சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (16)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14 | அத்தியாயம் 15

அத்தியாயம் 16

ஆபிதீன்

*

10.06.1996

நேற்று மாலை ஜெப்பார்நானா ஃபோன் செய்தார். ‘இப்போ எந்த ஸ்டேஜ்லெ இருக்கீங்க?’ என்று கேட்டார். எனக்குப் புரியவிலை. எந்த ஸ்டேஜ் என்றால்? அவரிடமிருது கேஸட்கள் வாங்கி வந்து அதை செயல்படுத்திக்கொள்ளும் , அதில் முக்கிய சந்தேகம் இருந்தால் சர்க்காரிடம் கேட்டுக்கொள்ளும் ஸ்டேஜ் என்றேன். இல்லை, ரியாலத்தில் புதிது புதிதாக சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார். எனக்கு அது கிடைத்தால் அல்லவா செய்யமுடியும்? ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் ஊருக்கு ஃபோன் செய்து என்னால் கேட்க இயலாது. ஜெப்பார்நானா ஃபோன் செய்வார். அவர் சொன்னால்தான் உண்டு. ரவூஃப்? அவன் வளர்ந்துகொண்டிருக்கிறான். அதனால் உடனுக்குடன் கடிதம் போடமாட்டான். போட்டாலும் U.A.Eயின் தபால்துறை வளர்ந்து கொண்டிருக்கிறது. நான் சர்க்காரிடம் வாங்கி வந்தது, இடையில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் ஆகியவற்றைச் சொன்னேன். இப்போது ரியாலத்திற்கு முன்பும் பின்பும் மூச்சுப்பயிற்சி வந்திருப்பதைச் சொன்னேன். ‘அதெல்லாம் சரிதான், ஆனா நம்பர்கள் எண்ணுறதில மாத்தமிருக்கு’ என்றார்.

1 – 25 and 25 – 1 மூன்று முறை

ஒரு முறை :

25 – 10
25 – 9
25 – 8
25 – 7
25 – 6
25 – 5

(SS) ‘சிம்பல்’ வரைந்து முடித்ததும் அதிலிருந்து புறப்படும் வெண்ணொளி, Astral Bodyயின் கண்ணிலிருந்து புறப்படும் நீல ஒளியெல்லாம் இப்போது கிடையாது. வரைந்து முடித்து மேலே போவதும் மாற்றம். புறப்பட்டு வந்து 6 அடி சென்று , அங்கிருந்து 5 அடி நகர்ந்து , அதற்குப்பின் 11 அடி நகர்ந்து (மேலே போய்) – மொத்தம் 22 அடி தூரம் – Astral Body கீழுள்ள ‘கில்லா’வைச் சுற்றி வருகிறது. எனக்கு EB, IB என்ற பிரிவுகள் முதலில் கிடையாதென்றும் அது இப்போது வந்திருப்பதால் குழப்பமாக இருக்கிறது என்றும் சொன்னேன். வரும் வாரம் நேரில் போய் பேசினால்தான் கொஞ்சம் குழப்பம் தெளியும். PB, EB, IB, ABயின் நான்கு பிரிவுகளையும் ஒருமுறை சர்க்கார் அவர்களே என் நோட்புக்கில் வரைந்து காட்டினார்கள். புரிந்து கொள்வதற்காக .ஆனால் எனக்கு மட்டும் கொடுத்தது நேராக Astral Body பிரிவதுபோல.

அதற்கு மேலும் உதாரணமாக வண்டி, குதிரை, வண்டியோட்டி, முதலாளி உதாரணமும் சொன்னார்கள். அவர்களின் வார்த்தையிலேயே தெளிவாக எழுத , இருக்கிற கேஸட்களையெல்லாம் தோண்டிப் பார்த்தால் 25 வருடங்களுக்கு முன்பு அந்த வண்டி ஓடியிருக்கிறது! அதே குதிரை, வண்டிக்காரன், முதலாளி. ஆர்க்கிடைப் (Archetype) II கேஸட்டில். ஆனால் குதிரையைக் கட்டுப்படுத்தும் பாக்கியம் 25 வருடங்களுக்குப் பிறகு வந்தவர்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது..

‘ஞானிகள் என்னா சொன்னாங்க… மனுஷன்ற லைஃபை நாலு பாகமா பிரிச்சாங்க. ஒண்ணை ஒண்ணுக்கு மேலே, அதை அதுக்கு மேலே. ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் கீழ் ஒன்றாக. அல்லது ஒண்ணுக்கு பக்கத்திலேயே ஒண்ணாக. நாலு அடுக்கு வச்சாங்க. இதுக்கு அவங்க கொடுக்குற சாதாரண உதாரணம் குதிரை, வண்டி, வண்டிக்காரன், முதலாளி. வண்டி அப்படீங்குறது உடல். குதிரைங்கிறது உணர்ச்சி. வண்டிக்காரங்குறது மூளை. முதலாளிங்குறது Heart. புரியுதா? குதிரை, அது இஷ்டத்துக்கு.. முந்திய முதலாளி எவனோ அவனைத் தேடிக்கிட்டு போறதல்ல; (தற்போதைய) முதலாளி எந்த டீக்கடைக்கி போறானோ அங்கே கூட்டிக்கிட்டு போவனும். அதுதான் குதிரையோட வேலை. குதிரைக்காரனுக்கு எது தேவையோ அங்கே பொய்டக்கூடாது. இல்லே, வண்டி சக்கரத்தை பழுது பாக்குற கடைக்கி பொய்டக்கூடாது. முதலாளி என்னா சொல்றானோ அதத்தான் குதிரை செய்யனும். ஆனா நாம குதிரையை அப்படி பழக்கப்படுத்தலே.. குதிரை இழுத்த பக்கத்திலேயே வண்டி ஓடுனதாலே , வண்டியோட்டியும் கண்ட்ரோல் பண்ணாததாலே வண்டியோட்டி பின்னாலே ஓடி, வண்டிக்குள்ளே இக்கிற முதலாளியும் போயி, குதிரை திங்கிற கொள்ளையே இவன் திங்கிறமாதிரி வந்துடுது! வயிறு காய்ஞ்சி ஹோட்டல்ண்டு நினைச்சி உட்கார்ந்திக்கிறான் முதலாளி! ஆனால் இவனுக்கு வாய் திறந்து பேசத்தெரியலே. இவன் ஊமை. கையினாலே தட்டிப்பாக்கலாம், குதிரைய ஓட்டிட்டு எங்கே போனாண்டும் தெரியலே. குதிரையோட்டி தூங்கிக்கிட்டு இக்கிறான். இப்ப குதிரை ‘கொள்’ளை நோக்கி ஓடுது. இவன் பசியோட இக்கிற காரணத்தாலே அந்த கொள்ளை இவனும் திங்க வேண்டிய நிலைமை வந்துடுது. எதை திரும்பிக்கூட பார்க்க மாட்டானோ, எதெ காலால எட்டி உதைப்பானோ , அத திங்க வேண்டிய நிலைமை. அப்ப.. குதிரை இக்கிது பாத்தீங்களா..அதுக்குண்டு தனி ஆசைகள் இருக்கு. வண்டிக்கு சில தேவைகள் இக்கிது. குதிரை ஓட்டிக்கிண்டு வீடு, வாசல் தேவை இக்கிது. முதலாளிக்கு ஒரு தேவை இக்கிது. அதாவது Bodyயோட தேவை , உணர்ச்சிக்கு கட்டுப்படாம, மூளைக்கு கட்டுப்படாம, Heartக்கு கட்டுப்பட்டதா இக்கினும். Heart-ண்டு நான் உயிரைத்தான் சொல்றேன். Heartக்கு மூலமா உள்ளது எதுவோ அதைத்தான் நான் Heartண்டு சொல்றேன். Heart-உம் Heart-உம் கலந்து நிக்கிற பொருள் – இலையிலே பச்சை நிறம் கலந்திக்கிற மாதிரி, தண்ணியிலே ஓடுற குணம் கலந்து நிக்கிற மாதிரி, நெருப்புல சூடு கலந்து நிக்கிற மாதிரி – இரண்டறப் பின்னிப்பிணைஞ்சி நிக்கிது. ஒண்ணை விட்டு ஒண்ணை பிரிக்க முடியாது. நெருப்புலேர்ந்து சூட்டைப் பிரிச்சீங்கண்டா அது நெருப்பு அல்ல. இலையிலேர்ந்து பசுமையை பிரிச்சா சருகு. தன்ணியிலேர்ந்து ஓடுற தன்மையைப் பிரிச்சா அது தண்ணி அல்ல. ஐஸ்கட்டி. அதே மாதிரி இந்த Heartலேர்ந்து அத இயக்குற சக்தியைப் பிரிச்சீங்கண்டு சொன்னா – பிரிக்க முடிஞ்சா – அது Heart அல்ல. வெறும் சதைத்துண்டு. அது பொணத்துக்குத்தான் இருக்கும். இறந்து போன இஸ்மாயில் தம்பி ராவுத்தர் பேரு என்னா? படுத்துக் கிடக்குதே ‘அது’. அத எப்படிக் கூப்பிடுவீங்க?’

‘அது’

‘அப்ப…’அவர்’ண்டா யாரு? ‘ராவுத்தர்’ என்னாச்சி? அப்ப யாருக்கு பேரு ராவுத்தர்? உயிருக்கு! விளங்குதா? குதிரைக்காரன்ற வேலை என்னா? குதிரையை தன் குறிக்கோளுக்கு பக்கத்துலெ திருப்பனும். அதுக்காக குதிரையை பட்டினியா போடனும்டு அர்த்தமல்ல. கொடுக்கவேண்டியதை கொடுத்துத்தான் திருப்பனும். கொடுத்துக்கொண்டு போகும்போது வண்டி உடையாத அளவுக்கு நல்ல ரோடா பார்த்துக்கொண்டு போவனும். அப்படி போகும்போது எந்த குறிக்கோளுக்கு முதலாளி போக நினைக்கிறானோ அந்த குறிக்கோளுக்கு ஓட்டிச் செல்லனும். இதுலெ ஒண்ணே ஒண்ணு மாறினாலும் சரி, அவன் குதிரைக்காரன் அல்ல, அது குதிரையும் அல்ல, அது வண்டியும் அல்ல, அவன் முதலாளியும் அல்ல. எல்லாமே அவுட்.’

‘உணர்ச்சி – அதுதான் குதிரை – ‘டக்’குண்டு கொந்தளிக்குது உடலிலே..அது அடையிறதுக்கு துடிக்குது உடலு.. உள்ளத்துலே உணர்ச்சி வந்த உடனேயே அத அடைய உடல் துடிக்குது. ‘டக்’குண்டு பாதையை தேட முயற்சி பண்ணுது. Imagination அப்ப பாதையை அடைய பாதையை சொல்லிக்கொடுக்குது; இது அடைஞ்சிடுது. என்னா அர்த்தமாச்சு? குதிரை, தான் கொள்ளு திங்கினும்டு சொல்லுது. வண்டியோட்டி ,’கொஞ்சம் கொள்ளு திண்டுட்டு குதிரை போவட்டுமே முதலாளி’ங்குறான். ‘சரிதாங்குறேன்’டு தலையாட்டிட்டாரு முதலாளி! இவர் அங்கே கொள்ளு திங்க நின்னுக்கிட்டிக்கிறாருண்டு கதை! இதே முட்டாள்தனம் நாம செய்யிறோம். அதானால சூஃபியாக்கள் எதை வகுத்துக் கொடுத்திக்கிறாங்க? உணர்ச்சிங்குறது மூளைக்கும் இதயத்துக்கும் அடிமையா இருக்கனும். அந்த உணர்ச்சி அடிமையா இருந்துதான் உடலைத் தூண்டனும். அதுக்காக உடல்லெ உணர்ச்சி இல்லாமலிருக்கனும்டு அர்த்தமல்ல. உணர்ச்சிக்கு உள்ளமும் மூளையும் அடிபணிஞ்சி போகக்கூடாதுண்டு அர்த்தம். அதுக்கு, மூளை கண்ட்ரோல் பண்ணுனா அங்கே அறிவு வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்தக் கட்டத்துலெ துன்பமா இருந்தாலும் துன்பத்தை தவிர்க்கிறது முக்கியம். இந்தப் பாத்திரம் முக்கியமானதா இருந்தாலும் இது உடைஞ்சிடுச்சி.. ‘கிட்டாதாயின் வெட்டன மற’ங்குறது உண்மைண்டு எடுத்துக்கனும். இதுக்கு மேலே , spiritual லைஃப்லெ போனீங்கண்டா அது Astral. Pure சக்திமயமானது. எந்த எல்லைக்கும் கட்டுப்படாதது. Heartக்கு உள்ளே ஒண்ணு இக்கிதுண்டு சொன்னேனே அது! அந்த நிலைக்கி நீங்க போனீங்கண்டா இந்த உணர்ச்சி, மூளை, Body, மூணுமே அதுக்கு அடிமையாகி , அதனுடைய குணம் எதுவோ அது இந்த bodyக்கு வர ஆரம்பிக்கும். அத நெருப்பாலெ கரிக்க முடியாது. எனவே Bodyயை நெருப்பு கரிக்காது. நீளுன வரைக்கிம்தானே கை நீளும். இல்லெ! கை, அமெரிக்கா வரைக்கிம் போவும். உலகம் முழுவதும் சுத்தும். எஜமான் (ஷாஹூல் ஹமீது பாதுஷா) ஜோப்புலெ கையை வுட்டு எடுத்தாஹா. பச்சைக்கிராம்பு வந்திச்சி குலையோட! அப்ப , அந்தக் கை சிலோனுக்குப் போயி பறிச்சிக்கிட்டு வந்திக்கிது! எஜமான், தலையணையை தூக்கும்போது , முழுக முயற்சி பண்ணிக்கிட்டிக்கிற கப்பல் மேலே வருது. இந்த கை தலைகாணியை தூக்கலே, Mindலே இமேஜினேசன்லெ எது தோணிச்சோ அத தூக்குனிச்சி! இதே மாதிரி ‘அஸ்மா லைன்’லெ இக்கிது. உங்களைப்போல படத்தை வரைஞ்சி இது அபுபக்கர்தாண்டு நான் கற்பனை பண்ணி குத்துனா கத்திக்குத்து உங்க நெஞ்சிலே இறங்கும். அதேமாதிரி , கத்திக்குத்துப் பட்ட அபுபக்கரை சித்திரம் வரைஞ்சி , ‘இதுதான் அபுபக்கர். இவருக்கு கத்திக்குத்து பட்டிக்கிது.. நான் தடவுறது படத்துலே படாது, நெஞ்சிலே படும்’டு நான் நெனைச்சி தடவுனா போதும். உங்க நெஞ்சு சுத்தமாயிடும். எங்க வூட்டு கிணத்துலே தண்ணியை மெத்தி (அள்ளி) , ஓதி, அதுலே திரும்பவும் ஊத்திட வேண்டியது. உங்க வூட்டு கெணத்துலெ தண்ணியை மெத்தி நீங்க குடிச்சா இந்த தண்ணி அங்கே வந்துடும்! இந்த உண்மைகள்லாம் ஈஸியா புரியிறதுக்கு நீங்க கொஞ்சம் ‘அஸ்மா லைன்’லெ ஈடுபட்டிருந்தா நல்லா இந்திக்கிம். ம்… அப்ப என்னா செய்யினும்? உணர்ச்சிக்கு ஓரளவு இடம் கொடுக்கனும். ஆனா அது நம்மளை ஆட்டிப்படைக்கக் கூடாது. எல்லாத்துக்கும் மேலே அந்த அப்பன் இக்கிறான்லெ? முதலாளி! உள்ளத்தோட கலந்து நிக்கிறவன், அவன்ற ஆர்டர் வேலை செய்யினும். உங்க உடல் உடலாயிருக்காது. தெய்வமணமா இக்கிம். எந்த நோய் நொடியும் வராது. எல்லா ‘பரக்கத்’தும் வரும். மேலும் மேலும் செழிப்பு வந்துக்கிட்டேயிருக்கும். சிறப்பு ஏற்பட்டுக்கிட்டே போய்க்கிட்டிக்கிம். இத யோகிகளும் போட்டு பெரட்டுனானுங்க. வலம்புரிசங்கு எடுத்துக் கொடுப்பான்; தண்ணியோட வரும். அவனுக்கும் நம்மளுக்கும் உள்ள ஒரே வித்யாஸம், இந்த அற்புதம் நிகழ்த்துற சக்திதான் முக்கியம்டு அவன் சொன்னான். நம்ம ஞானிகள், ‘இது முக்கியமல்லப்பா, இறைவனை அடையிறதுக்குள்ள பாதையோட ஒரு எல்லைதான்டாங்க. அதனால்தான் நம்ம எஜமாண்ட்டெ பெரும்பெரும் சித்தன்கள்ளாம் மோதும்போது தோத்துப்போயிட்டான். அவன் சின்னதை லட்சியமா வச்சான். இவங்க பெருசை வச்சாங்க. ‘எனக்கு சித்திகள் வாணாம், நீயே வேணும்’டாங்க. அதனாலெ , இமேஜினேசனை கரெக்டா யூஸ் பண்ண தெரிஞ்சிடுச்சிண்டு சொன்னா வாழ்க்கையிலே ஃபர்ஸ்ட் ஸ்டெப் அடைஞ்சிட்டீங்கண்டு அர்த்தம். இமேஜினேசன் எப்ப வேலை செய்யும்? Body, ரிலாக்ஸ்டா இக்கினும்’ – ‘S’

**

11.06.1996

நண்பர் ஃபரீது சௌதியிலிருந்து நேற்று ·போன் செய்தார். ஷார்ஜாவிலுள்ள டிராவல் ஏஜென்ஸியில் அவருக்கு விசா ஏற்பாடாகி இருக்கிறதாம். வாங்கி , ஃபேக்ஸ் பண்ணச் சொன்னார். ஷார்ஜாவிலுள்ள ஃபேக்ஸும் அனுப்பும்தான், ஆனால் துபாய் ஏர்போர்ட்டில் ஒரிஜினலை ‘சப்மிட்’ பண்ண உதவும் ஆபிதீன் அனுப்புவது அவசியம். இன்று காலையில் ஆஃபீஸுக்கு பல callகள் வந்தன, ஒரு callஐ நான் அட்டெண்ட் செய்துவிட்டு அங்கிருந்து குரல்கேட்கும் முன்னாலேயே , ‘சொல்லுங்க ஹிதயத்துல்லா.. ஃபரீது விசாவை ஃபேக்ஸ் பண்ணிட்டீங்களா? நான் எப்ப அங்கே வர?’ என்று கேட்டதை கப்பமரைக்கார் வெறித்துப் பார்த்தார். ஹிதாயத்துல்லாவும் அப்படித்தான் வெறித்துக் கேட்டிருக்க வேண்டும். நான் ஷார்ஜாவில் அவரைப் பார்த்தபோது அதே வெறித்த பார்வையுடன்தான் இருந்தார்! வாங்கிக்கொண்டு ‘தேரா’வில் மஸ்தான் மரைக்கான் ரூமுக்கு பகல் வந்தேன். இன்று இரவு 7: 30 க்கு சௌதியா ஃப்ளைட்டில் ஃபரீது வருகிறார் என்று ஒரு சீட்டு. இதை கப்பமரைக்கார்தான் ஆஃபீஸிலிருந்து சொல்லியிருக்க வேண்டும். அங்கும் பல ஃபோன் கால்கள் வந்தன. மஸ்தான் மரைக்கான் , நாக்கூர் ஜமாஅத்தில் முக்கியமான ஆளாகப் போய்விட்டான். இந்த வேலையாலேயே நாக்கூரில் சண்டைகள் குறைந்து விட்டன. இருந்தாலும் அவனிடம் இப்போதும் அவனுடைய நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது. இந்த முறை தான் வாங்கி வந்த அரிசியை வியந்து சொன்னான். ”நாலு கிளாஸ் போட்டேன், எட்டு கிளாஸ் காணுது! அப்ப ஒண்ணுமே போடலேண்டா நாலு கிளாஸ் காணுமுலெ..!’ என்று. நாமும் மெஸ் காசை கொடுக்காமலிருந்துவிட்டு , உன் ஜோப்பில் சீக்கிரம் விளையும் என்றுவிடலாம்தான். இப்போதெல்லாம் அதிசயங்கள் சாதாரணம். அங்கும் ஒரு ஃபோனை நான் – அட்டெண்ட் செய்து குரல் கேட்கும் முன்னாலேயே – ‘என்னா நானா, இன்னக்கி ராத்திரிண்டுதானே சொன்னாரு ஃபரீது?’ என்று கப்பமரைக்காரிடமும் சொன்னேன். மஸ்தான் மரைக்கானுக்கு ஏற்கனவே ‘முழிச்சான்’ என்ற பெயருண்டு! இதை எழுதுவதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் அவன் ரூமுக்கு ஃபோன் போட்டேன். குரல்கேட்கும் முன்னரே, ‘ என்னா ஃபரீது, நல்லவிதமா வந்து சேர்ந்தீங்களா?’ என்றேன். ஃபரீது மறுபடியும் சௌதி ஓடாமல் இருக்க வேண்டும்!

என்னுடைய வேலை ப்ரொக்ராம்கள் எழுதிக்கொடுப்பதும் மேனேஜ்மெண்ட் அக்கவுண்ட்ஸ் பேக்கேஜை பார்த்துக்கொள்வதும். மொயீன் சாஹிப்தான் Bank Reconciliation செய்வார் – Excelல். இதற்கென்று ப்ரோக்ராம் எழுதினாலும் , பேங்க் ஸ்டேட்மெண்டைப் பார்த்து ஃபீட் செய்தால்தான் அது செக் பண்ணும். இதற்கு bankல் உள்ள dataவை லிங்க் பண்ண வசதியிருந்தால்தான் சாத்தியம். ஆகவே excel. ஆனால் அவர் செய்வது உண்மையில் பயங்கரமான வேலை என்பது மாதிரி இருக்கும். அவர் எடுக்கிற ரிபோர்ட்டும் அப்படித்தான் இருக்கும். நான் இதுவரை அதில் சிரத்தை காட்டாமல் இருந்தேன். இது மிகவும் சுலபமான வேலைதான் என்று இன்று பட்டது. முதன்முறையாக நான் சின்ன ·பார்முலாக்களோடு excelல் சுத்தமாக செய்தேன். Reconciled!. மொயீன்சாஹிப் பத்துவருடங்களாக செய்து கொண்டிருப்பவர். அவர் தன் தாடியை கோபமாக கோதிவிட்டுக் கொண்டார். இதற்குப்பிறகு அவர் ‘காலம் மோசமாகி விட்டது’ என்றார். பாகிஸ்தானிலுள்ள அவர் இளைய பெண்ணுக்கு இப்போது மூணாவது engagementஆம். முதல் தடவை பார்த்த பையனை ‘ too religious’ என்று ஒதுக்கி விட்டாளாம். இரண்டாம் பையன்? ‘too modern’.

‘இது ரொம்ப சுலபம்’ என்றேன்

‘என்ன சொல்கிறாய் ஆபிதீன்?’

‘பாதி தாடி வைத்துக் கொள்ள வேண்டும். எந்தப் பக்கமென்று மட்டும் பெண்ணிடம் கேட்டுக்கொள்வது!’

நாளை மொயீன்சாஹிப் வரும்போது பார்க்க வேண்டும். மருதாணி பூசிய அதே சிவந்த முழு தாடிதானா?.

மொயீன்சாஹிப் , என் அறையிலுள்ள சர்க்காரின் ஓவியத்தைப் பார்த்துவிட்டு ‘சர்க்கார் என்கிறாய்.. தாடி கூட இல்லையே..’ என்று ஒருமுறை சொன்னார். அறிவு, மயிரில் இருந்தால் தாடி அவசியம்தான்!

*

10.11.95 கேஸட்டிலிருந்து..

இமயம்: நல்ல காரியம் செய்வது. யாருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது. நியமம் : ‘இபாதத்’தை தொடர்ந்து செய்து பழக்கமாக்கிக் கொள்வது. Comisc Habit Forceஐ பிக்-அப் பண்ணவிடுவது.
ஹக் (Hug) : Stop!

*

‘நிலையா உட்கார்றது, நேரா உட்கார்றது, நேரா பேசுறது, வார்த்தைப் பிறழ்ச்சியில்லாமல் சுத்தமா பேசுறது ஒரு பழக்கம். இது வரனும்டு விரும்புனிங்கண்டா எதைச் செய்யிறோமோ அதை கவனிச்சி செய்யனும் – சொறியிறது உட்பட. இப்படி கவனிச்சி செய்ய ஆரம்பிச்சாக்கா நம்மள்ட்டெ திரள்ற பெரிய சக்தி தெரிய ஆரம்பிக்கிம்’

*

‘எதையுமே சுவைங்க. பீ பேலும்போதுகூட அத வர்ற சுஹத்தை நினைச்சி சுவைங்க’

*

‘முக்கியமான Decision பூரா வெளிக்கிருக்கும்போது – பாதி சூத்தை சுருக்கி பீ வெளிலே நிக்கிம்போது – எடுக்குறதுதான்’ (முதுகுத்தண்டு நேராக இருக்கிறது)
*

Suppressionக்கும் Controlக்கும் உள்ள வித்யாஸம் :

ஒரு (மில்லியன்) லாட்டரி பரிசு. கடைசி நம்பர் மாறியிருக்கிறது. ‘பொய்டிச்சே பொய்டிச்சே’ என்று புலம்பி அடக்குவது suppression. ‘கிட்டெ நெருங்கி வந்துடிச்சி…நாளைக்கி வந்துடும்’ என்று நினைப்பது control. (‘வந்தா வரட்டும், வராக்கட்டி போவட்டும்’).

*

‘எப்பவுமே நாம நம்மளை உத்துப்பாக்குற மாதிரி இருக்கனும். அதுக்கு ‘ஜம்’ ரொம்ப ஹெல்ப்ஃபுல்’

*

‘எதையெல்லாம் நீங்க நாடி அடையிறீங்களோ, ஐ மீன், உங்க கற்பனைக்கு எட்டாததுலாம் கைக்கு வந்து தானா வுழுவுதோ, வந்த உடனேயே எப்ப பிக்-அப் பண்ணுறீங்களோ நீங்க சின்னதுலேயே பிக்-அப் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கண்டு அர்த்தம். அப்ப நீங்க செய்ய வேண்டியது பெருசு அல்ல. சின்னதைத்தான் செய்யனும்’

*

‘வந்துட்டா செஞ்சி முடிச்சிடனும். இல்லே, செய்யக்கூடாது; செய்ய வாணாம்; தேவையில்லைண்டு வுட்டுடனும். தேவையில்லேண்டு வுட்டுடுறதுக்கும் பாத்துக்கலாம்டு ஏங்குறதுக்கும் வித்யாஸம் இக்கிது’

*

‘ஒரு நல்ல சாப்பாடை சுவையோடு சாப்புட நினைக்கிறீங்க. அதுலெ பூனை மூத்திரம் பெய்ஞ்சிடுது. என்னா செய்வீங்க? தூக்கிப்போட்டு மம்மட்டிகடை காய்ஞ்ச பறாட்டா வாங்கித் திங்க முடியனும் – அந்தச் சுவையோட! இந்த செயல் வந்தா எல்லா பக்குவமும் தானா வந்துடும்’

*

‘Intercourse.. ரொம்ப ரொம்ப ஒசத்தியான வார்த்தை.. தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. ‘கோமாதா’ண்டு சூத்தை முச்சம் வுட்டான் ஒருத்தன் – அங்கேர்ந்துதான் எல்லாம் வருதுண்டு. உண்மை! ஆனா பெண்கள்லெ ரொம்ப பேரு ‘மானி’யை அசிங்கமா நெனைக்கிறாங்க.. அசிங்கம் அல்ல அது. என்னா, கொஞ்சம் சுண்ணாம்பு வாசம் அடிக்கிது!. அதுலெ அத்தர் பூசிட்டா? பொம்பளங்க புரிஞ்சிக்கனும்’
*

‘கல்யாணம் பண்ணாம தனியா வாழுறவன் பேட்டரி போடாத லைட் மாதிரி. கையாலே சுத்திதான் சார்ஜ் உண்டாக்கனும்! அப்ப இந்த சுத்துற வேகமும், சுத்துற Time-ம், வேலையும் மிச்சம் – அண்டர்ஸ்டாண்டிங் உள்ள பெண்டாட்டி கிடைச்சா. பெண்டாட்டியை மட்டும் சரியா திருப்திபடுத்திட்டா… உயிரை வுடுவா. அந்த எண்ணமே நம்மளைத் தூக்கிவுடும்’

*

ஒரு அறை, பளாரென்று – எனக்கு :

‘டீ குடிக்கும்போது சுவைச்சி, கவனிச்சி,ரசிச்சி குடிக்கனும். அதுலெ விஷம் கலந்திக்கிதுண்டு தெரிஞ்சா சொட்டுக்கூட உள்ளே இறங்காம முழுசா துப்பத் தெரியனும்’ – S’

‘சர்க்கார்.. தேநீர் குடிக்கிறது எப்படீண்டு ஒரு கலையா.. ஜப்பான்லெ 3 மணி நேர ப்ராசஸ்ஸிங்கா சொல்லித் தர்றாங்களாம். இது தியானத்துலெ…’ – நான் பாய்ந்தேன்.

‘அது தியானம்.. ஆனா, நீங்க செய்யிறது ஹராம்! நான் இப்பதான் சொன்னேன், ‘நான் பேசும்போது உங்களுக்கு நெனைப்பு வர்றதையெல்லாம் சொல்லாதீங்க’ண்டு. நல்ல செய்திதான். ஆக்கபூர்வமான செய்திதான். அதே நேரத்துலெ நிங்க செஞ்சது ஹராம். புரியுதா? அப்பப்ப நீங்க உங்களை பாத்துக்குங்க’ -‘S’.

ஒரே கத்தி.. ஒரே குத்து! – லா.ச.ரா

17.06.1996

சென்ற 14.06.1996 வெள்ளி செஷனில் எதுவும் எழுத முடியவில்லை. ஹலால்தீனின் கம்ப்யூட்டர் ஆபிதீனுக்கு சொந்தமாகிவிட்டது. அது நிஜமாகவே புதிதாக இருக்க வேண்டும் என்று low level format பண்ணி Dosஐயும் Windowsஐயும் ஏற்றிவிட்டு ஒவ்வொரு புரோக்ராமாய் லோட் பண்ணியதில் நேரம் ஓடிவிட்டது – செஷன் முடிந்த பிறகுதான்!. Processor 486 என்று நினைத்துக் கொண்டிருந்தது 386ஆக இருந்ததில் ஏமாற்றமில்லை. 450 திர்ஹம் செலவு பண்ணிவிட்டால் Math Processorஐ போட்டுவிடலாம். ஏமாற்றம் , நான் கம்ப்யூட்டரில் வரைந்த ‘சீனரி’ (Scenary) , ‘லோட்’ ஆகாமல் போனதில்தான். சர்க்காரின் ஆசைப்படி அதை பிரிண்ட் செய்வதற்காக காகிதத்தில் வரைய முடியவில்லையென்றாலும் ஆஃபிஸில் கிடைத்த நேரத்தில் அங்கு Micrografxன் Photomagicல் அதை வரைந்து file தயார் செய்திருந்தேன். Micrografx ஒரு அற்புதம். தேர்ந்த Spray Painterஐ பிச்சையிடச் செய்யும் நேர்த்தி. ‘ஆத்தி விடுவது’ என்று சொல்வார்கள் ஆர்டிஸ்ட்கள். BMP ·பைலை தயார் செய்யும்போது கூட இதன் வண்ணக்குழைச்சல் அவ்வளவாகத் தெரியாது. இந்த ·ஃபைலை Graphic Workshop (GWS)ல் போய் EXEயாக மாற்றும்போதுதான் அசத்தும். ‘Fade’ என்கிற switchம் போட்டுவிட்டால் Monitorல் ஒளி கிளம்பி உயிர்பெற்று மெல்ல அடங்கும்போது அந்த இடத்தில் நேரில் நின்று வந்தாற்போல் பிரமை. நான் எனது சூபர்வைஸருக்கான லாகின் ஸ்க்ரிப்டில் போட்டுவைத்திருந்தேன் ஆபீஸில். ஒவ்வொருநாளும் அதில் புகுந்தபிறகுதான் மெனு வரும். இதை பிரிண்ட் எடுத்து சர்க்காருக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவார்கள்தான். ஆனால் கலர் பிரிண்டர் இல்லை. இந்த ஃ·பைலை அனுப்பினால் அவர்களின் கம்ப்யூட்டரில் போட்டுப் பார்ப்பார்கள்தான். அவர்கள் வைத்திருப்பது மோனோக்ரோமா அல்லது கலர் மானிடரா என்று தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் உறை மூடிதான் கிடக்கிறது. கலராகவே இருந்தாலும் இந்த SS256.EXE அங்கு வேலை செய்யுமா? நான், ரூமுக்கு வந்திருக்கிற என் (!) கம்ப்யூட்டரில் இயக்கும்போதுதான் தெரிந்தது. VGA கார்டு பொருத்தமாக இல்லையென்றால் மலங்க மலங்க முழிக்கும்! இதற்கு ஒரு 150 திர்ஹம் செலவா? அந்த BMP ·பைலை 16 கலர் ஃபார்மேட்டில் சேமித்தால்தான் இயங்குகிறது. ஆனால் பசுநெய்யில் மண் கல்ந்தாற்போல ‘நறநற’வென்று அந்த இடத்திற்கே போகவேண்டாம் போல தோன்றிவிடுகிறது. VGA மாற்ற வேண்டும். அந்த ‘சீனரி’ முக்கியம்.

*

இடையில் கண்ட கனவுகளில் இன்னும் தெளிவாகத் தெரிவது பாட்டனார் மரைக்காப்பாவைப் பார்த்ததுதான். மரைக்காப்பாதான் எவ்வளவு பெரிய திடகாத்திரமான சம்சின்! இப்போது ரொம்ப தளர்ச்சியாகத் தெரிந்தார்கள். நான் இரண்டாம் வகுப்பில் படிக்கும்போதுதான் இறந்தார்கள், இல்லையா? வயது கூடித்தான் இருக்கும். ஆனால் முகத்தில் என்னைப்பார்த்ததில்தான் எத்தனை சந்தோஷம்! மோந்து முத்தமிட்டார்கள். ஆனால், பாட்டனார்தானா இது? முகம் அப்படியே அச்சாக சர்க்கார் போல இருக்கிறது. சர்க்காரை பாட்டனார் என்று ஏன் சொல்லக்கூடாது? வாப்பாமார்கள் தன் வாழ்நாட்களை சபர் செய்வதிலும் சொத்து சேர்த்து அழிப்பதிலும் (இதில் என் வாப்பாவின் ‘பட்டறிவு’ பிரசித்தம்!) செலவழித்ததில் மகன்களுக்கு வாழும் முறையை போதிக்கவும் ஒரு நிமிடம் ஒதுக்காதபோது பாட்டனார்கள் தேவைதான்.

‘மத்தவன் பூராம சுவற்றைக் கட்டுவதற்கு பதிலா சுவற்றை, சுவற்றைக் கட்டுவதற்காக ஸ்ட்ராங்கா கட்டுங்க’ – ‘பாட்டனா’

*

‘கெட்ட பழக்கத்தை நிப்பாட்டுறதுக்கும் நல்ல பழக்கத்தை உண்டாக்கிக்கறதுக்கும் கான்சென்ட்ரேஸன் முக்கியம்’

‘சுவத்தையோ கதவையோ வீட்டையோ அல்லது தெருவையோ பார்த்து பயப்படுறவன் என்னா செய்யலாம்? ஒரு ஆளை துணைக்கி கூட்டிட்டுப்போனா பரவாயில்லே. ஆனால் daily துணை கிடைக்கனுமே..எதுக்கு பயப்படுறோமோ , எந்த வீட்டைக் கண்டு பயப்படுறோமோ , அந்த வீட்டையே நேரடியாக face பண்ணு. நே…ரா பாரு! Face the truth! இதை செஞ்சா (similarity) எந்த பிரச்சனையையும் நேரடியா மோதலாம். ‘பாத்துக்கலாம்’,’கேட்டுக்கலாம்’,’அவர்ட்டெ சொல்லலாம்’டுலாம் வராது. டைரக்டா மோத வைக்கிம்’

‘Once , ஒண்ணைப்பார்த்து எப்ப நாம ஏங்கிட்டோமோ அதைவிட நாம சின்னதுண்டு அர்த்தம். நாம் சின்னதுண்டு ஒத்துக்கிட்டோம்டு அர்த்தம். நாம எதை விடவும் சின்னதல்ல’

‘சாய்ஞ்சு உட்காரும்போது ‘சாய்ஞ்சி உட்காருறோம்’டு உணர்ந்து உட்காரனும்’. சர்க்கார் இதைச் சொல்லிவிட்டு தான் ஒரு புத்தகத்தில் எழுதியிருக்கிற ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். ‘சீப்பு கொண்டு வா’ என்று கணவன் சொல்கிறான். ‘கண்ணாடியை(யும்) கொண்டுவரவா?’ என்கிறாள் மனைவி. வீட்டுக்கு வீடு மனைவிகள்! ‘
கொஞ்சம் நில்லு’ – யோசித்துவிட்டு, ‘கொண்டு வா’ என்கிறான் கணவன்.

‘ஏன் அப்படி யோசிச்சிங்க?’

‘சீப்பை அடையனும். தலை வாரணும்டுதான் நான் கேட்டேன். இப்போ ‘கண்ணாடி’ண்டு இன்னொரு புதுப்பொருளை கேட்டுட்டே..அது தேவைதானா என்று யோசனை பண்ணுனேன்’ – கணவன்.

*

‘மசால்தோசை திங்கப்போற நீ மசால்தோசைக்காகத்தான் போவனும்’ – ‘பாட்டனா’

*

19.06.1996

‘ஜம்’ செய்யும்போது இன்னக்கி என்னான்னா செஞ்சோம்டு நெனைச்சுப்பார்க்கனும். தவறை நினைச்சி, ‘சரி’ நாளைக்கி இப்படி பண்ணக்கூடாது, கண்ட்ரோல் பண்ணனும்டு நெனைச்சா இந்த எண்ணமே கண்ட்ரோல் பண்ணும். பண்ண விடனும். பண்ண விட்டா போதும். unncessary அசைவுகள் வரத்தான் செய்யிம். இதே..நிறைய வரக்கூடாதுண்டுதான் சொல்றேன்.50%க்கு மேலெ வரக்கூடாது. 50%க்கு மேலே பாசிடிவ்தான் இருந்துகிட்டிருக்கனும். அப்பத்தான் தீர்ந்த அசைவு வரும். தீர்ந்த அசைவு, தீர்ந்த பார்வை, தீர்ந்த எண்ணம், தீர்ந்த குறிக்கோள், தீர்ந்த ஃபோர்ஸ் எல்லாம் ஃபார்ம் ஆகும். ஒண்ணே ஒண்ணை இழுத்தா அதனுடைய தோழனை அது கூப்பிடும். Light attracts light.. நீங்கள்லாம் சரியா ‘ஜம்’ பண்ணலேண்டு நெனைக்கிறேன். அது சம்பந்தமா கேளுங்க’

ஒரு சீடருக்கு ஜம் சமயத்தில் சினிமாப்பாட்டு கேட்கிறது. கஷ்டம்! ‘சக்கரைவள்ளிக் கிழங்கு நீ சமைஞ்சது எப்படி’…’எப்படி..எப்படி..?!’

‘அட, பாட்டு போட்டா நானும்தான் ரசிக்கிறேன். ஒண்ணு பாட்டை ரசிங்க. இல்லே, எதைப்பத்தி நெனைச்சிக்கிட்டு இந்தீங்களோ – பாட்டை discard பண்ணிவுட்டு – அதை நெனைங்க. ரெண்டையும் சேர்த்து செய்ய முடியலேண்டு சொன்னா, அந்த சமயத்துலே ‘ஜம்’ பண்ணாதீங்க’

*

‘மனப்பண்பைப் பத்தி என்னக்கி ஊருலெ பேச ஆரம்பிப்பானோ அன்னக்கிதான் சமுதாயம் உருப்படும். அப்பதான் ஃப்ரீயா சமுதாயத்துலெ பழகலாம்’

*

‘Dominating Emotion’ண்டா… எந்த உணர்ச்சியை மெயினா வச்சி வாழுறீங்களோ, எது இல்லாட்டி வாழ்க்கை இல்லேண்டு போவுமோ..அது. செக்ஸ்ண்டு சொல்லலாம். ஆனா அதுக்குக் கீழே எத்தனையோ காரணம் இருக்கும். செக்ஸ் அல்ல, நூறு பேர்லெ ஒரு ஆளுக்குத்தான் செக்ஸ் மெயினா இக்கிம். செக்ஸ் ஃபோர்ஸ்அதிகமா இக்கிறதுக்கு ஏக்கம் காரணம். love starvation, தாயின் அரவணைப்பு கிடைக்காம போறது..இதுக்கு substituteஆ positive concentration ஏற்படுத்திட்டாக்கா , செக்ஸ் uncontrollableஆ இருக்காது. அப்படி நெனைச்சிப்பாருங்க. எதுக்காக நீங்க வாழுறீங்க? ரவூஃப், அன்னக்கி நீ பணம்டு சொன்னா! பணம் அல்ல. உனக்கு தேவைப்படுறது. அறிவு. தெரிஞ்சிக்கனுங்குற அறிவு! அன்னக்கி நான் சொன்னேன், அறிவுங்குறது ஆர்கனைஸ்டா இருக்கனும். Walking Encyclopediaவா இருக்கிறதுனாலே எந்த லாபமும் கிடையாதுண்டு. Lifeலெ கோர்க்க முடிஞ்சதா இருக்கனும். Each and everything must be co-ordinated. அதுதான் லைஃப்ண்டு சொல்லியிக்கிறேன். பணம் – ஒண்ணு, ஆரோக்கியம் – ரெண்டு, குழந்தைச் செல்வம் – மூணு, சோசியல் செல்வாக்கு – நாலு. எல்லாம் சேர்ந்து வரனும். இது இதுக்கு இத்தனை percentageண்டு நான் dominating feelingஐ வச்சித்தான் கொடுக்க முடியும். அடுத்த செஷன்லெ ஒவ்வொரு ஆளும் dominating feeling எது உங்களுக்குண்டு சொல்லுங்க. அதுதானா, அதுக்கு மேலே ஏதாவது இருக்காண்டு நான் சொல்றேன்’ – ‘S’
*

‘இப்ப நாம டாக்டர்ண்டு வச்சிக்குங்க.. உங்க உங்க வியாதியை புரிஞ்சிக்குங்கண்டு நான் சொல்லும்போது எனக்கு தலைவலிக்கு மருந்து தாங்கண்டு கேக்குறமாதிரி இருக்கு. உங்களுக்கு மருந்து கொடுக்க ஆரம்பிச்சா நான் பேசமுடியாது. முதல்லெ வியாதியை கண்டுபுடிங்க. அதோட எந்த வியாதியையும் எப்பவும் கண்டுபிடிக்கிற பக்குவத்தை வளர்த்துக்குங்க. அப்ப உங்களுக்கு compensation என்னாண்டு தெரிய ஆரம்பிக்கும். இல்லாட்டா தர்றேன். அப்ப எல்லாருக்கும் யூஸ்ஃபுல்லா இக்கிம்’ – ‘S’ (Postive compensation பற்றிக்கேட்ட சீடரைப் பார்த்து)

*

‘லைஃப்லெ அறிவு ரொம்ப முக்கியம். அந்த அறிவு கோர்க்கப்பட்டதா, லிங்க் உள்ளதா இருக்கனும்டு சொன்னேன். Life must be organised. எனக்கோ, உனக்கோ, என் கூட்டாளிக்கும் உன் கூட்டாளிக்கும், என் புள்ளைக்கிம் அவன் புள்ளைக்கிம், என் புள்ளைக்கிம் உன் கூட்டாளிக்கும்டு நான் சொல்றது எனக்கு கிடைச்ச பிறகுதான். முதல்லெ நீ உன்னைப் பார்க்கனும். உனக்கு தேவைபட்டு மிஞ்சினபிறகு பொஞ்சாதி புள்ளைக்கும் கொடு. ஊர்க்காரனுக்கு, தெருவாளிக்கு, கூட்டாளிக்குக் கொடு. அவனுக்குப் பிறகு அமெரிக்காக்கு கொடுத்துக்கலாம்!’
*

‘Unknown force : வெளிமக்களால் திணிக்கப்படும் கருத்துக்கள். Known Force : நம்முடைய pros & consஐப் பார்த்து, consequeces பார்த்து, நாம டிசைட் பண்ணி எடுக்கிற முடிவு. இதுக்கு வெளிமக்களின் அறிவும் stimulationம், suggestionம் helpஆ இருக்கலாம். ஆனால் செஞ்சிக்கிட்டிக்கிம்போது, செஞ்சி முடிக்கும்போது நமக்குத்தான் மகிழ்ச்சி கிடைக்கும். இது சுயநலம் அல்ல. பொதுநலம்தான் . ஏன்? இது மக்களுக்கும் பயன்படப்போறது. நீங்க வீடு கட்டுறீங்கண்டு சொன்னா உங்களுக்காகத்தான் கட்டிக்கிறீங்க. ஆனா உங்க காசு கூலியாப் போவுது. சாமானாப் போவுது! சுயநலம் எது? நீ சந்தோஷமா இக்கிறதுக்காக மத்தவன் மண்டையப்போட்டு நசுக்குறது. முடிஞ்சா மத்தவங்களுக்கு நன்மை வர்ற மாதிரி நீ வாழு. நீ வாழும்போதே மத்தவனுக்கும், ஒரு தேத்தண்ணி, பன்னு கிடைக்கிறமாதிரி பார்த்துக்க. இல்லையா? அட்லீஸ்ட் நீ வாழ்ந்துட்டு போயிடு. இது சுயநலம் அல்ல’
*

‘Mental Scienceலெ – ஷார்ப் லைன் போட்டு – இது மரம், இது தண்ணி, இது காத்துண்டு பிரிக்கிறமாதிரி பிரிக்க முடியாது.Subconsciousண்டு சொல்லும்போது unconcious கலக்கும். consciousலெ unconscious கலக்கும். ‘முஹாஷபா’லெ ‘முராக்கபா’ கலக்கும். சில நேரத்துலெ மேலேயும் கீழேயும் ‘ஜம்ப்’ ஆயிக்கிட்டிக்கிம். இப்படி மாறி மாறி வர்ரதுக்கு ‘ஹாலு’ங்குறது. பிராக்டிஸ் பண்ணிப்பண்ணி , ஒரேயடியா நிலைச்சிப்போய்ட்டா ‘முகாம்’ம்பாஹா. ‘முஹாஷபா’லெ ‘முகாம்’ ஏற்ப்ட்டிச்சிண்டா ‘முராக்கபா’ மோதிக்கிட்டே இக்கிம். Mental Scienceலெ இன்னதுதான் இன்னதுண்டு சொல்றது கஷ்டம்’
*

‘முத்தேவைகள்; உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை. சரி, இந்த மூணும் வேணாண்டுட்டு எத்தனையோ பேரு பொருட்படுத்தாம வாழலை? அவன் வளர்ந்து , நம்மளையும் சிரிக்க வச்சிருக்கானே! அப்ப , அவனைப் பொருத்தவரைக்கிம் அதுதான் லட்சியமா இருந்திருக்கு. மூணுவேளை சோறு நமக்கு லட்சியம். எது பெருசு, எது சின்னது? இதுக்கு நம்ம பார்வை பத்தாது’

*

‘ரியாலத் (‘SS’) பண்ணும்போது சுத்திக்கிட்டு வர்றது, நிக்கிறது, மேலே போறது எல்லாமே நீங்கதான். (கீழே கெடக்குற நம்ம உடல், Pant மாதிரி)’

*

22.06.1996

நேற்று வெள்ளி செஷன் முடிந்து சேத்தபொண்ணின் கல்யாண கேஸட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சின்னம்மா மகன் தௌஃபீக் கொண்டுவந்திருந்தான் ஊரிலிருந்து. எவ்வளவு சிறப்பாக முடிய சர்க்கார் உதவி புரிந்திருக்கிறார்கள்! சேத்தபொண்ணு பேரழகியாக இருந்தது. பம்பரமாய் அஸ்மா சுற்றிக்கொண்டிருந்தாள். ஆனால் எல்லாவற்றையும் விட என் பிள்ளைகள்தான் அழகு. கேஸட்டைப் பார்க்கமலே இருந்திருக்கலாமோ? மனது அவர்களை இழந்ததில் இந்த வலி வலிக்கிறதே.. காதுகுத்த, ‘மணவறை’யில் உட்கார்ந்திருந்த மகள் அஸ்ரா நிலாமாதிரி இருந்தாள். என் கண்ணே பட்டுவிடும் போல. வீடியோக்காரன் திறமையானவன்தான் போலும். அந்த சமயத்தில் உம்மாக்காரியின் முகத்தை க்ளோஸ்-அப்பில் காட்டுகிறான். அஸ்மாவின் முகத்தில்தான் அந்த சமயத்தில் எத்தனை உணர்ச்சிகள்! அழுகையை மறைத்துக்கொண்ட மாதிரிதான் இருந்தது , அவள் புருவச் சுழிப்பில். அட வாப்பாக்காரனே, அனீஸின் சுன்னத்திற்கும், அஸ்ரா பெரியமனுஷியாகும் வைபவத்துக்கும் இப்படித்தான் எங்கோ தூரத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு இருப்பாயா?

(தொடரும்)

குறிப்புகள் :

ரியாலத் : (‘SS’) பயிற்சி
கில்லா – கோட்டை
எஜமான் – ஷாஹுல் ஹமீது பாதுஷா
அஸ்மா லைன் – மாந்திரீக வேலை
பரக்கத் – அருள், வளம்
இபாதத் – இறைவனைப்பற்றிய சிந்தனை
மானி – ஆண்குறி
ஹராம் – விலக்கப்பட்டது
சம்சின் – பயில்வான்
சபர் – பிரயாணம்

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (15)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 | அத்தியாயம் 03 அத்தியாயம் 04அத்தியாயம் 05 |  அத்தியாயம் 06அத்தியாயம் 07அத்தியாயம் 08அத்தியாயம் 09 |  அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 | அத்தியாயம் 12அத்தியாயம் 13 | அத்தியாயம் 14

அத்தியாயம் 15

ஆபிதீன்

*

01.06.1996

இன்னும் மாதத்தின் முதல்நாள் சம்பளம் கொடுக்கிற கம்பெனியாக முக்தார் அப்பாஸ் இருக்கிறது. சந்தோஷம்தான். ஆனால் முதல்நாளே எல்லாவற்றையும் இழந்துவிட்டு கடனாளியாக இருப்பதற்கு ஒரு similarity இருக்கிறதா? இருக்கிறது. மஸ்தான் மரைக்கான் போட்ட கறி இல்லாத தாழிச்சாவுக்கு (தொழில்திறமை அதிகமாவதில் , அவன் கூடிய சீக்கிரம் தாழிச்சா இல்லாமலேயே தாழிச்சா போடுவான்!) இரவில் ஒரு தந்துரொட்டி , ஒரு வாழைப்பழம் போதும் என்று நினைத்துவிட்டு இரவில் இரண்டு தந்துரொட்டியையும் இரண்டு வாழைப்பழத்தையும் சாப்பிட்டதைச் சொல்லலாம்.

*

02.06.1996

இன்று காலை கண்ணுவாப்பா ஃபோன் செய்து மறுபடியும் ஊரில் கலவரநிலை என்று சொன்னான். கடற்கரைக்குப் போன ‘நம்’ பெண்களைக் கிண்டல்செய்த ஒரு செம்படவ இனத்தைச் சார்ந்த இளைஞனை ‘நம்’ பையன்கள் கொன்று விட்டார்களாம். இதன்படி பார்த்தால் தர்ஹா மார்க்கெட்டில் தினம் வாங்கும் கிண்டல்களுக்கு தினம் பத்து ‘நம்’ பையன்களை கொன்றுபோட வேண்டும் அவர்கள். ஊரில் அமைதிக் குழுவினர் செயல்பட ஆரம்பித்துவிட்டார்களோ? ஆனால் அதென்னமோ ஊரில் நடக்கிற இனக்கலவரத்திற்காக பாதிக்கப்படும் முஸ்லீம்களுக்கு உதவ , பெரியமனசு பண்ணி துபாயிலுள்ள நாக்கூர் ஜமாஅத் தன் உள்சண்டைகளையெல்லாம் ஒரு நொடி ஒதுக்கிவிட்டு பணம் வசூல் பண்ண ஆரம்பிக்கும்போதுதான் இப்படி நடக்கிறது! ‘நம்ம பையன்’ M.L.Aவா வந்த சமயத்துல இப்படிலாம் நடக்க ஆரம்பிச்சா அவன் பேரு கெடுமே’ என்று மொம்மதுகாக்காவுக்கு வருத்தம். எனக்கோ பிள்ளைகளை நினைத்து கவலை. கோபம் கொண்டால் மீனவர்கள் சுலபமாக ஏறக்கூடிய சியாந்தெருவில் – ரயிலடிக்கு அருகாமையில் உள்ள வினித் நர்ஸரி ஸ்கூலில் – அஸ்ரா படிக்கிறாள். நாளை ஸ்கூல் திறக்கிறார்கள். அனீஸைக்கூட இந்த வருடம் சேர்த்துவிடலாமென்று அவன்தான் துடியாக இருக்கிறானே…இவன் பேசுகிற பேச்சில் ஸ்கூலில் மதக்கலவரம் நடக்காமல் இருக்க வேண்டும்! ‘ஒரே சலவாத்துதான் போங்க’ என்று உம்மாக்காரி செல்லமாக அலுத்துக்கொள்கிறாள். நானிருக்கும்போது கூட இரண்டு முறை அந்த மூன்றெழுத்து ‘புனித’ வார்த்தையை சொன்னான் அவன். நான் அதட்டல் போட்டதில் அடங்கியிருந்தது. ஒருமுறை ஏதோ கோபத்தில் ‘பு’ என்று ஆரம்பித்தான். நான் ஒரு பார்வை பார்க்கவே ‘பு…ட்டி’ என்று சமத்காரமாக முடித்தான்! கேட்டுக்கொண்டிருந்த அஸ்ரா , ‘அதை’ சொல்ல வந்தான், அப்படியே மாத்திட்டான்!’ என்று தம்பியின் சமாளிப்பில் சந்தோஷப்பட்டுக் கொண்டாள். அவள் ‘அதை’யெல்லாம் சொல்லமாட்டாள். பிள்ளைகள் ‘அதை’க்கூட சொல்லலாம் தப்பில்லை. ‘மாவு’ என்று ஒரு ஹிந்து மதத்தைச் சார்ந்தவரை சொல்லாமலிருக்கும் பக்குவம் வரவேண்டும். நாக்கூரில் இது நடக்கிற காரியமா? இப்போது ‘பவுடர்’ என்று சொல்கிறார்களாம் பஜாரின் மொட்டைத் தலைகள். கலவரம்!

*

20-27.10.95 கேஸட்:

‘தீர்ந்த குரல்’ண்டா என்னா? பொரிச்ச சட்டிலே போட்டு வறுத்த குரலா?’ – ‘S’

‘சரியான பேச்சு’ – ரவூஃப். M.A. Eng. Litt.

‘தேவையில்லாத பேச்சு..! பேசுனா ஆணி தெறிச்ச மாதிரி, உப்பு போட்ட மாதிரி பேசப் படிச்சிக்கிட்டோமுண்டா சொன்னதுலாம் பலிக்க ஆரம்பிக்கும்’

*

‘Ascimilating Forceங்குறது overhaul பண்ணுறமாதிரி. Thought Forceங்கிறது Overhaul பண்ணுனபிறகு எப்படி பிராக்டிஸ்லெ கொண்டுவரனும்ங்கிறது. Thought forceங்கிறது Action. செயல். தெய்வத்தன்மை கலந்தது. Ascimilating force – humanதான். பயிற்சி பண்ணப்பண்ண, Ascimilating force இல்லாமலேயே thought force வர ஆரம்பிக்கிம். ஆனா, வரனும்டு எதிர்பார்க்காதீங்க. படிப்படியாத்தான் மேலே போவனும். ஆனா ஒரு ஆளு தூக்கி உங்களை ஒண்ணுலேர்ந்து நாலாவது படிலெ வச்சா? அதே மாதிரி!’ – ‘S’

*

Quick Decision :

‘Quick Decision எடுக்குறதனாலே வர்ற நஷ்டத்தைவிட எடுக்காம குழம்பிக்கிட்டு நிக்கிறது முட்டாள்தனம்ங்குறேன். சக்தி விரயம். Quick Decision எடுத்து முட்டிக்கிறதை விட எடுக்காம நிண்டுக்கிட்டிக்கிறது மட்டம் , Mental வீக்னஸ்அது’ – ‘S’

*

‘ஒரு பொருள் கொடுத்தா , அவன் (உங்க) கிட்டெ வரைக்கிம் கையே நீட்டாதே. வந்து நீட்டுனா ‘டக்’குண்டு புடிச்சிடனும். நீட்டிப்புட்டு நவந்துட்டாண்டா பாய்ஞ்சி போயி குரல்வளையை கடிங்க, கொரம்புங்க!’ – ‘S’

*

எதிரில் வந்து நின்று நம்மை ஏதாவது கேட்கச் சொல்லும் இறைவனிடம் இப்படிக்கூட கேட்கலாமாம். ஒரே மூச்சு! ‘பணம்காசுஆரோக்கியத்துடன் குடும்பமகிழ்ச்சியுடன் சமுதாயசெல்வாக்குடன் டாக்டர்செலவில்லாத சூழ்நிலையுடன்கூடிய வாழ்க்கையைக்கொடு’!.

‘இதல்லாம் அல்லாஹ்வுக்கு புரியாது. அவன் பெரிய கள்ளன். ‘மக்ரன் வ மக்ரன் குப்பாரா வல்லாஹூ கைரில் மஹக்கிரி! – இவன்லாம் இடக்கு பண்ணுறானுவ, அல்லாஹூத்தஆலா பெரிய மக்ரூஹ்க்காரண்டு (சூழ்ச்சி செய்பவன்) ஆயத்து இக்கிது!’ – ‘S’

*

‘SS’ல் ‘கில்லா’ கொடுத்த நோக்கம்:

‘உங்கள்ட்டெ திரள்ற சக்தி, that means, நீங்க நீக்குற அழுக்கு நீங்கி நெருப்பு பிரகாசிக்கும்போது மத்த தீயசக்திகள் அதை கெடுத்துடக் கூடாது.. Psychic self defence..’

*

‘வெளியேலேர்ந்து வர்ற vibration நம்மளை அட்டாக் பண்ணாம இக்கிறதுக்கு நாம் நம்ம பெர்ஸனல் லைஃப்லெ ஒரு லட்சியத்தொட வளரனும். இப்ப நேரா பார்த்து , கரெக்டா பேசுற வரைக்கிம் நம்மளை ஒண்ணும் பாதிக்காது. அலைபாய்ஞ்சிக்கிட்டு பார்த்தா எந்த செய்தியும் நெஞ்சில் பூர blankஆ வச்சிட்டீங்கண்டு அர்த்தம்’.

சர்க்கார், மதம் கொண்ட யானைய கண்ட்ரோல் பண்ணும் வழியைச் சொன்னார்கள்: ‘ ரொம்ப சிம்பிள். ஆனா ‘தில்’ இருக்கனும்’ – ‘S’.

அசப்பில் அரபிகளை கண்ட்ரோல் பண்ணும் வழிமாதிரிதான் இருந்தது!

*

‘அமெரிக்காவுல உள்ள வைப்ரேசனும் அடுத்தவீட்டு வைப்ரேசனும் equalதான். ஒரே velocityதான். ஒரே strengthதான். ஒரே intensityதான். ஒரே powerதான் இத செஞ்சிப்பாருங்க.. அமெரிக்காவுல உள்ள உங்க கூட்டாளிட்டேர்ந்து ஏன் லெட்டர் வரலேண்டு நினைங்க, வுட்டுடுங்க. நெனைச்சிக்கிட்டே இருக்கக்கூடாது. லெட்டர் வரும். அவன் எப்ப எழுதுனாண்டு பாருங்க. நீங்க நெனச்ச அதே நேரம்தான். லெட்டர் வரலேண்டா ஃபோன்’

‘ஏன் வுட்டுடனும்டு சொல்றீங்க?’ – ரவூஃப்’

‘நம்மை நெகடிவா நெனைச்சி நெனைச்சி பழக்கப்பட்டிருக்கிறோம். நெனைச்சி நெனைச்சி தோத்துப் போயிருக்கிறோம். இந்த தோல்வி மனப்பான்மை powerஐ கெடுக்கும். இது முக்கியமான பாயிண்ட். குறிச்சி வச்சுக்குங்க’ – ‘S’

*

‘SS’ன் கில்லா :

‘வரக்கூடிய நெகடிவ் ஃபோர்ஸை அந்தக் ‘கில்லா’வே கண்ட்ரோல் பண்ணிடும். our heart is open only to the positive thoughts. only to the positive vibrations. எவ்வளவு ரிலாக்ஸ்டா இக்கிறீங்களோ அவ்வளவு பவர்ஃபுல்லா இருப்பீங்க’

*

‘ஒரு மெழுகுவர்த்தி எரியிற நேரத்துக்குள்ளே அல்லாஹ்வை பாக்கலாம். அர்த்தம் என்னா? உங்களைப் பார்க்கலாம். ‘ஃபிக்ரு க ஃபீக யக் ஃபிக்’ (உன்னை உற்றுப்பார்; அது உனக்குப் போதும்) அல்லா மலை உச்சியிலே இக்கிறான், காட்டுலெ இக்கிறாங்குறதுலாம் பொய். எங்கும் இருக்கிறான். அப்ப இங்கேயும் இக்கிறான்லெ? முதல்லெ இங்கெ உள்ளவனை பாருங்கனி! க்வாஜா பந்தே நவாஸ் சொன்னாங்க, ‘நான் எங்கெங்கேயோ தேடிப்பார்த்தேன். ஆனா பெரிய வேடிக்கை என்னா, எங்கே நெருக்கமா தெளிவா இருக்கானோ அதை வுட்டுப்புட்டு எங்கெல்லாம் மறைவா இருக்கானோ அங்கே தேடியலைஞ்சேன்!.. சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை
அறியுமோ?!’ – ‘S’

**

03.06.1996

என்னுடைய பயிற்சியில் ஏதோ குறைபாடு இருக்கிறது. அவசரம், கவனமின்மை இருக்கிறது. ஜெப்பார்நானாவிடம் வாங்கிவந்த கேஸட்டை ரிகார்ட் பண்ணி வைத்துக்கொண்டால் உடனே ஜெப்பார்நானாவுக்கு திருப்பிக்கொடுத்த மாதிரி இருக்குமே என்று மஸ்தான் மரைக்கானின் டபுள் கேஸட் ரிகார்டரில் பதிவு பண்ண பகல் எடுத்துப் போனேன். ‘மச்சி மார்கெட்’டைத் தாண்டி டிரைவர் வண்டியை இலேசாக நிறுத்துவான் , நான் இறங்க வசதியாக. பறக்கும் கார்கள் உள்ள சாலை அது. அவசரமாக இறங்கியபோதுதான் தெரிந்தது, கேஸட்கள் வண்டியில். அடுத்து இறங்க வேண்டிய கப்பமரைக்கார் அல்லது மொம்மது காக்காவின் கையில் கேஸட்கள் போய்விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் சாப்பாடே செல்லவில்லை.. மாலையில் பத்திரமாக டிரைவர் கேஸட்களை கொடுத்தபிறகுதான் நிம்மதி. சர்க்கார் ‘புஷ்து’ மொழியில் பேசியிருந்தால் அவன் கொடுத்திருக்க மாட்டான்! அடுத்த மாலை ஒரு JVஐ தவறாக நான் போஸ்ட் செய்து விட்டேன் என்று மொயீன்சாஹிப் சொன்னார். ஹாஷிம்முக்தாருக்கு க்ரெடிட் கொடுப்பதற்குப் பதிலாக ஹசன்முக்தாருக்கு கொடுத்துவிட்டாய் என்றார். நிவர்த்தி பண்ண நான் மறு எண்ட்ரி போடுகையில் ரிவர்ஸ் பண்ண மறுபடியும் ஹசனுக்கே க்ரெடிட் கொடுத்தேன். முகம் சுளிக்காமல் நோன்பின் ஜக்காத் கொடுக்கும் முதலாளி என்பதாலோ என்னவோ. முந்தையாவது பரவாயில்லை. இது ‘ஜம்’ நேரம்! ஆபிதீன், நீ திருந்த மாட்டாயா? திருந்த வேண்டும். திருந்தியே ஆகவேண்டும். திருந்த இயலும். திருந்துபவன் ஆபிதீனாக இருக்கக் கடவது!

‘ஜம்’ நீங்கள்லாம் பெர்ஃபெக்டா செய்ய ஒரு வழி இக்கிது. அந்த மூணு மணி நேரமும் தூங்கிடுங்க!’ – சர்க்காரின் கிண்டல்.

*

27-10 to 10.11.95 கேஸட் :

‘சக்தி அதிகமாகும்போது கை கால்கள்லெ அசைவுகள் வருது. இத குறிச்சிக்குங்க. சக்தி, வெளிலே போற பாதை தெரியாம கைகால்கள் மூலமா, கண்ணசைவு மூலமா, பேச்சு மூலமா வெளியே வருது. நமக்கே தெரியாம unconscious, subconscious levelக்கு என்னென்னமோ மெஸ்ஸேஜ் வருது. அதை வெளிலெ காட்டத் தெரியாம சொறியிறது மூலமா, அடிக்கிறது மூலமா, கிண்டல் பண்ணுறது மூலமா வெளிவருது. இப்படி வெளிவர்றதை கண்ட்ரோல் பண்ணி செய்யாம இருந்தா என்னா வரும்?’ – ‘S’

‘அந்த பவர் உள்ளேயே பொய்டும்’ – ரஃவூப். ‘சக்தி அதிகமாவும்’ – இன்னொருவர்.

‘சரிதான் நீங்க சொல்றது. ஆனா நான் எதிர்பார்க்கிற பதில் அல்ல. இப்படி அடக்குன உடனேயே , மூச்சோட்டம் முதல்லெ கண்ட்ரோல் ஆவும். அதோட frequency மாறும். அதாவது , ஞானிகள் தியானம் பண்ணும்போது என்ன மூச்சு வுட்டாங்களோ அது வரும். கொஞ்சநேரம் மனசில வரும் எண்ணங்களை தட்டிவிட்டுக்கொண்டே இருந்தா நாம நினைச்ச மாதிரி நாம் அல்ல. நாம பவர்ஃபுல்ண்டு தெரியும். சும்மா உக்காந்திருங்க அப்படியே. 20 minutes. அப்புறம் உங்க முகத்தை பாருங்க. பெர்ஸனாலிடியே வேற ஆளாத் தெரியும். இந்த மனப்பான்மைய நிலைப்படுத்துறது எப்படி? ஒரு நாளைக்கி 5 நிமிஷம் வந்துட்டுப்போயிட்டா? 24 hours வரணும். இதோட குழந்தையக் கொஞ்சனும், ‘கும்பலமாசி’ திங்கனும், பிசினஸ் பண்ணனும், ஃபுட்பால் ஆடனும். திரண்டு வெளிவர முயற்சி பண்ணுற சக்தி பூரா அப்படியே திரும்பி கீழே போயி, உங்க லைஃப்லெ எதனாலெ டென்சன் வந்திச்சோ , அதைமுறியடிக்க என்னா வேணுமோ, அது mindலெ வர ஆரம்பிக்கிம். இப்ப கையில வர்ற டென்சன் – இது consious levelதான் இருந்தாலும் – subconsious memoryலெயும் வருது. ரெண்டும் சேர்ந்து unconscousக்கு பொய்டும். அல்லாட வீடு அது. அல்லாமியான் அங்கேதான் இக்கிறாரு! அவர் ஆர்டர் கொடுப்பாரு. அதனாலெ , அசைவு தேவையில்லாம வரப்புடாது. கையை காலை காட்டித்தான் emphasis பண்ணி புரியவைக்க முடியும்டா அந்த அளவு மட்டும் காட்டுங்க’

‘எப்படி அந்த statusஐ கண்டினியூ பண்ணுறது?’ – ரவூஃப்

‘ஒண்ணும் செய்ய வாணாம். செயலைக் குறை; பார்வையைக் குறை; பேச்சைக் குறை. ஒண்ணும் செய்ய வாணாம். குறை! அவ்வளவுதான்!’ – ‘S’

*

‘வாழ்க்கை என்பது மேடு பள்ளம்தான்’டு சொல்றது பள்ளத்துலெ வுளுந்தவன் பேசுற பேச்சு. டிரங்க் ரோட்ல போவாதவன் பேசுற பேச்சு. பள்ளமில்லாம வாழலாம். ஆனா பள்ளத்துல வுழுந்த ஆளை நக்கல் பண்ணாதீங்க. பண்ணுனீங்க…நீங்க கீழே பொய்டுவீங்க! இது பட்டத்து தாள் மாதிரி. ரொம்ப delicate..’ – ‘S’

*

‘இப்ப நாம ஓதுறதையெல்லாம் வுட்டு மேலே போய்க்கிட்டிக்கிறோம். சொன்னாவே பலிக்கிற நிலைக்கி வளர்ந்துக்கிட்டிக்கிறோம். தீர்ந்த எண்ணம் வந்துட்டா நெனைச்சதை அடைய முடியும். அதுக்காக நெனைச்ச உடனே வாழைப்பழம் வாங்கிடலாம். பென்ஸ் கார் வாங்க முடியாதுல்லே? கொத்துப்புராட்டா வாங்கிட்டோம், கார் வாங்க முடியலேண்டு துப்பாக்கியை கீழே போட்டுடாதீங்க. கொஞ்சம் ஃபோகஸ் தேவை. ஒவ்வொண்ணா உடைய ஆரம்பிக்கிம். அப்படி வரும்போது ‘ பணமா?’ ‘நத்திங்’ண்டு தெரிய ஆரம்பிக்கிம். ஆனா அப்ப ரியாலத்தை உட்டுடாதீங்க’ – ‘S’. (கடன் தொல்லை தீர)

*

‘வெளிக்கி முக்கிக்கிட்டு இக்கிறீங்க, பீ மாட்டிக்கிட்டு இக்கிது, ஆனா அரைவாசி உள்ளே இக்கிது. எவ்வளவு நீளத்துலெ இக்கிதுண்டு தெரியாது.. நெட்டையனா குட்டையனாண்டு தெரியாது. ஆட்டம்புழுக்கை மாதிரி வருமா இல்லே கரண்டி போட்டு நோண்டனுமாண்டு தெரியாது.. இந்த அளஹான நேரத்துலே ஒரு ‘செண்ட்’ வாசம் அடிக்கிதுண்டு வச்சிக்குங்க. இதெ ‘செண்ட்’ஐ நீங்க ‘புர்தாஷரீஃப்’லெ போட்டிருக்கீங்க. நீங்க அடுத்ததடவை ‘புர்தாஷரீஃப்’லெ உட்காரும்போது முக்குன பீயும் ஞாபகம் வரும்! நம்புறீங்களா இல்லையா? என்னா பாயிண்ட்டு? நீங்க ஒரு குறிப்பிட்டு postureலெ உட்கார்ந்து , குறிப்பிட்டு பாசிடிவ் or நெகடிவ் நெனைப்பை நெனைச்சிட்டீங்கண்டா , அப்படி உட்காரும்போதெல்லாம் அந்த நெனைப்பு வரும். ஒரு குறிப்பிட்ட மோதிரத்தைப் போட்டு , குறிப்பிட்ட மாதிரி மனசை வச்சிட்டீங்கண்டு சொன்னா , அந்த மோதிரம் போடும்போதெல்லாம் அந்த மனசு வரும். ஒரு குறிப்பிட்ட சேர்லெ உட்கார்ந்து , குறிப்பிட்ட எண்ணம் வச்சீங்கண்டு சொன்னா , அந்த சேர்லெ உட்காரும்போதெல்லாம் அந்த எண்ணம் வரும். ஆனா வேற ஆளு உட்காரக்கூடாது. இப்ப உங்களுக்கு தெரியும்டு நெனைக்கிறேன், என் சீப்பர்-ஐ யாரும் தொடக்கூடாதுண்டு சொல்றதுக்கும், என் குவளையிலே யாரும் குடிக்கக்கூடாதுண்டு சொல்றதுக்கும் காரணம் புரியும்டு நெனைக்கிறேன். இது காரணங்களில் ஒன்னுதான்’ – ‘S’

சர்க்காரின் பேச்சு மாவு கலந்து, பீ கலந்த, அத்தர் கலந்த பனியான் ! ‘ஜம்’மில் உட்காரும் posture , மத்த காலங்களில் வரக்கூடாது என்று சொல்லும்/சுடும் இந்தக் கலவையில் 999% கூட குறைக்க முடியாது. குறைப்பவர்கள் பீயே பேலாதவர்கள். எனவே இந்த வாழ்க்கைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை.

*

”உலகே மாயம்’, ‘விதி’, ‘சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சதிசெய்துவிட்டன’ – இதெல்லாம் பண்டிஹராம், பச்சை ஹராம்’ – ‘S’

*

‘ஜம் சமயத்தில் சோப்பு போடுவது (குளிக்கக்கூட செய்யலாம்!) :

‘சோப்பு போடும்போது உணர்ந்து செய்யிங்க – செயல் அதிகமா செய்ய வேண்டி இருக்குண்டா . ‘சோப்பு போடுறோம்’டு சொல்லி – நினைச்சிக்கிட்டு – செய்யிங்க’ – ‘S’

*

‘எஜமான்ற ‘இஸ்மு’ ஒண்ணு இக்கிது.. ‘யா ஹக் யா முபீன்’. நாங்க பண்ற எந்த ‘திக்ரு’வையும் விட இந்த ‘திக்ரு’ பண்ணும்போது ஒரு மாதிரியான affinity. afinityண்டா என்னா? ஒரு ஆளுக்கும் ஒரு ஆளுக்கும் ஏற்படுறது. எனக்கும் அந்த ‘திக்ரு’க்கும் ஏற்படுறது. நம்ம செட் புள்ளைங்களுக்கும் அந்த ‘திக்ரு’க்கும் ஏற்படுறது. இல்லே.., ‘திக்ரு’வோடமூலகர்த்தா யாருக்கோ அவங்களுக்கு ஏற்படுறது’ – ‘S’

*

‘உயிர் இல்லாத ஒரு கல் கூட கிடையாது. கல் அணுக்கள்தானே? அணுவோடு அணு சிதைஞ்சி போகாம சேத்துப் பிடிச்சிக்கிட்டிக்கிதுலெ? ஏன் இதுக்கு உயிர் இருக்குண்டு சொல்லக்கூடாது? ரூஹ் இஸ்மானி, ரூஹ் நபாத்தி, ரூஹ் ஹைவானி, ரூஹ் இன்ஸானி..

ரூஹ் இஸ்மானி: ஜடங்களுக்கு உள்ள உயிர். வெற்று ஜடங்கள்.  ரூஹ் நபாத்தி : வளர்ச்சி இருக்கும். sense இருக்காது. தொட்டாச்சுருங்கி exception. ரூஹ் ஹைவானி : பேசாது. வளரும். இஷ்டப்படி இயங்கும். மிருகம்; ரூஹ் இன்ஸானி- நம்ம உயிர். இதுக்கு 6 சென்ஸ் இல்லாம இன்னொன்னு ஸ்பெஷல் – அந்த ஆறையும் அளக்க – இக்கிது. இதுக்கு மூன்றாம் கண் அப்படீண்டு சொல்றதுண்டு. ESP..’ – ‘S’

**

04.06.1996

நேற்று நானாக அலையாமல் பெரிய வேலை ஒன்று கைக்கு வந்தது. புகழ்பெற்ற ஜூவல்லரிக்காரர்கள். அவர்களின் கம்பெனிக்கு சீஃப் அக்கவுண்டண்டாக இருக்கக் கூப்பிட்டார்கள். முக்தார் அப்பாஸின் கவலைக்கிடமான நிலையைக் கருதி தம்பி ஹலால்தீனிடம் ஒரு பயோடேட்டா கொடுத்து வைத்திருந்தேன். அதன் மூலமாக அந்த வாய்ப்பு. அக்கவுண்டன்ஸி தெரிந்து கொண்டாகிவிட்டது. ஆனால் அக்கவுண்டண்டாக அத்தனை பெரிய கம்பெனியில் – இந்த போஸ்டில் எந்த அனுபவமும் இல்லாமல் – இருக்க இயலுமா என்ற ஐயத்தில் மறுக்க வேண்டியதாகி விட்டது. பெரும் பெரும் கம்பெனிகளில் , கரிக்கோடு போடுபவர்கள்தான் அக்கவுண்டண்டாக இருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் அவர்களுக்கு அக்கண்டன்ஸியை விட வேறு ‘கணக்குகள்’ கை வந்த கலை. இந்த வாழ்க்கைக் கணக்கின் ஃ·பார்முலா புரியாமலோ அல்லது சுலபமாக மாற முடியாத விசா பிரச்சனைகளாலோ அல்லது என பயத்தாலோ இந்த மறுப்பு. அந்த கம்பெனி தப்பித்தது! நான் பொருளாதார பலத்தை , வேலைக்கான தகுதியை , அதிகப்படுத்திக்கொண்டு அடைய வேண்டும் என்று எண்ணுகிறேன். பெரிய பெரிய சி.ஏக்கள் , கையெழுத்து போடத்தெரியாத அரபிக் கம்பெனியில் குப்பைக் கொட்டுவதைப் பார்த்தால் நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று சொல்லத் தோன்றுகிறது. நான் ஒரு ப்ரோக்ராமர். நான் ஒரு அக்கவுண்டண்ட். நான் ஒரு சேல்ஸ் எக்ஸ்க்யூடிவ்.. நான் ஒரு டீச்சர். நான் ஒரு முதலாளி.. நான் யாரோ , ஆனால் முன்புபோல் வாய்ப்புகள் வராமலிருந்த ஆபிதீன் அல்ல. கொஞ்சம் ஃபோகஸ். போதும்! மாறிவிடலாம். ஆனால் மாறுதல் எப்போது வரும்? when you are ready for a thing it is sure to achieve.. You can surely achieve it – ‘S’. வரும், அது ரியாலத்திற்கு இடைஞ்சல் தராத ஒன்றாக இருக்க வேண்டும். வா!

*

06.06.1996

இன்று காலை ஒரு கனவு. எனக்கும் அலிமுக்தாருக்கும் தகராறு – தங்கும் இடம் சம்பந்தமாக. நான் 3 மாதத்தில் வேலையைவிட்டு போய்க் கொள்கிறேன் என்று கறாராகச் சொல்லிவிட்டேன். கனவில்தான் சொல்லலாமே! ஆனால் எதனாலோ மனது இன்று குழப்பமாக இருக்கிறது. அரைநாள் ஓய்வு எடுத்துக்கொண்டால் என்ன என்று கேட்கிறது. ஆஃபீஸுக்கு நாமாக விடுமுறை போட்டு இரண்டு வருடத்திற்கு மேலாகிறது. பேசாமல் சர்க்கார் கேஸட்டைக் கேட்டுக்கொண்டு ரிலாக்ஸ்டாக ஆக படுத்திருப்போம் என்று மேலேபோய் , கப்பமரைக்கார் மேசையில் ‘இன்று தலைவலி’ என்று எழுதிவைத்துவிட்டு வந்து ஹைட்ஃபோனை காதில் வைத்தேன். கார் வந்து நிற்கும் சத்தம். மொயீன்சாஹிப் கதவைத் தட்டினார். ‘ஆபிதீன், ஆஃபீஸ் சாவியைத் தருகிறாயா?’ அவரிடம் சாவி உண்டு. ஆனால் காரில் இருக்கும். கார் எங்கே இருக்கிறது? ஒரு அடி தூரத்தில் இருக்கிறது. தினமும் மறப்பது ஒரு கலை! நான் இன்று காலை வரவில்லை என்று சொன்னேன். ‘ஏன்?’ ‘தலைவலி.’. அவர் சாப்பாட்டுப் பிரியர். ‘முப்பது நாப்பது மாத்திரையைப் போடு, சரியாகி விடும்!’ என்றார். மாத்திரையா? அவரது BPயும் மற்ற நோய்களும் இலேசில் குணமாகாத காரணம் மாத்திரைகளின் எண்ணிக்கைதான். அந்த நோய்களும் கூட ஒன்றும் இல்லாதபோது அவர் போட்ட மாத்திரைகளின் காரணமாக வந்தவையாக இருக்கும். ஒன்றுக்காக இன்னொன்று. சர்க்காருக்காக நாமா? நமக்காக சர்க்காரா? ஒரு கேஸட்டில் சொல்வார்கள் : ‘நீங்க பன்ற பயிற்சியால யாருக்கு நன்மை? எனக்குத்தான் நன்மை. ஆனால் எனக்கு அப்படி நன்மை கிடைக்கிம்போது உங்களுக்கும் நீங்க நெனைச்சுப்பார்க்க முடியாத நன்மைகள் கிடைக்கும்’ என்று.

**

‘வெறும் பிராக்டிஸ்லெ ஆபத்து இக்கிது (துப்பாக்கி பற்றி அறியாமல் துப்பாக்கி வைத்திருப்பது). Instructionலெதான் safety இக்கிது. அப்ப அதும் வேணும், இதும் வேணும். பத்தாதுக்கு , இத சொல்லச் சொல்லத்தான் stimulation கிடைக்கிம்’ – ‘S’

*

‘நான் சொன்னேன் , ‘டென்சனைக் குறைங்க, Mindஐ ரிலாக்ஸ் பண்ணுங்க’ண்டு. ஏன் தெரியுமா? டென்சனான பிரச்சனையை சமாளிக்கிறதுக்கு டென்சன் தேவை. அதுக்கு தெம்பு வேணுமுலெ? தெருவுலெ போற ஒவ்வொரு பொருளையும் டென்சனோடு பார்த்து சக்தியை செலவு பண்ணிக்கிட்டே இந்தோம்டா கடைசில ஒண்ணும் (தெம்பு) இருக்காது. தேவையில்லாம சிரிச்சா தேவைக்கு சிரிக்க முடியாது. தேவையில்லாம செலவு செஞ்சா தேவைக்கு காசிருக்காது. அதனாலே நிறைய ஃபோர்ஸை சேர்த்துக்கிட்டே இரிங்க. தேவைப்படும்போது தனக்குத்தானா ‘டக்’ ‘டக்’குண்டு முடியும்’ – ‘S’
*

‘உனக்கு வேண்டியதை அடையிறதுலே யாருக்கும் தொல்லை கிடையாது. உனக்கு எது வேணுமோ அதே பொருள் இவருக்கும் வேணும்டா இவரும் ஃபோகஸ் பண்ணுவாருலெ? பம்பாய் மிட்டாய் வாங்க ஆசைப்படுறா.. ஒரு உருண்டைதான் இக்கிது. அதே நேரத்துலே ஒரு பொடியனும் ஆசைப்படுறான். இவனாலே அவன் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி சேர்ந்து ஆசைப்படுறாங்க. இப்ப நீ சிங்கிள் மேன். உன் ஃபோர்ஸை விட அவங்களுக்கு ஃபோர்ஸ் அதிகம் இப்ப. அவனுக்குத்தான் கெடைக்கிம்! அதனாலே ஐயோ, பம்பாய் மிட்டாய் வாங்க முடியலேங்கிற கவலைப்படனும்டு அவசியம் இல்லே’ – ‘S’
*

‘லைஃப்லெ Aim தெரியாத காரணத்துனாலே , Aimஐ உண்டாக்குற சக்தியை வளர்த்துக்கிட்டா போதும். Aim தானா ஃபார்ம் ஆயிடும்’ – ‘S’

*

‘Quick decision (20 seconds..) எடுக்கும்போது தப்பாக்கூட பொய்டலாம். அதனாலே வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லே. ரைட்டா போனதுனாலே சந்தோஷப்பட வேண்டிய அவசியம் இல்லே. Quickஆ decision எடுக்குறான் இவண்டு unconscious உணரனும். இவனுக்கு quickஆ ரிப்ளை கொடுக்கனும்டு பதில் கொடுக்க ஆரம்பிச்சிடும். அது ஒரு பெரிய ப்ராஸஸ் வேலை செய்யுதுப்பா அங்கே.. தீர்மானிச்சபிறகு மறுபடி அது பத்தி சிந்திக்கக்கூடாது. அப்படி சிந்திச்சீங்க, யோசனை பண்ணிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்..’ – ‘S’

*

எழுதிக்கொண்டிருக்கும்போது மறுபடி கதவு தட்டப்பட்டது. இது மொயீன்சாஹிப் அல்ல என்று தெரிந்தது. அல்லதான். மொம்மது காக்கா வந்தார். ‘என்னா தம்பி, உடம்பு என்னா பண்ணுது’ என்று. செருப்போடு அறைக்குள் வந்தார். வந்தவர் , சர்க்காரின் ஓவியத்தைப் பார்த்து உடன் ஏதோ தப்பு பண்ணிவிட்ட குழந்தை மாதிரி வாசலில் செருப்பைக் கழட்டிவிட்டு மறுபடி வந்து உட்கார்ந்தது வேடிக்கையாக இருந்தது. இத்தனைக்கும் அவருக்கு சர்க்காரைப் பிடிக்காது!

*

‘What is life? It is what you make’ – ‘S’

*

‘(கும்பலுள்ள) ‘மனாராடி’ பக்கம் உட்காரக்கூடாது. டீ குடிக்கக்கூடாது, பசியாறக்கூடாது. அப்படி இருந்து பாருங்க. அங்கே பசியாறுனதாலே என்னா நஷ்டம் வந்திச்சிண்டு உங்களுக்கு புரிய ஆரம்பிக்கிம். அதுக்காக மத்தவங்களை இளக்காரமா நெனைக்கச் சொல்லலே. நீங்க உட்காரக்கூடாது அங்கே. டீ வாங்கிக்கிட்டு இங்கே வந்துடுங்க’ – ‘S’

துபாய்க்கு ‘மனாரடி’ எது? தமிழர்கள் கூடும் சிக்கத்-அல்-ஹைல் ரோடு. முக்கியமாக சிங்கப்பூர் சாமான்கள் விற்கிற எவர்பிரைட், டிரஸ்வெல் இத்தியாதி… கலாச்சாரம் காப்பாற்ற கைலி வேறு, அதுவும் வழித்துக்கொண்டு. அப்போதான் டி.வி பார்க்க வசதியாக இருக்கிறதாம்! வெள்ளிக்கிழமை மாலையில் அங்கு போய் நின்றால் ஆஸ்திரேலியா ஆடுகளை அடைத்துவரும் பெரும் பெரும் அடுக்கு டிரக்குகள் 500 நிற்பதுபோல தோற்றம். அதே நாற்றம்..

*

‘பணம் வேணும், டெஃபனட்டா வேணும். ஆனா அது தானா வரணும். அப்ப அதெ வாங்க ரெடியா இருக்கனும். when you are ready for a thing it is sure to happen. இது நூத்துக்கு நூறு உண்மை – ‘S’

*

‘மூளமுள் (எலும்பு மஜ்ஜை. என் மகள் அஸ்ரா மொழியில் ‘பிச்சுக்கா’) என்பது Brainதான். முதுகுத்தண்டுக்கு ஞானயோகத்துலே ‘சிறுமூளை’ண்டு பெயர் இக்கிது. மூளை எந்த மெட்டீரியலோ எந்த substanceஓ அதே substanceதான் இங்கெ!’ – ‘S’

*

‘SS’ல் ஒரு சிறிய மாற்றம்;

நாற்பது அடி மேலே போய் ‘கில்லா’வைப் பார்த்து , இப்போது 11 தடவை சுற்ற வேண்டும்.

*

‘எல்லாம் செல்வம்தான். நாம் அடையிற, அனுபவிக்கிற, சுவைக்கிற எல்லாம் செல்வம்தான். குழந்தைட சிரிப்பு செல்வமல்லவோ? குடும்பத்தோட அனுசரிப்பு செல்வமல்லவோ? கசங்கி, பசியில் சாவுறவளுக்கு ரெண்டு வேளை மீனு ஆக்கிப்போடுறது செல்வமல்லவோ? இப்படி இருக்க.. ‘பணம் வேணும், அத வச்சி நான் இவனை தூக்கி வுடுவேன்.. என் புள்ளேண்டு சொல்லிப் பார்த்து சந்தோஷப்பட்டுக்குவேன். பிஸாது பண்ண மாட்டேன்’ அப்படீண்டு எவனாச்சும் சொல்லியிக்கிறானா நாக்கூருலெ? நாக்கூருலெ பணமா இல்லே? கட்டிகட்டியா வச்சிக்கிறான்! அப்ப…அவன் செல்வந்தன் அல்ல!’ – ‘S’

*

‘மறதி என்பது அறிவுக்கு ஆபத்து’ – ‘S”

*

‘பாம்பைப் பார்த்தாலும் அப்படியேதான் உட்கார்ந்திருக்கனும். ‘பாம்பு’ண்டு பதறி அசைஞ்சீங்க..(பயம்) கடிச்சிடும்!’ – ‘S’.

அனீஸ் , நீ ‘புட்டீ..’ சொல் – பார்த்தால்! மகனே , எதற்கும் பயப்படாதே உன் வாப்பாவைப் போல. பாத்ரூம் ,ஆபீஸில் இருக்கிறது. என் அறைக்கு அடுத்து ஆஃபீஸ். இரவில் ஒண்ணுக்குக் போகக்கூட நான் ஆஃபீஸில் நுழைவதில்லை. பின்பக்கம் விரிந்துள்ள திடல்தான். அதிலேயே இருமுறை வெளிக்கிப் போயிருக்கிறேன். ‘ஆஹா.. வெட்டாத்துக் காத்து மாதிரிலே இக்கிது’ என்று சமாதானப்படுத்தி ரசித்திருக்கிறேன். ஆனால் அது போன வருடம். இப்போது அப்படியல்ல. நடுநிசியில் மேலே போய் பத்துநிமிடம் உட்கார்ந்துவிட்டு என்னால் வர இயலும். Face the Truth. பயம் பீயாகிவிடாதோ?!

*

‘பேய் வாஸலாத், ஜின் வாஸலாத், மலக்கு வாஸலாத், சைத்தான் வாஸலாத்…. அதே மாதிரி வாஸலாத் ‘பரக்கத்’துக்கும் உண்டு. இதையும் வாஸலாத் பண்ணலாம். ‘வாஸில்’ண்டா அடைஞ்சாண்டு அர்த்தம். நீங்க ஒரு பொருளை நெனைச்சி நெனைச்சி அதாகவே மாறிடுவீங்க. ‘ரஹ்மான்’ங்குற வார்த்தைக்கு ‘அன்பானவன்’டு அர்த்தம். ‘யா ரஹ்மான்’டு திக்ரு பண்ணுனீங்கண்டா அன்பு மயமாகிவிடுவீங்க’ – ‘S’
*

‘இம்ப்ரூவ்மெண்ட் அடையிறோங்குறதுக்கு , ‘ஏன் வாட்டமா இக்கிறா, கவலையா இக்கிறா?’ண்டு கூட்டாளியோ, சொந்தக்காரங்களோ கேக்கனும். ‘பழையமாதிரி இல்லையே..என்னாச்சு?’ண்டு எவனாச்சும் கேட்கனும். ‘பைத்தியமா புடிச்சிப்போச்சி?’ண்டு கேட்டா ரொம்ப நல்லது, இம்ப்ரூவ் ஆவுறோம்டு அர்த்தம். விளையாட்டுக்குச் சொல்லலே, உண்மையா சொல்றேன்’ – ‘S’
*

‘சிந்திக்கிறவனை தொல்லை கொடுக்காதே. ஆனா அவன் சிந்திக்கத்தான் செய்றானா , குழம்பிக்கிட்டிக்கிறனாண்டு மட்டும் பாத்துக்க!’ – ‘S’
*

‘பேசப்படுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் என்னிடம் அழுத்தமான கணக்கு உண்டு’ – குர்-ஆன் ஆயத்து.

*

07.06.1996 வெள்ளி செஷன் முடிந்து..

a) Zenith கேமரா கைக்கு வந்தது. தம்பி ஹலால்தீன் ஒரு கள்ளப்பயல். தான் ஊருக்கு அனுப்பும் ‘கார்கோ’ சாமான்களுக்கும் அங்கிருந்து வரும் பணத்திற்கும் கணக்கு வைத்துக்கொள்ள ஒரு ப்ரோக்ராம் தயாரித்துக் கேட்டான். அழகாக ஒன்று தயாரித்து நேற்று கொடுத்துவிட்டு அவனிடம் கேட்டேன், ‘இதுக்கு பரிசாக zenith தரப்போகிறாயா?’ என்று. ‘இல்லே நானா.. இது நூறு ரூவா’. ப்ரோக்ராமுக்கு வேறு ஒரு பரிசு தர்றேன் என்று சொல்லி ஒரு ‘சாக்ஸ்’ கொடுத்தான். பம்பாய் சாக்ஸ், விலை 30.50 என்று போட்டிருந்தது. 3 திர்ஹம்! கூடவே ஒரு தொப்பியும் கொடுத்தான். பிலிப்பைன் ஏர்லைன்ஸ் தொப்பி. கீழக்கரை கம்பெனியில் வேலைபார்ப்பவன் அல்லவா, அதனால் தொப்பி! எப்படியோ zenith .. ஆனால் கூடவே நான் கேட்காமலேயே அனது 486 கம்ப்யூட்டரை எடுத்துக்கொள்ளச் சொன்னான். இன்னும் இரண்டு வருடத்திற்குள் அது 8088 நிலைக்கு வந்துவிடும், சந்தையில் பெண்டியம்-புரோ சிரிப்பாய் சிரிக்க ஆரம்பித்துவிட்டது. பழைய ப்ராசஸ்ஸர்களைப் பார்த்து ஏளனமாகவும் சிரிக்கிறது. ஆனால் எனக்கு 486 போதும். மேற்கொண்டு 4 MB ராம் போட்டு Maths ப்ராசஸ்ஸரையும் போட்டுவிட்டால் வெள்ளம் இப்போதைக்கு. இது பணத்திற்குத்தான். ஆனால் பாதி விலைக்கு. எப்போது வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லிவிட்டான். இன்று இரவு 12 மணிக்கு ஃபோன் செய்தாலும் செய்வான். ஹலால்தீனா, கொக்கா? ஆனால் ஆசைப்பட்ட சாமான் சர்வசாதாரணமாக கையில் சுலபமாக வீழ்ந்து விட்டது. ஷார்ஜாவில் உள்ள கம்பெனி இதே கான்ஃபிகரேசன் உள்ள சிஸ்டத்தை மாதம் 189 திர்ஹம் தந்தால் போதும் என்று விளம்பர செய்திருந்தது. கேட்டால் இரண்டு வருடம் அப்படியே செய்ய வேண்டுமாம். அந்த பகல் கொள்ளைக்கு இது நூறுமடங்கு மேல். உபயோகித்துவிட்டு , தேவையில்லை என்று கூட கொடுத்துவிடலாம். உபயோகித்ததற்கு 30 ரூபாய் 50 காசு கொடுத்துவிடலாம்!

b) ‘தேரா’டவர் பக்கமுள்ள ஹலால்தீனின் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு காலையில் மஸ்தான் மரைக்கான் ரூமுக்கு வந்தேன். வரும் வழியில் நண்பர் ஃபாருக்கைப் பார்த்தேன். பகல் ஜூம்ஆவுக்கு எங்கு போகலாம்? ஒட்டக பஜாரிலுள்ள அல்குரேர் பள்ளிக்கா, நைஃப் ரோடின் மலையாளி பள்ளிக்கா அல்லது அப்பாகடை பக்கமுள்ள கோட்டைப்பள்ளிக்கா? கோட்டைப்பள்ளி எனக்கு நெருக்கம். தவிர வெயில் பாதிக்காமல் செண்ட்ரல் ஏசி உள்ள புதிய பில்டிங்குகள் நிறைய வந்துவிட்டன. அங்கே போகலாம். தொழத்தான்! அவரை 12 1/2 மணிக்கு ரூமுக்கு வரச்சொல்லிவிட்டு வந்தேன். ஜெப்பார்நானாவிடம் கேஸட்களை கொடுத்துவிட்டு புதியவைகள் வாங்கவேண்டும் என்று 12 மணிக்கு புறப்படும்போது ஃபாருக்குக்கு ஃபோன் பண்ணி நேராக கோட்டைப்பள்ளிக்கு வரச்சொல்லலாமா என்று நினைத்த அடுத்த நொடியில் ஃபாருக் வந்து நின்றார். கீழுள்ள அவர்களின் அறைக்கு குளிக்கப் போனவர் டவலைத் தூக்கிக்கொண்டு இரண்டாவது ஃப்ளோருக்கு (லிஃப்ட் 3 வது ஃப்ளோர் என்று காட்டும் – மஸ்தான் மரைக்கான் ரூமுக்கு!) என்னைப் பார்க்க வேண்டிய அவசியம்? ஜெப்பார்நானாவுக்கு ஒரு கடிதம் ஊரிலிருந்து நஸ்ருதீன் எழுதி அனுப்பியிருக்கிறாராம்.

‘சரி லெட்டரைக் கொடும். போய் கொடுத்துடுறேன்’

‘லெட்டர் கடையில் இக்கிதுப்பா. அவர்ட்டெ சொல்லி வந்து வாங்கச் சொல்லு’

கடையில் அவரைப்பார்த்தபோது சொல்லியிருக்கலாம், கொடுத்திருக்கலாம். ஆனால் அவரை 12 மணிக்கல்லவா நினைத்தேன்!

c) பகல் 3 1/2 மணிக்கு ரூமிலிருந்து புறப்பட்டபோது (இரவு 8 மணிவரை பகல்தான். ஆ..என்ன humidity..) என் ‘ஹாட்பேக்’கில் தாழிச்சாவையும் ‘பாங்கான்’ஐயும் வைத்தேன். வைக்கும்போது தாழிச்சா ஏனத்தை நன்றாக இறுக்க மூடினேன். இது பஸ்ஸில் போகும்போது உருண்டால் பாகிஸ்தானி டிரைவர் எரிந்து விழுவான் என்று நினைப்பு வந்தது. சரியாக பஸ்ஸில் உருண்டு ஓடியது தாழிச்சா ஏனம். ஒரு சொட்டுகூட சிந்தவில்லை.

d) எல்லாவற்றையும் விட ஆச்சரியம் அனீஸ், ஸ்கூலில் டீச்சர்களை திட்டாமல் ரொம்ப நல்லபிள்ளையாக இருக்கிறானாம். (எங்க கிளாஸ் புள்ளையிலுளைப் பார்த்து ‘அதை’ சொல்லுறான் வாப்பா! – அஸ்ரா) எப்போதும் பிள்ளைகளுடன் வெள்ளிக்கிழமைதான் பேசுவது. காலையில். காலையில் லைன் சுலபமாக கிடைக்கிறது. இன்று 11 மணிக்கு பண்ணுவோம் என்று காலையில் நினைப்பு வந்தது. கூப்பிடச்சொல்லி அஸ்மாயைப் பிடிப்பதற்குள் 11 1/2 மணியாகிவிட்டது. அனுப்பிய பணம் கிடைத்துவிட்டது. டெலிஃபோனுக்கு வைத்த நகையை மீட்டாகிவிட்டது.

‘நகசுத்தி வந்து ரொம்ப அதாபா பொய்டிச்சி மச்சான்..’

‘கையிலெ சூடான சாமான் வச்சா சரியாப்பொய்டும், வரவா?’

அஸ்மா சிணுங்கியது கிளப்பிற்று. ‘சரி புள்ளே..புள்ளையிலுவள்ட்டெ கொடு..பேசனும்’

‘அல்லாவே.. புள்ளைங்க ஸ்கூலுக்குலெ போயிருக்குதுளுவ.. இப்ப சனியும் ஞாயிறும் லீவு. மாத்தியாச்சும்மா’

பகல் நான் அவீருக்கு வரவேண்டும். இனி குறைந்த காசுக்கு என் பிள்ளைகளுடன் பேசமுடியாதோ..அல்லது சாயந்தரம் தங்கி பேசுவதா? அனீஸுடன் பேச வேண்டும். அஸ்ராகுட்டியிடம் ரேங்க் கேட்க வேண்டும். என் பிள்ளைகள்..

அடுத்தநொடியில் பிள்ளைகள் ஸ்கூல் விட்டு வந்து நின்றார்கள். ‘என்னெட்ட பேசாம ஹலோ ஹலோண்டு சொல்லிக்கிட்டிக்கிறாக வாப்பா..!’ – அனீஸ். ‘எனக்கு ஸ்கூல் பேக் வாப்பா..!’ – அஸ்ரா. பிள்ளைகள் முத்தமிட்டார்கள்.

நான் சர்க்கார் பாதங்களை முத்தமிட்டேன்.

(தொடரும்)

குறிப்புகள் :

சலவாத்து – கெட்டபேச்சு பேசுவதை மறைமுகமாகச் சொல்வது
க்வாஜா பந்தே நவாஸ் – அஜ்மீரில் அடங்கியிருக்கும் இறைஞானி ஹாஜா முஹ்யித்தீன் சிஷ்தி
ஜம் – ஒரு பயிற்சி
ரியாலத் – (‘SS’) பயிற்சி
புர்தாஷரீஃப் – பூஷரி இமாம் இயற்றிய பாடல்களை ஓதுதல்
சீப்பர் – சாப்பிடும் தட்டு
பனியான் – பனியாரம்
எஜமான் – ஷாஹூல்ஹமீது பாதுஷா
திக்ரு – இறைநாமங்களை ஜெபித்தல்
வாஸலாத் – மாந்திரீகவேலை
பரக்கத் – கிருபை, வளம்
ஆயத்து – வசனம்
பாங்கான் – ஸ்பெஷல் மீன் மசாலா
ஏனம் – பாத்திரம்

« Older entries