கிரிக்கெட்டும் வருண்காந்தியும் – தாஜ்

கிரிக்கெட்டும் வருண்காந்தியும்

தாஜ்

அன்புடன்
ஆபிதீன்….

தேர்தலின் விசேஷங்கள்
நாளுக்கு நாள்
கூடிக்கொண்டே போகிறது.
இன்றைய உஷ்ணத்தின்
எகிறும் அளவைப் போல!
எழுதியெல்லாம் மாளாது!
கவனம் செய்ய
தவறியிருக்க மாட்டீர்கள்.

தேர்தலை ஒட்டிய
அதீதங்கள் அத்தனையையும்
உற்று நோக்கும் கனமெல்லாம்
சராசரிகளை
வெட்கம் பிடுங்கித் தின்கிறது.
வாய் திறவா உங்களது மௌனமும்
அதைத்தான் நிறுவுகிறதோ?

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு
வெளியானதுதான் தாமதம்…
அரசியல் அரங்கில்
கட்சிகளின் ஆட்டங்கள்
ஆஹா… ஓஹோ.. பேஷ் பேஷ்!
ஒன்றுக்கொன்று
சளைத்தவர்களாகவே தெரியவில்லை.

சூடுபிடித்த முதல்
இரண்டு ஆட்டங்கள்
கவனம் கொள்ளத் தக்கது.
ஒண்ணு கிரிக்கெட்!
இன்னொண்ணு வருண்காந்தி!

நாடும், நாற்காலியும்
தங்களுக்கு மட்டுமே ஆனதென
‘ராம் ராமை’ உடம்பின் குறுக்கே
பிணைந்து பிடித்தபடி
ஆளாய் பறக்கும் பி.ஜே.பி.
அந்த முதல் இரண்டை முன்வைத்து
மீடியாக்களின் பக்கங்களில்
ஆடித்தீர்த்த ஆட்டம்
எவரொருவரின் 
பொது அறிவுக்கும் பொருந்தாதது.
 
‘இந்தியன் பிரீமியர் லீக்'(ஐ.பி.எல்.)
வெளிநாட்டுக்கு டெண்ட்-ஐ தூக்கப் போகிறோம்…
என்கிற சர்ச்சையொட்டிய
கிரிக்கெட் போர்டின் வியாபார லொள்ளுக்கு  
அதன் முதுகில்
இரண்டு சாத்து சாத்துவதைவிட்டு
“தேசத்தின் மானமே போய்விட்டது,
மக்களே…..
காங்கிரஸுக்கு ஓட்டுப் போடாதீர்கள்”
“குஜராத்தில் சேமமாய் ஆட்டம் நடத்த
நாங்கள் பாதுகாப்பு தருகிறோம்…
எங்களுக்கே வாக்களியுங்கள்”
– என்னும் விதமாய் உணர்ச்சி மேலிட
குதித்துத்தான் தீர்த்தது பி.ஜே.பி.!
அவர்களால் உணர்ச்சி கொப்பளிப்பில்லாமல்
எது ஒன்றையும் பேசவே முடியாது!
நண்பர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும் போது…
‘டீ சாப்பிட போகலாமா?’ யென
அவர்கள் கேட்கும் நேரமும்
அதே உணர்ச்சி மேலிடலோடுதான்
கேட்பார்கள் போலிருக்கிறது!!
இருக்கும்! நம்பலாம்.

பி.ஜே.பி.யின்
அந்த முதல் குதியைக் கண்டு….
கிரிக்கெட் ஆட்டம் என்பது
ராமருக்கு கோவில் கட்டும்
சங்கதிக்கு உட்பட்டதோ?
அல்லது…..
ராமர் பாலத்தை
காபந்து செய்யும் முனைப்பின்
தலையான காரியமோ என
ரொம்பவும்தான் நான் குழம்பிப் போனேன்.

பிஜே.பி.யின்
‘தேசத்தின் மானம் போகிறது…’
குதிக்குப் பிறகும்
மக்கள் தங்களது அன்றாட பணிகளில்
கவனம் கொண்டார்களே தவிர
இவர்களின் அரசியல் கூத்துக்கெல்லாம்
கண்ணையோ காதையோ
திருப்பினார்கள் இல்லை.
இந்த யுகத்திலும்
ரதயாத்திரையெல்லாம் போன
நவீன அர்ஜுனன்களாயிற்றேயென
ஒரு மரியாதைக் கருதியேனும்
இந்த மக்கள்
திரும்பிப் பார்த்திருக்கலாம்.
மாட்டேன் என்றுவிட்டார்கள்.

ஓட்டுப் போடத் தெரியாத…
பூத்தின் பக்கம் எந்த திக்கென அறியாத
மேல்மட்ட மக்களின்
அல்லது….
விடலைப் பருவத்தினர்களின்
அபிலாசைகளுக்கல்லவா
குரல் கொடுத்துக் கொண்டும்…
குதித்துக் கொண்டும் இருக்கிறோம்…
அந்தக் கட்சிக்கு உறைக்கத் தொடங்கிய
நாட்களில்தான்….
“வந்தேனே…. வந்து நானும்…..
சபைக்கு… வந்தனம் தந்தேனய்யா…” பாடி
சொல்லாமல் சொல்லும் விதமாய்
அமர்க்கள செய்தியாக வந்தார்
பி.ஜே.பி.யின் சரியான முத்திரை
இளம் துருக்கி வருண்!

வருணின் கசாப்புகடை பேச்சு
மீடியாக்களின் தலைப்பு தாகத்திற்கு
பால்வார்த்தது.
பக்கம் பக்கமாக
முத்து எழுத்துகளில்
அச்சுக் கோர்த்தார்கள்.

“………….. ………களின்
கைகளை வெட்டுவேன்/
கால்களை முறிப்பேன்/
அவர்களது நாவை அறுப்பேன்…”

கலங்கித்தான் போனது பி.ஜே.பி.
சிகப்பு காளீஸ்வரனாக
வருண் தோன்றும்
புகைப்படக் காட்சிகள்
அவர்களை உண்டு…
இல்லையென ஆக்கிவிட்டது.
வருணின் அந்தப் பேச்சு என்ன
சாதாரணப் பேச்சா!?
கீழ்மட்டத் தொண்டனையும்
தலைவனாக்கும் பேச்சல்லவா!
ஆகாய அளவுக்கு
புகழ் சேர்க்கும் பேச்சல்லவா!
ஒரு நொடியில்…
இந்திய மூலை முடுக்கெல்லாம்
வருண் போய் சேர்ந்துவிடுவாரே!

தங்களது பிரத்யேக ஆயுதத்தை
தங்களிடம் பாடம் படித்த
கட்சிக்காரர் ஒருவர்தான்
கையில் எடுத்திருக்கிறார் என்றாலும்
வருண் யார்?
நேருவின் வம்சாவளி அல்லவா?

பி.ஜே.பி. மேல்மட்டத் தலைவர்கள்
அத்தனை பேர்களும்
அன்று தொட்டு இன்றுவரை
இதையொட்டி குழம்பலோ குழம்பல்.
என்ன செய்யலாம்?
வருணுக்கு ஆதரவா? எதிர்ப்பா?

மீடியாக்களை மனதிற்குள் சபித்தவர்களாக
1.”அந்த பேச்சு
அவருடைய தனிப்பட்ட கருத்து.
கட்சிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை”
2.”வருணின் பேச்சை வரவேற்கிறோம்”

இப்படியே மாறி மாறி… அவர்கள் குழம்ப
வருணுக்கு
தேர்தலில் நிற்கத் தடையென்றது
தேர்தல் கமிஷன்!
சிறையென்றது மாயாவதி அரசு.

வருண் இன்றைய தேதிக்கு
சிறையில்தான் இருக்கிறார்.
இவருக்குக் கிட்டும் மீடியா பரபரப்பில்
பங்கு போட்டுக் கொள்ள
லாலுவும் மாயாவதியும் முயற்சித்தாலும்,
இன்னமும் வருணுக்கே முதலிடம்.

இப்படியே
மீண்டும் மீண்டும்…
தோற்றுக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி.
அவர்களின் தென் இந்திய
ராஜகுரு சோ கூட
பி.ஜே.பி.யின்
இந்த இரண்டு நிலைப்பாடுகளையும்
தவறென்கிறார்.
ஐ.பி.எல்.கிரிக்கெட் வெளிநாடு போனதில்
தேசிய அவமானமுமில்லை…
வருணை சிறையில் தள்ளியதில் தப்புமில்லை
என்றுவிட்டார் சோ!

வாயில்லா ஜீவன்களின்
பாதுகாப்பிற்காக
இந்தியாவில் இயங்கும் புளுகிராஸ்
சேவைவாதிகளுக்கே
வகுப்பு எடுப்பவர்
வருணின் அம்மா
மேனகா காந்தி!!
“பசுவின் பால் அதன் கன்றுக்கானது!
அதை நாம் உபயோகிப்பதும் பாவம்!
– என்று போதனைகள் செய்யும்
மேனகா காந்திக்கு இப்படியொரு மகன்!
வருண் நிச்சயம்
அம்மா பிள்ளையாக இருக்க மாட்டார்.

தனது பெயரோடு
தொங்கு தசையாக பிசிராடும்
‘காந்தியை’
இனிமேலாவது அவர் நீக்கிவிடுவது
புண்ணியமாகப் போகும்.
கசாப்புகடைக்காரனுக்கும்
காந்திக்கும்
என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
உங்களது ‘காந்தி’
உங்களின் தாத்தா வழிவந்த
காந்தியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்
வேண்டாம் பிளீஸ்… விட்டுவிடுங்கள்.

காது கொடுப்பீர்கள் என்றால்…
சொல்ல இன்னொரு விசயமுண்டு!
பொதுத் தேர்தல் முனைப்புகள்
ஆராவாரப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்தக் காலக்கட்டத்தில்
பாதுகாப்பாக நீங்கள்
சிறையில் இருப்பதே உசிதம்!
தவறி… இப்பொழுது
வெளியே வரும் பட்சம்….
உங்களது பிரச்சனையின்
வலுவையொட்டி
கணக்குத் தீர்த்து
தங்களது கனவு நாற்காலியை
சுலபமாக எட்டிவிடுவார்கள் அரசியல்வாதிகள்!
பாவிகள் அவர்கள்! மஹா பாவிகள்!
அக்மார்க் பாவிகள்!!
தேர்தல் நேரத்தில்
இந்தக் கட்சிகள் அத்தனைக்கும்
ஜெயம்தான் முக்கியம்!

***
நன்றி : தாஜ்
satajdeen@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: