பி.ஜே.பி.யும் மூன்று பிரதான குற்றச்சாட்டுகளும் – தாஜ்

பி.ஜே.பி.யும் மூன்று பிரதான குற்றச்சாட்டுகளும்

 தாஜ்

***

அன்புடன்
ஆபிதீன்….

இந்திய அரசியல்வாதிகள்
எல்லோருக்குமே
ஒரே முகம்தான்!
வெள்ளையில் அவர்கள்
பவனி வருவதில் மிரண்டு
ஆய்வில் அவர்களை நெருங்கினால்
எல்லோரும்
வழித்துக் கொண்டு
திரிகிறார்கள்

இதை எழுதி முடித்து வாசித்தபோது
மன்மோகன்சிங்கும்
காங்கிரஸ் சோனியாவும்
பக்கத்தில்
என்னை நெருக்கமாகக்
கொண்டு நிறுத்துவதாகத் தெரிகிறது
அதை எழுத்தில் நேர்ந்த
விபத்தாகவே பாருங்கள் பிளீஸ்!
மற்றபடி
கட்டுரையில்
நான்
உங்களோடு…
 
சென்ற பாராளுமன்ற தேர்தலில்
சிம்மாசனத்தை தவறவிட்ட
பாரதிய ஜனதா….
போட்ட கூப்பாடு
ஐய்யய்யோ….!
ஏழு லோகத்திற்கும் கேட்டிருக்கும்.
‘ராம் ராம்…..!’
கண் திறந்து பார்த்திருக்கலாம்.
இரக்கமில்லாமல் போய்விட்டார்!

ஜனநாயக அமைப்பில்….
‘ஓட்டை’ முன்வைத்து நடக்கும்
‘மங்காத்தா’ விளையாட்டில்
கெலித்தவர்களே
ஆட்சிக் கட்டில் ஏறுவார்கள்!
இந்தச் சின்ன
யதார்த்தத்தையும் மறந்து
தனது சொந்த சொத்தை
யாரோ….
தட்டிப் பறித்துவிட்ட மாதிரி
அதன் கூப்பாடும்
ஆதங்கமும் புரியவே
எனக்கு சில நாட்கள் பிடித்தது!

‘சிம்மாசத்தையும்,
பரிபாலணம் நடத்திய
பாராளுமன்றத்தையும்
நாங்கள் ஐந்து வருடக் காலம்
ஆண்டு அனுபவித்தவர்கள்…
இன்றைக்கு மற்றவர்களால் அது
தீட்டாகி விடக் கூடாது!’
நிஜத்தையே கூறி
பி.ஜே.பி.
வழக்குத் தொடுத்திருக்கலாம்!
பதவி சுகம் திரும்ப வேண்டி
அனுபவ பாத்தியமாகவே கேட்டிருக்கலாம்!

கோரிக்கைகளை வைத்து
சுப்ரீம் கோர்ட் படிகளில்
ஏறாததுதான் பாக்கி.
அதன் கூப்பாடு
அன்றைக்கு அப்படியிருந்தது!

என்றாலும்….
கோணம் மாற்றி
சுப்ரீம் கோர்ட் படிகளில்
அது ஏறியது!
ஜனாதிபதியிடமும்
மனு கொடுத்தது.

‘இத்தாலிய சோனியா
இந்தியாவுக்கு பிரதமரா?’
கோபமான வழக்காக
ஆதங்கமான மனுவாக!
சீறித் தீர்த்தது!

‘நீங்க போங்கோ…
நான் பாத்துக்க மாட்டேனா….
நீங்க பயப்படறது மாதிரி
ஒண்ணும் ஆவாது…
நான் உங்க வீட்டு சமர்த்தோனோ..”
ஜனாதிபதி கலாம்
களமிறங்கி தைரியம் சொன்னார்!

‘இத்தாலிய சோனியா
இங்கே பிரதமரா?
ஆகட்டும் முதலில்….
பிறகு பார்த்துக் கொள்ளலாம்!
நாங்கள் எதற்கு இருக்கிறோம்?”
இது சுப்ரீம்!

பி.ஜே.பி.
இந்த விதமாய் வழக்குத்
தொடர்ந்ததற்குப் பதிலாக
மேலே நான் கூறிய மாதிரி
‘அனுபவப் பாத்தியம்’ கேட்டே
வழக்குத் தொடர்ந்திருக்கலாம்.
அடமும் பிடித்திருக்கலாம்.

‘இந்தியா ஒளிர்கிறது’ யென
ஒரு ‘ரைமுக்கு’ சொன்னோம்.
அதற்காக…..
இந்த மக்கள் 
இத்தனைக்கு ஆத்திரப்பட்டு
தள்ளிக் கதவைச் சாத்துவார்களென
கனவிலும் நினைக்கவில்லை!’
கூடுதலான
சென்டிமெண்டோடு 
கசிந்துருகியிருக்கும் பட்சம்
சாதகம் நடந்திருக்கும்
பி.ஜே.பி.யின் பக்கத்தில்….
நானில்லாமல் போய்விட்டேன்
ஜஸ்ட் மிஸ்ஸ்டு!

எல்லாம் ஆனது!
பதவியேற்கும் நாளில்
சோனியா காந்தி….
பிரதமர் நாற்காலியை
‘வேண்டாம்’
என்று விட்டார்!
போற்றுதலுக்குரிய
அந்த மனித மேன்மையை
எள்ளி நகையாடிய பி.ஜே.பி.
பாதாளம் பார்க்க
இன்னும்கூட
கீழே போய்ச் சேர்ந்தது.

அடுத்து நடந்தேறிய நிகழ்ச்சி
இந்திய வரலாற்றின்
புதிய பக்கம்!
திராவிடக் கழகத் தலைவர்
கி. வீரமணி கூறியபடி
அதை வாசிக்கலாம்.
‘கிருஸ்துவப் பெண்ணான சோனியா
வழிமொழிய
இஸ்லாமியரான கலாம்
பதவிக் கையளிப்பு தர
பஞ்சாபியரான மன்மோகன் சிங்
பிரதமராகிறார்!
இந்தியா மத சார்பற்ற நாடு என்பதற்கு
இதுதான் சரியான சான்று!’

இந்தக் கணிப்பின்
தாத்பரியத்தை உணர்ந்த
பி.ஜே.பி.யின்
அகவுலகக் கூப்பாடு
இரட்டிப்பாக்கியிருக்கும்!
அவர்களின் பௌத்திரம்
நசிந்து போக
சுயத்திலும் அது
இடியாக இறங்கியிருக்கும்!

இன்றைக்கு….
பி.ஜே.பி. காட்டும்
தேர்தல் முனைப்புக்கும்
திசை தெரியாத முழிப்புக்கும்
வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட
புதிய பக்கச் சங்கதிதான் காரணம்

இனியொருதரமும்…
அப்படி அது நடந்துவிடக் கூடாது
அந்த பீடத்தை…
தங்களன்றி எவரும் தொட்டும்
கறைபடுத்தி விடக்கூடாது!

இதன் பொருட்டான
கவனத்தால்தான்
இந்த தேர்தலில் அது
அலையோ அலை…
கத்தோ கத்து!
எதிர் கட்சிகளின் மீது
தினம் ஒரு புதுசாய்
விதவிதமான குற்றச் சாட்டுகள்!
 
கிரிக்கெட்டில் துவங்கி
வருண் வழியாக
வட மாநிலங்கள் தேய்கிறது பாடி
ராமர் கோவில் கட்டுமானம்
ராமர் பாலம் இடிப்பு
ஸ்விஸ் பேங்கில் இந்தியப் பணம்
பொய் மதச்சார்பின்மை
நாட்டைப் பாதுகாக்க சட்டமில்லை
என்பதாக தொடரும்
அதன் குற்றச்சாட்டுகளின்
பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
அந்த வரிசையில்
பிரதான இடம் வகிப்பது
மூன்று!

1. மன்மோகன் சிங்:
சோனியாவின் சொல்லுக்கு
ஆட்சி செய்யும் பிரதமர்!
சுயமற்றவர்!
பலமற்றவர்!
பொம்மை!

2. தீவிரவாதத்திற்கு எதிராக
காங்கிரஸ் ஆட்சி
எந்த ஒரு கடுமையான
நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை!

3. காங்கிரஸ் ஆட்சியில்
இந்தியப் பொருளாதாரம்
வீழ்ந்து விட்டது!
விலைவாசி உயர்ந்து விட்டது.

இம் மூன்று குற்றச் சாட்டையும்
பி.ஜே.பி. முன்பே பலதரம்
மேடைகளிலும், மீடியாக்களிடத்திலும்
பிரஸ்தாபித்தது போதாதென்று
இப்பொழுது மீண்டும்!

இந்தியா தழுவி நடைபெறும்
இந்தப் பாராளுமன்றத் தேர்தலில்….
ஆளும் கட்சிக்கு எதிராக
வலுவான குற்றச்சாட்டுகளை வீசி
கிடுகிடுக்க வைக்க
அதனிடம்…
கனம் கொண்ட பண்டமென்று
ஒன்றுமில்லை!
ஒரு காலக்கட்டத்தில்
அதனுடைய வீரியமும்
மஹாத்மியமும் வாவ்…..!
ஒரு பாட்டில் வயகராவை
ஒரே நேரத்தில்
கொட்டி விழுங்கிய எழும்பலாய்
குதியாட்டம் போட்டது!
போதுமென
அவர்களே நினைத்தாலும்
அடங்க மாட்டாத ஆட்டம் அது!

பாரதமாத…
சகல சௌபாக்கியத்தோடு
புஷ்டியாய்….
ஜொலிப்பில் உய்க்க அன்றைக்கு
பாரதிய ஜனதா எந்தவொரு
பொருளாதார
சித்தாந்தத்திற்குள்ளும் போனதில்லை
நேரத்தை செலவழித்து
மண்டையை உடைத்தும் கொண்டதில்லை
ஒற்றைக் கேள்வி மட்டுமே
அதன் நேற்றைய மூலதனம்!

‘பாபர் மசூதியை இடித்து
ராமருக்கு கோவில்…..!
வேண்டுமா? வேண்டாமா?”
எளிமையான அந்த
ஒற்றைக் கேள்வியோடு மட்டும்
நாடெங்கும்
ஜனத் திரளுக்குள்
ரத யாத்திரை போய்
ரத்தக் காவெடுத்து
தீப-கர்ப்பத்தையே
கிடுகிடுக்க வைத்தது!
இன்றைய அதன் தேர்தல் பிரச்சாரமும்
எழுப்பும் குற்றச் சாட்டுகளும்
சுரத்தேயில்லை.
நமுத்துப் போன… ஊசிவெடி!

பி.ஜே.பி.யின்
பிரதான குற்றச்சாட்டுகளை
ஆய்வு செய்யும் நேரமிது
ஓட்டுப் போட இன்னும்
பதிமூன்றே
நாட்கள் இருக்கும் வேளையில்
யோசிப்பது தகும்
யோசிப்பதற்கு
காசா… பணமா? மிரள்!

பிரதமர் மன்மோகன் சிங்கை
பி.ஜே.பி.
பொம்மை என்கிற போதெல்லாம்
சிரிப்பு வருகிறது!
பார்க்கவும் அப்படித்தான் இருக்கிறார்.
டர்பன் முண்டாசோடு
தாடி வளர்த்த பொம்மை!
பஞ்சாபி பொம்மை!
வெடுக் வெடுக்கென நடை நடக்கும்
இத்தினூண்டு சைஸ்ஸில்
பேசும் பொம்மை!

நிஜத்தில்…?
மன்மோகன் சிங்
இந்தியாவின் உயர்ந்த மனிதர்!
அரசியலின் அரசியலில்
தேர்ந்த செஸ் பிளேயர்!
நாட்டின் பொருளாதார கேமில்
உலக நாடுகள் கவனிக்கும்
ஆல்ரவுண்ட் மாஸ்டர்!
அமெரிக்காவுடன்
இந்தியா செய்துகொண்ட
அணுசக்தி ஒப்பம் பொருட்டு
பாராளுமன்றத்தில் நடந்த
அரசியல் ‘WWW’வில்
அந்த பொம்மை….
வாமன அவதாரம் எடுத்தது!
பாரதிய ஜனதாவும்
கம்யுனிஸ்டுகளும்
ஒரே நேரத்தில் அவுட்!
 
