. தொகுதிகளை
டெண்டருக்கு விடலாம்!
ஒவ்வொரு தொகுதியும்
நூறு கோடிக்கு குறையாமல் போகும்!
இதை நான்….
‘சன்’ குரூப்
சௌகரியத்துக்காகவென்று சொல்லவில்லை!
எல்லோரின் சௌகரியத்திற்காகவும்தான்!

தேர்தலால் நாட்டுக்கு
செலவென்பது போய்…
எத்தனையெத்தனை
நூறு நூறு கோடிகள் லாபம்!
சுவிஸ் பேங்கில் இருந்து
இந்தியர்களின் பணத்தை
மீட்டுக் கொண்டு வருவதைவிட
அதிகத் தொகையாக
இது இருக்கும்!
 
தேர்தல் சீர்திருத்தம் என்றால்
இதுதான்….
சரியான சீர்திருத்தம்!!
ஏன் யோசிக்கக் கூடாது?
யோசிக்கலாம்…
பேஷாய் யோசிக்கலாம்!

போதும்….   
நிஜத்திற்கு வருவோம்.

கூத்து கூத்து…
என்றெழுதிக் கொண்டிருக்கும்
என் கூத்து…
வாசகர்களுக்கு
பெரும் கூத்தாகப் போயிருக்கும்.
இனி கூத்து வேண்டாம்!
யதர்த்தப் பார்வையோடு
நேராய் எழுதலாம்!

மே13 – 2009 தோடு
இந்திய பாராளுமன்றத்திற்கான
தேர்தல்கள் முடிவடைகிறது.

அடுத்த மூன்றாம் நாள் விடியலில்…..
யாருக்கு வெற்றி?
தெரிந்து போகும்!

தேர்தல் – 2009
பாரளுமன்ற ஜனநாயகத்திற்கு
உதவும் என்று தோன்றவில்லை.

காங்கிரஸ் / பாரதிய ஜனதா
கூட்டணிகள் சிறுத்து விட்டன!
மூணாவது / நாலாவது என
புதிய புதிய கூட்டணிகள்!
விட்டேனா பார்? என்ற
அவர்களது செயல்பாடு.

மூணாவது / நாலாவது
கூட்டணிகளுக்கு
கணிசமான எம்.பி.க்கள் நிச்சயம்!
அவர்களுக்குள்
ஒற்றுமை என்பதுதான்…
நிச்சயமின்மை!

புதிய பாராளுமன்றத்தில்
பிரதமர் ஆகவேண்டும்
அந்த சிம்மாசனத்தில்
உட்கார்ந்து பார்த்துவிட வேண்டுமென
விருப்பம் கொண்டவர்களின்
கியூ…….
டெல்லியில் இருந்து
உத்திரப் பிரதேசம் வரை
நீண்டுகொண்டிருக்கிறது.

தேர்தல் முடிவுக்குப் பிறகு
இவர்கள் அநியாயத்துக்கு
ஜரூராவார்கள்!
அத்தனை பேர்களும்
ஆளாளுக்கு
பத்து அல்லது
பதினைந்து எம்.பி.க்களை
வீட்டுக் காவலில்
வைத்துப் பூட்டிவிட்டுத்தான்
இந்த கியூவை தொடர்வார்கள்!

அவர்களின் ஆசையும்
வெட்கம் அறியாது!
தாங்கள் எண்ணியதை அடைய
எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
நம்ம ஜெயலலிதாவுக்கு
40க்கு 40 என்றாகிப் போனால்…..
வேறு எந்த தகவலும் கிட்டாமலேயே
‘டெல்லியில் பூகம்ப’மென
உலகுக்கு…
B.B.C. தாராளமாக செய்தி வாசிக்கலாம்!

தவிர…
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு…
இத்தனை ஆண்டுகள் கழித்து
வயசு போன காலத்தில்
கம்யூனிஸ்ட்டுகளுக்கும்
சிம்மாசன ஆசை!
வரவேற்கத்தக்க
ஆசையே என்றாலும்…
கம்யூனிஸ்டுகள்…
எதை எதை
எப்பொழுது? எப்படி?
காவு வாங்குவார்கள் என
இப்பொது சொல்ல முடியாது.
சொல்லப் போனால்…
அது இப்பொழுது
அவர்களுக்கே தெரியாது.

16.05.2009-க்குப் பிறகு
கிட்டத்தட்ட…
சிம்மாசனத்திற்கான
ஓர் யுத்தத்தை
நாம் பார்க்கப் போகிறோம்!
ஜனநாயகத்தின் பெயரால்
அந்த யுத்தம் என்பதுதான் சோகம்!

காங்கிரஸ் / பி.ஜே.பி.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
பழைய எண்ணிக்கை கிட்டாது!

என் யூகத்தை
காங்கிரஸ் வேண்டுமானால்
பொய்யாக்கலாம்…
நிச்சயம் பி.ஜே.பி.
பொய்ப்பிக்காது!

பி.ஜே.பி.யின் கூட்டாளிகள்
அவர்களை விட்டு
போய்விட்டார்கள் என்பதாலோ…
அவர்களது
ஓட்டு வங்கி மாநிலங்களில்
பழைய ‘கெத்து’ இல்லை
என்பதினாலோ
என் யூகிப்பை
நான் சிலாகித்து கூறவில்லை!
அதற்கு 
வாழும் காரணங்கள்….
வேறு சில உண்டு!
 
1. பி.ஜே.பி.
மக்களிடத்தே ஊட்டிய
மதத்துவேச போதை
அடங்கித் தெளிந்திருக்கிறது.

2. பி.ஜே.பி.யை
சரியான கோணத்தில்
தலித்மக்கள்
நிறம் கண்டு கொண்டிருக்கிறார்கள்

3. பி.ஜே.பி. பெற்ற
பழைய வாக்கின்
கெலிப்புகளில்….
அதன் முந்தைய பிரதமர்
வாஜ்பேயிக்கும் பங்குண்டு.
அந்தக் கட்சியின்
இன்றைய ‘பிரதம’ வேட்பாளராக
அறியப்படும் அத்வானி…
ஒருகாலும் வாஜ்பேயி அல்ல!

4. இன்றைய நிலையில்
பிரதமருக்குத் தகுதியானவர்….
மன்மோகன் சிங்கா?
அத்வானியா? என்றால்… 
இந்தியாவில்
ஆனா… ஆவன்னா…
படிக்கத் தெரிந்த
அத்தனைப் பேர்களும்
ஒட்டு மொத்தமாக
மன்மோகன் சிங்கையே சுட்டுவார்கள்!
யதார்த்தம் இது!
செயற்கையால் எல்லாம்
யதார்த்தத்தை…
மிஞ்சிவிட முடியாது!

16.05.2009  சனிக்கிழமை
காலை 8.30க்கு
தெரியத் தொடங்கும்
இந்தியாவின் ‘தலையெழுத்து!’

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்
விழுந்து கும்பிட்டு
வேண்டிக் கொள்வது நலம்!

ஜாக்பாட்….!
யாருக்கு வேண்டுமானாலும்
கிடைத்து விட்டுப் போகட்டும்.
ஆபிதீன்,
இந்தியா என்று கொஞ்சம் மண்
நமக்காக….
மீதம் இருந்தால் சரி!
என்ன சரிதானே?
 
****

நன்றி : தாஜ் /தமிழ்ப் பூக்கள்
satajdeen@gmail.com

***

சரிதான் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: