‘சில அத்தியாயங்களிலிருந்து’ ஒரு அத்தியாயம்

நகுலனின் ‘சில அத்தியாயங்கள்’ நாவலிலிருந்து (இரண்டாம்) அத்தியாயம் :

***

nahulanஅந்த வீட்டில் யாருமில்லை – அவனைத் தவிர.

தாய் தந்தை, ஒரு சகோதரன் எல்லோரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்று விட்டார்கள். அம்மா இருந்த பொழுது, வீட்டில் இல்லாவிட்டாலும் அந்தப் பைத்திய  ஆஸ்பத்ரியில் தனது வாழ்வில் பாதி காலத்தைக் கழித்த தம்பி உயிருடன் இருந்த காலத்து (சென்ற ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேனோ என்னவோ – அம்மா) ராமநாதன், நடராஜன், சிவன், கேசவ மாதவன் இவர்களெல்லாம் வந்தார்கள்; வந்தவாறே போனார்கள். அவரவர் அவரவர் உலகைப் பற்றித்தான் பேச்சு – அம்மா எப்பொழுதுமே இதைப் பற்றி ஒன்றும் சொன்னதில்லை. (தனக்குப் பிடிக்காவிட்டாலும்) அப்பாவும். இப்படி வந்தவர்கள் சிலர் சிதறிப் போனார்கள். நேற்று வரையில் சிதறாமல் இருந்தவர்கள் இன்று சிதறிக் கொண்டிருக்கிறார்கள் – சிதறவில்லை என்று நினைப்பவர்கள் கூட – அது அப்படித்தான் இருக்கும் (மூலத்தோ பிரம்ம ரூபாய – அம்மா). முதல் கோணல் முற்றும் கோணல் – இவன். இப்பொழுது எல்லாம் ஹரிஹர சுப்ரமண்ய ஐயர் வந்துவிட்டுப்போகிறார் – ஒரு வயதிற்குமேல் விஷய சுகங்களில் பற்றை அகற்றிவிட வேண்டும் என்று ஒரு மரபு – இங்கு அந்த வயதில்தான் வாழ்க்கையே ஆரம்பமாகிறது என்கையில் – என் ஆசைகளையெல்லாம் பெண்டாட்டிக்கென்று , பிள்ளைக்கென்று… புதைத்துக் கொண்டே வந்தவன் – திடீரென்று வாழ்க்கையில் எனக்காக நான் வாழாவிட்டால் என்ன வாழ்க்கை இது என்ற வேகம் வர – எழுத்தென்று சொல்லி, என்னவென்று கேட்க, வாவென்று சொல்ல, அந்த வழி செல்ல – திடீரென்று உள்ளிருந்த விளக்கு ஒரு பேய்த்தனத்துடன் எரிகிறது – எரிந்த விளக்குகள் மங்கிக்கொண்டே வந்தாலும் , இல்லை, இல்லை என்ற குரல்கள் – அவனுக்குத் தெரிந்தது. வீடு சூன்யமாகவில்லை; வீடு சூன்யமாவதற்கு முன் நாமே சூன்யமாகிவிடுகிறோம் – அவர் எழுதியிருந்தார் – ‘நல்ல அபிப்ராயம் சொன்னதற்கு நன்றி – என்று – அவனுக்கு மனம் குழம்பியது – அபிப்ராயம்தான் சொல்லியிருந்தான் – அதிலும் நல்லது/கெட்டது என்ற பாகுபாடு உண்டு என்பது அவனுக்கு அதைப் படித்த பின் தான் தெரிந்தது – ஒன்றும் சொல்ல முடியாது – நமது முன்னவர்கள் சொல்லவில்லையா – எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றுமறியேன், பராபரமே – அவனுக்குத் தோன்றியது – அழுத்தம் அந்தப் பராபரத்தில்தான் இருக்கிறது என்று – ஏன் என்றால் எவனுக்குத் தான் இன்பமாக இருக்கத் தெரிகிறது – கலை என்பதே ஆனந்தத்தைத் தருகிறது என்றால் – சிந்தித்துப் பார்க்க வேண்டும் – ஆனால் சிந்திப்பது என்பது ஒரு பழக்கமாகவில்லை என்ற நிலையில் – வீடு மாத்திரமே இருக்கிறது – எல்லாமே – கட்டில், நாற்காலி, கடிகாரம், புஸ்தகங்கள் – இப்பொழுது ஒரு சுமையாக, அழுத்துகின்றன – அம்மாதான் சொல்வாள் ‘நான் எப்பொழுதும் இருக்க மாட்டேன்டா’ என்று – அவன் ஒன்றும் சொல்லவில்லை – இன்று தோன்றுகிறது ‘நானும்தான்’ என்று சொல்லையிருக்க வேண்டும்/ சொல்லியிருக்கலாம் என்று – ஆனால் சொல்லாமல் இருந்ததுதான் சரி என்றும் – மனித மனிதனாக இருக்க முடியுமானால் – இது அய்யப்பப்பணிக்கர் தனது ஒரு பிரசித்தமான கவிதையில் எழுப்பிய கேள்வி – நடுவில் ஒரு கடிதம் – ‘நீங்கள் ஒரு விபத்தில் சிக்கியதாகக் கேள்விப்பட்டேன். வேதனை அதிகமாக இருந்திருக்கும். இந்த மாதிரி விபத்துக்கள் நம்மை மீறி ஏற்படும் செயல்கள். ஆனால் இதற்கெல்லாம் மனம் தளர்ந்து விடக்கூடாது – இந்த மாதிரிச் சமயங்களில் உங்கள் நிலையில் பரிவு காட்டும் உள்ளங்கள் இருக்கின்றன என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் எல்லோருக்குமே வலிமை வேண்டியிருக்கிறது.’

நிகழ்ந்தது என்னவென்றால் அவனுக்கு ஒரு விபத்தும் நிகழவில்லை. அதை அந்தக் கடிதம் எழுதியவருக்குத் தெரிவித்தான். பின்? சொல்லப்போனால் மனிதன் மனது என்பது விசித்திரமானது என்று சொன்னால் மாத்திரம் போதாது – மிக மிக விசித்திரமானது – சுவராக, அலமாரிகளாக, புத்தகங்களாக, குப்பிகளாக, நினைவுகளாக, வீடு அவனைச் சூழ்ந்து கொண்டிருந்தது. வீடு சூன்யமாகுவதற்கு முன்பு அவன் சூன்யமாக முடியுமென்றால்? மனிதன் மனிதனாக முடியுமென்றால்.

***

நன்றி : சோபிதம் பதிப்பகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: