தியாகத்தின் இறப்பு
இறைவா
மகனை பலியிட
இப்ராஹிம் நபி துணிந்ததிலும்
இஸ்மாயில் நபி
பலியாக விழைந்ததிலும்
அவர்களின் தியாகம் தெரிந்தது
ஆட்டைப் பகரமாக்கி
பலியைத் தவிர்த்ததில்
உன்
கருணை புரிந்தது
நாங்கள்
ஆட்டை அறுத்து
பங்கு போடுவதில்
எங்களில்
என்ன தியாகம் பிறந்தது?
ஆடுதான் இறந்தது…!
***
சைத்தானுக்கு மட்டும்
நான்
அல்லாவுக்கு அஞ்சுவதில்லை
ஏனெனில்
அவன்
பயத்தில் இருந்து என்னை
பாதுகாப்பவன்
அவன்
பாசமழையில் நான்
கரைந்து கொண்டு இருப்பவன்
நான்
இந்த உலகில்
ஒருவனுக்கு மட்டும்
அஞ்சுகிறேன்
ஆம்..
அந்த சைத்தானுக்கு மட்டும்…!
***
எப்படி?
இங்கு –
தொழும்போதெல்லாம்
எங்கெங்கோ
சுற்றும் மனம்
அங்கு
கா·பாவை
சுற்றும்போது மட்டும்
ஒரே
புள்ளியில் நிற்கிறதே
அது எப்படி?
இங்கு மனிதர்கள் உருவத்தில்
மையத்தாய்
வாழ்ந்தவர்கள் கூட
அங்கு
ஹஜ்ஜில் உடுத்திய
மையத்து ஆடை
மனிதர்களாக
மாற்றிவிடுகிறதே
அது எப்படி?
பாவக் கறைகளை
பாரான் வெளியில்
கொட்டி விட்டு
மன்னிப்பு மகசூலோடும்
மரியாதை மாண்போடும்
வருகிறார்களே
அது எப்படி?
இறைவா
எல்லாம் உன்
பெருங்கருணையால்தான்
நல்லவேளை
நீ
இப்ராஹிமுக்கு
அனுப்பிய கனவை
இவர்களுக்கு
அனுப்பவில்லை !
– ஜபருல்லா –
***
ஜபருல்லா நானாவை தொடர்ந்து நச்சரித்து ‘கவிதைகள்’ வாங்கி அனுப்பிய சகோதரர் ஷாஹா மாலிமுக்கு நன்றி.
A.Mohamed Ismail said,
09/02/2009 இல் 06:35
முன்னாளில் நானும் இக்பால் என்ற நண்பரும் இணைந்து காட்டுபள்ளியில் ஹதீஸ் ஏற்பாடு செய்வோம். பட்டணம் யூசுப் ஹஜ்ரத், காரை காசீம் மஹ்லரி போன்றோர்களை வைத்து எல்லாம் மிஹ்ராஜ் விழா நடத்தியிருக்கிறோம்.
ஒரு முறை இஜட்.ஜபருல்லாஹ் நானா அவர்களை ஹதீஸ் சொல்ல ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது விளம்பர தாளில் சொல்லரசு ஜாபர் முஹ்யித்தீன் மாமா ஜபருல்லாஹ் அவர்களுக்கு கவிக்குரிசில் என்ற பட்டத்துடன் எழுதி தந்திருந்தார்கள்.
எனது தந்தையிடம் அந்த நோட்டீஸை காட்டியவுடன், “இது என்ன கவிக்குரிசில்..?, அப்டீன்னா என்ன..?, அவன் கோச்சுக்க போறான்..?” என்று துடித்து அது ஏதோ அச்சு பிழை என்று கருதி எங்களை யாரிடமும் விநியோகிக்க கூடாது என்று சொல்லி விட்டு விறுவிறுவென்று ஜபருல்லாஹ் நானா வீட்டிற்கு போய் காண்பித்து அவர்கள் ‘..அது சரி தான்..” என்று சொன்னதும் எங்களிடம் வந்து “இப்போ பவுருங்க.” என்று சொன்னார்கள்.
அந்த அளவுக்கு எங்க வாப்பாவுக்கு ஜபருல்லாஹ் நானா அவர்கள் மீது பிரியம்.
அது போக, நான் எழுத நினைப்பது, இந்த கவிக்குரிசில் ஷைத்தானுக்கு மட்டும் கவிதையை அழகாக பாடுகிறது..!
எங்க வாப்பாவிடம் ஏச்சு வாங்க போவது உறுதி..!