‘மன்மோகன் சிங்
சோனியாவின்
கட்டளைபடி நடக்கிறார்’
பாரதிய ஜனதாவின்
ஆதங்கமான குற்றச்சாட்டுகளில்
இதுவும் ஒன்று.

ஆமாம்!
அப்படிதான் நடக்கிறார்.
அதில் என்ன தப்பு வந்துவிட்டது?

‘நானே பிரதமர்
நானே அரசாங்கம்
என் வார்த்தைகளே சட்டம்!’ என
மன்மோகன் நடந்துகொள்ளும் பட்சம்…
தவறு!
அது டிக்டேட்டர் தனம்!
ஜனநாயத்தின்
நேர் எதிர்ச் சங்கதியும் கூட!
 
ஜனநாயக அமைப்பில்
இண்டிகேட்/ சிண்டிகேட்
கட்டாயம்.
பிரதான அங்கம்
மன்மோகன் சிங்…
காங்கிரஸின் இண்டிகேட்!
சோனியா…
காங்கிரஸின் சிண்டிகேட்!
கட்சித் தலைவர் சொல்வதை
பிரதமர் காரியம் ஆற்றனும்.
அதாவது…
சிண்டிகேட் சொல்வதை
இண்டிகேட் கேட்டாகனும்
அதுதானே
ஜனநாயகத்தின் கேட்பாடு!
அதுதானே
ஜனநாயக நாடுகளில்
அமுலில் இருக்கும் முறை!

ஒருசமயம்….
காங்கிரஸ் பிரதமர்
பாரதிய ஜனதாவின் சொல்கேட்டு
ஆட்சி புரிகிறார் என்றால்
அதுதான் தவறு!
அவமானமும் கூட!

அன்றைக்கு….
இந்திரா
சர்வ வல்லமையான
பிரதமராக உருக்கொள்ள
நாடே மிரளவில்லையா?
எமர்ஜென்சியையும்
அவர் அமுலாக்கி வலிமை கொள்ள
ஜனநாயகம் பாராட்டும்
அத்தனை இந்திய கட்சிகளும்
அவரை எதிர்க்கத்தானே செய்தது!
மாறாய்….
பிரதமர் வல்லமை கொள்கிறாரென
பாராட்டியதா என்ன?
 
இன்றைய பாரதிய ஜனதாவின்
நேற்றைய கோரமுகம்
ஜனசங்க கட்சியும்
(மஹாத்மாவை கொன்னுபோட்ட கட்சிங்கோ…)
இந்திரா எதிர்ப்பில் பங்கெடுத்தது.
அந்தப் பங்கெடுப்பு நிஜமென்றால்….
பிறகு எதற்கு
இன்றைக்கு பாரதிய ஜனதா
மன்மோகனை
இந்திராவாகச் சொல்கிறது?
வார்த்தை சூட்சமம் உண்டு!!

‘சோனியாவின் பேச்சைக் கேட்டு
மன்மோகன் நடக்கிறார்!’
பி.ஜே.பி.யின் இந்தக் குற்றச்சாட்டு
கவிதைத்தனம் கொண்டது.
நேரடியாக யோசிப்பவனுக்கு
மன்மோகன் பாவமாக
நடத்தப்படுகிறார் என்றும்
சற்றுக் கூடுதலாக
மண்டையை சொறிபவனுக்கு
ஒரு மண்ணும் விளங்காத
குழப்பமாகவே புரியும்

பி.ஜே.பி.க்கு கோஷம்
வடித்துக் கொடுப்பவர்கள்
சாதாரண நபர்கள் அல்ல!
இதற்காகவே பி.ஹெச்.டி செய்தவர்கள்!
அதனால்தான்….
காலத்தையும் மறந்த கோலமாக
கோஷத்தை வடிக்கிறார்கள்!

‘சோனியாவின் பேச்சைக் கேட்டு
மன்மோகன் நடக்கிறார்!’
இந்த குற்றச்சாட்டை சரியாக
புரிந்து கொள்ளும் முறை என்பது…..
‘சோனியா’ யென
அவர்கள் உச்சரிக்கும் உச்சரிப்பில்
அவர் இத்தாலிக்காரர்!
கிருஸ்துவர்!
இந்தியரான மன்மோகனுக்கு
உத்தரவு போடுகிறார்
மன்மோகனும் வெட்கமற்று
இத்தாலிக்குப் பணிகிறார்!
பாரதத்தின் தொன்மையும்
மான மரியாதைகளும் என்னாவதென
அவர்களது மொழியை
தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதன் பொருட்டு
கோபம் கொள்ள வேண்டும்.

வெறுமனே
கோபப்பட்டால் மட்டும் போதாது
செயலில் காண்பிக்க வேண்டும்!
பி.ஜே.பி.க்கு அதை வாக்காக
மாற்றித்தரவும் வேண்டும்.

சரி…
சோனியாவின் பேச்சைக் கேட்பதாக
மன்மோகன்சிங்கை
பாரதிய ஜனதா
விமர்சிப்பதெல்லாம் சரிதான்.
அங்கே என்ன கதை?
ஆர்.எஸ்.எஸ்.ஸின்
கக்கூஸ் கதவு கிறீச்சிட்டாலும்
பாரதிய ஜனதாவினர்
அரக்கப்பரக்க
எழுந்து நிற்கிறார்களே ஏன்?
அங்கே அவர்கள் தும்மினால்
இங்கே இவர்களுக்கு
வேர்க்கிறதே ஏன்?ஏன்?
ஆர்.எஸ்.எஸ். உத்தரவு இல்லாமல்
பி.ஜே.பி.யினர்
ஒன்றுக்குகூட போக முடியாத
சூழ்நிலை நிலவுகிறதே
இது எந்த ரகம்?

மன்மோகனாவது
தனது சொந்தக் கட்சியின்
தலைக்குத்தான் பணிகிறார்.
பி.ஜே.பி.யினர் ஏன்
இன்னொருகட்சியின்
சொல்லுக்கு ஆடவேண்டும்?

இன்றைக்கு…
பி.ஜே.பி.யின்
பிரதமர் வேட்பாளராக
அறியப்படும் அத்வானி
சில ஆண்டுகளுக்கு முன்
பாகிஸ்தானுக்கு…
சுற்றுலா சென்றிருந்தார்!
அங்கே போனவர்
சிவனேயென (ராமனேயென!) திரும்பாமல்
முகம்மதலி ஜின்னாவைக் குறித்து
இரண்டு நல்ல வார்த்தைகளை
பல்லிடுக்கால் கசியவிட்டுவிட்டார்.
அந்தக் கசிவிற்காக….
ஆர்.எஸ்.எஸ்.ஸின்
பெருசு, மத்திமம், சின்னதுகள் வரை
வார்த்தைகளால்
அவரைக் குதறி எடுத்ததையும்
மறக்க முடியுமா?
அந்த மானமரியாதைகளோடுதான்
இன்றைக்கு அவர்
பிரதமருக்கான வேட்பாளர்!

பி.ஜே.பி.யின் முதல் குற்றச்சாட்டின்
அழகைப் பார்த்தோம்.
இப்பொழுது…
இரண்டாவது!

தீவிரவாதத்திற்கு எதிராக
குரல்தரும் பி.ஜே.பி.
அதைத் தடுப்பதற்கு
போதுமான சட்டமில்லை என்கிறது.
தீவிரவாதிகளுக்கு
காங்கிரஸ் துணைபோவதாகவும் சொல்கிறது.

தீவிரவாதத்தைப் பற்றி
பேசுவது யார்?
பி.ஜே.பி.யா?
இந்தக் கேள்வியை சபையில் எழுப்ப
அதற்கு தார்மீக உரிமை உண்டா என்ன?

இந்த நாடாளுமன்ற தேர்தலில்
‘கிரிமினல்கள் பலர்
வேட்பாளராக நிற்கிறார்கள்!’
என்கிறது தேர்தல் கமிஷன்!
அந்த கிரிமினல்களில்
எழுபது சதவீதம் பேர்
பாரதிய ஜனதா என்கின்றன மீடியாக்கள்!
தவிர….
அந்தக் கட்சியின்
பிரதம வேட்பாளரே
பாபர் மசூதி இடித்த தீவிரவாத வழக்கில்
இன்னும்…
நெருங்க முடியாதவராக இருப்பவர்.

மாலேகான் குண்டு வெடிப்பில்
சம்பந்தப்பட்ட
பி.ஜே.பி. சாமியார்களையும்
ராணுவ அதிகாரியையும்
போலீஸ் கைது செய்த போது..
அதற்கு எதிராக
முழக்கங்கள் செய்த கட்சி பி.ஜே.பி.!

அப்பொழுது நடந்த
நான்கு மாநில தோர்தல்களிலும்
அந்தக் கைது எதிர்ப்பு முழக்கத்தை
மேடைகளில்…
எதிரொலிக்கவிட்டு
பரப்பிய கட்சி அது!

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள்
கோவில் மேலாளர் சங்கரராமன்
அந்தக் கோவில் வளாகத்திலேயே
வெட்டிக் கொல்லப்பட்ட போது…
தமிழக அரசு
சங்கரமட சங்கராச்சாரி
ஜெயந்திரரை
முதல் குற்றவாளியாக
கைது செய்து சிறையில் அடைத்தது.
அந்தக் கொலைக் குற்றவாளியின்
கைதுக்காக / சிறையடைப்புக்காக
இந்தியா முழுவதும்
பந்த் நடத்திய கட்சி பி.ஜே.பி.!

குஜராத்தில்
முஸ்லீம்கள் வீதி வீதியாய்
பற்றி எரியக் காரணமான
நரேந்திர மோடிக்கு
இன்னமும் வெண்சாமரம் வீசுகிற கட்சி
இந்த பி.ஜே.பி.!

மாதம் தவறாமல்
ஒரிஸாவில் கிருஸ்துவர்களை
கொளுத்திக் குளிர்காய்கிற கட்சியும்
இந்த பி.ஜே.பி.தான்!

நாள் தவறாமல்
மஹாராஷ்ட்ராவில்
சிவசேனா அரங்கேற்றும்
தீவிரவாத லொள்ளுகளுக்கு
துணைபோகிற கட்சியும் கூட
இந்த பி.ஜே.பி.தான்

பி.ஜே.பி.யின்
வெளிப்படையான தீவிரவாதத்தால்
பாபரி மசூதி இடிக்கப்பட்ட போது
நாடு முழுவதும்
அதையொட்டி நிகழ்ந்த கலவரத்தில்
கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை
ஐந்தாயிரத்திற்கு மேலானது!
அத்தனை உயிர்ச் சாவுக்கும்
இன்றுவரை
பொறுப்பேற்காத கட்சியும்
இந்த பி.ஜே.பி.தான்!

பம்பாய் கலவரத்திற்குப் பிறகு
ராணுவ அமைச்சராக
பொறுப்பேற்ற ப.சிதம்பரம்
தனது முதல் செயல்பாடென்று
ரொம்பவும் பொறுப்பாக
லால் பிரசாத் அத்வானியை அழைத்து
பக்கத்தில் அமரவைத்துக் கொண்டு
தீவிரவாதத்திற்கு எதிராக வென்று
ஆள்பிடி / கேள்வியற்று சிறைபிடி
சட்டங்கள் செய்ய…
அத்வானியும் அதை ஒப்புதல் செய்தாரே!
பி.ஜே.பி. அதை அறியாதா?
பின் ஏன்…
தீவிரவாதத்திற்கு எதிராக 
வலுவான சட்டமில்லை என்கிற புலம்பல்?

தீவிரவாதத்தைப் பற்றி பேசவோ
வலுவான சட்டமில்லை
என்று புலம்பவோ
நிஜமாலுமே பி.ஜே.பி.க்கு
தார்மீக உரிமை இல்லை!

அத்வானி உள்துறைக்கு
கேபினட் மந்திரியாக இருந்தபோதுதான்
தீவிரவாதிகள்
இந்திய விமானத்தைக் கடத்தி
கந்தஹாரில் வைத்துக் கொண்டு
இந்திய சிறையில் இருந்த
அவர்களின் சகாக்களை
பணயமாகக் கேட்டார்கள்.
அந்த தீவிரவாதிகளின் சகாக்களை
கந்தஹாரில் கொண்டுவிட்டுவிட்டு
‘அப்படி ஒரு சம்பவம் நடந்தது
எனது நாலெட்ஜூக்கே வரவில்லை!’
என்றும் சொன்னவர்
இந்த அத்வானி!
இவர்கள்தான்
தீவிரவாத எதிர்ப்பு பற்றி
அக்கறைகொண்டு பேசுகிறார்கள்!

பி.ஜே.பி.
மத்திய அரசை ஆண்டபோதுதான்
கார்க்கில் போர் நடந்தது.
இந்திய ராணுவம் முன்னேறி
வெற்றிகளைக்
குவித்துக் கொண்டிருக்கும் போது
அமெரிக்கா சொல்கிறது என்பதற்காக
அந்தப் போரை நிறுத்திக் கொண்டதோடு
நம்மிடம் சிக்கியிருந்த
பாகிஸ்தான் ராணுவத்தினர் விரைவில்
எல்லைகடந்து போக
பஸ்களைக் கொடுத்துதவி
அவர்களுக்கு போக்குவரத்தை
ஒழுங்குசெய்து தந்தவர்களும் இந்த இவர்கள்தான்!!
இந்த இவர்கள்தான்…
இன்றைக்கு
நாட்டின் அக்கறைப் பற்றியும்
தீவிரவாதத்தின்
எதிர்ப்பு பற்றியும் பேசுகிறார்கள்!!

நேற்று நடந்ததெல்லாம்
இன்றைக்கு மறந்துப் போகும்
நாட்டில்…
பி.ஜே.பி.யின் வாதங்கள் ஜெயிக்கும்!
(எல்லா கட்சிகளுமே
மக்களின் மறப்பை நம்பிதான்
அரசியல் செய்கிறது என்பது
இங்கே துணைச் செய்தி.)

பி.ஜே.பி.யின்
மூன்றாவது
பிரதான குற்றச்சாட்டாய் வருவது…
இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சியும்
பொருட்களின் விலையேற்றமும்!

இது மிகச் சரியான குற்றச்சாட்டு
எந்தக் கொம்பனாலும் மறைக்க முடியாது.
யதார்த்தம்
தினந்தோறும் மார்கெட்டில்
தாண்டவம் ஆடும் போது
யார்தான் இல்லையென முடியும்!

இந்த வறுமையான காலக்கட்டத்திலும்
அட்சயத்திருதியையின் போது
சென்னை.. தி.நகர் போன்ற
நகர ஏரியாக்களில்
தங்கம் வாங்க
கூடும் கூட்டத்தைக் காணுகையில்
நிஜமாலுமே நம் பொருளாதாரம்
வீழ்ந்துதான் கிடக்கிறதா?
சந்தேகம்கூட எழுகிறது.

எனக்குத் தெரிந்து
மொராஜி தேசாய்
பிரதமராக ஆட்சி புரிந்த
காலகட்டத்தில்தான்
இந்தியப் பணத்தின் மதிப்பு
(அதுவும் இந்தியாவுக்குள் மட்டும்தான்)
நிலையாக இருந்தது.
விலைகளின் ஏற்றத்தை
கஷ்டப்பட்டு
கட்டுக்குள் வைக்கப்பட்டது.
உலக திறந்தவெளிச்
சந்தை ‘ஸ்டைல்’-ஐ
இந்தியா இழுத்துக் கழுத்தில்
மாட்டிக் கொள்ளாத நேரமது!
சின்ன வட்டத்திற்குள்
மொராஜியின்
கவனமும் நெருக்குதலும்
செல்லுபடியானது
இன்றைக்கு…
அது நடக்காது என்பதும்
வாஸ்தவம்.
அமெரிக்காவில் பனிப்பொழிவென்றால்
இங்கே ஜலதோஷம் காணும் காலமிது
அமெரிக்காவில்…
இன்றைக்கு கஞ்சித்தொட்டி திறப்பதாகச் செய்தி
இன்னும் இங்கு அது இல்லை!
அதுவரை மன் மோகன் சிங்
சமர்த்தானவர்தான்!

என்னவோ….
பி.ஜே.பி. ஆண்டபோது
முக்கா ரூபாய்க்கு
ஒரு கலம் நெல்லும்
எட்டு ரூபாய்க்கு
ஒரு பவுனும் விற்ற கணக்கில்
அவர்கள் மன்மோகனை
குற்றம் காண்பதுதான் வேடிக்கை!

***

நன்றி : தாஜ்
satajdeen@gmail.com

***

சுட்டி : Bharatiya Janata Party – The Party with a Difference !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: