காணாமல் போன பொருள் பற்றி ‘கவிக்கோ’

‘ரெண்டு வாரமா காய்ச்சல்; வுட்டுவுட்டு வருது’ என்றேன் ஜபருல்லா நானாவிடம். அவரோ ”சுக்ர்’ (நன்றி) அல்லாஹ்ண்டு சொல்லும்’ என்கிறார்!

‘என்ன நானா இது!

‘ஆமாங்கனி… வுட்டுவுட்டு வராம அப்டியே நீடிச்சி இந்தாக்கா இன்னும் ரோதனையா போவும்ல; இந்த அளவுக்காவது கிருபை செஞ்சிருக்கானே அவன்!’ – ஜபருல்லா.

எதிலும் இறைவனைக் காணும் எங்கள் நானா வாழ்க! அவருடைய ஆசியில் , இன்று உடல் நன்றாக கொதிக்கிறது (சும்மா தமாஷ், இறைவனுருளால் உடம்பு தேறிவிட்டது). அவர் கேட்டுக்கொண்டபடி ‘கவிக்கோ’வின் கட்டுரையை தட்டச்சு செய்து பதிகிறேன் – பேரா.மு. அப்துல் சமது அவர்களின் ‘காணாமல் போன ஒட்டகம்’ தொகுப்பிலிருந்து… (வெளியீடு : IC.O அறக்கட்டளை , 431 – நேதாஜி ரோடு, ஈரோடு – 638001)

– ஆபிதீன் –

**

காணாமல் போன பொருள்…!

கவிக்கோ அப்துல் றகுமான்

kaviko
அறிவு பெறுவது என்றால் புதிதாக ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வது என்றே பலரும் நினைக்கின்றனர்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவு பற்றிக் கூறியிருக்கும் ஒரு கருத்து இதற்கு மாறாக இருக்கிறது.

‘அறிவு இறை நம்பிக்கையாளரின்
காணாமல் போன பொருளாகும்
எனவே அவர் அதை எங்கே கண்டாலும்
அதை அடையும் உரிமை அவருக்கு உண்டு’
என்பது அவர் வாக்கு (திர்மிதி, 1245) .

பெருமானாரின் இந்த வாக்கில் பல அரிய உண்மைகள் பொதிந்திருக்கின்றன.

அவை :

அறிவு நம்மிடம் இருந்த பொருள்; அது காணாமல் போய்விட்டது.

எனவே அதைத்தேடி அடைய வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உண்டு.

அறிவு சிலருக்கு மட்டுமே உரிமையானதல்ல; எல்லோருக்கும் உரிமையானது; சிறப்பாக , இறைநம்பிக்கையாளருக்கு உரிமையானது.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, அறிவு என்பது வெளியிலிருந்து மனித மூளைக்குள் திணிக்கப்படுவதில்லை.

அது ஏற்கனவே மனிதனுக்குள் இருக்கிறது. கல்வியின் வேலை அதை வெளியே கொண்டு வருவதாகும்.

‘கல்வி’ என்ற சொல்லின் மூலச்சொல் ‘கல்’. இதன் பொருள் தோண்டுதல்.

அதாவது கல்வி மனிதனுக்குள் இருக்கும் அறிவைத் தோண்டி வெளியே கொண்டு வருகிறது என்று பொருள்.

மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப்போல, அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவது போல், கற்கக் கற்க அறிவு ஊற்றெடுத்துப் பெருகும் என்கிறார் திருவள்ளுவர்.

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’
– திருக்குறள் 396.

‘எஜூகேஷன்’ (Education)  என்ற ஆங்கிலச் சொல்லின் மூலப்பொருளும் ‘தோண்டி வெளியே எடுத்தல்’ (To dig out) என்பதுதான்.

கல்வி, அறிவைக் குறிக்கும் ‘ இல்ம்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘கண்டு பிடித்தல்’ என்ற பொருளுண்டு.

இந்தச் சொல்லும்  ஏற்கனவே நம்மிடம் மறைந்திருப்பதை அல்லது நம்மிடமிருந்து காணாமல் போனதைக் கண்டுபிடித்தல் என்ற பொருளையே தருகிறது.

அறிவியலாரும் மறைந்திருக்கும் இயற்கையின் ரகசியங்களை அறியும்போது அதைக் ‘கண்டுபிடித்தல்’ (Discovery) என்றே கூறுவதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

‘அறிவு ஏற்கனவே மனிதனுக்குள் இருக்கிறது என்றால், அது எப்படி காணாமல் போனது?’ என்று கேட்கலாம்.

குர்ஆன் விவரிக்கும் ஆதாம்-ஏவாள் தொன்மத்தில் இதற்கான விளக்கம் இருக்கிறது.

இறைவன் ‘பூமியில் நான் என் பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன்’ என்று அவர்களிடம் (மலக்குகள்) கூறினான்;

அவர்கள், ‘ நாங்கள் உன் ஆணைகளைத் தட்டாமல் நிறைவேற்றுகிறவர்கள்; எந்நேரமும் உன்னையே துதித்துக் கொண்டிருப்பவர்கள் . அப்படியிருக்க எங்களை விட்டுவிட்டு பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தப் போகிறவர்களையா உன் பிரதிநிதி ஆக்கப் போகிறாய்?’ என்று கேட்டார்கள்.

இறைவன்,’ நீங்கள் அறியாததை நான் அறிவேன்’ என்று கூறி முதல் மனிதராகிய ஆதத்தைப் படைத்தான்.

அவருக்கு எல்லாப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். இறைவன் அந்தப் பொருட்களை அமரர்களிடம் காட்டி,  ‘இவற்றின் பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள்’ என்றான்.

அவற்றைப் பற்றி அறியாத அமரர்கள், ‘இறைவா! நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதைப் பற்றியும் நாங்கள் அறியோம்’ என்றனர்.

இறைவன், ‘ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்குத் தெரிவிப்பீராக!’ என்றான்.

ஆதம் அப்பெயர்களைக் கூறினார். (குர்ஆன் 2: 30 – 33)

இதில் பெயர் என்று குறிப்பிடுவது  வெறும் பெயர் மட்டுமல்ல.

பெயரைக் குறிப்பிடும் ‘இஸ்ம்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘ஒரு பொருளின் உள்ளார்ந்த தன்மைகள்’ என்று பெயர்.

ஒரு பொருளின் பண்பு, இயக்கம் பற்றி அறியாமல் அதற்குப் பெயர் சூட்ட முடியாது.

எனவே இங்கே பெயர் என்பது ஒரு பொருளைப் பற்றிய முழுமையான அறிவு என்பது பொருள்படும்.

இதிலிருந்து இறைவன் எல்லாப் படைப்புகளையும் பற்றிய அறிவை ஆதத்துக்கு உணர்த்தினான் என்று தெரிந்து கொள்ளலாம்.

அதாவது படைக்கப்பட்ட பொருள்கள் ஒவ்வொன்றினுடைய தன்மை, இயக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் மனிதனுக்குள் வைத்துவிட்டான் என்று பொருள்.

இந்த அறிவாற்றல் மனிதனுக்குள் மறைந்து கிடக்கிறது என்பதையே ‘அறிவு காணாமல் போன பொருள்’ என்ற பெருமானாரின் வாக்கு உணர்த்துகிறது.

இந்த அறிவுதான் கல்வியாலும் ஆராய்ச்சியாலும் தோண்டத் தோண்ட  வெளிப்படுகிறது.

கூட்டத்தில் பலர் இருந்தாலும் நமக்குத் தெரிந்தவரையே நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம்.

படைப்புகளைப் பற்றி ஏற்கனவே உணர்த்தப்பட்டிருப்பதால்தான் மனிதன் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

குழந்தைகள் ஒவ்வொரு பொருளையும் கூர்மையாக உற்றுப் பார்ப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

அந்தப் பொருளை இதற்கு முன் எங்கோ பார்த்ததுபோல் தோன்றுவதால்தான் குழந்தைகள் அப்படி பார்க்கின்றன.

விதைக்குள் மரம் ஒளிந்திருப்பதைப் போல் மனிதனுக்குள்  அறிவு ஒளிந்திருக்கிறது.

அதாவது அறிவு ‘காணாமல்’ கிடக்கிறது.

விதையிலிருந்து மரம் முழு வடிவில் ‘சட்’டென்று தோன்றிவிடுவதில்லை.

அது முளை, இலை, அரும்பு, பூ, காய், கனி என்று கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெளிப்படுகிறது.

மனிதனுடைய அறிவும் அவ்வப்போதைய தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமாகவே வெளிப்படுகிறது.

அறிவியலாரின் கண்டுபிடிப்புகள் இரண்டு வகைப்படும். ஒன்று, தேவைக்காகக் கண்டுபிடித்தது; மற்றொன்று எதற்காகவோ ஆராய்ச்சி செய்யப்போய் தற்செயலாகக் கண்டுபிடித்தது.

அறிவியலார் தற்செயலாகக் கண்டுபிடிப்பதும் மனிதனுக்குத் தேவை என்பதாலேயே இறைவன் அதை அப்படி வெளிப்படுத்துகிறான்.

‘எல்லாப் பொருள்களின் கருவூலங்களும் எம்மிடம் உள்ளன. ஆனால் அவற்றைக் குறிப்பிட்ட ஓர் அளவிலேயே நாம் இறக்கினோ’ (15: 21) என்று இறைவன் குர் ஆனில் குறிப்பிடுகிறான்.

இதிலிருந்து இறைவன் மனிதனுக்கு வேண்டியவற்றை, வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில் கொடுத்தருள்கிறான் என்பதை அறியலாம்.

‘காணாமல் போன பொருளை’ நாம் கண்டுபிடிக்கவும் இறைவனுடைய அருள் வேண்டும் என்பதையும் இந்த இறை உரை உணர்த்துகிறது.

இறைவன் மனிதனுக்குப் பெயர்களைக் கற்றுக் கொடுத்தான் என்பது மொழிகளை உண்டாக்கிப் பேசவும், எழுதவும், உதவும் ஆற்றலையும் இறைவன் மனிதனுக்கு  அளித்திருக்கிறான் என்றும் பொருள்படும்.

அவனே அவனுக்கு மொழியைக் கற்றுக் கொடுத்தான் (55 : 4 )

அவன் எழுதுகோலால் கற்பித்தான் (96 : 5)

என்ற குர்-ஆன் வசனங்கள் இதையே தெரிவிக்கின்றன.

மொழியறிவு, எழுத்தறிவு என்பவையும் இறைவனால் உள்ளே மறைத்து வைக்கப்பட்டதால் இவையும் ‘காணாமல் போன பொருள்களே’.

இஸ்லாத்தில் பிற்காலத்தில் சிலர் கல்வியை மார்க்கக் கல்வி என்றும் உலகியல் கல்வி என்றும் பிரித்தனர். அதோடு நிற்காமல் உலகியல் கல்வி படிக்கத்தகாதது (ஹராம்) என்றும் தடுத்தனர்.

இறைவன் ஆதத்திற்கு படைப்புகளைப் பற்றிய அறிவை ஊட்டினான் எனக் கண்டோம்.

இதிலிருந்து முதல் மனிதருக்கு முதன் முதலாக போதிக்கப்பட்டது உலகியல் கல்வியே என்பதையும் , அதிலும் அந்தக் கல்வியை போதித்தவன் இறைவனே என்பதையும் அறியலாம்.

தன்னுடைய பிரதிநிதியாக இருந்து உலகத்தை ஆள மனிதனுக்கு உலகியல் கல்வி இன்றியமையாதது என்பதாலேயே இறைவன் இவ்வாறு செய்தான்.

‘காணாமல் போன பொருள்’ என்பதற்கு மூலத்தில் ‘ழால்லத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘பிராணி’ என்று பொருள்.

இது அரபிச் சூழலில் ஒட்டகத்தைக் குறிக்கும்.

இதன் மூலம் பாலைவனவாசிக்கு ஒட்டகம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு மனிதனுக்கு அறிவு அவசியம் என்று புரிந்து கொள்ளலாம்.

பாலைவனவாசிக்கு ஒட்டகம் வெறும் வாகனம் மட்டுமல்ல. அவனுக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் மூன்றையும் அதுவே தருகிறது.

அதுபோன்றே அறிவும், மனிதனுக்கு வாகனமாக இருக்கிறது. அவனுக்கு உணவு, உடை, உறையுள் மூன்றையும் தருகிறது.

ஒட்டகம் இல்லாமல் பாலைவனவாசி வாழ முடியாது.

அத்தைகய ஒட்டகம் காணாமல் போனால் அவன் எப்படி அதைத் தீவிரமாகத் தேடுவானோ அப்படி மனிதன் அறிவைத் தேடவேண்டும் என்பது குறிப்பு.

‘ழால்லத்’ என்ற சொல்லுக்கு ‘விடா முயற்சியுடன் தேட வேண்டிய பொருள்’ என்ற பொருள் உண்டு.

சில சமுதாயங்களில் உயர் வர்க்கத்தார் மட்டுமே கல்வி கற்கும் உரிமை பெற்றிருந்தனர்.

அடித்தட்டு மக்களுக்கும், பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது.

பெருமானுருடைய வாக்கோ அறிவைப் பெறுகிற உரிமை எல்லோருக்கும் உண்டு என்று கூறுகிறது. இது அக்காலத்தில் ஒரு புரட்சிகரமான கருத்தாகும்.

‘அறிவு, இறை நம்பிக்கையாளரின் காணாமல் போன பொருள்’ என்று பெருமானார் கூறியதற்கும் பொருள் உண்டு.

இறை நம்ம்பிக்கையாளரே அறிவு மனிதனுக்குள் மனிதனுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற பேருண்மையை வேதங்களைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்வர்.

இறை நம்பிக்கை உறுதிப்பட அறிவு தேவை. எனவே அதற்காகவே இறை நம்பிக்கையாளர் அறிவைப் பெற வேண்டும்.

காணாமல் போன பொருள் கிடைக்குமா என்ற சந்தேகம் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படாது.

இறைவன் எப்படியும் அப்பொருளைக் கண்டடையச் செய்வான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கும். அதனால் அப்பொருளைக் கண்டடையும்வரை அவர்கள் சோர்வு அடையாமல் விடா முயற்சி செய்வர்.

எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு, இறை நம்பிக்கையாளரிடம் பயன்படுவது போல மற்றவர்களிடம் பயன்படாது.

இறை நம்பிக்கையாளனே தான் பெற்ற அறிவை சக மனிதர், சக உயிர்களின் நன்மைக்குப் பயன்படுத்துவான்.

***

நன்றி : ஜபருல்லா, கவிக்கோ அப்துல் றகுமான் , பேரா.மு. அப்துல் சமது , IC.O அறக்கட்டளை

2 பின்னூட்டங்கள்

  1. A.Mohamed Ismail said,

    22/11/2008 இல் 11:41

    அருமையான கட்டுரை, எத்தனை பேருக்கு விளங்கும்?

  2. 20/07/2010 இல் 08:18

    //தமிழுக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் தொண்டு பற்றி எனக்கு ஒரு குழப்பமில்லை எதுவும் எழுதாததால் நானும் ஒருவகையில் தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியிருக்கிறேன் என்பதிலும் மறு சந்தேகமில்லை.//

    இங்கேதான் நீங்க நிக்குறீங்க எஜமான்!


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: