‘செயிராக்கரு’

தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம், கலைக்கடல், மகாமதி, சதாவதானி கா.ப. செய்குத்தமிழ்ப் பாவலரின் மகனார் கே.பி. எஸ். ஹமீது அவர்களின் ‘இலக்கியப் பேழை’யிலிருந்து.. (பொருள் : பிற சமய இலக்கியங்களோடு இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை ஒப்புநோக்கி சிறப்புரைத்தல், முதற்பதிப்பு : 1966)

‘இஸ்லாமியத் தமிழ் நூல்களை இஸ்லாமியர்தான் பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென்ற குறுகிய மனப்பான்மை எந்த தமிழினிடத்தும் இருக்க நியாயமில்லை. இஸ்லாமியத் தமிழ் நூற்கள் அழிந்தால் அது தமிழ் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல தமிழுக்கும் நஷ்டம். தமிழ் இலக்கியத்தின் எந்தப் பகுதி எந்த அளவிற்கு அழிந்தாலும் அந்த அளவிற்குத் தமிழ் செத்துப்போய்விட்டது என்பதுதான் அர்த்தம்’ என்று நியாயமான கோபத்துடன் , ‘செயிராக்கரு’ என்ற எழைப்புலவரின் ‘சீறாக்கீர்த்தனை’ வெளிவர கட்டுரை வடித்த கே.பி. எஸ். ஹமீது அவர்கள் எனக்கு மிகவும் பிடித்துப் போனார். அப்புறம்..ஹமீது அவர்களின் நகைச்சுவை. ஒரு முஸ்லிம் சகோதரரின் சங்கீத ஞானத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பதைப் பார்த்து அந்த ஞானவான் நான்தான் என்று உடனே கண்டுபிடித்து விட்டேன்!

பாவலர் பதிப்பகத்தாருக்கு (பழைய முகவரி : 53, நைனியப்பன் தெரு, சென்னை -1 ) நன்றி.

– ஆபிதீன் –

***

‘செயிராக்கரு’ – 1

-கே.பி. எஸ். ஹமீது –

தலைப்பு இன்னதென்று விளங்காதபடி ஒரு புதிராகத் தோன்றுகிறதா? திகைப்பும் மலைப்பும் பிரமிப்பும் வேண்டாம். சொல்லாராய்ச்சி நிபுணர்களுக்கு இந்தத் தலைப்பு ஒரு பிரமாதமன்று. ஒரு மொழியிலுள்ள சொற்கள் இன்னொரு மொழியில் இடம் பெறுகிறபொழுது அவை அடைகிற மாற்றங்கள் இன்னின்ன என்பது அவர்களுக்குத் தெரியும். ‘ நானே இலக்ஷ்மணன்’ என்று ஆரம்பிக்கும் இராம நாடகக் கீர்த்தனையை எந்த இராகத்தில் பாடுகிறார்கள் என்று கர்நாடக சங்கீதப் பித்தர் ஒருவரைக் கேட்டால் உடனே அவர் ‘பேகடா’ இராகத்தில் என்று விடை தருவார். ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இதே கேள்வியைத் தமிழ்நாட்டு முதுபுலவர் ஒருவரிடம் கேட்டிருந்தால் அவர் ‘வேகடா’ என்றுதான் பதில் தந்திருப்பார், ‘பேகடா’ என்று கூறியிருக்க மாட்டார். அதேபோல் ‘இலக்ஷ்மணன் என்று சொல்லாமல் ‘இலக்குவன்’ என்றே தனித் தமிழில்  கம்பனைப் பின்பற்றி உச்சரித்திருப்பார். ஒரு மொழியிலுள்ள சொற்கள் வேறொரு மொழியில் புகும்பொழுது அணுவளவும் மாற்றமின்றி அப்படியே இடம் பெறலாம். அல்லது அசலும் ‘நகலும்’ போலும் ஆகலாம். அன்றித் திரிந்தும் மாறியும், சிதைந்தும், நைந்தும் போகலாம். அப்படியும் இல்லையெனில் புகுந்த மொழியில் முற்றமுற்றப் புதுஉருப்பெற்று , புதுத்தொனியும் புதுக்கருத்தும் பெற்ற புத்தம் புதிய சொற்போலவும் தோன்றலாம். ஆங்கிலத்திலுள்ள  Jungle, Brinjal, Ghee, Dhobie போன்ற எத்தனையோ சொற்களை அசல் ஆங்கிலச் சொற்கள் என்று நினைப்பவர் நம்மிடை அநேகர் இருக்கலாம். Catamaran, Cheroot, Cot, இவை முறையே தமிழ்நாட்டுக் கட்டுமரம், சுருட்டு, கட்டில் என்றும், Calico, Jack Fruit கேரளத்தில் பண்டயக் கோழிக்கோட்டுச் சாயத்துணி, பலாப்பழமாகிய சக்கைப்பழம் என்றும் அறியும்போது நமக்கு ஊர்விட்டு ஊரும் நாடுவிட்டு நாடும் யாத்திரை செய்யும் சொற்களின் வரலாறு ஆச்சரியத்தைத் தரலாம்.

ஒரு மொழியின் சொற்கள் இன்னொரு மொழியின் சொற்களைச் சந்திக்கும் பொழுதும் தழுவும்பொழுதும் மொழிக்கலப்பு மட்டுமின்றி பண்பாட்டுக் கலப்பும், கலாச்சார உறவும் கூட ஏற்படுகின்றன. அந்தந்த மொழிக்கென்றமைந்த உயிர்த்துடிப்பிற்கும் இயல்பிற்கும் ஏற்பச் சொல்லுலகில் ஒருவிதப் பண்பாட்டுறவும் பிறக்கிறது. இத்தகைய உறவின் முறையில் பிறந்ததுதான் ‘செயிராக்கரு’ என்ற பெயரும். ‘சீதக்காதி’யைப் பற்றிக் கேட்டிராத தமிழர் இருக்கமுடியாதல்லவா? ஈந்து சிவந்த கரத்தையுடைய வள்ளல் செய்யிது அப்துல் காதர், தமிழ்ப்புலவர் நாவில் ‘செத்தும் கொடை கொடுத்த ‘சீதக்காதி’யாகப் பெயரெடுத்தார். ‘சீதக்காதி’ என்ற பெயர் தமிழ்நாட்டு முஸ்லிம் பண்பாட்டு மரபை எடுத்துக்காட்டி தமிழ்மணங்கொட்டும் தனிப் பெயராக விளங்குகிறது. ‘செயிராக்கரின்’ வரலாறும் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பண்பாட்டைத் தெரிவித்து அவர்தம் தமிழார்வத்தையும் பற்றினையும் காட்டும் பெயரேதான். இன்றைக்கு சரியாக 146 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து தமிழ்தொண்டாற்றிய செய்யிது அபூபக்கர் புலவரின் மற்றொரு பெயர்தான் ‘செயிராக்கரு’. புலவர் காலத்திற்குப் பின்னர் தமிழ் முஸ்லிம்களிடையே செய்யிது அபூபக்கர் புலவர் ‘செயிராக்கரு’ என்ற பெயராலேயே அறியப்பட்டு வந்தார்.

சீதக்காதி, செயிராக்கரு போன்ற தமிழ் முஸ்லிம்களிடையே காணப்படும் பல பெயர்கள் இஸ்லாத்தின் மேலிருந்த பற்றின் அளவிற்கு அவர்கள் தம் தாய்மொழிமேல் வைத்திருந்த பற்றின் அளவைக் காட்டுகின்றன. சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர், ஞானியார் சாகிபு, குணங்குடிமஸ்தான், பிச்சை இபுறாஹிம், செய்குத்தம்பிப் பாவலர் இவர்கள் தமிழ் முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள்; தத்துவஞான மேதைகள். முஸ்லிம் தமிழ்ப்புலவர்ள் ஒருபுறமிருக்கட்டும், சாதாரணத் தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பெயர்களை எடுத்துக் கொள்வோம். முஹியித்தீன் என்ற அரபுப்பெயர் முகைதீன் அடிமை, மைத்தீன் அடிமை, மைத்தீன் பிள்ளை என்றாகியிருக்கிறது. அடிமைக்கண்ணு, பிச்சை இராவுத்தர், ரஹ்மான் மாலுமியார், சின்ன மரைக்காயர், சிறுமலுக்கு, காசீம் பிள்ளை, மலுக்கு முதலியார், மாலிக்காப் பிள்ளை, உசன் பிள்ளை, அசனார்க்கண்ணு இப்பெயர்களில் தமிழ்மணங் கமழவில்லையா? தமிழ் முஸ்லிம்களின் பெயர்களில் தமிழ்நாட்டுப் பற்றும் தமிழ்மொழிப் பாசமும் இந்த அளவிற்குப் பரிமளிக்கும்போது தமிழ் முஸ்லிம்களும் ஏனைய தமிழர்களைப் போலவே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற உண்மையை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் சிந்திப்பது தமிழில், பேசுவதும் பயில்வதும் எழுதுவதும் தமிழில். பௌத்தமும் சமணமும் சைவமும் வைணவமும் கிறித்துவமும் தழைத்த தமிழ்நாட்டில் இஸ்லாமும் தழைத்தது.

மொழி தமிழ். நாடு தமிழ் நாடு. மார்க்கமோ இஸ்லாம். வேதமொழியோ அரபி. மார்க்கமும் வேதமொழியும் தோன்றிய அராபிய நாட்டிற்கும் தாய்மொழி குலாவிய தென் தமிழ் நாட்டிற்கும் இடையே ஏற்பட்ட பண்பாட்டுக் கலாச்சாரக் கூட்டுறவினால் தமிழ் வளம் பெற்றது; வலுப் பெற்றது. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழரல்லாதவராகி விடவில்லை. தமக்கே உரிய தனிக்கலாச்சார எல்லைக்குள் நின்று தாய்மொழியாகிய தமிழைப் பேணி வளர்த்தனர்.

பௌத்தம், சமணம், சைவம், வைணவம் இவை ஒவ்வொன்றும் தனித்தனியே வளர்த்த தமிழுக்கு ஈடாக இஸ்லாம் வளர்த்த தமிழும் வளர்ந்து நின்றது. தாம் தாம் யாத்த நூல்களை, கொள்கைகளை முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கையாண்டனர். புராண இதிகாசங்களில் வந்த கதைகளுக்குப் பதிலாக இஸ்லாமிய தர்மத்தை அடைப்படையாகக் கொண்ட நம்பிக்கைக்கள் கோட்பாடுகள், பரம்பரைக்கதைகள், நபிமார்கள் – அவர்கள் தம் வாழ்க்கை வரலாற்றையொட்டி எழுந்த அற்புத நிகழ்ச்சிகளைச் சுற்றி நின்ற பக்திக் கதைகள் முதலியனவும் இவர்தம் நூற்களில் கருப்பொருளாக வந்தமைந்தன, ஆயினும் தமிழ்நாட்டுச் சூழ்நிலையில் வாழ்ந்து, தமிழ் இலக்கண இலக்கிய விதிமுறைகளுக்கும் மரபிற்கும் இயல்பிற்கும் ஏற்பத் தத்தம் நூற்களின் புலவர்கள் அராபிய பாலைவனத்தையும் தமிழ் நாட்டுச் சோலைவனமாகக் கண்டார்கள். தமிழ்நாட்டின் நாட்டு  வளத்தையும் நகர்வளத்தையும்  அராபிய நாட்டிலும் அன்றைய ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் இருப்பதாகத் தம் அகக்கண்முன் கற்பனை செய்தனர். காப்பியத்தில் கண்டங்களையும் படலங்களையும் கண்டார்கள். பிரபந்தங்களில் கோவை, அந்தாதி, பிள்ளைத் தமிழ் முதலானவற்றையும் ஞானவேதாந்த,  பக்திப் பரவச துதிப் பாடல்களையும் இன்னும்  பல்வகைப் பிரிவினுட்பட்ட நூல் வரிசைகளையும் வகுத்தனர்.

நூல்கள் அனைத்தும் இஸ்லாத்தையும் இஸ்லாமிய தர்மசாரங்களையும் அப்படியே உள்ளிழுத்தும், உள்ளடக்கியும் இருப்பவை. தமிழ்நாட்டில் பிறந்த நூல்களாகையால் தமிழ்மயமும் தமிழ்ப் பண்பாட்டு மயமும் அவற்றில் மேலோங்கி நிற்கக் காண்கிறோம். எனினும் இந்நூற்கள் ஏனைய தமிழ் நூற்களைப் போன்று தமிழ் நாட்டின் எல்லாச் சமயத்தினரிடைடையேயும்  பிரபலமடையாது போய்விட்டன. உமறுப் புலவர் எழுதிய சீறாப்புராணத்தைக் கூட தமிழ்பேசும் எல்லாச் சமயத்தினரும் நன்கு அறிந்திருக்கின்றனர் என்று கூறுவதற்கில்லை. இதற்குக் காரணங்கள் பல. முக்கிய காரணங்களிலொன்று  அரபியும் தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை. வடமொழி தமிழில் கலந்த அளவிற்கு அரபிச் சொற்கள் தமிழில் கலக்கவில்லையென்றாலும் அராபிய, பாரசீக, உர்து மொழிகளிலுள்ள சொற்கள் இன்னும் நூற்றுக் கணக்கில் வழக்கிலிருக்கின்றன, என்றாலும் பிற சமயத்தினர் இஸ்லாமிய தமிழ் நூற்களை ஓரளவிற்குப் புரிந்துகொள்ள இயலாமல் போனதற்குக் காரணம் இந்த அரபிப் பதங்களும் இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைத் தத்துவங்கள் பற்றிய போதிய ஞானமின்மையுமே.

இஸ்லாம் வளர்த்த தமிழ் பற்றிய ஞானம் இந்த அளவோடு மட்டும் தமிழ்நாட்டில் நின்றிருந்தால் கூடப் போதும். தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கும் தமிழுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்ற ஐயம் கூட இருந்து வந்தது; இன்னமும் இருந்து வருகிறது. பாவம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றி ஒன்றுமே அறியாத சில அப்பாவித் தமிழர்களிடம், ‘அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?’ ‘குலாம் காதிருக்கும் கோகுலாஷ்டமிக்கும் என்ன உறவு?’ என்ற கேள்விப் பழமொழிகளில் உண்மையும் இருக்கலாம். ஆயினும் தமிழுக்கும் தமிழ் முஸ்லிம்களுக்கும் இடையே உள்ள அசைக்கமுடியாத அன்னியோன்னிய உறவை, சம்பந்தத்தை எந்த தமிழனாலும் புறக்கணிக்கவும் முடியாது; மறுக்கவும் இயலாது. தமிழ்நாட்டின் கல்லூரிகளும் தமிழ் பயிற்றுவிக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தமிழிலக்கியச் சரித்திரங் கூறும் ஒவ்வொரு வரலாற்று நூலும், தமிழ்க் கல்விக்குரிய பாடத் திட்டங்களில் இஸ்லாம் வளர்த்த தமிழுக்கு வழங்கவேண்டிய நியாயமான இடம் தந்திருந்தால் தமிழ் முஸ்லிம்களின் தாய்மொழி தமிழா அன்றி வேறா என்று எண்ணத்தகாத ஐயப்பாடு தோன்றவே தோன்றாது போயிருக்கும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றுலாசிரியர்களுக்கு முஸ்லிம்கள் வளர்த்த தமிழ் பற்றிய ஞானம் படைத்த முஸ்லிம்களாவது அவ்வரலாற்று ஆசிரியர்களின் ஞானக்குறைவை அகற்ற உதவியிருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

தமிழ் முஸ்லீம்களுக்கும் தமிழுக்கும் உள்ள சம்பந்தம் ஒருபுறமிருக்கட்டும். தமிழ் முஸ்லிம்களுக்கும் கர்நாடக சங்கீதத்திற்குமாவது ஏதேனும் சம்பந்தமுண்டா? கூடியிருந்த மாபெரும் சங்கீத ரஸிகர் கூட்டத்தை மெய்மறக்கச் செய்த நாதஸ்வர வித்வானையும் அந்த ரஸிகர் கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டதாக கற்பனை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் முஸ்லிமையும் பற்றிய கதையைத்தான் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி வருகிறது. ‘இவ்வளவு அழகாக வாசித்துக் கூடியிருந்தவரை மயக்கிவிட்ட நாதஸ்வரக்காரர் அந்தக் குழலை நேரே மறித்து திருப்பிப் பிடித்து அதன் மறுபக்கத்தின் வழியாக ஊதியிருந்தால் அப்பப்பா! இசை எப்படியிருந்திருக்கும்? ரஸிகர் கூட்டம் என்ன பாடுபட்டிருந்திருக்கும்?!’ என்று மூக்கின் மேல் விரலைவைத்துக் கேட்டதாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கும் தமிழ் முஸ்லிம் சகோதரரின் சங்கீத ஞானத்தை அல்லது ஞானசூன்யத்தைப் பற்றி என்னதான் நினைக்கத் தோன்றாது!

– தொடரும் –
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: