இஸ்லாமியக் கட்சிகள் : நடப்பு – நான் – மற்றும் ஏதேதோ!

taj1
இஸ்லாமியக் கட்சிகள் : நடப்பு – நான் – மற்றும் ஏதேதோ!

தாஜ்

அன்புடன்…
ஆபிதீன்

சிறுபான்மையின
இஸ்லாமியர்களைக் குறிவைக்கும்
அகில இந்திய
ஆளும் கட்சி / எதிர் கட்சிகளின்
அரசியல் சதிகள்!
அதை எதிர் கொள்ளும்
இஸ்லாமிய கட்சிகளின்
வேடிக்கைகள்
வேதனைகள் என்று…..

இந்த முரண்களின்
குறுக்கு வெட்டுத் தோற்றத்தை
உங்களோடு பகிர்வதில்
கொஞ்சம் ஆறுதல் உண்டு.

“வேறு வேலையே….
இல்லையாய்யா உனக்கு?”
வேறு யார் என்னை
இந்த அழகில் திட்ட முடியும்!
அந்த அழகைத்தான் எத்தனையெத்தனை
சேர்த்து வைத்திருக்கிறேன்!
அது தரும் கிளர்ச்சியும் ஆறுதல்தான்!!

*
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு….
தமிழக இஸ்லாமியர்களில்,
கல்வி / கேள்வி
வாய்த்தவர்களிடையே
துளிரும் அரசியல் ஆர்வம்
பச்சைப் பசேல்!
சிலிர்க்கவைக்கும் பிரமிப்பு!

*
இஸ்லாமியனாகப் பிறந்தோமா…
மதரஸாவுக்குப் போனோமா
‘அலிஃப்…பே…’ ஓதினோமா
‘கலிமா’ சொல்லக் கற்றுக் கொண்டோமா
‘சுன்னத்’ செய்து விட்டதைப்
பார்த்தபடிக்கு திரிந்தோமா
எலிமெண்ட்ரியில் தொடங்கி
ஹைஸ்கூலில் தடுமாறி
படிப்பை இழுத்து மூடினோமா
பாஸ்போர்ட் எடுத்தோமா
விசிட்-ல் மலேசியா போய்
‘ஓவர் ஸ்டே’யெனப் பதுங்கி
‘சாப்பாட்டுக் கடை’யில்
புரோட்டாவுக்கு மாவு பிசைந்தோமா
அல்லது….

சென்னை / மும்பாய்
ஏஜண்ட்டுகளிடம்
வழிமுறையாய் ஏமாந்தோமா
வெம்பி நொந்து
தொடர்ந்த முயற்சியென
அரபு நாடுகளில்
போய் விழுந்தோமா
A/C அலுவலகங்கள்,
A/C பங்களாக்களென
சொல்லிக் கொண்டு 
கக்கூஸ் கழுவினோமா,
‘பலுதியா’ பணியென்று
‘பீத்திக்கொண்டே’
தெரு பொறுக்கினோமா,
பெரிய அரபி கம்பெனியில்
வேலையென தம்பட்டம் அடித்து
அரபிகளுக்கு எடுபிடி
வேலைகள் செய்தோமா…. யென
‘பதுவுஸாய்’தான் இருந்தார்கள்
நமது வளரும் சமூகத்தினர்கள்
வேறு மார்க்கம் தெரியாது!
ஒரே இறைவன்… ஒரே பாதை!

*
அந்தச் செல்லங்களை
மறைமுகமாகத் தூண்டி
காலம் காலமான
அவர்களின் மந்தை வழி
சிந்தனையைச் சிதைத்து
வாழும் உலகத்தின்
யதார்த்தம் உணரவும்,
அதை எதிர்கொள்ள….
பெரிய பெரிய படிப்புகளை
கண்டுத் தெளியவும்
தீரப்  படிக்கவும்
இன்னும் மேலாய்
‘மஹா’ பாரதத்துக்குள்ளே
இருத்திவைக்கவும்
பெரிய உதவிகளை வழங்கிய
பெருமைகள் அனைத்தும்
R.S.S மற்றும் இந்துத்வா
அரசியல் பிரிவினர்களையே சாரும்!

*
இஸ்லாமியர்களை
இந்திய மைய அரசு
கட்டம் கட்டி
ஏமாற்றி வருகிற…
ரகசிய உண்மையை
இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள்
கண்டு தெளிந்திருக்கிறார்கள்!

சுகந்திரம் அடைந்து
இந்த அறுபது
ஆண்டுகளுக்குப் பிறகு
தேச அரசியலில்
அவர்கள்….
தங்களது உரிமைகளை மீட்டெடுக்க
மரியாதையோடு வாழ…
போராட்டகாரர்களாய் களத்தில்
ஆர்ப்பரித்து நிற்கிறார்கள்!

அவர்களது பார்வையில்
இன்றைக்கு……
காங்கிரஸும் பி.ஜே.பி.யும் ஒன்று!
இஸ்லாமியனை பழிதீர்ப்பதில்
ஒன்று மிதவாதம்
இன்னொன்று தீவிரவாதம்
அவ்வளவே
வித்தியாசம் காண்கிறார்கள்!
மசூதியை இடிப்பது ஒரு கட்சியென்றால்..
அதற்கு பாதை திறந்துவிடும்
வேலையைச் செய்வது
இன்னொரு கட்சி!
சின்னக் கணக்கு
குழப்பமே இல்லாமல்
புரிந்துவிட்டது அவர்களுக்கு!

*
எல்லா இன மக்களுக்கும் மாதிரி
இஸ்லாமியனுக்கும் 
தேசியம் வழங்கி…

உரிமைகள் அத்தனையும்….
குழித்தோண்டிப் புதைத்து
மூச்சுக் காற்றால் காபந்தும் செய்த
அந்த இரு அரசியல் கட்சிகளின்
நீண்ட நெடிய 
சாணக்கியத்தனமான ஒப்பந்தம்
இன்றைக்கு சந்திக்கு வந்துவிட்டது!

*
இந்த மக்களவை தேர்தல்-2009ல்
தனது வெற்றிக் குறித்து
சந்தேகிக்கும் பி.ஜே.பி.
தனக்கு ஒத்த மாற்றான
அல்லது…
மேடை எதிரிமட்டுமேயான காங்கிரஸ்
தோற்றுவிடக் கூடாது என்று
கவலைப்படுவதாகப் படுகிறது.
மூன்றாம் அணி குறித்த
அதன் அதீதப் புலம்பலே
அந்த எண்ணவோட்டத்தை
எளிய அத்தாட்சியாக கொண்டு கணிக்கலாம்.

தேர்தல் முடிவு
வெளிவரும் நாளில்
பாராளமன்ற சிம்மாசனத்திற்கு
காங்கிரஸ் தாழ்ந்து
மூன்றாம் அணி கெலிக்குமேயானால்…
பி.ஜே.பி. நிச்சயம் வெளியில் இருந்து
அதற்கு ஆதரவு தரும்!
முன் உதாரணம் உண்டு.
நிச்சயம் நம்பலாம்.


அரசியலில் இந்த மேல்மட்டத்து
சித்து வட்டம் புரியவர
எனக்கெல்லாம் 
முப்பது வருடமானது!
“காங்கிரஸை நம்பாதீங்க
அது…
பார்ப்பனின்
கைப்பாவையாக ஆகிவிட்டது”
சொல்லத்தான் செய்தார் பெரியார்.
அப்போதே யோசித்திருக்கனும்.
அறிவு போதவில்லை.
‘காமராஜுக்கு ஜே’யென 
காங்கிரஸுக்கு வக்காலத்து வாங்கிய
என்னை ஒத்த இஸ்லாமியர்கள்
கொஞ்சநஞ்சமல்ல!!

*
இன்றைய வளரும்
இஸ்லாமிய சமூகத்தினர்கள்
அரசியலில் ஈடுபாடு கொள்வதும்
உரிமைகளுக்கு போராடுவதெல்லாம் சரி!
ஆனால்….
இவர்கள் அரசியலில் கால் வைத்ததுமே
பிற அரசியல் கட்சிகளின்
முத்திரைத் தனங்களையும்
சுவீகரித்துக் கொள்கிறார்கள்.

பதவி ஆசை/ பண ஆசை/ பறக்க ஆசை / 
தின்ன, தூங்க ஆசை/ சுக ஆசை/
சொத்துக் குவிப்பாசை யென
அத்தனை முத்திரைத் தனங்களுடனும்
ஓஹோ வென
வலம்வர முனைகிறார்கள்.
வாரத்திற்கு ஒரு தரம்
தாங்கள் இருந்துவரும் கட்சிகளை
கட்டாயம் கஷ்டப்பட்டு பிளக்கிறார்கள்.
கொஞ்சமும் வெட்கப்படாமல்
அடுத்த கட்டமாய்
கணக்கு வழக்கு சண்டையில்
இறங்கிவிடுகிறார்கள்.
விழித்துக் கொண்டிருக்கும்
சமூகத்தைப் பற்றி
கிஞ்சித்தும் கவலையில்லை.

இவர்கள் எல்லாம்…
கிளம்பித் துளிர்விட்டு
பச்சைக் காடாய் தழைத்த
ஒவ்வொரு கூட்டத்திலும்
பாபர் மசூதி இடிப்பை
மையப்படுத்தி
சொந்தச் சகோதரர்களை
உணர்வு பூரணமாய்
கிள்ளித் துடிக்கவிட்டு
துடிக்கவிட்டு…
இன்னும் இன்னும் அடர்ந்து
பிரமிக்கவைத்தவர்கள்!
தங்களது நேர்மை பொருட்டு
கூட்டம் தவறாமல்
இறைவன் மீது
சத்தியம் செய்துவந்த உத்தமர்கள்!
ஒற்றுமையின் கயிற்றை எல்லோரும்
பற்றிப் பிடியுங்கள் என்கிற
மாநபி வாசகத்தை
இந்த இவர்கள்தான்
தங்கள் இன சகோதரர்களுக்கு
கதறிக் கதறி போதித்தவர்கள்!

*
பெரிய இஸ்லாமிய கட்சிகளுக்கு
மண்ணடியும், லிங்கிச் செட்டி தெருவும்,
பெரிய மேடும் நிலைக்கொள்ளும் ஸ்தலம் என்றல்….
அடுத்த ரக கட்சிகளுக்கு
திருவல்லிக்கேணி சந்து பொந்துகள்!
எனக்குத் தெரிந்து
அங்கத்திய மேன்சன்களில் 
ஏகப்பட்ட முஸ்லீம் கட்சிகளின்
அலுவலகங்கள்!
குறிப்பிடத்தகுந்த கட்டிடங்களின்
முதல் தளத்தில் தொப்பியோடு
அலைபவர்கள் எல்லாம் அவர்கள்தான்!
இந்த இஸ்லாமிய கட்சிகள் எல்லாவற்றிற்கும்
கொடியுண்டு / தலைவன் உண்டு /
தொண்டர்கள் உண்டா?
தெரியாது.
நாலுபேர்கள் கூடினால்
ஒரு கட்சி உதயம் என்கிற கணக்கில்
சொறிந்துவிட்டுக் கொள்ளும்
அரிப்புகளின் அமைப்புகளுக்கு
தொண்டர்களும் தேவையா என்ன?

நபிகள் நாயத்தின் பிறந்த தினவிழா/
காயிதே மில்லத் நினைவு தின விழா/
நோன்பு காலத்தில் இஃப்தார் விழா யென
சம்பிரதாய வைபவங்களை
தட்டாது நடத்துவதென்பது
இந்த ‘ரப்பர் ஸ்டாம்ப்’
இஸ்லாமிய கட்சிகளின் சீரிய பணி.

அவர்கள் நடத்தும் அந்த விழாக்களில்
தங்களுக்கு இஷ்டப்பட்ட
திராவிடக் கட்சிகளின்
தலைவர்களை அழைத்து
‘காரிய’ சிரிப்பு சிரித்து
குழைந்து பணிந்து…
விடைதந்த மறுநாளே
அந்த தலைவர்களின் வீட்டு வாசலில்
பல்லைக் காட்டிக் கொண்டு
நிச்சயம் போய் நிற்பார்கள்.
சிறுபான்மையின வாரியத்தில்
ஏதேனும் ஒரு துக்கடா பதவி
பெறாமல் திரும்ப மாட்டார்கள்.

பெரிய / சிறிய / இத்தினூண்டு
இஸ்லாமிய கட்சிகள் அத்தனையும்
அங்கே….
அவர்களது அலுவலக ஸ்தலங்களில்
அவர்களுக்குள்ளாக
பிறாண்டிக் கொண்டிருப்பது/
துண்டுவிழும் நேரங்களில்
சகோதர அமைப்புகள் பற்றி
குறை சொல்லி
கிண்டிக்கிளரி மகிழ்வது/
அவர்களின் அன்றாட பொழுது போக்கு!
அடித்துக் கொள்வதென்பது
மாதந்திரப் பணி!
இப்படி சகிக்க முடியாது
கோணல் கோணலாய்
வளர்ந்து முகம்காட்டி
தேர்தல் காலங்களில்
இரண்டு பெரிய
திராவிட கட்சிகளிடமும்
கூட்டணி என்று அணுகுவதும்
தொகுதிகள் கேட்டு
அவர்களது அலுவலக
வறாண்டாவில் திரிவதென்பதும்….
அவலம் தோய்ந்த நகைச்சுவை!

*
சென்ற வாரத்தில் ஒரு நாள்…..
இரவு எட்டைத் தொடும் நேரம்!
எங்களது ஊரின்
சின்னக் கடைத்தெருவென அழைகப்படும்
எங்களது பகுதியில்
கை விரலிடுக்கில் சிகரெட் புகைய
யாரோடோ பேசிக்கொண்டிருக்கிறேன்.

கையில் கத்தைத் தாளோடு
தொப்பி, தாடி சகிதமாய்
ஐம்பதுக்கும் குறையாத ஒருவர்
என் அருகில் வந்து
‘சலாம்’ சொன்னார்!
பொதுவாக என்னிடம்
‘சலாம்’ சொல்பவர்கள் குறைவு!
தொப்பி தாடிகள்…
என் அருகில் என்பது
அதைவிடக் குறைவு!
சந்தோசம் மேலிட பதிலளித்தேன்.

மாயூரம் பாராளுமன்றத் தொகுதியில்
தான் வேட்பாளராக நிற்பதாக
தன்னை அறிமுகப் படுத்தி கொண்டே….
அவர் கையில் இருந்த
தாள் கத்தையில் இருந்து
ஒரு துண்டுத் தாளை
என்னிடம் நீட்டினார்.
வெளிச்சத்தில்
அதை விரித்துப் பார்த்தேன்!
அவரது படமும்
படிக்க கொஞ்சத்திற்கு
வாசகங்களும் இருந்தது.

*
‘2009 மே 13-ம் தேதி
மயிலாடுதுறை தொகுதி
நாடாளுமன்ற தேர்தல்
உங்களின் வேட்பாளர்
(கட்டம்கட்டி
அவரது படம்.)
திரு.M.H.அஹ்மது மரைக்காயர்
நிறுவனத் தலைவர்
அகில இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி
அவர்களை வெற்றிபெற செய்யுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.’

*
வியப்பு மேலிட
அவரைப் பார்த்தேன்!
ஒரு கட்சியின் நிறுவனத் தலைவர்…
நாடாளுமன்ற தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்….
பக்கத்துணைகள் இல்லாமல்
தன்னந்தனியாக வோட்டு சேகரிக்க
வந்து நிற்கும் காட்சி…..
நிஜமாகவே என்னை
திக்குமுக்காட வைத்தது!!

அவரிடம் கேட்க
நிறைய கேள்விகள்
என்னில் வரிசைக்கட்டி நிற்க
மசூதியில் இஷா பாங்கு ஒலித்தது.
அஹ்மது மரைக்காயரும்
அந்த அழைப்பையே காரணமாக்கி
என்னை விட்டு நழுவினார்.

இஸ்லாமிய கட்சிகளின்
விபர அட்டவணையில்
அஹ்மது மரைக்காயரின்
அகில இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி
எத்தனையாவது
இஸ்லாமிய கட்சியென விளங்கவில்லை!

*
இந்த பாராளுமன்ற தேர்தலில்
நான் ஓட்டளிக்கச் செல்வேன் என்பது
101% சந்தேகம்.
மீறி ஓட்டளிக்க போவேனானால்…
அஹ்மது மரைக்காயரது
கட்சிப் பெயரின் அழகிற்கும்
அவரது மனோதிடத்திற்குமாக
அவரது சின்னத்திற்கு
ஓட்டளிக்கலாம்தான்.
ஆனாலும் என்ன செய்ய?
ஓட்டுப் போடும் நாளில் எனக்கு
வயிற்றுப்போக்கு வந்துவிடுமே!
போன பொது தேர்தல் சமயத்து
ஓட்டளிக்கும் நாளிலும்கூட
வயிற்றுப் போக்கு வரத்தானே வந்தது!
அதற்கு முந்தைய பொது தேர்தல்….
வாக்களிக்கும் நாளிலும்
அதுதானே கதை!

*
ஓட்டளிக்க தவறுவதென்பது
தேசத்துரோகத்திற்கு சமமான
குற்றம் என்கிறார்கள்…
விபரமறிந்தவர்கள்!
அவர்களுக்கு என்ன தெரியும்…
என் வயிற்றுப் போக்குப் பற்றி!
எனக்குத்தானே தெரியும்.
அதன் வலியும்….
காரண காரியமும்!

*

நன்றி : தாஜ்

satajdeen@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: