அல் குர்ஆன் : அறிவதும் அடைவதும்…

‘பிறப்பு என்ற சொல்லில்
‘றப்பு’ இருக்கிறது!
பிரசவம் என்ற சொல்லில்
‘சவம்’ இருக்கிறது!
பிரசவம் பார்த்தபின்தான்
பிறப்பு – எனவே
கவலைப்பட வேண்டியதில்லை!’

…என்று ‘பொதுக்கவிதை’ எழுதும் எங்கள் ஜபருல்லா நானா சிந்திக்க வைக்கும் கட்டுரைகளும் தருவார். கேட்டால் மட்டும் தர மாட்டார்! நேற்று அபகரித்து வந்த அவருடைய சின்ன டைரியிலிருந்து சில சிந்தனைகள்…

இந்த கட்டுரை ஜபருல்லாவுடையதுதான் ஐயா, பதிந்தபின் – இன்றே – டைரியை திருப்பியும் கொடுத்து விடுவேன், ‘றப்பு'(இறைவன்) மேல் சத்தியம்!

– ஆபிதீன் –

***

அழகிய முன்மாதிரி…!

இஜட். ஜபருல்லாஹ்
நம் பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வினால் உவந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நபி. இறைவனின் திருவசனங்களை ‘வஹி’யாகப் பெற்ற ரசூல். பெருமானார் அவர்களை அல்லாஹ் நபியாக ஆக்கினான். ரசூலாகவும் அவனே ஆக்கினான்.

ஆனால்,  பெருமானார் அவர்களை முன்மாதிரியாக அல்லாஹ் ஆக்கவில்லை. பெருமானார் அவர்களே ஆனார்கள்..!

மனித சமுதாயத்துக்கு அழகிய முன்மாதிரியாக பெருமானார் அவர்கள் ஆனதை அல்லாஹ் அங்கீகரித்தான். அவன் சொல்லால் , ‘ரசூலிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது’ என்று உறுதி செய்தான்.

பெருமானார் அவர்கள் செய்ததை மட்டும்தான் நாம் செய்யவேண்டும்; சொன்னதை மட்டும்தான் செய்ய வேண்டும்; செய்ய அனுமதித்ததை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த வட்டத்துக்குள் நான் போக விரும்பவில்லை. அவர்கள் அதிகமாகப் படித்தவர்கள். அதுவும் அரபியிலேயே படித்தவர்கள்! திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் அறிந்தவர்கள்.

இந்த அறிஞர்கள் மத்தியிலே பல குழுக்கள்..! இப்போது அவர்கள் மத்தியில் திருமறை அறிவு விளையாட்டும் பேச்சுப் போட்டிகளும் விவாத மேடைகளும் சிறப்பாக நடந்து வருகின்றன. பாமர மக்களுக்கு நல்ல காட்சிகளாயும் அவை ஆகி வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்..ஹைர்!

பெருமானார் அவர்கள் அழகிய முன்மாதிரி என அல்லாஹ்வே அங்கீகரித்தபிறகு நாம் இந்த முன்மாதிரியைப் பற்றி என்ன சிந்திந்து இருக்கிறோம்? அல்லது, என்ன செய்து இருக்கிறோம்?

பெருமானார் அவர்கள் அழகிய முன்மாதிரியாக ஆனார்கள். எப்படி ஆனார்கள்? அப்படி அவர்கள் ஆவதற்கான பொறி அவர்கள், அல்லாஹ்வின் திருமறையைப் பெறுவதற்கு முன்பே அவர்கள் நடத்தைகளிலே இருந்தன! வாழ்க்கையிலேயே அவைகள் பரிணமித்தன! அவைகளைப் பற்றி பெருமானார் அவர்களின் வாழ்க்கை வரலாறு தெளிவாகச் சொல்கிறது. பின்னர், குர்ஆன் வழியில் அவர்களின் மாறாத சொல்லும் மாசு இல்லாத செயல்களும்தான் அவர்களை ‘அழகிய முன்மாதிரி’யாக மாற்றியது.

‘நாயகமே
உங்கள் நடத்தைகளே அல்லவா
நாவுகள் ஆயின..!’

என்று புலவர் ஹிலால் இதை அழகாகச் சொல்வார். சொல்லும் செயலும் ஒன்றாக வாழ்ந்த பெருமானார் அழகிய முன்மாதிரி – அல்லாஹ்வின் வார்த்தைகளில்!

நம் வாழ்க்கையில் எப்படி? கொஞ்சம் சிந்தியுங்கள்.

பெருமானார் அவர்கள் ‘அழகிய முன்மாதிரி’யாக இருக்கும்பொழுது நாமும் அழகிய முன்மாதிரியாக மாறுவது நாயக சுன்னத்து அல்லவா? இதை நாம் ஏன் உணரவில்லை?

நல்ல பிள்ளையாக, தந்தையாக, தலைவராக, தொண்டராக, கணவராக இப்படி எல்லா நிலைகளையும் தாண்டி இதற்கும் மேலே உண்மையான அல்லாஹ்வின் அடிமையாக இருப்பதில் கூடவும் அழகிய முன்மாதிரியாக மாற வேண்டாமா?

நாமும் பெருமானார் மாதிரி அழகிய முன்மாதிரியாக வேண்டும்  என்று ஏன் நம் மார்க்க அறிவுஜீவிகள் சொல்வதில்லை? முன்மாதிரியாக ஆவது நாயக சுன்னத்து அல்ல என்று நினைக்கிறார்களோ? தெரியவில்லை !

ஆயிஷா அம்மையார் சொன்னார்கள் :’நாயகம் அவர்கள் குர் ஆனின் விளக்கமாக இருக்கிறார்கள்’. குர்ஆனின் விளக்கம் என்றால் என்ன பொருள்? ‘தர்ஜூமத்துல் குர்ஆன்’, ‘அன்வருல் குர்ஆன்’, ‘இபுனு கஸீர்’ போல குர்ஆனின் விளக்கம் போலத்தான் பெருமானார் என்று பொருளா?

குர்ஆனுக்கு தெளிவுரை எழுதிய யாரும் யாருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து மக்கள் மத்தியிலே அங்கீகாரம் பெற்றதில்லை.

இவர்கள் எல்லோரும் மிகப்பெரிய அறிவாளிகள்! ஆனால் குர்ஆன் கூறியபடி முழுக்க வாழ்ந்த பண்பாளர்கள் என்று தங்களை அவர்கள் சமுதாயத்தில் நிரூபிக்கவில்லை.

அப்படியானால் ஆயிஷா அம்மையார் சொன்ன ‘நாயகம் குர்ஆனின் விளக்கம்’ என்பதற்கு என்ன பொருள்? இன்னொரு செய்தி இங்கே : பெருமானார் அவர்கள் தன் மரணத் தருவாயில் கூறுகிறார்கள்: ‘குர்ஆன், என் வழி என்ற இரண்டையும்  உங்களுக்கு விட்டுவிட்டுப் போகிறேன்!’ என்று.

குர்ஆன் வேறு, நாயகவழி வேறு என்று – தனித்தனியே – பெருமானார் அவர்கள் சொன்னதற்கு என்ன பொருள்? குர்ஆன் வழிதானே நாயக வழி?. கொஞ்சம் சிந்தியுங்கள்.

குர்ஆன் இருபகுதிகளாக உள்ளது. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவது : அறியப்பட வேண்டிய குர்ஆன். இரண்டாவது : அடையப்பட வேண்டிய குர்ஆன்.

குர்ஆனில் சொல்லப்படும் இறைவனுடைய தன்னிலை விளக்கங்களும், சரித்திரங்களும், செய்திகளும் அறியப்பட வேண்டியவை. மனிதவாழ்க்கை, மனங்களில் நிலைகள்/ உறவுகள் / உணர்வுகள் போன்றவை அடையப்பட வேண்டியவை.

‘அறியப்பட வேண்டிய குர்ஆன் உங்கள் கைகளில் இருக்கிறது; அடையப்பட வேண்டிய குர்ஆன் என் வழியில்/ வாழ்க்கையில் இருக்கிறது’ என்பதுதான் பெருமானார் சொன்னதற்கு உண்மைப் பொருளாக இருக்கும்!

அதுபோலவே ‘ பெருமானார் – குர்ஆனின் விளக்கம்’ என்று ஆயிஷா அம்மையார் கூறுவதை , பெருமானாரின் வாழ்வும் பேச்சும் அடைந்ததாகவும் அறிந்ததாகவும் இருந்தது என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஒன்றை அறிந்தால்தான் அதன் நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்க்க முடியும். அதற்கு கூர்மையான அறிவு அவசியம். இந்த இடத்தில் ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே நான் சொல்வது கல்வியைப் பற்றியல்ல, அறிவைப் பற்றி.

அறிவாளிகள்தான் உண்மையான விளக்கங்களை எடுத்துச் சொல்ல முடியும். பாமரமக்கள் இவர்களைத்தான் நம்பி இருக்கிறார்கள், எது சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அறிவாளிகளோ பல கூறுகளாகப் பிரிந்து தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நிலையில் குர்ஆனை சரியாக அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறாதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

அறிந்தவர்களால் அறிவை மட்டுமே கொடுக்க முடியும்! நம்மை விட மாற்று மத சகோதரர்கள் அல்-குர்ஆனை ஆராய்ச்சி செய்து புதுப்புது செய்திகளை வெளிக்கொண்டு வருகிறார்கள்.

குர்ஆனை அறிந்து அடைந்தவர்களால்தான் குர்ஆன் சொல்லும் வாழ்க்கைய மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். அதுதான் அழகிய முன்மாதிரி !

வார்த்தைகளை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கும் அறிவாளிகள் குர்ஆனை விற்றுக்கொண்டு இருக்கிறார்கள். வாங்குபவர்களோ மௌனமாக கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பேசுபவர்கள் பணத்தை அடைகிறார்கள், கேட்பவர்கள் குழப்பம் அடைகிறார்கள்!

அறிவு போடுகிற சத்தத்தில் அடைய வேண்டும் என்ற எண்ணமே எழுவதில்லை!

வல்ல நாயன் நல்லருள் புரிவானாக!

***

இறைவா…!

நாங்கள்
வாழ்க்கையை
‘ஜனாஸா’ ஆக்கி
‘கபுருக்குள்’ புதைத்து விட்டோம்!
வெறும் வார்த்தைகளிலேயே
வாழக் கற்றுக் கொண்டுவிட்டோம்!
எங்களுக்கு-
ஒரு சந்தேகம்…
உன்
மறுமைநாள் விசாரணை
எங்கள் வாழ்க்கைக்கா?
வார்த்தைகளுக்கா…?

***

நன்றி : இஜட். ஜபருல்லாஹ்

முகவரி :
இஜட். ஜபருல்லாஹ்
14, புதுமனைத் தெரு
நாகூர் – 611002
Mobile : 0091 9842394119
Tel   : 0091 4365 250632

2 பின்னூட்டங்கள்

 1. துரை said,

  03/08/2008 இல் 19:10

  ஜபருல்லாஹ் நானாவுக்கு என் சலாத்தை சொல்லு. தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்…அடைந்தவர்கள் அல்லவா..!

  _ துரை –

 2. 07/08/2008 இல் 01:40

  சந்தி சிரிக்கும் சாந்தி மார்க்கத்தை பின்பற்றும்(!) சகலவர்களையும் சிந்திக்க வைக்கிறது.
  அழகிய முன்மாதிரி எனும் இக்கட்டுரை இஸ்லாமிய கட்டுரைகளுக்கு அழகிய முன்மாதிரி
  டைரியை திருப்பியும் கொடுத்து விடுவேனில் நீங்கள் தெரிகிறீர்கள்,
  என்ன தான் நீங்கள் திருப்பி கொடுத்தாலும் போய் சேர வேண்டியவங்களுக்கு அந்த செய்தி போய் சேருதா அல்லது உறைக்குதா என்பதே முக்கியம்


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: